நேத்து மத்தியானம் மணி 2:55 இருக்கும். உள் ரூமில வேலை பாத்துட்டு இருந்த என் வீட்டுக்காரர் எட்டிப் பாத்து "என்ன மணி மூனாகப்போகுது..டீ போட்றேன்..தலை வலி பின்னுது" என்றார். அப்பதான் சாப்புட்டு உக்காந்த எனக்கு செம்ம கடுப்பு 😠😠
(கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்திலும் சிலர் வீட்ல இருந்து வேலை பாக்குறதால சமைக்குற வேலை ஜாதியாயிருச்சுன்னு பொலம்புறதை சமூக வலைத்தளங்களிலும், அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரங்க சொல்றதையும் கேக்குறேன், பாக்குறேன் ஆனா எனக்கு இந்த டீ போட்டு கொடுக்குறது தான் ஜாஸ்தியாயிடுச்சு!!! விட்டா மதியம் சாப்ட கையோட டீ கேப்பாரு போல 💭)
"டீ"-ன்னு கேட்டதும் எனக்கும் குடிக்கனும் போல ஆயிருச்சு..சரின்னு டீ-க்கு பாலை வச்சுட்டு "ஆமா..நான் எப்பயிருந்து டீ குடிக்க ஆரம்பிச்சேன்னு" யோசிச்சு பாத்தா..ஞாபகம் ஒன்னும் வரல. ஆனா நான் நாலாவது படிக்கும் போது என் தங்கச்சியோட சேர்ந்து டெலிபோன் பூத் வச்சிருந்த என்னோட தாய்மாமாவுக்கு சாய்ங்காலமா தூக்கு போனியில டீ எடுத்துக்கிட்டு போவேன். அது ஞாபகம் வந்திச்சு.
எங்க பாட்டி வீட்ல இருந்து கொஞ்ச தூரமா தான் எங்க மாமா டெலிபோன் பூத் இருந்துச்சு..ரெண்டு மூனு குறுக்கு சந்துல புகுந்து போனா ஈஸியா வந்துரலாம். அப்பல்லாம் ஒரு ரூபா காயின் போன் எல்லாம் இல்லை. கண்ணை எரிக்கிற மஞ்ச கலர்ல பூத் இருக்கும் பெரும்பாலும் உடல் ஊனமுற்றவர்களால நடத்தப்படும். எங்க மாமா கூட போலியோ Attack ஆனவருதான்.
சுடச் சுட தூக்கு போனியில எங்க பாட்டி டீ ஊத்தி குடுப்பாங்க..நாங்க ரெண்டு பேரும் பராக்கு பாத்துகிட்டே, எந்த சந்து வழியா போகலாமுன்னு Argue பண்ணிக்கிட்டு போயி சேர்ரதுக்குள்ளே அது ஆறி போயிருக்கும். சில நேரம் நாங்க ஆட்டுற ஆட்டுல டீ சைடுல எல்லாம் வழிஞ்சிருக்கும். தூக்கு போனி மூடி எல்லாம் கழண்டு விழுந்திருக்கு!!!
ஆனா எங்க மாமா எங்கள கோவிச்சிகிட்டதெல்லாம் கெடையாது. அவரு டீ குடிச்சி முடிகிறவரைக்கும் ஏதாவது ராங் நம்பர் டயல் பண்ணி பேசி டைம் பாஸ் பண்ணுவோம் 😆😆ஒரு தடவை நம்ம காவல் துறை எப்பிடி கடமை தவறாம இருக்காங்கன்னு Check பண்றதுக்கு 100 டயல் பண்ணினோம். ஒருத்தர் எடுத்து D2-வோ, D3 போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னதும் அலறி அடிச்சிட்டு போனை வச்சுட்டோம். அதுக்கப்புறம் போலீசை பாத்தாலே கொஞ்ச நாள் பம்மி கிட்டு இருந்தோம்.. ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்ப நெனச்சாலும் அதெல்லாம் திரும்ப கெடைக்காது..அந்த Yellow Telephone Booth, தூக்கு போனியில டீ, கவலையற்ற எங்கள் இளமைக்காலம் ..எங்க மாமாவும் தான் 😔
இப்பிடியே Flashback-ல மூழ்கி இருந்தேனா.. ஏதோ தீஞ்ச வாசனை வந்து மூக்கை தொளைக்குதேன்னு பாத்தா டீ பொங்கி வழிஞ்சிட்டு இருக்கு 😟