விசாலமான அந்த அறையிலிருந்த கடிகாரம் ஆறேகாலைத் தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. சட்னி அரைப்பதற்காக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த அம்மா " லைட்ட போட்டுட்டு கதவு, சன்னலை சாத்தி வைங்க...கொசு வந்து அடைஞ்சுரும் " என்று பொதுவாகச் சொன்னாள். அதே அறையின் இடது மூலையில் படித்துக் கொண்டும் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டும் இருந்த நான்கு உருப்பிடிக்களில் ஒருவன் அம்மா இட்ட வேலையை நிறைவேற்ற, நிரஞ்சனாவும் நிவேதாவும் தங்கள் புத்தகங்களில் ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த நிவின் "அப்பா இன்னும் கோவமாத்தான் இருப்பாரா?! காலையில மாதிரி இப்போ சட்னியை கீழ தள்ளி விட்டுட்டார்னா என்ன செய்றது?!" என்று கவலையுடன் கேட்டான். அப்பிடியெல்லாம் செய்ய மாட்டார் என்று நிரஞ்சனா சமாதானம் கூறிக்கொண்டிருக்க "காலையில சாம்பார் ரசம் எல்லாம் இருந்துச்சு அதையெல்லாம் விட்டுட்டு தயிரைத் தான தள்ளி விட்டார்...இல்லனா சாதத்துல ஊத்திக்க எதுவும் இருக்காதுல்ல?! அப்பிடியிருக்கும் போது எப்பிடி சட்னியை தள்ளி விடுவாரு?!" என்று நிவேதா கூறிய பதிலில் நிவின் சற்று முகம் மலர்ந்தான்.
என்ன?! மேலே சொன்னதை எல்லாம் வச்சிட்டு அவர்களின் அப்பா ஒரு "கொடுமைக்காரன்" என்றும் "பாலச்சந்தர் படத்துல வர்ற "Sadist " மாதிரி போல" என்றும் "அலுவகமே கதி என்று இருப்பவர்" என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விடாதீர்கள். கடிவாளம் போட்டு கட்டி வைத்துவிட்டு மேலே வாசியுங்கள்.
ஐந்து குழந்தைகள் இருக்கும் இந்த வீட்டில் அம்மாவுக்கு வீட்டு வேலைகள் அனைத்திலும் ஒத்தாசையாக இருப்பவர் தான் அப்பா. குழந்தைகளை வாடா போடா என்று கூட கூப்பிடாதவர். நிரஞ்சனா தான் பார்த்த படங்களில் வரும் காமெடிகளை கூற அதை ரசிப்பவர். நிவேதாவுடம் புதிதாக வெளியாயிருக்கும் திரைப்பட பாடல்களைப் பற்றி விவாதிப்பவர். அவர்களின் சித்தி, மாமா பிள்ளைகள் எல்லாம் "உங்க அப்பா மாதிரி எங்களுக்கும் ஒரு ஜாலியான அப்பா இருந்திருந்தா சூப்பரா இருக்கும் " என்று பொறாமைப் படக்கூடிய இடத்தில் இருப்பவர். ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை உப்புச் சப்பில்லாத உப்புமா விஷயத்தில் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு மலை ஏறி விடுவார். அப்புறம் ஒரு மூன்று தினத்திற்கு "இவரா அவரு ?!" என்ற ரேஞ்சில் இருப்பர். வேதாளம் தானாக முருங்கை மரம் விட்டு இறங்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான். வேறு வழி?!
