Sunday, September 13, 2020

Cool Dude

நம்மில் சிலருக்கு அம்மா வழி தாத்தா பாட்டிகளின் பேரிலும் சிலருக்கு அப்பா வழி தாத்தா பாட்டிகளின் மேலும் அதிக பிரியம், அபிமானம் இருப்பதுண்டு ஆனால் எங்களுக்கோ இரு இடத்திலும் ராஜ உபச்சாரம் என்பதாலும் அவர்களோடு நேரம் செலவிட சரிசமமான  வாய்ப்பு அமைந்ததாலும்    இருசாராருக்குமே எங்கள் மனதில் முதலிடம் இருந்தது அதிலும் முக்கியமாக எங்கள் அம்மா வழி தாத்தா. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் அவரை பார்த்து வந்திருக்கிறேன் எனினும் அவர் அந்த காலத்திலிருந்தே ஒரே மாதிரியாகத் தானே இருக்கிறார்?! என்ற எண்ணம் என்னுள் எழுவதுண்டு!!!

ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல அவ்வப்போது வருவார். சராசரியான உயரமும் ஒல்லியான உடல் வாகும் கொண்டிருப்பார். சுண்டினால் சிவக்கும் சிவப்பு நிறம். இரண்டு கை விரல்களிலும் நீட்டமாக நகம் வளர்த்திருப்பார். வழுக்கைத் தலை. அதிகம் பேசமாட்டார். திருநீறு அணிந்திருப்பார். இரு கைகளிலும் பச்சை குத்தியிருப்பார். வெள்ளை வேஷ்டி, அரைக்கை  சட்டை.

தனது ஐம்பதுகளிலேயே சில  பற்களை இழந்திருந்தார் அதனால் மிக மெதுவாகவே சாப்பிடுவார். பொறியலில்  இருக்கும் கடுகு, பருப்பு போன்றவற்றை ஓரத்தில் ஒதுக்கி ஒதுக்கி சாப்பிட்டு முடிகையில் தட்டும் கைகளும் உலர்ந்திருக்கும். அதைப்பார்த்து காப்பி அடித்து என் தங்கை  திட்டு வாங்கியது வேறு கதை!!! வெற்றிலை போடும் பழக்கம் உண்டு என்பதால் அவரிடம் அவ்வப்போது பாக்கு வாங்கி சாப்பிட்டதும் இடிப்பானிலிருந்து நன்கு அரைத்த வெற்றிலை பாக்கு கலவையை சுவைத்ததும் உண்டு. அவர் முகச் சவரம் செய்து முடித்ததும் எதோ பனிக்கட்டி போல் இருக்கும் வெள்ளைக் கல்லை கன்னத்தில் தேய்த்துக் கொள்வார் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாயில் ஈ போவது தெரியாமல் அமர்ந்திருப்போம்!!!

கணக்கராக அவர் வேலை பார்த்த மில் ஒரேயடியாக இழுத்து மூடிய பின் அவர் முழு நேர வேலைக்கு எங்கும் சென்றதாக என் நினைவில் இல்லை. மில் வேலை பறி போகப் போகிறது என்று தெரிந்தும் ராஜினாமா செய்யாமல் (செய்பவர்களுக்கு பணம் கொடுத்தார்களாம்) கடைசி வரை அங்கேயே இருந்ததைப் பற்றி அடிக்கடி பாட்டி திட்டிக் கொண்டிருப்பார். எதைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ள  மாட்டார். இப்போது இவ்வாறு இருப்பவர்களை "Cool Dude " என்கிறோம்  ஆனால் அப்போது?!

வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் மிகச் செல்லமாக வளர்ந்தவர் என்று அம்மா சொன்னதுண்டு. தோட்டம், வயல் என்று இருந்த சொத்துக்களை கோர்ட்டில் தன் தங்கைகளிடம் இழந்தவர் கடைசியாகத்  தன் பெயரில் இருந்த வீட்டையும்  விற்று  சித்திகளின் திருமணத்தை முடித்தார்.

அந்த கால ஆங்கில மீடியத்தில் ஆறாம் வகுப்பு வரை படித்திருந்தார் அதனால் சரளமாகவே ஆங்கிலம் வாசிப்பார். தமிழ் பத்திரிக்கைகளும் அம்புலிமாமா கதை புத்தகங்களும் அவர் வாய் விட்டு வாசிப்பது எங்களுக்கு சிரிப்பாக இருக்கும். பாடுவது போல் படிப்பார். கணக்கில் கில்லாடி. அவ்வப்போது எங்களிடம் ஐம்பது காசு கொடுத்து அவருடைய  பேனாவுக்கு மை ஊற்றிக் கொண்டு வருமாறு கடைக்கு  அனுப்புவார். மீதி காசு கொடுக்கும் போது கணக்கு சரியாக இல்லாவிட்டால் "மண்டூ  மண்டூ  " என்று திட்டி...ஒரு Filler மை-யின் அளவு என்ன?!  எத்தனை  "Ounce " மை பேனா கொள்ளும் என்று எங்களை ஒரு வழி செய்து விடுவார்.

