கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுட்டெரிக்கும் சூரியனை நினைத்தாலே உடலெங்கும் உஷ்ணம் தகிப்பது போல் இருந்தாலும், கோடை விடுமுறையை எண்ணி மனம் குளிரத்தான் செய்கிறது. விடுமுறை என்பது பெரும்பாலான பள்ளிகளையும் ஒரு சில கல்லூரிகளை மட்டுமே மையப்படுத்தி இருந்தாலும் அனைவருமே அதன் சுழற்சியில் உள்ளிழுக்கப் படுகிறார்கள். இந்த சம்மருக்கு என்ன பிளான்?! என்று கேட்பதெல்லாம் இப்பொழுது சகஜமாகிவிட்டது. "இந்த லீவுல நல்லா தூங்கனும்" என்பது கூட சிலரின் இலட்சியக் கனவாக இருக்கிறது.
பதினைந்து வருடங்களுக்கு முன் இவை எதுவுமே சாத்தியமாகவில்லை. உயர் நிலைப் பள்ளியில் இருந்ததால் உறவினர்கள் வீட்டில் தங்குவது, Cousin-களோடு அரட்டை இதிலிருந்தெல்லாம் " Out Grow" ஆகி விட்டிருந்தோம். எங்களைச் சுற்றிய உலகம் எப்பொழுதும் போல, சொல்லப்போனால் " Slow Motion"-ல் சுழல்வது போலவே தோன்றியது. அப்பா அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் அம்மா அவள் வேலைகளை எப்பொழுதும் போல் முடித்து விடுவாள். ஒரு பெரிய விசாலமான அறையே எங்களின் வீடு. அதுவே சமையலறை, வரவேற்பறை, படுக்கை அறை எனவே இழுத்துப் போர்த்திக் கொண்டு பத்து மணிவரை தூங்குவதோ, நள்ளிரவுவரை முழித்து டிவி பார்ப்பதோ (கேபிள் இணைப்பு இல்லை என்பது வேறு விஷயம்) எல்லாம் நடக்காத காரியம். அதற்காக விடுமுறையை வெறுத்தோம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
இன்றைய காலகட்டத்தில் எட்டாக் கனியாகி விட்ட கூட்டுக் குடும்ப வாழ்கையை எங்களுக்குச் சாத்தியம் ஆனது. எங்களது இரண்டு சித்தாப்பாக்களுக்கும் ஒன்று இரண்டு வயதில் குழந்தைகள் இருந்ததால் அவர்களைத் தூக்கிக்கொண்டு வலம் வருவது எங்களின் பிரதான பொழுதுபோக்காக இருந்தது. ஒரு சில சமயம் அதுவும் சுவாரசியம் அற்றதாகக் தோன்றினால் நானும் என் தங்கையும் தம்பிகளோடு சேர்ந்து சமையல் சாம்ராஜ்ஜியத்தில் இறங்கி விடுவோம்.
ஒரு நாள் பால் கொழுக்கட்டை செய்யலாம் என்று தம்பி யோசனை சொல்ல உரலில் இட்டு ஆட்டும் வேலையைத் தொடங்கினோம். ஒவ்வொருவரும் நூறுமுறை, இருநூறு முறை என்று செக்கிழுப்பது போல ஆட்டிக் கொண்டிருப்போம். என் முதல் தம்பி கணக்கில் கெட்டி. இருநூறுக்கு மேல் ஒருமுறை கூட ஆட்ட மாட்டான். அதற்கு பின் பல வடிவங்களில் உருட்டுவது என வேலை தொடர்ந்து கொண்டே போகும். சமைப்பது அம்மாவின் வேலை. பாத்திரங்களைக் கழுவுவது நானும் என் தங்கையும். அன்று நேரம் போவதே தெரியாது. களைப்பும், களிப்பும் ஒரு சேர அது ஒரு ஆனந்த அனுபவமாகவே இருந்தது.
எங்கள் வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்வதில் அனைவருக்கும் பங்கு உண்டு. " காஸ் கிட்ட போகாத...சுட்டுக்காதே" என்றெல்லாம் பதறும் ரகம் இல்லை எங்கள் அம்மா. முதல் முதலில் நான்காம் வகுப்பில் இருக்கும் பொழுது என் சித்தப்பாவிற்காக தோசை சுட ஆரம்பித்தேன். ஓட்டல் தோசை என்று மிக மெலிதாக முறு முறுவென்று இருக்கும். கருகி விட்டாலோ, பிய்ந்து விட்டாலோ என் அண்ணனுக்கும் தங்கைக்கும் கொடுத்துவிடுவேன். சித்தப்பாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமல்லவா?! பின்பு சில சமயம் டீ போடுவதுண்டு.
ஒரு முறை ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது நானும், நான்கைந்து கசின்களும் சேர்ந்து எங்கள் பெரியம்மா வீட்டு மொட்டை மாடியில் சர்க்கரைப் பொங்கல் செய்ய முயற்சித்தோம். சேர்த்து வைத்த காசில் சர்க்கரை, தீப்பெட்டி வாங்கினோம். அரிசியை சமையலறையிலிருந்து திருடி விட்டோம். பெரியப்பா பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார் அங்கிருந்து பேப்பர், அடுப்பிற்கு மூன்று கல் என்று எல்லாம் ரெடியாகிவிட்டது ஆனால் கடைசியில் பெரியம்மா," ஏன் எல்லாரும் மேலையும் கீழையுமா சுத்துரீங்க?!" என்று கண்டுபிடித்து காய்ச்சிவிட்டார். மூலைக்கொருவராக தெறித்து ஓடினோம்.
