ஒரு கையில் டம்ளரும் மறு கையில் இருந்த பாத்திரத்தில் சுடச் சுட ஆவி பறக்கும் தேனீருமாக சமயலறையில் இருந்து வெளி வந்த சீதாம்மா கையிலிருந்தவற்றை ஹாலில் இருந்த கட்டிலில் வைத்துவிட்டு "ராம கிருஷ்ணா " என்று சொல்லிக்கொண்டே சற்று சிரமப்பட்டு தரையில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டார். ஏதோ கருப்பு வெள்ளை படம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது . தேனீரை அருந்தியவாரு கட்டிலிலிருந்த ரிமோட்டை கையிலெடுக்க சேனல் தமிழாக்க ஆன்மீகத் தொடருக்கு மாறியது. மாலை வியாபாரிகளின் குரல் தெருவில் ஒலிக்கத் தொடங்கி இருந்தது.
நிமிடத்திற்கு ஒரு தரம் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்த சீதாம்மா கைப்பேசி அலற ஆரம்பித்தவுடன் திருப்தியான முகத்துடன் டீவியை "Mute "ல் போட்டு விட்டு "ராஜா " என்று சிரித்த முகத்துடன் பேச ஆரம்பித்தார். வெளிநாட்டில் இருக்கும் அவரின் மகன் காலை தேநீரை அருந்தியவாறு தினமும் போன் செய்வது வழக்கம். "நாளைக்கு உனக்கு பிறந்த நாளுப்பா " என்று கூறியவரிடம் "காலையில உனக்கு கால் செஞ்சிறேன் " என்று மகன் கூற வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சீதாம்மாவை பொறுத்தவரை பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது மிக முக்கியம். தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் கணவனை இழந்து இரு மகன்களுடன் தனியாக நின்றவளுக்கு புகுந்த இடத்தில் அவ்வளவு ஆதரவு இல்லை. பிறந்த இடத்திலும் ஒரு சில மாதங்களுக்கு மேல் இருக்க இயலாத சூழலில்...அலைந்து திரிந்து அதிஷ்டவசமாக விதவைகள் கோட்டாவில் சத்துணவு மேற்பார்வையாளராக அரசு வேலை கிடைக்க ஒரு ஒண்டு குடித்தன வீட்டிற்கு குடிபெயர்ந்தார். தனது இரு மகன்களும் வேலைக்கு சென்று நல்ல நிலைக்கு வரும் வரை பாதுகாப்பு கருதி காம்பவுண்ட் வீட்டிலேயே வாழ்ந்தார். எவர் ஆதரவையும் அவர் நாடவில்லை.
அந்த காலகட்டத்தில் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடுவது என்பது பணம் படைத்தவர்கள் செய்வது என்ற எண்ணம் பரவலாக இருந்தது எனினும் சீதாம்மா தனது மகன்களின் பிறந்த நாளிற்கு புது உடுப்பு வாங்கி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தோடு நில்லாமல் அன்று முழுவதும் அவர்களுக்கு பிடித்த உணவு, பலகாரம் என்று அசத்துவார். குக்கரில் கேக் செய்து பக்கத்து குடித்தனக்காரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்.
தனது மருமகளிடம் "அவங்க அப்பா இருக்கும் போது கூட இதெல்லாம் எதுக்குன்னு கேப்பாரு...ஆனா நான் தான் வருஷா வருஷம் பிறந்தநாளை "Grand "ஆ பண்ணுவேன். காலையில எழுந்ததுமே காம்பௌண்ட்காரங்க எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவாங்க....எப்பிடி எல்லாருக்கும் தெரிஞ்சுதுன்னு இவன் ஆச்சரியமா பாப்பான். நான் தான் காலையில கோலம்போடும்போதே வாசல்ல "happy Birthday "ன்னு இவன் பேரை எழுதிருவேன்ல" என்று உற்சாகமாகக் கூறுவாள்.
"அவ்வளவு சின்ன வீட்ல அவன் பிரெண்ட்ஸ் ஆறு ஏழு பேர் வந்து உக்காந்திருப்பாங்க....எல்லாரும் வெஜிடேபிள் பிரியாணி சாப்பிடுவாங்க ....நைட்டு சாம்பார் சட்னியோட முறு முறு தோசைன்னு அன்னைக்கு தான் எங்க வீட்ல தீபாவளி மாதிரி இருக்கும். அப்ப எல்லாம் வசதி குறைவாவும் சந்தோசம் அதிகமாவும் இருந்துச்சு " என்று மருமகளிடம் அங்கலாய்ப்பாள் சீதாம்மா.
ஓயாமல் ஒலித்த அலைபேசியின் மூலம் நிகழ்காலம்அழைக்க, அவசர அவசரமாக வந்து அதை அமைதிப்படுத்திய சீதாம்மா ராஜா "Happy Birthday-ப்பா" என்று உற்சாகக் குரலில் கூறினாள். தொலைபேசி பேரனின் கைகளுக்கு மாறியது. "உங்க அப்பாக்கு என்ன கிப்ட் கொடுத்தே? " என்று கேட்க "நான் கார்ட் செஞ்சு குடுத்தேன்....சாய்ங்காலம் கேக் வாங்குவோம் " என்று கூறியவனிடம் தான் ஒருகாலத்தில் எப்படியெல்லாம் பிறந்தநாளை கொண்டாடினோம் என்று கூற அவன் மலங்க மலங்க விழித்து விட்டு "நீங்க எங்கப்பாவுக்கு என்ன கிப்ட் வாங்கி குடுப்பீங்க?! பார்ட்டி எங்க வைப்பீங்க?! " என்று கேட்டான்.
அவனிடம் இருந்து தொலைபேசியை வாங்கிய மருமகள் நடைமுறையில் பிறந்தநாள் எவ்வாறெல்லாம் கொண்டாடப்படுகிறது என்பதைக் கூற "ஆமா ஆமா நீங்க போட்டோ அனுப்புறீங்களே பாத்துருக்கேன் " என்று கூறினாள். தனது மகனிடமும் "நாம ஊருக்கு போயிருக்கும் போது அப்பா அவங்க பழைய வீடுன்னு கூட்டிட்டு போனாரே அதைப் பத்தி தான் பாட்டி சொல்றாங்க " என்று விளக்கினாள்.
பாட்டி கூறுவதை பேரனும்....பேரன் கூறுவதை பாட்டியும் கற்பனை செய்து கொள்ள அவர்களுக்கு இடையே ஓர் மூன்றாம் உலகம் உருவாகி இருந்தது. அது எதிர்பார்ப்பில்லாத அன்பினால் மட்டுமே நிறைந்தது. நேரில் சந்தித்து கொள்ளும் போது அந்நியோன்யத்தை ஏற்படுத்திக் கொடுப்பது.
இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலரும் வெவ்வேறு உலகத்தில் ஓடிக் கொண்டிருக்க "உங்களுக்குப் புரியாது " என்று இறந்த காலத்தை இளைய தலைமுறையிடமும் நிகழ் காலத்தை முதிய தலைமுறையிடமும் விளக்கத் தவறினோமேயானால், அவர்களுக்கிடையே பாலமாக செயல்படாமல் இருந்தோமேயானால் அவர்களின் மூன்றாம் உலகம் உருவாகமலேயே போய்விடும்!!!