வழக்கம் போல் இன்று காலையிலும் கோபம் வந்து அம்மாவைக் கடிந்து கொண்டார். தன்னுடைய ஆத்திரத்தை தயிரிடம் காட்டி விட்டு அலுவலகம் சென்றவர் திரும்பி வரும் நேரம் நெருங்க நெருங்க அவ்வீட்டின் "கடைக்குட்டி சிங்கம்" நிவினிற்கு கவலை ஏறிக்கொண்டு இருந்தது. "அம்மாகிட்ட கோபம்னா ஏன் எல்லாரையும் திட்டுறாரு" என்று தன்னுடைய சந்தேகங்களை சகோதரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்க அவர்களோ "இதெல்லாம் சகஜம் "என்பதுபோல அவரவர் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
யாரிடமும் எதுவும் பேசாமலும் ஓரிரு வார்த்தைகளில் கட்டளைகளை பிறப்பித்தும் இரவு உணவை முடித்த அப்பா வழக்கத்திற்கு மாறாக எந்த உதவியும் செய்யாமல் (Strike!!!) முன் அறை தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கச் சென்று விட்டார். பாத்திரங்களை சகோதரிகள் கழுவ, அம்மா வீட்டைப் பெருக்கினாள். முதல் தம்பி சாப்பிட்ட இடத்தைத் துடைக்க, சட்டினி தப்பிய சந்தோஷத்தில் ஒரு ஓரமாக கண்கள் செருக தூங்கத் தொடங்கி விட்டிருந்தான் நிவின். தான் இந்த வீட்டிலேயே இல்லாதது போல இருந்தான் டியூஷனிலிருந்து திரும்பி வந்த அண்ணன்.
அடுத்த நாளும் நிலவரம் அதே போல் தொடர்ந்தது. தன்னுடைய "கெத்தை " Maintain செய்ய அப்பா சற்று கடினமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். கோபம் குறைந்தமையால் முகம் சாந்தம் கொள்ளத்துவங்கியிருந்தது. எல்லா சேனல்களிலும் சொன்ன செய்தியையே சொல்லிக்கொண்டிருக்க வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தவர் யாரும் அருகில் இல்லாதது கண்டு காமெடி சேனலுக்கு மாறிய அப்பா சிரிப்பை அடக்க படாத பாடு படவேண்டி இருந்தது. அப்பாவின் கோபம் குறைந்தது தெரிந்தாலும் குழந்தைகள் அடக்கியே வாசித்தனர்.
இருபது வருடங்களுக்கு முன் யாரும் எதையும் வெளிப்படையாக விவாதிப்பதோ, பெரிதாக Scene போடுவதோ இல்லை ஆதலால் அப்பாவின் கோபத்தைப் பற்றி யாரும் அம்மாவிடம் கேட்கவில்லை கடைக்குட்டியைத் தவிர!!!. அம்மாவும் எதுவும் நடவாததுபோல் இருந்தாள். சகோதரிகள் தங்கள் தந்தையின் இம்மறுபக்கத்தை சித்தி மாமா பெண்களிடம் கூற யாரும் அவர்களை நம்புவதற்கு தயாராக இல்லை.
மூன்றாம் நாள் வேதாளம் மெதுவாக தரை இறங்கிவரத் தொடங்கி இருந்தது. அப்பாவாலும் அதற்குமேல் தனிமையில் இருக்க முடியவில்லை. நிலைமையை நன்கு உணர்ந்திருந்த சகோதரிகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அப்பாவிடம் "போதும் பா...எதுக்கு இவ்வளவு கஷ்டப்படறீங்க?! நல்லா தான் சிரிங்களேன்" என்று கூற "அப்பப்ப நான் யாருன்னு காட்டலன்னா உங்களுக்கெல்லாம் பயம் விட்டுப் போயிருமே " என்று பொய்யாகக் கடிந்து கொண்டவர் வீட்டைத் துடைப்பதற்கு கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டிருந்தார்.
நிவினின் முகம் முழுவதும் மலர்ந்தது...
பின்குறிப்பு : இக்கதையில் குறிப்பிட்ட அனைத்து மகன்களும் இப்போது அப்பாவாகிவிட்டனர், அவர்களில் எத்தனை மேல் தங்கள் தந்தையின் வழித்தடத்தை பின்பற்றி மலை ஏறுகிறார்களோ?! காலம் மாறிப்போச்சுங்க என்கிறீர்களா?! அதுவும் சரிதான்.