பல சமாதானம் கூறியும் கேளாமல் அழுது கொண்டிருக்கும் தன் ஏழு வயது மகளைப் பார்க்கப், பார்க்க கோபம் தலைக்கு ஏறியது நிலாவிற்கு.
இப்ப நிறுத்துறியா? அடி வேணுமா? என்று குரலை உயர்த்தினாள் மகளிடம்.
டூ யூ வான்ட் " டைம் அவுட்" என்று உதவிக்கு வந்தான் கணவன்.
கெஞ்சலும், மிரட்டலும், அதட்டலுமாக தொடர்ந்த போராட்டம் சில நிமிடங்களுக்குப் பிறகு சமாதானத்தில் முடிவடைந்தது.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்தவாறு கணவரிடம், ஏன் தான் இப்படி படுத்துறாளோ?!?! என்றாள் நிலா.
நமக்குத்தான் பொறுமை இல்லையா? நம் பொறுமையை இவதான் சோதிக்கிறாளா? என்று தொடர்ந்தாள். நான் காலேஜ்ல படிக்கும் போது கூட இந்த மாதிரி அழுதிருக்கிறேன் தெரியுமா? ஆனா எங்க அம்மா ஒரு தடவை கூட என்ன திட்டுனது கிடையாது என்றாள்.
ம்ம்ம்... அவ மூடு சரியில்ல அதனாலதான் என்று சமாதானம் கூறி விட்டு தூக்கத்தில் ஆழ்ந்தான் கணவன். ஆனால் நிலாவின் எண்ண அலைகளோ அவளை தூங்க விடாமல் புரட்டிப் போட்டன. அம்மாவின் நினைவுகள் அவளை பின்னோக்கி இழுத்தன!!!
நிலா ஒன்றும் அம்மா செல்லம் இல்லை. ஐந்து குழந்தைகள் உள்ள வீட்டில் அதற்கான வாய்ப்பும் குறைவு. அம்மா ஐந்து பேருக்கும் தனது அன்பை சரி சமமாகவே பங்கிட்டுக் கொடுத்தாள். தம்பிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால் தொடக்கப் பள்ளி நாட்களை பெரும்பாலும் பாட்டி வீட்டிலே கழித்தாள் நிலா.
பின்பு வந்த நாட்களில் தான் அம்மாவுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு சேட்டை செய்தாலும் அம்மா திட்ட மாட்டாள். கடும் சொற்களைப் பிரயோகித்தது இல்லை. ஒழுக்க நடவடிக்கைகள் அப்பாவின் மூலமே எடுக்கப்படும். இதைப் பற்றி அம்மாவிடமே நிலா கேட்டதுண்டு.
அதற்கு, அடிப்பதால் எதையும் சாதிக்க முடியாது என்று கூறி விட்டாள். அப்போது அது பெரிய விஷயமாகப் படவில்லை ஆனால் அது எவ்வளவு கடினமானது என்று இப்பொழுதுதானே தெரிகிறது.
அனைவரையும் சரியான நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கும், அப்பாவை அலுவலகத்திற்கும் அனுப்புவதில் அம்மாவை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அப்பாவும் அதற்கு உறுதுணையாக இருந்தார். இதற்காக அம்மா பம்பரமாக சுழல்வாள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை ஆனால் சரியான நேரத்தில் ஆயத்த வேலைகளை துவக்கி விடுவாள். கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக, அரை குறையாக செய்யும் பழக்கம் அறவே கிடையாது அம்மாவிடம். வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் வேளைகளில் நிலாவும் அம்மாவின் பாணியையே கடைபிடிக்கத் தொடங்கியிருந்தாள்.
நிலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. உறவுக்கார பெண் ஒருவர் அம்மாவிடம் கடுமையாக எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தார். எதையோ விளக்க ஓரிரு முறை முயற்சித்த அம்மா பின்பு மெளனமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சென்ற பின்,
எதுக்கும்மா பதிலுக்கு பதில் பேசாம அமைதியாவே இருந்த? கோபத்துடன் வினவினாள் நிலா.
நாம பேசுறத கேக்கற பொறுமை அவங்களுக்கு இல்லை....அவங்க கிட்ட வாக்குவாதம் பண்றதால நமக்கு என்ன கிடைக்கப் போகுது? என்று கூறிவிட்டாள். முக்கியமான பாடம் ஒன்றை அன்று அம்மாவிடம் இருந்து நிலா கற்றுக்கொண்டாள் " வாக்கு வாதத்தில் ஜெயிப்பது முக்கியம் இல்லை, வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் முக்கியம்" என்பது தான் அது.
அப்பாவிடமும் இதையே அம்மா பின்பற்றினாள். சண்டை போட்டது கிடையாது. அமைதியான தருணங்களிலே தவறுகளைச் சுட்டிக் காட்டுவாள். தன் மீது பிழை இருக்கும் பட்சத்தில் அதையும் ஒப்புக் கொள்வாள். குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பழக்கம் கிடையாது ...ஆலோசனைகளாகவே தெரிவிப்பாள்.
பள்ளிக்கு செல்லும் வேளையில் ஒவ்வொருவரும் ஓரிரு வேலைகளை அம்மாவிடம் தந்து விட்டுச் செல்வார்கள். நிலாவின் தாவரவியல் இலைகளை வெய்யிலில் சரியான பதத்திற்கு உலர்த்தி வைக்க வேண்டும். தம்பியின் தங்க மீன்களுக்கு லஞ்ச் கொடுக்க வேண்டும். மறந்து விட்டால், இதுகூட செய்யாம என்னம்மா? என்று முறைப்பார்கள். அப்போதும் கோபப் படாமல் அமைதியையே ஆயுதமாக்குவாள். எடுத்துரைக்காமலே அம்மாவின் நிலைமை அனைவருக்கும் புரிந்தது ஆச்சர்யம் தான்!!!
நிலாவின் பிரசவத்திற்கு வெளிநாடு வந்தபோது அனைவரும், அம்மாவை டெலிவரி ரூமிற்கு கூட்டிட்டு போகாதீங்க... emotional ஆயிடுவாங்க என்றனர். ஆனால் அம்மா தைரியமாக நிலாவிற்கு பக்க பலமாக நின்றாள். லேப்டாப்-ல் பேப்பர், புத்தகம் படிக்க எளிதில் கற்று நிலாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் அம்மாவின் ஆர்வத்தைக் கண்டு வியந்தாள் நிலா.
அம்மாவைப் பற்றிய நினைவுகள் நிலாவிற்கு பல உண்மைகளை உணர்த்தியது. நிலா தாயாகியிருக்கலாம் ஆனால் அம்மாவாகவில்லை. அதற்கு இன்னும் பக்குவப்பட வேண்டும். என்னிடமிருந்து என் மகள்(ன்) எதையும் கற்றுக் கொள்வதில்லையே என்று எந்தத் தாயும் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கே தெரியாமல் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்வதற்கும், அம்மாவின் பெருமை புரிவதற்கும் அவர்களுக்கு காலமும், அனுபவமும் தேவை.
நிலாவின் பார்வையில் அன்று அம்மா,"36 வயதினிலே" ஜோதிகாவை விட பல மடங்கு சாதனைகள் புரிந்த சாதனைப் பெண்மணியாக மிளிர்ந்தாள். அவை தந்த மகிழ்ச்சியில்(பெருமிதத்தில்), மனக் கவலைகள் அலைகளில் அடிபட்ட கோபுரமாய் சரிய , எப்போது உறங்கினாள் என்று நிலாவிற்கே தெரியவில்லை!!!