"பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் " இது மனிதர்களுக்கும் பொருந்தும் கூற்று தானே ?! பெரும்பாலான நேரங்களில் நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (Emotions or Reactions ) வைத்து, " அவருக்கு மூக்குக்கு மேல கோவம் வருமே?! ", "அவரு ரொம்ப அன்பானவரு...அதிகம் பேசாதவரு", "அவரு ஒரு லொட...லொட பேர்வழி", " வெத்துவேட்டு " என்றெல்லாம் நமக்கு முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. நாமும் நமக்கு வசதியாக ( Comfort Zone ) இருக்கும் பட்சத்தில் அந்த முகமூடியுடனே வலம் வர விரும்புகிறோம்...வருகிறோம் ஆனால் "மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி" என்பதால் சிலசமயம் நமது முகத்திரையை விலக்கி புது மனிதனாக உருமாற வேண்டி உள்ளது. அவ்வாறான நேரங்களில் நாம் ஹீரோவா?!, வில்லனா?! காலம் தான் முடிவு செய்யும்.
சான்று - 1
அது ஒரு கோடைக்காலம்...ஞாயிற்றுக் கிழமை...நேரம் - மதியம் மூன்று மணி. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு... நடு இரவில் இருக்கும் ஆள் நடமாட்டம் கூட மதிய வேளையில் இருக்காது. தெருவே வெறிச்சோடிக் கிடக்கும். மதிய உணவிற்குப் பிறகு கண்ணயரும் தருணம். என் அண்ணனும், மாமா மகனும் சைக்கிள் ஓட்டிப் பழகுவதற்குக் கிளம்பினர். வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு. இங்கு அவர்களின் முகமூடியைப் (Character) பற்றிப் தெரிந்து கொள்வது அவசியம். என் அண்ணன் மிகவும் அமைதி (Reserved Type). எத்தனைக் கேள்வி கேட்டாலும் இரண்டே வரிகளில் விடை கொடுக்கும் கஞ்சன். சில சமயம் புன்னகையோடு நிறுத்திக் கொள்வதும் உண்டு. என் மாமன் மகனோ அதற்கு நேர் எதிர்...மிகவும் சுட்டி...தலைகீழ் சேட்டை செய்பவன்.
முதல் பத்து பதினைந்து நிமிடம் ஒரு சந்தில் ஓட்டினர் பின்பு சற்று அகலமான முட்டுச் சந்தை தேந்தெடுக்க முனைந்து, லோக்கல் ஹீரோக்களிடம்
(Bullies) மாட்டிக் கொண்டனர். சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டு இருவரையும் விரட்டினர். அது வாடகை சைக்கிள் என்று மாமன் மகன் கெஞ்ச, என் அண்ணனை பிடித்து வைத்துக் கொண்டு, " உன் அப்பா சைக்கிள கொண்டு வா...அது வரைக்கும் இந்த பையன் இங்க இருக்கட்டும்" என்று பயம் காட்டினர். "யார்ட்டயாச்சும் சொன்னே அவ்வளவுதான்" என்றனர். அவன் மிரட்ட வேண்டுமா என்ன?!...எத்தனை படங்களில் பார்த்திருப்போம்...அவர்களை சர்வதேச கடத்தல்கார்கள் பட்டியலில் சேர்த்தே விட்டனர் என் அண்ணனும் மாமன் மகனும்.
வேறு வழியில்லாமல் என் மாமன் மகன் வீட்டிற்குச் சென்று, அவன் அப்பா சைக்கிளை யாருக்கும் தெரியாமல் ஒட்டிக் கொண்டு வந்தான். வரும் வழியில் என் அண்ணன் நடந்து வருவதைக் கண்டு சந்தோஷத்திலும் ஆச்சரியத்திலும், " எப்பிடிடா விட்டாங்க?!" என்று கேட்டான் வியர்வையைத் துடைத்தபடி. " எங்க அப்பா போலீஸ்...இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் என்ன தேடி வந்துருவாங்கன்னு சொன்னேன்...முதல்ல நம்பலை...நீ வர்றதுக்கு லேட் ஆனதால...விட்டுட்டாங்க " என்று கூறி முடித்தான் என் அண்ணன். அடுத்து வந்த நாட்களில் என் அண்ணன் பெரிய ஹீரோவாகப் பேசப்பட்டான்...அவனை முட்டுச் சந்திற்கு அழைத்துச் சென்ற மாமன் மகனோ வில்லனானான்!!!
