Saturday, May 11, 2019

பெரியம்மா

அலறிய அலாரத்தை அமைதிப்படுத்திய கதிர் அலைபேசியினுள் நுழைந்தான். வழக்கம்போல் வந்திருந்த மானாவாரியான மின்னஞ்சல்களை படுத்தவாறே ஆர்வமின்றி அலசி  முடித்தவன் குறுந்தகவல்களுக்குத் தாவினான். தம்பியிடமிருந்து வந்திருந்த தகவலைப் பார்த்த மறு  நொடி மயிர்கூச்செரிய எழுந்தமர்ந்தவனின் மனதை    இனம் புரியாத எடை அழுத்த...    ஆயிரம் மடங்கு கனத்த இதயத்துடன் கட்டிலை விட்டிறங்கினான்.

காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்தவன் புரண்டுகொண்டிருந்த மனைவி மித்ராவை "ஹே...Mommy" என்று குரல்கொடுத்தெழுப்பினான். அவள் குளியலறைப் பக்கம் செல்ல கதிர் சமயலறைக்கு வந்தான். கொதித்துக் கொண்டிருந்த தேநீரை வடிகட்டியவாறு Landline-ல் இருந்து அம்மாவை அழைத்தான். மறுமுனையில்  ராஜா என்றழைத்த அம்மா " திலோம்மா போயிட்டாப்பா" என்றாள் குரல் தழுதழுக்க. "ம்ம்ம்...தம்பி மெசேஜ் பண்ணியிருந்தான்" என்று பதிலளித்த கதிர் லேப்டாப் டேபிளிலில் அமர்ந்தவாறு  "எப்போ?! எப்பிடி?! யாரு காரியத்துக்கு போறாங்க?!" போன்ற சம்பிரதாய கேள்விகளை கேட்டவன்  தன் சோகத்தை வெளியிட விரும்பாதவனாய் இணைப்பைத் துண்டித்து விட்டு... தம்பியை அழைத்து சில நொடிகள் பேசினான்.

தொலைபேசி உரையாடல்களை கேட்டவாறு  சமையலறையில்  குழந்தைகளுக்கு லஞ்ச் பேக் செய்து கொண்டிருந்த மித்ராவிடம் " பெரியம்மா காலமாயிட்டாங்க" என்றான். "ம்ம்..தெரிஞ்சிருச்சு" என்றவளிடம் "அவங்க தங்கியிருந்த முதியோர் இல்லத்துலயே கடைசி காரியத்தை பண்ணப்போறாங்களாம்...அரக்க பரக்க போனாலும் முகத்த பாக்கமுடியாதுன்றனால தம்பி போகல...சித்தி போனா அவங்ககூட அம்மா போகலாம்னு நினைச்சுருக்காங்க ஆனா அவங்களுக்கும் உடம்புக்கு முடியாததால போகல" என்றவன் வேறெதுவும் பேசாமல் குளிக்கக் கிளம்பினான்.

சென்ற வருடம் விடுமுறைக்கு சென்ற போது குடும்பத்துடன் தனது பெரியம்மாவை பார்த்துவிட்டு வந்திருந்தான் கதிர். குடும்ப சூழல் காரணமாக திருமணம் செய்து கொள்ளாத பெரியம்மா ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவள். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவள் முதுமை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக ஒரே இடத்தில் அமர்ந்துவிட்டாள். பல்வேறு உடல் உபாதைகளால் அலைக்கழிக்கப்படவளை அவள் தங்கியிருந்த இல்லத்தில் சென்று பார்த்த மறுகணம் அவனை அறியாமலேயே கதிரின் கண்கள் குளமாகின. 

தனது ஏழாவது வயதிலேயே தந்தையை பறி கொடுத்த கதிர் சில வருடங்கள் பாட்டி வீட்டில் தங்க நேர்ந்தது. அப்போதெல்லாம் பெரியம்மாவின் வருமானத்தில் தான் குடும்பமே ஓடியது எனலாம். பின் கதிரின் அம்மாவிற்கு வேலை கிடைத்து தனியாக வந்திருந்தாலும் பெரியம்மாவின் உதவி அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருந்தது. விடுமுறை சமயங்களில் கதிர் பக்கத்துக்கு ஊரில் வேலை பார்த்துக்  கொண்டிருந்த பெரியம்மா வீட்டில் சென்று தங்கியதுண்டு. அவளை அம்மா என்றுதான் அழைப்பான்.  அமெரிக்காவில் வேலை பார்த்த கதிர்  திருமணத்திற்குப் பிறகு பெரியம்மாவை  சில மாதங்கள் தன்னோடு அழைத்து வந்திருக்கிறான். அனைத்து இடங்களையும் சுற்றிக்காட்டி அகமகிழ்ந்திருக்கிறான். 

