Wednesday, February 15, 2017

காத(ல்)லுடன் பரிசு

புதுமணத் தம்பதியரான நிவேதாவும் நிதினும் ஷாப்பிங், ஹனிமூன், உறவினர்கள் வீட்டில் விருந்து என்று நேரம் போவதே தெரியாமல் சுழன்று  கொண்டிருந்தார்கள். அவர்கள் மனமோ  காதல் வானில் சிறகடித்துப்  பறந்து கொண்டிருந்தது. அவர்களின் குதூகலத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் விதமாக நிவேதாவின் பிறந்தநாள் எட்டிப் பார்த்தது.

"ரெண்டு நாள்ல உன் பர்த்டே வருது...என்ன பண்ணலாம்?!", என்று காதல் ததும்பும் குரலில் நிவேதாவை நோக்கிக் கேட்டான் நிதின்.

" கல்யாணத்துக்கு வாங்கின ட்ரெஸ்ஸே  நெறைய இருக்கு...கோவிலுக்கு போகலாம்", வேறென்ன?! என்றாள். " இந்த பர்த்டே கொண்டாடுற பழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது...அதுவுமில்லாம Surprise Gift குடுக்கிறது, நடு ராத்திரி எழுப்பி விஷ் பண்றதுன்னு இந்த சினிமாட்டிக் விஷயங்களெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. இப்ப இருந்தே ஒரே மாதிரி இருந்துட்டா நமக்கும் பின்னாடி பிரச்னை இல்ல பாருங்க?!", என்ற நீண்ட நெடிய விளக்கத்துடன் தன் உரையை முடித்துக்கொண்டாள்.

"அப்பிடியா?! ",என்று கூறி குறும்புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நிதின்.

பேசிய பேச்செல்லாம் ஒரு புறம் இருக்க...அடுத்து வந்த நாட்களில்  நிதினிடம் இருந்து  தனக்கு எந்த மாதிரி பரிசு வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நேரத்தைக் கடத்தினாள். ஆனால் நிதினோ அதை பற்றி எதுவும் சிந்தித்தது போல தெரியவில்லை. "மனைவி சொல்லே மந்திரம்", என்று இருந்து விடுவானோ?! என்று திகைத்தாள் நிவேதா.

"என்னங்க...இந்த ட்ரெஸ்-ஸ பாருங்க...எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்", என்று விளம்பரங்களில் சுட்டிக்  காட்டினாள். பத்திரிக்கைகளில் இருக்கும் பல வண்ண ஆடைகளை அவன் முன் வியந்து பார்த்து தன் ஆசையை அவனுக்கு மறைமுகமாக விளக்கினாள். நிதினோ எதையும் கண்டு கொள்ளவில்லை.

எதிர் பார்த்த அந்நாளும்  வந்தது. வழக்கம் போல் படுத்து, உறங்குவது போல நடித்த நிவேதா " கண்டிப்பா 12 மணிக்கு எழுப்புவான்", என்று மனதிற்குள் மத்தளம் வாசித்துக் கொண்டாள். நிதினோ படுத்து குறட்டை விடத் தொடங்கி இருந்தான். அவளை அறியாமலேயே  உறங்கிப் போன நிவேதா சில நிமிடங்களிலேயே நிதினின் குரல் கேட்டு அரக்க பரக்க விழித்துக் கொண்டாள்.

கையில் ஜிலு ஜிலுவென்று கண்ணைப் பறிக்கும் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு பரிசோடு நிவேதாவை புன்னகையுடன் நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் நிதின். "நான் தான் வேணான்னு சொன்னேன் இல்ல" என்று பொங்கி வந்த புன்னகையை மறைத்து போலிக் கோபம் காட்டினாள் நிவேதா. " என்னனு பாரு", என்று நிதின் கூற...பரிசுப் பொருளில் அளவை வைத்தே டிரஸ் இல்லை என்று யூகித்த நிவேதா," நகையாக இருக்குமோ?! என்று நினைத்தபடி பரிசைப் பிரித்தாள். ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஜொலித்துக் கொண்டிருந்த அவள் முகம் பியூஸ் போன ட்யூப் லைட்டானது. அப்போதும் தனது மில்லியன் டாலர் புன்னகையை மாற்றாமல் "என்ன நல்லாருக்கா..செம்ம surprise இல்ல?!", என்றான்  நிதின். 

தேன் நிலவின் போது கிளிக்கிய  நிவேதாவின் புகைப் படத்தை மிக அழகாக பிரேம் செய்து பரிசாகக் கொடுத்திருந்தான் நிதின். விலை மதிப்பில்லாத பரிசை கொடுத்து விட்ட பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தான். " நீங்க கொஞ்ச நாளா  போட்டோகிராஃபி கிறுக்கு பிடிச்சு அலையிறீங்கன்னு தெரியும் ...அதுக்கு இப்பிடியா?!", என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள்.

" ஏன் இதுக்கென்ன...நீ எவ்வளவு அழகா இருக்க இந்த போட்டோல தெரியுமா?! என்று கூற, அவன் பைத்தியம் போட்டோகிராஃபி மேல் மட்டும் அல்ல என்பதை உணர்ந்தவளாக வெட்கத்தில் சிவந்தாள். ஹாப்பி பர்த்டே என்று கூறிய நிதினின் மேல் தன்னை அறியாமலேயே இரண்டாம் முறையாக காதலில் விழுந்தாள் நிவேதா!!!

தங்களது மண வாழ்க்கையின் பதினோராவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிவேதாவும் நிதினும் இன்றும் மனதில் அதே அளவு காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புது மணத்  தம்பதிகளைப் போல!!!

பின் குறிப்பு : அந்த போட்டோ தான் முதலும் கடைசியுமாக நிவேதாவிற்கு நிதின் கொடுத்த "கிஃப்ட் ".

         

     


Thursday, February 9, 2017

டிக்...டாங்...டிக்

அனைவரும் காரில் அமர்ந்து பெல்ட்டுகளை கிளிக்கிக் கொண்டோம்.

மகனின் பெல்டை சரிசெய்து விட்டு வந்து, " போலாமா?!" என்ற கேள்வியுடன் காரை ஸ்டார்ட் செய்த என் கணவரின் முகம் கடிகாரத்தைப் பார்த்ததும்  மாறியது(கோபமாக?! ).

அலறிய ரேடியோவை அமைதிப்படுத்திவிட்டு தனது அமைதியைக்  கலைத்தார். "அஞ்சு மணிக்கு கூப்பிட்டா...வீட்ல இருந்து அஞ்சரைக்கு கெளம்புறது...நேரத்துக்கு போகனும்ன்ற நெனப்பு இருந்தா தான?!", என்று ஆரம்பித்தார். " ஏன்... வீட்ல இருந்து கெளம்புறப்ப லேட்டாயிருச்சுன்னு தெரியலையா?! கார்ல வந்து உக்காந்ததுமே ஞானோதயம் வந்துருமே?! வீட்ல ஒண்ணுக்கு நாலு கடிகாரம் இருக்கு. இதென்ன பரீட்சையா?! கரெக்ட் டயத்துக்கு போறதுக்கு...இப்பயே யாரும் வந்துருக்க மாட்டாங்க?! என்ற என்னிடம்...மேலும் வாதாட விருப்பமில்லை என்பதை "ஆமா" என்ற சொல்லில் வெளிப்படுத்தி விட்டு ரேடியோயாவை ஆன் செய்தார்.

