Friday, October 13, 2017

ஏய்... சண்டக்காரா!!!

சுவர்க் கடிகாரத்தை  ஒரு முறை பார்த்த நிகிலா "சரியா இருக்கும் " என்று தனக்குள்ளேயே நினைத்தவாறு, கைப்பேசியையும் சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வீட்டைப் பூட்டிவிட்டி வெளியில் இறங்கியவளின் முகத்தில் குளிர்க்காற்று சில்லென்று வீச, சால்வையால்  முகத்தை மறைத்துக் கொண்டாள். கைப்பேசியில் மறுபடியும் நேரத்தைப் பார்த்தவள் பள்ளி பேருந்து வழக்கமாக  வந்து நிற்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கு நான்கு ஐந்து பெண்மணிகள் நின்று, பேசி சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. முக்கால் தூரம் நடந்தவள்...போனில் குறுந்தகவல்களைப் படித்துக் கொண்டு அங்கேயே  நின்றுவிட்டாள். மனதில் இருந்த மெல்லிய சோகம் (வருத்தம்) முகத்தை ஆக்கிரமிக்க முயன்று கொண்டிருந்தது.

பேருந்து வரும் சத்தம் கேட்டு, ஓட்டமும்  நடையுமாக பஸ் ஸ்டாப்பை நெருங்கவும் , பையன் இறங்கவும் சரியாக இருந்தது. அவன் புத்தகப் பையை வாங்கிக் கொண்டு, சற்று இடைவெளி விட்டு இறங்கிய மகளையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள். வழக்கம் போல் பள்ளியில் நடந்த கதைகளை இருவரும் மாறி மாறி சொல்ல, "அப்பிடியா ", " சரி விடு " என்று அவர்களுக்கு பதில் கூறியவாறு வந்தாள் நிகிலா. இருவரும் சில பல ஜோக்குகளைச் சொல்ல...செயற்கையாகச்  சிரித்து அவர்களை மகிழ்வித்தாள்.

கதவு தட்டும் ஓசைக் கேட்டு, " Daddy ", என்று இருவரும் ஓடி கதவைத் திறந்து கதை அளக்க  ஆரம்பித்தனர். நடு ஹாலில் அமர்ந்திருந்த நிகிலா, " ரெண்டு பேரும் வந்து வீட்டுப்பாடத்த ஆரம்பிங்க...ஸ்கூல் விட்டு வந்து ஒரு மணி நேரமாச்சு" என்று சிடுசிடுத்தாள். அன்றய அஞ்சல்களுடன் உள்ளே நுழைந்த  கணவன்  தன்னை பார்ப்பதை, கவனிக்காதவள் போல பாசாங்கு செய்து கொண்டாள். முகம் கழுவி உடை மாற்றி வந்த கதிர்...எதுவும் பேசாமல் டிவி-யை ஆன் செய்து தலைப்புச் செய்திகளைப்  பார்க்க ஆரம்பித்தான். சற்று  நேரத்தில்  பள்ளி, ஆசிரியர் பற்றிய பேச்சு, குழந்தைகளின் விளையாட்டு என்றெல்லாம் நிகிலாவும் கதிரும் சகஜமாகப் பேசி சிரிக்கத் தொடங்கினர். மாலையில் தெரிந்த கவலை ரேகை நிகிலாவின் முகத்தை விட்டு மறைந்தது.

பத்து வருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தது இந்த பிரச்சனை (Disagreement)...முன்பெல்லாம் சமாதானப்  பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து முடிவு எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது ஆகும் நிகிலாவிற்கு ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்தில் !!! அதுவும் No சமாதானப் பேச்சு!!!

அப்பிடி என்னதாங்க பிரச்சனை அவங்களுக்குள்ள என்று பொறுமையிழந்து நீங்கள் கேட்பதும் , ஏதாவது மொக்கை விஷயமா இருக்கும் என்று நீங்கள் நினைப்பதும் எனக்கு கேட்காமல் இல்லை. இதோ சொல்லிறேன்...

முந்தைய நாள் மாலை...இடம் : வீடு

வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து திரும்பிய கதிர்...தன்னுடைய Routine வேலைகளை (டீ குடிப்பது, டிவி பார்ப்பது, அவசர அலுவலக வேலைகள் இருந்தால் முடிப்பது இல்லையேல் ஜிம்-மிற்கு செல்வது)  முடித்து விட்டு, சமையலறையில் சட்னி அரைத்துக் கொண்டிருந்த நிகிலாவின் அருகே நின்று, " இன்னைக்கு என்ன பண்ணே?!" என்ற கேள்வியை உதிர்த்தான்.
"என்ன பண்றது...எப்பயும் போலத்தான்" என்று Short- ஆக முடித்தவளை விடாமல், "உங்க வீட்டுக்கு பேசினியா?!...என்ன சொன்னாங்க?! என்ற அடுத்த கணையைத் தொடுத்தான். "முக்கியமா எல்லாம் ஒன்னும் இல்ல " என்றவளிடம்  "அப்புறம்" என்றான் இரண்டு பொறிக்கடலையை எடுத்து வாயில் போட்டவாறு. " அப்பறம் என்ன...எங்க அம்மாவோட சித்தி அதான் எங்க பாட்டி, நாமதான் கல்யாணமான புதுசுல அவங்க வீட்டுக்கு ஒருதடவ போனோமே" என்றாள்.

"ம்ம்ம் சொல்லு" என்ற கதிரிடம், " அவங்க மருமகளோட அப்பா என்று ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தாள். அவனும் "ம்ம்" என்று சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தான் இரண்டு நிமிடத்திற்கு. பொண்ணும் பையனும் மாறி மாறி குறுக்கிட அவர்களையெல்லாம் அதட்டி அடக்கி விட்டு விஷயத்தை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தாள் கதிரிடம். ஐந்து நிமிடம் பத்து நிமிடமானது. சமையலறையிலிருந்து மெதுவாக வெளியே வந்த கதிர் சாப்பாட்டு மேஜையிலிருந்த கடிதங்களை பிரித்து பார்த்துக் கொண்டே..."பாஸ்" செய்து அவனை பார்த்த மனைவியிடம் "சொல்லு"...என்றான். அவளும் Continue செய்தாள். நடு நடுவே "இதெல்லாம் நல்ல விஷயம் தானே?!"...உங்களுக்கு கூட அந்த இடம் தெரியுமில்ல ?! என்று கேள்வி கேட்டு அவனையும் உரையாடலில் சேர்த்துக்கொண்டாள். கணவனும் மனைவியும் ஒரே "Page "ல் இருப்பது முக்கியமில்லையா?!

