கதவைத் திறந்தவளின் கண்களில் ஒரு சிறு அதிர்ச்சி . அடுத்த சில நொடிக் கணங்களில் பயம் அந்த அதிர்ச்சியை வெல்ல ... தன்னை அறியாமலேயே வாய் வரை வந்த "வீல்" என்று அலறலை... உதடுகளால் பூட்டி உள்நிறுத்தினாள் நிகிலா. எதுவும் நடவாதது போல் சத்தமில்லாமல் கதவை சாத்தி விட்டு உள்ளறையை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.
" நேரம் காலை 6:40...மாநிலச் செய்திகள் வாசிப்பது ..." என்று செய்தியாளர் தன்னை அறிமுகம் செய்து கொண்டிருந்தார் வானொலியில். அம்மா சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். தங்கை, தம்பி என மூவர் தங்கள் பாட புத்தகங்களை புரட்டிக் கொண்டும், முன்னும் பின்னும் அசைந்து எதையோ மனப்பாடம் செய்து கொண்டும் இருந்தனர். முகவாயைத் தடவிக்கொண்டு செய்தியைக் கேட்பதற்கு தன்னை தயார் நிலையில் வைத்திருந்தார் அப்பா.
படபடப்புடன் வந்து நின்ற நிகிலாவை, "என்னாச்சு?! " என்ற வினாவோடு அனைவரும் ஒரு சேர நோக்கினர். " வாசல்ல ரெண்டு நாய்க்குட்டி நிக்குது " என்றவளை, " தொரத்தி விட்டுட்டு வாசல் தெளிக்க வேண்டியதுதான " எனும் தோரணையில் பார்த்த அப்பா, " இவங்களுக்கு வேற வேலையே இல்ல...என்னமோ கோவில்ல நேந்துக்கிட்டு ஆடு, சேவலை விட்ற மாதிரி மாசமான நாயி, பூனைன்னு இந்த ரோட்டோர பிள்ளையார்கிட்ட விட்டுட்டு போயிற்றானுங்க ..அது நேரா நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குது " என்று பெருமூச்சோடு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.
நிகிலாவிற்கு... ஏன் அவர்கள் வீட்டில் எல்லாருக்குமே செல்லப் பிராணிகளைக் கண்டால் ஒரு வித பயம். அதனாலேயே வீட்டிற்கு வரும் நாய்களில் ஒன்றைக் கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை. பூனையை வளர்க்கலாம் என்று ஒரு சில முறை முயன்றனர் ஆனால் அது பீரோ, அலமாரிக்கு அடியில் என்று அசிங்கம் செய்ய...முயற்சியைக் கைவிட்டு விட்டனர். ஒரு வழியாக நாயை விரட்டிவிட்டு வந்த அப்பா "பாவம் சின்ன குட்டி...இங்க தான் கோவில்ல நிக்குது " என்றார். " ஏய் நீ போயி கோலம் போட்ருடி" என்று தங்கையை அனுப்பி வைத்தாள் நிகிலா.
புறநகர் பகுதியில் வசிக்கும் நிகிலாவின் வீட்டிற்கு இரு மருங்கிலும் வேறு வீடுகள் கிடையாது. அரிசி, பருப்பு ஆலைகளே இருந்தன. வீட்டை விட்டு இறங்கியதும் ரோடு ...அடுத்து பஸ் ஸ்டாப். வீட்டை ஒட்டி பின்புறமும்...சாலையைக் கடந்து முன்புறமும் கால்வாய் ஓடிக் கொண்டு...இல்லை...இல்லை நின்று கொண்டிருக்கும். அதனால் அழையா விருந்தாளிகளாக பாம்பு, தவளை, பூரான் என்று அனைத்து ஜந்துக்களும் அவர்கள் வீட்டு பாத்ரூம், புழக்கடைக்கு வருகை தரும். " அலெர்ட்டா இரு ஆறுமுகம்" என்று வடிவேலு சொல்வது போல படு கவனமாக இருக்க வேண்டும். நகர வாசிகள் வந்தால் " இது என்ன வீடா ?! Zoo -வா ?! ஜுராசிக் பார்க் படத்துல வர்ற மாதிரி இருக்கு " என்று கேலி பேசுவதும் உண்டு.
