Monday, December 21, 2015

சொல்ல மறந்த வரலாறு

"பள்ளி, கல்லூரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்கள் மனதைக் கவர்ந்த பாடம் (Subject ) எது?" என்று கேட்டால் பல பேர் கூறும் பதில் கணிதம் அல்லது அறிவியல் என்பதாகத் தான் இருக்கும். சில பேர் மொழிப்பாடங்களைக் கூடக் கூறுவதுண்டு ஆனால் தப்பித் தவறிக் கூட வாயில் வராத சொல் " சமூக அறிவியல் " என்று அனைவராலும் அன்பாக(?!?!) அழைக்கப் படும் வரலாறு. 

என் பள்ளிக்காலங்களில் மூன்றாம் வகுப்பு முதலே  சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப் பட்டது. பத்தாம் வகுப்பு வரை  " கட்டாய பாடமாக" கற்பிக்கப் பட்டதே தவிர "கற்றுக் கொள்ளும் " பாடமாக இல்லை என்பதே நிதர்சனம். பல பேருக்கு ஒரு சில " Subject " மேல் ஏற்படும் தணியாத ஆர்வத்திற்கு அதைக் கற்பித்த ஆசிரியர்களே காரணம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியானால் வரலாற்று ஆசிரியர்கள் சரியாகக் கற்பிப்பதில்லையா?!?!

"நர்சரிப் பள்ளியில்" படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் ஆறாம் வகுப்பு முதல்  ஆண்கள் பயிலும் உயர் நிலைப் பள்ளிக்கு மாறினான். தனது  ஆசிரியர்களின்  கற்பிக்கும் வழிமுறைகளால் மிகவும் ஈர்கப்பட்டவனானான். தனது வரலாற்று ஆசிரியர் பாடத் தோடு நகைச்சுவை கலந்து   கூறும் பல இணைக் கதைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்வான். வெறுமனே புத்தகத்தை மட்டும் வரலாறு என்று  வாசித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, நாம்  படித்துக் கொண்டிருப்பது கற்பனைப் கதாபாத்திரங்களைப் பற்றி  அல்ல....நாம் வாழும் இதே நாட்டில் இரத்தமும், சதையுமாக வாழ்ந்து, சாதித்து இறந்து போன உண்மையான மனிதர்களைப் பற்றியது என்ற உணர்வு முதல் முறையாக ஏற்பட்டது.  

எங்களுக்கு   திருமணமாகி நான்  புதிதாக அமெரிக்கா(?!?!)விற்கு வந்த நேரத்தில் "மிஸ் வேர்ல்ட் " போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் போகிற போக்கில் என் கணவரிடம் அமெரிக்கா என்று எதற்கு இத்தனை "Contestants " யை காமிக்கிறாங்க? ஒவ்வொரு "டைம் ஜோன்" க்கு ஒவ்வொருத்தரா?  என்று கிண்டல் கலந்த தொனியில்  கூற என் கணவர் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் என்னை நோக்கினார். அமெரிக்கா என்பது U.S.A  மட்டும் இல்லை என்றும் வட அமெரிக்கா கண்டம் முழுவதும் என்று விளக்க "இது ஏன் எனக்கு தோன்றவில்லை?!? என்று அவமானமடைந்தேன். அன்று முதல் "கூகுள்" வரைபடத்தை எனது தோழியாக ஆக்கிக் கொண்டேன்.

என் தங்கையிடம் இதே கேள்வியைக் கேட்க அவளின் தெளிவான பதிலைக் கண்டு வியந்தேன். தனது ஒன்பதாவது வகுப்பு ஆசிரியை வாரம் ஒருமுறை தவறாமல் " Map Test " வைப்பார் என்றும் அப்பொழுது கற்றுக் கொண்டதே இன்று வரை கை கொடுப்பதாகக் கூறினாள். எனக்கு ஏற்படும் பல வகையான வரலாற்று, புவியியல்  சந்தேகங்களுக்கு இன்று வரை என் கணவரின் பதிலையே உடனடி நிவாரணமாகக் எடுத்துக் கொள்கிறேன். கல்லூரிக் காலங்களில் அரசுப் பொதுத் தேர்வில் கலந்து கொள்வதற்காகப்  பல வகையான புத்தகங்களைப் படித்ததாலேயே தன்னால் ஓரளவிற்கு பதில் கூற முடிகிறது என்று என் கணவர் கூறுகிறார்.

நம் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் வரலாற்று பாடங்களுக்கு
முக்கியத்துவம் ..... ஏன் சொல்லிக் கொடுப்பதே  இல்லை. " Total Mark " அதிகமா வாங்கணும்னா "மொழிப் பாடங்களைப் படி" என்று கூறுகிறார்களே தவிர யாராவது " சமூக வரலாறு" படி என்கிறார்களா? ஏன் நாம் படிப்பதெல்லாம் மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும் தானா?!?!...

