Tuesday, June 16, 2015

என் தங்கை ....என் தோழி

                       வாழ்க்கைப் பாதையில் நாம் தினம் தினம்  பல மனிதர்களை சந்திக்கிறோம். அவர்களில் சிலர் நம் நண்பர்களாக மாறுகிறார்கள். சிலரை எதிரிகளாக நினைக்கிறோம்.பலரை மறந்தும்  விடுகிறோம். ...சில சமயம் நண்பர்களே எதிரிகளாக மாறுகின்றனர் ஆனால் எத்தனை எதிரிகள் நம் உயிர் நண்பர்களாக மாறுகிறார்கள்? அவ்வாறு மாறிய ஒரு செல்ல  எதிரி தான் என் தங்கை.

                    SIBLING RIVALRY - என்று கூறுவார்களே அதனாலோ என்னவோ நான் முதலில் அவளை எதிரியாகவே நினைத்தேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். அதுவரை தாத்தாவோ, பாட்டியோ அல்லது  அம்மாவோ என்னை பள்ளியில் கொண்டு வந்து விடுவார்கள். இனிமே  ரெண்டு பேரும் சேர்ந்து போயிருங்க  என்றார்கள்.

                  நான் மிகவும் வேகமாக முன்னால் ஓடுவேன் ....நில்லு என்று கூறியவாறு பின்னால் வருவாள் என் தங்கை. நின்று விடுவேன். அவள் என் அருகில் வரும் போது மறுபடியும் ஓட ஆரம்பிப்பேன். அவள் அம்மாவிடம் சென்று அழுவாள். மறுதினம் வா... சேர்ந்து போகலாம் என்று தோளில் கை போட்டுக் கொள்வேன். பள்ளி வரும் வரை இப்படியே வர வேண்டும் என்று வலமும், இடமுமாக இழுப்பேன். என் கொடுமை தாங்க முடியாமல் அவள் தனியாகச் செல்ல ஆரம்பித்தாள்.

              தலை பின்னுகிறேன் என்று அழைப்பேன் அவளும் ஒத்துக் கொள்வாள் ஆனால் இரட்டைச் சடையில் ஒன்று காதை ஒட்டியும், ஒன்று தலையின் பின் புறமும் இருக்கும் (7 வயது சிறுமிக்கு என்ன தெரியும்). பொட்டு வைத்து விடுகிறேன் என்று பல வண்ண சாந்தைக்  கொண்டு நெற்றி முழுவதும் தீட்டி விடுவேன். நன்றாக இல்லை என்று கலைத்தாலோ, அழித்துக்கொண்டலோ கொட்டு விழும் அவளுக்கு!!! அப்பாவிடம் சென்று அழுவாள். எனக்கு திட்டு விழும். அதையெல்லாம் நான் கண்டு கொண்டதே கிடையாது.

     சித்திப் பெண்கள் அல்லது அத்தைப் பெண்கள் வந்து விட்டால் கேட்கவே வேண்டாம் எங்கள் வட்டத்தில் அவளுக்கு இடம் கிடையாது. அப்படியே அவர்கள் சேர்த்துக் கொண்டாலும் விளையாட்டில் அதிக வாய்ப்பு கிடைக்காததால்  அவளே விலகிக் கொள்வாள்.

            இருவருமாக கடைக்குச் சென்று  மிட்டாய் வாங்குவோம். நான் அனைத்தையும் ஒன்றாக வாயில் போட்டுக் கொள்வது போல பாவனை செய்து விட்டு சட்டைப் பையில் ஒளித்து வைத்து விடுவேன். அவள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தபின் மெதுவாக  பையிலிருந்து  வெளியில் எடுத்து அவளை அழ விடுவேன். சிலசமயம் நான் MAGIC செய்ததாகக் கூறி அவளை ஏமாற்றுவேன். அவளும் நம்பி விட்டது போல் நடிப்பாள்(நிஜமாகவே நம்பினாளோ  என்னவோ!!!).


