நான் தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரமது. எனது அப்பாவின் மிதிவண்டியில் அன்றாடம் பயணம் செய்வது வழக்கம் .நாங்கள் வசித்த வீடு 30 நிமிட தொலைவில் இருந்தபடியால் களைப்பு தெரியாமல் இருபதற்காக ஏதாவது பேசியபடியும் ,விளையாடியபடியும் செல்வது வழக்கம் .நானும் என் அண்ணனும் பின் இருக்கையிலும் என் தங்கை முன் இருக்கையிலும் பயணிப்போம் .
சாலையில் இருபுறங்களிலும் இருக்கும் அரிசி மண்டிகளின் பெயர்களை சரியாக சொல்லவேண்டும் . இது ஒரு விளையாட்டு .கண்களை மூடிக்கொள்ள வேண்டும் சிறிது நிமிடம் கழித்து எங்கள் அப்பா எங்களிடம் நாம் எங்குவந்து கொண்டிருக்கிறோம் என்று கேட்பார் யார் சரியாக யூகிக்கிறார்களோ அவருக்கே வெற்றி . சிலசமயம் திருக்குறள் சொல்லியிருக்கிறோம் ஏன் சிலசமயம் சினிமா பாடல்களையும் பாடுவோம். மிகவும் மகிழ்ச்சியான மனதில் எந்த கவலையும் இல்லாத தருணம் அது .
விளையாட்டு ஆர்வத்தில் வண்டிச்சக்கரத்தில் காலை விட்டு அழுத கதையும் உண்டு.வலது புறம் திரும்பும் பொழுது கை காட்டி சிக்னல் செய்ய வேண்டும் அதற்கும் எங்களுக்குள் போட்டி உண்டு. ஒரு முறை என் தம்பியுடன் பயணிக்கும் போது திரும்பும் சாலை வந்தவுடன் கையை காட்டு என்று அப்பா கூற ஒன்றும் புரியாமல் அவன் முழித்திருக்கிறான். கையை காட்டு என்று மீண்டும் கூற என் அப்பாவின் முகத்திற்கு நேராகக் கையைக் காட்ட,என் அப்பாவே சுதாரித்து திரும்பி விட்டார். இன்றும் அதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு நாள் ஒரு புதிய விளையாட்டை (போட்டியை ) அப்பா அறிமுகப்படுத்தினார் . மூன்று தெருக்கள் இருந்தது எந்த வழியில் சென்றாலும் எங்கள் பள்ளியை அடையலாம் . எந்த தெருவில் திரும்பப்போகிறோம் என்று யூகிக்கவேண்டும் . நானும் என் அண்ணனும் எங்கள் யூகங்களை பகிர்ந்து கொள்வதுண்டு ஆனால் என் தங்கை முன்னிருக்கையில் அமர்வதால் மனதிலே வைத்துக்கொள்ளவேண்டி இருந்தது. சிலசமயம் நானும் சில சமயம் என் அண்ணனும் ஜெயிப்போம் ஆனால் என் தங்கை மட்டும் எல்லா சமயமும் ஜெயித்ததால் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது .
இங்கு என் தங்கையைப் பற்றி ஒரு விஷயம் கூறியே ஆக வேண்டும். என் தந்தையின் வலதுகை அவள் . அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வாள் . அவரின் உடமைகளை அவள் வசமே வைத்திருப்பாள் . அவரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதே அவளின் குறிக்கோளாக இருந்தது அதில் வெற்றியும் கண்டிருந்தாள். இதனால் என் தங்கை ஏமாற்றுவதாக நாங்கள் வாதிட்டோம் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே இவ்வாறு செய்வதாக நகைத்தோம். ஆனால் அவள் மறுத்தாள் . இன்று வரை அது எங்களுக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.
இயந்திரத்தனமான இன்றைய சூழலில், நம் குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதற்காக நேரத்தை தேடும் முயற்சியில் அன்றாடம் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடுகிறோம். ஒரு எளிய வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தர மறந்து விடுகிறோம் . மிக பரபரப்பான சூழலிலும் எவ்வாறு அமைதியாக இருப்பது என்பதுதான் அது . எங்கள் பள்ளியில் இருந்து 30 நிமிட பயணத்தில் எங்கள் தந்தையின் அலுவலகம் இருந்தது . பணி நிமித்தமான உளைச்சலை ஒருபோதும் எங்களிடம் காட்டியது இல்லை. பள்ளியின் கவலைகளை மறந்து நாங்களும் விளையாடினோம் .
சிறு சிறு விளையாட்டுகளின் மூலம் நாம் நம் குழந்தைகளின் தோழர்கள் ஆக மாறிவிடுகிறோம் என்பதை மறுக்க முடியாது . எங்கள் கல்லூரிப் படிப்பு முடியும்வரை எங்கள் தந்தையுடன் நானும் என் தங்கையும் பயணித்தோம் . மிதிவண்டி இருசக்கர வாகனமாக மாறியது ஆனால் மாறாதது எங்கள் தந்தையுடனான எங்கள் நட்பு , என் தங்கையும்தான்!!!அவளைப் போன்று பெற்றோர்களின் கவனத்தை பெற இன்றைய சிறார்கள் முயல்வதும் இல்லை அதற்கான நேரமும் அவர்களிடம் இல்லை !!!