Thursday, February 25, 2021

பராக் ..பராக்

வருடாந்திர பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். கொரோனா காலமாதலால் கூட்டமே இல்லை. வழக்கமான கேள்விகளுக்கு பிறகு நீங்கள் உங்கள் அழைப்பு வரும் வரை காத்திருக்கலாம் என்று கூறிவிட இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தேன். எனக்கு முன் ஒரே ஒரு பெண்மணி காத்துக் கொண்டிருந்தார். சுற்றும் முற்றும் பார்த்தேன். கையில் வைத்து புரட்ட வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களும் அகற்றப்பட்டிருந்தது. தொலைக்காட்சியில் பழைய வீட்டை புதுப்பித்து எவ்வாறு அதிக விலைக்கு விற்பது என்பதைப் பற்றிய நிகழ்ச்சி மௌன மொழியில் ஓடிக் கொண்டிருந்தது. புதுப்பித்த தங்கள் வீட்டைப் பார்த்து ஓர் தம்பதியினர் ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லாமல் எனக்கு பின் வந்த இருவரைப் போல கைபேசியை நோண்ட ஆரம்பித்தேன். அதில் ஒருவருக்கு அலுவலக மீட்டிங் போல மிக கவனமாகக் ஹெடிபோனில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பொதுவாகவே எனக்கு மருத்துவரைப் பார்ப்பது மருத்துவமனை விசிட் என்றாலே அலர்ஜி தான். என்னுடைய தந்தை மருத்துவமனை அலுவலக ஊழியராக இருந்ததால் காய்ச்சல், தலைவலி மாத்திரைகளும், தைலங்களும், களிம்புகளும் வீட்டிலேயே இருக்கும் சில சமயம் Antibiotics கூட நாங்களாகவே அப்பாவின் வழிகாட்டுதலின் பேரில் சாப்பிடுவதும் உண்டு. (பிற்காலத்தில் என் அண்ணன் கூட என் அப்பாவை போலி மருத்துவர் என்று கேலி செய்ததுண்டு)  ஆதலால் மழைக்கு கூட ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்குவது இல்லை.

நான் தான் இப்பிடி என்றால் எனக்கு மணாளனாக வாய்த்தவர் எனக்கும் ஒரு படிக்கு மேலே!!! மாத்திரை கூட சாப்பிட மாட்டார். ரெண்டு நாள்ல தானா சரியாயிடும் என்று இருப்பவர் ஆகவே No Hospital. இருந்தும் ஒரு சில விஷயங்களுக்கு மருத்துவரைப் பார்த்துத்தானே ஆக வேண்டும். 

திருமணமான சில மாதங்களிலேயே..இத்தேசத்திற்கு வந்த புதிதில்  டாக்டரைப் பார்க்க வேண்டிய சூழல் உருவானது. ஊரில் என்றால் இந்த மாதிரியான விஷயங்களுக்கு அம்மாவை அழைத்துக் கொண்டுதான் போவோம் ஆனால் இந்த அமெரிக்க வாசத்தில் நமக்கு ஒரே சொந்தம் தானே!!!

Appointment எல்லாம் வாங்கிக் கொண்டு அங்கு சென்று அமர்ந்தால் அங்கு மையான அமைதி. கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல மெல்லிய பாடல் எதிலோ ஒலித்துக்  கொண்டிருந்தது . ஏற்கனவே குமட்டிக் கொண்டிருந்த எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. இதுல என்ன இருக்குன்னு நீங்க நினைக்கிறது புரியுது.. அமெரிக்க ஆஸ்பத்திரி எப்பிடி இருக்கும்னு எனக்கு தெரியாது இல்லையா ? நான் நம்ம ஊரு தெருமுனை லேடி டாக்டர் கிளினிக்கை மனதில் வடித்துக் கொண்டு வந்திருந்தேன்.

அம்மாவோடு வரும் இளம்பெண்கள், போர்வையால் முக்காடு போட்டுக் கொண்டு வரும் தாதாக்கள், அழகாக பொட்டு வைத்துக் கொண்டு தனக்கு தடுப்பு ஊசி குத்தப் போகிறார்கள் என்று தெரியாமல் எச்சில் வழியச் சிரித்துக் கொண்டிருக்கும் பாப்பாக்கள், எனக்கு ஊசி வேணாம் என்று அழுது ஆர்ப்பாட்டம் போட்டு அப்பாவிடம் கொட்டு வாங்க ரெடியாக இருக்கும் சிறுவர்கள், "எவ்வளவு நேரமா உக்காந்திருக்கீங்க? டாக்டர் வந்துட்டாரா?" என்று விசாரிக்கும் பெண்மணிகள், "அவசரப்படாதீங்க..பேரைக் கொடுத்துட்டு உக்காருங்க" என்று சிடு சிடுக்கும் மருத்துவ சிப்பந்திகள் என்று  பார்த்துப் பழகிய எனக்கு முற்றமைதியும் முண்டி அடிக்கும் மக்கள் கூட்டமும் இல்லாத அமெரிக்க மருத்துவமனைகள் ஏமாற்றமே.   