ஆறுவருடங்களில் உருத்தெரியாமல் மாறிவிட்டிருந்த பெரியம்மாவை முதியோர் இல்லத்தில் பார்த்தவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. "ஒண்ணுமில்லப்பா...நான் நல்லா இருக்கேன்..வயசாயிருச்சுல்ல சாப்பாடு கம்மியாயிருச்சு அதான் இளச்சிட்டேன்" என்றவளின் சுருங்கிய  கைகளை தன் கைகளில் வைத்துக்கொண்டவன் " நடக்க முடியிறதில்லயா?!" என்று அருகிலிருந்த சக்கர நாற்காலியை பார்த்தவாறு கேட்டான் கதிர். அவர்கள் பேசட்டும் என்று  குழந்தைகளை வெளியில் வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த மித்ரா  உள்ளே வர குடும்பமாக பெரியம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டனர்.   இல்லத்து பணியாளர்களின் கைகைகளில் பணத்தைத் திணித்தவன் " நீங்க செய்யுற உதவிக்கு எவ்வளவு குடுத்தாலும் தகும்...எங்க அம்மாவை நல்லா பாத்துக்குங்க" என்று உளம் உருக விடைபெற்றுக்கொண்டான். 

குளித்து முடித்து அலுவலக உடையில் வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தனது  பதினோரு வயது மகளிடம் விஷயத்தைக் கூற...அவள்  "Ohh ...that is sad " என்ற சுருக்கமான  பதிலை அளித்தாள். "சே...என்ன வாழ்கை...இருக்குற வரைக்கும் கூட  வச்சு பாத்துக்க  முடியல...இறந்ததுக்கப்புறமும் போயி பாக்கமுடியல" எங்களுக்காக எங்க பெரிம்மா எவ்வளவோ பண்ணியிருக்காங்க" என்று அங்கலாய்த்தவனிடம் "அதனால தானே ஊருக்கு போகும் போது பாத்துட்டு வந்தோம்...வெளிநாட்ல  இருக்குறனால இப்பிடி Feel பண்றீங்க " என்று சொல்ல நினைத்த மித்ரா எதுவும் கூறாமல் கதிரை பார்த்துக்கொண்டு நின்றாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு புலம்பியவன் Breakfast சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டான்.

குழந்தைகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்த மித்ராவிற்கு அவளின் பெரியம்மா ஞாபகம் வந்தது. கதிரின் பெரியம்மாவிற்கு நேரெதிரான வாழ்க்கை வாழ்ந்தவள்...வாழ்ந்துகொண்டிருப்பவள். மித்ரா மட்டுமல்ல அவளின் கசின்களில் (Cousins) பாதிபேர் பெரியம்மா வீட்டில் வளர்த்தவர்களே. இருபது வருடங்களுக்கு முன் பெரியம்மா வீடு  ஜே ..ஜே என்று இருக்கும். கோபமோ சலிப்போ அன்றி  எப்போது சென்றாலும்  சாப்பிடு என்று அன்போடு உபசரிப்பாள் பெரியம்மா. மொட்டைமாடியில் விளையாடுவதற்கு இடம், செப்புப் பாத்திரம் என்று பெரியம்மா வீட்டில் சுதந்திரத்திற்கு அளவே கிடையாது. தனது குழந்தைகள் வளர்ந்து வாலிபத்தை எட்டிவிட்ட போதிலும் தனது உடன்பிறந்தோரின் குழந்தைகளால் அன்றாடம் சூழப்பட்டவளாக இருந்தவள் பெரியம்மா. மித்ரா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலும் அடிக்கடி பெரியம்மா வீட்டிற்கு செல்வதுண்டு. வயதிற்கும் காலத்திற்கும் ஏற்ற தக்க ஆலோசனைகளை  வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே. திருமணத்திற்கு பிறகும் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு சமயமும் பெரியம்மாவை பார்க்காமல் வருவதில்லை.

கதிரின் பெரியம்மா பெயர் திலோத்தமா. மித்ராவின் பெரியம்மா பெயர் மேனகா. என்ன ஒரு  ஒற்றுமை?! என்று நினைத்தவளின் முகத்தில் அவளை அறியாமலேயே புன்னகை குடிகொள்ள பெரியம்மாவிடம் பேச தொலைபேசியின்  எண்களை வேகமாக அழுத்தினாள் மித்ரா.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கதிரின் முகத்தில் சோகம் வெகுவாகக் குறைந்திருந்தது. "மித்ரா...எங்க பக்கத்து வீட்டு பொண்ணு...என் தங்கச்சின்னு சொல்லுவேனே...அவளுக்கு பெண் குழந்தை பொறந்திருக்காம்" என்று கூறியவனிடம் "Ohh ...good " என்று பதிலளித்த மித்ரா "வாழ்கை ஒரு வட்டம் என்பது சரிதானோ?! " என்று நினைத்துக்கொண்டாள்.

