Friday, September 2, 2016

"பனியாரம்" பாட்டி

ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தவளின் காதுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லும் வாகனங்களின் சத்தம் விழ, அரக்க பறக்க எழுந்து அமர்ந்தாள். பறவைகளின் ரீங்காரங்களுக்குப்  பதிலாக கேட்கும் பஸ்ஸின் ஓசை,  பொழுது நன்கு புலர்ந்து விட்டதை உணர்த்தியது. கூந்தலை வாரி சுருட்டி கொண்டையாக்கியவள் வேகமாக எழுந்து நிற்க முயன்று தோற்றாள். மனதின் வேகத்திற்கு அவளின் அறுபது வயது உடலால் ஈடு கொடுக்க முடியவில்லை.

" ஆத்தா மகமாயி" என்று மெதுவாக எழுந்தவள் பாயை சுருட்டி மூலையில் கடாசினாள்.

வாயிலை நோக்கி நடந்தவள், கயிற்றுக் கட்டில் சுவரோரம் சாய்த்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டு, "எந்திருச்சும்  உசுப்பி விடாம போயிருக்கு இந்த மனுசன்" என்று தன் கணவரைப் பற்றி தனக்குள்ளே புலம்பியவளாய்  அருகில் இருந்த  குடத்து நீரை வாளியில் கவிழ்த்தாள். நன்கு சாணியால் மொழுகி, காய்ந்திருந்த  வாசலில் ஊற்றினாள். மீதமிருந்த தண்ணீரில் முகம் கழுவி, வெற்றிலைக் கறை படிந்த பற்களை கையால் தேய்த்து வாய்க் கொப்பளித்தாள். வீட்டிற்குப்  பின் புறம் இரண்டு நிமிடம் சென்று வந்தவள் சாலையைக் கடந்து எதிர்புறம் இருந்த குடிசையை நோக்கி நடந்தாள்.

கதவிற்கு பதில் நின்று கொண்டிருந்த தென்னை ஓலையை எடுத்து வெளியில் போட்டவாறு உள்ளே நுழைந்தாள். இரண்டு அடுப்புகளையும் ஒருசேர பற்ற வைத்தாள்." என்ன முழுச்சுகிட்டியா?" என்றவாறு  கையில் தூக்கு வாளியுடன் உள்ளே நுழைந்த கிழவனிடம், " ஆமா நேரமாச்சுல்ல" என்றவள் " நீ குடிசிட்டியா?" என்று கேட்டவாறு தூக்கில் இருந்த டீயை மடக் மடக் என்று விழுங்கி ஏப்பம் விட்டாள்.

" நீ நல்லா தூங்கிட்டு இருந்தே அதான் டீ வாங்கியாந்து எழுப்பலாம்னு போனேன்" என்றவன் புகை மூட்டத்தினூடே பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவளின்  பதிலை எதிர் பாராமல் தோட்டத்தை நோக்கி நடந்தான். மூட்டு வலியினால் வளைந்த கால்களுடன் சாய்ந்து சாய்ந்து நடந்து செல்லும் தனது கணவரை அவள் கவனிக்கத் தவறவில்லை.

அந்தக்  கிராமத்தை அப்பளக் கம்பெனிகளும் ரைஸ் மில்களும்  ஆக்கிரமித்திருந்தன. சிலர் விவசாயம் செய்தனர். அங்கு வேலை பார்ப்பவர்களை நம்பியே பாட்டியின் வியாபாரம்  ஓடியது  . பல ஓட்டல் கடைகள் இருந்தாலும் தனக்கென்று சில வாடிக்கையாளர்களை வைத்திருந்தாள் பாட்டி. அவர்களின் காலை சிற்றுண்டி பாட்டியின் கடையில் தான். சில பள்ளிக் குழந்தைகளும் சாப்பிடுவதுண்டு. சட்னி அரைத்த கையோடு அடுப்பிலிருக்கும் விறகை சரிசெய்து விட்டாள். முகமெங்கும் வியர்வை வழிந்தோடியது.

