Friday, March 4, 2022

திருமணம் என்னும் திருவிழா

"சமீப காலமாக பல ஆண்கள் தங்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்றும் பெண் வீட்டாரின் கட்டுக்கடங்காத டிமாண்டுகளே இதற்கு காரணம்" என்றும்  சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆண் பெண் எண்ணிக்கை விகிதாச்சாரம் சமமாக இல்லாததும் இதற்குக் காரணம் என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எனது சொந்தங்களின் வட்டத்திலும் 35, 40 வயதை நெருங்கியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில ஆண்கள் திருமணமாகாமல் இருப்பதைப் பார்க்கிறேன். 

எண்பதுகளில் எல்லாம் குடும்ப பாரத்தை சுமக்கும் தமையன்களும் தமக்கைகளும் தான் தங்களுக்கென்று ஒரு திருமண வாழ்க்கையை தகுந்த காலத்தில் அமைத்துக் கொள்ள முடியாமல் தனியாகவே வாழ்ந்து முடித்தனர் ஆனால் இப்பொது அப்படிப் பட்ட பொறுப்புகள் ஏதும் இல்லாத இளைஞர்கள் சிலருக்கும்  திருமணம் எட்டா கனியாக எட்டி எட்டிப்  போகிறது.

உரிய நேரத்தில் வந்த வரன்களை எல்லாம் தட்டிக் கழித்ததால், Single Parent ஆக இருப்பவர்கள் சரியாக கவனிக்காததால் என்றெல்லாம் காரணம் கூறுகிறார்கள் ஆனால் அனைத்தும் சரியாக இருப்பவர்களுக்கும் எந்த Demand-ம் செய்யாதவர்களுக்கும் கூட  ஏனோ திருமணம் தடை படுகிறது?!

இருபது வருடங்களுக்கு முன் கூட அவரவர் தகுதிக்கேற்ப பெண் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது ஏன் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்குக் கூட திருமணம் ஆனது ஆனால் இப்பொது என்னவென்றால் மெடிக்கல் Rep ஆக இருந்தால் பெண் கொடுக்க மாட்டார்களாம், ஜவுளிக்கடையில் வேலை பார்த்தால் பிடிக்காதாம். என்ன Logic என்று புரியவில்லை அதனால் இந்த துறையில் இருக்கும் யாருக்குமே திருமணம் ஆகவில்லையா என்ன? அப்படியும் சொல்ல முடியாது.

பெரு நகரங்களில் வசிப்பவர்களில் சிலரும்  மேல் தட்டு வர்கத்தில் சிலரும் திருமணம் என்ற உறவில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று Single ஆக இருக்கிறார்கள் அவர்களின் கதையே வேறு. "Living together" என்ற பெயரில் நேரத்திற்கேற்ற துணையை தேடிக் கொள்கின்றனர் ஆனால் திருமணம் என்னும் பந்தத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்து தனக்கென ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக்  காத்துக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலையை எண்ணித் தான் என் மனம் கவலை கொள்கிறது.

இவர்களில் சிலர் கைம்பெண்களுக்கு வாழ்வளிக்கின்றனர் சிலரோ "அதெல்லாம் சரிப்பட்டு வராது" என்று காத்துக் கிடக்கின்றனர். பல வருடங்களாகத் தேடித் தேடி சலித்த பின் திருமணமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்படும் இவர்கள் பின் திருமணம் நடந்தாலும் சிறு சிறு காரணங்களுக்காக சகிப்புத்தன்மையை இழந்து விவகாரத்தை நாடுகின்றனர். "எட்டாக்கனியாக இருந்த திருமணம் ஏனோ கைகளுக்கு எட்டும் வேளையில் புளிக்கிறது?!"

"திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்" - சிலர் தகுந்த நேரத்தில் தங்களுக்கு கிடைத்த நிலத்தில்  நடவு செய்து, தேவையான அளவு மழை, வெயில் போன்ற சொந்தங்களும் பந்தங்களும் அமையப் பெற்று நல்ல உறவுகளை அதாவது  மகசூலை அறுவடை செய்து மகிழ்வுடன் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்விலும் எதிர் பாரா வெள்ளங்களும், வறட்சியும் வரத்தான் செய்கின்றன ஆனால் அவற்றை பொறுமையுடன் சாமர்த்தியதையும் கலந்து கையாண்டு இறைவனின் துணையுடன் வாழ்வில் நிம்மதி அடைகின்றனர்.

வேறு சிலரோ தாமதமாக விதைகளை விதைத்தாலும் கால நிலைக் கேற்றபடி சில பல மாற்றங்களை செய்து சுகித்து வாழ்கின்றனர்.

சிலரோ உரிய நேரத்தில் விதைத்தும் நல்ல பலனை அடையாமல் தங்கள் நிலம் தரிசு நிலமாகிப் போனதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர். 

ஆனால் விதைப்பதற்கே நிலம் கிடைக்காமல் கையில் விதையுடன்  காத்துக் கொண்டிருக்கும் இந்த ஆடவர்களின் வினாக்களுக்கு விடைதான் என்ன?