Thursday, April 25, 2019

நிழலும் நிஜமும்

நான் அமெரிக்காவிற்கு வந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தது அப்போது. அவ்விரு  நாட்களும் வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்க கடைகளுக்குச்  செல்வது அது இது என்று ஓடிவிட்டது. முதல் முறையாக தனியாக வெளிநாட்டில் (வீட்டில் தான் !!!) இருக்க வேண்டும். "என்ன 
சமாளிச்சுருவல்ல?! " என் அன்புக் கணவர்  கவலையோடு கேட்டார். "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல " என்பது போல் பார்த்த என்னிடம் " நிறைய DVD இருக்கு...laptop-ல போட்டுப்   பாரு...மத்தியானம் தூங்கிடாத...ஜெட்லாக் லேசுல போகாது " என்று எச்சரித்து விட்டுச்  சென்றார். 

இந்தியாவிலிருந்து அப்போது தான் வந்திருந்ததால், பழக்க தோஷத்தில் அதிகாலையில் எழுந்து அனைத்து சமையல் வேலைகளையும்  முடித்து, Lunch-ம் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. மாலை ஐந்து மணி வரை என்ன செய்வது?! இப்போது இருப்பது போல் பதிமூன்று  வருடங்களுக்கு முன் அதி வேக Internet இல்லை...இருந்து தான் என்ன செய்ய?! No Whats app, you tube !!! வீட்டிற்கு பேசலாம் என்றால் "காலிங் கார்ட் " வாங்க வேண்டும் அதுவும் மணிக்கணக்கில் எல்லாம் பேச முடியாது. வேறு வழியில்லாமல் ஒரு DVD-யை மடிக்கணினியில் சுழல விட்டேன். ஒரு அரைமணி நேரத்திற்கு மேல் என்னால் பார்க்கவே முடியவில்லை. பல கதாப்பாத்திரங்கள் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தன. விறு விறுப்பாக எதுவும் இல்லை. பாதி புரியவில்லை என்பது வேறு விஷயம். (என்னுடைய ஆங்கில ஞானம் அந்த அளவிற்கு இருந்தது. Accent அதுக்கு மேல்.)

அந்த கால கட்டத்தில் நான் பார்த்த ஆங்கிலப் படங்கள் எல்லாம் தமிழில் dub செய்யப்பட்டு K-TV மற்றும் விஜய் டிவியில் போடப்படும் (அதிரடித்திருவிழா)  படங்கள் தான் இல்லையென்றால் லோக்கல் கேபிள் டிவியில் வரும் பழைய பேய்ப் படங்கள். எனக்குத் தெரிந்த பெரும்பலான ஆங்கிலப்படங்களில் குறைந்த கதாபாத்திரங்களே வரும். பாஷை புரியலைன்னாலும் படம் புரியும் அளவிற்கு விறுவிறுப்பாக இருக்கும் எல்லாரும் ஓடிக்கிட்டே இருப்பாங்க...ஒன்னு பேய் துரத்தும் இல்லன்னா டைனோசர், பாம்பு, shark-ன்னு மிருகங்கள் துரத்தும் அதுவும் இல்லையா Time Bomb- யை பையில வச்சுக்கிட்டு நின்னா வெடிச்சுரும்னு ஓடுவாங்க இதுக்கெல்லாம் மேல உலகம் அழியப் போகுதுன்னு ஓடுவாங்க...மற்றொரு வகை நம்பவே முடியாத மாய மந்திரப்படங்கள் மற்றும் Animation Movies. இதுக்கு வடிவேலு வசனம் பேசும் ஜாக்கி ஜான் படங்களே பரவாயில்லை என்று தோன்றும்.

"ஹாலிவுட் படம்னு சொல்றாங்க...ஒரே ட்ரெஸ்ஸ தான் படம்பூரா போட்டுட்டு சுத்துறாங்க"..."உலகமே அழிஞ்சதுக்கப்புறம் இவன் மட்டும் பொழச்சு என்ன செய்யப்போறான்?!..." அதான் கண்ணை தொறந்து பார்த்தா பேய் தெரியுதுல்ல?! இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது தானே?!" என்றெல்லாம் எகத்தாளமாய் கலாய்த்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று என்னையே நொந்து கொண்டு கணிணினியை ஆஃப் செய்து விட்டேன்.

