Friday, December 2, 2022

வரும் ஆனா வராது ..இருக்கும் ஆனா இருக்காது !!!

பல மாதங்களுக்குப் பின் அவர்கள் அன்று வெளியில் சென்று உணவருத்தினார்கள். கொரோனா கால கடத்தில் ரெஸ்டாரண்டில் அமர்ந்து உண்ணும் வாய்ப்பு இல்லாது இருந்ததால் இன்று ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று "Buffet System" உள்ள இடத்தை தெரிவு செய்திருந்தார்கள்.

அவரவர் தங்களுக்கு விருப்பமான பதார்த்தங்களை தட்டு நிறைய நிரப்பிக் கொண்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேஜைக்கு வந்து ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். "இதற்கு மேல் முடியாது டா சாமி" என்ற நிலை வந்த பின் கடைசியாக ஒரு டீ குடித்து விருந்தை நிறைவு செய்து விட்டு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு வந்து "Freshen Up" செய்து கொள்வதற்காக குளியலறைக்குச்  சென்ற கயல் அங்கு குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்த எதையோ கையில் எடுத்தவாறு "எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா" என்று தனது மகளை கடிந்து கொண்டவாறு சத்தமாக அவளை அழைத்தாள்.

அவளின் அலறல் பேச்சைக் கேட்ட குடும்பத்தினர் "என்ன..என்ன? "  என்று பதறி  அடித்துக் கொண்டெல்லாம் வரவில்லை. மிக மெதுவாக வந்த மகளிடம் "இந்த Tube-ல இருக்குற பேஸ்டை வைத்து ஒரு வாரம் பல் தேய்க்கலாம். இத நீ தூக்கிப் போட்டுட்டே" என்று ஆரம்பித்து எவ்வாறு சிக்கனமாக இருப்பது முக்கியமாக பொருட்களை வீணடிப்பது எவ்வளவு தவறு என்று அரைத்த மாவையே திரும்ப  அரைத்தாள் கயல்.

கயல் போலத்தான் நம்மில் பலரும்..

தேய்ந்து தேய்த்து துரும்பாக இளைத்த பின்னரும் அந்த சோப்பை தூக்கிப் போட மாட்டோம். புது சோப்பில் ஒட்டி வைக்கலாமே! 

எண்ணை வரும் டப்பாவையோ ..பாலிதீன் கவரையோ தீர்ந்து விட்டது என்று குப்பையில் வீசுவதற்கு முன் அதை குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது எண்ணை டப்பாவிற்கு மேல் தலை கீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

பாத்திரம் துலக்கும் liquid detergent டப்பாவில் தண்ணி ஊற்றி நாளு நாள் பாத்திரம் கழுவி விடலாம்.

"என்ன விட்ருங்க Please " என்று கெஞ்சும் Tomato Ketchup தலையில் அடி அடி என்று அடித்து அந்த இரண்டு ஸ்பூன் சாஸை வெளியே எடுக்காவிட்டால் நமக்கு தூக்கம் வராது.

இதே போல் ஜாம், ஷாம்பூ டப்பா என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம் கண்ணுக்கு தெரியாமல் அடைந்து கிடைக்கும் அனைத்தும் நமக்கு பொக்கிஷம் தான். 

இதுல என்ன தப்பு ? வேஸ்ட் செய்யக் கூடாது இல்ல? " என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

பற்பசை விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல டூத் பிரஷ் நிறைய டூத் பேஸ்ட் வைத்துக் வீணடிக்கும் நம் குழந்தைகளை நாம் கண்டிப்பதில்லை. 

சுகாதாரம் என்ற பெயரில் (முக்கியமாக கொரோனாவிற்குப் பிறகு) மணிக்கொருதரம் சோப்பை உபயோகித்து கைகளை சுத்தம் செய்யும் குழந்தைகள் Sink-ல் கொட்டி வைக்கும் சோப்பை நாம்  கண்டு கொள்வதில்லை 

ஆனால் அதே பொருள் தீரும் சமயத்தில் நமக்கு எங்கிருந்து தான் வருகிறதோ "Selective Amnesia" போல  இந்த சிக்கனத்தின் மீதான அக்கறை?! டூத் பேஸ்ட்டை எப்பிடி அழுத்தி, சுருட்டி வெளியில் எடுப்பது என்று குழந்தைகளுக்கு  கிளாஸ் எடுத்தால் எப்படி?

மேற் சொன்ன அனைத்தும் "Middle Class Mind Set" என்று கூறி ஒதுக்கி விடலாம்  எனினும் நம்மில் பலர் அங்கிருந்து வந்தவர்கள் தானே!!! அந்நியன் விக்ரம் போல பெரும்பாலான சமயங்களில் "ரெமோவாக" குழந்தைகளை வளர்த்து விட்டு ஒரு சில விஷயங்களில் மட்டும் அம்பியாக மாறி அவர்களை குழப்பி நாமும் குழம்புகிறோம்.

மாதக்கடைசியிலும்  மனதைக்  கரைக்கும் வீடியோக்களை பார்த்து மட்டும் வருவதல்ல சிக்கனம் அது மனதில் இருக்க வேண்டும் அப்போது தான் யார் மேற்பார்வையும் இன்றி நம்மால் அதை செயல் படுத்த முடியும்.

ஆப்பிரிக்காவில் பசியால் வாடும் குழந்தைகளுக்காக கவலைப்படும் நீங்கள் ஆத்மார்த்தமாக சிக்கனத்தை கடைபிடியுங்கள் அது போதும்!!!

பின் குறிப்பு : கயல் குடும்பத்தினர் சாப்பிட்ட மேசையை சுத்தம் செய்த நபர் அவர்கள் தட்டில் மீதமிருந்த பதார்த்தங்களை வேறு வழியின்றி குப்பையில் கொட்டிக் கொண்டிருந்தார்!!!