Tuesday, February 14, 2023

காதலில் விழுந்தேன்...

காலையில் இருந்து சாவகாசமாக இருந்த நிரஞ்சனா கடைசி பத்து நிமிடத்தில்  அரக்க பறக்க ஓட வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. எதிர்பாரா விதமாக ஏற்பட்ட சாலை நெரிசலும் அவர்களின் பயணத்தை தாமதப் படுத்த காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மகளின் முகத்தில் பதட்டமும் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த கணவர் கதிரின்  கண்களில் கோபமும் ததும்பி நின்றதை நிரஞ்சனா கவனிக்காமலில்லை.

ஒரு வழியாக மகளை வாத்திய வகுப்பிற்கு அனுப்பி விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

"ஒரு நாள் கரெக்ட் Time-க்கு கிளம்ப முடியாதா?" என்று ஆரம்பித்த கதிரின்  கேள்வி அடுத்த பதினைந்து நிமிட வாக்கு வாதத்திற்கு வித்திட கடைசியாக  "நீ வீட்ல சும்மா தான இருக்கே" என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டு விட்டு அமைதியான கணவனை  அனல் பறக்கும் பார்வையால் எரித்த நிரஞ்சனாவின் கண்கள் குளமாயின.

"இனிமே இந்த மனுஷனை ஒரு உதவியும் கேக்கக் கூடாது..எல்லா வேலையும் நாமளாவே பாத்துக்கனும்" என்று நினைத்த  நிரஞ்சனாவின் மனது "ஒரு நாள் ஒரு வேலையும் பார்க்காம உக்காந்தா தான் தெரியும்" என்றும் கொந்தளித்தது.

வழக்கம் போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனும் மனைவியும் ராசியாகி நடந்ததை மறந்தனர் ஆனால் கோபத்தின் உச்சத்தில் நிரஞ்சனாவின் மனதில் கண நேரத்தில் தோன்றி மறைந்த நேரெதிரான எண்ணங்களில் ஒன்று விரைவில்  நிறைவேறப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் வட்டம் Hiking Trip ஒன்றை திட்டமிட்டனர். கடந்த ஒன்றரை வருடமாக வீட்டிலேயே இருந்ததால் இயற்கை காற்று உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்க அரை மனதுடன் செல்ல சம்மதித்தாள் நிரஞ்சனா. குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து கலகலப்பாக மலை ஏறினர். பல மாதங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டதால் நண்பர்களின் கலகல பேச்சும் சிரிப்பும்  வானை முட்டியது.

அந்தி வேளையில் சூரியனின் அஸ்தமனத்தை ரசித்த நிரஞ்சனா மலையை விட்டு இறங்கத் தொடங்கினாள். உடன் வந்த மழலைப் பட்டாளங்களை மேய்த்துக் கொண்டு முன் இறங்கிய கதிரை திடீரென்று  நிரஞ்சனாவைச்  சுற்றி சலசலத்த குரல்கள் பின்னுக்கு இழுத்தது.

"என்னாச்சு என்னாச்சு" என்று பதட்டத்தோடு அங்கு வந்த கணவனிடம் "காலு பிசகிருச்சு..வலி தாங்க முடியல ..தலை வேற  சுத்தற மாதிரி இருக்கு" என்று ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்து கொண்டாள் நிரஞ்சனா. "சுளுக்குத்தான் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வாங்க..தண்ணி குடிங்க..பழம் சாப்பிடுங்க" என்று உபசரித்த நண்பர்கள் குழாமை "நீங்க போயிகிட்டே இருங்க" என்று கீழே அனுப்பிவிட்டு கைத்தாங்கலாக அழைத்துச் சென்ற கதிரின் தோள்களை ஸ்திரமாகப் பிடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

"வேணுமின்னா ஆம்புலன்ஸை கூப்பிடலாம்..கஷ்டப் படாதே" என்று கூறிய கணவனைப் பார்த்து "இல்ல..குழந்தைங்க கீழ போயி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..போயிரலாம்" என்று வலியைப் பொறுத்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள் நிரஞ்சனா.

