சுவர் கடிகாரம் மாலை ஐந்தரையை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ராகேஷை " Daddy" என்று அவனது ஒன்றரை வயது மகனும், ஆறு வயது மகளும் குதூகலத்துடன் வரவேற்றனர். ஷூவைக் கழட்ட விடாமல் காலைக் கட்டிக் கொண்டு நின்ற மகனைத் தூக்கிக் கொண்டு, " Guess What " என்று தனது பள்ளியில் நடந்தவற்றை கூறத் தொடங்கிய மகளை நோக்கி," அம்மா எங்கடா ? " என்றான் ராகேஷ்.
என்ன இன்னைக்கி " Traffic " இல்லியா? என்றவாறு உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள் நிரூபமா. அவள் கூறியதை காதில் வாங்காதவனாய், "உனக்கு விஷயம் தெரியுமா?" எனக்கு அடுத்த வாரத்திலிருந்து இரண்டு நாள் " Work From Home " கொடுத்திட்டாங்க!!! என்றான் மலர்ந்த முகத்துடன்.
கடந்த ஆறு மாதங்களாக, " எல்லாரும் வாரத்தில ரெண்டு நாள் தான் ஆபீஸ் போறாங்க. மத்த நாளெல்லாம் வீட்ல இருந்து தான் வேலை பாக்குறாங்க. நீங்க என்னன்னா ஸ்கூல் பயன் மாதிரி டெய்லி ஆபீஸ் போறீங்களே? என்ன பொல்லாத கம்பெனியோ? என்று ராகேஷை நச்சரித்துக் கொண்டிருந்தாள். இன்று அவள் ஆசை நிறை வேறிவிட்டது.
இனிமேல் அறக்க பறக்க சமைக்கத் தேவையில்லை. மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர (குளிரிலும், மழையிலும்) மகனையும் தூக்கிக் கொண்டு ஓடத் தேவையில்லை. மகனை கணவரிடம் பார்க்கச் சொல்லிவிட்டு குளித்து விட்டு வந்து விடலாம். முக்கியமாக டிராபிக்-ல் தினமும் இரண்டு மணி நேரம் விரயம் ஆவதைத் தடுக்கலாம். 'ஏய்ய்!!! "நினைச்ச படி...நினைச்சபடி" என்று அவள் மனம் ஆனந்தக் கூத்தாடியது.
அடுத்து வந்த இரண்டு வாரங்களில் வேலைப் பளு குறைவாக இருந்ததால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் லேப்டாப்- பை மூடி வைத்து விட்டான் ராகேஷ். சில நாட்கள் "மால்," சில நாட்களில் கோவில் என்று மாலை வேலைகளில் கிளம்பி விட்டனர். "வீட்ல இருந்து வேலை செஞ்சா அலுப்பு தெரிவதே இல்லை அதனால Gym-க்கு போக ஈசியா இருக்கு" என்றான் ராகேஷ். சொர்கமே என்றாலும் அது work from home போல வருமா!!! என்று அக மகிழ்ந்தனர் கணவனும் மனைவியும்.
அன்று எப்பொழுதும் போல் வேலை செய்து கொண்டிருந்த ராகேஷ் திடீரென ," இந்த மேனேஜர் இன்னைக்கு போய் மீட்டிங் செட் செஞ்சுருக்கான் என்றவாறு போனை எடுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான்". கதவை தட்டிக் கொண்டு நின்ற மகனை சமாளிப்பதற்குள் நிரூபமாவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. வழக்கமாக தன் பெற்றோருக்கு போன் செய்யும் நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது ஆனால் ராகேஷிடமிருந்து போன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. முகத்தில் ஏமாற்றம் நிழலாட அமர்திருந்த நிரூபமாவை நோக்கி," ஒரு 30 Min-ல லஞ்ச் ரெடி ஆயிருமா? அப்பறம் full- ஆ மீட்டிங் இருக்கு" என்று கதவை சாத்திக் கொண்டான் ராகேஷ். இன்னும் சமையல் வேலை ஆரம்பிக்கவே இல்லை என்று அப்போதுதான் உரைக்க பரபரப்பானாள்.
