Tuesday, June 7, 2016

வெள்ளைப் பொய்கள்

புது வருடம் தொடங்கிவிட்டது. அனைவரிடத்தும் பரபரப்பும், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் தொற்றிக் கொண்டுவிட்டது. "இது ஜனவரி மாதம் இல்லையே?! புது வருடம் எப்படி?!", என்று உங்கள் புருவங்கள் உயர்வது  தெரிகிறது...நான் கூறுவது புதிதாகத் ஆரம்பித்த  கல்வி ஆண்டைத்தாங்க!!! நாம் கடந்து வந்த பாதையை "Rewind" செய்து பார்க்கும் பொழுது இந்த பள்ளிக்காலம் நம் மனக் கவலைகளை களைத்து, புத்துணர்வையும் நிரப்பிவிட்டுச் செல்லத் தவறுவதில்லை. புதுச்  சீருடை, நோட்டு, புத்தகங்களிலிருந்து வருமே ஒரு வாசனை...ஆஹா!!! ஆரம்பப் பள்ளி, இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என்று எங்கும் மாணவர்கள் வெள்ளம் கரை புரண்டு, பல வண்ணக்  கனவுகளைத் தாங்கி ஓடுகிறது ஆனால் முதல் முதலாக  பள்ளியில் காலடி எடுத்து வைக்கும்  பிஞ்சுக் குழந்தைகளின் பவுடர் படிந்த முகங்களையும், கலங்கிய கண்களையும் (அம்மாவின் கண்களும்தான்) காணும் பொழுது ஏற்படும் பரவச நிலைக்கு ஈடு இணையே இல்லை என்று தான் தோன்றுகிறது.  

நம் வாழ்க்கைக்குத் தேவையான... முக்கியமாக சமூதாயத்தில் நம்மை இணைத்துக் கொள்ள அத்தியாவசியமான  அனைத்து வித  நுணுக்கங்களையும் நமக்கு அறிமுகம் செய்யும் இடம் "பள்ளிக்கூடம்". அங்கேயே  நமது சமூக வாழ்கை ( Social Life) ஆரம்பமாகி விடுகிறது  என்று தான்  சொல்ல வேண்டும். பல வித நல்லொழுக்கங்களையும்  நமக்கு கற்றுத் தர பள்ளிகள்  படாத பாடு பட்டாலும், மிகச் சுலபமாக, சொல்லிக் கொடுக்காமலேயே  நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஒரு விஷயம் " பொய் கூறுவது". கூட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்ள, தண்டனைகளில் இருந்து தப்பிக்க இதை விட  எளிய வழி இருக்கிறதா என்ன?!

ஆரம்பப் பள்ளியில் இருக்கும் பொழுது மதிய உணவை பாட்டி வீட்டில் சாப்பிடுவது வழக்கம். U .K .G -ல் இருந்த எனது தங்கைக்கு " Selective Amnesia " போல செலக்டிவ் வயிற்று வலி, தலை வலி சாப்பிட்டு முடிந்ததும் தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நீடிக்கும். மூன்று மணி ஆனதும் சரியாகி விளையாட ஆரம்பித்து விடுவாள். ஏன் அப்படி?! உங்களுக்கே தெரிந்திருக்கும்... ஸ்கூலுக்கு மட்டம் போடுவதற்குத்தான் என்று. டீச்சர் நேத்து எங்க வீட்ல கரண்டு இல்லை, ஹோம்வொர்க் நோட்ட கிளாஸ்ல வச்சிட்டு போயிட்டேன் என்று வீட்டுபாடம் எழுதாமல் போனதற்கு எத்தனை பொய்கள் கூறியிருப்போம். பள்ளியில் தொலைத்து விட்டு வந்த பென்சில் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ்ற்குத்  தான் எத்தனைப்  பித்தலாட்டம் வீட்டில்!!!

