Wednesday, October 29, 2014

புகுந்தவீடு

            மழை இடைவிடாது தூறி கொண்டிருந்த மதிய வேளை.முதன் முதலாக கணவருடன் இந்த அந்நிய தேசத்தில் காலடிஎடுத்து வைத்தாள் அவள் .நியூயார்க் நகர விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.ஒருமணிநேரமாவது "immigration" ல் நிற்க வேண்டும்,கணவன் கூறினான்.விமானத்தில் உட்கார்ந்து, உட்கார்ந்து  அலுத்துப்போன அவளுக்கு நிற்பது பெரிய கஷ்டமாகப்படவில்லை.சுற்றும் முற்றும் பார்வையை சுழலவிட்டாள்.எத்தனை விதமான(நிறமான ) மனிதர்கள்.வெளிநாட்டவர்கள் பற்றி மனதில் வரைந்து வைத்திருந்த ஓவியம் கலைந்தது.

     வெள்ளைக்காரனுக்கு செம்பட்டை முடி தானே இருக்கும்? என்று கணவனிடம் வினவினாள்.

யாரு சொன்னாங்க? கணவன் கேட்டான்.

             கிரிகெட் ல தான் பார்த்தேன் என்றாள். யாருக்கெல்லாம் "blond " என்று சொல்லக்கூடிய செம்பட்டை முடி இருக்கும் என்று கணவன் பெரிய விளக்கம் கொடுத்தான்.immigration முடிந்தது.லிமோசின் என்ற  பெரிய காரில் பயணமானார்கள்.நியூயார்க் நகரின் வானளாவிய கட்டடங்களையும்,மேம்  பாலங்களையும் கணவன் வியந்து விவரித்து கொண்டேவந்தான்.அவள் வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டேவந்தாள்.என்ன செய்வது "ஜெட்லாக்".

......

          ஒன்றரை மணிநேர தூக்கத்திற்குப் பிறகு அவர்கள் வீடு வந்தது.மழை விட்ட பாடில்லை.கண்ணில் பட்டவர்கள் எல்லாம் மிகவும் சிநேகத்துடன் புன்னகைத்து, hi how are you? என்றார்கள்.weather is really nice என்று பேசிக்கொண்டார்கள் ஆனால் அவளுக்கோ  குளிரடித்தது.என்ன குளுருதா ?winter  வந்தால் தெரியும் என்று பயமுறுத்தினான் கணவன்.அவள் கணவரின் நண்பர்களும் உடன் வேலை பார்ப்பவர்களும் நிறைந்த குடியிருப்பு என்பதால் பல  இந்திய முகங்கள் தென்பட்டன.இரவு உணவும் அவர்களே கொடுத்தனர்.தூக்ககலக்கத்தில் எதுவும் சாப்பிடமுடியவில்லை.

            மறுநாள் காலையில் மற்றொரு நண்பரின் துணையோடு பால் வாங்கி புது வீட்டிற்கு குடிபுகுந்தார்கள்.சொந்தமாக கார் இல்லாததால் நண்பர்களோடு வால்மார்ட் என்ற கடைக்குச் சென்றார்கள்.வழி தவறாமல் இருக்க கணவரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.நண்பரின் மனைவி microwave safe,dishwasher safe என்று ஏதோ புரியாத பாசையில் பேசி பாத்திரங்களை வாங்கிக் கொடுத்தார்.Indian Grocery stores ல் அரிசி,பருப்பு இத்யாதிகளை வாங்கிக்கொண்டு வீட்டை அடைந்தார்கள் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால் அன்றிரவு அவளுடைய மணாளன் மிகமுக்கியமான  "பத்து கட்டளைகளை" பிறப்பித்தான்.அவையாவது 


