Thursday, January 13, 2022

பழையன நிலைத்தலும் புதியன குறைத்தலும்

கடந்த வருடம் அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை "Ida" புயல் தாக்கியது. மழையுடன் பேய்க் காற்றும் இணைந்து கொள்ள மக்கள் போக்கிடம் இன்றி அவதியுற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எங்கெல்லாம் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பேயில்லை என்று அறியப்பட்டு வந்ததோ அங்கெல்லாம் வெள்ளம் புகுந்தது. புயல் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீட்டின்  அடித்தளத்திற்கு அதாவது Basement-ற்கு  செல்லுமாறு பணிக்கப்பட்டனர் ஆனால் அங்கு வந்த மழை வெள்ளத்தில் நீந்தத் தெரிந்தவர்களும் வெளியே வர வழியின்றி இறந்தனர் என்ற செய்தியை தொலைக்காட்சியில் காணும் போது மனம் மிகவும் கலக்கமடைந்தது.

அமெரிக்காவில் என்று மட்டும் அல்ல உலகெங்கும் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு உயிரையும் உடமைகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்த வண்ணம் உள்ளனர். இவிடர்களுக்கெல்லாம் காரணம் காலநிலை மாற்றம் என்று அறிவியலாளர்கள் கூறி வருவது மட்டுமல்லாமல் அதைத் தடுக்க நம் வாழ்வியல் முறைகளில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி  வருகின்றனர்.

தொன்னூறுகளிலேயே பூமி வெப்பமடைதல், காற்று மாசுபடுதல் மற்றும் ஓசோனில் ஓட்டை என்றெல்லாம் பாட புத்தகத்திலும் செய்தித்தாள்களிலும் படித்திருக்கிறோம் ஆனால் அதைப்பற்றி அதற்குமேல் யோசித்ததில்லை விளைவு - இன்று கண் முன்னே தெரிகிறது.

ஒரு காலத்தில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தால் போதும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் தற்போது இம்மாற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கூறுகின்றனர்.  பின்பற்றவும்  துவங்கி விட்டனர். மேற்கத்திய நாடுகளில் மாமிசதிற்காக வளர்க்கப்படும் உயிரினங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்படுகின்றன ஆதலால் புலால் மறுப்பு மட்டுமல்ல பால் மற்றும் பால் பொருட்களையும் அறவே தவிர்ப்பது  (Veganism) காலநிலை மாற்றத்தை சீராக்கும் என்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை குறைத்தல், தேவையற்ற வேளைகளில் மின் உபகரணங்களை சார்ஜில் இருந்து விடுவித்தல்,  பொருட்களை உரிய முறையில் மறு சுழற்சி செய்தல் என்று பல்வேறு உபாயங்கள் கூறப்பட்டாலும் யார் காதில் வாங்கிக் கொள்கிறார்கள்?

தினக்கூலியாக வேலை செய்யும் பாமரனுக்கும்  பெப்சி, கோக் குடித்துக் கொண்டு காரில் செல்லும் செல்வந்தர்களுக்கும் இதில் சம அளவு பங்குண்டு. வாகனங்களின் புகையால் எந்த அளவிற்கு சுற்றுச் சூழல் மாசடைகிறதோ அதே அளவிற்கு விறகடுப்பாலும், வீதியில் எரிக்கப்படும் டயராலும் காற்று மாசடைகிறது.

அனைவரும் மிக சுலபமாக பின்பற்ற கூடிய வழிமுறையாக என் கண்களுக்குப்  படுவது/தெரிவது  என்னவென்றால் கூடுமானவரை  நம் தேவைகளை நாமே குறைத்துக் கொள்வது மற்றும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புவது தான். விலை மலிவாகக் கிடைத்தாலும்  முடிந்தவரை online ஆர்டர் செய்வதைத் தவிர்த்து அருகாமையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கலாம். இது Carbon Prints-ஐ குறைக்க உதவுமாம். பழைய துணிகளை டேபிள் துடைக்கவும் அழுக்கு துடைக்கவும் உபயோகிக்கலாம் ஒரு முறை துடைத்து எரியும் Tissue பேப்பர்கள் எதற்கு? 

ஸ்விக்கி, Zomoto-வில் வரும் ஆர்டர்கள் பிளாஷ்டிக் பைகளில் தானே வருகின்றன? அது உடல் நலத்திற்கும் கேடு அல்லவா? தூக்கு போனியில் சாம்பார் வாங்கி வந்தவர்கள் தானே நாம்?

கடைகளுக்குச்  செல்லும் போது கையில் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்வது எந்த விதத்திலும் நமது கௌரவத்தை குறைத்து விடாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" நன்றே ஆனால் வாரத்திற்கு ஒரு டிரஸ் வாங்கும் கலாச்சாரம் நம்முடையதல்லவே. ஒரு குழந்தைக்கு வாங்கிய பொருட்களை அடுத்த குழந்தைக்கும் உபயோகப்படுத்துவதில் எந்தக் குற்றமும் கிடையாது நீங்கள் Bad Parent ஆக மாட்டீர்கள்.

செருப்பு அறுத்து போனால் தைத்துப் போடலாம் தப்பில்லை. 

"நான் ஒன்னும் குப்பையிலே போடல..மறு சுழற்சி தான் செய்கிறேன்" என்று மார்தட்டிக் கொள்பவர்களே..பெருபாலான பொருட்கள் Recycle செய்யப்படாமல் மலைகளாக குவிந்து கிடக்கின்றன. வல்லரசு நாடுகள் குப்பைகளை கப்பலில் கொண்டு சென்று மூன்றாம் உலக நாடுகளில் குமிக்கின்றன என்று கூறுகிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. Shakespeare இன்று இருந்திருந்தால் "உலகம் ஒரு நாடக மேடை என்பதற்கு பதிலாக..உலகம் ஒரு குப்பைக் கூடை" என்று எழுதியிருப்பாரோ என்னவோ?

நம் உடல் நலத்தை பேண Organic உணவுகளை நாடும் நாம் வரும் சந்ததியினர் நலனுக்காக சற்றேனும் பொறுப்புடன் சூழலைக் காக்க வேண்டாமா? 

அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சுயநலமே..யோசிப்போமா???