பின்குறிப்பு : தாயாகும் வாய்ப்பை இழந்து, உலகத்தின் பார்வையில் அன்னையாக அறியப்படாது இருந்தாலும்,     தாயுள்ளத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து  அன்பு நெஞ்சங்களுக்குச்     சமர்ப்பணம்.


Thursday, April 25, 2019

நிழலும் நிஜமும்

நான் அமெரிக்காவிற்கு வந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தது அப்போது. அவ்விரு  நாட்களும் வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்க கடைகளுக்குச்  செல்வது அது இது என்று ஓடிவிட்டது. முதல் முறையாக தனியாக வெளிநாட்டில் (வீட்டில் தான் !!!) இருக்க வேண்டும். "என்ன 
சமாளிச்சுருவல்ல?! " என் அன்புக் கணவர்  கவலையோடு கேட்டார். "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல " என்பது போல் பார்த்த என்னிடம் " நிறைய DVD இருக்கு...laptop-ல போட்டுப்   பாரு...மத்தியானம் தூங்கிடாத...ஜெட்லாக் லேசுல போகாது " என்று எச்சரித்து விட்டுச்  சென்றார். 

இந்தியாவிலிருந்து அப்போது தான் வந்திருந்ததால், பழக்க தோஷத்தில் அதிகாலையில் எழுந்து அனைத்து சமையல் வேலைகளையும்  முடித்து, Lunch-ம் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. மாலை ஐந்து மணி வரை என்ன செய்வது?! இப்போது இருப்பது போல் பதிமூன்று  வருடங்களுக்கு முன் அதி வேக Internet இல்லை...இருந்து தான் என்ன செய்ய?! No Whats app, you tube !!! வீட்டிற்கு பேசலாம் என்றால் "காலிங் கார்ட் " வாங்க வேண்டும் அதுவும் மணிக்கணக்கில் எல்லாம் பேச முடியாது. வேறு வழியில்லாமல் ஒரு DVD-யை மடிக்கணினியில் சுழல விட்டேன். ஒரு அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் பார்க்கவே முடியவில்லை. பல கதாப்பாத்திரங்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தன. விறு விறுப்பாக எதுவும் இல்லை. பாதி புரியவில்லை என்பது வேறு விஷயம். (என்னுடைய ஆங்கில ஞானம் அந்த அளவிற்கு இருந்தது. Accent அதுக்கு மேல்.)

அந்த கால கட்டத்தில் நான் பார்த்த ஆங்கிலப் படங்கள் எல்லாம் தமிழில் dub செய்யப்பட்டு K-TV மற்றும் விஜய் டிவியில் போடப்படும் (அதிரடித்திருவிழா)  படங்கள் தான் இல்லையென்றால் லோக்கல் கேபிள் டிவியில் வரும் பழைய பேய்ப் படங்கள். எனக்குத் தெரிந்த பெரும்பலான ஆங்கிலப்படங்களில் குறைந்த கதாபாத்திரங்களே வரும். பாஷை புரியலைன்னாலும் படம் புரியும் அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும் எல்லாரும் ஓடிக்கிட்டே இருப்பாங்க...ஒன்னு பேய் துரத்தும் இல்லன்னா டைனோசர், பாம்பு, shark-ன்னு மிருகங்கள் துரத்தும் அதுவும் இல்லையா Time Bomb- யை பையில வச்சுக்கிட்டு நின்னா வெடிச்சுரும்னு ஓடுவாங்க இதுக்கெல்லாம் மேல உலகம் அழியப் போகுதுன்னு ஓடுவாங்க...மற்றொரு வகை நம்பவே முடியாத மாய மந்திரப்படங்கள் மற்றும் Animation Movies. இதுக்கு வடிவேலு வசனம் பேசும் ஜாக்கி ஜான் படங்களே பரவாயில்லை என்று தோன்றும்.

"ஹாலிவுட் படம்னு சொல்றாங்க...ஒரே ட்ரெஸ்ஸ தான் படம்பூரா போட்டுட்டு சுத்துறாங்க"..."உலகமே அழிஞ்சதுக்கப்புறம் இவன் மட்டும் பொழச்சு என்ன செய்யப்போறான்?!..." அதான் கண்ணை தொறந்து பார்த்தா பேய் தெரியுதுல்ல?! இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது தானே?!" என்றெல்லாம் எகத்தாளமாய் கலாய்த்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று என்னையே நொந்து கொண்டு கணிணினியை ஆஃப் செய்து விட்டேன்.

