Wednesday, July 15, 2020

உபசரிப்பு

எண்பது தொண்ணூறுகளில் பிறந்த பலருக்கும் தாத்தா பாட்டி வீடு என்பது விடுமுறைகளில் மட்டும் வந்து  செல்லும் இடமாக இருந்ததில்லை மாறாக வார இறுதிகளில் ஏன் எங்களைப் போன்றவர்களுக்கு தினமும் புழங்கும் இடமாகவும்  இருந்து வந்துள்ளது. அம்மா வழியில் எங்களுக்கு இரண்டு பாட்டி வீடு இருந்தது என்றே சொல்லலாம் என்ன?! குழப்பமாக இருக்கிறதா?! எங்களுடைய பெரியம்மா (அம்மாவின் அக்கா ) வீட்டைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன். என்னுடைய பெரியம்மா அவரின் தாய் மாமாவையே திருமணம் செய்ததால் எங்களுடைய பாட்டி தன்னுடைய தம்பி வீடுதானே என்ற உரிமையில் அங்கு அடிக்கடி செல்வதும் தங்குவதும் உண்டு. அதே உரிமையை தன்னுடைய பிற மகள்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் விட்டுச் சென்றாள் என் பாட்டி.

நாங்கள் புறநகர் பகுதியில் குடியிருந்ததால் பள்ளி முடிந்ததும் பாட்டி வீடு அல்லது பெரியம்மா வீட்டிற்கு சென்று விடுவோம் சில நேரம் அங்கிருந்தே பள்ளிக்கு செல்வோம். எங்களுடைய மற்ற கசின்களும் இரண்டு மூன்று சந்து தள்ளி குடியிருந்ததால் அவர்களுடன் ஒன்று கூடி  விளையாடுவதற்கு ஏற்ற இடமாக அமைந்தது பெரியம்மா வீடு.

எங்களுடைய பெரியப்பா "தி ராயல் அச்சகம்" என்ற பெயர் கொண்ட அச்சகத்தில் மிக இள வயதில் இருந்து பணியாற்றத் துவங்கி அவரின் தந்தைக்குப் பின் அதே பெயரில் அதை வெற்றிகரமாக  நடத்தி வந்தார். கீழே அச்சகம் மேலே வீடு. அதிகம் பேசாதவர். நாங்கள் வாசலில் நுழையும் போது தன்னுடைய இருக்கையில் இருந்து தலையைத் தூக்கிப் பார்த்து உள்ளே செல்லலாம் என்பது போல் லேசாகத் தலை அசைப்பார் அவ்வளவுதான் அவருடைய "Communication". "சாப்பாடு வேளைகளில்", "ஏதாவது பெரியம்மாவிடம் சொல்லவேண்டும்", "குதிக்க வேண்டாம்" என்று எங்களைக் கண்டிக்க" என்று  மட்டுமே மேலே வருவார். பணியாளர்களிடம் பேசும் போதும் அச்சகத்தில் நாங்கள் ஓடி விளையாடினால் சிறிது கடிந்து கொள்ளும்போதும்  என வெகு சில தருணங்களில் மட்டும் தான்  நாங்கள் அவரின் குரலைக் கேட்டிருக்கிறோம்.

அவராக எங்களிடம் பேச மாட்டாரே தவிர நாங்கள் அவரிடம் பேசுவோம். "வயிறு வலிக்கிறது என்றால் அவரிடம் தண்ணீரில் கலந்து குடிக்கும் "Eno" மருந்து கேட்க,  எழுதுவதற்கு பேப்பர் கேட்டு, எங்கள் நோட்டு புத்தகங்களை Binding செய்யச் சொல்லி" என்று நாங்கள் சரளமாகப் பேசுவோம்.  

நாங்கள் என்று மட்டுமல்ல...யார் எப்பொழுது எந்த வேளையில் வந்தாலும் சாப்பிடலாம். தங்கலாம். எங்களுக்கு தினமும் தின்பண்டம் வாங்குவதற்கு "Pocket Money" கொடுப்பார். பத்து பதினைந்து பேர் வரிசையாக நிற்போம். சில்லறை ரெடியாக வைத்திருப்பார். 10 பைசாவில் தொடங்கிய Allowance 25 பைசா வரை உயர்ந்தது பின்னர் நாங்கள் வளர்ந்துவிட்டோம். பணியாளர்களுக்கு வாங்கும் பஜ்ஜி, போண்டா எல்லாம்  எங்களுக்கும் வரும். கேட்காமலேயே!!! ஒரு பட்டாளத்துடன்  நைட் ஷோ சினிமாவிற்கும் சென்றிருக்கிறோம் அவருடன்.

