தெருவில் இறங்கி ஓடிய குணா, மூச்சிரைக்க தெரு முக்கிலேயே நின்று விட்டான். சாலையின் இரு புறத்தையும் மாறி மாறி பார்த்தவன் ...தூரத்தில் வருபவர்களை காண்பதற்கு வசதியாக குதிகாலில் நின்று சிறிது நேரம் நோக்கினான். தெரு முனையில் இருக்கும் டீக்கடையில் ஓரிருவர் தேநீர் அருந்தியபடியும் , ஒரு சிலர் மாலை நாளிதழை மும்முரமாக படித்துக் கொண்டும், விவாதிக்கொண்டும் இருந்தனர். குணாவை சில நிமிடம் பார்த்த டீக்கடைக்காரர் எதுவும் கேட்காமல் தன் வேலையில் கவனமானார் . கடந்த ஒரு மணிநேரத்தில் ஐந்தாவது முறையாக குணா சாலையை சோதிப்பதற்கு தெரு முனைக்கு வந்திருந்தான்.
தளர்ந்த நடையும் வாடிய முகமுமாக திரும்பிய குணா சோர்வுடன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டான் . அதிகம் போக்குவரத்து இல்லாத அந்த தெருவில் மாலை நேரமென்பதால் மக்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது . இஸ்திரி வண்டிக்காரர் இஸ்திரிப் பெட்டியிலிருந்த கரியை தண்ணீர் ஊற்றி அனைத்துக்கொண்டிருந்தார். "போளியல், கொழுக்கட்டை வாங்குறீங்களா ?!" என்ற இரண்டு தூக்கு வாளியை வைத்துக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தவளுக்கு "வேணாங்கா " என்ற குரல் மட்டும் குணா வீட்டிலிருந்து வர அவள் அடுத்த வீட்டிற்கு நகர்ந்தாள். நான்கைந்து குடித்தனங்கள் வாழும் காம்பௌண்ட் வீட்டிலிருந்து வெளிவந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி " என்னடா குணா வாசல்லயே ரொம்ப நேரமா உக்காந்துருக்க ?!" என்று கேட்டுக்கொண்டே அவனின் பதிலைக் கேட்க நேரமில்லாதவளாய் தெருவில் இறங்கி மறைந்தாள்.
குணாவின் வயதை ஒத்த சிறுவர்களும், சிறுமியர்களும் குதூகலமாக தங்களுக்குள் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் குணாவை ஓரக் கண்ணால் நோக்கிக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனிடம் " அம்மா ஏண்ணே இன்னும் வரலே?!" என்று குரல் கர கரக்க கேட்டான் குணா. "அம்மாதான் கார்பொரேஷன் ஆபீஸ் போற வேலை இருக்குன்னு காலையிலேயே சொன்னாங்கள்ல... வந்துருவாங்க டா " என்று பல முறை சொல்லிச்சலித்த அதே பதிலைக் கூறினான் அவனின் அண்ணனான குரு. அம்மா இல்லாததால் (வீட்டுப்பாடம் எழுதாமல்) தெருவில் விளையாட அதிக நேரம் கிடைத்ததை எண்ணி சற்று அகமகிழ்வோடு காணப்பட்டான்.
மிகச் சமீபத்தில் இவ்வூருக்கு குடி பெயர்ந்திருந்த குணாவின் குடும்பம் உடல் நலக் குறைவினால் எதிர்பாரா விதமாக தந்தையை இழந்திருந்தது. பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர் பின் குணாவின் அம்மா தனக்கு விதவைகள் இட ஒதுக்கீட்டில் மதிய உணவு மேற்பார்வையாளராக அரசாங்க வேலை கிடைக்க தன் இரு மகன்களுடன் இந்த ஒண்டு குடித்தன வீட்டிற்கு குடி பெயர்ந்தாள். அப்பாவை இழந்த சோகத்திலிருந்து வெளிவரவே குணாவிற்கு ஆறு மாதங்கள் பிடித்தது. "அப்பா எப்பம்மா திரும்பி வருவாங்க?! நம்ம ஊருக்கே திரும்பி போயிரலாம்மா" என்று அடிக்கடி அழுது காய்ச்சல் தலைவலி என்று வரவழைத்துக் கொள்வான். அவன் அண்ணன் குருவோ நண்பர்கள் , உறவினர்களின் குழந்தைகள் என நல்ல "Company " கிடைக்க சில நாட்களில் தந்தையின் இழப்பை மறந்து சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டான் ஆனால் குணா அழுகும் போது அவனுக்கும் அழுகை வரும். அம்மாவோடு சேர்ந்து இருவரும் அழுது கொண்டே தூங்கிப்போவது வழக்கம்.