அடுத்த இரண்டு நிமிடத்தில் சார்ஜில் இருந்த போனை நோக்கிக் கொண்டே "ம்ம்ம் " கொட்டிக்கொண்டும்... அவ்வப்போது "சரி விடு" என்று மனைவிக்கு பதில்  சொல்லிக்கொண்டும் இருந்தான், குட்டீஸ் இரண்டும் இது தான் தக்க தருணம் என்பது போல  "I Pad "-ல் ஐக்கியம் ஆகி விட்டிருந்தன. அடுத்த ஐந்தாவது  நிமிடத்தில் கதிர் கணினி முன் அமர்ந்திருந்தான். தோசையை திருப்பிக் கொண்டே, " நீங்க என்னங்க சொல்றீங்க?!" என்று கேட்ட நிகிலா, பதில் வராதது கண்டு ஹால் பக்கம் திரும்பினாள். முகத்தில் புன் முறுவல் படர எதோ type செய்து கொண்டிருந்தான் கதிர். மறுபடியும் ஒருமுறை "நீங்க என்ன நெனைக்கிறீங்க?!" என்றாள். எந்த பதிலும் இல்லை. என்னங்க  என்று அழைத்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். "எத பத்தி?! என்று கேட்ட கணவனை எதோ கொலைக்  குற்றம் செய்தவனைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு, " ஏய் ரெண்டு பேரும்...எந்திரிங்க...எப்ப பாத்தாலும் I pad- ஐ  பாத்துகிட்டு" - குழந்தைகளை நோக்கி உறுமினாள் நிகிலா.

"ஏய் நிகிலா...சொல்லு கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்" என்ற கதிரிடம்,
"என்ன பாத்தா லூசு மாதிரி இருக்கா?! நானா சொல்றேன்னு  சொன்னேன்...நீங்க தான கேட்டீங்க?! என்று கோபத்தில் கொதித்தாள். " நான் கேட்டுகிட்டு தான்" என்றவனைத் தடுத்து " இனிமே ஏதாச்சும் சொல்லுவேனான்னு பாருங்க...போயி Facebook-க்க பாருங்க " என்று திரும்பிக் கொண்டாள். "ஏய்...மெயில் தான் செக் செய்து கொண்டிருந்தேன்" என்றவனை காதில் வாங்கவில்லை. "டேய் அம்மாவுக்கு கோவம் வந்துருச்சு டா" என்று   குழந்தைகளுடன் சேர்ந்து அவன் செய்த சமாதானங்கள் எதுவும் அவளை சாந்தப்படுத்தவில்லை. கதிரும் பொறுமை இழந்து "போ.." என்று விட்டுவிட்டான். அந்த சண்டைதான் இன்று மாலை சமரசமானது.

கல்யாணமான புதிதில் இருந்தே நிகிலாவிற்கும் கதிருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் சண்டைதான் இது . அப்போதெல்லாம் கதிர் அலுவலகத்தில் இருந்து வந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஜிம்மிற்கு போனால் கூட சண்டைதான் (அழுகையுடன்). " பொழுதன்னைக்கும் தனியாத்தான் இருக்கேன்...சாயங்காலமும் இப்பிடியே இருக்கவா...குழந்தை பொறந்துருச்சுன்னா நான் ஒன்னும் உங்களை இருக்க சொல்ல மாட்டேன்" என்று கூறுவாள். குழந்தை வந்தவுடன், " Full-Day" நான்தானே பாத்துக்குறேன்...இந்தாங்க" என்று  கொடுத்து விடுவாள்.  அவள் கதை கதையாகச் சொல்லும் விஷயங்களை கேட்டே ஆக வேண்டும்...தடங்கலின்றி.

"நிகிலா...உனக்கு நியாபகம் இருக்கா ?! நாம நிச்சயதார்தத்துக்கு அப்புறம் போன்ல பேச ஆரபிச்ச புதுசுல...நீ ஒண்ணுமே பேச மாட்ட...ஒண்ணுமில்லன்னு வச்சுடுவ" என்று ஏக்கத்தோடு கூறும் கணவனிடம்..." நீங்களும் தான் பேசு...பேசுன்னு கெஞ்சினீங்க...இப்ப?! என்று கூறிச்  சிரிப்பாள். இவர்களின் இந்த செல்லச் சண்டைகளெல்லாம் நான்கு நாளைக்குத்தான். நடந்தவற்றை  சொல்லாமல் இருக்க நிகிலாவாலும்  முடியாது...கதிருக்கும் கதை கேட்காமல் பொழுது நகராது. "அப்புறம்..." என்று ஆரம்பிக்கும் கதிரிடம் ," ஏன்... உங்களுக்கு வேற வேலை இல்லையா?! என்று ஆரம்பித்து..." நம்ம அபார்ட்மெண்ட்ல என்று அடுத்த அரைமணி நேரத்திற்கு விரியும்". அவனுக்கும் பழகிவிட்டது...பிடித்தும் இருக்கிறது!!!

அதாகப்பட்டது மகா ஜனங்களே, இதனால் உங்கள் அனைவருக்கும் சொல்லவிழைவது என்னவென்றால்..."அறுசுவைக்கு உப்பு எவ்வளவு அவசியமோ, அதே போல்  அருமையான வாழ்க்கைக்கு ஊடலும்  அவசியம் அளவோடு". பொறுப்பான அம்மாவாக, வளர்ந்த மகளாக, அறிவுரை கூறும் அக்காவாக மாறிவிட்ட பிறகும்  குழந்தையாக... அதுவும் பிடிவாதம் செய்யும் குழந்தையாக மாறி  செல்லச் சண்டைகளை  கணவரிடம் போடாமல் வேறு யாரிடம் போடுவது?!

என்ன நான் சொல்றது சரிதான?!!