              ஒருநாள்  பள்ளியில் யாரோ அவளை அடித்து விட்டதாகக் கூறினாள். பாசக்கார அக்காவாக மாறி அடித்த பெண்ணை மிரட்டி விட்டு வந்தேன். ஏதாவது தொலைந்து விட்டால் வந்த வழியே இருவரும் சென்று மணிக்கணக்கில் தேடுவோம். சில சமயம் ஒருவருக் கொருவர் சவால் விட்டுக்கொண்டு சில சேட்டைகளில் இறங்குவோம். அவ்வாறு ஒருநாள் இருவரும் சேர்ந்து இருநூறு தோப்புக்கரணங்கள் போட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டோம்.  எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவளுக்குச் சொல்லிக் கொடுப்பேன்.

                நான் மூன்றாம் வகுப்பில் இருந்த பொழுது பள்ளியில்  ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். மாலையில் என் தங்கையிடம், இங்கிலீஷ் ஈசி, வா... சொல்லிக்கொடுக்கிறேன் என்று வாசலில் நின்று கொண்டேன். எதிர் சுவற்றில் Rajini  வாழ்க...Kamal   வாழ்க  என்று எழுதி இருந்தது. அதைக் காண்பித்து Ra என்றால் ர, Ji  என்றால் ஜி ,Ni என்றால் னி  என்று சொல்லிக் கொடுத்தேன். அதே போல் தான் கமல் என்ற சொல்லையும் படிக்க வேண்டும் என்று கூறினேன். என்னை அவள் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டாள்.

                   மறுநாள் அவள் என்னிடம் சுவற்றில் இருந்த "ADMK "  "DMK" என்ற சொல்லைக் காண்பித்து எவ்வாறு வாசிப்பது என்று கேட்டாள். அதற்கு நான் DMK  என்றால்  டும்க் என்றும் ADMK  என்றால் அடும்க் என்றும் கூறினேன். நிஜமாவா?!?! என்றாள். ஆமாம்  இங்கிலீஷ்ல  அப்படியெல்லாம் வரும் என்று சமாளித்தேன் ஆனால் அவளுக்கு சந்தேகம் எழுந்ததது என் கதையும்  கந்தலானது. அடுத்து வந்த சில நாட்களில் பரதம் சொல்லிக் கொடுத்தேன். அது எவ்வாறு இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள்!!!

                  இந்த உரசல்கள் எல்லாம் தொடக்கப் பள்ளியோடு நின்று போனது. பின்பு வந்த நாட்களில் நாங்கள் தோழிகளாக  மாறினோம். வீட்டு வேலைகளைப் பகிர்ந்து,சேர்ந்து  செய்வோம். பள்ளியில்  நடக்கும் சம்பவங்களை பரிமாறிக் கொள்வோம். சினமாக் கதைகளை மாறி மாறி சொல்லிக் கொள்ளவே  நேரம் போதாது .

     நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது முக்கியமான   பொருட்களை எங்காவது வைத்து விட்டு தேடுவதே வழக்கம். கோபமும், அழுகையும் மூக்கில் மேல் வரும் எனக்கு. அப்பொழுதெல்லாம் மிகவும் பொறுமையாக எனக்கு தேவையானதைத் தேடிக் கொடுப்பாள். சாலை விபத்தில் சிக்கியதால் என்னால் புத்தகப் பையை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் போனது. ஒரு வருடம் முழுவது அவளே என் வலது கையாகவும் இடது கையாகவும் இருந்தாள். தங்கையாக இருந்த அவள் எனது அக்காவாகவும் மாறினாள்.


                      பின்பு கல்லூரி நாட்களில் ப்ராஜெக்ட் வேலைகளில் பல யோசனைகளையும், உதவிகளையும் செய்வாள். எனது திருமணத்தின் போதும்  என்  உற்ற தோழியாக செயல்பட்டாள். அன்று முதல் இன்று வரை பல நேரங்களில் எனக்கு "MORAL " சப்போர்ட்- ஆக இருப்பவளும் அவள் தான்!!!

             " நாம் இருவர் நமக்கு இருவர்"  என்றவர்கள் "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்று மாறிவிட்டார்கள். இனி எதிர்காலத்தில் "நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர்?!?!" என்று கூறினாலும் ஆச்சரியபடுவதற்கில்லை அவ்வாறு மாறும் பட்சத்தில்  மேற்கூறிய என் அனுபவங்கள் அவர்களுக்கு கற்பனைக் கதையாகவே  தோன்றும். இல்லையா !!!!