இந்த விவாதம் எங்களுக்குள் அடிக்கடி...ஏன் எப்போதுமே நடப்பது தான். அதனால் நாங்கள் முடிக்கட்டும் என்று பொறுமை காத்த குழந்தைகள், " சேஞ் த சாங் டாடி...நாட் திஸ்" என்று கட்டளை பிறப்பிக்கத் தொடங்கினர்.

முற்காலத்தில் சூரியன் இருக்கும் இடத்தையும், திசையையும் கொண்டு நேரத்தைக் கணித்தனர். பின்பு தொழிற்சாலைகளின் சங்கு சத்தத்தைக்  கொண்டும், புகை வண்டி வரும் நேரத்தைக் கொண்டும் தங்களைத் தயார் செய்து கொண்டனர். அதற்குப்  பிந்தைய காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கொண்டு தங்களை விரைவு படுத்திக் கொண்டனர் ஆனால் இப்போதோ நொடிக்கு ஒருமுறை மொபைலை நோக்கும் நம்மிடம், " மணி என்னாச்சு?" என்றால் தெரிவதில்லை. 

பொதுவாகவே எனக்கு இல்லையில்லை எங்கள் குடும்பத்திற்கே  அடிக்கடி கடிகாரம் பார்க்கும் பழக்கம் உண்டு. என் தம்பி ஐந்து வயதிலேயே கடிகாரம் பார்க்கக் கற்றுக் கொண்டான். நர்சரி பள்ளியில் கடிகாரத்தையே  பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று டீச்சர் சுவர்கடிகாரத்தை கழற்றி வைத்து விட்டார்...மேசைக் கடிகாரத்தை தன் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டார். மதிய வேளை நெருங்க நெருங்க மணி பார்ப்பது அதிகரித்து கொண்டிருப்பதால்...மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்லும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!  

"காலம் கண் போன்றது...நேரம் பொன் போன்றது", என்றெல்லாம் கூறிக் கொள்ளும் நாம் அந்த நேரத்தைக் காட்டும் கடிகாரத்தை மறந்து கொண்டல்லவா இருக்கிறோம். " நான் ரொம்ப பிஸி...கடிகாரம்  பார்க்க நேரம் இல்லை', என்று சிலரும், 'சும்மா உக்காந்திருக்குற நான் மணி பாத்து என்ன செய்யப் போறேன்?!", என்று சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில பல சமயங்களில் நமக்கு சாதகமாக நேரத்தை மாற்றிச்  சொல்லி பழகிக் கொள்கிறோம். நாம் டைம் சொல்வதை வைத்தே நம் மன நிலையை யூகித்து விடலாம்  உதாரணமாக 10:30 என்று காட்டிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்த்து இப்போதான் மணி பத்தாச்சு என்று கூறுவதும், மணி பதினொன்னாகப் போகுது என்று அவசரத்தில்  பதறுவதும் நாம் பல முறை அனுபவத்தில் பார்த்திருப்போம்.

அமெரிக்கவிற்கு வந்த புதிதில் எங்கள் வீட்டில் சுவர்க்கடிகாரமே இல்லை. முதல் ஒரு வாரத்தில் கைப்பேசியில்  மணி பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாகப் பட்டது. அடுத்த வாரத்தில் கேபிள் கனெக்க்ஷன்  என்ற பெயரில் ஒரு பாக்ஸை வைத்து விட்டு சென்றான் அன்றிலிருந்து என் வாழ்வில் வசந்த காலம் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். நடு இரவில் கண்விழித்தாலும் பார்ப்பதற்கு    மிகவும் வசதியாக  பச்சை கலரில் நேரம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அன்றிலிருந்து கடிகாரம் பார்க்கும் பழக்கம் பன் மடங்கு பெருகியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வோர் நொடியையும், நிமிடத்தையும் அச்சு பிசகாமல் காட்டி என்னை தனக்கு அடிமை ஆக்கியது. இப்போது எங்கள் வீட்டில் அறைக்கு ஒன்றாக தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. என் கணவர் கூட கடிகாரம் 11:11 என்று காட்டும் பொழுது, " ஏய்...ஒனக்கு பிடிச்ச டைம் வந்துருச்சு", என்று கேலி செய்வதுண்டு. இப்போது என் பெண். 20 நிமிடம் படி என்றால் அதில் பத்து நிமிடம் கடிகாரத்தை பார்த்தே வீணடித்து விடுவாள்...எப்போது 20 நிமிடம் ஆகிறது என்று கணக்கு பார்க்கிறாளாம்.  

நமக்கு பிடித்த சினிமாக்களில் எப்போது கடிகாரத்தைக் காட்டுவார்கள் என்று கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரிந்துவிடும் ஆமாம் இக்கட்டான நேரங்களில் மட்டும் தான். முன்பெல்லாம் டைம் பாம் வெடிக்கும் சமயத்தில் ஆனால் இப்போதெல்லாம் "Time Machine"-ல் ட்ராவல் செய்யும் சமயங்களில் தான்  கடிகாரம், காலெண்டர் என்று மிகவும் விரிவாகவே  காண்பிக்கிறார்கள். சில சமயம் பேய் வரும் நேரங்களிலும் கடிகாரம் பன்னிரெண்டு தடவை அடிப்பதுண்டு!!! நாமும் "Time Sensitive " ஆன விஷயங்களில் கடிகாரத்தைப் பார்க்கத் தவறுவதில்லை என்றே தோன்றுகிறது.

"காலத்தே பயிர் செய்...நேரத்தே அறுவடை செய்", என்று பழமொழியுடன் அறிவுரை கூறுவதற்காகவோ, கடிகாரத்தை நோக்கினால் காரியம் கைகூடும் என்பதற்காகவோ இதையெல்லாம் எழுதவில்லை. டிஜிட்டல் மயமான உலகில் குழந்தைகளுக்கு சுவர்க்கடிகாரத்தில் நேரம் பார்ப்பது குதிரைக்கு கொம்பாக தோன்றுகிறது. புராதான கட்டிடங்களில் இருந்த பெரிய பெரிய கடிகாரங்கள் எவ்வாறு ஓடாமல் நிற்கின்றதோ அதே போல் இன்னும் சில வருடங்களில் முட் கடிகாரங்கள் அருங்காட்சியகங்களை நோக்கி ஓடப் போகின்றன.

எப்போதும் நிற்காமல் துறு துறுவென ஓடும் குழந்தைப் போல நொடி முள், சீரான வேகத்தில் குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவைப் போல நிமிட முள், அடிக்கடி நகராமல்  ஒரே இடத்தில் அதிக நேரம் நின்றாலும், தன்னைச் சுற்றி சுழலும் அனைத்திற்கும் அர்த்தம் சேர்க்கும் அம்மாவைப் போன்ற   மணி (பெரிய) முள் என்று நம் குடுபத்தை நினைவில் நிறுத்தும் முட்  கடிகாரத்தை நம் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொள்ள மறந்துராதீங்க...இன்னும் நேரம் இருக்கு!!!      