        

Thursday, June 22, 2017

நானும் ஹீரோ தான்

"பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் " இது மனிதர்களுக்கும் பொருந்தும் கூற்று தானே ?! பெரும்பாலான நேரங்களில் நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (Emotions  or Reactions  ) வைத்து, " அவருக்கு மூக்குக்கு  மேல கோவம் வருமே?! ", "அவரு ரொம்ப அன்பானவரு...அதிகம் பேசாதவரு", "அவரு ஒரு லொட...லொட பேர்வழி", " வெத்துவேட்டு " என்றெல்லாம் நமக்கு முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. நாமும் நமக்கு வசதியாக ( Comfort Zone ) இருக்கும் பட்சத்தில் அந்த முகமூடியுடனே வலம் வர விரும்புகிறோம்...வருகிறோம்  ஆனால்  "மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி" என்பதால் சிலசமயம் நமது முகத்திரையை விலக்கி  புது மனிதனாக உருமாற வேண்டி உள்ளது. அவ்வாறான நேரங்களில் நாம் ஹீரோவா?!, வில்லனா?! காலம் தான் முடிவு செய்யும்.

சான்று - 1

அது ஒரு கோடைக்காலம்...ஞாயிற்றுக் கிழமை...நேரம் - மதியம் மூன்று மணி. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு... நடு இரவில் இருக்கும் ஆள் நடமாட்டம் கூட மதிய வேளையில் இருக்காது. தெருவே வெறிச்சோடிக் கிடக்கும். மதிய உணவிற்குப் பிறகு கண்ணயரும் தருணம். என் அண்ணனும், மாமா மகனும் சைக்கிள் ஓட்டிப் பழகுவதற்குக் கிளம்பினர். வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு. இங்கு அவர்களின் முகமூடியைப் (Character) பற்றிப் தெரிந்து கொள்வது அவசியம்.  என் அண்ணன் மிகவும் அமைதி (Reserved Type). எத்தனைக்  கேள்வி கேட்டாலும் இரண்டே வரிகளில் விடை கொடுக்கும் கஞ்சன். சில சமயம் புன்னகையோடு நிறுத்திக் கொள்வதும் உண்டு. என் மாமன் மகனோ அதற்கு நேர் எதிர்...மிகவும் சுட்டி...தலைகீழ் சேட்டை செய்பவன்.

முதல் பத்து பதினைந்து நிமிடம் ஒரு சந்தில் ஓட்டினர் பின்பு சற்று அகலமான முட்டுச் சந்தை தேந்தெடுக்க முனைந்து, லோக்கல் ஹீரோக்களிடம் 
(Bullies) மாட்டிக் கொண்டனர். சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டு இருவரையும் விரட்டினர். அது வாடகை சைக்கிள் என்று மாமன் மகன் கெஞ்ச, என் அண்ணனை பிடித்து வைத்துக் கொண்டு, " உன் அப்பா சைக்கிள கொண்டு வா...அது வரைக்கும் இந்த பையன் இங்க இருக்கட்டும்" என்று பயம் காட்டினர். "யார்ட்டயாச்சும்  சொன்னே அவ்வளவுதான்" என்றனர். அவன் மிரட்ட வேண்டுமா என்ன?!...எத்தனை படங்களில் பார்த்திருப்போம்...அவர்களை சர்வதேச கடத்தல்கார்கள் பட்டியலில் சேர்த்தே விட்டனர் என் அண்ணனும் மாமன் மகனும். 

வேறு வழியில்லாமல் என் மாமன் மகன் வீட்டிற்குச் சென்று,  அவன் அப்பா சைக்கிளை யாருக்கும் தெரியாமல்  ஒட்டிக் கொண்டு வந்தான். வரும் வழியில் என் அண்ணன் நடந்து வருவதைக் கண்டு சந்தோஷத்திலும் ஆச்சரியத்திலும், " எப்பிடிடா விட்டாங்க?!" என்று கேட்டான் வியர்வையைத்  துடைத்தபடி. " எங்க அப்பா போலீஸ்...இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் என்ன தேடி வந்துருவாங்கன்னு சொன்னேன்...முதல்ல நம்பலை...நீ வர்றதுக்கு லேட் ஆனதால...விட்டுட்டாங்க " என்று கூறி முடித்தான் என் அண்ணன். அடுத்து வந்த நாட்களில் என் அண்ணன் பெரிய ஹீரோவாகப் பேசப்பட்டான்...அவனை முட்டுச்  சந்திற்கு அழைத்துச் சென்ற மாமன் மகனோ வில்லனானான்!!! 

சான்று - 2

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தருணம். என் தங்கை புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். நான் அவளை பலவாறு தொல்லைப் படுத்துவதைப் பொழுது போக்காக கொண்டிருந்தாலும், உடன் படிக்கும் மாணவி அடித்து விட்டாள் என்று கேள்விப்பட்டதும் , என்னுள் தூங்கிக் கொண்டிருந்த சகோதரி பாசம் துள்ளி எழுந்தது. மதிய  உணவு இடைவேளையில் (என் தோழியின் துணையோடு) விளையாடிக் கொண்டிருந்த அவளை Round-up செய்தோம். "இனிமே என் தங்கச்சி மேல கையை வச்ச அவ்வளவுதான்" என்று மிரட்ட, அந்தப் பெண்ணோ முறைத்துக் கொண்டு நின்றாள். " என்ன முறைக்குற?! என்றதோடு நில்லாமல் என் தங்கையை அழைத்து ," அவ உன்ன எப்பிடி கொட்டுனாளோ...அதே மாதிரி கொட்டு" என்று கொட்டச் செய்து  பழிக்குப் பழி தீர்த்த பெருமிதத்தோடு... சிங்க நடை போட்டு வகுப்பறையை அடைந்ததோம்.  

அடுத்த சில மணி நேரத்திற்குப் பின், என் தோழி ," இப்ப தான் நினவுக்கு வருது. நாம திட்டிட்டு வந்தோமே...அந்த பொண்ணோட அக்கா அஞ்சாவது படிக்குறா", என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது...இருவருக்கும் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. மாலை பள்ளி முடிந்ததும் யார் கண்ணிலும் படாமல்... ஓட்டமும் நடையுமாக...குனிந்த தலை நிமிராமல்  வீட்டிற்கு வந்தடைந்தோம். தீவிர ஆலோசனைக்குப் பின் எங்கள் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியின், ஏழாவது படிக்கும்  அக்காவின் துணையை நாடுவது என்று முடிவானது. 

