Sunday, September 13, 2020

Cool Dude

நம்மில் சிலருக்கு அம்மா வழி தாத்தா பாட்டிகளின் பேரிலும் சிலருக்கு அப்பா வழி தாத்தா பாட்டிகளின் மேலும் அதிக பிரியம், அபிமானம் இருப்பதுண்டு ஆனால் எங்களுக்கோ இரு இடத்திலும் ராஜ உபச்சாரம் என்பதாலும் அவர்களோடு நேரம் செலவிட சரிசமமான  வாய்ப்பு அமைந்ததாலும்    இருசாராருக்குமே எங்கள் மனதில் முதலிடம் இருந்தது அதிலும் முக்கியமாக எங்கள் அம்மா வழி தாத்தா. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் அவரை பார்த்து வந்திருக்கிறேன் எனினும் அவர் அந்த காலத்திலிருந்தே ஒரே மாதிரியாகத் தானே இருக்கிறார்?! என்ற எண்ணம் என்னுள் எழுவதுண்டு!!!

ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல அவ்வப்போது வருவார். சராசரியான உயரமும் ஒல்லியான உடல் வாகும் கொண்டிருப்பார். சுண்டினால் சிவக்கும் சிவப்பு நிறம். இரண்டு கை விரல்களிலும் நீட்டமாக நகம் வளர்த்திருப்பார். வழுக்கைத் தலை. அதிகம் பேசமாட்டார். திருநீறு அணிந்திருப்பார். இரு கைகளிலும் பச்சை குத்தியிருப்பார். வெள்ளை வேஷ்டி, அரைக்கை  சட்டை.

தனது ஐம்பதுகளிலேயே சில  பற்களை இழந்திருந்தார் அதனால் மிக மெதுவாகவே சாப்பிடுவார். பொறியலில்  இருக்கும் கடுகு, பருப்பு போன்றவற்றை ஓரத்தில் ஒதுக்கி ஒதுக்கி சாப்பிட்டு முடிகையில் தட்டும் கைகளும் உலர்ந்திருக்கும். அதைப்பார்த்து காப்பி அடித்து என் தங்கை  திட்டு வாங்கியது வேறு கதை!!! வெற்றிலை போடும் பழக்கம் உண்டு என்பதால் அவரிடம் அவ்வப்போது பாக்கு வாங்கி சாப்பிட்டதும் இடிப்பானிலிருந்து நன்கு அரைத்த வெற்றிலை பாக்கு கலவையை சுவைத்ததும் உண்டு. அவர் முகச் சவரம் செய்து முடித்ததும் எதோ பனிக்கட்டி போல் இருக்கும் வெள்ளைக் கல்லை கன்னத்தில் தேய்த்துக் கொள்வார் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாயில் ஈ போவது தெரியாமல் அமர்ந்திருப்போம்!!!

கணக்கராக அவர் வேலை பார்த்த மில் ஒரேயடியாக இழுத்து மூடிய பின் அவர் முழு நேர வேலைக்கு எங்கும் சென்றதாக என் நினைவில் இல்லை. மில் வேலை பறி போகப் போகிறது என்று தெரிந்தும் ராஜினாமா செய்யாமல் (செய்பவர்களுக்கு பணம் கொடுத்தார்களாம்) கடைசி வரை அங்கேயே இருந்ததைப் பற்றி அடிக்கடி பாட்டி திட்டிக் கொண்டிருப்பார். எதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ள  மாட்டார். இப்போது இவ்வாறு இருப்பவர்களை "Cool Dude " என்கிறோம்  ஆனால் அப்போது?!

வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் மிகச் செல்லமாக வளர்ந்தவர் என்று அம்மா சொன்னதுண்டு. தோட்டம், வயல் என்று இருந்த சொத்துக்களை கோர்ட்டில் தன் தங்கைகளிடம் இழந்தவர் கடைசியாகத்  தன் பெயரில் இருந்த வீட்டையும்  விற்று  சித்திகளின் திருமணத்தை முடித்தார்.

அந்த கால ஆங்கில மீடியத்தில் ஆறாம் வகுப்பு வரை படித்திருந்தார் அதனால் சரளமாகவே ஆங்கிலம் வாசிப்பார். தமிழ் பத்திரிக்கைகளும் அம்புலிமாமா கதை புத்தகங்களும் அவர் வாய் விட்டு வாசிப்பது எங்களுக்கு சிரிப்பாக இருக்கும். பாடுவது போல் படிப்பார். கணக்கில் கில்லாடி. அவ்வப்போது எங்களிடம் ஐம்பது காசு கொடுத்து அவருடைய  பேனாவுக்கு மை ஊற்றிக் கொண்டு வருமாறு கடைக்கு  அனுப்புவார். மீதி காசு கொடுக்கும் போது கணக்கு சரியாக இல்லாவிட்டால் "மண்டூ  மண்டூ  " என்று திட்டி...ஒரு Filler மை-யின் அளவு என்ன?!  எத்தனை  "Ounce " மை பேனா கொள்ளும் என்று எங்களை ஒரு வழி செய்து விடுவார்.