இங்க என்னைப் பத்தி உங்களுக்கு சொல்லியே ஆகணும் ..  எனக்கு வேடிக்கை பாக்குறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ரெண்டாவது மூனாவது படிக்கும் போது மரத்தடி கிளாசில் வேடிக்கைப் பார்த்து அடிக்கடி திட்டு வாங்கியதுண்டு. எப்ப பாத்தாலும் பராக்கு என்று டீச்சர் என் கொழு கொழு கன்னத்தைப் பிடித்து கிள்ளுவதும் காதைப் பிடித்து திருகுவதும் வழக்கம். சில சமயங்களில் ரோட்டில் சினிமா போஸ்டர் பார்த்துக் கொண்டே நடந்து முன் பின் தெரியாதவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. பராக்கு பார்த்துக் கொண்டு சைக்கிள் சக்கரத்தில் கால் விட்ட Record எல்லாம் எனக்கு உண்டு. இவ்வளவு ஏங்க..ஹோட்டலுக்கு சாப்பிட போனாலே நாலு பேரு தட்டுல என்ன இருக்குன்னு பாத்துட்டு ஆர்டர் கொடுக்குற மக்கள் தானே நம்மளெல்லாம்.. வேடிக்கை பாக்குறது எனக்கு ரத்தத்திலே ஊறி போச்சு.. விமானதுல கூட முன்னாடி, எதுக்க இருக்குறவன்லாம் என்ன படம் பாக்குறாங்கன்னு பாத்துட்டு Movie choose பண்ற Category நானெல்லாம் !!!

அப்ப இங்க எப்பிடி தான் காலம் தள்றீங்கன்னு நீங்க கேக்குறது புரியுது? என்ன பண்றது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இங்கும்  கிடைக்கிற Magazine-யை புரட்டிகிட்டே வர்ற போறவங்க, Receptionist -ன்னு ஒன்பது மாசமும் பாத்துகிட்டும், ஆபீசுக்கு நேரமாகுது இன்னும் கூப்பிட மாட்டேங்குறாங்கன்னு பக்கத்தில் உட்கார்ந்து புலம்பும் கணவரிடம் உடனே பாக்காதீங்க.. Casual-ஆ பாருங்கன்னு  காட்டிக் கொண்டும்   தான் இருந்தேன். வயிற்றை தள்ளிக் கொண்டு வந்தவர்களெல்லாம் கார் சீட்டில் பச்சை குழந்தையோடு வருவதைப் பார்ப்பது பரவசமாகத் தான் இருக்கும். மற்றவர்களை உறுத்தாத வகையில் மேலோட்டமாக வேடிக்கை பார்ப்பது நமது பிரச்சனையை சில மணி  நேரமாவது  மறகடிக்கச் செய்து மனதை லேசாக்கும்  என்பது உண்மை தானே!!

தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலே ஆமை தன் ஓட்டில் ஒடுங்கிக் கொள்வது போல  வந்த உடனேயே அனைவரும்  மொபைலில் முழ்கி விடுகிறார்கள் குழந்தைகள் உட்பட. யாரும் யாரையும் முகத்தை தூக்கிக் கூட பார்ப்பது இல்லை அதனால் தான் என்னவோ கொரோனா வந்து மாஸ்க் உடன் வந்தாலும் யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. 

நேற்று கூட மொபைலை பார்த்தவாறே எனக்கு பிறகு வருபவர்கள் கூறும் பிறந்த வருடத்தைக் கேட்டு கொண்டே   "அடடே நம்மள விட சின்ன பொண்ணா இருக்காளே, நம்ம அம்மா வயசு இருக்கே இவங்களுக்கு" என்று டைம் பாஸ் செய்து கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமே என் பெயர் அழைக்கப்பட்டு விட்டது (என் பெயர் தானா? ஏதோ அவர்களுக்கு தெரிந்த உச்சரிப்பில் கூப்பிடுகிறார்கள் என்ன செய்வது !!) 

டாக்டரை பார்த்துட்டு வந்து உங்ககிட்ட பேசறேன் அதுவரைக்கும் Observe Do Not Stare 😊