அடுத்து வந்த நாட்களில் வகுப்பறையை விட்டு வெளியே வரவில்லை நானும் என் தோழியும். ஒருவாரத்திற்குப்  பிறகு என் தங்கையும் நான் மிரட்டிய பெண்ணும் ஒன்றாக விளையாடுவதைக்  காண நேர்ந்து. " என்னடி அந்த பிள்ளையோட விளையாடிட்டு இருந்த இன்னைக்கு ?!" என்று வினவ ," நீ அந்த பிள்ளையை திட்டுன அடுத்த நாளே அவ எங்கூட பிரெண்டு ஆயிட்டா " என்று கூறக்கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடி, " அது " என்று திமிருடன் கூறி விட்டு ," சு ந பா நா" இத அப்பிடியே மெயின்டைன் பண்ணு"  என்று மனதிற்குள் கூறி சிரித்துக் கொண்டேன்.

"என்னடா இது ...முகமூடி, முத்திரை...முகத்திரை  என்றெல்லாம்   Build - Up உடன் முன்னுரையை எழுதிவிட்டு...  சிறு குழந்தைகளைச்  சான்றாக கூறுகிறாளே?!" என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. தங்களின்  சுய  அடையாளத்தைப் பற்றிச்  சிறிதும் கவலைப் படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்களுக்குச்  சரி என்று படுவதை  சட்டென்று கூறுவதிலும்...   எதிர் வினை  புரிவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. நாமும் அவ்வாறு செயல் படும் நேரங்களில், " என்ன அவரு இப்பிடி மாறிட்டாரே?!" என்று குறை கூறுவதும், " இப்பதான் நியாயமா பேசுறாரு ", " இப்பவாவது வாயத் தொறந்தாரே" என்று பலர் விமர்சிப்பதும், பாராட்டுவதும்  நடைமுறை உண்மை...தடுக்க முடியாத நிதர்சனம் ஆனால்...

"நாலு பேருக்கு நல்லதுன்னா...எதுவுமே தப்பில்ல " என்ன நான் சொல்றது?!        

Wednesday, March 8, 2017

ஜோதி அக்காவும் மகேஸ்வரி அம்மாவும்

சுட்டெரித்து கொண்டிருந்த சூரியன் ஏதோ நினைத்ததைப் போல...நொடிப்பொழுதில் தனது வாலைச் சுருட்டிக் கொண்டு மேகங்களின் மத்தியில் தன்னை ஒளித்துக் கொண்டது. மேகக் கூட்டங்களும் தங்களுக்குள் கலந்து பேசி, சூரியனைக் கண்டுபிடித்து விடுவது என்று முடிவெடுத்து தென்றலின் உதவியை நாடியது. இன்னும் வேகமா...இன்னும் வேகமா என்று மேகங்கள் ஆர்ப்பரிக்க கண் இமைக்கும் கணத்தில்  தென்றல் பலத்த காற்றாக மாறியது.

"அடி ஆத்தி இது என்ன படக்குன்னு இம்புட்டு காத்து வீசுது " என்று தனக்குள் அங்கலாய்த்த ஜோதி அக்கா தனது அறையின் கதவை சாத்தி விட்டு...சாலையைக் கடந்து எதிர் வீட்டு மொட்டை மாடியை நோக்கி விரைந்தாள். காற்றில் கலைந்து பறந்து கொண்டிருந்த அப்பளங்களை சாக்கோடு மடித்து சிறிய மூட்டையாக மாற்றினாள். ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி சென்றவள் தனது பக்கத்து வீட்டு வாசலில் நின்று, " ஏய் புள்ள மகேஸ்வரி...மகேஸ்வரி" என்று குரல் கொடுத்தாள்.

கெட்டிக்கார சூரியன் பிடி படாமல் தப்பி  மேகக் குவியலின் ஆழத்தில் தன்னை புதைத்துக் கொண்டது. கரு மேகங்கள் வானை சூழ்ந்து...தூறல்களை மண்ணிற்கு அனுப்பியது. உள்ளிருந்து வெளிப்பட்ட மகேஸ்வரிக்கு மிஞ்சிப் போனால் பனிரெண்டு வயதிருக்கும். " அய்யய்யயோ மழை வந்துருச்சா?!" 'அப்பளம்' என்றவாறு ஓட எத்தனித்தவளை,"இந்தாடீ எடுத்துட்டு வந்துட்டேன் " என ஒரு சிறிய மூட்டையை அவள் கையில் கொடுத்தாள். " பொத்துனாப்ல எடுத்துட்டு வா...முக்காவாசி காஞ்சுருச்சு...ஒடஞ்சுரும் என்று எச்சரித்தாள். " ஏம் புள்ள...மழை வர்றது கூட தெரியாம அப்பிடி என்னடி சின்ன புள்ளைங்க கொட விளையாட்டு...நாலு காசு பாக்கணும்னா...கண்ண நாலா பக்கமும் வச்சுக்கிடனும்...ம்ம்ம் நீ எங்க" என்று பெரு மூச்செறிந்தாள். 

ஜோதி அக்காவும் மகேஸ்வரியும் 8 க்கு 10 காம்பவுண்ட் குடியிருப்பின் பக்கத்துக்கு வீட்டுவாசிகள். ஜோதி அக்காவின் கணவர் மணி மாமா  காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் இருட்டியதற்கு பிறகு தான் வீட்டிற்கு வருவார். என்ன வேலை என்றெல்லாம் கேட்டால் உறுதியாக கூற முடியாது ஆனால் தினமும் "டைட் "-ஆகத்தான் வருவார் என்று யாரைக் கேட்டாலும் அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் கிடையாது. ஜோதி அக்காவின் அப்பளம் தேய்க்கும்  வருமானத்தில் தான் பொழுது ஓடிக்கொண்டிருந்தது 

தொப்பென்ற சத்தத்துடன் தென்னை மட்டை ஓட்டின் மேல் விழுந்தது. மங்கலாக எரிந்து கொண்டிருந்த மஞ்சள் பல்பும் அணைந்து இருட்டாக... அவ்வப்போது வெட்டிய மின்னலின் ஒளி சிறிது வெளிச்சத்தைக்  காட்டி மறைந்தது. "இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான் " என்று மனதில் நினைத்தவாறு அனைத்தையும் ஒருங்கச் செய்து வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள் ஜோதி அக்கா. குளிச்சிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும் என்று துணிமணிகளை வாளியில் வைத்துக் கொண்டு கிணற்றடியில்  இருக்கும் மறைவை நோக்கிச் சென்றாள்.