பின்பு வந்த காலங்களில் சட்னி செய்வது, உப்புமா கிண்டுவது என்று ஒரு சில பொறுப்புக்களை அம்மா வெளியே செல்லும் நேரங்களில் எங்களிடம் ஒப்படைப்பதுண்டு. உப்பே இல்லாமல் உப்புமா செய்த பெருமை என்னையே சாரும். கல்லூரி நாட்களில் கொழுக்கட்டை செய்வது, வடை சுடுவது எல்லாம் நின்று போனது. தொலைக்காட்சியில் வரும் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து புதுப் புது "டிஷ்"-களை சமைத்துப் பார்ப்பது பழக்கமானது.
ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாத சமயம் "வேர்கடலை பர்பி" செய்யத் திட்டம். " நல்லா இருக்குமா?!" என்று கேட்ட தம்பியிடம் " சூப்பரா இருக்கும்டா" என்று வேண்டிய பொருட்களை வாங்க கடைக்குத் துரத்தினோம். நானும் தங்கையும் சேர்ந்து ஒரு வழியாக சமைத்து முடித்து விட்டோம். நெய் தடவிய தட்டில் பரப்பி விட்டு, அரை மணி நேரத்தில் பர்பி ரெடி என்று விளம்பர பாணியில் கூறி ஆவலோடு காத்திருந்தோம். பக்கத்து போர்ஷனில் இருந்த அத்தை எட்டிப்பார்த்து," பாக்க நல்லா இருக்கே?! எவ்வளவு நெய் விட்டீங்க?" என்றதும் தான் தெரிந்தது அதை மறந்து விட்டோம் என்று. அவரிடம்," இது ரொம்ப ஹெல்தி ஆன "டிஷ் " நெய்யே தேவையில்லை. வேர்கடலையில் இருக்கும் எண்ணையே போதும், Non - Stick -ல் சமைத்துவிடலாம் என்றும் சமாளித்தோம்.
அரைமணி ஒருமணி நேரமானது, இரண்டு மணி நேரமானது ஆனால் பர்பி மட்டும் வரவே இல்லை. தம்பியும் பொறுமை இழந்து இதுக்கு " வேர்கடலை அல்வா"-ன்னு பேரை மாத்திக்காலம் என்று கூறிவிட்டு சாப்பிடத் தொடங்கிவிட்டான். இன்று வரை பர்பி என்று சொன்னாலே, " உனக்கு அல்வா தானே வரும்" என்று கேலி செய்வான்.
ஒரு நாள் அம்மாவும், அப்பாவும் வெளியூருக்கு சென்றிருந்தனர். என்ன சமைக்கவேண்டும், எவ்வளவு சமைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அம்மா. அன்று என் தம்பியின் பிறந்த நாள் ஆதலால் பிளான் மாறியது. அவனுக்கு பிடித்த வெஜிடபிள் பிரியாணியும், ரவா கேசரியும் சமைக்குமாறு அவனே கேட்டதால் ஒத்துக்கொண்டோம். அவனின் உதவியோடு மார்கெட்டுக்கும் கடைக்குமாக அலைந்து, ஒரு சில மணி நேரங்கள் செலவிட்டு சமைத்தால்,"நல்லா இருக்கு ஆனா அம்மா பண்ற மாதிரி இல்லை " என்று கூற, எங்களுக்கோ கோபம் தலைக்கு ஏறி விட்டது. எங்கள் சமையல் சாகசத்தின் உந்து சக்தியும், கடும் விமர்சகரும் அவன்தான். சமீபத்தில் திருமணமான அவனிடம், " உன்னோட Famous Dialogue -யைச் சொல்லி wife கிட்ட அடிவாங்காதடா?! என்று கலாய்த்தோம்.
இன்றைய சூழலில் கூட்டுக் குடும்பம் சாத்தியமில்லாமல் போய்விட்டது. தனிக் குடும்பங்களில் வாழும் குழந்தைகளும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்றவர்களாக, கடிவாளம் பூட்டிய குதிரையைப் போல் ஒரே வீட்டில் தனித் தனி தீவுகளாக வாழ்கின்றனர். வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருப்பதால் பெற்றோர்கள் குழந்தைகளை வேலை வாங்குவதே இல்லை மாறாக அவர்கள் வேலைகளையும் உதவி என்ற பெயரில் இவர்களே செய்து கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் அவசர காலங்களில் கூட உதவ முடியாத, உதவ விரும்பாத அவர்களைக் கண்டு மனம் வருந்துகின்றனர்.
பொறுமை, திட்டமிடல், பொறுப்புணர்வு, சவால்களை சமாளித்தல்,கூட்டு முயற்சி என்று பல வித வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்கும் அரிய, எளிய கலை " சமையல் கலை ". வீட்டில் அறிவியலைக் கற்றுக் கொடுக்கும் இடம் சமையல் கூடம். குழந்தைகளை சிறு வயதிலிருந்தே சிறு சிறு வீட்டு வேலைகளில் (சப்பாத்தி உருட்டுதல், கீரை சுத்தப்படுத்துதல்,பட்டாணி உரித்தல் ) ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் குறு, சிறு தசைகளின் வளர்ச்சி( Fine and Gross Motor skills), Eye Hand Co- ordination
போன்றவை பலப்படுத்தப் படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன(பெரியவர்கள் கூறினால் நாம் எங்கே கேட்கிறோம்). இன்றைய சந்ததியினரிடம் பரவலாக காணப்படும் " Speech Delay "-யையும் அவர்களுடம் கூடி உரையாடி, சமைத்து, நேரத்தை செலவிடும் பொழுது களையலாம் என்றே தோன்றுகிறது.
என்ன...உங்களில் எத்தனைப் பேர் இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சேர்ந்து சமைத்து அசத்தப் போகிறீர்கள்?!