"



Tuesday, November 8, 2016

நிறம் மாறாத மனிதர்கள்

மித்ரனும், நிதிலாவும் அன்று சனிக்கிழமை என்பதையே மறந்தவர்களாக, தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்  பரபரப்பாக காணப்பட்டனர்.

" அவளை குளிக்க அனுப்பிட்டேன்,  இவன குளிப்பாட்டிட்டு...அப்பிடியே நீங்களும் குளிச்சிட்டு வந்துருங்க", என்று மகனை கணவரிடம் அனுப்பிவிட்டு சமயலறையில் தன்னை அழைக்கும் குக்கருக்கு பதில் சொல்லப் போனாள் நிதிலா. 

முன்தினம் அலுவலகம் முடித்து திரும்பிய மித்ரன், " Down Town -ல ரேஸ் கார்ஸ் exhibit  வச்சுருக்காங்க, இந்த வாரத்தோட முடியுது. நாளைக்கு போயிட்டு வந்துரலாம் என்றதும் "யேய்" என்று மகன் ஆர்பரித்தான். "வேற என்ன இருக்கும்?"! என்று வினவிய  நிதிலாவிடம், " நிறைய ஸ்டால்ஸ் போட்ருப்பாங்க...என்றான். அப்ப "free stuff "  கொடுப்பாங்கன்னு சொல்லுங்க என்று சமாதானமடைந்தாள். " It will be boring " என்ற மகளிடம், " ஏய் உன் பிரெண்ட்டும் வர்றா " என்றதும் அவளும் குதூகலமடைந்தாள்.

கூட்டம் வர்றதுக்கு முன்னாடி போயிரணும் அதனால காலையில சீக்கிரமா கெளம்பனும். சொல்லிக்கிற மாதிரி சாப்பிட ஒன்னும் கெடைக்காது,  Breakfast heavy -யா சாப்பிட்டு போனாதான் ஒரு ரெண்டு மணி வரைக்கும் தாங்கும் என்று கூரிய கணவனை நோக்கி உச்சு கொட்டிவிட்டு நகர்ந்தாள் நிதிலா. அதி காலையில் எழவேண்டுமே... அதுவும் விடுமுறை நாளில்   என்ற எண்ணம்... எவ்வாறு மனதிலிருக்கும் ஆர்வத்தையெல்லாம் ஒரு நொடியில் நீர்த்துவிடுகிறது என்பதை நினைத்து வியந்தாள்.

அனைவரும் குளித்து, காலை உணவாக பொங்கல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகளிடம், " இது சாப்டா தாண்டா பசிக்காது, tired- ஆகாம நடக்க முடியும்  என்று சமாதானம் பேசியும், கேட்காத போது முதுகில் ரெண்டு அப்பு அப்பியும்  உண்ண வைத்து புறப்படுவதற்குள் பத்து மணி ஆகிவிட்டது. சீக்கிரம் கெளம்பணும்னா எங்க?! என்று தனது வழக்கமான புலம்பலுடன் காரைக் கிளப்பினான் மித்ரன். 

காலை வெயிலில் " Down Town " பளிச்சென்று இருந்தது. சாலையின் இரு மருங்கிலும் வித விதமான கடைகள் போடப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டமும் கணிசமாக அலை மோதியபடி இருந்தது. அங்கங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரேஸ் கார்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர். "அதனால தான் சீக்கிரம் வரணும்னு சொல்றது" என்று முணுமுணுத்த கணவனை காதில் வாங்காதவளாய் மகனுடன் வரிசையில் சேர்ந்து கொண்டாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் வெயில் மண்டையைப்  பிளந்தது. நா வறண்டது. கூட்ட நெரிசலில் ஊர்ந்தபடியே சென்றனர். எதற்காவது உபயோகித்து கொள்ளலாம் என்று  சில பல ஸ்டால்களில் இருந்து பெற்றுக் கொண்ட  இலவசங்களும் கையை நிறைத்து கனத்தது. எங்காவது உட்கார்ந்தால் போதும் என்று தோன்றியது.  

அருகிலிருந்த ஸ்டாலில் அவனுக்கு பிடித்த "Cookie"  சாம்பிள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் மகன் அடம் பிடிக்கத் தொடங்கினான். கூட்டமும் அதிகமில்லாததால், " நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று நிதிலா சாலையைக் கடந்து சென்றாள். அங்கு நின்றிருந்தவரின் பின்னால் இருக்கும் காலி இடத்தில் நின்று சாம்பிளைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போதுதான் தனக்குப் பின்னாலிருக்கும் பெண்மணியைக் கவனித்தாள். அப்போதுதான் தான் வரிசையின் இடையில் நுழைந்து விட்டதை உணர்ந்தவளாக," Sorry I didn't See you " என்றாள். அதற்கு அந்தப் பெண்மணி " of course you did not " என்று கூற, யாரோ தன்னை கன்னத்தில் அறைந்ததைப் போல் அவமானத்தில் குறுக்கிப் போனாள். அந்த பிஸ்கெட்-ஐ அப்படியே குப்பையில் எறிந்து விடவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை மகனின் முகத்தைப் பார்த்துக் கைவிட்டாள்.

" என்ன ஆச்சு?! என்று கேட்ட கணவனிடம், " ஒன்றுமில்லை " என்று தன்னை சகஜ நிலைக்கு மாற்றிக் கொள்ள முயன்று தோற்றாள். இந்த அயல் நாட்டிற்கு வந்ததில் இருந்து மிகவும் கனிவாகப் பேசும் மக்களை மட்டுமே கண்டிருந்த நிதிலாவிற்கு இது ஒரு பேரதிர்ச்சி ஆக இருந்தது. ஒரு வழியாக அன்றைய பொழுது முடிவிற்கு வர,  களைத்த உடல்களை சுமந்து கொண்டு வீடு திரும்பினர். நிதிலாவின் மனமோ ஆயிரம் மடங்கு அதிகமாகக் கனத்து அவளை அவமானத்தில் இருந்து வெளிவர விடாமல் ஆழத்தில் அழுத்தியது.

இரவு படுக்கைக்கு முன் தன் உள்ளக்கிடக்கையை கணவனிடம் கொட்டிவிட்டாள். மித்ரனோ மிகச் சாதாரணமாக," நம்ம ஆளுங்க இப்பிடித்தான பன்றாங்க " என்று கூற ," என்ன சொல்றீங்க ?!" என்று தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தை அவன் மேல் பாய்ச்சினாள். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து சத்தமா பேசாத, வெளியிடத்துல கண்ண கசக்காத , குழந்தையை அடிக்க கூடாது- ன்னு எல்லா ரூல்ஸ்சையம் follow பண்ணிக்கிட்டு தானே இருக்கோம். நான் கூட " இது தான் தனி மனித சுதந்திரமா -ன்னு ?! எத்தனை தடவை கேட்ருக்கேன் என்று வினவிய மனைவியிடம் " அதெல்லாம் பண்ணலேன்னா போலீஸ் காரன் புடிப்பான்ற பயத்துல தான பண்றோம் " என்று கூறிவிட்டு மேற்கொண்டு விவாதத்திற்கு தான் வரவில்லை என்பது போல திருப்பிப் படுத்து குறட்டை விட ஆரம்பித்தான்.