 பள்ளி இறுதி நாள். எதுவும் நடக்காது ஆனால் லீவு போட்டீர்கள்...அவ்வளவுதான் நீங்கள் Fail என்று எச்சரிக்கப்படுவீர்கள் இருந்தும்   அந்த கடைசி நாள் லீவு போட்டு விட்டு என்ன பொய் சொல்லி சமாளிப்பது என்று விடுமுறை முழுதும் யோசித்து தூக்கம் தொலைத்த நாட்கள் உண்டு. நான் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது  அந்தக்  கடைசி நாளில்  என் தங்கையின் புது டிரஸ், நகப்பூச்சு, லிப் ஸ்டிக் என்று அலட்ட ஆசை. என்ன செய்வது?! எனக்கு பிறந்தநாள் என்று பள்ளியிலும், டான்ஸ் ஆடப்போகிறேன் என்று வீட்டிலும் பொய் கூறி என் மாஸ்டர் பிளான்-ஐ நிறைவேற்றி விட்டேன் ஆனால்   அந்த கால கட்டங்களில் என் நிழலை விட என்னை நெருக்கமாக பின்தொடர்வது என் அருமைத் தங்கை. என் மனசாட்சியின் மறு வடிவமான அவளுக்கு சந்தேகம் வலுத்து விட்டது. ஸ்கூல்ல டான்ஸ் ப்ரோக்ராம் இல்லையே?!, என்ன பாட்டுக்கு ஆட்றீங்க?!, ஸ்டெப்ஸ் போடு  என்றெல்லாம் கூறி  குட்டையைக் குழப்பினாள். எங்க கிளாஸ்லயே ஆடுறோம்...ஸ்டேஜ்ல இல்ல என்றும், சில பல இலஞ்சங்களாலும்  அவளை சரிகட்டி விட்டேன். அடுத்து வந்த நாட்களில்  நான் கூறியது பொய் என்று பல முறை என் அம்மாவிடம் அவள்  போட்டுக் கொடுத்தாலும் பெரிதாக எனக்கு எந்த சேதாரமும் இல்லை என்பதுதான் உண்மை.

நாங்கள் வசித்த வீடு எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து நிமிட நடைப் பயணத் தொலைவில்  இருந்தது. அன்று அரையாண்டுத் தேர்வு. நானும் என் தங்கையும் பள்ளிக்கு ஒன்றாகச்  செல்வது வழக்கம். பள்ளியை அடைந்ததும் தான் தெரிந்தது தேர்வு தொடங்கி விட்டது என்று. என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரே ஓட்டமாக தேர்வறையை நோக்கி ஓடிவிட வேண்டியதுதான் என்று நினைக்கையில் எங்கள் கெட்ட நேரம் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ் வந்து விட்டார். 'என்ன இவ்வளவு லேட்டு?!, வீடு எங்க இருக்கு?", என்றதும் சிறிதும் தாமதிக்காமல் அடுத்த கணமே என்னிடமிருந்து வந்த பதிலைக் கண்டு நானே வியந்து போனேன். எங்கள் பள்ளியிலிருந்து 30 நிமிட தொலைவில் உள்ள ஏரியாவின் பெயரைக் கேட்டதும், "போங்க...இனிமே லேட்டா வரக்கூடாது", என்று முதுகில் ஒரு அப்பு அப்பி அனுப்பி வைத்தார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடினோம். தேர்வு நேரத்தை தவறாகப்  பார்த்ததால் வந்த வினை.


சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல் வெறுமனே பிறரின் கவனத்தை தங்கள் வசம் ஈர்க்க வேண்டுமென்று குழந்தைகள் கூறும் கப்ஸா மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். என் தம்பி இரண்டாவது படித்துக் கொண்டிருந்த பொழுது அவனுடைய நண்பன் வீட்டில் புலியை "Pet" ஆக வைத்திருப்பதாகக் கூறியதும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அது பொய் என்று அவனிடம் விளக்காமல், " சாப்பிட என்ன தருவாங்களாம்?!, எங்க தூங்குமாம்?! என்று அவனைத்  தூண்டிவிட, அவன் நண்பனும் சலிக்காமல் பதில் கூறினான். புலியை தினமும் வாக்கிங் கூட்டிச் செல்வதாகவும், பள்ளிக்கு வரும் நேரங்களில் கூண்டில் அடைத்துவிட்டு வருவதாகவும்  கூறி வெறுப்பேற்றினான். 

அவன் வீட்டிற்குச்  செல்ல அனைவரிடமும் போட்டா போட்டி. கடைசியாக என் தம்பியும் ஒரு நாள்  அவன் வீட்டிற்கு விஜயம் செய்து திரும்ப, அவனிடம்  "என்னடா?! புலி எப்பிடி?!", என்று நாங்கள் கேட்க," அவங்க வீட்டு நாய் பேரு டைகராம்", நீங்க நெஜ புலின்னா நெனைச்சீங்க?!-ன்னு கேக்குறான் என்று கூற " நல்ல வேலை புலின்னு பூனைய காமிக்கலையே என்று கிண்டலடித்தோம். சில நாட்கள் கழித்து அவன் வீட்டில் மயில் வளர்ப்பதாகவும், பார்க்க கோழிக் குஞ்சு போல இருந்தாலும் பெரிதானதும் தோகை வளர்ந்துவிடும் என்றும்  அவன் கூறுகிறான் என்று தம்பி கூறியதும், " உன் பிரண்ட் ரொம்ப நல்லா வருவாண்டா" என்று மனதில் நினைத்துக் கொண்டு  "ஒரு நடை போய் பாத்துட்டு வாயேன்" என்றோம்  சிரிக்காமல்.    