யாரோ என்னை பிடித்து உலுக்குவது போல கனவு. கண் திறந்ததும் தான் தெரிந்தது கனவில்லை...நிஜம் என்று. "என்னா நல்லா தூங்கிட்டியா?!" என்று எதிரில் நின்றிருந்தார் என்னை மணமுடித்த மணாளன். நடு ராத்திரியில் முழித்துக்கொண்டது போல கண் எரிந்தது. ஜெட்லாக் effect நன்கு புரிந்தது. "இதுக்குதான் படம் பாருன்னு சொன்னேன்" என்றவரிடம் "அதை பாத்தனாலதான் இப்பிடி" என்று சொல்ல என் History  தெரியதனால் அவருக்கு நான் சொல்வது புரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் எனக்குப்  பல வகையான (Genre) ஆங்கிலப் படங்களை அறிமுகப்படுத்தினார் என்னைக்  கைப்பிடித்த  கணவர். வெளியே செல்ல  கார் இல்லை என்பதாலும் வீட்டில் கேபிள் வாங்கி விட்டதாலும்    சினிமா பார்ப்பதே முழு நேர வேலையாக மாறிவிட்டது. Local Library-ல் கிடைக்கும் DVD-களையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை.   "Closed Caption " என்று ஒரு "Option " இருப்பது பெரும் வசதியாக இருந்தது எனக்கு. சிறிது நாட்களிலேயே ஆங்கிலப் படங்களைப் பற்றிய எனது அபிப்பிராயம் தலைகீழாக மாறியது. "எமோஷனல், ட்ராமா, செண்டிமெண்ட், காமெடி  " என்று நம் தாய் மொழியில் இருக்கும் அனைத்தும் ஆங்கிலப்படங்களில் இருந்தது இதைத்தவிர "Terminal ", "Cast Away ", "The Beautiful Mind ", "Matrix " போன்ற வித்தியாசமான திரைப்படங்கள் என்னை வியக்க வைத்தன.

மேலும்  வரலாற்றுப் படங்கள்  நான் வாழ வந்திருக்கும் அந்நிய நாட்டின் வரலாற்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்து உதவின. புகழ் பெற்ற நபர்களின் வாழ்க்கையைக் காட்டும் Biographical  படங்களும் தரமிக்கவையாக இருந்தன. பொதுவாக நடிகர்கள்  அளவோடும்   எதார்த்தமாகவும்  நடிப்பதாகத் தோன்றியது அதற்குக்  காரணம் இந்தியரல்லாதவர் நடிப்பதாலும் நம் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடாமல் திரைப்படமாக மட்டுமே அதை நான் பார்த்ததாலும் இருக்கலாம். 

 "Rom.Com" என்று சொல்லக்கூடிய நகைச்சுவைக் கலந்த காதல் படங்கள் எனது "Favorite " ஆக மாறியது. Caption இல்லாமலேயே படங்கள் புரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த வருடங்களில் மகள், மகன் என்று குழந்தைகளின் வரவால் திரைப்படங்களைப் பார்ப்பது குறைந்திருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நாங்களிருவரும் தவறவிட்டதில்லை.

என் கணவர் முன்பிருந்தே சூப்பர் ஹீரோப் படங்களைப் விரும்பிப்  பார்ப்பவர் தான் என்றாலும் "Star Wars", "Harry Potter", "Avengers " "X -Men" போன்ற Franchise படங்களின் வலையில் நான் சிக்கிக் கொண்டதோ    சமீபத்தில் தான். எத்தனை முறை  பார்த்தாலும் நினைவில் நிற்காத திரைக்கதையும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களும்   நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். இம்மாதிரியான திரைப்படங்களின் கதையை ஒற்றை வரியில் கூறிவிடலாமென்றாலும்  " Scene by Scene" சுவாரஸ்யங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பின்றி ரசிக்கலாம். குழந்தைகளோடு அமர்ந்து பார்க்க உகந்ததாக  இருப்பதால் Netflix துணையோடு   இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இப்படங்கள் தான் அதிகமாக ஓடுகின்றன.