சான்று - 2
நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தருணம். என் தங்கை புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். நான் அவளை பலவாறு தொல்லைப் படுத்துவதைப் பொழுது போக்காக கொண்டிருந்தாலும், உடன் படிக்கும் மாணவி அடித்து விட்டாள் என்று கேள்விப்பட்டதும் , என்னுள் தூங்கிக் கொண்டிருந்த சகோதரி பாசம் துள்ளி எழுந்தது. மதிய உணவு இடைவேளையில் (என் தோழியின் துணையோடு) விளையாடிக் கொண்டிருந்த அவளை Round-up செய்தோம். "இனிமே என் தங்கச்சி மேல கையை வச்ச அவ்வளவுதான்" என்று மிரட்ட, அந்தப் பெண்ணோ முறைத்துக் கொண்டு நின்றாள். " என்ன முறைக்குற?! என்றதோடு நில்லாமல் என் தங்கையை அழைத்து ," அவ உன்ன எப்பிடி கொட்டுனாளோ...அதே மாதிரி கொட்டு" என்று கொட்டச் செய்து பழிக்குப் பழி தீர்த்த பெருமிதத்தோடு... சிங்க நடை போட்டு வகுப்பறையை அடைந்ததோம்.
அடுத்த சில மணி நேரத்திற்குப் பின், என் தோழி ," இப்ப தான் நினவுக்கு வருது. நாம திட்டிட்டு வந்தோமே...அந்த பொண்ணோட அக்கா அஞ்சாவது படிக்குறா", என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது...இருவருக்கும் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. மாலை பள்ளி முடிந்ததும் யார் கண்ணிலும் படாமல்... ஓட்டமும் நடையுமாக...குனிந்த தலை நிமிராமல் வீட்டிற்கு வந்தடைந்தோம். தீவிர ஆலோசனைக்குப் பின் எங்கள் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியின், ஏழாவது படிக்கும் அக்காவின் துணையை நாடுவது என்று முடிவானது.
அடுத்து வந்த நாட்களில் வகுப்பறையை விட்டு வெளியே வரவில்லை நானும் என் தோழியும். ஒருவாரத்திற்குப் பிறகு என் தங்கையும் நான் மிரட்டிய பெண்ணும் ஒன்றாக விளையாடுவதைக் காண நேர்ந்து. " என்னடி அந்த பிள்ளையோட விளையாடிட்டு இருந்த இன்னைக்கு ?!" என்று வினவ ," நீ அந்த பிள்ளையை திட்டுன அடுத்த நாளே அவ எங்கூட பிரெண்டு ஆயிட்டா " என்று கூறக்கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடி, " அது " என்று திமிருடன் கூறி விட்டு ," சு ந பா நா" இத அப்பிடியே மெயின்டைன் பண்ணு" என்று மனதிற்குள் கூறி சிரித்துக் கொண்டேன்.
"என்னடா இது ...முகமூடி, முத்திரை...முகத்திரை என்றெல்லாம் Build - Up உடன் முன்னுரையை எழுதிவிட்டு... சிறு குழந்தைகளைச் சான்றாக கூறுகிறாளே?!" என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. தங்களின் சுய அடையாளத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்களுக்குச் சரி என்று படுவதை சட்டென்று கூறுவதிலும்... எதிர் வினை புரிவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. நாமும் அவ்வாறு செயல் படும் நேரங்களில், " என்ன அவரு இப்பிடி மாறிட்டாரே?!" என்று குறை கூறுவதும், " இப்பதான் நியாயமா பேசுறாரு ", " இப்பவாவது வாயத் தொறந்தாரே" என்று பலர் விமர்சிப்பதும், பாராட்டுவதும் நடைமுறை உண்மை...தடுக்க முடியாத நிதர்சனம் ஆனால்...
"நாலு பேருக்கு நல்லதுன்னா...எதுவுமே தப்பில்ல " என்ன நான் சொல்றது?!