உயர் நிலைப் படியில் இரண்டு வருடமும் கடிவாளம் கட்டிய குதிரைகளாக நம் குழந்தைகளை மாற்றி விடத் துடிக்கிறோம். குறைந்த பட்சம் நம் மாவட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமான  " ப்ராஜெக்ட் " களை கொடுத்து "Present " செய்யச் சொல்லலாமே?!?! நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அனைவருக்கும் "சத்திய சோதனை " புத்தகம் கொடுக்கப்பட்டு, தேர்வும் வைக்கப் பட்டது. ஆனால் நாங்கள்  யாரும் இருபது பக்கத்தைக் கூட தாண்டவில்லை. எந்த ஆசிரியராலும் படிக்குமாறு நாங்கள் வற்புறுத்தப்படவும் இல்லை!!!

எப்ப பார்த்தாலும் அசோகர் மரத்தை நட்டார், அக்பர் ,பாபர் காலத்து ஆட்சி இதுதானே வரலாறு என்று சலித்துக்கொள்ளும் நம்மில் பலருக்கு அதைப் பற்றியாவது தெளிவாகத் தெரியுமா?!?...."பாரிஸ்" என்றால் நம்ம "பாரிஸ் கார்னர்" தானே? என்றும் "ஓடி விளையாடு பாப்பா" என்று பாடியவர் பாரதிராஜா என்று பேசும்    நகைச்சுவைகளை ரசித்து சிரித்து விட்டு  உண்மையை அறிய மறுக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பள்ளி, கல்லூரி  பாடத்திட்டத்தில் எதாவது வரலாற்று நிகழ்வு  அல்லது சரித்திரத்தில் மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட  மாமனிதர்களைப்  பற்றிய  புத்தகத்தை இணைக்கலாமே?!? இதன் மூலம் படிக்கும் ஆர்வத்தையும், நூலக பயன் பாட்டையும் வளர்க்கலாமே?!?! ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான
"செமினார்" களுக்கும்  ஏற்பாடு செய்யலாம். வரலாற்று மாணவர்களும், ஆய்வாளர்களும் மட்டும் தான்  படிக்க வேண்டும் என்றில்லாமல் அனைத்து துறை மாணவர்களின் பாடத் திட்டத்திலும் வரலாறு இடம் பெற வழிவகை செய்ய  வேண்டும்.     

அமெரிக்கா, ஐரோப்பாவைப் பற்றிய  வரலாற்று  ஆவணப் படங்கள் இணையத்தில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. மிக தத்ரூபமாக அந்தந்த நூற்றாண்டுகளுக்கே நம்மை அழைத்துத் செல்பவையாக இருக்கின்றன. திரைப்படத் துறையில் நம் இந்தியர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் ஏன் அத்தகைய முயற்சிகளை  செய்யக்கூடாது? அரசு நிதி உதவியோடு "பிரம்மாண்டமாக" எடுக்கப்பட்டு பள்ளிகளில் தொடர்ச்சியாகத்  திரையிடலாமே?!?! நம் வரலாற்றை காட்சிகளாக காண்பதால் நம் மனதில் மிகவும் ஆழமாக பதிய வைக்க முடியும். நம் வரலாற்றுத்  தலைவர்களைப் பற்றி பல திரைப் படங்கள் வெளிவந்திருப்பதை மறுக்க முடியாது ஆனால் பிரபல நடிகர்கள் நடிப்பதால் அவர்களைத் தாண்டி அவர்களின் பாத்திரங்கள் நம் மனதில் பதிய மறுக்கிறதோ?!?!

முடிந்து போனதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறோம்?!? என்று  நீங்கள் கேட்பது புரிகிறது. நம்மோடு இல்லாத நம் பாட்டன், முப்பாட்டன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நாம்  நம் முன்னோடிகளைப் பற்றியும் சாதனையாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் பெருமிதம் கொள்ள வேண்டாமா?!? அவர்கள் வாழ்விலும், சரித்திரத்திலும் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் நமக்கு "இன்ஸ்பிரேசன்" ஆகக் கூட மாறலாம். நம்மில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்வேகத்தை தட்டித் திறக்கும் திறவு கோல்கள் பல சரித்திரத்தில் புதைந்து கிடக்கின்றன அவற்றை அறிய வேண்டாமா?!? உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா?!?  குறைந்தபட்சம் வரலாற்று வதந்திகள் பரவுவதையாவது  தடுக்கலாமே!!! "இந்தியா ஒளிர்கிறது",
"டிஜிட்டல் இந்தியா" என்றெல்லாம் முன்னேறும் வேளையில் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்களை பற்றி  அறிந்து கொள்ளவது அவசியம் என்றே தோன்றுகிறது.

 பெற்றோர்களாகிய  நாம் பல ஆய்வுப்  புத்தகங்களை வாங்கிக் குவிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் வரைபடங்களையாவது வீட்டில் ஒட்டி வையுங்கள். சரித்திரம் கொட்டிக் கிடக்கிறது ஆனால் அதை அறிந்து கொள்ளும் ஆர்வமோ வற்றிக் கிடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.   விமானத்தில் தான் உலகைச்  சுற்றி வர வேண்டும் என்பதில்லை....வரை படத்தில் கூட சுற்றி வரலாம் .... வாருங்கள்!!!