மாலை கல்லூரி முடிந்து... பேருந்தை விட்டு வீட்டு வாசலில் இறங்கிய நிகிலா அங்கும் இங்குமாக பார்வையை சுழல விட்டாள். "அப்பாடா" என்ற நிம்மதி பெரு மூச்சோடு வீட்டிற்குள் நுழைந்தாள். " என்னம்மா...நாய்க்குட்டி போயிருச்சா?! என்று புத்தகப் பையை ஓரத்தில் வைத்தவாறே வினவினாள். "ம்ம்ம் ...ஒரு ஒன்பது மணிக்கு பாத்தேன்...பிள்ளையார் கோவில்ல வச்சிருந்த பாலை குடிச்சிட்டு ..வெயில்ல படுத்துக்கிட்டுருந்துச்சு, பஸ் ஸ்டாப்ல நிக்குற பசங்கதூக்கி வெளையாடிகிட்டு இருந்தானுவ ...பதினோரு மணிக்கு போயி பாக்குறேன் காணோம்...யாராச்சும் ரைஸ்மில்லு ஆளுங்க எடுத்துகிட்டு போயிருப்பாங்க... " என்றவாறு தேநீரை நிகிலாவிடம் கொடுத்தாள் அம்மா.
சில சமயம் வரும் நாய்க்குட்டிகள் நிகிலா வீட்டை விட்டு போவேனா என்று அடம் பிடிக்கும். அன்று முழுவதும் வாசல் கேட்டை மூடி வைத்தாலும் அங்கேயே இருக்கும். ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் போதும் உள் புக முயலும். அவ்வாறான சமயங்களில் உதவிக்கரம் நீட்டுவது நிகிலாவின் தம்பி...அவர்களின் "சூப்பர் ஹீரோ"(அவனுக்கும் உள்ளூர நடுக்கம் தான்). அவன் கையாளும் யுக்தி இதுதான். நாய்க்குட்டியை துணிப்பையில் வைத்து...பையை வயர் கூடையில் வைத்து...கூடையை சைக்கிளில் வைத்துக் கொண்டு அவன் பயணம் தொடங்கும். பத்து பதினைந்து நிமிடத்திற்கு பின்...போக்குவரத்து இல்லாத தெருவில் பையை வைத்து விட்டு...கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிளில் திருப்பிவிட வேண்டும் இல்லையேல் நாய்க்குட்டி பின் தொடரும்...மற்ற வாகனங்களில் சிக்கிக் கொள்ளும். ஒரு சில முறை பையை நான்கைந்து முறை சுழற்றி வைத்துவிட்டு வருவான். " வெளிய வந்த உடனே நாய்க்கு தல சுத்தும்...அடையாளம் தெரியாது " என்பான். " ஒரு வீட்டுக்கு பின்னாடி ஒளிஞ்சு பாத்துட்டு வந்தேன் எங்க போகுதுன்னு...நல்ல வேளை ஒரு சந்துக்குள்ள போயிருச்சு" என்பான். அதைக் கேட்கும் போது பாவமாக இருக்கும். என்ன செய்வது...அங்கு வரும் நாயையெல்லாம் வளர்த்தால் வீட்டில் மனிதர்களை விட நாய் தான் அதிகம் இருக்கும்.