நிதிலாவின் மனம் அவன் வாதத்தை ஏற்க மறுத்தது...சற்று நேர சிந்தனைக்குப் பின் தன்னை அறியாமலேயே உறங்கிப் போனாள். அடுத்து வந்த நாட்களில் தன் அகத்தையும், புறத்தையும் கூர்மையாக்கிக் கொண்டாள். மகன், மகளின் பள்ளிகளில், அவர்கள் செல்லும் பலதரப்பட்ட வகுப்புகள் மற்றும் கடை கண்ணிகளிலும் நம் நாட்டவரின் நடத்தையை கவனித்து மித்ரனின் கணிப்பு தவறு என்று நிரூபித்து, அவன் எவ்வாறு அயல் நாட்டவருக்கு ஆதரவாகப் பேசலாம் என்றும் சண்டையிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

கண்காணிப்பின் முடிவில் இரண்டு வகையான மனிதர்களை இனம் கண்டு வியந்தாள். ஒரு சாரார் விதிகளை கடுமையாகப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். சாலையைக் கடக்கும் போது, தங்களுக்காக நிற்கும் கார்களை மனதில் கொண்டு ஓட்டமும் நடையுமாக குழந்தைகளை இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டாள் ஆனால் மறு சாராரின் நடவடிக்கைகள்   அவளின்  எதிர்பார்ப்பில் மிகப் பலமான இடியை இறங்கியது. தராசு அவர்கள் பக்கம் சரிவதைக் கண்டு கலங்கினாள். கணவன் கூறியது சரியே என்று தோன்றும் அளவிற்கு அவள் கண்ட காட்சிகள் இருந்தன.

அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற இடத்திலும் தன் நாட்டினர் பேசிக்கொண்டு இருப்பதையும், அதை கவனிக்கும் பலரையும் அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்பதையும் கவனித்தாள். உள்ளிருந்து வெளியே செல்வதற்காக திறக்கப்பட்ட கதவை மாறி மாறி ஒருவர் பிடித்து நிற்க, எதுவுமே அறியாதது போல வெளியிலிருந்து உள்ளே நுழைவதையும், அதற்காக சிறு வருத்தமோ, நன்றியோ தெரிவிக்காமல் செல்லும் மக்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். " Free Sample " கொடுக்கும் இடங்களில் ஒருவர் நுழைந்து தன் ஒட்டு மொத்த குடும்பத்திற்காக அள்ளிக்கொண்டு கொண்டு செல்வதும் அன்றாடக் காட்சியாக இருந்தது.

நம் நாட்டில் நாம் வளர்ந்த விதம் அப்படி என்று நிதிலா தன்னை சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். " நின்னு கிட்டே இருந்தா...இப்பிடியே இருக்க வேண்யதுதான் " என்று கூறிக் கூறியே நம்மை பழக்கப் படுத்திவிட்டார்கள் ஆனால் இங்கு நிலைமை வேறல்லவா?! என்று நினைத்தவள் இங்கு பள்ளிகளில் அதனால் தான் " Wait For your turn " என்று சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கிறார்களோ?! என்று வியந்தாள். நம்மில் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் அல்லவா பலி கடா ஆக்கப்படுகிறார்கள். தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை தேச துரோகிகளாகப் பார்க்கும் இவர்கள் நம் நாட்டிற்கு செல்லும் போது மட்டும், " சே...சே..என்ன இது சந்தைக்கடை மாதிரி...ஒரு Discipline இருக்கா?! என்று சட்டம் பேசுகிறார்களே?!   என்று நகைத்துக் கொண்டாள்.

வெளி நாட்டிற்கு வரும் நாம்  சில மாதங்களிலேயே  வாழ்க்கை முறை மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகளை அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிறோமே ஆனால் விதிகள் (இங்கீதங்கள்) மட்டும் நமக்கு ஏன் வேப்பங்காயாய் கசக்கிறது?!  இத்தனை நாள் இதையெல்லாம் தான் ஏன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, கவனிக்கவில்லை என்று தன்னையே வினவிக்கொண்டவள்...குட்டையில் ஊறி மட்டைகளில் தானும் ஒரு மட்டையாக இருந்ததை எண்ணி வெட்கினாள்.

தன்னைத் திட்டிய அந்த பெண்மணியை இப்போது  நினைத்துப் பார்த்தாள் நிதிலா. அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை அவள் செய்தது சரியே என்ற எண்ணம் எழுவதை அவளால் தடுக்க இயலவில்லை. "நீங்க சொன்னது சரிதாங்க" என்று மித்ரனிடம் கூற வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். சுழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களை பச்சோந்தி என்று இழித்தும் பழித்தும் பேசுகிறோம் ஆனால் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவதில், பின்பற்றுவதில் பச்சோந்தி ஆவதில் தவறொன்றும் இல்லையே!!!             

     

Tuesday, October 11, 2016

நவராத்திரியும் நானும்

நவராத்திரி என்றதும் நம் அனைவருக்கும் ஒரு சேர நினைவுக்கு வருவது கொலு மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆயுதப் பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்களே...புத்தகங்களை பூஜையறையிலேயே மறந்து வைத்து விட்டு, மறு நாள் பள்ளியில்  அடிவாங்கியதெல்லாம் உங்கள் நியாபகங்களில் நிழலாடலாம். காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் மீண்டும் இரண்டு மூன்று நாட்கள் தொடர் விடுப்பு கிடைப்பதென்பது இன்றைய சூழ்நிலையில் "மகிழ்ச்சி" தானே?!...பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் வாயாடிக் கொண்டிருக்கும் ஒரு சில வாண்டுகளுக்கோ விஜய தசமி அழுவாச்சி தினமாக அல்லவா மாறிவிடுகிறது. 

இந்நாட்களில் கொண்டாட்டங்கள் கண்களை நிறைத்தாலும் நவராத்ரி நாயகிகளான முப்பெருந்தேவியரே மனதில் நிலைப்பார்கள். சிறு வயது முதலே எனக்கு அம்மன் மீது அதீத  பற்று(பயம் ).  இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். வழக்கம் போல் தலைவலி என்று பள்ளிக்கு மட்டம் அடித்து விட்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆடி வெள்ளி என்பதால் அம்மன் கோவிலுக்கு பாட்டி, சித்தியோடு செல்ல நேர்ந்தது. கூட்ட நெரிசலில், மஞ்சள் புடவையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்களையும், கையில் வேப்பிலையோடு சாமி ஆடுபவர்களையும் கண்டு மிரண்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் காய்ச்சலில் படுத்துவிட்டேன். நான்காம் வகுப்பில் இருந்த நேரம்- ஆடி வெள்ளி அன்று  மாவிளக்கு ஏற்ற குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றோம். அலை மோதும் பக்தர்கள் வரிசையில் நிற்க பிடிக்காமலும், ஒளியும் ஒலியும் பார்க்கும் ஆர்வத்திலும் பாதியிலேயே வீட்டிற்கு சென்றுவிட்டேன். அடுத்த வந்த நாட்களில் எனக்கு அம்மை போட்டு விட்டது. "அம்மா கோயிலுக்கு போயி அவளை பார்க்காம வந்தியில்ல?! அதான் அவளே உன்னை பார்க்க வந்துட்டா" என்று பாட்டி சொல்ல பீதியில் உறைந்து போனேன். திரைப்படங்களில் வரும் காளியும், நீலியும் கனவில் துரத்த  தூக்கத்தில் பிதற்றினேன்.  

