Thursday, February 14, 2019

காதலுடன்...

அன்று முதல் முறையாக நந்தினியை பெண்பார்க்க வந்திருந்தனர். மாப்பிள்ளை கதிர் சிரித்த முகத்துடன்  சரளமாகப்  பேசினார். நந்தினியும் கேட்கப்படும் கேள்விகளுக்கு எதார்த்தமான பதிலைக் கூறிக்கொண்டும் மாற்று கேள்விகளை உறவினர்கள் கேட்க... அதை கவனித்துக்கொண்டும் இருந்தாள். அவ்வப்போது இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று தொட்டுச் சென்றன.

"என்ன பையனை பிடிச்சிருக்கா?!" என்ற கேள்வி மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிய சில மணித்துளிகளில் நந்தினியிடம் கேட்கப்பட..."ம்ம்ம்...முதல்ல அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்" என்று பொத்தாம் பொதுவாய் கூறி வைத்தாள்  நந்தினி. " மாப்பிளை நல்லா பேசினாரு...நம்ம நந்தினியை அவருக்கு  கட்டாயமா பிடிச்சிருக்கும்" என்று உறவினர்கள் நந்தினியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாளே நந்தினியின் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. "மாப்பிளை வீட்ல இருந்து ஓகேன்னு சொல்லிட்டாங்க...உனக்கு போன் பண்ணி மாப்பிளை பேசுவார்னு சொன்னாங்க...பாத்து பேசும்மா" என்று நந்தினியின் அப்பா தன் படபடப்பை மறைத்துக் கொண்டு தகவல் தெரிவித்தார். அடுத்த ஒருமணி நேரத்தில் கதிர் நந்தினியை போனில் அழைத்தான். "ம்...சொல்லுங்க" என்று யாரோ ஒருவரிடம் பேசுவதுபோல் பேசிய நந்தினியிடம் "என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே?!" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கதிர் கேட்க " இல்லன்னா இந்நேரம் உங்க கூட பேசிட்டிருப்பேனா?!" என்று கேசுவலாக இருப்பது போல் பேசி தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டாள் நந்தினி.

 "உன்கிட்ட செல் போன் இல்லையா?!" என்று கேட்ட கதிருக்கு  "நீங்க வாங்கி குடுத்தாதான் உண்டு " என்ற பதில் வந்தது . இரண்டொருநாளில் புது நம்பருடன் செல் போன் கொடுக்கும் சாக்கில் தன் நண்பருடன்  வீட்டிற்கு வந்த கதிர் சிரிப்பை அடக்க பெரு முயற்சி செய்தான். தன் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாத நந்தினி  "செல் போன் குடுக்கதான வந்திங்க...குடுங்க என்று வாங்கிக்கொண்டு உள்ளே சென்று மறைந்தாள்.

அடுத்த ஒரு வாரத்தில் திருமண தேதி குறிக்கப்பட்டது. இரண்டே சந்திப்பிற்கு பின்  கதிரும் அலுவல் விஷயமாக அமெரிக்காவிற்கு செல்ல நேர்ந்தது. "டெய்லி போன் பண்ணுவேன்" என்று கூறிச் சென்ற கதிரிடமிருந்து தினமும் தவறாமல் அழைப்பு வந்தது. அவனுக்கு காலை இவளுக்கு இரவு என்று "Time Zone " வேறு சோதித்தது... இருந்தும் கதிர் பேசத்தவறவில்லை. நந்தினி பட்டும் படாமலும் ...தொட்டும் தொடாமலும்...இதுதான் நான் என்னும் பாணியிலேயே பேசி வந்தாள். "ஏன் இப்பிடி பேசுற?!" என்ற கேட்ட கதிரிடம் "நாம எப்பிடி இருப்போமோ அதுமாதிரியே மொத இருந்து இருந்துறணும்...கல்யாணத்துக்கப்புறம் நீங்க ஏமாறக்கூடாதுல்ல" என்று பதிலளித்தாள். கதிர் எதையும் சீரியசாக என்னும் மனநிலையில் அப்போது இல்லை. பேசும் பாதிநேரம் சிரித்தே அவளை சமாளிதான்.

இவ்வாறாக இருவரின்  பொழுதுகளும்  நகர்ந்தன. தோழியிடம் பேசுவது போல் நந்தினி கதிரிடம் பேச... காதலியிடம் பேசுவதைப் போல் பேச முயன்று கொண்டிருந்தான் கதிர். அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் மனஸ்தாபங்களும் எட்டிப் பார்த்துச்  சென்றன. யார் முதலில் பேசுவது/சமாதானப்படுத்துவது?! என்ற கேள்விக்கே இடமில்லை. கதிர் அமெரிக்காவில் இருந்ததால் அவன்தான் அழைத்ததாக வேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆதலால் ஈகோ பிரச்சனை தலைதூக்காமல் இருந்தது. இருவரின் நிறைகுறைகளை ஓரளவிற்கு  அறிந்து கொண்டனர்.

ஆறு மாதங்கள் கடந்தோடியது. திருமணத்திற்கு நான்கே நாட்கள் இருக்கும் பட்சத்தில் இந்தியா வந்து சேர்ந்தான் கதிர். திருமண வேலைகள், உறவினர்கள், நண்பர்கள் , ஜெட்லேக், கைப்பேசி இன்மை  போன்ற  சூழலில் சிக்கித் சிதறுண்டான். வழக்கம் போல் நந்தினியிடம் பேச நேரம் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்த நந்தினி...கதிருக்கு போன் செய்தாள். "என்ன பேசவே மாட்ரீங்க?! நேத்து  எவ்வளவு நேரம்  வெயிட் பண்ணிட்டிருந்தேன் தெரியுமா?!" என்று கோபத்தோடு கேட்க அடுத்த முனையில் கதிரின் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவனை அறியாமலேயே முகம் சிரிப்பில் மூழ்கியது.தன் மேல் இருக்கும்  காதலை முதல் முறையாக  நந்தினி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஊடல் மூலமாக என்று துள்ளிக்குதித்தான்  "நான் திட்றேன்...நீங்க சிரிக்குறீங்களா?! என்ற நந்தினியிடம் " அப்பிடியில்ல நந்தினி..." என்று சமாதான பேச்சு வார்தையைத் தொடங்கினான் கதிர். வசதியாக நாற்காலியில் அமர்ந்து Landline போனை எடுத்து மடியில் வைத்துக்கொண்டே...

 எந்த பெண்ணும் தன்னுடைய பொறுப்பு, பொறுமை, வயது அனைத்தையும் மறந்து தன் காதலரிடமும் கணவரிடமும்  அடம் பிடிக்கும் குழந்தையா கவே  மாற விரும்புவாள்... காதலுடன் ...எத்துனை வருடங்கள் கடந்தாலும்....

பதிமூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகும் கதிர் நந்தினியின் உரையாடல்களில் இருக்கும் காதல் எள்ளளவும் குறையவில்லை. கதிர் இன்றும் சிரிப்பை அடக்க முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான்!!!