இந்த கால தாத்தாக்களைப் போல எங்களுக்கு தின்பண்டம், விளையாட்டுப்  பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை ஆனால் பள்ளி விட்டு வரும் பொழுது பாட்டி வீட்டில் இல்லாத பட்சத்தில் இனிப்பு தித்திக்க டபுள் ஸ்ட்ராங்கில்  ஒரு டீ போட்டுக் கொடுப்பார் பாருங்கள் இப்போது நினைத்தாலும் நாக்கில் இனிக்கிறது. சில நேரம் காலை வேளையில் ராகிப் புட்டு வாங்கி வருவார் அதிலும் எக்ஸ்ட்ரா சர்க்கரைச் சேர்த்தே கொடுப்பார்.

அஜீரணக் கோளாறு இருந்ததால் பெரிதாக ஏப்பம் விடுவார். மருத்துவமனை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் அப்பாவிடம் மாத்திரை கொண்டு வரச் சொல்லி சாப்பிடுவார். சில நேரங்களில் ரஸ்க்  மட்டுமே அவருடைய ஆகாரம். எங்கும் நடந்தே செல்வார். அவர் மருத்துவமனை சென்று நான் பார்த்ததில்லை. எங்களோடு சேர்ந்து கேபிள் டிவியில் போடப்படும் "ஜுராசிக் பார்க் " போன்ற படங்களை காதில் கை வைத்து வசனங்களை கூர்ந்து  கேட்டு ரசிப்பார்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில் பாட்டி இறந்து விட்டார். வீட்டிற்குள் வழுக்கி விழுந்தபடியால் தாத்தாவால்  walker வைத்துக் கொண்டு மட்டுமே நடக்க முடியும் என்றானதால் சென்னையில் இருந்த மாமா வீட்டில் சென்று தங்கி விட்டார். எட்டு வருடத்திற்குப் பின் மாமா வீட்டிற்கு கல்லூரி விஷயமாகச் சென்றபோது பார்த்தேன். சற்று மெலிந்திருந்தாலும் அதே போலவே இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மற்றபடி எந்த உடல் உபாதையும் இல்லை. தொலைக்காட்சி, தினப் பத்திரிகை என்று நிகழ்காலத்தோடு தொடர்பில் இருந்தார் எனினும் அவரால்  மிகப் பழைய விஷயங்களை மட்டுமே  நினைவு கூற முடிந்தது. அவருடைய குழந்தைகளையே அவரால் சரியாகக் கணக்கில் கொண்டுவர இயலவில்லை.

அப்போதும் அவர் அதைப் பற்றி பெரிதாக  அலட்டிக் கொள்ளவில்லை...பதட்டம் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்ற தனது பாணியையே பின்பற்றிக் கொண்டு இருந்தார். பெரும்பாலான நேரங்களில் பிரட், பால் மட்டுமே சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

இரண்டு வருடத்திற்குப் பின் என்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் சிறிது நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். எங்கள் அப்பாவை ஒருமையில் அழைப்பதும், என் தம்பியிடம் மிட்டாய் கொடு என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேட்பதும் இரண்டு ரூபாயைக் காட்டி அரையணா என்று கூறுவதும் என்று காமெடி செய்து கொண்டிருந்தார். மருந்து இல்லை மாத்திரை இல்லை மருத்துவர்களின் தேவையும் அவருக்கு இருக்கவில்லை. கண் பார்வை மங்கவில்லை.

தன்னுடைய கடைசிக் காலத்தில் கூட யாருக்கும் எந்தவித உபத்திரவமும் கொடுக்கவில்லை. எங்கள் சித்தி வீட்டில் இருந்த அவர் தன்னுடைய 80+ வயதில் அதிகாலையில் இவ்வுலகை விட்டு மறைந்தார். என்னுடைய பிரசவத்திற்காக அமெரிக்கா  வந்திருந்த என் அம்மாவால் கூட செல்ல முடியவில்லை. வயசாயிருச்சு இல்ல என்று அவர் தன்னைத் தேற்றிக் கொண்டதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. 

தாத்தா...பொக்கை வாய் சிரிப்புடன்  எங்கள் நினைவுகளில் இன்றும்  இனித்துக் கொண்டுதான் இருக்கிறார்... 

