வாசலில் பேராசிரியர் வரும் அரவம் கேட்டதும் அதுவரை வகுப்பறையை நிறைத்திருந்த பேச்சொலி காற்றில் கரைந்தது. சிலர் பாட புத்தங்களை விரிப்பதும், சிலர் விரித்திருந்த நோட்டு புத்தங்கங்களை பெஞ்சுக்கடியில் வைத்து அமுக்குவதும், பேனா பென்சில் இத்யாதிகள் கீழே சிதறி உருளுவதும் என சூழலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அனைவரின் கண்களும் நிலையின்றி அலைபாய்ந்து கொண்டிருக்க... சிலர் குசு குசுவென்று பேசுவது சுவர்களில் பட்டு எதிரொலித்து பேரோசை எழுப்பியது .
"Good Morning Mam " என ஒரு சேர எழுந்த கோஷத்தை தன் சிறு கை அசைவால் சாந்தப்படுத்திய ஆசிரியை ஏதோ முக்கியமான அலுவலில் இருந்து பாதியில் எழுந்து வந்தவர் போல தென்பட்டார். கையில் பல கோப்புக்கள் இருந்தன. தான் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததை மறைக்கும் விதமாக "என்ன எல்லாரும் படிச்சுட்டு வந்திருக்கீங்களா?!" என்று அனைவரையும் பார்த்து கேட்டவர் "இன்னைக்கு டெஸ்ட் சொல்லியிருந்தேனா?!" என முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த நிதிலா மற்றும் அவளின் தோழிகளை வினவினாள். "No Mam " என்ற பதிலில் திருப்தி அடையாதவராக "எப்ப டெஸ்ட் வச்சாலும் ரெடியா இருக்கனும் " என்று குரலை கடுமையாக்கிக் கொண்டவர் "நேத்து எடுத்த டாபிக்கை படிங்க" என்று கட்டளையிட்டு விட்டு தனது கோப்புக்களைத் திறந்து எழுதத் துவங்கினாள்.
அனைவரின் உடலில் இருந்த இறுக்கம் தளர்ந்து விழிகளில் நிம்மதி பரவியது. சிலர் படிக்க, சிலர் நடிக்க என அடுத்து வந்த 20 நிமிடங்கள் நகர்ந்தது. தனக்கு பின்னால் இருந்த தோழியை நோக்கி "எனக்கு குடுக்குதியா?! " என்று முணுமுணுத்த கிறிஸ்டியின் தொடையை அமுக்கிய நிதிலா அமைதி என கண்களாலே சைகை செய்தாள். பாடவேளை முடிந்ததை அறிவிக்கும் விதமாக மணி ஒலித்தது. "லீவு முடிஞ்சு வரும் போது டெஸ்ட் உண்டு " என்று அறிவித்து விட்டு அவர்களின் நன்றியைக் காதில் வாங்காதவராகக் கிளம்பினார் பேராசிரியை.
அடுத்த நிமிடமே தொடங்கிய சலசலப்பு வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது அதற்குக் காரணம் வரும் வாரத்தில் கிடைக்கவிருக்கும் தொடர் விடுப்பு. நோட்டுப்புத்தகங்களும் பேப்பர்களும் அங்கும் இங்குமாக இடம் பெயர்ந்தன. கலர் பென்சில்களும் , Crayons-களும் கை மாறின. விடுதி வாசியான கிறிஸ்டியிடம் "அவங்க பொங்கலுக்கு போடறதுக்கு கோலம் வரையுறாங்க...நீயும் ஏண்டி ?!" என்ற நிதிலாவிடம் "எங்க சந்துல எல்லாரும் போடுவோம்ல?! என்று கிண்டலாக பதிலுரைத்தாள் கிறிஸ்டி.
எல்லோரும் ஏதோ விண்வெளிக்கு செல்ல ஆயத்தம் ஆவதைப் போல் பதற்றமும் சந்தோஷமும் கலந்த முகத்துடன்.."சூப்பரா இருக்குல்ல?! இந்த கலர் கோலமாவு கிடைக்குமா?! என்ற வினாக்களோடு கோலங்களை "Copy " செய்து கொண்டிருந்தனர் வண்ணங்களோடு. அடுத்து வந்த வகுப்புகளில் கோலத்தினால் உள்ளிழுக்கப்பட்ட சிலர் வகுப்பில் கவனம் செலுத்தாமல் கோல நோட்டோடு அகப்பட்டுக் கொண்டனர் ஆனால் ஆசிரியைகளோ கல்லாரி விழாக்களில் இவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் போல வசை மழை பொழியாமல் விட்டு விட்டனர்.
அன்று மாலை வழக்கம் போல தன் தங்கையிடம் நிதிலா கல்லூரியில் நடந்த கூத்துக்களையும் களேபரங்களையும் விவரித்துக் கொண்டிருக்க... அவர்களின் கடைசித் தம்பி "நம்மளும் பெரிய கோலம் போட்டு கலர் பொடி போடுவோம்" என்று குதூகலித்தவனிடம் "போடா...அதெல்லாம் சரிப்பட்டு வராது " என்று அடக்கிவிட்டனர்.