      
நடுநிலைப் பள்ளியில் படித்த காலங்களில்  கசின்களின் கூட்டணியில் "கொலு" வைப்பதுண்டு. இன்று வீட்டிற்கு வீடு கொலுப்படி அமைத்து கொண்டாடுவது சகஜமாகிவிட்டது. ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன், வாசற்படியில் ஈர மண் கொண்டு கோபுரம், வீதி என்று "செட்" போடுவதுதான் எங்கள் கொலு. அதில் பல வகையான  பிளாஸ்டிக் பொம்மைகளும் இடம் பெறும். அப்படியே போட்டு விட்டுப் போக முடியாது. இரவானதும் அனைத்தையும் வாளிகளில் அள்ளி விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே எங்களுக்கு அனுமதி கிடைக்கும். தினமும் இரண்டு மணி நேரம் செலவிட்டு கொலு வைத்தால் ஏரியாவில் இருக்கும் "குட்டி" தாதாக்கள் நிமிடத்தில் கலைத்து விட்டு ஓடி விடுவார்கள். சில சமயம் எங்கள் கொலு உண்டியலை கையிலிருந்து பறித்துக் கொண்டு சென்று எங்கள் கொலுவிற்கும் முடிவு கட்டி விடுவார்கள்.

எங்கள் பெரியப்பா "பிரின்டிங் பிரஸ்" வைத்திருந்ததால் "ஆயுத பூஜை"-யை மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அதற்கு முந்தைய இரவு அச்சகத்தில் பணிபுரிபவர்களோடு சேர்ந்து சுத்தம் செய்கிறோம், கோலம் போடுகிறோம்  என்ற பேரில் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டம் போட்டு, பூஜையின் போது தூங்கிய அனுபவம் மறக்க முடியாதது. அன்று அனைத்து உறவினர்களும் பெரியம்மா வீட்டில் ஒன்று கூடுவதால், திருமண வீட்டைப் போன்று குதூகலம் ததும்பி வழியும். பழங்களும் ,பொறியும் சாப்பிட்டு வயிறு நிறைந்து விடும். 

சரஸ்வதி பூஜை அன்று சுண்டல் சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் ஆனால்  "சரஸ்வதி சபதம்" படத்தைப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். பல்வேறு தெய்வங்களைப் பற்றி பெற்றோர்கள், பெரியோர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டிருந்தாலும், அதைத் திரையில் காணும் போது ஏற்படும் பிரமிப்பு - அதற்கு ஒரு அசைக்க முடியாத நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கேபிள் டிவி இல்லாததால் தெருக்கம்பங்களில் திரைகளைக் கட்டி போடப்படும் "சிறப்புக்காட்சி"-க்கு கூட்டம் அலை மோதும். பள்ளிக்கூட நாட்களில் தாத்தாவோடு அமர்ந்து பார்த்த அனுபவம் உண்டு. படம் முடிந்தாலும் கல்வியா, செல்வமா, வீரமா என்ற விவாதம் அடுத்த இரண்டு தினங்களுக்கு எங்களுக்குள் தொடரும்...  

பலவித பண்டிகைகளையும், நன் நாட்களையும் ஏன் கொண்டாடுகிறோம்?! எதற்குக் கொண்டாடுகிறோம்?! என்பதற்கு பல்வேறு ஆன்மீக, வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். "இல்லேன்னா சாமி கண்ணைக் குத்தும்" என்று நம்மை நம் முன்னோர்கள் பயமுறுத்தி இருந்தாலும், மாறி வரும் பருவ நிலைக்கு ஏற்ப நம் உடலை தயார்படுத்தவே இந்த குறிப்பிட்ட நாட்களைத் தேர்வு செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. கடும் கோடையில் தோன்றிய வெம்மை நோய்  பரவாமல் இருக்கவும், நோயால் பாதித்தவர்கள் விரைவில் குணமடையவும், வரவிருக்கும் மழைக்கால தொற்றுக்களைத் தடுக்கவும் - ஆடி மாதத்தில் வேப்பிலைக்காரியான அம்மனை வழிபட்டிருப்பார்கள். அம்மாதத்தில் காப்பு கட்டிவிட்டதாகக் கூறி சில கிராமங்களில் அன்னியர்களை அனுமதிப்பதில்லை. அம்மன் கோயில் கூழுக்கு நிகரான ஊட்டச்சத்து நிறைந்த பானமும், வேப்பிலைக்கு மேலான கிருமி நாசினியும் ஏதேனுமுண்டா?!   

நவராத்திரியைத் தொடர்ந்து வரும் குளிர்காலத்திற்கு நம்மை பலப்படுத்தவும், நோய்களிருந்து காத்துக் கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தான் தினம் ஒரு பயறு வகையை சுண்டல் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு சில வேளைகளில்  நாம் மேற்கொள்ளும் விரதங்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகவே இருக்கின்றது.

இன்று நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம்  பாரம்பரிய விழாக்களையும், பண்டிகைகளையும் நமக்கேற்ற கலாச்சார முறைப்படி  தவறாமல் கொண்டாடுகிறோம். "நமக்கில்லேன்னாலும் குழந்தைகளுக்காக செய்யணும்" என்று சொல்லிக் கொள்கிறோம். பல சமயங்களில் நண்பர்கள், அன்பர்கள்  என்று ஒன்றாக இணைந்து மகிழ்கிறோம். ஆனால் நாம் மட்டுமல்லாமல் நம் சுற்றமும், சூழலும் நம்மோடு சேர்ந்து   விழாக்கோலம் பூணும் பொழுது ஏற்படும் மன உணர்வை, நிறைவை  நம்மால் அடைய முடிவதில்லை. " இந்நேரம் ஊர்ல சூப்பரா இருக்குமில்ல?! என்று ஏங்குகிறோம். நம் குழந்தைகளுக்கு நம்மால் விழாக்களை அறிமுகம் செய்ய இயலும்...அனுபவங்களை அளிக்க இயலுமா?!  

Friday, September 2, 2016

"பனியாரம்" பாட்டி

ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தவளின் காதுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லும் வாகனங்களின் சத்தம் விழ, அரக்க பறக்க எழுந்து அமர்ந்தாள். பறவைகளின் ரீங்காரங்களுக்குப்  பதிலாக கேட்கும் பஸ்ஸின் ஓசை,  பொழுது நன்கு புலர்ந்து விட்டதை உணர்த்தியது. கூந்தலை வாரி சுருட்டி கொண்டையாக்கியவள் வேகமாக எழுந்து நிற்க முயன்று தோற்றாள். மனதின் வேகத்திற்கு அவளின் அறுபது வயது உடலால் ஈடு கொடுக்க முடியவில்லை.

" ஆத்தா மகமாயி" என்று மெதுவாக எழுந்தவள் பாயை சுருட்டி மூலையில் கடாசினாள்.