அப்பள மூட்டையை ஓரத்தில் வைத்து விட்டு மறுபடியும் வீட்டுக்காரம்மாவின் பேத்திகளான நிதிலா, மிதிலாவுடன் விளையாடப் போகலாமா என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகேஸ்வரியின் நினைப்பை ஜோதி அக்காவின்  இந்த சொற்கள் கலைத்தன. "திரும்ப வெளையாட ஓடிறாத புள்ள...தென்ன மட்டை விழுந்துச்சுல்ல  எந்த பக்கம் ஒழுகும்னு தெரியாது. அப்பறம் அப்பளம் நனஞ்சுரும்" என்ற எச்சரிக்கையோடு "மழையோட மழையா தலைக்கு தண்ணி ஊத்திட்டு வந்துர்றேன்" என்று அறிவித்து விட்டு சென்றாள்.

மகேஸ்வரியின் அம்மா இரண்டு மூன்று இடங்களில்  வீட்டு வேலை பார்க்கிறாள். வீடு திரும்பும் நேரம்தான் ஆனால் மழைக்கு எங்காவது ஒதுங்கியிருப்பாள். மகேஸ்வரியின் அப்பா இஸ்திரி தொழிலாளி. 'அயன் மாஸ்டர்" என்று எல்லோராலும் பாசமாக அழைக்கப்படுபவர்.  காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து முழுகி பட்டையோடு வண்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவார். மாலையிலும்  அதே பக்தி சிரத்தையோடு (வடிவேலு மாதிரி இல்லாமல்) திரும்புவார். அயன்  வண்டியை காம்பவுண்டில் பார்க் செய்துவிட்டு கிளம்பும் அவர்   திருப்பி வரும் பொழுது "Steady " ஆகத்  தோன்றினாலும் வாயைத் திறந்ததும் குட்டு வெளிப்பட்டுவிடும். போவோர் வருவோரை  எல்லாம் அழைத்து வம்பு பேசி உளறிக் கொட்டுவார். மகேஸ்வரியும் அவள் அம்மாவும் அவரை வீட்டிற்கு கூட்டிச்செல்வதற்குள் படாத பாடு படுவார்கள். அவர் வருமானம் அவர் குடிக்கே வீணாவதால் மகேஸ்வரியும் பள்ளிக்குச்  செல்லாமல் (படிப்பும் மண்டையில் ஏறுவேனா என்று அடம் பிடித்தது) ஜோதி அக்காவோடு அப்பளம் தேய்த்து சம்பாதிக்க ஆரம்பித்தாள்.

மழை நின்றும் தூறல் விடாமல் தூறிக் கொண்டிருந்தது. நிதிலாவும் மிதிலாவும் " என்னக்கா பண்றீங்க?! " என்றவாறு  காம்பவுண்ட் பக்கம்  வந்தனர். " என்னத்த பண்றது...கரண்டு இல்ல அதான் சீக்கிரமே சுடு சோறு பொங்கியாச்சு...சாப்புறீங்களா?!" என்றவளிடம் வேண்டாம் என்று தலை அசைத்துவிட்டு கையில் வைத்திருந்த சுடுகாயுடன் மகேஸ்வரியிடம் ஓடினார்கள் சகோதரிகள். குழந்தை இல்லாததாலோ என்னவோ அக்காவும் அவளது புருசனும் எப்போதும் இவர்களிடம் மிகவும் வாஞ்சையாகப் பேசுவார்கள் அதிலும் அவர்களின் தம்பி மீது அலாதி பிரியம். சில சமயம் ஜோதி அக்காவின் புளிக்குழம்பை ஆசையாகச் சாப்பிட்டு விட்டு நாக்கும் மூக்கும் சிவக்க வீட்டிற்கு ஓடுவர் இருவரும். " அடி ஆத்தி இம்புட்டு காரமாவா இருக்கு " என உச்சு கொட்டுவாள் அக்கா.

கையில் இரண்டு தூக்குவாளியுடன் அப்போது உள்ளே நுழைந்த மகேஸ்வரியின் அம்மா மழையைப் பற்றியோ, அப்பளத்தைப் பற்றியோ ஏன் மகேஸ்வரியைப் பற்றியோ கூட  எதுவும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. "ராத்திரிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டேன்" என்று பொதுவாகக் கூறிவிட்டு வாசலில் அமர்ந்தாள். மகேஸ்வரியும் அம்மாவைக் கண்டும் காணாததைப் போல விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஜோதி அக்காவின் கணவர் வழக்கம் போல் உள்ளே நுழைந்தான். " ஏய் நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு ஓடுங்க...கொசு ஆயுது " என்று நிதிலாவையும் மிதிலாவையும் விரட்டினாள் ஜோதி அக்கா. எதுவும் புரியாமல் மகேஸ்வரியையும் இழுத்துக் கொண்டு ஓடினர்.

மறுநாள் ஜோதி அக்கா மிகவும் சோகமாக காணப்பட்டாள். நிதிலாவின் அத்தையிடம் எதோ சொல்லி புலம்பி அழுதாள். இது அடிக்கடி நடக்கும் கதை தான். ஒரு நாள் நிதிலாவின் அத்தை, பாட்டியோடு காம்பவுண்ட் வாசிகள் அனைவரும் டூரிங் டாக்கீஸில் சினிமா பார்க்கக் சென்றிருந்தனர். பாதி படத்திலேயே ஜோதி அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் அத்தையிடம் பேசும் போது ஒட்டு கேட்டதில் மணி மாமா குடித்துவிட்டு வீதியில் எங்கோ விழுந்து கிடந்ததாக தகவல் வரவே தான்  ஜோதி அக்கா கிளம்பினார் என்று தெரிந்தது நிதிலாவிற்கு. அப்பளம்இட்டு சேர்க்கும் பணத்தையும் விட்டு வைப்பதில்லை என்றும் ," நாந்தான் முதல்ல போயி சேரப்போறேன்...நீ வேணா பாரு " என்று  மூக்கை சிந்துவாள் அக்கா. 