" என்ன பாட்டி இட்லி கெடைக்குமா?" என்று கேட்டபடி நடுத்தர வயது மதிக்கத் தக்க ஆண்கள் உள்ளே நுழைந்து பக்க வாட்டில் இருந்த திண்டில் அமர்நது கொண்டனர். " இதோ" என்றவாறு ஆவி பறக்கும் இட்லிகளை சட்டியில் கவிழ்த்தாள். ஒரு கையில் வாழை இலைகளும்  மறு கையில் தண்ணீர் குடமுமாக உள்ளே நுழைந்த அவளுடைய கணவனும் அவர்களுடன் பேச்சு கொடுத்து கொண்டே அமர்ந்தான். தட்டில் இலைகளைப் போட்டு நான்கு ஐந்து இட்லிகளை சட்னிகளுடன் அவர்களுக்குப்  பறிமாறினாள். " நீயும் சாப்பிடு" என்று கிழவனுக்கும் கொடுத்தாள்.

 கையில் இரண்டு பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்த பாலாவும் பாபுவும்,   "பணியாரம் ரெண்டு ரூவாய்க்கு பாட்டி" என்றனர். " இனிப்பு பணியாரம் இன்னும் ஊத்தல சாமி ஒக்காருங்க " என்றவள் " பள்ளிகோடம் இல்லியா?" என்று சிரித்தாள் வெற்றிலையைக்  குதப்பிக் கொண்டே. இல்லை... என்பது போல் தலையாட்டி விட்டு அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களின் இலைகளை நோட்டமிட்டனர் இருவரும். அவர்களின் வாயில் எச்சில் ஊறிய அதே சமயம் " அதெல்லாம் உங்களாலே சாப்பிட முடியாதுடா  காரமா இருக்கும்" என்று தங்களின் பாட்டி கூறியது நினைவுக்கு வர எச்சிலை முழுங்கிக் கொண்டனர் ஏமாற்றமாக.

அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர்களின் பணியாரம் கிடைத்தது. சில பள்ளிக் குழந்தைகளும் இனிப்பு பணியாரம் என்று பார்சல் வாங்கிச் சென்றனர். " எல்லாருக்கும் சட்னி வேணுமில்ல" என்று சிலரை மிரட்டியும்,
" இன்னும் ரெண்டு இட்லி சாப்டு " என்று சிலரிடம் கனிவாகவும் வியாபாரத்தை நடத்தினாள். கொடுக்கும்  சில்லறைகளை வாங்கிச் சரி  பார்த்து சுருக்குப் பையில் போட்டுக்  கொண்டாள். " நாளைக்கு தர்றேன் பாட்டி" என்றும் " சாய்ங்காலம் கூலி கொடுத்துருவாங்க" என்று சிலரும் நகர்ந்தனர். "பொழுது சாய வீட்டுக்கு வர்றேன்னு உங்க  பாட்டிகிட்ட சொல்லுங்க" என்று  பாலா, பாபுவை நோக்கி சிரித்த முகத்துடன் கூறினாள். இரண்டு பாட்டிகளும் தோழிகள். மூன்று பணியாரம் ஓசியாக கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்தனர் சகோதரர்கள்.

காலை பத்து மணி வரை வியாபாரம் பின் வீட்டுச்  சமையல். மதிய நேரம் அடுப்பிற்குத் தேவையான சுள்ளிகளையும், தென்னம் மட்டைகளையும் தோப்பிலிருந்து சேகரித்துக்  கொள்வது, மாலை வேளைகளில் அடுத்த நாளிற்கான மாவை உரலில் இட்டு அரைப்பது என " பிஸி " பாட்டியாக இருந்தாள் " பணியாரம் " பாட்டி. அவளுடைய கணவன் அருகிலிருந்த அதே  தோப்பில் " Watch Man "- ஆக இருந்தான். மோட்டார் போட்டு தண்ணீர்  பாய்ச்சுவது, அயலவர்களை அண்ட  விடாமல் பார்த்துக் கொள்வது என அவருக்கும்  பொழுது போனது. பாபுவும் பாலாவும் பல முறை தண்ணீரில் ஆட்டம் போட்டதுண்டு. புளியங்காய் கூட பறித்துக் கொடுப்பார் தாத்தா.  