யாரோ என்னை பிடித்து உலுக்குவது போல கனவு. கண் திறந்ததும் தான் தெரிந்தது கனவில்லை...நிஜம் என்று. "என்னா நல்லா தூங்கிட்டியா?!" என்று எதிரில் நின்றிருந்தார் என்னை மணமுடித்த மணாளன். நடு ராத்திரியில் முழித்துக்கொண்டது போல கண் எரிந்தது. ஜெட்லாக் effect நன்கு புரிந்தது. "இதுக்குதான் படம் பாருன்னு சொன்னேன்" என்றவரிடம் "அதை பாத்தனாலதான் இப்பிடி" என்று சொல்ல என் History  தெரியதனால் அவருக்கு நான் சொல்வது புரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் எனக்குப்  பல வகையான (Genre) ஆங்கிலப் படங்களை அறிமுகப்படுத்தினார் என்னைக்  கைப்பிடித்த  கணவர். வெளியே செல்ல  கார் இல்லை என்பதாலும் வீட்டில் கேபிள் வாங்கி விட்டதாலும்    சினிமா பார்ப்பதே முழு நேர வேலையாக மாறிவிட்டது. Local Library-ல் கிடைக்கும் DVD-களையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை.   "Closed Caption " என்று ஒரு "Option " இருப்பது பெரும் வசதியாக இருந்தது எனக்கு. சிறிது நாட்களிலேயே ஆங்கிலப் படங்களைப் பற்றிய எனது அபிப்பிராயம் தலைகீழாக மாறியது. "எமோஷனல், ட்ராமா, செண்டிமெண்ட், காமெடி  " என்று நம் தாய் மொழியில் இருக்கும் அனைத்தும் ஆங்கிலப்படங்களில் இருந்தது இதைத்தவிர "Terminal ", "Cast Away ", "The Beautiful Mind ", "Matrix " போன்ற வித்தியாசமான திரைப்படங்கள் என்னை வியக்க வைத்தன.

மேலும்  வரலாற்றுப் படங்கள்  நான் வாழ வந்திருக்கும் அந்நிய நாட்டின் வரலாற்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்து உதவின. புகழ் பெற்ற நபர்களின் வாழ்க்கையைக் காட்டும் Biographical  படங்களும் தரமிக்கவையாக இருந்தன. பொதுவாக நடிகர்கள்  அளவோடும்   எதார்த்தமாகவும்  நடிப்பதாகத் தோன்றியது அதற்குக்  காரணம் இந்தியரல்லாதவர் நடிப்பதாலும் நம் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடாமல் திரைப்படமாக மட்டுமே அதை நான் பார்த்ததாலும் இருக்கலாம். 

 "Rom.Com" என்று சொல்லக்கூடிய நகைச்சுவைக் கலந்த காதல் படங்கள் எனது "Favorite " ஆக மாறியது. Caption இல்லாமலேயே படங்கள் புரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த வருடங்களில் மகள், மகன் என்று குழந்தைகளின் வரவால் திரைப்படங்களைப் பார்ப்பது குறைந்திருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நாங்களிருவரும் தவறவிட்டதில்லை.

என் கணவர் முன்பிருந்தே சூப்பர் ஹீரோப் படங்களைப் விரும்பிப்  பார்ப்பவர் தான் என்றாலும் "Star Wars", "Harry Potter", "Avengers " "X -Men" போன்ற Franchise படங்களின் வலையில் நான் சிக்கிக் கொண்டதோ    சமீபத்தில் தான். எத்தனை முறை  பார்த்தாலும் நினைவில் நிற்காத திரைக்கதையும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களும்   நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். இம்மாதிரியான திரைப்படங்களின் கதையை ஒற்றை வரியில் கூறிவிடலாமென்றாலும்  " Scene by Scene" சுவாரஸ்யங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பின்றி ரசிக்கலாம். குழந்தைகளோடு அமர்ந்து பார்க்க உகந்ததாக  இருப்பதால் Netflix துணையோடு   இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் இப்படங்கள் தான் அதிகமாக ஓடுகின்றன.

தகவல் தொடர்புத் துறையின் அசூர வளர்ச்சியால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிட்ட நிலையில் இன்று வெளிநாடுகளுக்கு வரும் இளம் மனைவியர் பலர் எவ்வித வேறுபாடும், இன்னல்களும்  இன்றி வாழ்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் "மெகா சீரியல் "  மற்றும் "ரியாலிட்டி ஷோக்கள்"-ல் மூழ்கிக்  கொண்டிருப்பதைப் பார்க்க ஏமாற்றமாகவே இருக்கிறது. ஆங்கிலப் படங்களையும் Sitcom-களையும்  பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி அவர்களில் மொழி, வாழ்க்கைமுறை, கலாசாரங்களை அறிந்து கொள்ளும் ஊடகமாகவும் (Medium) பார்க்கலாமே !!! 

பின் குறிப்பு : Avengers - End Game ஏப்ரல் 26, 2019-ம் நாள் உலகெங்கும் திரையிடப்படுகிறது.