Monday, August 2, 2021

அலைகள்

"சீனா-ல கொரோனா என்ற பேர்ல வைரஸ் பரவுதாம்? மூச்சுக் காத்துலயே தொத்துற இந்த வைரஸ் வந்தா மூச்சு விட முடியாம கஷ்டப்படுவாங்களாம்..அப்புறம்  கொத்து கொத்தா மனுஷங்க  சாகுறாங்களாம்.. அதனால அங்கயெல்லாம் மக்கள வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சு சோறு தண்ணி குடுக்குறாங்களாம்..இங்கயும் எப்பிடியும் வந்துருமாம்" 

என்ன மேல இருக்குற விஷயங்களை படிச்சா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க..2020 பிப்ரவரி வாக்குல இந்த செய்திகளை எல்லாம் கேக்கும் போது, பார்க்கும் போது  ஏதோ சந்திரமுகி படத்துல பேய்க்கு பயந்து வடிவேலு பேசுற வசனங்களைப் போல நான்  லேசா எடுத்துகிட்டேன் ஆனா Constantine படத்தை போல  இந்த கொரோனா பயமுறுத்தும்ன்னு இந்த ஒன்னரை வருஷத்துல நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்.

உலகமே நம் உள்ளங்கையில் என்று உவகையோடு  இருந்த நம்மை இந்த கொரோனா தனது கைக்குள் அடக்கி.. 5ஜி இன்டர்நெட்டை விட வேகமாக தேசமெங்கும்  பரவி, நம்மை House Arrest செய்தது. அகதிகளைப் போல நம்மை  ஒரே இடத்தில பூட்டி விட்டு, பாஸ்போர்ட், விசா இல்லாமல்  உலகம் முழுவதும் சுற்றி வருகிறது இந்த பாழாய் போன கொரோனா.  

இந்த கொரோனவால் பல்வேறு நல்ல விஷயங்களும், இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று நாம் நினைத்த நிகழ்வுகளும் அரங்கேறியது மறுக்க முடியாத உண்மை  உதாரணமாக நமது வரவேற்பறைக்கு வந்த வகுப்பறை!!! வேலை வேலை என்று Workaholics ஆக இருந்தவர்களுக்கு கூட கட்டாய விடுமுறை, குடும்பத்தாருடன் செலவழிக்க அதிக நேரம். மனதிற்கு பிடித்த பல விஷயங்களை செய்வதற்கும் நாமே அறியாமல் நம்மில் உறங்கிக் கொண்டிருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கும்  கிடைத்த கால அவகாசம். பல வருடங்களாக தொடர்பிலே இல்லாத பலருடன் இந்த கொரோனா கால கட்டத்தில் தொலைபேசி வழியாக பேசிய நண்பர்களை  நான் அறிவேன்.

நானும் என்னுடைய பங்கிற்கு 2020 ஏப்ரல், மே வாக்கில்  ஒன்று விட்ட சித்தப்பா, அத்தை என்று அனைவரிடமும் தொலை பேசினேன்  "அமெரிக்காவிலே தான் கொரோனா வேகமா பரவி நெறைய பேர் சாகுறாங்களாம்..பத்திரமா இருங்க..எப்பிடி இந்த அளவுக்கு விட்டாங்க" என்று கை கொட்டி சிரிக்காத குறையாக எனக்கு அவர்கள் Counter கொடுக்க, அவர்களையும்  பத்திரமாக இருக்கச் சொல்லி எச்சரித்தேன்.

கொரோனா வந்து அவரவர் வீட்டிலேயே முடங்க பலர் தங்கள் சொந்த ஊரைப் பார்த்து செல்ல ஆரம்பித்தனர் அதன் பலனாக 20 வருடங்களுக்கு மேல் தனியாக வாழ்ந்த பல பெற்றோர் தங்கள் குடும்பத்தோடு வாழும் வரத்தைப் பெற்றனர். Senior citizens-ம் இப்பொது கேபிளை துண்டித்து விட்டு Netflix, Prime-ல் படம் பார்க்கின்றனர். 