நன்கு இருட்டி விட்டிருந்தது." நல்லா இருக்கியளா?" என்றவாறு  வீட்டிற்குள் நுழைந்த "பணியாரம்" பாட்டியிடம், " சாந்திரமா வர்றேன்னுட்டு இப்ப வர்ற ?" என்றாள் பாலாவின் பாட்டி. "ஆமா " என்றவளின் கண்கள் பாலாவின் தந்தையைத் தேடியது." பெரிய தம்பி இன்னும் வரலையோ?" என்றவளின் குரலைக் கேட்டு, " என்னம்மா எப்பிடி இருக்கீங்க?" என்றவாறு வெளிப்பட்டான் பாலாவின் தந்தை கையில் சிறிய பொட்டலத்துடன். அவர் மருத்துவமனையில் அலுவலகப்  பணியில் இருந்தார். மலர்ந்த முகத்துடன் அதைக்  கையில் வாங்கியவள் " அவர்  மூட்டு வலியால நடக்க முடியாம கஷ்டப்பர்றார். மாத்திரை கேக்கலாம்னு வந்தேன் நீயே கொடுத்திட்டே" என்று சேலையில் முடிந்து கொண்டாள்.

"சரி அப்ப வாறேன்" என்றவள் அவர்களின் வீட்டிற்குப்  பின் புறம் இருக்கும் காம்பௌண்டில் வசிக்கும் அவளின் இரண்டாவது மகனைப் பார்க்கப் போனாள். மருமகள் அப்பொழுதுதான் அப்பள வேலைகளை ஒதுக்கி விட்டு சாதம் வடித்துக் கொண்டிருந்தாள். " அவன் இன்னும் வரலையா?" என்றவாறு வாசலில் அமர்ந்து கொண்டாள். தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள். முதல் மகனும் அதே கிராமத்தில் தான்  குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருந்தான். மகளைப்  பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மணமுடித்து கொடுத்திருந்தனர். மூன்றாவது மகனுக்கு  லாரியில் கிளீனராக ஊரெல்லாம் சுற்றும்  வேலை. எப்போதாவது தான் வீட்டிற்கு  வருவான்." ஏன் பாட்டி... பசங்களோட சேர்ந்து இருக்க வேண்டியதுதான? எதுக்கு கஷ்டப்பற? " என்பவர்களிடம் " யாரு தயவும் நமக்கு வேணாம் சாமி...கையும் காலும் நல்லா  இருக்குற மட்டும் உழச்சு சாப்பிட வேண்டியதுதான்" என்று கேட்பவர்களின் வாயை அடைத்து விடுவாள்.

தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்த மகனைப் பார்த்து " ஏன்டா இப்பிடி குடிச்சு குடிச்சு குடியக் கெடுக்குற? " என்று மூக்கைச் சிந்தியபடி திட்டினாள்."ஏய் நீ தான் கெளவிய கூப்டியா?" என்று  அவன்  மனைவியிடம் கையை ஓங்க, " அவள ஏண்டா அடிக்கிற" என சண்டை பெருசானது. பாலாவின் சித்தப்பாவும், பாட்டியும் சண்டையை விலக்கி பாட்டியை  வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அன்று எப்பொழுதும் போல பொழுது விடிந்தது. ஆனால் முடியும் பொழுது அனைவரின் தலையிலும் இடியை இறக்கி விட்டு மறைந்தது எனலாம்." என்ன பெத்த ராசா...இப்பிடி எங்கள எல்லாம் விட்டுட்டு போயிட்டியே" என்ற பாட்டியின் ஓலம்  தெருவெங்கும் ஒலித்தது. சுற்றமும் உறவுகளும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தன. தாத்தா துண்டால்  வாயை  மறைத்துக் கொண்டிருந்தார். தோள்கள் மட்டும் இடைவிடாது  குலுங்கிக்   கொண்டிருந்தது. பாலாவின் பாட்டியும் கவலை தோய்ந்த முகத்துடன் " க்ளீனரா இருந்த கடைசி பையன் சரவணன் ஆக்சிடெண்ட்-ல இறந்துட்டான்" என்று அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கூறுவதை பாலாவும் கேட்டான்.

சில நாட்கள் அழுது புரண்டு காய்ச்சலில் அரற்றினாள் "பணியாரம்" பாட்டி. பின் " நம்ம வயத்து பொழப்ப நாம தானே பாக்கணும்" என்று கடை போட ஆரம்பித்தாள். அடுத்து வந்த சில வருடங்களிலே இரண்டாவது மகனையும் குடிக்குத்  தாரை வார்த்துக் கொடுத்தாள். மருமகளை மறுமணம் செய்து கொள்ளுமாறு தாய் வீடு அனுப்பிய பாட்டி  மனதாலும்,உடலாலும்  மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். சில சமயம் பாலா வீட்டு கிரைண்டரில் மாவு அரைத்து கொடுக்கச் சொல்வாள்.