மின்மினி பூச்சியாய் கண் சிமிட்டிய தெரு விளக்குகள் சில நொடிகளில் பிரகாசம் கொண்டது. "டேய் குணா ...குரு... தண்ணி வந்து ரொம்ப நேரமாச்சு...நீங்க பிடிக்கலையா ?!" என்ற குரல் உள்ளிருந்து ஒலிக்க கடைசி முறையாக தெருமுனை வரை சென்று திரும்பியிருந்த குணா அழத்தொடங்கினான். " ஏண்டா அழற ...இப்ப வந்திருவாங்கடா...உள்ள போ" என்று அதட்டும் விதமாக பேசிய குரு அடுத்த நிமிடமே "பக்கத்து தெருவுல கட்சி மீட்டிங் ...இன்னும் கொஞ்ச நேரத்துல ரஜினி பாட்டு போடுவாங்க ...வர்றியா போய்ப் பாக்கலாம்" என்று சமாதானப் படுத்தும் விதமாக பேசினான். சகோதரர்கள் இருவரும் சிறிது நேரம் அங்கு சென்று வந்தனர்.
" இன்னும் அம்மா வரலேண்ணே...வந்துருவாங்கள்ல ?!" என்ற தம்பியை பார்த்த குருவிற்கும் அடி வயிற்றில் பயம் பரவத்தொடங்கியது." மணி ஏழாச்சு...இன்னும் அம்மா வரலையா ?! மூணு மணிக்கே வந்துருவாளே ?! ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா ?! என்று அக்கறையோடு விசாரித்த பக்கத்து வீட்டு பாட்டியை பார்த்த குருவிற்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
வீட்டின் கதவைச் சாத்திவிட்டு இருவரும் இரண்டு தெரு தள்ளி இருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினர். அங்கிருந்த அவர்களின் பெரியம்மா பையன் " என்னடா இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க ?! அம்மா வரல ?!" என்றதும் இருவரும் அழத்தொடங்கினர். " டேய்... டேய் உங்கம்மா கார்புரேசன் ஆபிசுக்கு போயிருப்பா டா ...மாசா மாசம் போறதுதானே " என்று சமாதானம் செய்தான் . சற்று நேரத்தில் இருவரும் மீண்டும் தெருமுனைக்கே வந்து காத்து நின்றனர். தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வரும் அம்மாவை குணாதான் முதலில் பார்த்தான். " அண்ணே ...அம்மா " என்றதும் இருவரும் அம்மாவை நோக்கி ஓட்டம் பிடித்தனர். " ராஜா " என்று இருவரையும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்ட அம்மா " பஸ்ஸே கெடைக்கலப்பா ... கார்பொரேஷன் ஆபிஸ்ல இருந்து நடந்து வந்தேனா ..நேரமாயிருச்சு " என்று கூறிக்கொண்டே கூடையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டினாள். அம்மாவைக் கண்ட மகிழ்ச்சியோடு தின்பண்டம் கிடைத்த இன்பமும் சேர்ந்து கொள்ள இரட்டிப்புத் துள்ளலுடன் ... அம்மாவிற்கு இரு புறமும் இரு சேனைக்காவலர்கள் போல வீட்டை நோக்கி வீர நடையிட்டு சென்று கொண்டிருந்தனர் குணாவும் குருவும்!!!