தகவல் தொடர்புத் துறையின் அசூர வளர்ச்சியால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிட்ட நிலையில் இன்று வெளிநாடுகளுக்கு வரும் இளம் மனைவியர் பலர் எவ்வித வேறுபாடும், இன்னல்களும்  இன்றி வாழ்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் "மெகா சீரியல் "  மற்றும் "ரியாலிட்டி ஷோக்கள்"-ல் மூழ்கிக்  கொண்டிருப்பதைப் பார்க்க ஏமாற்றமாகவே இருக்கிறது. ஆங்கிலப் படங்களையும் Sitcom-களையும்  பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி அவர்களில் மொழி, வாழ்க்கைமுறை, கலாசாரங்களை அறிந்து கொள்ளும் ஊடகமாகவும் (Medium) பார்க்கலாமே !!! 

பின் குறிப்பு : Avengers - End Game ஏப்ரல் 26, 2019-ம் நாள் உலகெங்கும் திரையிடப்படுகிறது. 

Thursday, February 14, 2019

காதலுடன்...

அன்று முதல் முறையாக நந்தினியை பெண்பார்க்க வந்திருந்தனர். மாப்பிள்ளை கதிர் சிரித்த முகத்துடன்  சரளமாகப்  பேசினார். நந்தினியும் கேட்கப்படும் கேள்விகளுக்கு எதார்த்தமான பதிலைக் கூறிக்கொண்டும் மாற்று கேள்விகளை உறவினர்கள் கேட்க... அதை கவனித்துக்கொண்டும் இருந்தாள். அவ்வப்போது இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று தொட்டுச் சென்றன.

"என்ன பையனை பிடிச்சிருக்கா?!" என்ற கேள்வி மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிய சில மணித்துளிகளில் நந்தினியிடம் கேட்கப்பட..."ம்ம்ம்...முதல்ல அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்" என்று பொத்தாம் பொதுவாய் கூறி வைத்தாள்  நந்தினி. " மாப்பிளை நல்லா பேசினாரு...நம்ம நந்தினியை அவருக்கு  கட்டாயமா பிடிச்சிருக்கும்" என்று உறவினர்கள் நந்தினியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாளே நந்தினியின் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. "மாப்பிளை வீட்ல இருந்து ஓகேன்னு சொல்லிட்டாங்க...உனக்கு போன் பண்ணி மாப்பிளை பேசுவார்னு சொன்னாங்க...பாத்து பேசும்மா" என்று நந்தினியின் அப்பா தன் படபடப்பை மறைத்துக் கொண்டு தகவல் தெரிவித்தார். அடுத்த ஒருமணி நேரத்தில் கதிர் நந்தினியை போனில் அழைத்தான். "ம்...சொல்லுங்க" என்று யாரோ ஒருவரிடம் பேசுவதுபோல் பேசிய நந்தினியிடம் "என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே?!" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கதிர் கேட்க " இல்லன்னா இந்நேரம் உங்க கூட பேசிட்டிருப்பேனா?!" என்று கேசுவலாக இருப்பது போல் பேசி தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டாள் நந்தினி.

 "உன்கிட்ட செல் போன் இல்லையா?!" என்று கேட்ட கதிருக்கு  "நீங்க வாங்கி குடுத்தாதான் உண்டு " என்ற பதில் வந்தது . இரண்டொருநாளில் புது நம்பருடன் செல் போன் கொடுக்கும் சாக்கில் தன் நண்பருடன்  வீட்டிற்கு வந்த கதிர் சிரிப்பை அடக்க பெரு முயற்சி செய்தான். தன் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாத நந்தினி  "செல் போன் குடுக்கதான வந்திங்க...குடுங்க என்று வாங்கிக்கொண்டு உள்ளே சென்று மறைந்தாள்.

அடுத்த ஒரு வாரத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டது. இரண்டே சந்திப்பிற்கு பின்  கதிரும் அலுவல் விஷயமாக அமெரிக்காவிற்கு செல்ல நேர்ந்தது. "டெய்லி போன் பண்ணுவேன்" என்று கூறிச் சென்ற கதிரிடமிருந்து தினமும் தவறாமல் அழைப்பு வந்தது. அவனுக்கு காலை இவளுக்கு இரவு என்று "Time Zone " வேறு சோதித்தது... இருந்தும் கதிர் பேசத்தவறவில்லை. நந்தினி பட்டும் படாமலும் ...தொட்டும் தொடாமலும்...இதுதான் நான் என்னும் பாணியிலேயே பேசி வந்தாள். "ஏன் இப்பிடி பேசுற?!" என்ற கேட்ட கதிரிடம் "நாம எப்பிடி இருப்போமோ அதுமாதிரியே மொத இருந்து இருந்துறணும்...கல்யாணத்துக்கப்புறம் நீங்க ஏமாறக்கூடாதுல்ல" என்று பதிலளித்தாள். கதிர் எதையும் சீரியசாக என்னும் மனநிலையில் அப்போது இல்லை. பேசும் பாதிநேரம் சிரித்தே அவளை சமாளிதான்.

