Tuesday, October 6, 2015

பாடவா?!?! பாட...வா

ஒரு பாட்டு பாடுங்களேன்...என்றதும்,

ஐய்யய்யோ...எனக்கு பாட்டு எல்லாம் வராதுங்க.

தொண்டை சரியில்ல...

 lyrics தெரியாது... என்று பல காரணங்கள் கூறினாலும் சும்மா பாடுங்க என்றதும் பலர் வெட்கம் கலந்த புன்னகையுடன் பாட ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும் சிலரும் தனிமையில் பாடி தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கின்றனர். மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போல் இசைக்கு நம் மனம் அடிமை ஆகி விடுகிறது. சில பாடல் வரிகளை நாட்கணக்கில் ஏன் வாரக் கணக்கில் கூட முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன காந்தசக்தி பாடல்களில்(இசை) உள்ளது?

      பாடல்களை நாம் பாடல்களாக மட்டும் கேட்டு, ரசித்து மறந்து விடுவதில்லை. நம் வாழ்க்கைப் பாதையில் நம்மோடு சேர்ந்து பயணிக்கும் மற்றொரு பயணியாக, சிநேகிதியாகப் பார்க்கிறோம். நமக்கு ஏற்படும் பல சுவாரஸ்யமான அனுபவங்களோடு பாடல்களையும் இணைத்து நினைவில் நிறுத்த முயல்கிறோம். நம் இளமைக் காலங்களில் கேட்ட பாடல்களைக் கேட்கும் பொழுது, கடந்த கால நினைவுகளோடு சிறிது நேரம் நாம்  வாழ்ந்து விட்டு வருவதை யாராலும் மறுக்க இயலாது .

 இந்த பாட்டு என்ன ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி வந்திருக்குமா? என்று யாராவது கேட்டு விட்டால் போதும் உடனே,"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, நான் பத்தாவது பரீட்சை எழுதிவிட்டு  வந்தப்போ புதுப் பாடல்ல போட்டாங்க" என்றும், "அந்த பாட்ல வர்ற டிரஸ் கூட எங்கிட்ட இருந்திச்சு" என்றும் அந்த படம் எப்போது வந்தது என்பதை நிரூபிக்க நம் வாழ்க்கைச் சம்பவங்களை சாட்சிக்கு அழைக்கிறோம்.

  அப்போது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். 24 மணி நேரமும் முழங்கும் FM-கள் இல்லை. என் அப்பாவிற்கு பாட்டு கேட்டுக் கொண்டே தூங்க ஆசையோ என்னவோ?!? ரேடியோவை ஆன் செய்யலாம் என்றபடி என் விரலையோ என் தங்கையின் விரலையோ பட்டன் போல் தட்டுவார். நாங்கள் பாட ஆரம்பித்து விடுவோம். சிறிது நேரத்தில் volume ஏற்ற இறக்க மற்ற விரல்களை அழுத்துவார், அதற்கேற்றவாறு  பாடுவோம். பின்பு off செய்து விடுவார்.

  சில வருடங்களுக்கு பிறகு ஒரு டேப் ரெகார்டர் வாங்கினோம். அதனோடு இரு ஒலிப் பெருக்கிகளை இணைத்து " Home Theater"- ஐ எங்களுக்கு அறிமுகப் படுத்தினார் என் அப்பா. எ.ஆர். ரஹ்மான் அறிமுகமான காலமது. அவரது அதிரடி இசையால் என் முதல் தம்பி மிகவும் கவரப் பட்டிருந்தான். ஒலிப்பெருக்கியின் அருகில் காதை வைத்துக் கேட்டுக்கொண்டிருப்பான். பின் தட்டு, டம்ளர், ரப்பர் பேண்ட் கொண்டு என் அண்ணனின் உதவியோடு அதே போன்று இசையமைக்கிறேன் என்று ஆரம்பித்து விடுவான். பாடல்களுக்கு இடையிடையே புரியாத மொழியில் வரும்" chores" வார்த்தைகளையும் சேர்த்துப்  பாடுவான். 

