புதுமணத் தம்பதியரான நிவேதாவும் நிதினும் ஷாப்பிங், ஹனிமூன், உறவினர்கள் வீட்டில் விருந்து என்று நேரம் போவதே தெரியாமல் சுழன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் மனமோ காதல் வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அவர்களின் குதூகலத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் விதமாக நிவேதாவின் பிறந்தநாள் எட்டிப் பார்த்தது.
"ரெண்டு நாள்ல உன் பர்த்டே வருது...என்ன பண்ணலாம்?!", என்று காதல் ததும்பும் குரலில் நிவேதாவை நோக்கிக் கேட்டான் நிதின்.
" கல்யாணத்துக்கு வாங்கின ட்ரெஸ்ஸே நெறைய இருக்கு...கோவிலுக்கு போகலாம்", வேறென்ன?! என்றாள். " இந்த பர்த்டே கொண்டாடுற பழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது...அதுவுமில்லாம Surprise Gift குடுக்கிறது, நடு ராத்திரி எழுப்பி விஷ் பண்றதுன்னு இந்த சினிமாட்டிக் விஷயங்களெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. இப்ப இருந்தே ஒரே மாதிரி இருந்துட்டா நமக்கும் பின்னாடி பிரச்னை இல்ல பாருங்க?!", என்ற நீண்ட நெடிய விளக்கத்துடன் தன் உரையை முடித்துக்கொண்டாள்.
"அப்பிடியா?! ",என்று கூறி குறும்புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நிதின்.
பேசிய பேச்செல்லாம் ஒரு புறம் இருக்க...அடுத்து வந்த நாட்களில் நிதினிடம் இருந்து தனக்கு எந்த மாதிரி பரிசு வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நேரத்தைக் கடத்தினாள். ஆனால் நிதினோ அதை பற்றி எதுவும் சிந்தித்தது போல தெரியவில்லை. "மனைவி சொல்லே மந்திரம்", என்று இருந்து விடுவானோ?! என்று திகைத்தாள் நிவேதா.
"என்னங்க...இந்த ட்ரெஸ்-ஸ பாருங்க...எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்", என்று விளம்பரங்களில் சுட்டிக் காட்டினாள். பத்திரிக்கைகளில் இருக்கும் பல வண்ண ஆடைகளை அவன் முன் வியந்து பார்த்து தன் ஆசையை அவனுக்கு மறைமுகமாக விளக்கினாள். நிதினோ எதையும் கண்டு கொள்ளவில்லை.
எதிர் பார்த்த அந்நாளும் வந்தது. வழக்கம் போல் படுத்து, உறங்குவது போல நடித்த நிவேதா " கண்டிப்பா 12 மணிக்கு எழுப்புவான்", என்று மனதிற்குள் மத்தளம் வாசித்துக் கொண்டாள். நிதினோ படுத்து குறட்டை விடத் தொடங்கி இருந்தான். அவளை அறியாமலேயே உறங்கிப் போன நிவேதா சில நிமிடங்களிலேயே நிதினின் குரல் கேட்டு அரக்க பரக்க விழித்துக் கொண்டாள்.
கையில் ஜிலு ஜிலுவென்று கண்ணைப் பறிக்கும் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு பரிசோடு நிவேதாவை புன்னகையுடன் நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் நிதின். "நான் தான் வேணான்னு சொன்னேன் இல்ல" என்று பொங்கி வந்த புன்னகையை மறைத்து போலிக் கோபம் காட்டினாள் நிவேதா. " என்னனு பாரு", என்று நிதின் கூற...பரிசுப் பொருளில் அளவை வைத்தே டிரஸ் இல்லை என்று யூகித்த நிவேதா," நகையாக இருக்குமோ?! என்று நினைத்தபடி பரிசைப் பிரித்தாள். ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஜொலித்துக் கொண்டிருந்த அவள் முகம் பியூஸ் போன ட்யூப் லைட்டானது. அப்போதும் தனது மில்லியன் டாலர் புன்னகையை மாற்றாமல் "என்ன நல்லாருக்கா..செம்ம surprise இல்ல?!", என்றான் நிதின்.
தேன் நிலவின் போது கிளிக்கிய நிவேதாவின் புகைப் படத்தை மிக அழகாக பிரேம் செய்து பரிசாகக் கொடுத்திருந்தான் நிதின். விலை மதிப்பில்லாத பரிசை கொடுத்து விட்ட பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தான். " நீங்க கொஞ்ச நாளா போட்டோகிராஃபி கிறுக்கு பிடிச்சு அலையிறீங்கன்னு தெரியும் ...அதுக்கு இப்பிடியா?!", என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள்.
" ஏன் இதுக்கென்ன...நீ எவ்வளவு அழகா இருக்க இந்த போட்டோல தெரியுமா?! என்று கூற, அவன் பைத்தியம் போட்டோகிராஃபி மேல் மட்டும் அல்ல என்பதை உணர்ந்தவளாக வெட்கத்தில் சிவந்தாள். ஹாப்பி பர்த்டே என்று கூறிய நிதினின் மேல் தன்னை அறியாமலேயே இரண்டாம் முறையாக காதலில் விழுந்தாள் நிவேதா!!!
தங்களது மண வாழ்க்கையின் பதினோராவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிவேதாவும் நிதினும் இன்றும் மனதில் அதே அளவு காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புது மணத் தம்பதிகளைப் போல!!!
பின் குறிப்பு : அந்த போட்டோ தான் முதலும் கடைசியுமாக நிவேதாவிற்கு நிதின் கொடுத்த "கிஃப்ட் ".