இவ்வாறாக இருவரின்  பொழுதுகளும்  நகர்ந்தன. தோழியிடம் பேசுவது போல் நந்தினி கதிரிடம் பேச... காதலியிடம் பேசுவதைப் போல் பேச முயன்று கொண்டிருந்தான் கதிர். அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் மனஸ்தாபங்களும் எட்டிப் பார்த்துச்  சென்றன. யார் முதலில் பேசுவது/சமாதானப்படுத்துவது?! என்ற கேள்விக்கே இடமில்லை. கதிர் அமெரிக்காவில் இருந்ததால் அவன்தான் அழைத்ததாக வேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆதலால் ஈகோ பிரச்சனை தலைதூக்காமல் இருந்தது. இருவரின் நிறைகுறைகளை ஓரளவிற்கு  அறிந்து கொண்டனர்.

ஆறு மாதங்கள் கடந்தோடியது. திருமணத்திற்கு நான்கே நாட்கள் இருக்கும் பட்சத்தில் இந்தியா வந்து சேர்ந்தான் கதிர். திருமண வேலைகள், உறவினர்கள், நண்பர்கள் , ஜெட்லேக், கைப்பேசி இன்மை  போன்ற  சூழலில் சிக்கித் சிதறுண்டான். வழக்கம் போல் நந்தினியிடம் பேச நேரம் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்த நந்தினி...கதிருக்கு போன் செய்தாள். "என்ன பேசவே மாட்ரீங்க?! நேத்து  எவ்வளவு நேரம்  வெயிட் பண்ணிட்டிருந்தேன் தெரியுமா?!" என்று கோபத்தோடு கேட்க அடுத்த முனையில் கதிரின் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவனை அறியாமலேயே முகம் சிரிப்பில் மூழ்கியது.தன் மேல் இருக்கும்  காதலை முதல் முறையாக  நந்தினி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஊடல் மூலமாக என்று துள்ளிக்குதித்தான்  "நான் திட்றேன்...நீங்க சிரிக்குறீங்களா?! என்ற நந்தினியிடம் " அப்பிடியில்ல நந்தினி..." என்று சமாதான பேச்சு வார்தையைத் தொடங்கினான் கதிர். வசதியாக நாற்காலியில் அமர்ந்து Landline போனை எடுத்து மடியில் வைத்துக்கொண்டே...

 எந்த பெண்ணும் தன்னுடைய பொறுப்பு, பொறுமை, வயது அனைத்தையும் மறந்து தன் காதலரிடமும் கணவரிடமும்  அடம் பிடிக்கும் குழந்தையா கவே  மாற விரும்புவாள்... காதலுடன் ...எத்துனை வருடங்கள் கடந்தாலும்....

பதிமூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகும் கதிர் நந்தினியின் உரையாடல்களில் இருக்கும் காதல் எள்ளளவும் குறையவில்லை. கதிர் இன்றும் சிரிப்பை அடக்க முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான்!!!


Friday, January 18, 2019

கோலங்கள்...கோலங்கள்...

வாசலில் பேராசிரியர் வரும் அரவம்  கேட்டதும் அதுவரை  வகுப்பறையை நிறைத்திருந்த பேச்சொலி காற்றில் கரைந்தது. சிலர் பாட   புத்தங்களை விரிப்பதும், சிலர் விரித்திருந்த நோட்டு புத்தங்கங்களை பெஞ்சுக்கடியில் வைத்து  அமுக்குவதும், பேனா பென்சில் இத்யாதிகள் கீழே சிதறி  உருளுவதும் என   சூழலில்  பரபரப்பு தொற்றிக்கொண்டது. அனைவரின் கண்களும் நிலையின்றி  அலைபாய்ந்து கொண்டிருக்க... சிலர் குசு குசுவென்று பேசுவது சுவர்களில் பட்டு எதிரொலித்து பேரோசை எழுப்பியது .

