Wednesday, November 19, 2014

மஞ்சள் நிறமே ......மஞ்சள் நிறமே

  வாசல்  கதவு  திறக்கும் சத்தம் கேட்டது. நிதர்சனா வரவேற்பறையை நோக்கி விரைந்தாள்.உள்ளே நுழைந்த அம்மாவின் கையிலிருந்த துணிப்பையை வாங்கி ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்தாள்.100 வாட்ஸ் பல்பைப் போல் பிரகாசமாக இருந்த அவள் முகம் ஒளியிழந்தது.

என்ன ஆச்சு?அவளைக் கவனித்த அம்மா கேட்டாள்.

தைத்து வந்திருந்த தனது புதிய சுடிதாரை நோக்கியபடி"நல்லா தச்ச மாதிரி தெரியலயே!?!?"என்றாள் நிதர்சனா.

சும்மா பாத்தா எப்படி தெரியும்? போட்டுப் பாரு,என்றாள் அம்மா.

நாளைக்குப் போட்டுகிறேன் என்று ஆர்வமின்றி பதிலளித்தாள்  அணிந்தால் அழகாகத்தான் இருக்கும் என்ற சிறு நம்பிக்கையோடு படுக்கைக்குச் சென்றாள் நிதர்சனா.

ஒரு சுடிதாருக்குப் போய் ஏன் எவ்வளவு ஏமாற்றம்? என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.இதற்கு விடை அறியவேண்டுமென்றால் இரண்டு வாரத்திற்கு முன்பு நிதர்சனாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள  வேண்டும்(ஏறுங்கள் டைம் machine  ல் அறிந்து கொள்ளலாம் ).

 குளித்து முடித்து கல்லூரிக்கு கிளம்பும் அவசரத்தில் தலை பின்னிக்கொண்டிருந்தாள் நிதர்சனா.அம்மா அப்பாவிடம் பேசுவது காதில் விழுந்தது. மறு நிமிடமே  அவளின் அகமும்,முகமும் மலர்ந்தது.

இன்னைக்கு சாயிங்காலம் கடைத்தெருவுக்கு போய் நிதர்சனவுக்கு இரண்டு சுடிதார் வாங்கிட்டு வந்திர்றோம்.ஆடித் தள்ளுபடி போட்டிருக்கான் என்றாள் அம்மா.இன்று எப்படியாவது தனது மனதில் இருக்கும் பல நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள் நிதர்சனா.

மூன்று மாதங்களுக்கு முன்பு தனது senior அணிந்திருந்த வெளிர் மஞ்சள்,எலுமிச்சை நிற சுடிதாரைப் பார்த்ததும் தானும் அதே போல்  அணிய வேண்டும் என்ற ஆசை  அவளுக்கு உருவானது.

கல்லூரிக்குச் சென்று  தோழியிடம் தனது மகிழ்ச்சியைப்  பகிர்ந்துக் கொண்டாள். material வாங்கி கரெக்டா தச்சுப் போட்டாதான் அழகா இருக்கும் என்றும் (readymade  dress  தான் பொதுவாக வாங்குவர்.அது தொள தொள என்று இருக்கும்) உனக்கு அந்த கலர் சூப்பரா இருக்கும் என்றும்  எறியும் ஆசைத் தீயில் எண்ணையை ஊற்றினாள் தோழி.அன்று முதல் இந்த சந்தர்பத்திற்காக காத்திருந்தாள்.

நினைத்தவுடன் ஷாப்பிங் செல்லும் வழக்கம் அப்போது (15 வருடங்களுக்கு முன்பு )இல்லை.window shopping செய்ய அடுக்கு மாடி வணிக வளாகங்களும்(maal) இல்லாத காலம் அது.குடும்ப நிலையை உணர்ந்து குழந்தைகளும் நடந்து கொண்டனர்.

பள்ளிக்குச்  செல்லும் குழந்தைக்களுக்கு(தினமும் சீருடை அணிவதால்) வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தீபாவளிக்கு புது உடைகளை வாங்குவர் நடுத்தரவர்கத்தினர்.வசதி படைத்தவர்கள் இரண்டு முறை வாங்குவர் அதற்கு மேல் கிடையாது.நிதர்சனா இளநிலை இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தாள்.கல்லூரிக்கு அணிந்து செல்ல உடைகள் வேண்டும் என்பதால் மட்டுமே இந்த extra ஷாப்பிங்!!!

 மாலையில் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்லாமல் நேராக  கடைத்தெருவில் அம்மாவை சந்தித்தாள்.அம்மாவிடம் தனது ஆசையைக் கூறினாள்.சரி பார்க்கலாம், என்றாள் அம்மா.முதல் கடையில் நுழைந்தார்கள்.கடைக்காரர் பேசுவதற்கு முன்,லெமன் கலரில் சுடிதார் மெடிரியல் பார்க்கனும் என்றாள் நிதர்சனா.

yellow கலர் தான் வேணுமா? என்றார் கடைக்காரர்.

ஆம் என்பது போல் தலையாட்டினாள் நிதர்சனா.