நிதிலாவின் வீடு இருப்பது புறநகர் பகுதியில். வாசலில் பெரிய இடம் இருந்தாலும் பெரிய கோலம் எல்லாம் போடுவதில்லை அதற்குக் காரணம் வீட்டிற்கு எதிரே இருந்த பேருந்து நிறுத்தம். இவர்களின் வாசலில் நிழல் இருப்பதால் பெரும்பாலோனோர் அங்கு வந்து நிற்பது வாடிக்கை ஆகிவிட்டது. கொஞ்சம் பெரிய கோலம் போட்டாலும் நொடிப்பொழுதில் அழிந்து விடும். அதிக நேரம் அங்கு செலவிடுவதையும் அவர்களின் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. விடியும் முன் போட்டு விடலாம் என்றால் கொசுத்தொல்லை வேறு அதனால் இதிலெல்லாம் நிதிலாவிற்கு ஆசை இருந்தும் ஆர்வம் அற்றுப் போனது.
மறுநாள் கல்லாரியில் நண்பர்களின் உதவியுடன் நிதிலாவும் ஒரு கோலத்தை "Copy " செய்து முடிக்கவும் கிறிஷ்டி முறைக்கவும் சரியாக இருந்தது. அவளிடம் தம்பிக்காக என்று சாக்கு சொல்லி தன்னை கோலத்தின் பிடியில் சிக்காதவளாகக் காட்டிக் கொண்டாள். அன்று மாலை கோலத்தைப் பார்த்த அவள் தம்பி உற்சாகமடைந்தான். "கலர் காம்பினேஷன் எல்லாம் நான் பாத்துக்கிறேன்" என்று பொறுப்பேற்று தானே பக்கத்துக் கடையில் சென்று வாங்கி வருவதாக வாக்களித்தான்.
பொங்கல் திருநாளும் வந்தது. நிதிலா கோலம் போட அவள் தங்கையும் தம்பியும் கலர் பொடி தூவ... கோலம் போடும் வேலை "தரமான சம்பவமாக " நடந்தேறியது. இதென்ன அதிசயம்?! என்பது போல் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவர்கள் பார்த்தனர். சிலர் மிதிக்காமல் ஓரத்தில் நின்றனர். சித்தப்பா அவ்வப்போது வந்து அவர்களை நோட்டம் விட்டுச் சென்றார். "போட்டாச்சுடா" என்று சகோதரிகள் உள்ளே சென்று விட சில மணி நேரம் கோலத்திடமே நின்று அதைப் பாதுகாத்தான் தம்பி. அன்று இரவு "அடுத்து தீவாளிக்கு இதை விட பெரிய கோலம் போடணும்...டவுன்ல இருந்து கலர் பொடி வாங்கனும் " என்று கூறியவனிடம் "சரிடா பாத்துக்கலாம் " என்று அவனின் கோலக் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் நிதிலா
நகர மயமாக்கலில் நாம் மறந்து விட்ட... இழந்து விட்ட அனுபவங்கள் பல அவற்றில் ஒன்று "வாசல் தெளித்து கோலம் போடுவது". அதிகாலையில் தூய காற்றை சுவாசித்து குனிந்து நிமிர்ந்து இதை விட வேறு என்ன உடற்பயிற்சி இருக்க முடியும்...மனதிற்கும் உடலுக்கும்?! நம் முன்னோர்கள் குனிந்து கொண்டே கோலம் போட்டனர்...நாமோ குதிங்காலில் அமர்ந்து கோலம் போட்டோம் ஆனால் இன்றைய தலைமுறையினராலோ அவ்வாறு அமரக்கூட முடியவில்லை. வாய்ப்பும் இல்லை.
இன்றும் சில இடங்களில் இப்பழக்கம் தொடர்ந்தாலும் பல குழந்தைகள் காணொளியில் மூலமே கோலத்தை அறிகிறார்களே அன்றி அனுபவிப்பதில்லை. வெளிநாட்டில் வசிப்பவர்களோ தங்கள் செல்லும் ஒரு மாதத்தில் தங்கள் குழந்தைகள் அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆவலில் "இதைப் பண்ணு ...அதைப் பண்ணு என்று தங்கள் குழந்தைகளை "Over Load " செய்து "Tired " ஆக்கி விடுகிறார்கள்.
வாழ்கைக்குத் தேவையான முக்கியப் பாடங்களான பொறுமை, நிதானம் மற்றும் திட்டமிடலை கோலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அவ்வாறு திட்டமிட்டு போடப்படும் கோலத்தில் ஏதேனும் தவறு நேர்ந்தால் சோர்ந்து விடவோ, முழுவதையும் அழித்து விடவோ தேவையில்லை. சிறு சிறு மாற்றங்களினால் புதுக் கோலத்தை உருவாக்கி விடலாம் கூடுதல் அழகுடன்!!! உங்கள் கோலம் உங்கள் கையில். அது நேர்க்கோலமா ?! வளைவுக்கோலமா?! வண்ணங்களுடனா?! என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம் ...வாழ்க்கையையும் தான் !!!