  •  எக்காரணம் கொண்டும் 911 என்ற எண்ணுக்கு போன் செய்துவிடாதே.போலீஸ்காரன் வந்துவிடுவான்.
  • போனை  சன்னலருக்கு அருகில் வை அப்போதுதான் சிக்னல் கிடைக்கும்.
  • எதை சமைத்தாலும் exhaust fan போட்டுக்கோ இல்லை என்றால் fire alarm அடித்துவிடும்.
  • வீட்டில் அலாரம் அடித்தால் பேப்பர் கொண்டு fire alarm ல்  விசிறி விடு  நின்று விடும்.
  • வெளியில் அலாரம் அடித்தால் வீட்டை பூட்டாமல் சாவியை எடுத்துக் கொண்டு பாஸ்போர்ட் இருக்கும் bag ஐ தூக்கிக்கொண்டு வெளியில் சென்று நிற்கவேண்டும்.elevator வழியாக போகக் கூடாது.படியில் இறங்கு.
  • யார் கதவைத் தட்டினாலும் யாரென்று பார்த்த பின் கதவைத் திற.
  • சாவி இல்லாமல் வெளியில் சென்று விடாதே உள்ளே வரமுடியாது.
  • தண்ணிரை bath  tub ஐ தவிர வெளியே எங்கும்  கொட்டிவிடாதே.
  • மிகமுக்கியமான ஒன்று மதியம் தூங்கிவிடாதே...ஜெட் லாக் போகவேபோகாது .
அன்றிரவு அவள் கணவன் நன்றாக தூங்கிவிட்டான்.ஆனால் அவளுக்குத்தான் தூக்கம் வரவில்லை ஜெட் லக் ஆ இல்லை பயமா என்று தெரியவில்லை வயிற்றை கலக்கியது.
.......


    மறுநாள் காலைஉணவு  cereal சாப்பிட்டுவிட்டு கணவன் அலுவலகம் சென்றுவிட்டான்.காலையில் போய் எப்படித்தான் இந்த இனிப்பு cereal ஐ சாப்பிடுகிரார்களோ? என்று அங்கலாய்துக்கொண்டே மதியத்திற்கு சமைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.சுவை நன்றாகவே இருந்தது ஆனால் அம்மா சமைத்தது போல் இல்லையே ?மனம் அம்மாவையும் பிறந்த வீட்டையும் தேடத் தொடங்கியது.

டிவி இல்லை,இன்டர்நெட் இல்லை வீட்டில் ஒரே அமைதி.மேல்வீடுக்காரன் நடக்கும் சத்தம் மட்டும்  அவ்வப்போது எழுந்து அவள் தனிமையை போக்கியது.சொந்த மண்ணில் கிடைக்காத அமைதி ஆனால் மனம் அதை விரும்பவில்லை .கணவன் கொடுத்து விட்டுப் போன DVD-க்களை   கணினியில் சுழலவிட்டு படம் பார்க்கத் தொடங்கினாள்.
......
கண்களைத் திறக்க முயற்சித்தாள் .கணவரின் உருவம் நிழழைப் போல் கண்முன் தோன்றியது.ஏதோ பேசியது நிழல்.கனவு காண்பதைப்போல் இருந்தது.ஆனால் நிழல் தொடர்ந்து பேசியது.சிறிது நிமிடத்திற்குப் பிறகு நன்றாகவே கண்களைத் திறந்தாள்.

என்ன தூங்கிட்டியா ? கணவன் சிரித்தபடி எதிரில் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தான்.

நீங்க எப்போ,எப்பிடி உள்ள வந்தீங்க? ஆச்சர்யத்துடன் வினவினாள்.

ம்ம் ..கதவு வழியாதான்,கிண்டலடித்தான்.திருடன் வந்தா கூட தெரியாது போல என்றான் கணவன்.

அப்பொழுதுதான் "ஜெட் லாக்"கினால்  தான்  அதிக நேரம் உறங்கிவிட்டதை உணர்ந்தாள்.

