கதை சொல்வது ஒரு சிலருக்கே கை வந்த கலையாக இருப்பினும் கதை கேட்பது யாருக்குத்தான் பிடிக்காது?! நாம் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதும் இதனால் தானே?! கதை உண்மையாகவும் இருக்கலாம் கற்பனையாகவும் இருக்கலாம். நமக்குத் தெரிந்தவர்கள் பற்றியும் இருக்கலாம் தெரியாதவர்கள் பற்றியும் இருக்கலாம். அனைத்து விதமான உணர்ச்சிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் அல்லது ஒரு சில உணர்ச்சிகள்மட்டும் மேலோங்கியதாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் கதை சுவாரசியமாக இருக்க வேண்டும்.
நான் கதை கேட்டதை விட சொன்னதுதான் அதிகம் என்றே நினைக்கிறேன். சிறுவயதில் பெரியம்மாவிடம் சில கதைகள் கேட்டதுண்டு. என்னை கதை சொல்லியாக ஆக்கியத்தில் முக்கியப்பங்கு "கேபிள் டிவி"-க்கு உண்டு.
90-களின் தொடக்கத்தில் ஒரு சிலரே கேபிள் கனெக்ஷன் வைத்திருந்தார்கள். அவர்கள் கொடுக்கும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சனி ஞாயிறுகளில் அவர்கள் பார்த்த நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை மதிய உணவு இடைவெளியில் ஒன்று விடாமல் கூறுவார்கள். அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மெகா தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டதும் கதை சொல்லிகளுக்கு கிராக்கி அதிகமாகியது.
எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன் இல்லாதிருந்தாலும் மாடி வீட்டு அக்கா வீட்டில் பார்த்த நிகழ்ச்சிகளை நானும் சொல்லத் துவங்கினேன். நான் சொன்னது பள்ளிக்கூடத்தில் அல்ல வீட்டில். கவுண்டமணி காமெடிகளை என் அப்பாவிடம் மிக விரிவாக துணி துவைத்துக்கொண்டே கூறுவேன் அவரும் விழுந்து விழுந்து சிரிப்பார். புரிந்ததோ இல்லையே?! இப்போது நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது!!! என்னிடம் யாரும் சிக்காத பட்சத்தில் என் கதைக்கு பலி கடா ஆவது என் தங்கைதான். பிடிக்குதோ இல்லையோ அவள் கேட்டே ஆகவேண்டும்.
எங்களின் கதை சொல்லும் பசிக்கு தீனி போடும் விதமாக பள்ளிகளிலும் வருடத்திற்கு ஒருமுறை கட்டணம் வசூலித்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தன. பழைய படமே என்றாலும் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பது வழக்கம்...அப்புறம் கதை சொல்லணுமில்ல!!!
மேல்வகுப்பில் படிக்கும் பொழுதும் சீரியல் கதை சொல்லிகளுக்கு மவுசு இருந்தது ஆனால் எனக்கு அதில் அதிக ஆர்வம் இருந்ததில்லை. அக்காலகட்டத்தில் முழு நீள திரைப்படங்களை விரிவாக சொல்லுவதில் "Expert " ஆக உருமாறி இருந்தேன். புதுப் படமோ பழைய படமோ...வித்தியாசம் இல்லை. ஒரு பீரியட் கிடைத்தாலும் போதும் நீங்கள் ஒரு படம் பார்த்துவிடலாம்...என்னிடம் கதை கேட்கத் தயாராக இருந்தால்!!! டீச்சர் லீவு என்றால் இரண்டு மூன்று படங்கள் ஓடும் வகுப்பறையில்.
சொந்தம்... பந்தம் என்று அனைவருக்கும் கதை சொல்லிய அனுபவம் எனக்கு உண்டு. அவர்களும் பதிலுக்கு அவர்களை மிகவும் கவர்ந்த... முக்கியமாக புதிய திரைப்படங்களை எனக்குக் கூறுவார் அதையும் நான் பலருக்கு கொண்டு சேர்ப்பேன். இந்த கதை சொல்லும் பழக்கம் என்னிடம் இருந்து என் தங்கைக்கும் ஒட்டிக் கொண்டிருந்தது. அவ்வப்போது அவளும் எனக்கு ஒரு சில திரைப்படங்களை கதையாக சொல்வாள். இப்பொழுது கூட அப்படங்களை பார்க்க நேர்ந்தால் என் தங்கையை நினைத்துக் கொள்வேன்...பேசும் பொழுது "நீ கதை சொன்ன படம் இன்னைக்கு டீவியில போட்ருந்தாங்க" என்று கூறுவேன்.
கல்லூரியில் ஹாஸ்டல் வாசிகள் கதை கேட்க மிக ஆவலாக இருப்பர். நான் கேபிள் டீவி பார்ப்பது அறவே குறைந்திருந்த சமயம் அது ஆகையால் புதுப் படங்களை திரையரங்குகளில் பார்க்க நேர்ந்தால் மட்டுமே கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. என்னிடம் கதை கேட் பிறகு நீங்கள் அப்படத்தை பார்க்க நேர்ந்தால் என்னை நினைக்காமல் இருக்க முடியாது. சீன் பை சீன்...Frame by frame அப்படியே இருக்கும். அதை என்னிடம் வந்து சொன்னவர்களும் ,"எப்பிடிடீ இப்பிடி சொல்ற?! " என்று சிலாகித்தவர்களும் உண்டு.
இக்கதை சொல்லும் பழக்கத்தால் பள்ளி கல்லூரிகளில் நடந்த சம்பவங்களை வீட்டில் விரிவாக அனைவரிடமும் சொல்லும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அதுவும் சுவாரசியமாக ஏதாவது நடந்து விட்டால் போதும்...புத்தகத்தை தங்கள் மடிகளில் விரித்து வைத்துக்கொண்டு என்னிடம் கதை கேட்டுக் கொண்டிருப்பர். ஆ... வென்று கதை கேட்டு விட்டு... நான் நேரத்தை விரையமாக்கி விட்டதாக என் கடைசித் தம்பி திட்டித் தீர்ப்பான். அவர்களும் பள்ளிக்கதைகளை கூறுவதுண்டு.
இன்றளவும் கதை சொல்லும் பழக்கம் என்னை விட்டு விலகவில்லை. சினிமா மட்டுமன்றி நான் பார்த்த...கேட்ட...படித்த...அனுபவித்த பலதரப்பட்ட விஷயங்களை விரிவாக என் கணவர், பெற்றோர், குழந்தைகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். என் படிக்கும் (எழுதும்) ஆர்வத்தையும்... பிறர் சொல்வதை செவி கொடுத்து கேட்கும் பொறுமையையும் இக்கதை சொல்லும் பழக்கம் தான் அளிக்கிறது என்று நினைக்கிறேன். நான் சொல்வதைக் கேட்கும் செவிகள் கிடைத்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். கதை சொல்லிகளாக உருவெடுத்து வரும் என் குழந்தைகளை பெருமையுடன் பார்க்கிறேன்.
இன்றைய இயந்திர உலகில் மனம் விட்டுப் பேசுவதும் பிறர் பேசுவதைக் (அவர்களை மதிப்பிடாமல் ...Without Judging) கேட்பதுமே பல பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்து விடும் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன்.
பின் குறிப்பு : என்னிடம் கதை கேட்கும் கொடுமையிலிருந்து என் தங்கைக்கு நிரந்தர விடுதலை இன்றும் கிட்டவில்லை.