Monday, December 6, 2021

காட்டுக்குள் மழை

"Amazon"-ன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகம் வருதுன்னு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி கேட்ருந்தா என்ன பதில் சொல்லியிருப்பீங்க?

நீங்க Geography-ல் ஆர்வம் உள்ளவராகவோ அல்லது ஆங்கிலப்  படங்களை விரும்பி பார்ப்பவராகவோ  இருந்தால்   சட்டுன்னு அது ஒரு "Rain Forest" தென் அமெரிக்காவிலே இருக்குன்னு சொல்லுவீங்க இல்லையா நீங்க ஒரு விஜய் டிவி Viewer-ஆ இருந்தாலும் இதை தெரிஞ்சி வச்சுருப்பீங்க  பின்ன வழுக்கை தலையிலும் முடி வளர வைக்கனுமான  அங்க இருக்குற மூலிகையாலதான முடியும்.

ஆனா இப்ப இந்த 2021-ல முளைச்சு மூணு இலை விடாத சுண்டைக்கா பசங்கள்ல இருந்து அனுபவசாலி தாத்தா வரைக்கும் அமேசான் என்ற பேரைக் கேட்டாலே என்ன ஆர்டர் செய்யப் போறீங்கன்னு கேக்குறாங்க!!!

அமெரிக்காவின் முதல் ஐந்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்  பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அமேசான் தொன்னூறுகளின் தொடக்கத்தில் துவங்கப் பெற்றிருந்தாலும், Amazon Prime Day என்ற Super Sale மூலம் அவர்கள் பிரபலமாயிருந்தாலும்  கடந்த பத்து வருடங்களாக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார்கள். அமேசானில் எதுவும் கிடைக்கும், எங்கும் கிடைக்கும்  என்ற நிலை இன்று உலகம் முழுதும் பரவி வருவது உண்மை. நமது பொருட்களை டெலிவரி செய்து விட்டு வாசலோடு சென்று கொண்டிருந்த அமேசான் - "Streaming Service"-ஐ ஆரம்பித்து  நமது வரவேற்பறையிலும்  வந்து அமர்ந்து விட்டது. 

இதுவரை அமேசான் சங்கத்தில் இணையாதவர்கள் கூட 2018-ல் "உங்கள் பொருட்கள் இரண்டே நாட்களில் வீடு வந்து சேரும் அதோடு எங்கள் தளத்தில் இருக்கும் திரைப்படங்களையும் நீங்கள்  இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்" என்ற சலுகையைக் கண்டு மெம்பெர் ஆனார்கள் முக்கியமாக இந்தியப் படங்கள் வருவதால் நம்மைப் போன்றவர்களுக்கும் இந்த dealing பிடித்திருந்தது. இப்பொது Amazon Prime என்று பெயர் பொறித்த வேன்களைப் பார்க்காமல் பொழுது கழிவதில்லை.

இதெல்லாம் வேண்டாம்  என்று உறுதியாக  இருந்த எங்களைப் போன்றவர்களையும் கொரோனா அமேசானில் கொண்டு கோர்த்து விட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆர்டர்களை அமேசானில் செய்திருக்கிறோம்..பெரிய பெரிய பொருட்கள் எல்லாம் கிடையாது Mask, Sanitizers-ல் இருந்து ஆரம்பித்து  உடைகள், பள்ளி கல்லூரிகளுக்குத்  தேவையான பொருட்கள், பார்ட்டி Decorations, புத்தகங்கள் Kindle வடிவில் என்று - அனாவசியமாக எதையும் வாங்கியதாகத் தெரியவில்லை.

டிவி, லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடைகளில் வாங்குகிறோம் ஆனால் அதற்குத் தேவையான ஒயர், சார்ஜர் என்று இதர பொருட்களை அமேசானில் தேடுகிறோம். கொடுக்கும் விலைக்கேற்ற தரத்தில் பொருட்கள் இருப்பதால் பெரிதாக ஏமாற்றம் ஒன்றும் இருப்பதில்லை. 

குழந்தை பிறந்ததிலிருந்து குடு குடு தாத்தா/பாட்டி ஆகும் வரை வாழ்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் ஒரே சொடுக்கில் அமேசானில் கிடைப்பதால் வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் இந்நிறுவனத்தின் Gift கார்டுகளையே விழாக்களுக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் பரிசாகக் கொடுக்கின்றனர் அதனால் மெம்பெர் அல்லாதவர்களும் அங்கே ஷாப்பிங் செய்கின்றனர்.

சமீப காலமாக சுற்றுச் சூழல் பாதிப்பில் அமேசான் நிறுவனத்திற்கு அதிக பங்கு இருப்பதாக பலர் சுட்டிக் காட்டுவதால் அவற்றை குறைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க அமேசான் போன்ற நிறுவனங்களால் சிறு/குறு தொழில்கள் நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றன என்ற பொருமலும் சமுதாயத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அது சரி வீட்டிலிருந்த படியே பொருட்களை கையில் பெற்றுக் கொண்டிருக்கும்  நமக்கு "கார்பன் ப்ரிண்ட்ஸ்" பற்றியும் கார்ப்பரேட் கொள்கைகள் பற்றி  எல்லாம்  என்ன அக்கறை?!

அமேசான் காடுகளில் மழை குறைந்து விட்டது ஆனால் அமேசான் நிறுவனத்திலோ பண  மழை கனமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. பேசப்படும் அமைப்பாக வளர்ந்து விட்ட எந்த நிறுவனமும் "Giving Back to the Society" என்ற பெயரில் ஏதேனும் நல்ல காரியங்களை செய்தாக வேண்டுமே? அமேசான் அதற்கு விதி விலக்கா என்ன? தங்களிடம்  வேலை பார்க்கும் பணியாளர்களை படிக்க வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மனித நேய செயல்களிலும் அமேசான் ஈடுபட்டு வருவதாக விளப்பரப் படங்கள் காட்டுகின்றன. 

அதோடு அமேசான் Originals என்ற பெயரில் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரிப்பதால் புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.

எது எப்படியோ காற்று புக முடியாத இடத்தில் கூட அமேசான் நிறுவனம் நுழைந்து  விட்டது. அப்பிடியே உங்க Order History-யையும் ஒரு தரம் பாத்துருங்க அப்புறம் Shock ஆகப் போறீங்க 😇