அடுத்த ஓரிரு தினங்களில் கேபிள்,இன்டர்நெட் அனைத்தும் வந்துவிட்டது.ஆனால் என்ன பார்ப்பது என்று தெரியவில்லை.சிறிது நேரம் ஆங்கில நாடகங்களைப் பார்த்தாள்.ஒரே வீட்டில் அனைத்து கதாப்பாத்திரங்களும் இடை விடாது பேசின,சிரிப்பொலியும் பின்னணியில் வந்தது.இதை sit -com என்றனர்.எதுவும் விளங்கவில்லை.சிறிது நேரம் கணினியில் சன் டிவி பார்த்தாள்.அமைதியைக் கலைக்க பாடல்களைக் கேட்டாள்.பெரிய குடும்பத்தில் பிறந்ததாலும்,சில காலம் கூட்டுக்குடும்பத்தில் வசித்ததாலும் அக்கம் பக்கத்தாரிடம் பேசி பொழுதைப் போக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தது.ஆனால் அவர்கள் அவ்வப்போது வந்து இவளிடம் பேசிவிட்டுச் சென்றனர்.கார் இல்லாததால் மாலை நேரங்களிலும்  வெளியில் செல்ல இயலவில்லை.

.....

 இப்படியாக ஒரு மாதம் கடந்து விட்டது. அந்த வாரத்தில் நண்பர்களுடன்  நயாகரா செல்லத் திட்டமிட்டனர்.ஏழு மணி நேர கார் பயணம்.அரசுப் பேருந்தில் பயணித்த அனுபவம் இருந்ததால் கார் பயணம் சுகமாகவே இருந்தது. ஆனால் அவளுடைய வில்லன் தங்கியிருந்த விடுதியின் காலை உணவு வேடத்தில் வந்தது.காலை உணவு buffet  முறையில் வைக்கப் பட்டிருந்தது.நிறைய வகைகள் இருந்தது ஆனால் அனைத்தும் இனித்தது.கணவன் எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் உண்ணவில்லை.ஆப்பிள் மட்டும் சாப்பிடுவதாகவும் அதையும் அறிந்து கொடுக்க வேண்டும் என்றாள்.அவன் கடினப்பட்டு அங்கிருந்த பிளாஸ்டிக் கதியால் துண்டுகளாக்கினான்.அவனுடைய நண்பர்கள் அவனை கேலியும்,கிண்டலும் செய்தனர்.

......

அடுத்து வந்த மாதங்களில் இலையுதிர்  காலத்தை ரசிக்க கார் பயணம் மேற்கொண்டனர்.அப்பொழுதும் அதே காலை உணவுப் பிரச்சனைத்தான்.இந்த முறை பிளாஸ்டிக் கத்தியால் பழத்தை துண்டாக்க முயன்ற கணவனின் கையை கத்தி பதம் பார்த்தது.கோபமடைந்த கணவன்,"இனிமே ஒழுங்கா breakfast சாப்பிடு இல்லேனா பட்டினி கிட"என்று கடிந்து கொண்டான்.கண்களில் பொல பொல வென்று கண்ணீர் கொட்டத் தொடங்கியது.கணவன் பதறிப் போனான்.சமாதனப் படுத்தினான்.தன் மனைவி இன்னும் சிறு குழந்தையைப் போல் இருப்பதை உணர்ந்தவனாய் சிரித்தான்.

.........


குழந்தை பீறிட்டுக்  கொண்டு அழுதது.திடுக்கிட்டு நிகழ்காலத்திற்கு இழுக்கப்பட்ட அவள் கடிகாரத்தைப் பார்த்தாள்.கடந்த கால நினைவில் மூழ்கிப் போனதை நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். வெளியில் மழை  பெய்து கொண்டிருந்தது. தூக்கம் கலைந்து அழும் மகனை  தூக்கிக்கொண்டு  பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கும்  மகளை  அழைத்து வருவதற்காக ஆயத்தமானாள்.

.......

இப்பொழுதெல்லாம் விடுதியில் தங்க நேர்ந்தால் காலை சிற்றுண்டியை ஒரு கை பார்க்காமல் அவள் விடுவதில்லை.அவளுடைய கணவன் கூட கிண்டல் செய்வதுண்டு.ஆங்கில நாடகங்களையும் ரசிக்கத் தொடங்கினாள்.எந்த சமையல் பாத்திரம் நன்றாக இருக்கும்,எந்த கடைகளில் விலை மலிவு அனைத்தும் அத்துப்படி.காலம்  அவளை மாற்றிவிட்டதையும்,இந்த
அந்நியதேசம் அவளுடைய தேசமாக ஆகிவிட்டதையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா என்ன?

.............