Thursday, April 2, 2020

பல தலைக் கொள்ளி எறும்பு

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய என் கணவர் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் முதல் இறப்பு ஏற்பட்டு விட்டது என்று பரபரப்பாக டீவியை கிளிக்கியவர் இன்னும் முடித்த பாடில்லை மூன்று வாரம் முடிந்து விட்டது. "இது ரொம்ப மோசமாகப் போகும் போல....இப்பிடியே போனா பங்குச் சந்தை சரிவு ஏற்பட்டு பொருளாதார சீர்குலைவு ஏற்படுவது உறுதி " என்று முதல் வாரத்தில் அங்கலாய்த்த அவரை "என்னோமோ நாலஞ்சு கம்பெனி வச்சுருக்கிற மாதிரி பொலம்புறீங்களே?!" என்று கலாய்த்து கடுப்பேற்றினேன்.

அவருடைய நண்பர்களிடம் இதைப்பற்றி புலம்பி முடித்த அவர் அடுத்த இரண்டு நாட்களில் தனது கவலையை மளிகை  மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள்  வாங்குவதில் திருப்பினார். கடைகளிலிருந்து பொருட்களை கண்ணா பின்னாவென்று அள்ளிச் செல்பவர்களை கடுமையாக விமர்ச்சித்தாலும் "ஏய் இன்னும் ரெண்டு அரிசி மூட்டை வாங்கிட்டு வந்துறவா?!" என்று என்னைக் குழப்பினார். நடுநடுவே சமூக வலைத்தளங்களில் வலம் வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து பொய் செய்தி பரப்புவர்களையும் Social Distancing பின்பற்றாதவர்களையும்  திட்டித் தீர்த்தார்.

கொரோனா எங்கள் பகுதியிலும் பிரவேசிக்க பள்ளிகளை இழுத்து மூடிவிட்டார்கள். அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்று லேப்டாப் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தவர் "எப்போ புட்டுக்குமோ?! என்று இருந்த வீட்டுக் கணினியை சரி செய்து நிம்மதி அடைந்தார். இத்தோடு வெளியில் செல்வதையும் நாங்கள் முழுவதுமாக நிறுத்தி விட்டோம்.

இப்போது காய்கறிகள் வாங்கி வந்து  பத்து நாட்கள் ஆகி விட்டது. "இன்னும் எத்தனை நாளுக்கு வெங்காயம் வரும்?! எத்தனை நாளுக்கு தக்காளி வரும்?!" என்ற கணக்கெடுப்பில் இறங்கியவர் நண்பர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என பலரிடம் கலந்தாலோசித்து ஆன்லைனில் ஆர்டர் செய்து பெருமூச்சு விட்டார். வீட்டிற்கு வந்த பொருட்களை கிருமி நாசினியைக் கொண்டு துடைத்து கிருமிகள் இருக்காதே என்று பயந்து பயந்து எடுத்து வைப்பதற்குள் அப்பப்பா !!!

இப்போது கொரோனா மிக வேகமாகப் பரவி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேகமாகப் பரவ "இப்பிடியே போனா ரொம்பக் கஷ்டம்" என்று கண்களை உருட்டியவர் ஊரிலிருந்த அம்மாவை எங்கும் வெளியே செல்லாதே என்று எச்சரித்தார். Gym மூடிவிட்டதால் உடலுழைப்பே இல்லாமலாகிவிட்டது என்று பெருமூச்செறிந்தவர் வீட்டிலேயே யோகா செய்தாலும் சாப்பாட்டின் அளவைக் குறைத்துக் கொண்டார். "எதுக்கு இப்பிடி பண்றீங்க?!" என்ற என்னிடம் "அரிசி ஒருவாரம் அதிகமா வரும் இல்லையா?! " என்று கடுப்பேத்தினார்.

இப்போது வீட்டில் அடைப்பட்டு இருபது நாட்கள் கடந்து விட்ட நிலையில் அதிரடி தள்ளுபடி அளித்த "Streaming Service"-களை வாங்கியவர் அதைப் பார்த்து டென்ஷனை குறைத்துக் கொண்டாரா என்றால் இல்லை மாறாக YouTube-ல் வீட்டிலேயே எப்பிடி சுவையான பரோட்டா செய்வது?! பிரியாணி செய்வது?! போன்ற விடீயோக்களை பார்த்து விட்டு "பக்கத்தில இருக்கிற ரெஸ்டாரண்ட் டெலிவரி பண்றங்களாம்....20% தள்ளுபடி வேறு, Local Business- ஐ சப்போர்ட் பண்ணணுமில்ல?! " என்று பகல் கனவு காண்கிறார். இப்பொழுதெல்லாம் வெளியில் வாக்கிங் செல்பவர்களை சன்னல் வழியாகப் பார்த்து  நாங்கள் இருவருமாகச் சேர்ந்துபொறாமையில் பொரிந்து தள்ளுகிறோம்.

நோய்த் தோற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ,பொருளாதாரச் சரிவு, உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ?! என்ற கவலை, வீட்டிலிருந்த படியே வேலை செய்வதால் குறித்த நேரத்தில் வேலையிலிருந்து வெளிவர இயலாமை, வீட்டுச் சிறையில் அடைபட்டிருப்பது போன்ற உணர்வு, சமுக வலைத்தளங்களின் தாக்கம் முக்கியமாக கடையில் வாங்கி சாப்பிட முடியவில்லை என்கிற ஏக்கம் (?!)  அனைத்தும் சேர்ந்து அழுத்த இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதே  அரிதானது .

இப்போதே போதும் போதும் என்று தோன்ற ...தொலைக்காட்சிகளிலோ  அடுத்து வரும் மூன்று வாரங்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று கூறுவதைக் கேட்ட அவர் "அப்ப இவ்வளவு நாள் வெளிய போயிருக்கலாமா?!....நாமதான் தேவையில்லாம வீட்டிலேயே அடைஞ்சு இருந்துட்டோமா?!" என்று வடிவேலு மாடுலேஷனில் வசனம் பேசவில்லை என்றாலும் அதைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது உறுதி.  "அப்பவே சொன்னேன் இன்னும் ரெண்டு Rice Bag வாங்கிட்டு வரேன்னு... கேட்டியா?!  என்று என்னைக் கடிந்து கொண்டவர் இப்பொது  எந்தெந்த கடைகளில் டோர் டெலிவரி செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.

பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் "நல்லா வச்சு செய்யுது" இந்த கொரோனா!!!