அடுத்த ஒரு மணி நேரத்தில்  அவசரப் பிரிவு மருத்துவர் நிரஞ்சனாவின் X-Ray -யை  ஆராய்ந்து எலும்பு முறிவை உறுதிப்படுத்த கலங்கிப் போயினர் கணவனும் மனைவியும். சிகிச்சைக்கு வேறு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அதுவரை காலை கீழே வைக்க வேண்டாம் என்று கட்டுப்  போட்டு கைத்தடியையும் கொடுத்தனுப்பினர்.

சோகமும் களைப்பும் கலந்த முகங்களோடு நண்பர்களும் விடை பெற்றுக் கொள்ள வலி நிவாரணிகளை சாப்பிட்டு விட்டு படுத்த நிரஞ்சனாவிற்கு அன்றைய இரவு மிக மிக நீளமான இரவாக அமைந்தது. கடும் வலியோடு புரண்டு படுக்க முடியாமல் எழுந்து.. எழுந்து அமர்ந்த அவளை கதிர் கை தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் செல்வது, சிறிது நேரம் நடக்க வைப்பது என்று சிறிதும் கண் அயராமல் கவனித்துக் கொண்டான்.

மறு நாள் தொலை பேசி மூலம் சிறப்பு மருத்துவரிடம் Appointment வாங்கிய அவர்களை அறுவை சிகிச்சை கூட செய்ய நேரிடலாம் என்று பயமுறுத்தினர். அன்று இரவும்  வலி நிவாரணியால் பலனேதும் இருக்கவில்லை. அரைமணி நேரத்திற்கொருதரம் எழுந்தமர்ந்த நிரஞ்சனாவை உடைந்த குரலில் சமாதானப்படுத்திய கதிர் அவளின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை கனிவுடன் துடைத்தான்.

அடுத்து வந்த நாட்களில் அவளின் சிகிச்சை தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை இல்லை, மாவு கட்டு போடவில்லை. Stabilizers என்று சொல்லக் கூடிய தடித்த ஷுக்களை நடக்கும் போது அணிந்து கொண்டு ஊன்று கோளின் (Crutches) உதவியோடு அடுத்த ஆறு வாரங்கள் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டாள்.

அவள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டியது. நண்பர்கள் சில நாட்களுக்கு உணவை சமைத்து அனுப்பினாலும் கதிரின் வேலை ஆயிரம் மடங்கு கூடியது. கொரோனவால் சொந்தங்கள் யாரும் வர இயலாத நிலை.

நிரஞ்சனாவின் வலி கட்டுக்குள் வந்தது. வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்த கதிருக்கு அவளை பார்த்துக் கொள்வதே முழு நேரப் பணியாக இருந்தது. சாப்பாட்டை கையில் கொடுப்பது, முடித்தவுடன் கை கழுவ தண்ணீர் கொடுப்பது, படுக்கையில் படுக்க வைப்பது, குளிப்பாட்ட உதவுவது என்று களைத்துப் போனாலும் மருத்துவமனை வாசம் இல்லாமல் போனதால் கவலை இன்றியே தென்பட்டான். குழந்தை பேற்றின் போது கதிர்  அவளை கவனித்துக் கொண்டது  நினைவுகளில் வந்து செல்ல கணவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவை பார்க்க வரும் நண்பர்கள் அவளுக்கு கிடைக்கும் ராஜ மரியாதையை கேலி செய்தனர் ஆனால் அவர்களிடம்  "வீட்டு வேலை பார்த்து முடியல..நிரஞ்சனா எவ்வளவு வேலை பாத்திருக்கா?!" என்று அங்கலாய்த்த கணவனை காதல் பொங்க  ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா. 

கடந்த  2021-ம் ஆண்டில் கொரானாவை கட்டுப் படுத்த தடுப்பு ஊசி கண்டறிய பட்டதோடு வைரஸிற்கு  எதிராக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர 2nd Dose, 3rd Dose  என்று பூஸ்டர்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தடுப்பு மருந்து வேலை செய்ததோ இல்லையோ எதிர் பாராமல் ஏற்பட்ட இந்த  விபத்து  நிரஞ்சனாவிற்கும் கதிருக்கும் இடையே இருந்த காதலை பன்  மடங்கு Boost செய்து விட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?!