ஒன்றாவது வகுப்பில் தொடங்கி கல்லாரி முடியும் வரை நாங்கள் அங்கு சென்று கொண்டு தான் இருந்தோம். அச்சகம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி தொழில் நுட்ப வளர்ச்சியால் தளரத் துவங்கிய காலத்திலும் சரி எங்களுக்கென்னவோ வரவேற்பு, உபசரிப்பு  ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒரு கணத்திலும் எங்களை அழையா விருந்தாளியாக அவர் நினைத்ததில்லை.

தொழில் சிறிது சிறிதாக நலியத் துவங்கியதும் பொருளாதார ரீதியான பாதிப்பு அவரைத் தாக்க, அதையும் தைரியத்துடனேயே எதிர் கொண்டார். 
" பணத்தை தனக்கென்று சேர்த்து வைக்காம கஷ்டபற்றாரே, பசங்க கல்யாணத்துக்கு நிறைய செலவு செய்துட்டார் ...பொழைக்காத தெரியாத மனுஷர்" போன்ற பேச்சுக்களையெல்லாம் அவர் சட்டை செய்ததில்லை. தனது அச்சு இயந்திரங்களை ஒன்றொன்றாக விற்ற பின் சிறிதும் கவுரவம் பார்க்காமல் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் ஓர் அச்சகத்தில் வேலைக்கு சேர்ந்தார். "கரிசனத்துடன் வாழ்ந்த அவருக்கு கணக்கு செய்து வாழ தெரியவில்லை தான்" கலிகாலத்தில் இதை விட  வேறு பெரிய தவறு இருக்கிறதா என்ன?!

நாங்கள் அனைவரும் வளர்ந்து Life-ல் செட்டில் ஆன  பிறகு அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் " சும்மா என்னால இருக்க முடியாது" என்று மறுத்து விட்டார். 18 வயதிலிருந்து 80 சொச்சம் வயதுவரை ஓயாது உழைத்த அவர் கொரோனவால் இரண்டு மாதத்திற்கு மேல் வீட்டில் முடக்கப்பட்டார். கட்டாய ஒய்வை நிரந்தர ஓய்வாக மாற்றிக் கொண்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் (யாரும் எதிர் பாரா வண்ணம் மாரடைப்பால்  இறைவனடி சேர்ந்தார்). தொழிலாளியாக ஆரம்பித்த அவர் வாழ்க்கையை தொழிலாளியாகவே முடித்தார். 

அவர் வீட்டில் உண்டு, உறங்கி வாழ்ந்த நாங்கள்.... மூச்சுக்கு முன்னூறு தடவை "பெரியம்மா வீடு...பெரியம்மா வீடு" என்று கூறி வந்த எங்கள் மனது   முதல் முறையாக பெரியப்பா வீடு என்று நினைக்கத் தோன்றுகிறது. பெரியப்பா அனுமதியின்றி எங்கு வரும் நாங்கள் கொண்டாடும் பெரியம்மா வீடு?! அன்பை வெளிப்படுத்தத் தான் எத்தனை வழிகள்!!! அவர் தேர்ந்தெடுத்த வழி "உபசரிப்பு".

அவருக்கு நம் உதவி  தேவை என்று உணர்ந்த சமயங்களில் எல்லாம் அவர் கூப்பிடாமலேயே (இதுவரை அவராக  எதுவும் கேட்டது கிடையாது) அங்கு சென்று பல வழிகளிலும் உதவிய நாங்கள் இனியும் இணைந்து நிற்போம். பல்வேறு தேசங்களில்  வாழும் பதினைந்திற்கும் மேற்பட்ட எங்கள் 
"Cousin"-களை இணைக்கும் ஒரே புள்ளி "பெரியப்பா வீடு".

அவர் வாழ்வில் சேர்த்து வைத்த சொத்து  என்ன என்று புரிந்து கொள்ள சிலரால் மட்டுமே முடியும்!!! அதில் ஒருவராக நீங்கள் இருப்பீரென்றால் மகிழ்ச்சி!!!