இரண்டு.மூன்று மெடிரியல் காண்பித்தார் .இது டார்க்கா இருக்கு light yellow வேணும் என்றாள்.உங்களுக்கு டார்க் கலர் நல்லா இருக்கும் என்று பதினைந்து இருபது  மெடிரியல்களைக் காண்பித்தார்.அம்மா துணிகளின் தரத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.நிதர்சனாவின் மனது எதிலுமே லயிக்கவில்லை.

என்னடி? என்றாள் அம்மா.மௌனமாக அமர்ந்திருந்தாள் நிதர்சனா.

துணி நல்லாயிருக்குதே என்ற அம்மாவிடம் கலர் பிடிக்கலம்மா.என்றாள்.ஒன்னு வாங்கிக்கோ அடுத்த கடையில தேடலாம் என்ற அம்மாவின் வார்த்தையை அரை மனதோடு கேட்டுக்கொண்டாள்.

அடுத்த கடை ஏறினார்கள்.

அக்கா light yellow,lemon கலரில் சுடிதார் மெடிரியல் காமிங்க என்றாள்.

அவர் எடுக்கும் முன் அவளே, நான் காமிகிறத மட்டும் எடுங்க என்று சிலவற்றை சுட்டிக் காட்டினாள்.கலர் ஒத்து வந்தது ஆனால் design பிடிக்கவில்லை.அடுத்த கடையை நோக்கி நடந்தனர்.

நீங்க சொல்ற டிசைன்,கலர் மூணு மாசத்துக்கு முனாடி வந்தது.இப்ப வர்றதில்லை என்றனர்.அம்மாவும் பொறுமை இழந்தாள்.

படி ஏற முடியலடி நீயே அடுத்த கடைக்கு மேலே போ,நான் வெளிய நிக்கிறேன்.என்றாள் அம்மா.

நிதர்சனாவுக்கோ பசி,அசதி.அனைத்திற்கும் மேல் ஏமாற்றம்.உற்சாகம் வறண்டு விட்டது.கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது.அம்மாவிடம் இருந்து மறைக்க முயன்றாள்.எங்கே தன் ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று நினைத்தாள்.தான் நினைத்த ஒன்று கூட நடப்பதில்லை என்று கடவுளை மனதில் திட்டித் தீர்த்தாள்.

நீங்க சொல்ற மெட்டிரியல் அந்த கடையில் தான்  கிடைக்கும் என்று கடையின் பெயரை அடுத்த கடைக்காரர் கூறினார்.

அந்த கடையில பார்போம் இல்லன்னா வேற வாங்கிக்கோ,நேரமாகுது அப்பா வந்திருப்பார் வீட்டுக்கு போகணும்.அம்மாவின் கவலை அம்மாவிற்கு.கடையை அடைந்தனர்.வழக்கம் போல் விவரித்தாள் நிதர்சனா.
பத்து நிமிட தேடலுக்குப் பிறகு அவள் நினைத்த கலரில் நல்ல டிசைன் கிடைத்தது.அப்பா... கிடைச்சிருச்சா என்றாள் அம்மா.மகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு அகமகிழ்ந்தாள்.

எங்க தைக்க குடுக்கிறது? அம்மாவிடம் வினவினாள்.

தூரத்து உறவினர் ஒருவர் நன்றாகத் தைப்பார் என்றும் அதிகம் தையல்  கூலி
கேட்கமாட்டார் என்றும் அம்மா கூறினாள்.இருவரும் வீட்டை நோக்கி விரைந்தார்கள் .

இன்றைய கால கட்டத்தில் மேற்கத்தைய உடைகளை மட்டும் அல்ல அவர்களின் ஷாப்பிங் உக்திகளையும் நாம் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.வருடம் முழுவதும்(சிதோஷன நிலைக்கேற்ற) உடைகள் வாங்குவது அவர்களின் தேவை . sale,deal,black friday,கிறிஸ்துமஸ் என்று ஷாப்பிங் நீண்டு கொண்டே செல்கிறது.

தேவையானவற்றை வாங்கவே பல முறை யோசித்த நாம் இன்று விலை மலிவு(deal ) என்று  கடைகள்  கூவுகின்றன என்பதற்காகவும்,நண்பர்களை ஒத்த உடை அணிய வேண்டும் என்பதற்காகவும்  தேவையில்லாத பலவற்றை தேவைப்படும் என்ற எண்ணத்தில் வாங்கிக் குவிக்கிறோம்.காலநிலை மாற்றமே இல்லாத நம் நாட்டில் இத்தனை உடைகள் தேவையா? என்று யோசிக்க வேண்டும்.ஆனால் இன்றும் பல நிதர்சனாக்கள் ஆசையோடு சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்  என்பதையும் மறுக்க இயலாது.

என்ன... புது டிரஸ் நிதர்சனாவுக்கு சரியாக பொருந்தியதா? அவள் ஆசை நிறைவேறியதா? என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிந்து விட்டது.அந்த முடிவை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்!!!!!இனி உங்கள் பாடு...நிதர்சனாவின் பாடு !!!!