நிகிலா பள்ளியில் படிக்கும் பொழுது அவர்கள் பெரியம்மா வீட்டில் ஒரு நாய் இருந்தது. மிகவும் வயதானது. அதிகம் குலைக்காது. சிறிது நாட்களில் அது நோய்வாய் பட்டு இறக்க...ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்தனர். அது எப்பொழுது பார்த்தாலும் குதித்துக்கொண்டும், குலைத்துக் கொண்டும் இருக்கும். சில சமயம் கயிற்றை அறுத்துக்கொண்டு வீட்டை வலம் வரும். துணிகளை கடித்துக் குதறும். நிகிலாவும் அவளின் சித்தி குழந்தைகளும் மூலைக்கு ஒரு புறமாக சிதறி ஓடுவதும், கட்டிலில் மேல் ஏறிக்கொள்வதுமாக வீடு அல்லோல கல்லோலப்படும். சில சமயம் அதிகாலையில் இவை நடக்கும். நிகிலா போர்வையை தலையோடு இழுத்து போர்த்தி ஒடுங்கிக் கொள்வாள். அனைவரின் மீதும் நாய் தாவி ஓடும். சமாளிக்க முடியாமல் அதையும் எங்கோ விட்டு விட்டனர். அதன் பிறகு நிகிலாவிற்கு நாயுடன் எந்த வித நேரடித்தொடர்பும் கிடையாது. ஒரு முறை அவள் அப்பாவை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது அன்றிலிருந்து நாயின் மேலான அவளின் பயம் மேலும் பண் மடங்கு பெருகியது. தெரு நாய்களின் அட்டகாசங்களை பத்திரிகையில் படிக்கும் பொழுது பயத்தில் தலை சுத்தும் அவளுக்கு.
திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கும் நிகிலாவிற்கு நாயுடனான உறவு (பயம் ) இன்றளவும் தொடர்கிறது. கழுத்தில் "லீஷ்" உடன் மிக பாதுகாப்பாக செல்லும் நாய் கூட நிகிலாவைப் பார்த்தல் குறைக்கும், துள்ளும். சில சமயம் காலை சுற்றி வற முயலும்..இவள் ஒதுங்கிக் கொள்வதைப் பார்ப்பவர்கள் "எதுவும் செய்யாது...குழந்தை போல...PET செய்யலாம் " என்று கூறுவர் ஆனால் நிகிலாவோ " No Thanks ...எனக்கு பயம் " என்று கூறி விடுவாள். ஒரு வேளை நம் கண்ணில் தெரியும் பயம் அதற்கு தெரியுமோ...என்னவோ?! என்று நினைத்துக் கொள்வாள்.
ஒரு முறை அவளின் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு Play Ground-ற்குச் சென்று கொண்டிருந்தாள். எதிர்பாரா விதமாக பிடியிலிருந்து விடுபட்ட நாய் நிகிலாவை நோக்கிப் பாய்ந்தது. ஆஆஆ ... என்ற அலறலோடு விலக, நாய் அவளின் மூன்று வயது மகன் மேல் ஏறி அவன் தலையை நனைத்து விட்டது. பதறி ஓடி வந்த நாயின் காப்பாளரைப் பார்த்து " Please take Him...How Could You Let it go ?! '- என்று கோபத்தில் கிட்டத்தட்ட அழுதே விட்டாள். அதிலிருந்து அவளின் குழந்தைகளும் நாயைக் கண்டால் நாலு காத தூரம் ஓடுகிறார்கள். " நாய்கிட்ட இருக்கிற பயத்துல இருந்து வெளியில வரணுங்க...நாய் வளர்க்கலாமா ?! " என்று கணவரிடம் கேட்டால் அவர் " எனக்கு Interest இல்ல " என்று தப்பி ஓடுகிறார். எப்போதுதான் நிகிலாவிற்கு பயம் தெளியுமோ ?! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
பின் குறிப்பு : சமீபத்தில் திருமணம் நடந்த நிகிலாவின் சூப்பர் ஹீரோ தம்பியை அவனின் மாமனார் வீட்டில் (மைத்துனனுக்கு பதிலாக) வரவேற்றது யார் தெரியுமா ?! அவர்களின் செல்ல நாய் ஜாக்கி!!! ( தம்பியின் Mind Voice ...அவனா நீ!!! )