Friday, April 22, 2022

ஆற..அமர -

கடந்த வாரத்தில் எங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து ஒரு நாலு நாள் தங்கிவிட்டுச் சென்றனர். விருந்தோம்பல் நம் கலாசாரம் அல்லவா? அதனால் நன்றாகவே கவனித்துக் கொண்டதில் உடல் அசதி உச்சத்தைத் தொட்டது. நான் ஒன்றும் நளபாக சமையல் எல்லாம் செய்து அசத்தவில்லை. நான் வழக்கமாக சமைக்கும் பதார்த்தங்களோடு ஒன்றிரண்டு Extra Items அவ்வளவு தான். Guest-ம் சமையலில் உதவினார்கள் அதிலும் இரண்டு மூன்று முறை ஆர்டர் செய்து வேறு சாப்பிடோம் இருந்தும் நான் அதிகம் வேலை செய்தது  போன்ற உடல் குடைச்சல்.

காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததில் பாத்திரம் தேய்ப்பது பெரும் சுமையாக இருப்பதாகப் பட்டது ஆனால் வேறு வழியில்லை. இங்கு வேலைக்கு ஆள் எல்லாம் கிடைப்பதில்லை. அளவுக்கு மீறிய பாத்திரங்களை புழங்க வேண்டி வருவதால்  Dishwasher எனக்கு பிடிப்பதில்லை. யோசித்து பார்த்ததில் பத்து வருடங்களுக்கு முன் என் உறவுக்கார மாமா ஒருவர் கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது. "இப்பிடி மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வேலை பார்த்தா உடம்பு எனத்துக்காக்கும்"?

நவீன சமையலறையில் நாம் நூறு சதவீதம் அனைத்து வேலைகளையும் அவசர கதியில் நின்று கொண்டே தான் செய்கிறோம். சமையல் கட்டிற்கு நுழைவது வரை என்ன சைமைக்கப் போகிறோம் என்பதை யோசிப்பதே கிடையாது பிறகு எங்கே அதற்கான "Pre-Preparation"ஐ செய்வது. போனை நோண்டிக் கொண்டோ கணினியை பார்த்துக் கொண்டே மணிக்கணக்காக அமர்ந்து விட்டு பிறகு Kitchen-ல் இரண்டு மணி நேரத்திற்கு மேல்  தொடர்ந்து நிற்கிறோம்.

என் அம்மா எல்லாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை உரிப்பது, ஆய்வது, கிள்ளுவது என்று  முன் கூட்டியே தயார் செய்து கொள்வார். அருவாமனையில் காய் நறுக்குவதால் ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த நீரை வைத்துக் கொண்டு அதில் தான் வெட்டிய காய்கறிகளைப் போடுவார். பிறகு அடுப்பை பற்ற வைத்து வேகமாக சமைத்து விடுவார்.

நாம் என்ன செய்கிறோம்? chopper, cutting board என்று மணிக்கணக்கில் நிற்பதோடு மட்டுமல்லாமல் அடுப்பிற்கும் Sink-கிற்கும் அலை பாய்கிறோம்.Atleast dinning table-ல் அமர்ந்து காய்கறி வெட்டலாமே? நேரத்தோடு நீரையும் வீணாக்குகிறோம்.

நேரம் கிடைக்கும் மாலை வேளைகளில் என் அம்மா கடுகு, பருப்பு என்று தீர்ந்து போன ஐட்டங்களை எல்லாம் Refill செய்து கொள்வார். எப்பப்பாத்தாலும் கிச்சன்ல என்னதான் பன்றியோ? என்று நாங்கள் கடிந்து கொள்வதுண்டு ஆனால் அது எவ்வளவு நல்ல பழக்கம் என்று இப்போதுதான் புரிகிறது.

அடுத்த பெரிய தவறு நாம் நம் குழந்தைகளை வேலை வாங்கி பழக்கப்படுத்துவதில்லை. கணவரிடம் உதவச் சொல்லி சண்டைக்கு நிற்கிறோமே தவிர பிள்ளைகளை சொல்வதில்லை. இம்மாதிரியான இக்கட்டான  சமயங்களில் அது  கை கொடுக்கும் என்பதை உணர்வதில்லை. நின்று கொண்டே இருப்பதால் வயது ஐம்பதை நெருங்கும் முன்னரே ஆர்த்ரிடிஸ் ஆல் அவதிப்படுகிறோம். நமக்கு கோபம், எரிச்சல் என்று சமையல் மீதே ஒரு வெறுப்பு வந்து விடுகிறது. அதை குழந்தைகள் மற்றும் கணவரிடமே காட்டுகிறோம் ஆக உடலுக்கு தேவையான Movements-ஐ கொடுக்கத் தவறினால் உடல் மட்டுமல்ல மன நலமும் பாதிக்கப்படுகிறது.

ஆய கலைகள் அறுபத்தி நாளில் சமையல் கலையும் ஒன்று அதை நடனம் போல் முழு உடலையும் இயக்கிச் செய்யலாமே? Gym-க்கு செல்ல வேண்டிய அவசியமே இராது!!!

எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டியது பாத்திரத்தில் உங்கள் முகத்தில் அல்ல!!!