  அடுத்த ஐந்து, ஆறு வருடங்களில்  எண்ணிலடங்கா" Cassette" களை வாங்கி குவித்துவிட்டோம். அனைத்திலும் தவறாமால் என் அப்பாவின்  இனிஷியலை எழுதி விடுவாள் என் தங்கை. தொலைந்து விடுமாம்!!! பேருந்தில் கேட்கும்(பிடித்த) பாடல்களை வீட்டிற்கு வந்ததும் ஒரு டைரில் எங்களை குறிக்கச் சொல்வார். பின் கடைக்காரரிடம் பதிவதற்குக் கொடுப்பார். படத்தின் பெயர் தெரியாவிட்டால் பாடிக் காண்பித்ததாக கூறுவார் என் அப்பா. FM- கள், மொபைல் போனில் பாட்டு கேட்கும் வசதியால் எங்கள் காசெட்கள் பல வருடங்களாக பெட்டியில் உறங்குகின்றன. இதையெல்லாம் மீயுசியத்திலும், road show- களிலும் தான் வைக்க வேண்டும் என்று நாங்களே கேலி செய்வதுண்டு!!!

   எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் எங்கள் அத்தை இருந்தார். அவர்களிடம் நாமே பாடி பதிந்து கொள்ளும் வண்ணம் டேப் ரிகார்டர் இருந்தது. ஒருநாள் அத்தை இல்லாத போது நானும் என் தங்கையும் சேர்ந்து பாட்டு புத்தகத்தின் உதவியோடு பாடித் தள்ளிவிட்டோம். வாயாலே அனைத்து பாடல்களுக்கும் என் தம்பி இசை அமைத்தான். புரியாத கோரஸ் பாடவும் அவன் தான். ஆண் குரல்களுக்கு தன் இனிய குரலைத் தந்து உதவினான் என் இரண்டவாது தம்பி. மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட என் சித்தியும் அதில் ஒரு பாடலைப் பாடினார். நடு நடுவே என் சித்திப் பையனின் மழலையும் கேட்கலாம். இருபது வருடங்களுக்குப் பிறகும் இதைக் கேட்டு அவ்வப்போது  ரசிப்பதுண்டு.

  என் இரண்டு சித்தப்பாக்களுக்கும் பாடல்களின் மேல் தணியாத ஆர்வம் இருப்பதை நாங்கள் கவனிக்கத் தவறியதில்லை. "டி. எம். எஸ்" அவர்களின் பாடல்களை கேட்பதில் மட்டுமல்ல, பாடுவதிலும் வல்லவர் என் முதல் சித்தப்பா!!! சமீபத்தில் "எம்.எஸ்.வி" மறைந்த செய்தி கேட்டதும் என் சித்தப்பாவின் கணீர் குரல் தான் என் காதுகளில் ஒலித்தது. என் கணவரிடம் கூட இதைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். 

  "You Tube" ல் இளையராஜா "Play List" கேட்கும் போதெல்லாம், பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரும்  எனது இரண்டாவது சித்தப்பா, வந்ததும் வராததுமாக கடைசி பாடலையாவது கேட்டு விட மாட்டோமா என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக வானொலியை  ஓட விட்டு பாடல்களை ரசிக்கும்  காட்சிகளே என் மனத்திரையில் ஓடும்.    

    நமக்கு பிடித்த பாடல்களைக் கேட்கும் பொழுது மனதில் இருக்கும் களைப்பு, கவலை,அழுத்தம் அனைத்தும்  பறந்து விடுகிறது. தோல்வியைத் தழுவும் பொழுது உற்சாக பானமாக இருந்து, நம் தோள்களைத் தட்டி கொடுப்பதும் பாடல்களே. பல சாதனையாளர்கள் தங்களின் வெற்றிக்கு பாடல்களும் தூண்டு கோலாக இருந்ததாகக் கூறுகின்றனர். தனிமையில் வாழும் பலருக்கும் வாழ்கைத் துணையாக இருப்பதும் பாடல்கள்தான்!!!

    ரேடியோ" Out Dated" ஆகாமல் இருப்பதும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக FM- கள் பல்கிப் பெருகுவதும் பாடல்கள் மேல் நமக்கிருக்கும் தீராத காதலால் தானோ? கவிஞர்கள் மறையலாம், கலைஞர்கள் மறையலாம் ஆனால் பாடல்கள் என்றும் இந்த மண்ணை விட்டும், நாம் வாழும் வரை நம் மனதை விட்டும் மறைவதில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான் வாழ முடியவில்லை, இசையோடு இயைந்த வாழ்கையாவது வாழலாமே!!!