Wednesday, July 15, 2020

உபசரிப்பு

எண்பது தொண்ணூறுகளில் பிறந்த பலருக்கும் தாத்தா பாட்டி வீடு என்பது விடுமுறைகளில் மட்டும் வந்து  செல்லும் இடமாக இருந்ததில்லை மாறாக வார இறுதிகளில் ஏன் எங்களைப் போன்றவர்களுக்கு தினமும் புழங்கும் இடமாகவும்  இருந்து வந்துள்ளது. அம்மா வழியில் எங்களுக்கு இரண்டு பாட்டி வீடு இருந்தது என்றே சொல்லலாம் என்ன?! குழப்பமாக இருக்கிறதா?! எங்களுடைய பெரியம்மா (அம்மாவின் அக்கா ) வீட்டைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். என்னுடைய பெரியம்மா அவரின் தாய் மாமாவையே திருமணம் செய்ததால் எங்களுடைய பாட்டி தன்னுடைய தம்பி வீடுதானே என்ற உரிமையில் அங்கு அடிக்கடி செல்வதும் தங்குவதும் உண்டு. அதே உரிமையை தன்னுடைய பிற மகள்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் விட்டுச் சென்றாள் என் பாட்டி.

நாங்கள் புறநகர் பகுதியில் குடியிருந்ததால் பள்ளி முடிந்ததும் பாட்டி வீடு அல்லது பெரியம்மா வீட்டிற்கு சென்று விடுவோம் சில நேரம் அங்கிருந்தே பள்ளிக்கு செல்வோம். எங்களுடைய மற்ற கசின்களும் இரண்டு மூன்று சந்து தள்ளி குடியிருந்ததால் அவர்களுடன் ஒன்று கூடி  விளையாடுவதற்கு ஏற்ற இடமாக அமைந்தது பெரியம்மா வீடு.

எங்களுடைய பெரியப்பா "தி ராயல் அச்சகம்" என்ற பெயர் கொண்ட அச்சகத்தில் மிக இள வயதில் இருந்து பணியாற்றத் துவங்கி அவரின் தந்தைக்குப் பின் அதே பெயரில் அதை வெற்றிகரமாக  நடத்தி வந்தார். கீழே அச்சகம் மேலே வீடு. அதிகம் பேசாதவர். நாங்கள் வாசலில் நுழையும் போது தன்னுடைய இருக்கையில் இருந்து தலையைத் தூக்கிப் பார்த்து உள்ளே செல்லலாம் என்பது போல் லேசாகத் தலை அசைப்பார் அவ்வளவுதான் அவருடைய "Communication". "சாப்பாடு வேளைகளில்", "ஏதாவது பெரியம்மாவிடம் சொல்லவேண்டும்", "குதிக்க வேண்டாம்" என்று எங்களைக் கண்டிக்க" என்று  மட்டுமே மேலே வருவார். பணியாளர்களிடம் பேசும் போதும் அச்சகத்தில் நாங்கள் ஓடி விளையாடினால் சிறிது கடிந்து கொள்ளும்போதும்  என வெகு சில தருணங்களில் மட்டும் தான்  நாங்கள் அவரின் குரலைக் கேட்டிருக்கிறோம்.

அவராக எங்களிடம் பேச மாட்டாரே தவிர நாங்கள் அவரிடம் பேசுவோம். "வயிறு வலிக்கிறது என்றால் அவரிடம் தண்ணீரில் கலந்து குடிக்கும் "Eno" மருந்து கேட்க,  எழுதுவதற்கு பேப்பர் கேட்டு, எங்கள் நோட்டு புத்தகங்களை Binding செய்யச் சொல்லி" என்று நாங்கள் சரளமாகப் பேசுவோம்.  

நாங்கள் என்று மட்டுமல்ல...யார் எப்பொழுது எந்த வேளையில் வந்தாலும் சாப்பிடலாம். தங்கலாம். எங்களுக்கு தினமும் தின்பண்டம் வாங்குவதற்கு "Pocket Money" கொடுப்பார். பத்து பதினைந்து பேர் வரிசையாக நிற்போம். சில்லறை ரெடியாக வைத்திருப்பார். 10 பைசாவில் தொடங்கிய Allowance 25 பைசா வரை உயர்ந்தது பின்னர் நாங்கள் வளர்ந்துவிட்டோம். பணியாளர்களுக்கு வாங்கும் பஜ்ஜி, போண்டா எல்லாம்  எங்களுக்கும் வரும். கேட்காமலேயே!!! ஒரு பட்டாளத்துடன்  நைட் ஷோ சினிமாவிற்கும் சென்றிருக்கிறோம் அவருடன்.

ஒன்றாவது வகுப்பில் தொடங்கி கல்லாரி முடியும் வரை நாங்கள் அங்கு சென்று கொண்டு தான் இருந்தோம். அச்சகம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி தொழில் நுட்ப வளர்ச்சியால் தளரத் துவங்கிய காலத்திலும் சரி எங்களுக்கென்னவோ வரவேற்பு, உபசரிப்பு  ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒரு கணத்திலும் எங்களை அழையா விருந்தாளியாக அவர் நினைத்ததில்லை.