பின்பு வந்த நாட்களில் இதுவே தொடர்கதையானது. "Call- ல இருக்கும் போது டிவி (Roku) போடாத" இன்டர்நெட் ஸ்லோ ஆயிருது என்று போனோடு சேர்ந்து டிவி-யும் பறிபோனது. சில நாட்களில் இன்டர்நெட் வரவில்லை என்று அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புவான் ராகேஷ்." அய்யயோ அப்ப Lunch? " என்ற நிரூபமாவை முறைத்தவாறே "ஆபீஸ்- ல சாப்டுக்கறேன் " என்பான். சில சமயம் மாலை ஏழு மணியானாலும் வேலை செய்து கொண்டிருப்பான். மகனோடு சேர்த்து மகளையும்" மெதுவா பேசு அப்பா call-ல இருக்காரு என்று சமாளிக்க வேண்டும்.
அன்று அதிசயமாக " இன்னைக்கு அவ்வளவா வேலை இல்லை" என்று முன் அறையில் சோபா-வில் லேப்டாப்புடன் அமர்ந்து கொண்டான். டிவி- யும் அவன் வசம் சென்றது. சரியாக பார்க்கவில்லை என்று Rewind செய்து செய்து பார்த்தான். பார்த்ததையே திரும்ப திரும்ப பார்த்து நிரூபமாவிற்கு மண்டை காய்ந்தது. வேலை இருக்குன்னா அதை "Pause" பண்றீங்களா? என்று கோபமடைந்தாள். மகனுடன் உட்கார்ந்து கொண்டிருந்த நிரூபமாவைப் பார்த்து."என்ன சமையல்?" என்றான். எல்லாம் மிச்சம் இருக்கு சாதம் மட்டும் வைக்கணும் என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்தான். " ஆமா நீங்க எப்ப கெளம்பிவீங்கன்னு தெரியாது அதான் நேத்தே சேத்து சமைச்சிட்டேன்" என்றாள். ராகேஷ் வீட்டில் இருக்கும் நேரம் சமைக்காமலே சமாளித்தாள்.
அவன் அமர்ந்திருந்த சோபா அமுத சுரபி போல மாறியது. போன், டிவி ரிமோட், DVD- ரிமோட், snack bowl எதைத் தேடினாலும் அதிலிருந்து கிடைக்கும். டீ- கப், தண்ணீர் குடித்த டம்ளர் அனைத்தும் கீழே அவன் காலடியில் சேவர்கர்களைப்போல் காவலுக்கு நிற்கும். அவன் வீட்டில் இருக்கும் பொழுது இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டது போல் இருந்தது நிரூபமாவிற்கு.
"Work from Home" என்றால் work நமக்கு Home அவர்களுக்கு என்றுதான் பொருளோ? என்று நினைத்துக் கொண்டாள்." இதற்குத்தான் ஆசைப் பட்டாயா நிரூபமா?" என்று அசிரிரீ ஒலித்தது. நினைத்தது நடக்கா விட்டால் கவலை, நடந்தாலும் கவலை தானோ?!?! என்று பெரு மூச்செறிந்தாள் நிரூபமா.
ஒரு நாள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பேச்சு வார்த்தையின் முடிவில் போனும், டிவியும் நிரூபமாவின் வசம் வந்தது. ராகேஷ் வீட்டில் இருந்தாலும் அவன் அலுவலகத்தில் இருப்பதைப் போல் நினைத்துக் கொள்ள வேண்டும். மகனைப் பார்த்துக் கொள்ளும் வேலை எல்லாம் அவனிடம் கொடுக்கக் கூடாது. முக்கியமாக தொன தொனவென்று ஊர்க்கதை பேசக் கூடாது என்று முடிவானது.
இப்பொழுதெல்லாம் ராகேஷ் "Call"- என்று ஹெட் போன்-னை காதில் மாட்டிக் கொள்வான். சில நேரம் அதில் பாடல் கேட்டுக் கொண்டிருப்பான். சில நேரம் Face book பார்த்துக் கொண்டிருப்பான். இதை எல்லாம் நிரூபமா கண்டு கொள்வதே இல்லை. High speed இன்டர்நெட் இருப்பதால் வழக்கம் போல் அவள் பெற்றோரிடம் போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள் சமைத்துக் கொண்டே.
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய ராகேஷ், "Work From Home" option- ஐ தூக்க போறாங்களாம் என்றான். அப்பிடியா?!?! என்றாள் நிரூபமா எந்த அலட்டலும் இன்றி!!!