"Good Morning Mam " என ஒரு சேர எழுந்த கோஷத்தை தன் சிறு கை அசைவால் சாந்தப்படுத்திய ஆசிரியை  ஏதோ முக்கியமான அலுவலில் இருந்து பாதியில் எழுந்து வந்தவர் போல தென்பட்டார். கையில் பல கோப்புக்கள் இருந்தன. தான் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததை மறைக்கும் விதமாக "என்ன எல்லாரும் படிச்சுட்டு வந்திருக்கீங்களா?!" என்று அனைவரையும் பார்த்து கேட்டவர்  "இன்னைக்கு டெஸ்ட் சொல்லியிருந்தேனா?!" என முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த நிதிலா மற்றும் அவளின் தோழிகளை வினவினாள். "No Mam " என்ற பதிலில் திருப்தி அடையாதவராக "எப்ப டெஸ்ட் வச்சாலும் ரெடியா இருக்கனும் " என்று குரலை கடுமையாக்கிக் கொண்டவர்  "நேத்து எடுத்த டாபிக்கை படிங்க" என்று கட்டளையிட்டு விட்டு தனது கோப்புக்களைத்  திறந்து  எழுதத் துவங்கினாள்.

அனைவரின் உடலில் இருந்த இறுக்கம் தளர்ந்து விழிகளில் நிம்மதி பரவியது. சிலர் படிக்க, சிலர் நடிக்க என அடுத்து வந்த 20 நிமிடங்கள் நகர்ந்தது. தனக்கு பின்னால் இருந்த தோழியை நோக்கி "எனக்கு குடுக்குதியா?! " என்று முணுமுணுத்த கிறிஸ்டியின் தொடையை அமுக்கிய நிதிலா அமைதி என கண்களாலே சைகை செய்தாள். பாடவேளை முடிந்ததை அறிவிக்கும் விதமாக மணி ஒலித்தது. "லீவு முடிஞ்சு வரும் போது டெஸ்ட் உண்டு " என்று அறிவித்து விட்டு  அவர்களின் நன்றியைக்  காதில் வாங்காதவராகக்  கிளம்பினார் பேராசிரியை.

அடுத்த நிமிடமே தொடங்கிய  சலசலப்பு வழக்கத்தை விட  சற்று  அதிகமாகவே  இருந்தது அதற்குக் காரணம் வரும் வாரத்தில் கிடைக்கவிருக்கும் தொடர் விடுப்பு. நோட்டுப்புத்தகங்களும் பேப்பர்களும் அங்கும் இங்குமாக இடம் பெயர்ந்தன. கலர் பென்சில்களும் , Crayons-களும் கை மாறின. விடுதி வாசியான கிறிஸ்டியிடம் "அவங்க பொங்கலுக்கு போடறதுக்கு கோலம் வரையுறாங்க...நீயும் ஏண்டி ?!" என்ற நிதிலாவிடம் "எங்க சந்துல எல்லாரும் போடுவோம்ல?! என்று கிண்டலாக  பதிலுரைத்தாள் கிறிஸ்டி.

எல்லோரும் ஏதோ விண்வெளிக்கு செல்ல ஆயத்தம் ஆவதைப் போல் பதற்றமும் சந்தோஷமும் கலந்த முகத்துடன்.."சூப்பரா இருக்குல்ல?! இந்த கலர் கோலமாவு கிடைக்குமா?! என்ற வினாக்களோடு  கோலங்களை "Copy " செய்து கொண்டிருந்தனர் வண்ணங்களோடு. அடுத்து வந்த வகுப்புகளில் கோலத்தினால் உள்ளிழுக்கப்பட்ட சிலர் வகுப்பில்   கவனம் செலுத்தாமல்    கோல நோட்டோடு அகப்பட்டுக் கொண்டனர் ஆனால் ஆசிரியைகளோ  கல்லாரி விழாக்களில் இவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்  என்பதைப் போல வசை மழை பொழியாமல் விட்டு விட்டனர்.

அன்று மாலை வழக்கம் போல  தன் தங்கையிடம் நிதிலா கல்லூரியில் நடந்த கூத்துக்களையும் களேபரங்களையும் விவரித்துக் கொண்டிருக்க... அவர்களின் கடைசித் தம்பி "நம்மளும் பெரிய கோலம் போட்டு கலர் பொடி போடுவோம்" என்று குதூகலித்தவனிடம் "போடா...அதெல்லாம் சரிப்பட்டு வராது " என்று அடக்கிவிட்டனர்.

நிதிலாவின் வீடு இருப்பது புறநகர் பகுதியில். வாசலில் பெரிய இடம் இருந்தாலும் பெரிய கோலம் எல்லாம் போடுவதில்லை அதற்குக் காரணம் வீட்டிற்கு எதிரே இருந்த பேருந்து நிறுத்தம். இவர்களின் வாசலில் நிழல் இருப்பதால் பெரும்பாலோனோர் அங்கு வந்து நிற்பது வாடிக்கை ஆகிவிட்டது. கொஞ்சம் பெரிய கோலம் போட்டாலும் நொடிப்பொழுதில் அழிந்து விடும். அதிக நேரம் அங்கு செலவிடுவதையும் அவர்களின் பெற்றோர்கள்   அனுமதிப்பதில்லை. விடியும் முன் போட்டு விடலாம் என்றால் கொசுத்தொல்லை வேறு அதனால் இதிலெல்லாம் நிதிலாவிற்கு ஆசை இருந்தும்  ஆர்வம் அற்றுப் போனது.   

