நவராத்திரி என்றதும் நம் அனைவருக்கும் ஒரு சேர நினைவுக்கு வருவது கொலு மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆயுதப் பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்களே...புத்தகங்களை பூஜையறையிலேயே மறந்து வைத்து விட்டு, மறு நாள் பள்ளியில் அடிவாங்கியதெல்லாம் உங்கள் நியாபகங்களில் நிழலாடலாம். காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் மீண்டும் இரண்டு மூன்று நாட்கள் தொடர் விடுப்பு கிடைப்பதென்பது இன்றைய சூழ்நிலையில் "மகிழ்ச்சி" தானே?!...பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் வாயாடிக் கொண்டிருக்கும் ஒரு சில வாண்டுகளுக்கோ விஜய தசமி அழுவாச்சி தினமாக அல்லவா மாறிவிடுகிறது.
இந்நாட்களில் கொண்டாட்டங்கள் கண்களை நிறைத்தாலும் நவராத்ரி நாயகிகளான முப்பெருந்தேவியரே மனதில் நிலைப்பார்கள். சிறு வயது முதலே எனக்கு அம்மன் மீது அதீத பற்று(பயம் ). இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். வழக்கம் போல் தலைவலி என்று பள்ளிக்கு மட்டம் அடித்து விட்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆடி வெள்ளி என்பதால் அம்மன் கோவிலுக்கு பாட்டி, சித்தியோடு செல்ல நேர்ந்தது. கூட்ட நெரிசலில், மஞ்சள் புடவையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்களையும், கையில் வேப்பிலையோடு சாமி ஆடுபவர்களையும் கண்டு மிரண்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் காய்ச்சலில் படுத்துவிட்டேன். நான்காம் வகுப்பில் இருந்த நேரம்- ஆடி வெள்ளி அன்று மாவிளக்கு ஏற்ற குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றோம். அலை மோதும் பக்தர்கள் வரிசையில் நிற்க பிடிக்காமலும், ஒளியும் ஒலியும் பார்க்கும் ஆர்வத்திலும் பாதியிலேயே வீட்டிற்கு சென்றுவிட்டேன். அடுத்த வந்த நாட்களில் எனக்கு அம்மை போட்டு விட்டது. "அம்மா கோயிலுக்கு போயி அவளை பார்க்காம வந்தியில்ல?! அதான் அவளே உன்னை பார்க்க வந்துட்டா" என்று பாட்டி சொல்ல பீதியில் உறைந்து போனேன். திரைப்படங்களில் வரும் காளியும், நீலியும் கனவில் துரத்த தூக்கத்தில் பிதற்றினேன்.
நடுநிலைப் பள்ளியில் படித்த காலங்களில் கசின்களின் கூட்டணியில் "கொலு" வைப்பதுண்டு. இன்று வீட்டிற்கு வீடு கொலுப்படி அமைத்து கொண்டாடுவது சகஜமாகிவிட்டது. ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன், வாசற்படியில் ஈர மண் கொண்டு கோபுரம், வீதி என்று "செட்" போடுவதுதான் எங்கள் கொலு. அதில் பல வகையான பிளாஸ்டிக் பொம்மைகளும் இடம் பெறும். அப்படியே போட்டு விட்டுப் போக முடியாது. இரவானதும் அனைத்தையும் வாளிகளில் அள்ளி விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே எங்களுக்கு அனுமதி கிடைக்கும். தினமும் இரண்டு மணி நேரம் செலவிட்டு கொலு வைத்தால் ஏரியாவில் இருக்கும் "குட்டி" தாதாக்கள் நிமிடத்தில் கலைத்து விட்டு ஓடி விடுவார்கள். சில சமயம் எங்கள் கொலு உண்டியலை கையிலிருந்து பறித்துக் கொண்டு சென்று எங்கள் கொலுவிற்கும் முடிவு கட்டி விடுவார்கள்.
எங்கள் பெரியப்பா "பிரின்டிங் பிரஸ்" வைத்திருந்ததால் "ஆயுத பூஜை"-யை மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அதற்கு முந்தைய இரவு அச்சகத்தில் பணிபுரிபவர்களோடு சேர்ந்து சுத்தம் செய்கிறோம், கோலம் போடுகிறோம் என்ற பேரில் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டம் போட்டு, பூஜையின் போது தூங்கிய அனுபவம் மறக்க முடியாதது. அன்று அனைத்து உறவினர்களும் பெரியம்மா வீட்டில் ஒன்று கூடுவதால், திருமண வீட்டைப் போன்று குதூகலம் ததும்பி வழியும். பழங்களும் ,பொறியும் சாப்பிட்டு வயிறு நிறைந்து விடும்.
