Friday, November 19, 2021

தானமும்..தர்மமும்

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல எந்த ஒரு விஷயத்தையோ, மனிதர்களையோ  எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால்  அதற்கும்/அவர்களுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அவை சிலருக்கு நல்லவையாகவும்/நல்லவர்களாகவும் சிலருக்கு கெட்டவையாகவும்/கெட்டவர்களாகவும் தெரிகின்றன உதாரணமாக சமூக வலைத்தளங்களையே எடுத்துக் கொள்வோமே? அங்க நல்லதும் நடக்குது..மத்ததும் இருக்குது. 

சமீப காலங்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலருக்கும் மருத்துவ/கல்வி உதவிகள் கோரி Go Fund Me போன்ற பக்கங்கள் வந்த வண்ணம் உள்ளன. நாங்களும் முடிந்த அளவு கல்லூரியில் படித்த நண்பர்களுக்கு, அவர்களின் உறவினர்களுக்கு என்று அதன் மூலம்  உதவிக் கொண்டுதான் இருக்கிறோம்.

நம்மில் பலருக்கும் இந்த மாதிரி பக்கங்களைப் பார்த்ததும் உதவ வேண்டும் என்று தான் தோன்றுகிறது ஆனால் நாம் எல்லோருக்குமா உதவுகிறோம்? நாம் தான் படித்தவர்கள் ஆயிற்றே இப்பிடியெல்லாம் தெரியாதவர்களுக்கு உதவி ஏமாந்துட்டோம்னா? என்ற கவலை/பயம் எப்பயுமே நமக்குள்ளே ஓடிகிட்டே இருக்கு அதனால என்ன பண்றோம் தெரிஞ்சவங்களா? உண்மையிலே உதவி தேவைப்படுதா? என்று பார்த்து பணம் அனுப்புகிறோம்.

இன்னும் சில பேர் நெருங்கிய உறவுகளுக்கு கல்வி/மருத்துவம்/திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து உதவுகிறார்கள். நாம தான் இதனை பேருக்கு தானம் பண்றோமே அப்புறம் என்ன சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களுக்கு உதவுவது என்று விட்டு விடுகிறார்கள்.

ரொம்ப நாளா இந்த கேள்வி என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு..நாம செய்றது எல்லாம் தானம் தானா? 

மாதத்திற்கு பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் நாம் அதில் சில ஆயிரங்கள் உதவியாகக் கொடுக்க இத்தனை Research செய்கிறோமே? ஆனால்  ஆட்டோ ஓட்டியோ, கட்டட வேலை பார்த்தோ பிழைப்பு நடத்தும் ஒருவர் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவரைப் பார்த்தாலோ, யாரேனும் உதவி கேட்டாலோ பத்து/ஐம்பதே னாலும் தயக்கமில்லாமல் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இதில எது உண்மையான தர்மம்? 

எங்க அப்பாவே இப்படி கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன் கேட்டால் உதவணும்னு குடுக்குறோம்..அதுக்கு மேல யோசிக்க கூடாதுன்னு சொல்லிடுவார்.

பகவத் கீதையிலும் கிருஷ்ணர் தானம் என்பது என்ன என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பதிலளிக்கையில் "தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்யும் தானமும், இதனால் எனக்கு என்ன பலன் என்று ஆராய்ந்து செய்யும் தர்மமும் இவ்வுலகில் மட்டுமல்ல..மேலுலகிலும்  உதவாது" என்று விளக்கமளிக்கிறார். 

"காலத்தி னாற்செய்த நன்றி  சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"

நேரத்தோடு உதவுவுவோம்.. மனித நேயத்தோடு உதவுவோம் 😊