நான்காவது படித்துக் கொண்டிருந்த என் தம்பியின் வகுப்பாசிரியையை திடீரென மாற்றி விட்டார்கள். புதிதாக வந்தவருக்கு  என் தம்பியிடம் என்ன கோபமோ பாடங்களை மிகவும் சத்தமாகக் கூறவேண்டும் என்றும் மொத்த வகுப்புமே சேர்ந்து கடம் போட வேண்டும் என்றும் கடிந்து  கூறி இருக்கிறார். காது வலிக்கிறது என்று கூறியும் கேட்கவில்லை.  தனக்கு வந்த பிரச்சனையை தானாகவே களைய முடிவெடுத்தான். அப்பொழுது எங்கள் வீடு அவுட்டர்-ல் இருந்ததால் ரிக்க்ஷாவில் பள்ளி செல்வது வழக்கம். பள்ளி திறப்பதற்கு முன்பாகவே அவன் சென்று விடுவதால்  வாசலில் காத்திருப்பான். அன்று ரிக்க்ஷா கண்ணை விட்டு மறைந்ததும் அருகில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்று வயிற்றைக் கலக்குவதாகவும் பள்ளிக்கு செல்ல முடியாது என்றும்  கூறி விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறான். மாலையில் பள்ளி வாசலில் நின்று, ரிக்க்ஷா ஏறி எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு வந்து விட்டான்.

 டீச்சர் வராததால் வீட்டுப்பாடம் இல்லை என்று கூறிவிட்டான். தொலைபேசி வசதி இல்லாததால் சித்தி வீட்டிலிருந்து  தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மறுநாளும் இதே முறையை கடைபிடித்து மாட்டிக் கொண்டான் வீட்டில். அடி திட்டு எல்லாம் அவனுக்கு கிடைக்கவில்லை. உடனே டீச்சர்-ஐ தலைமை ஆசிரியையிடம் புகார் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. "நீ பாட்டுக்கு இப்பிடி போயிருக்கியே?! யாராவது கடத்திட்டு போனா எங்க போய் தேட்றது?!" என்றும், " ரெண்டு நாள் சத்தமா சொன்னா உனக்கே பழகிரும்...மண்டையிலே நல்லா ஏறும்...இதுக்கெல்லாமா பயந்து ஓட்றது" போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

அன்று குழந்தைகளாக இருந்த அனைவரும் இன்று பெரியவர்களாக மாறிவிட்டோம் ஆனால் பொய் சொல்வதை நிறுத்தினோமா?! இல்லை. மாறாக,  ஏன் பொய் சொல்கிறோம்?! அதனால் எத்தனை பேருக்கு நன்மை என்று நீட்டி முழக்கி... நாம் செய்வது சரி என்றும், இவை " வெள்ளைப் பொய்கள்" என்றும் வாதிடுகிறோம். நமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறோம். ஆனால்  யாரையும் பாதிக்காத, மாட்டிக் கொண்டால் தன் தவற்றை ஒப்புக்கொள்ளும் குழந்தைகளின் பொய்கள் அல்லவா உண்மையிலேயே " வெள்ளைப் பொய்கள்"!!!

கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழலும்  இன்றைய சூழலில், குழந்தைகளும் கம்பளிப் புழுக்களாக இருப்பதை விட  பட்டாம் பூச்சிகளாக மாறி பறந்து விடத் துடிக்கிறார்கள். இழந்த சுகத்தை எதிர்காலத்தில் தேடித் தொலைகிறார்கள்.  நாமும் "Grow Up " என்று அடிக்கடி கூறி அவர்களின் குழந்தைத்தனங்களை குழி தோண்டி புதைத்து விடுகிறோம். மாறாக, அவர்களின் சிறு சிறு குறும்புகளை ரசித்தும், கண்டிக்க வேண்டி இடத்தில் கண்டித்தும், மன்னிக்க வேண்டிய இடத்தில மன்னித்தும் மகிழலாமே!!!. வெள்ளைப் பூக்களோடு மழலைகளின் வெள்ளைப் பொய்களும் மலர்ந்தால் மானிடரிடத்தில் மன அமைதியும், மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும் என்பதில் சந்தேகமா என்ன?!