பல சமயம் ஜோதி அக்காவிற்கும் அவள் கணவருக்கும் நடக்கும் சண்டையில் ஜோதி அக்கா அழுது கொண்டே மண்ணை வாரி இறைப்பாள்.  சில சமயம் நிதிலாவின் பாட்டியும் சித்தப்பாவும் சண்டையை விலக்கி விடுவர். மகேஸ்வரியின் அப்பாவோ வேறு ரகம். எவ்வளவு "Full " ஆக இருந்தாலும் நிதிலாவின் வீட்டிற்கு வந்து " வீட்டுக்காரம்மா " என்று ஆரம்பித்து பேசியே கொலை செய்துவிடுவார். "இப்ப போயி தூங்குறியா?! இல்லையா என்று வசை வாங்கிவிட்டு இடத்தை காலி செய்வார். " எங்க அப்பா இப்பிடி குடிச்சிட்டே இருந்தா செத்துருவாரா?!" என்று சினிமா பார்த்து தெரிந்த உண்மையை நிதிலாவிடம் சொல்லி அழுவாள் மகேஸ்வரி. "அப்ப நீ எங்க வீட்டுக்கு வந்திடு" என்று சமாதானம் செய்வாள் சுட்டிப் பெண் மிதிலா.

அடுத்து வந்த சில வருடங்களிலேயே மணி மாமாவும், அயன் மாஸ்டரும் குடியின் கோரப் பசிக்கு, சில மாத இடைவெளியில் இரை ஆயினர். ஜோதி அக்கா அவள் சொந்த கிராமத்துக்கே திரும்பி சென்றுவிட்டார். அவரை பற்றி தகவல் எதுவும் அதற்குப் பின் தெரியவில்லை ஆனால் அவள் மறுமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்று விட்டதாகவும், குழந்தைகள் பிறந்து மகிச்சியுடன் இருப்பதாகவும்  ஊருக்குள் பேச்சு அடிபட்டது. நிதிலாவின் குடுபத்தினரும் தனிக்குடித்தனம் சென்று விட்டதால் மகேஸ்வரியுடன் விளையாடுவதும்  நின்று போனது. மகேஸ்வரியும் அவள் அத்தைப் பையனை திருமணம் செய்து கொண்டு அம்மாவோடு வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தாள்.

இப்பொழுதும் ( 25 வருடங்கள் கடந்த பிறகும்) நிதிலாவும் மிதிலாவும் ஜோதி அக்காவைப் பற்றியும் மகேஸ்வரியைப் பற்றியும் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்வர். கல்லூரியில்  படிக்கும் பொழுது ஓரிரு முறை மகேஸ்வரியை கையில் குழந்தையோடு பார்த்ததோடு சரி பிறகு பார்க்கவில்லை. அம்மாவிடம் விசாரிக்கும் பொழுது மகேஸ்வரியின் கணவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதாகவும்...மகேஸ்வரியும் அவள் அம்மாவும் நலமாக இருப்பதாகக் கேட்டு அக மகிழ்ந்தனர் இருவரும்.

விண்வெளிக்கே   பெண்கள் பயணிக்கும் இந்த யுகத்திலும் நம்மிடையே பல ஜோதி அக்காக்களும் மகேஸ்வரி அம்மாக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறைக்க, மறுக்க  முடியாத உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாராயக்கடைகள் "டாஸ்மாக்" என்ற பெயரில் கிளை பரப்பி விருட்சமாக வேரூன்றி விட்டது. அதை எதிர்த்தும்  போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த மகளிர் தினத்தில் பல சாதனைப் பெண்களைப் பட்டியலிடும் நாம் இவர்களுக்கும் அதில்  ஓர் இடம் ஒதுக்கலாமே!!!

(எங்கோ இருக்கும் ஜோதி அக்காவுக்கும்...மகிழ்ச்சியுடன் வாழும் மகேஸ்வரிக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.)


Wednesday, February 15, 2017

காத(ல்)லுடன் பரிசு

புதுமணத் தம்பதியரான நிவேதாவும் நிதினும் ஷாப்பிங், ஹனிமூன், உறவினர்கள் வீட்டில் விருந்து என்று நேரம் போவதே தெரியாமல் சுழன்று  கொண்டிருந்தார்கள். அவர்கள் மனமோ  காதல் வானில் சிறகடித்துப்  பறந்து கொண்டிருந்தது. அவர்களின் குதூகலத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் விதமாக நிவேதாவின் பிறந்தநாள் எட்டிப் பார்த்தது.

"ரெண்டு நாள்ல உன் பர்த்டே வருது...என்ன பண்ணலாம்?!", என்று காதல் ததும்பும் குரலில் நிவேதாவை நோக்கிக் கேட்டான் நிதின்.

" கல்யாணத்துக்கு வாங்கின ட்ரெஸ்ஸே  நெறைய இருக்கு...கோவிலுக்கு போகலாம்", வேறென்ன?! என்றாள். " இந்த பர்த்டே கொண்டாடுற பழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது...அதுவுமில்லாம Surprise Gift குடுக்கிறது, நடு ராத்திரி எழுப்பி விஷ் பண்றதுன்னு இந்த சினிமாட்டிக் விஷயங்களெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. இப்ப இருந்தே ஒரே மாதிரி இருந்துட்டா நமக்கும் பின்னாடி பிரச்னை இல்ல பாருங்க?!", என்ற நீண்ட நெடிய விளக்கத்துடன் தன் உரையை முடித்துக்கொண்டாள்.

"அப்பிடியா?! ",என்று கூறி குறும்புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நிதின்.

பேசிய பேச்செல்லாம் ஒரு புறம் இருக்க...அடுத்து வந்த நாட்களில்  நிதினிடம் இருந்து  தனக்கு எந்த மாதிரி பரிசு வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நேரத்தைக் கடத்தினாள். ஆனால் நிதினோ அதை பற்றி எதுவும் சிந்தித்தது போல தெரியவில்லை. "மனைவி சொல்லே மந்திரம்", என்று இருந்து விடுவானோ?! என்று திகைத்தாள் நிவேதா.