தொழில் சிறிது சிறிதாக நலியத் துவங்கியதும் பொருளாதார ரீதியான பாதிப்பு அவரைத் தாக்க, அதையும் தைரியத்துடனேயே எதிர் கொண்டார். 
" பணத்தை தனக்கென்று சேர்த்து வைக்காம கஷ்டபற்றாரே, பசங்க கல்யாணத்துக்கு நிறைய செலவு செய்துட்டார் ...பொழைக்காத தெரியாத மனுஷர்" போன்ற பேச்சுக்களையெல்லாம் அவர் சட்டை செய்ததில்லை. தனது அச்சு இயந்திரங்களை ஒன்றொன்றாக விற்ற பின் சிறிதும் கவுரவம் பார்க்காமல் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் ஓர் அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். "கரிசனத்துடன் வாழ்ந்த அவருக்கு கணக்கு செய்து வாழ தெரியவில்லை தான்" கலிகாலத்தில் இதை விட  வேறு பெரிய தவறு இருக்கிறதா என்ன?!

நாங்கள் அனைவரும் வளர்ந்து Life-ல் செட்டில் ஆன  பிறகு அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் " சும்மா என்னால இருக்க முடியாது" என்று மறுத்து விட்டார். 18 வயதிலிருந்து 80 சொச்சம் வயதுவரை ஓயாது உழைத்த அவர் கொரோனவால் இரண்டு மாதத்திற்கு மேல் வீட்டில் முடக்கப்பட்டார். கட்டாய ஒய்வை நிரந்தர ஓய்வாக மாற்றிக் கொண்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் (யாரும் எதிர் பாரா வண்ணம் மாரடைப்பால்  இறைவனடி சேர்ந்தார்). தொழிலாளியாக ஆரம்பித்த அவர் வாழ்க்கையை தொழிலாளியாகவே முடித்தார். 

அவர் வீட்டில் உண்டு, உறங்கி வாழ்ந்த நாங்கள்.... மூச்சுக்கு முன்னூறு தடவை "பெரியம்மா வீடு...பெரியம்மா வீடு" என்று கூறி வந்த எங்கள் மனது   முதல் முறையாக பெரியப்பா வீடு என்று நினைக்கத் தோன்றுகிறது. பெரியப்பா அனுமதியின்றி எங்கு வரும் நாங்கள் கொண்டாடும் பெரியம்மா வீடு?! அன்பை வெளிப்படுத்தத் தான் எத்தனை வழிகள்!!! அவர் தேர்ந்தெடுத்த வழி "உபசரிப்பு".

அவருக்கு நம் உதவி  தேவை என்று உணர்ந்த சமயங்களில் எல்லாம் அவர் கூப்பிடாமலேயே (இதுவரை அவராக  எதுவும் கேட்டது கிடையாது) அங்கு சென்று பல வழிகளிலும் உதவிய நாங்கள் இனியும் இணைந்து நிற்போம். பல்வேறு தேசங்களில்  வாழும் பதினைந்திற்கும் மேற்பட்ட எங்கள் 
"Cousin"-களை இணைக்கும் ஒரே புள்ளி "பெரியப்பா வீடு".

அவர் வாழ்வில் சேர்த்து வைத்த சொத்து  என்ன என்று புரிந்து கொள்ள சிலரால் மட்டுமே முடியும்!!! அதில் ஒருவராக நீங்கள் இருப்பீரென்றால் மகிழ்ச்சி!!!


Sunday, May 10, 2020

மூன்றாம் உலகம்

ஒரு கையில் டம்ளரும் மறு கையில் இருந்த பாத்திரத்தில்  சுடச் சுட ஆவி பறக்கும் தேனீருமாக சமயலறையில் இருந்து வெளி வந்த சீதாம்மா கையிலிருந்தவற்றை ஹாலில் இருந்த கட்டிலில் வைத்துவிட்டு  "ராம கிருஷ்ணா " என்று சொல்லிக்கொண்டே சற்று சிரமப்பட்டு   தரையில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டார். ஏதோ கருப்பு வெள்ளை படம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது . தேனீரை அருந்தியவாரு கட்டிலிலிருந்த ரிமோட்டை கையிலெடுக்க  சேனல்  தமிழாக்க ஆன்மீகத் தொடருக்கு மாறியது. மாலை வியாபாரிகளின் குரல் தெருவில் ஒலிக்கத் தொடங்கி இருந்தது.

நிமிடத்திற்கு ஒரு தரம் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதாம்மா கைப்பேசி அலற ஆரம்பித்தவுடன் திருப்தியான முகத்துடன் டீவியை "Mute "ல் போட்டு விட்டு "ராஜா " என்று சிரித்த முகத்துடன் பேச ஆரம்பித்தார். வெளிநாட்டில் இருக்கும் அவரின் மகன் காலை தேநீரை அருந்தியவாறு தினமும் போன் செய்வது வழக்கம். "நாளைக்கு உனக்கு பிறந்த நாளுப்பா " என்று கூறியவரிடம் "காலையில உனக்கு கால் செஞ்சிறேன் " என்று மகன் கூற வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சீதாம்மாவை பொறுத்தவரை பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் கணவனை இழந்து இரு மகன்களுடன் தனியாக நின்றவளுக்கு புகுந்த இடத்தில் அவ்வளவு ஆதரவு இல்லை. பிறந்த இடத்திலும் ஒரு சில மாதங்களுக்கு மேல் இருக்க இயலாத சூழலில்...அலைந்து திரிந்து  அதிஷ்டவசமாக விதவைகள் கோட்டாவில் சத்துணவு மேற்பார்வையாளராக   அரசு வேலை கிடைக்க ஒரு ஒண்டு குடித்தன வீட்டிற்கு குடிபெயர்ந்தார். தனது இரு மகன்களும் வேலைக்கு சென்று நல்ல நிலைக்கு வரும் வரை  பாதுகாப்பு கருதி காம்பவுண்ட் வீட்டிலேயே வாழ்ந்தார். எவர் ஆதரவையும் அவர் நாடவில்லை.