வருடங்கள் உருண்டோடின. பாலாவின் பெற்றோர் நகரத்திற்குக்  குடி பெயர்ந்தனர். " உங்க பாட்டிய பாக்க வர்றப்போ இந்த பாட்டியையும் மறக்காம  வந்து பாருங்கடா" என்ற  அவளின் வெற்றிலைக்  கறை படிந்த சிரிப்பை இந்நாட்களில் ஏனோ பார்க்க முடிவதில்லை.  காலப் போக்கில் கடை போடுவதையும்  நிறுத்திக் கொண்டாள். ரைஸ் மில்லில் வாசல் பெருக்குவது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

கிராமத்து வீட்டில் பாலாவின் சித்தப்பா குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. அவ்வப்போது அங்கு வரும் பாட்டி," எல்லாரும் எப்பிடி இருக்காங்க? பாலா என்ன பண்றான்? அடி ஆத்தி அம்புட்டு பெருசா  வளந்துட்டானா?" என்று ஆச்சர்யப்படுவாள்." இதெல்லாம் பாக்கக்  குடுத்து வைக்கல இந்த மகராசிக்கு" என்று பாலாவின் பாட்டி படத்தைப் பார்த்து குரல் தழு தழுக்க  கண் கலங்குவாள். " பாக்க கூடாததெல்லாம் பாத்துகிட்டு நாந்தேன் இன்னும் உசுரோட கெடக்கேன்...பாழா போன சாவு வரமாடேங்குது" என்று பெரு மூச்செறிவாள்.

அடுத்து வந்த வருடங்களில் கிழவனும் போய்ச் சேர்ந்தான். தனி மரமானாள் பாட்டி. கல்லூரி விடுமுறையில் இருந்த பாலாவும் பாபுவும் பாட்டியைப் பார்க்க வந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது." அவங்க பொண்ணு ஊருக்கு போயிருக்காங்க" என்று கூறிய  அக்கம் பக்கத்தினர் ." ஆமா நீங்க யாருப்பா? " என்ற கேள்விக்கு "தெரிஞ்சவங்க " என்று ஒற்றை வார்த்தையில் பதில்  கூறி நகர்ந்தனர். ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும் போதும் , "பணியாரம்" பாட்டி எப்பிடி இருக்காங்க?! என்று கேட்பான் பாலா. " இப்ப எல்லாம் அவங்க பையன் வீட்டோட  போயி தங்கிட்டாங்க போல    " என்று அம்மா கூற புளித்த வாசம் வீசும்  பணியாரத்தின் மணமும், பாட்டியின் சிரித்த முகமும் பாலாவின் மனதில் தோன்றி மறையும். அடுத்த தடவை வரும் போது எப்படியாவது பாட்டியை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.    

நாட்கள் பறந்தோடியது. அன்று  ரோட்டை மறித்து அந்தக்  குடிசையின் முன் ஒரே கூட்டம். "கொஞ்சம் ஓரமா வண்டி  போக வழி விட்டு நில்லுங்கப்பா" என்று கண்டக்டர் கூற, பஸ்ஸில் இருந்த ஒரு சிலரும் எட்டிப் பார்த்து, அதிர்ச்சியோடு இறங்கி கூட்டத்தோடு கலந்து நின்றனர். உள்ளே, கயிற்றுக் கட்டிலில் பாட்டியின் உடல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கு கூடி கலங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பாலா, பாபுவைப் போல " பணியாரம்" பாட்டி என்று அன்பாக அழைத்தவர்கள் தான்.

 "ஒழைச்சு ஒழைச்சு ஓடா தேஞ்சு ஒரேடியா போயிட்டா...சொத்தா சுகமா?! " என்று பாட்டியைச் சுற்றி அமர்ந்து புலம்பிக்  கொண்டிருந்த பலருக்கு, இதோ இங்குத்  தோள் கொடுக்கத் தயாராக நிற்கும்   தொப்புள் கொடி பந்தம் இல்லாத இந்த உறவுகள் தான் அவள் உழைப்பினால் சம்பாதித்த விலை மதிப்பில்லாத ஒரே சொத்து என்பது  ஏனோ  விளங்கவில்லை. உழைப்பையும், இழப்பையுமே  மாறி மாறி அனுபவித்த பாட்டியின் முகத்தில் அன்று முதன் முறையாக   அமைதியும் பெருமிதமும் நிரந்தரமாகக்  குடி கொண்டிருந்தது.