இந்த கால தாத்தாக்களைப் போல எங்களுக்கு தின்பண்டம், விளையாட்டுப்  பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை ஆனால் பள்ளி விட்டு வரும் பொழுது பாட்டி வீட்டில் இல்லாத பட்சத்தில் இனிப்பு தித்திக்க டபுள் ஸ்ட்ராங்கில்  ஒரு டீ போட்டுக் கொடுப்பார் பாருங்கள் இப்போது நினைத்தாலும் நாக்கில் இனிக்கிறது. சில நேரம் காலை வேளையில் ராகிப் புட்டு வாங்கி வருவார் அதிலும் எக்ஸ்ட்ரா சர்க்கரைச் சேர்த்தே கொடுப்பார்.

அஜீரணக் கோளாறு இருந்ததால் பெரிதாக ஏப்பம் விடுவார். மருத்துவமனை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் அப்பாவிடம் மாத்திரை கொண்டு வரச் சொல்லி சாப்பிடுவார். சில நேரங்களில் ரஸ்க்  மட்டுமே அவருடைய ஆகாரம். எங்கும் நடந்தே செல்வார். அவர் மருத்துவமனை சென்று நான் பார்த்ததில்லை. எங்களோடு சேர்ந்து கேபிள் டிவியில் போடப்படும் "ஜுராசிக் பார்க் " போன்ற படங்களை காதில் கை வைத்து வசனங்களை கூர்ந்து  கேட்டு ரசிப்பார்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில் பாட்டி இறந்து விட்டார். வீட்டிற்குள் வழுக்கி விழுந்தபடியால் தாத்தாவால்  walker வைத்துக் கொண்டு மட்டுமே நடக்க முடியும் என்றானதால் சென்னையில் இருந்த மாமா வீட்டில் சென்று தங்கி விட்டார். எட்டு வருடத்திற்குப் பின் மாமா வீட்டிற்கு கல்லூரி விஷயமாகச் சென்றபோது பார்த்தேன். சற்று மெலிந்திருந்தாலும் அதே போலவே இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மற்றபடி எந்த உடல் உபாதையும் இல்லை. தொலைக்காட்சி, தினப் பத்திரிகை என்று நிகழ்காலத்தோடு தொடர்பில் இருந்தார் எனினும் அவரால்  மிகப் பழைய விஷயங்களை மட்டுமே  நினைவு கூற முடிந்தது. அவருடைய குழந்தைகளையே அவரால் சரியாகக் கணக்கில் கொண்டுவர இயலவில்லை.

அப்போதும் அவர் அதைப் பற்றி பெரிதாக  அலட்டிக் கொள்ளவில்லை...பதட்டம் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்ற தனது பாணியையே பின்பற்றிக் கொண்டு இருந்தார். பெரும்பாலான நேரங்களில் பிரட், பால் மட்டுமே சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

இரண்டு வருடத்திற்குப் பின் என்னுடைய நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் சிறிது நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினார். எங்கள் அப்பாவை ஒருமையில் அழைப்பதும், என் தம்பியிடம் மிட்டாய் கொடு என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேட்பதும் இரண்டு ரூபாயைக் காட்டி அரையணா என்று கூறுவதும் என்று காமெடி செய்து கொண்டிருந்தார். மருந்து இல்லை மாத்திரை இல்லை மருத்துவர்களின் தேவையும் அவருக்கு இருக்கவில்லை. கண் பார்வை மங்கவில்லை.

தன்னுடைய கடைசிக் காலத்தில் கூட யாருக்கும் எந்தவித உபத்திரவமும் கொடுக்கவில்லை. எங்கள் சித்தி வீட்டில் இருந்த அவர் தன்னுடைய 80+ வயதில் அதிகாலையில் இவ்வுலகை விட்டு மறைந்தார். என்னுடைய பிரசவத்திற்காக அமெரிக்கா  வந்திருந்த என் அம்மாவால் கூட செல்ல முடியவில்லை. வயசாயிருச்சு இல்ல என்று அவர் தன்னைத் தேற்றிக் கொண்டதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. 

தாத்தா...பொக்கை வாய் சிரிப்புடன்  எங்கள் நினைவுகளில் இன்றும்  இனித்துக் கொண்டுதான் இருக்கிறார்...