 பல வருடங்களாகப் பேசிக் கொள்ளாத உறவுகளும் பகையை மறந்து  ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டதை நான் கண்கூடாகக் காணப் பெற்றேன். பல குடும்பப் பிரச்சனைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக Freeze ஆகி நிற்கின்றன. "திருமணம்" படத்தில் சேரன் கூறியதைப் போல ஆடம்பரம் இல்லாத திருமணங்கள் நடைபெற்றன. வீட்டிலேயே திருமணம் என்றால் கொ.முன்  யாராவது நம்பி இருப்பார்களா? "தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் கடவுள்" என்பதை உணர்த்தும் விதமாக கோவில்களும் மூடப்பட்டது வரலாற்று நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்!

நாமும் பல வருடங்களாக இன்டர்நெட், WhatsApp, Zoom எல்லாம் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் அதில் பிறந்தநாள் கொண்டாடவில்லையே ஏன்? வீட்டு விசேஷங்களை வெளிநாடு வாழ் உறவுகளுக்காக  அதில் நேரலையாக ஒளிபரப்ப தோன்றவில்லையே? 

காவல் துறை, மருத்துவத் துறை - இவர்களின் மேல் மக்களுக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை ஆனால் இந்த கோவிட் கால கட்டத்தில் First Responders என்ற பெயரில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு உதவிய இவர்கள் அல்லவா True Heroes (Avengers?)

இந்த கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்காக, மருத்துவ வசதிக்காக, எதிர்பாரா விபத்துகளில் சிக்கியவர்களுக்காக, கல்வி கட்டணம் செலுத்துவதற்காக  என்று நாம் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து உதவி "அன்பே சிவம்" என்று நிரூபித்ததும் நாம் என்று பெருமை பட்டுக் கொள்வோம் 

இவ்வாறு Pandemic Period-ல் தொலைந்த உறவுகள்  எல்லாம் அருகில் வர நம்மில் பலர் நெருங்கிய உறவுகளை இழக்க நேரிட்டது என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும். Lockdown, Quarantine, Social-Distancing..அப்பப்பா கொடுமை நம்மளால முடியாது என்று நாம் சகஜ நிலைக்கு திரும்ப நினைக்கும்  நேரத்தில் எல்லாம் நம் காதில் விழும் அவல செய்திகளைக் கேட்டு தன்னுடைய ஓட்டில் தலையை இழுத்துக் கொள்ளும் ஆமையைப் போலத் தான் ஒடுங்கி  வாழ வேண்டி இருக்கிறது.

ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, சிற்றலை, பேரலை என்றவர்கள் தடுப்பு ஊசி வந்தால் கொரோனோவை ஒழித்து விடலாம் என்று ஒன்றுக்கு இரண்டு ஊசியை குத்தினார்கள்.. இதோ  இப்போது மூன்றாவது அலைக்குத் தயாராகி விட்டார்கள். தன்னுடைய ஒற்றை சொடுக்கில் உலகத்தை அழிக்கும் Thanos ஐ  விட கொடூரமாக மக்களை துன்புறுத்தி மடிய வைக்கும்  இந்த கொரோனாவோ எனக்கு "End Card" ஏ இல்லை என்று சிரித்துக் கொண்டிருக்கிறதே!!!    

கொரோனா பரவலுக்கு நாம் "அரசு இயந்திரம், நிலையை உணர்ந்து செயல்படாத மக்கள், அவசர கதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி, வைரஸின் தீவிரம்" என்று பல காரணிகளை சுட்டிக் காட்டலாம் ஆனால் நாம் அனைவருமே பொறுமை காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரத்தில் இந்த Pandemic காலத்தில் நாம் கண்டு செய்த பல  நல் முயற்சிகளை தொடர்ந்து முன் எடுத்துச் செல்வதும் அவசியமாகிறது. மனிதர்களை அழித்த கொரோனா மனித நேயத்தை வளர்த்தெடுத்ததா?

கொரோனாவை முழுமையாக ஒழித்துக் கட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. End Game is Approaching...