சரஸ்வதி பூஜை அன்று சுண்டல் சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் ஆனால் "சரஸ்வதி சபதம்" படத்தைப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். பல்வேறு தெய்வங்களைப் பற்றி பெற்றோர்கள், பெரியோர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டிருந்தாலும், அதைத் திரையில் காணும் போது ஏற்படும் பிரமிப்பு - அதற்கு ஒரு அசைக்க முடியாத நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கேபிள் டிவி இல்லாததால் தெருக்கம்பங்களில் திரைகளைக் கட்டி போடப்படும் "சிறப்புக்காட்சி"-க்கு கூட்டம் அலை மோதும். பள்ளிக்கூட நாட்களில் தாத்தாவோடு அமர்ந்து பார்த்த அனுபவம் உண்டு. படம் முடிந்தாலும் கல்வியா, செல்வமா, வீரமா என்ற விவாதம் அடுத்த இரண்டு தினங்களுக்கு எங்களுக்குள் தொடரும்...
பலவித பண்டிகைகளையும், நன் நாட்களையும் ஏன் கொண்டாடுகிறோம்?! எதற்குக் கொண்டாடுகிறோம்?! என்பதற்கு பல்வேறு ஆன்மீக, வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். "இல்லேன்னா சாமி கண்ணைக் குத்தும்" என்று நம்மை நம் முன்னோர்கள் பயமுறுத்தி இருந்தாலும், மாறி வரும் பருவ நிலைக்கு ஏற்ப நம் உடலை தயார்படுத்தவே இந்த குறிப்பிட்ட நாட்களைத் தேர்வு செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. கடும் கோடையில் தோன்றிய வெம்மை நோய் பரவாமல் இருக்கவும், நோயால் பாதித்தவர்கள் விரைவில் குணமடையவும், வரவிருக்கும் மழைக்கால தொற்றுக்களைத் தடுக்கவும் - ஆடி மாதத்தில் வேப்பிலைக்காரியான அம்மனை வழிபட்டிருப்பார்கள். அம்மாதத்தில் காப்பு கட்டிவிட்டதாகக் கூறி சில கிராமங்களில் அன்னியர்களை அனுமதிப்பதில்லை. அம்மன் கோயில் கூழுக்கு நிகரான ஊட்டச்சத்து நிறைந்த பானமும், வேப்பிலைக்கு மேலான கிருமி நாசினியும் ஏதேனுமுண்டா?!
நவராத்திரியைத் தொடர்ந்து வரும் குளிர்காலத்திற்கு நம்மை பலப்படுத்தவும், நோய்களிருந்து காத்துக் கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தான் தினம் ஒரு பயறு வகையை சுண்டல் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு சில வேளைகளில் நாம் மேற்கொள்ளும் விரதங்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகவே இருக்கின்றது.
இன்று நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம் பாரம்பரிய விழாக்களையும், பண்டிகைகளையும் நமக்கேற்ற கலாச்சார முறைப்படி தவறாமல் கொண்டாடுகிறோம். "நமக்கில்லேன்னாலும் குழந்தைகளுக்காக செய்யணும்" என்று சொல்லிக் கொள்கிறோம். பல சமயங்களில் நண்பர்கள், அன்பர்கள் என்று ஒன்றாக இணைந்து மகிழ்கிறோம். ஆனால் நாம் மட்டுமல்லாமல் நம் சுற்றமும், சூழலும் நம்மோடு சேர்ந்து விழாக்கோலம் பூணும் பொழுது ஏற்படும் மன உணர்வை, நிறைவை நம்மால் அடைய முடிவதில்லை. " இந்நேரம் ஊர்ல சூப்பரா இருக்குமில்ல?! என்று ஏங்குகிறோம். நம் குழந்தைகளுக்கு நம்மால் விழாக்களை அறிமுகம் செய்ய இயலும்...அனுபவங்களை அளிக்க இயலுமா?!