அந்த காலகட்டத்தில் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுவது என்பது பணம் படைத்தவர்கள் செய்வது என்ற எண்ணம் பரவலாக இருந்தது எனினும் சீதாம்மா தனது மகன்களின் பிறந்த நாளிற்கு புது உடுப்பு வாங்கி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தோடு நில்லாமல் அன்று முழுவதும் அவர்களுக்கு பிடித்த உணவு, பலகாரம் என்று அசத்துவார். குக்கரில் கேக் செய்து பக்கத்து குடித்தனக்காரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்.

தனது மருமகளிடம் "அவங்க அப்பா இருக்கும் போது கூட இதெல்லாம் எதுக்குன்னு கேப்பாரு...ஆனா நான் தான் வருஷா வருஷம் பிறந்தநாளை "Grand "ஆ பண்ணுவேன். காலையில எழுந்ததுமே காம்பௌண்ட்காரங்க எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவாங்க....எப்பிடி எல்லாருக்கும் தெரிஞ்சுதுன்னு இவன் ஆச்சரியமா பாப்பான். நான் தான்   காலையில கோலம்போடும்போதே வாசல்ல "happy Birthday "ன்னு இவன் பேரை  எழுதிருவேன்ல" என்று உற்சாகமாகக்  கூறுவாள்.

"அவ்வளவு சின்ன வீட்ல அவன் பிரெண்ட்ஸ் ஆறு ஏழு பேர் வந்து உக்காந்திருப்பாங்க....எல்லாரும் வெஜிடேபிள் பிரியாணி சாப்பிடுவாங்க ....நைட்டு சாம்பார் சட்னியோட முறு முறு தோசைன்னு அன்னைக்கு தான் எங்க வீட்ல தீபாவளி மாதிரி இருக்கும். அப்ப எல்லாம் வசதி குறைவாவும் சந்தோசம் அதிகமாவும் இருந்துச்சு " என்று மருமகளிடம் அங்கலாய்ப்பாள் சீதாம்மா.

ஓயாமல் ஒலித்த அலைபேசியின் மூலம் நிகழ்காலம்அழைக்க, அவசர அவசரமாக வந்து அதை  அமைதிப்படுத்திய சீதாம்மா ராஜா  "Happy Birthday-ப்பா" என்று உற்சாகக் குரலில்  கூறினாள். தொலைபேசி பேரனின் கைகளுக்கு மாறியது. "உங்க அப்பாக்கு என்ன கிப்ட் கொடுத்தே? " என்று கேட்க "நான் கார்ட் செஞ்சு குடுத்தேன்....சாய்ங்காலம் கேக் வாங்குவோம் " என்று கூறியவனிடம் தான் ஒருகாலத்தில் எப்படியெல்லாம் பிறந்தநாளை கொண்டாடினோம் என்று கூற  அவன் மலங்க மலங்க விழித்து விட்டு "நீங்க எங்கப்பாவுக்கு என்ன கிப்ட் வாங்கி குடுப்பீங்க?! பார்ட்டி எங்க வைப்பீங்க?! " என்று கேட்டான்.

அவனிடம் இருந்து தொலைபேசியை வாங்கிய மருமகள் நடைமுறையில் பிறந்தநாள் எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பதைக் கூற "ஆமா ஆமா நீங்க போட்டோ அனுப்புறீங்களே பாத்துருக்கேன் " என்று கூறினாள். தனது மகனிடமும் "நாம ஊருக்கு போயிருக்கும் போது அப்பா அவங்க பழைய வீடுன்னு கூட்டிட்டு போனாரே அதைப் பத்தி தான் பாட்டி சொல்றாங்க " என்று விளக்கினாள்.

பாட்டி கூறுவதை பேரனும்....பேரன் கூறுவதை பாட்டியும் கற்பனை செய்து கொள்ள அவர்களுக்கு இடையே ஓர் மூன்றாம் உலகம் உருவாகி இருந்தது. அது எதிர்பார்ப்பில்லாத அன்பினால்  மட்டுமே நிறைந்தது. நேரில் சந்தித்து கொள்ளும் போது அந்நியோன்யத்தை ஏற்படுத்திக் கொடுப்பது.

இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலரும் வெவ்வேறு உலகத்தில் ஓடிக் கொண்டிருக்க "உங்களுக்குப் புரியாது " என்று இறந்த காலத்தை இளைய தலைமுறையிடமும் நிகழ் காலத்தை முதிய தலைமுறையிடமும் விளக்கத் தவறினோமேயானால், அவர்களுக்கிடையே பாலமாக செயல்படாமல் இருந்தோமேயானால் அவர்களின்  மூன்றாம் உலகம் உருவாகமலேயே போய்விடும்!!!

Thursday, April 2, 2020

பல தலைக் கொள்ளி எறும்பு

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய என் கணவர் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் முதல் இறப்பு ஏற்பட்டு விட்டது என்று பரபரப்பாக டீவியை கிளிக்கியவர் இன்னும் முடித்த பாடில்லை மூன்று வாரம் முடிந்து விட்டது. "இது ரொம்ப மோசமாகப் போகும் போல....இப்பிடியே போனா பங்குச் சந்தை சரிவு ஏற்பட்டு பொருளாதார சீர்குலைவு ஏற்படுவது உறுதி " என்று முதல் வாரத்தில் அங்கலாய்த்த அவரை "என்னோமோ நாலஞ்சு கம்பெனி வச்சுருக்கிற மாதிரி பொலம்புறீங்களே?!" என்று கலாய்த்து கடுப்பேற்றினேன்.

அவருடைய நண்பர்களிடம் இதைப்பற்றி புலம்பி முடித்த அவர் அடுத்த இரண்டு நாட்களில் தனது கவலையை மளிகை  மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள்  வாங்குவதில் திருப்பினார். கடைகளிலிருந்து பொருட்களை கண்ணா பின்னாவென்று அள்ளிச் செல்பவர்களை கடுமையாக விமர்ச்சித்தாலும் "ஏய் இன்னும் ரெண்டு அரிசி மூட்டை வாங்கிட்டு வந்துறவா?!" என்று என்னைக் குழப்பினார். நடுநடுவே சமூக வலைத்தளங்களில் வலம் வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து பொய் செய்தி பரப்புவர்களையும் Social Distancing பின்பற்றாதவர்களையும்  திட்டித் தீர்த்தார்.

கொரோனா எங்கள் பகுதியிலும் பிரவேசிக்க பள்ளிகளை இழுத்து மூடிவிட்டார்கள். அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்று லேப்டாப் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தவர் "எப்போ புட்டுக்குமோ?! என்று இருந்த வீட்டுக் கணினியை சரி செய்து நிம்மதி அடைந்தார். இத்தோடு வெளியில் செல்வதையும் நாங்கள் முழுவதுமாக நிறுத்தி விட்டோம்.

இப்போது காய்கறிகள் வாங்கி வந்து  பத்து நாட்கள் ஆகி விட்டது. "இன்னும் எத்தனை நாளுக்கு வெங்காயம் வரும்?! எத்தனை நாளுக்கு தக்காளி வரும்?!" என்ற கணக்கெடுப்பில் இறங்கியவர் நண்பர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என பலரிடம் கலந்தாலோசித்து ஆன்லைனில் ஆர்டர் செய்து பெருமூச்சு விட்டார். வீட்டிற்கு வந்த பொருட்களை கிருமி நாசினியைக் கொண்டு துடைத்து கிருமிகள் இருக்காதே என்று பயந்து பயந்து எடுத்து வைப்பதற்குள் அப்பப்பா !!!

இப்போது கொரோனா மிக வேகமாகப் பரவி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேகமாகப் பரவ "இப்பிடியே போனா ரொம்பக் கஷ்டம்" என்று கண்களை உருட்டியவர் ஊரிலிருந்த அம்மாவை எங்கும் வெளியே செல்லாதே என்று எச்சரித்தார். Gym மூடிவிட்டதால் உடலுழைப்பே இல்லாமலாகிவிட்டது என்று பெருமூச்செறிந்தவர் வீட்டிலேயே யோகா செய்தாலும் சாப்பாட்டின் அளவைக் குறைத்துக் கொண்டார். "எதுக்கு இப்பிடி பண்றீங்க?!" என்ற என்னிடம் "அரிசி ஒருவாரம் அதிகமா வரும் இல்லையா?! " என்று கடுப்பேத்தினார்.

இப்போது வீட்டில் அடைப்பட்டு இருபது நாட்கள் கடந்து விட்ட நிலையில் அதிரடி தள்ளுபடி அளித்த "Streaming Service"-களை வாங்கியவர் அதைப் பார்த்து டென்ஷனை குறைத்துக் கொண்டாரா என்றால் இல்லை மாறாக YouTube-ல் வீட்டிலேயே எப்பிடி சுவையான பரோட்டா செய்வது?! பிரியாணி செய்வது?! போன்ற விடீயோக்களை பார்த்து விட்டு "பக்கத்தில இருக்கிற ரெஸ்டாரண்ட் டெலிவரி பண்றங்களாம்....20% தள்ளுபடி வேறு, Local Business- ஐ சப்போர்ட் பண்ணணுமில்ல?! " என்று பகல் கனவு காண்கிறார். இப்பொழுதெல்லாம் வெளியில் வாக்கிங் செல்பவர்களை சன்னல் வழியாகப் பார்த்து  நாங்கள் இருவருமாகச் சேர்ந்துபொறாமையில் பொரிந்து தள்ளுகிறோம்.

