Thursday, September 9, 2021

ஆனந்த தாண்டவம்

முதன் முதலாக பரதநாட்டிய அரங்கேற்றத்தை நேரில் காணும் வாய்ப்பு!!!நிகழ்ச்சியைக் குறித்து அமைப்பினர் (Host) கூறிய விளக்கங்கள், அரங்கேற்ற ஏற்பாடுகள்  மற்றும் கண்ணைக் கவரும் அழைப்பிதழ்கள் போன்றவை எங்கள் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு இட்டுச் சென்றன என்றாலும் மூன்று மணிநேரம் அமர்ந்து பார்க்கும் வகையில் "Engaging" மற்றும் "Entertaining" ஆக இருக்குமா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

என்னுடைய நம்பிக்கையின்மைக்குக் காரணம் பரதத்தைக் குறித்து எனக்கு இருந்த குறுகிய அறிதல் தான். நான் என்றில்லை நம்மில் பலருக்கும்  "Classical Dance" என்றாலே புரியாத பாஷையில் ஒலிக்கும் பக்திப்  பாடல்களுக்கு நடனமாடும் தூர்தர்ஷன் "நாட்டியாஞ்சலி" நிகழ்ச்சிகளும் பள்ளி ஆண்டு விழாவில் ஆடப்படும் பரத நாட்டிய திரைப்படப் பாடல்களும் தான் நினைவுக்கு வரும். திரைப்படங்களில் காட்டியதால் தான் ஓரளவிற்காவது பரதத்தைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைத்தது என்று கூறினாலும் மிகையாகாது!!!

இவ்வாறான எண்ணத்துடன் அரங்கிற்குள் நுழைந்த எனக்கு வரவேற்புரை, ஆசிரியர் அறிமுகம் என்று  நிகழ்ச்சிகள் துவங்கி சில மணித்துளிகள் சாதாரணமாகத் தான் இருந்தது. முழு முதற் கடவுள் விநாயகருக்கான நடனம் என்று முன்னுரை வழங்கிய பின் மேடையில் ஒளி மாற்றங்களுடன் சகோதரிகளான சரயுவும் சிந்துவும் தோன்ற ஒரு வித உணர்வு மாற்றம் அரக்கெங்கும் பரவியது எனலாம்.

பரதத்தைப் பற்றிய Technical விஷயங்களெல்லாம் நம் பாமர அறிவிற்கு அப்பாற்பட்டது எனினும் அவ்விருவரின் பாவம் (Bhavam) அங்கிருந்த அனைவரிலும் ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐயப்பனைப் பற்றிய கதையை ஆசிரியை விளக்க இவ்விருவரும் நிமிடத்திற்கு நிமிடம் என முகத்தில் உணர்ச்சிகளை மாற்றி   நவரசத்தையும்  ஆடலுடன் கலந்து  Enact செய்த விதம் புல்லரிக்கச் செய்தது.

ஒருவர் சிவனாக மாற மற்றொருவர் சக்தியாக மாறுகிறார், குறும்பு செய்யும் கண்ணன் அடுத்த பாடலில் "மாலை மணிவண்ணா" என்று ஆண்டாளாக அவதரிக்க, யசோதை திருமாலாகி தெய்வீக சிரிப்பில் காண்போரை கவர்ந்திழுக்கிறார்.

இவ்விருவரிடம் தோன்றிய முக பாவனைகள் இவர்களின் ஆசிரியை முகத்திலும் மின்னல் வேகத்தில்  தோன்றித் தோன்றி மாறியதையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

இவ்வாறு மெய் மறந்த நிலையில் இருந்த  நம்மை ஒரு சிறு இடைவேளை என்று தட்டி எழுப்பினர்.

இப்பொது மனதில் இருந்த சந்தேகம் முற்றிலும் அகன்றிருக்க Second Half-யை பார்க்க மனம் பரபரத்தது. குடுத்த சிற்றுண்டியை  அரக்க பரக்க முடித்துவிட்டு அரங்கிற்குள் முழு ஆர்வத்துடன் நுழைந்தோம்.

ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், தாண்டவம்  என்று அனைத்தையும் ஆடலில் கொண்டுவந்து திரிபுர சுந்தரியாகவும், ஆடல் கடவுள் நடராஜராகவும் மேடையெங்கும் பரவி, நாங்கள் இருவர்..இல்லை..இல்லை  இருவரும்  ஒருவர் என்று மாயம் காட்டிப் பின்னிப் பிணைந்து   இரட்டைச் சகோதரிகள்  ஆடிய நடனத்தைக் காண இரண்டு ஜோடிக்  கண்கள் இருந்திருக்க வேண்டும்!!! 

அவ்வப்போது  நண்பர்கள் கூட்டம் கைதட்டி ஆர்பரித்தும் ஆரவார சப்தங்கள் எழுப்பியும் நடனக் கலைஞர்களின் உற்சாகம் குறையாத வகையில் ஊக்கம் கொடுத்தனர். 

பார்வையாளர்கள் பலரின் மனதில் அவர்களின் இளமைக்கால நடன அனுபவங்கள் நிழலாடிக் கொண்டிருக்கையில், நம் குழந்தையும் இவ்வாறு நடனமாடினால் எவ்வாறு இருந்திருக்கும் என்ற கற்பனையும் கண்டிப்பாக இணைந்திருக்கும். என் கண்களுக்கோ சிந்துவும் சரயுவும் பத்மினி, ஷோபனா, பானுப்பிரியாவாக உருமாறி இருந்தனர். 

பல இளம் உள்ளங்களில் தானும் இந்த  ஆடல் கலையை கற்க வேண்டும் என்ற உந்துதலையும் (Inspiration) இவ்விருவர் விதைத்து இருப்பார்கள்  என்பதையும் இங்கு குறிப்பிட்டாக  வேண்டும்.  

இவர்களின் இக்கலைத்திறனை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல் பலரின் முன்னிலையில் அரங்கேற்றியது வரை அவர்களுக்கு உறுதுணையாக திகழ்ந்த பெற்றோரின் உரையுடன், நண்பர்கள், உற்றார்கள், உறவினர்கள் என்று பலரின் வாழ்த்துச் செய்திகளும் காணொளி வடிவில் திரையிட்டுக் காட்டப்பட்டது நம்மை நிகழ்காலத்திற்கு அழைத்து வர உதவியது. 

தங்கள்  குருவின் திருக்கரங்களால் நிறைவுப்  பட்டத்தை வாங்கிய சகோதரிகள் தங்களின் இப்பயணத்தில் உடன் வந்த நபர்களுக்கு நன்றி சொல்ல மைக்கை கையிலெடுக்க  குறும்பும், குதூகலமும், இளமைத் துள்ளலும்  கலந்த செயற்கை அற்ற அவர்களின்  பேச்சு அரங்கத்தினரை சிரிப்பில் ஆழ்த்தியது. இதுவரை மேடையில் ஆடியவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லையோ என்று எண்ணம் எழுந்த  அதே வேளையில் பரதத்தில் எந்த அளவிற்கு ஈடுபாடும், கடின உழைப்பும், கவனமும் இருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்கும் என்றும் வியக்கத் தோன்றியது!!!  

இறுதியாக மங்கள நடனத்திற்கு முன் மேள வாத்தியங்களை மைய இசையாகக்  கொண்டு வெளிவந்த சினிமாப்  பாடல்கள் மற்றும் தங்கள்  தாய்மொழிப் பாடலுக்கு அவர்கள் ஆடிய நடனம் பார்வையாளர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து சீர்படுத்தியது.

மூன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை என பார்வையாளர்கள் பேசிக் கொள்வதை அரங்கத்தின் வெளியே கேட்க முடிந்தது இது இரட்டைச் சகோதரிகளுக்கு கிடைத்த வெற்றி அன்றி வேறல்ல.

இவ்வேளையில் இவர்களுக்கு சிந்து, சரயு என்று பெயர்  சூட்டிய இவர்களின் பெற்றோரை பாராட்டியே தீர வேண்டும். நதி போல் நளினமாக மேடை எங்கும் பரவி  நாட்டியமாடிய சகோதரிகளின் நடனச் சுழலில் சிக்காதவர்கள் அரங்கத்தில் இருந்தாரா என்பது சந்தேகமே!!!

இவர்களின் (நதிகளின்) இப்பயணம் மேலும் தொடர்ந்து கலைக்  கடலில் சங்கமிக்க  வாழ்த்துக்கள்!!!

"ஆடல் கலையே தெய்வம் தந்தது" என்பதுதான் எத்தனை உண்மை.