Friday, October 1, 2021

ஸ்வீட் எடு கொண்டாடு !!

இன்று காலையில்  எழுந்தவுடன் வழக்கம் போல்  போனை இயக்கி வாட்ஸப் குறுந்தகவல்களை புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு குழுமத்தில் இன்று உலக சாக்லேட் தினம் என்ற Forward வந்திருந்தது. இந்த இன்டர்நெட் யுகத்தில் தினமும் ஏதாவது சிறப்பு நாள் தானே!!! தினசரி காலண்டர் கூட இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் ஏதாவது ஒரு நாளை அச்சடித்து தூள் கிளப்புகிறார்கள்.

இந்த தகவல்கள்  எல்லாம் சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள்  எல்லாம் நான் செல்ல விரும்பவில்லை. நான் சொல்ல வந்தது என்னனா எப்போ இருந்து நமக்கு Chocolates மீது  இந்த Craze? எனக்குத் தெரிந்து எண்பதுகளில் பிறந்த பலருக்கும் தேன் மிட்டாய், பாக்கு மிட்டாய் போன்ற உள்ளூர் தயாரிப்புகள்  மேல் தான் காதல்.

எப்போது தொலைக்காட்சி முக்கிய மீடியமாக வளர ஆரம்பித்ததோ அப்போது தான் சாக்லேட் மோகமும் எட்டிப்பார்க்கத் துவங்கியது எனலாம். நம் நாட்டின் தட்பவெட்பத்துக்கு ஏற்ற சாக்லேட்டுகள் அதாவது Hard Candies தான்  முதலில் கடைகளில் கிடைக்க ஆரம்பித்தது. சந்து முக்குக் கடைகளில் பாக்கெட்டுகளில் தொங்கிக் கொண்டிருந்த, சிறு தொழிளார்கள் உற்பத்தி செய்த மிட்டாய்களின் இடத்தை பள பள காகிதத்தில்  Wrap செய்யப்பட்ட இந்த சாக்கலேட்டுக்கள் லாவகமாக எடுத்துக் கொண்டன. இவர்களுக்கோ  கண்ணாடி ஜாரில் சிறப்பு இடம் அளிக்கப்பட்டு, கடையின் முன் வரிசையில் அமர்த்தி  வைக்கப்பட்டார்கள்.

அப்பொது கூட புளிப்பு மிட்டாய்களுக்கும் நூலில் கோர்த்து சாப்பிடக் கூடிய சூடம் மிட்டாய்களுக்கும் மதிப்பு குறைந்து விட வில்லை. தொன்னூறுகளில் மெது மெதுவாக வீடுகளில் Fridge வாங்க ஆரம்பித்தார்கள். 5 Star என்ற மில்க் சாக்லேட் அறிமுகம் ஆனது. அனைவரும் அடித்து பிடித்துக் கொண்டு வாங்கி ருசித்தர்கள். பேப்பரை கூட விட்டு வைக்கவில்லை வாயில் போட்டு மென்று துப்பினார்கள் என்றால் இந்த காலத்து குழந்தைகள் நம்ப மாட்டீர்கள். நெடு நாட்களுக்கு இதை அடித்துக் கொள்ள ஆளில்லை.

மிட்டாய்கள் சாக்லேட்களாக பெயர் மாற்றம் அடைய , ஐம்பது பைசாவாக இருந்த விலையும் 5 ரூபாயாக பதவி உயர்வு பெற்றது. மூன்று, நான்கு குழந்தைகளாக இருந்த வீடுகளும் ஒன்று, இரண்டு என குடும்பத்தை சுருக்கிக் கொள்ள, போனால் போகிறது என்று விலையைப் பற்றிக்  கவலைப் படாமல் வியாபாரம் நடந்தது. பிறந்தநாட்களுக்கும் சாக்லேட் குடுக்கலாம் என்ற யோசனையும் அறிமுகமானது. சமயங்களில் வேலை நடக்க குழந்தைகளுக்கு லஞ்சமாகவும் கொடுக்கப்பட்டது  

இதில் இருக்கும் பால் குழந்தைகளுக்கு ஊட்டத்தை அளிக்கிறது என்ற பரப்புரையுடன் அடுத்த சில வருடங்களில்  Dairy Milk சாக்லேட் அறிமுகமானது, இப்பொது விளம்பரங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது கல்லூரி செல்லும் இளம் பெண்களையும் டார்கெட் செய்யத் தொடங்கி இருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமானதால் பெரும்பாலான சாக்லேட் விளம்பரங்களில் அவர்களே தோன்றினர்.

ஸ்னாக் ஆக இருந்த சாக்லேட் Comfort Food ஆக மாறியது. இக்காலகட்டத்தில் பல்வேறு பொருளாதாரப் படிகளில் இருக்கும் அனைவரையும் திருப்தி செய்யும் விதமாக பல்வேறு சாக்லேட்டுகள் சந்தையை மொய்க்க ஆரம்பித்திருந்தது. நன்றாக இருந்த நம் குழந்தைகளுக்கு பல் சொத்தையும் வர, டூத் பேஸ்ட். டூத் பிரஷ் என்று அந்த வணிகமும் கொடி கட்டிப் பறக்கத்துவங்கியது.

மில்லெனியும் வருடமும் வந்தது. இப்பொது சாக்லேட் என்பது குடும்பமாக ரசித்து ருசிக்கும் ஸ்னாக் ஆக மாறி இருந்தது. வீட்ல விசேஷமா ஸ்வீட் எடு கொண்டாடு என்று லட்டைத் திணித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிக் குடும்பங்கள் Chocolate-ஐ பிரித்து வாயில் போட்டுக் கொண்டன. இப்பொது சாக்லேட் பல்வேறு விதங்களில் வெளிவர ஆரம்பித்திருந்தது. காதலர்களின் கண் கண்ட தெய்வம், கை கொடுக்கும் தெய்வம் எல்லாம் சாக்லேட் தான்.

 Stress, Tiredness, Sadness, Frustration எதுவாக இருந்தாலும் ஒரு  சாக்லேட் சாப்பிட்டால் Mood மாறும், Relieve கிடைக்கும்  என்று இளைஞர்கள் நம்ப வைக்கப்பட்டனர். தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடும் யுவதிகளை நான் கண்டிருக்கிறேன். இப்பழக்கம் ஒருவகையான Addiction ஆக மாறியது எனலாம். முதலில் வெளிநாடு சென்றவர்கள் சாக்லேட் வாங்கி வருவது பெருமையாக பார்க்கப்பட்டது பின்  இன்டர்நேஷனல் சாக்லேட் எல்லாம் எங்கும் கிடைக்கத் துவங்கியதிலிருந்து அவர்களுக்கும் மவுசு குறைய ஆரம்பித்தது.

மருத்துவ ரீதியாக பல்வேறு பயன்களை சாக்லேட் அதாவது அதிலிருக்கும்  கோகோ அளிக்கும் என்று ஆய்வறிக்கைகள் வெளிவரத் துவங்கியிருந்த போது அதிலிருக்கும் சர்க்கரை காரணமாக உடல் பருமனும் குழந்தைகளிடத்தில் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. 

தற்போதைய கால கட்டத்தில் "கடலை மிட்டாய், கமர் கட்டு சாப்பிடுங்கள்..நம்முடைய ஊர்களில் தயாரிக்கப்படும் வெல்லம் கலந்த இனிப்புகளை சாப்பிடுங்கள் அது தான் உடல் நலத்திற்கு உகந்தது"  என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

எது எப்பிடியோ "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே!!!"