நோய்த் தோற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,பொருளாதாரச் சரிவு, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ?! என்ற கவலை, வீட்டிலிருந்த படியே வேலை செய்வதால் குறித்த நேரத்தில் வேலையிலிருந்து வெளிவர இயலாமை, வீட்டுச் சிறையில் அடைபட்டிருப்பது போன்ற உணர்வு, சமுக வலைத்தளங்களின் தாக்கம் முக்கியமாக கடையில் வாங்கி சாப்பிட முடியவில்லை என்கிற ஏக்கம் (?!)  அனைத்தும் சேர்ந்து அழுத்த இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதே  அரிதானது .

இப்போதே போதும் போதும் என்று தோன்ற ...தொலைக்காட்சிகளிலோ  அடுத்து வரும் மூன்று வாரங்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று கூறுவதைக் கேட்ட அவர் "அப்ப இவ்வளவு நாள் வெளிய போயிருக்கலாமா?!....நாமதான் தேவையில்லாம வீட்டிலேயே அடைஞ்சு இருந்துட்டோமா?!" என்று வடிவேலு மாடுலேஷனில் வசனம் பேசவில்லை என்றாலும் அதைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது உறுதி.  "அப்பவே சொன்னேன் இன்னும் ரெண்டு Rice Bag வாங்கிட்டு வரேன்னு... கேட்டியா?!  என்று என்னைக் கடிந்து கொண்டவர் இப்பொது  எந்தெந்த கடைகளில் டோர் டெலிவரி செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.

பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் "நல்லா வச்சு செய்யுது" இந்த கொரோனா!!!

Monday, February 3, 2020

அப்பாவின் கோபம்

விசாலமான அந்த அறையிலிருந்த கடிகாரம் ஆறேகாலைத் தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. சட்னி அரைப்பதற்காக  வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த அம்மா " லைட்ட போட்டுட்டு கதவு, சன்னலை சாத்தி வைங்க...கொசு வந்து அடைஞ்சுரும் " என்று பொதுவாகச் சொன்னாள். அதே அறையின் இடது மூலையில் படித்துக் கொண்டும் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டும் இருந்த நான்கு உருப்பிடிக்களில் ஒருவன் அம்மா இட்ட வேலையை நிறைவேற்ற, நிரஞ்சனாவும் நிவேதாவும் தங்கள் புத்தகங்களில் ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த நிவின்  "அப்பா இன்னும் கோவமாத்தான் இருப்பாரா?! காலையில மாதிரி இப்போ சட்னியை கீழ தள்ளி விட்டுட்டார்னா என்ன செய்றது?!" என்று கவலையுடன் கேட்டான். அப்பிடியெல்லாம் செய்ய மாட்டார் என்று நிரஞ்சனா சமாதானம் கூறிக்கொண்டிருக்க "காலையில சாம்பார் ரசம் எல்லாம் இருந்துச்சு அதையெல்லாம் விட்டுட்டு தயிரைத்  தான தள்ளி விட்டார்...இல்லனா சாதத்துல ஊத்திக்க எதுவும் இருக்காதுல்ல?! அப்பிடியிருக்கும் போது எப்பிடி சட்னியை தள்ளி விடுவாரு?!" என்று நிவேதா கூறிய பதிலில் நிவின்  சற்று முகம் மலர்ந்தான்.

என்ன?! மேலே சொன்னதை எல்லாம்  வச்சிட்டு அவர்களின் அப்பா ஒரு "கொடுமைக்காரன்" என்றும் "பாலச்சந்தர் படத்துல வர்ற "Sadist " மாதிரி போல" என்றும் "அலுவகமே கதி என்று இருப்பவர்" என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விடாதீர்கள். கடிவாளம் போட்டு கட்டி வைத்துவிட்டு மேலே வாசியுங்கள்.

ஐந்து குழந்தைகள் இருக்கும் இந்த வீட்டில் அம்மாவுக்கு வீட்டு வேலைகள் அனைத்திலும் ஒத்தாசையாக இருப்பவர் தான் அப்பா. குழந்தைகளை வாடா போடா என்று கூட கூப்பிடாதவர். நிரஞ்சனா தான் பார்த்த படங்களில் வரும் காமெடிகளை கூற அதை ரசிப்பவர். நிவேதாவுடம் புதிதாக வெளியாயிருக்கும் திரைப்பட பாடல்களைப் பற்றி விவாதிப்பவர். அவர்களின் சித்தி, மாமா பிள்ளைகள் எல்லாம் "உங்க அப்பா மாதிரி எங்களுக்கும் ஒரு ஜாலியான அப்பா இருந்திருந்தா சூப்பரா இருக்கும் " என்று பொறாமைப் படக்கூடிய இடத்தில் இருப்பவர். ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை உப்புச் சப்பில்லாத உப்புமா விஷயத்தில் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு மலை ஏறி விடுவார். அப்புறம் ஒரு மூன்று தினத்திற்கு "இவரா அவரு ?!" என்ற ரேஞ்சில் இருப்பர். வேதாளம் தானாக முருங்கை மரம் விட்டு இறங்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழி?!