மறுநாள் கல்லாரியில் நண்பர்களின் உதவியுடன் நிதிலாவும் ஒரு கோலத்தை "Copy " செய்து முடிக்கவும் கிறிஷ்டி முறைக்கவும் சரியாக இருந்தது. அவளிடம் தம்பிக்காக என்று சாக்கு சொல்லி தன்னை கோலத்தின் பிடியில் சிக்காதவளாகக் காட்டிக் கொண்டாள். அன்று மாலை  கோலத்தைப்  பார்த்த அவள் தம்பி உற்சாகமடைந்தான். "கலர் காம்பினேஷன் எல்லாம் நான் பாத்துக்கிறேன்" என்று பொறுப்பேற்று தானே  பக்கத்துக்  கடையில் சென்று வாங்கி வருவதாக வாக்களித்தான். 

பொங்கல் திருநாளும்  வந்தது. நிதிலா கோலம் போட  அவள் தங்கையும் தம்பியும் கலர் பொடி தூவ... கோலம் போடும் வேலை "தரமான சம்பவமாக " நடந்தேறியது. இதென்ன அதிசயம்?! என்பது போல் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவர்கள் பார்த்தனர். சிலர் மிதிக்காமல் ஓரத்தில் நின்றனர். சித்தப்பா அவ்வப்போது வந்து அவர்களை நோட்டம் விட்டுச் சென்றார். "போட்டாச்சுடா" என்று சகோதரிகள் உள்ளே சென்று விட சில மணி நேரம் கோலத்திடமே நின்று அதைப் பாதுகாத்தான் தம்பி. அன்று இரவு "அடுத்து தீவாளிக்கு இதை விட பெரிய கோலம் போடணும்...டவுன்ல இருந்து கலர் பொடி வாங்கனும் " என்று கூறியவனிடம்  "சரிடா பாத்துக்கலாம் " என்று அவனின் கோலக் கனவிற்கு  முற்றுப்புள்ளி வைத்தாள் நிதிலா 

நகர மயமாக்கலில்  நாம் மறந்து விட்ட... இழந்து விட்ட  அனுபவங்கள் பல அவற்றில்   ஒன்று  "வாசல் தெளித்து கோலம் போடுவது". அதிகாலையில் தூய காற்றை சுவாசித்து  குனிந்து நிமிர்ந்து இதை விட வேறு என்ன உடற்பயிற்சி   இருக்க முடியும்...மனதிற்கும் உடலுக்கும்?!  நம் முன்னோர்கள் குனிந்து கொண்டே கோலம் போட்டனர்...நாமோ  குதிங்காலில் அமர்ந்து  கோலம் போட்டோம் ஆனால் இன்றைய தலைமுறையினராலோ  அவ்வாறு அமரக்கூட முடியவில்லை. வாய்ப்பும் இல்லை.

இன்றும் சில இடங்களில் இப்பழக்கம் தொடர்ந்தாலும் பல குழந்தைகள் காணொளியில் மூலமே கோலத்தை அறிகிறார்களே அன்றி அனுபவிப்பதில்லை. வெளிநாட்டில் வசிப்பவர்களோ தங்கள் செல்லும் ஒரு மாதத்தில் தங்கள் குழந்தைகள் அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆவலில் "இதைப் பண்ணு ...அதைப் பண்ணு என்று  தங்கள் குழந்தைகளை  "Over Load " செய்து "Tired " ஆக்கி விடுகிறார்கள்.   

வாழ்கைக்குத் தேவையான முக்கியப் பாடங்களான பொறுமை, நிதானம்  மற்றும் திட்டமிடலை கோலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அவ்வாறு திட்டமிட்டு போடப்படும் கோலத்தில்  ஏதேனும் தவறு நேர்ந்தால் சோர்ந்து விடவோ, முழுவதையும் அழித்து விடவோ தேவையில்லை. சிறு சிறு மாற்றங்களினால் புதுக் கோலத்தை உருவாக்கி விடலாம் கூடுதல் அழகுடன்!!! உங்கள் கோலம் உங்கள் கையில். அது நேர்க்கோலமா ?! வளைவுக்கோலமா?! வண்ணங்களுடனா?!  என்பதை நீங்களே   தெரிவு செய்து கொள்ளலாம் ...வாழ்க்கையையும் தான் !!!