வாயிலை நோக்கி நடந்தவள், கயிற்றுக் கட்டில் சுவரோரம் சாய்த்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டு, "எந்திருச்சும்  உசுப்பி விடாம போயிருக்கு இந்த மனுசன்" என்று தன் கணவரைப் பற்றி தனக்குள்ளே புலம்பியவளாய்  அருகில் இருந்த  குடத்து நீரை வாளியில் கவிழ்த்தாள். நன்கு சாணியால் மொழுகி, காய்ந்திருந்த  வாசலில் ஊற்றினாள். மீதமிருந்த தண்ணீரில் முகம் கழுவி, வெற்றிலைக் கறை படிந்த பற்களை கையால் தேய்த்து வாய்க் கொப்பளித்தாள். வீட்டிற்குப்  பின் புறம் இரண்டு நிமிடம் சென்று வந்தவள் சாலையைக் கடந்து எதிர்புறம் இருந்த குடிசையை நோக்கி நடந்தாள்.

கதவிற்கு பதில் நின்று கொண்டிருந்த தென்னை ஓலையை எடுத்து வெளியில் போட்டவாறு உள்ளே நுழைந்தாள். இரண்டு அடுப்புகளையும் ஒருசேர பற்ற வைத்தாள்." என்ன முழுச்சுகிட்டியா?" என்றவாறு  கையில் தூக்கு வாளியுடன் உள்ளே நுழைந்த கிழவனிடம், " ஆமா நேரமாச்சுல்ல" என்றவள் " நீ குடிசிட்டியா?" என்று கேட்டவாறு தூக்கில் இருந்த டீயை மடக் மடக் என்று விழுங்கி ஏப்பம் விட்டாள்.

" நீ நல்லா தூங்கிட்டு இருந்தே அதான் டீ வாங்கியாந்து எழுப்பலாம்னு போனேன்" என்றவன் புகை மூட்டத்தினூடே பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவளின்  பதிலை எதிர் பாராமல் தோட்டத்தை நோக்கி நடந்தான். மூட்டு வலியினால் வளைந்த கால்களுடன் சாய்ந்து சாய்ந்து நடந்து செல்லும் தனது கணவரை அவள் கவனிக்கத் தவறவில்லை.

அந்தக்  கிராமத்தை அப்பளக் கம்பெனிகளும் ரைஸ் மில்களும்  ஆக்கிரமித்திருந்தன. சிலர் விவசாயம் செய்தனர். அங்கு வேலை பார்ப்பவர்களை நம்பியே பாட்டியின் வியாபாரம்  ஓடியது  . பல ஓட்டல் கடைகள் இருந்தாலும் தனக்கென்று சில வாடிக்கையாளர்களை வைத்திருந்தாள் பாட்டி. அவர்களின் காலை சிற்றுண்டி பாட்டியின் கடையில் தான். சில பள்ளிக் குழந்தைகளும் சாப்பிடுவதுண்டு. சட்னி அரைத்த கையோடு அடுப்பிலிருக்கும் விறகை சரிசெய்து விட்டாள். முகமெங்கும் வியர்வை வழிந்தோடியது.

" என்ன பாட்டி இட்லி கெடைக்குமா?" என்று கேட்டபடி நடுத்தர வயது மதிக்கத் தக்க ஆண்கள் உள்ளே நுழைந்து பக்க வாட்டில் இருந்த திண்டில் அமர்நது கொண்டனர். " இதோ" என்றவாறு ஆவி பறக்கும் இட்லிகளை சட்டியில் கவிழ்த்தாள். ஒரு கையில் வாழை இலைகளும்  மறு கையில் தண்ணீர் குடமுமாக உள்ளே நுழைந்த அவளுடைய கணவனும் அவர்களுடன் பேச்சு கொடுத்து கொண்டே அமர்ந்தான். தட்டில் இலைகளைப் போட்டு நான்கு ஐந்து இட்லிகளை சட்னிகளுடன் அவர்களுக்குப்  பறிமாறினாள். " நீயும் சாப்பிடு" என்று கிழவனுக்கும் கொடுத்தாள்.

 கையில் இரண்டு பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்த பாலாவும் பாபுவும்,   "பணியாரம் ரெண்டு ரூவாய்க்கு பாட்டி" என்றனர். " இனிப்பு பணியாரம் இன்னும் ஊத்தல சாமி ஒக்காருங்க " என்றவள் " பள்ளிகோடம் இல்லியா?" என்று சிரித்தாள் வெற்றிலையைக்  குதப்பிக் கொண்டே. இல்லை... என்பது போல் தலையாட்டி விட்டு அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களின் இலைகளை நோட்டமிட்டனர் இருவரும். அவர்களின் வாயில் எச்சில் ஊறிய அதே சமயம் " அதெல்லாம் உங்களாலே சாப்பிட முடியாதுடா  காரமா இருக்கும்" என்று தங்களின் பாட்டி கூறியது நினைவுக்கு வர எச்சிலை முழுங்கிக் கொண்டனர் ஏமாற்றமாக.

அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர்களின் பணியாரம் கிடைத்தது. சில பள்ளிக் குழந்தைகளும் இனிப்பு பணியாரம் என்று பார்சல் வாங்கிச் சென்றனர். " எல்லாருக்கும் சட்னி வேணுமில்ல" என்று சிலரை மிரட்டியும்,
" இன்னும் ரெண்டு இட்லி சாப்டு " என்று சிலரிடம் கனிவாகவும் வியாபாரத்தை நடத்தினாள். கொடுக்கும்  சில்லறைகளை வாங்கிச் சரி  பார்த்து சுருக்குப் பையில் போட்டுக்  கொண்டாள். " நாளைக்கு தர்றேன் பாட்டி" என்றும் " சாய்ங்காலம் கூலி கொடுத்துருவாங்க" என்று சிலரும் நகர்ந்தனர். "பொழுது சாய வீட்டுக்கு வர்றேன்னு உங்க  பாட்டிகிட்ட சொல்லுங்க" என்று  பாலா, பாபுவை நோக்கி சிரித்த முகத்துடன் கூறினாள். இரண்டு பாட்டிகளும் தோழிகள். மூன்று பணியாரம் ஓசியாக கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்தனர் சகோதரர்கள்.

காலை பத்து மணி வரை வியாபாரம் பின் வீட்டுச்  சமையல். மதிய நேரம் அடுப்பிற்குத் தேவையான சுள்ளிகளையும், தென்னம் மட்டைகளையும் தோப்பிலிருந்து சேகரித்துக்  கொள்வது, மாலை வேளைகளில் அடுத்த நாளிற்கான மாவை உரலில் இட்டு அரைப்பது என " பிஸி " பாட்டியாக இருந்தாள் " பணியாரம் " பாட்டி. அவளுடைய கணவன் அருகிலிருந்த அதே  தோப்பில் " Watch Man "- ஆக இருந்தான். மோட்டார் போட்டு தண்ணீர்  பாய்ச்சுவது, அயலவர்களை அண்ட  விடாமல் பார்த்துக் கொள்வது என அவருக்கும்  பொழுது போனது. பாபுவும் பாலாவும் பல முறை தண்ணீரில் ஆட்டம் போட்டதுண்டு. புளியங்காய் கூட பறித்துக் கொடுப்பார் தாத்தா.  