வழக்கம் போல் இன்று காலையிலும் கோபம் வந்து அம்மாவைக் கடிந்து கொண்டார். தன்னுடைய ஆத்திரத்தை தயிரிடம் காட்டி விட்டு அலுவலகம் சென்றவர் திரும்பி வரும் நேரம் நெருங்க நெருங்க அவ்வீட்டின் "கடைக்குட்டி சிங்கம்" நிவினிற்கு கவலை ஏறிக்கொண்டு இருந்தது. "அம்மாகிட்ட கோபம்னா ஏன் எல்லாரையும் திட்டுறாரு" என்று தன்னுடைய சந்தேகங்களை சகோதரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்க அவர்களோ "இதெல்லாம் சகஜம் "என்பதுபோல அவரவர்  வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். 

யாரிடமும் எதுவும் பேசாமலும் ஓரிரு வார்த்தைகளில் கட்டளைகளை பிறப்பித்தும் இரவு உணவை முடித்த அப்பா வழக்கத்திற்கு மாறாக  எந்த உதவியும் செய்யாமல் (Strike!!!) முன் அறை தொலைக்காட்சியில்  செய்திகள் பார்க்கச் சென்று விட்டார். பாத்திரங்களை சகோதரிகள் கழுவ, அம்மா வீட்டைப் பெருக்கினாள். முதல் தம்பி சாப்பிட்ட இடத்தைத் துடைக்க, சட்டினி தப்பிய சந்தோஷத்தில் ஒரு ஓரமாக கண்கள் செருக தூங்கத் தொடங்கி விட்டிருந்தான் நிவின். தான் இந்த வீட்டிலேயே இல்லாதது போல இருந்தான் டியூஷனிலிருந்து திரும்பி வந்த அண்ணன். 

அடுத்த நாளும் நிலவரம் அதே போல் தொடர்ந்தது. தன்னுடைய "கெத்தை " Maintain செய்ய அப்பா சற்று கடினமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். கோபம் குறைந்தமையால் முகம் சாந்தம் கொள்ளத்துவங்கியிருந்தது. எல்லா சேனல்களிலும் சொன்ன செய்தியையே சொல்லிக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தவர்  யாரும் அருகில் இல்லாதது கண்டு காமெடி சேனலுக்கு மாறிய அப்பா சிரிப்பை அடக்க படாத பாடு படவேண்டி இருந்தது. அப்பாவின் கோபம் குறைந்தது தெரிந்தாலும் குழந்தைகள் அடக்கியே வாசித்தனர்.

இருபது வருடங்களுக்கு முன் யாரும் எதையும் வெளிப்படையாக  விவாதிப்பதோ, பெரிதாக Scene போடுவதோ  இல்லை ஆதலால் அப்பாவின் கோபத்தைப் பற்றி யாரும் அம்மாவிடம் கேட்கவில்லை கடைக்குட்டியைத் தவிர!!!. அம்மாவும் எதுவும் நடவாததுபோல் இருந்தாள். சகோதரிகள் தங்கள் தந்தையின் இம்மறுபக்கத்தை சித்தி மாமா பெண்களிடம் கூற  யாரும் அவர்களை நம்புவதற்கு தயாராக இல்லை.

மூன்றாம் நாள் வேதாளம் மெதுவாக தரை  இறங்கிவரத் தொடங்கி இருந்தது. அப்பாவாலும் அதற்குமேல் தனிமையில் இருக்க முடியவில்லை. நிலைமையை நன்கு உணர்ந்திருந்த சகோதரிகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அப்பாவிடம் "போதும் பா...எதுக்கு இவ்வளவு கஷ்டப்படறீங்க?! நல்லா தான் சிரிங்களேன்" என்று கூற "அப்பப்ப நான் யாருன்னு காட்டலன்னா உங்களுக்கெல்லாம் பயம் விட்டுப் போயிருமே " என்று பொய்யாகக்  கடிந்து கொண்டவர்  வீட்டைத் துடைப்பதற்கு கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டிருந்தார்.

நிவினின் முகம் முழுவதும் மலர்ந்தது...

பின்குறிப்பு : இக்கதையில் குறிப்பிட்ட அனைத்து மகன்களும் இப்போது அப்பாவாகிவிட்டனர், அவர்களில் எத்தனை மேல் தங்கள்  தந்தையின் வழித்தடத்தை பின்பற்றி மலை ஏறுகிறார்களோ?! காலம் மாறிப்போச்சுங்க என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.