"என்னங்க...இந்த ட்ரெஸ்-ஸ பாருங்க...எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்", என்று விளம்பரங்களில் சுட்டிக்  காட்டினாள். பத்திரிக்கைகளில் இருக்கும் பல வண்ண ஆடைகளை அவன் முன் வியந்து பார்த்து தன் ஆசையை அவனுக்கு மறைமுகமாக விளக்கினாள். நிதினோ எதையும் கண்டு கொள்ளவில்லை.

எதிர் பார்த்த அந்நாளும்  வந்தது. வழக்கம் போல் படுத்து, உறங்குவது போல நடித்த நிவேதா " கண்டிப்பா 12 மணிக்கு எழுப்புவான்", என்று மனதிற்குள் மத்தளம் வாசித்துக் கொண்டாள். நிதினோ படுத்து குறட்டை விடத் தொடங்கி இருந்தான். அவளை அறியாமலேயே  உறங்கிப் போன நிவேதா சில நிமிடங்களிலேயே நிதினின் குரல் கேட்டு அரக்க பரக்க விழித்துக் கொண்டாள்.

கையில் ஜிலு ஜிலுவென்று கண்ணைப் பறிக்கும் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு பரிசோடு நிவேதாவை புன்னகையுடன் நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் நிதின். "நான் தான் வேணான்னு சொன்னேன் இல்ல" என்று பொங்கி வந்த புன்னகையை மறைத்து போலிக் கோபம் காட்டினாள் நிவேதா. " என்னனு பாரு", என்று நிதின் கூற...பரிசுப் பொருளில் அளவை வைத்தே டிரஸ் இல்லை என்று யூகித்த நிவேதா," நகையாக இருக்குமோ?! என்று நினைத்தபடி பரிசைப் பிரித்தாள். ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஜொலித்துக் கொண்டிருந்த அவள் முகம் பியூஸ் போன ட்யூப் லைட்டானது. அப்போதும் தனது மில்லியன் டாலர் புன்னகையை மாற்றாமல் "என்ன நல்லாருக்கா..செம்ம surprise இல்ல?!", என்றான்  நிதின். 

தேன் நிலவின் போது கிளிக்கிய  நிவேதாவின் புகைப் படத்தை மிக அழகாக பிரேம் செய்து பரிசாகக் கொடுத்திருந்தான் நிதின். விலை மதிப்பில்லாத பரிசை கொடுத்து விட்ட பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தான். " நீங்க கொஞ்ச நாளா  போட்டோகிராஃபி கிறுக்கு பிடிச்சு அலையிறீங்கன்னு தெரியும் ...அதுக்கு இப்பிடியா?!", என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள்.

" ஏன் இதுக்கென்ன...நீ எவ்வளவு அழகா இருக்க இந்த போட்டோல தெரியுமா?! என்று கூற, அவன் பைத்தியம் போட்டோகிராஃபி மேல் மட்டும் அல்ல என்பதை உணர்ந்தவளாக வெட்கத்தில் சிவந்தாள். ஹாப்பி பர்த்டே என்று கூறிய நிதினின் மேல் தன்னை அறியாமலேயே இரண்டாம் முறையாக காதலில் விழுந்தாள் நிவேதா!!!

தங்களது மண வாழ்க்கையின் பதினோராவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிவேதாவும் நிதினும் இன்றும் மனதில் அதே அளவு காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புது மணத்  தம்பதிகளைப் போல!!!

பின் குறிப்பு : அந்த போட்டோ தான் முதலும் கடைசியுமாக நிவேதாவிற்கு நிதின் கொடுத்த "கிஃப்ட் ".

         

     


Thursday, February 9, 2017

டிக்...டாங்...டிக்

அனைவரும் காரில் அமர்ந்து பெல்ட்டுகளை கிளிக்கிக் கொண்டோம்.

மகனின் பெல்டை சரிசெய்து விட்டு வந்து, " போலாமா?!" என்ற கேள்வியுடன் காரை ஸ்டார்ட் செய்த என் கணவரின் முகம் கடிகாரத்தைப் பார்த்ததும்  மாறியது(கோபமாக?! ).

அலறிய ரேடியோவை அமைதிப்படுத்திவிட்டு தனது அமைதியைக்  கலைத்தார். "அஞ்சு மணிக்கு கூப்பிட்டா...வீட்ல இருந்து அஞ்சரைக்கு கெளம்புறது...நேரத்துக்கு போகனும்ன்ற நெனப்பு இருந்தா தான?!", என்று ஆரம்பித்தார். " ஏன்... வீட்ல இருந்து கெளம்புறப்ப லேட்டாயிருச்சுன்னு தெரியலையா?! கார்ல வந்து உக்காந்ததுமே ஞானோதயம் வந்துருமே?! வீட்ல ஒண்ணுக்கு நாலு கடிகாரம் இருக்கு. இதென்ன பரீட்சையா?! கரெக்ட் டயத்துக்கு போறதுக்கு...இப்பயே யாரும் வந்துருக்க மாட்டாங்க?! என்ற என்னிடம்...மேலும் வாதாட விருப்பமில்லை என்பதை "ஆமா" என்ற சொல்லில் வெளிப்படுத்தி விட்டு ரேடியோயாவை ஆன் செய்தார்.

இந்த விவாதம் எங்களுக்குள் அடிக்கடி...ஏன் எப்போதுமே நடப்பது தான். அதனால் நாங்கள் முடிக்கட்டும் என்று பொறுமை காத்த குழந்தைகள், " சேஞ் த சாங் டாடி...நாட் திஸ்" என்று கட்டளை பிறப்பிக்கத் தொடங்கினர்.

முற்காலத்தில் சூரியன் இருக்கும் இடத்தையும், திசையையும் கொண்டு நேரத்தைக் கணித்தனர். பின்பு தொழிற்சாலைகளின் சங்கு சத்தத்தைக்  கொண்டும், புகை வண்டி வரும் நேரத்தைக் கொண்டும் தங்களைத் தயார் செய்து கொண்டனர். அதற்குப்  பிந்தைய காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கொண்டு தங்களை விரைவு படுத்திக் கொண்டனர் ஆனால் இப்போதோ நொடிக்கு ஒருமுறை மொபைலை நோக்கும் நம்மிடம், " மணி என்னாச்சு?" என்றால் தெரிவதில்லை. 