நன்கு இருட்டி விட்டிருந்தது." நல்லா இருக்கியளா?" என்றவாறு  வீட்டிற்குள் நுழைந்த "பணியாரம்" பாட்டியிடம், " சாந்திரமா வர்றேன்னுட்டு இப்ப வர்ற ?" என்றாள் பாலாவின் பாட்டி. "ஆமா " என்றவளின் கண்கள் பாலாவின் தந்தையைத் தேடியது." பெரிய தம்பி இன்னும் வரலையோ?" என்றவளின் குரலைக் கேட்டு, " என்னம்மா எப்பிடி இருக்கீங்க?" என்றவாறு வெளிப்பட்டான் பாலாவின் தந்தை கையில் சிறிய பொட்டலத்துடன். அவர் மருத்துவமனையில் அலுவலகப்  பணியில் இருந்தார். மலர்ந்த முகத்துடன் அதைக்  கையில் வாங்கியவள் " அவர்  மூட்டு வலியால நடக்க முடியாம கஷ்டப்பர்றார். மாத்திரை கேக்கலாம்னு வந்தேன் நீயே கொடுத்திட்டே" என்று சேலையில் முடிந்து கொண்டாள்.

"சரி அப்ப வாறேன்" என்றவள் அவர்களின் வீட்டிற்குப்  பின் புறம் இருக்கும் காம்பௌண்டில் வசிக்கும் அவளின் இரண்டாவது மகனைப் பார்க்கப் போனாள். மருமகள் அப்பொழுதுதான் அப்பள வேலைகளை ஒதுக்கி விட்டு சாதம் வடித்துக் கொண்டிருந்தாள். " அவன் இன்னும் வரலையா?" என்றவாறு வாசலில் அமர்ந்து கொண்டாள். தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள். முதல் மகனும் அதே கிராமத்தில் தான்  குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருந்தான். மகளைப்  பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மணமுடித்து கொடுத்திருந்தனர். மூன்றாவது மகனுக்கு  லாரியில் கிளீனராக ஊரெல்லாம் சுற்றும்  வேலை. எப்போதாவது தான் வீட்டிற்கு  வருவான்." ஏன் பாட்டி... பசங்களோட சேர்ந்து இருக்க வேண்டியதுதான? எதுக்கு கஷ்டப்பற? " என்பவர்களிடம் " யாரு தயவும் நமக்கு வேணாம் சாமி...கையும் காலும் நல்லா  இருக்குற மட்டும் உழச்சு சாப்பிட வேண்டியதுதான்" என்று கேட்பவர்களின் வாயை அடைத்து விடுவாள்.

தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்த மகனைப் பார்த்து " ஏன்டா இப்பிடி குடிச்சு குடிச்சு குடியக் கெடுக்குற? " என்று மூக்கைச் சிந்தியபடி திட்டினாள்."ஏய் நீ தான் கெளவிய கூப்டியா?" என்று  அவன்  மனைவியிடம் கையை ஓங்க, " அவள ஏண்டா அடிக்கிற" என சண்டை பெருசானது. பாலாவின் சித்தப்பாவும், பாட்டியும் சண்டையை விலக்கி பாட்டியை  வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அன்று எப்பொழுதும் போல பொழுது விடிந்தது. ஆனால் முடியும் பொழுது அனைவரின் தலையிலும் இடியை இறக்கி விட்டு மறைந்தது எனலாம்." என்ன பெத்த ராசா...இப்பிடி எங்கள எல்லாம் விட்டுட்டு போயிட்டியே" என்ற பாட்டியின் ஓலம்  தெருவெங்கும் ஒலித்தது. சுற்றமும் உறவுகளும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தன. தாத்தா துண்டால்  வாயை  மறைத்துக் கொண்டிருந்தார். தோள்கள் மட்டும் இடைவிடாது  குலுங்கிக்   கொண்டிருந்தது. பாலாவின் பாட்டியும் கவலை தோய்ந்த முகத்துடன் " க்ளீனரா இருந்த கடைசி பையன் சரவணன் ஆக்சிடெண்ட்-ல இறந்துட்டான்" என்று அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கூறுவதை பாலாவும் கேட்டான்.

சில நாட்கள் அழுது புரண்டு காய்ச்சலில் அரற்றினாள் "பணியாரம்" பாட்டி. பின் " நம்ம வயத்து பொழப்ப நாம தானே பாக்கணும்" என்று கடை போட ஆரம்பித்தாள். அடுத்து வந்த சில வருடங்களிலே இரண்டாவது மகனையும் குடிக்குத்  தாரை வார்த்துக் கொடுத்தாள். மருமகளை மறுமணம் செய்து கொள்ளுமாறு தாய் வீடு அனுப்பிய பாட்டி  மனதாலும்,உடலாலும்  மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். சில சமயம் பாலா வீட்டு கிரைண்டரில் மாவு அரைத்து கொடுக்கச் சொல்வாள்.

வருடங்கள் உருண்டோடின. பாலாவின் பெற்றோர் நகரத்திற்குக்  குடி பெயர்ந்தனர். " உங்க பாட்டிய பாக்க வர்றப்போ இந்த பாட்டியையும் மறக்காம  வந்து பாருங்கடா" என்ற  அவளின் வெற்றிலைக்  கறை படிந்த சிரிப்பை இந்நாட்களில் ஏனோ பார்க்க முடிவதில்லை.  காலப் போக்கில் கடை போடுவதையும்  நிறுத்திக் கொண்டாள். ரைஸ் மில்லில் வாசல் பெருக்குவது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

கிராமத்து வீட்டில் பாலாவின் சித்தப்பா குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. அவ்வப்போது அங்கு வரும் பாட்டி," எல்லாரும் எப்பிடி இருக்காங்க? பாலா என்ன பண்றான்? அடி ஆத்தி அம்புட்டு பெருசா  வளந்துட்டானா?" என்று ஆச்சர்யப்படுவாள்." இதெல்லாம் பாக்கக்  குடுத்து வைக்கல இந்த மகராசிக்கு" என்று பாலாவின் பாட்டி படத்தைப் பார்த்து குரல் தழு தழுக்க  கண் கலங்குவாள். " பாக்க கூடாததெல்லாம் பாத்துகிட்டு நாந்தேன் இன்னும் உசுரோட கெடக்கேன்...பாழா போன சாவு வரமாடேங்குது" என்று பெரு மூச்செறிவாள்.

அடுத்து வந்த வருடங்களில் கிழவனும் போய்ச் சேர்ந்தான். தனி மரமானாள் பாட்டி. கல்லூரி விடுமுறையில் இருந்த பாலாவும் பாபுவும் பாட்டியைப் பார்க்க வந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது." அவங்க பொண்ணு ஊருக்கு போயிருக்காங்க" என்று கூறிய  அக்கம் பக்கத்தினர் ." ஆமா நீங்க யாருப்பா? " என்ற கேள்விக்கு "தெரிஞ்சவங்க " என்று ஒற்றை வார்த்தையில் பதில்  கூறி நகர்ந்தனர். ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும் போதும் , "பணியாரம்" பாட்டி எப்பிடி இருக்காங்க?! என்று கேட்பான் பாலா. " இப்ப எல்லாம் அவங்க பையன் வீட்டோட  போயி தங்கிட்டாங்க போல    " என்று அம்மா கூற புளித்த வாசம் வீசும்  பணியாரத்தின் மணமும், பாட்டியின் சிரித்த முகமும் பாலாவின் மனதில் தோன்றி மறையும். அடுத்த தடவை வரும் போது எப்படியாவது பாட்டியை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.    