பொதுவாகவே எனக்கு இல்லையில்லை எங்கள் குடும்பத்திற்கே  அடிக்கடி கடிகாரம் பார்க்கும் பழக்கம் உண்டு. என் தம்பி ஐந்து வயதிலேயே கடிகாரம் பார்க்கக் கற்றுக் கொண்டான். நர்சரி பள்ளியில் கடிகாரத்தையே  பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று டீச்சர் சுவர்கடிகாரத்தை கழற்றி வைத்து விட்டார்...மேசைக் கடிகாரத்தை தன் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டார். மதிய வேளை நெருங்க நெருங்க மணி பார்ப்பது அதிகரித்து கொண்டிருப்பதால்...மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்லும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!  

"காலம் கண் போன்றது...நேரம் பொன் போன்றது", என்றெல்லாம் கூறிக் கொள்ளும் நாம் அந்த நேரத்தைக் காட்டும் கடிகாரத்தை மறந்து கொண்டல்லவா இருக்கிறோம். " நான் ரொம்ப பிஸி...கடிகாரம்  பார்க்க நேரம் இல்லை', என்று சிலரும், 'சும்மா உக்காந்திருக்குற நான் மணி பாத்து என்ன செய்யப் போறேன்?!", என்று சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில பல சமயங்களில் நமக்கு சாதகமாக நேரத்தை மாற்றிச்  சொல்லி பழகிக் கொள்கிறோம். நாம் டைம் சொல்வதை வைத்தே நம் மன நிலையை யூகித்து விடலாம்  உதாரணமாக 10:30 என்று காட்டிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்த்து இப்போதான் மணி பத்தாச்சு என்று கூறுவதும், மணி பதினொன்னாகப் போகுது என்று அவசரத்தில்  பதறுவதும் நாம் பல முறை அனுபவத்தில் பார்த்திருப்போம்.

அமெரிக்கவிற்கு வந்த புதிதில் எங்கள் வீட்டில் சுவர்க்கடிகாரமே இல்லை. முதல் ஒரு வாரத்தில் கைப்பேசியில்  மணி பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாகப் பட்டது. அடுத்த வாரத்தில் கேபிள் கனெக்க்ஷன்  என்ற பெயரில் ஒரு பாக்ஸை வைத்து விட்டு சென்றான் அன்றிலிருந்து என் வாழ்வில் வசந்த காலம் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். நடு இரவில் கண்விழித்தாலும் பார்ப்பதற்கு    மிகவும் வசதியாக  பச்சை கலரில் நேரம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அன்றிலிருந்து கடிகாரம் பார்க்கும் பழக்கம் பன் மடங்கு பெருகியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வோர் நொடியையும், நிமிடத்தையும் அச்சு பிசகாமல் காட்டி என்னை தனக்கு அடிமை ஆக்கியது. இப்போது எங்கள் வீட்டில் அறைக்கு ஒன்றாக தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. என் கணவர் கூட கடிகாரம் 11:11 என்று காட்டும் பொழுது, " ஏய்...ஒனக்கு பிடிச்ச டைம் வந்துருச்சு", என்று கேலி செய்வதுண்டு. இப்போது என் பெண். 20 நிமிடம் படி என்றால் அதில் பத்து நிமிடம் கடிகாரத்தை பார்த்தே வீணடித்து விடுவாள்...எப்போது 20 நிமிடம் ஆகிறது என்று கணக்கு பார்க்கிறாளாம்.  

நமக்கு பிடித்த சினிமாக்களில் எப்போது கடிகாரத்தைக் காட்டுவார்கள் என்று கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரிந்துவிடும் ஆமாம் இக்கட்டான நேரங்களில் மட்டும் தான். முன்பெல்லாம் டைம் பாம் வெடிக்கும் சமயத்தில் ஆனால் இப்போதெல்லாம் "Time Machine"-ல் ட்ராவல் செய்யும் சமயங்களில் தான்  கடிகாரம், காலெண்டர் என்று மிகவும் விரிவாகவே  காண்பிக்கிறார்கள். சில சமயம் பேய் வரும் நேரங்களிலும் கடிகாரம் பன்னிரெண்டு தடவை அடிப்பதுண்டு!!! நாமும் "Time Sensitive " ஆன விஷயங்களில் கடிகாரத்தைப் பார்க்கத் தவறுவதில்லை என்றே தோன்றுகிறது.

"காலத்தே பயிர் செய்...நேரத்தே அறுவடை செய்", என்று பழமொழியுடன் அறிவுரை கூறுவதற்காகவோ, கடிகாரத்தை நோக்கினால் காரியம் கைகூடும் என்பதற்காகவோ இதையெல்லாம் எழுதவில்லை. டிஜிட்டல் மயமான உலகில் குழந்தைகளுக்கு சுவர்க்கடிகாரத்தில் நேரம் பார்ப்பது குதிரைக்கு கொம்பாக தோன்றுகிறது. புராதான கட்டிடங்களில் இருந்த பெரிய பெரிய கடிகாரங்கள் எவ்வாறு ஓடாமல் நிற்கின்றதோ அதே போல் இன்னும் சில வருடங்களில் முட் கடிகாரங்கள் அருங்காட்சியகங்களை நோக்கி ஓடப் போகின்றன.

எப்போதும் நிற்காமல் துறு துறுவென ஓடும் குழந்தைப் போல நொடி முள், சீரான வேகத்தில் குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவைப் போல நிமிட முள், அடிக்கடி நகராமல்  ஒரே இடத்தில் அதிக நேரம் நின்றாலும், தன்னைச் சுற்றி சுழலும் அனைத்திற்கும் அர்த்தம் சேர்க்கும் அம்மாவைப் போன்ற   மணி (பெரிய) முள் என்று நம் குடுபத்தை நினைவில் நிறுத்தும் முட்  கடிகாரத்தை நம் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொள்ள மறந்துராதீங்க...இன்னும் நேரம் இருக்கு!!!      

"