நாட்கள் பறந்தோடியது. அன்று  ரோட்டை மறித்து அந்தக்  குடிசையின் முன் ஒரே கூட்டம். "கொஞ்சம் ஓரமா வண்டி  போக வழி விட்டு நில்லுங்கப்பா" என்று கண்டக்டர் கூற, பஸ்ஸில் இருந்த ஒரு சிலரும் எட்டிப் பார்த்து, அதிர்ச்சியோடு இறங்கி கூட்டத்தோடு கலந்து நின்றனர். உள்ளே, கயிற்றுக் கட்டிலில் பாட்டியின் உடல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கு கூடி கலங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பாலா, பாபுவைப் போல " பணியாரம்" பாட்டி என்று அன்பாக அழைத்தவர்கள் தான்.

 "ஒழைச்சு ஒழைச்சு ஓடா தேஞ்சு ஒரேடியா போயிட்டா...சொத்தா சுகமா?! " என்று பாட்டியைச் சுற்றி அமர்ந்து புலம்பிக்  கொண்டிருந்த பலருக்கு, இதோ இங்குத்  தோள் கொடுக்கத் தயாராக நிற்கும்   தொப்புள் கொடி பந்தம் இல்லாத இந்த உறவுகள் தான் அவள் உழைப்பினால் சம்பாதித்த விலை மதிப்பில்லாத ஒரே சொத்து என்பது  ஏனோ  விளங்கவில்லை. உழைப்பையும், இழப்பையுமே  மாறி மாறி அனுபவித்த பாட்டியின் முகத்தில் அன்று முதன் முறையாக   அமைதியும் பெருமிதமும் நிரந்தரமாகக்  குடி கொண்டிருந்தது.
  

Tuesday, June 7, 2016

வெள்ளைப் பொய்கள்

புது வருடம் தொடங்கிவிட்டது. அனைவரிடத்தும் பரபரப்பும், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் தொற்றிக் கொண்டுவிட்டது. "இது ஜனவரி மாதம் இல்லையே?! புது வருடம் எப்படி?!", என்று உங்கள் புருவங்கள் உயர்வது  தெரிகிறது...நான் கூறுவது புதிதாகத் ஆரம்பித்த  கல்வி ஆண்டைத்தாங்க!!! நாம் கடந்து வந்த பாதையை "Rewind" செய்து பார்க்கும் பொழுது இந்த பள்ளிக்காலம் நம் மனக் கவலைகளை களைத்து, புத்துணர்வையும் நிரப்பிவிட்டுச் செல்லத் தவறுவதில்லை. புதுச்  சீருடை, நோட்டு, புத்தகங்களிலிருந்து வருமே ஒரு வாசனை...ஆஹா!!! ஆரம்பப் பள்ளி, இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என்று எங்கும் மாணவர்கள் வெள்ளம் கரை புரண்டு, பல வண்ணக்  கனவுகளைத் தாங்கி ஓடுகிறது ஆனால் முதல் முதலாக  பள்ளியில் காலடி எடுத்து வைக்கும்  பிஞ்சுக் குழந்தைகளின் பவுடர் படிந்த முகங்களையும், கலங்கிய கண்களையும் (அம்மாவின் கண்களும்தான்) காணும் பொழுது ஏற்படும் பரவச நிலைக்கு ஈடு இணையே இல்லை என்று தான் தோன்றுகிறது.  

நம் வாழ்க்கைக்குத் தேவையான... முக்கியமாக சமூதாயத்தில் நம்மை இணைத்துக் கொள்ள அத்தியாவசியமான  அனைத்து வித  நுணுக்கங்களையும் நமக்கு அறிமுகம் செய்யும் இடம் "பள்ளிக்கூடம்". அங்கேயே  நமது சமூக வாழ்கை ( Social Life) ஆரம்பமாகி விடுகிறது  என்று தான்  சொல்ல வேண்டும். பல வித நல்லொழுக்கங்களையும்  நமக்கு கற்றுத் தர பள்ளிகள்  படாத பாடு பட்டாலும், மிகச் சுலபமாக, சொல்லிக் கொடுக்காமலேயே  நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஒரு விஷயம் " பொய் கூறுவது". கூட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்ள, தண்டனைகளில் இருந்து தப்பிக்க இதை விட  எளிய வழி இருக்கிறதா என்ன?!

ஆரம்பப் பள்ளியில் இருக்கும் பொழுது மதிய உணவை பாட்டி வீட்டில் சாப்பிடுவது வழக்கம். U .K .G -ல் இருந்த எனது தங்கைக்கு " Selective Amnesia " போல செலக்டிவ் வயிற்று வலி, தலை வலி சாப்பிட்டு முடிந்ததும் தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நீடிக்கும். மூன்று மணி ஆனதும் சரியாகி விளையாட ஆரம்பித்து விடுவாள். ஏன் அப்படி?! உங்களுக்கே தெரிந்திருக்கும்... ஸ்கூலுக்கு மட்டம் போடுவதற்குத்தான் என்று. டீச்சர் நேத்து எங்க வீட்ல கரண்டு இல்லை, ஹோம்வொர்க் நோட்ட கிளாஸ்ல வச்சிட்டு போயிட்டேன் என்று வீட்டுபாடம் எழுதாமல் போனதற்கு எத்தனை பொய்கள் கூறியிருப்போம். பள்ளியில் தொலைத்து விட்டு வந்த பென்சில் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ்ற்குத்  தான் எத்தனைப்  பித்தலாட்டம் வீட்டில்!!!

 பள்ளி இறுதி நாள். எதுவும் நடக்காது ஆனால் லீவு போட்டீர்கள்...அவ்வளவுதான் நீங்கள் Fail என்று எச்சரிக்கப்படுவீர்கள் இருந்தும்   அந்த கடைசி நாள் லீவு போட்டு விட்டு என்ன பொய் சொல்லி சமாளிப்பது என்று விடுமுறை முழுதும் யோசித்து தூக்கம் தொலைத்த நாட்கள் உண்டு. நான் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது  அந்தக்  கடைசி நாளில்  என் தங்கையின் புது டிரஸ், நகப்பூச்சு, லிப் ஸ்டிக் என்று அலட்ட ஆசை. என்ன செய்வது?! எனக்கு பிறந்தநாள் என்று பள்ளியிலும், டான்ஸ் ஆடப்போகிறேன் என்று வீட்டிலும் பொய் கூறி என் மாஸ்டர் பிளான்-ஐ நிறைவேற்றி விட்டேன் ஆனால்   அந்த கால கட்டங்களில் என் நிழலை விட என்னை நெருக்கமாக பின்தொடர்வது என் அருமைத் தங்கை. என் மனசாட்சியின் மறு வடிவமான அவளுக்கு சந்தேகம் வலுத்து விட்டது. ஸ்கூல்ல டான்ஸ் ப்ரோக்ராம் இல்லையே?!, என்ன பாட்டுக்கு ஆட்றீங்க?!, ஸ்டெப்ஸ் போடு  என்றெல்லாம் கூறி  குட்டையைக் குழப்பினாள். எங்க கிளாஸ்லயே ஆடுறோம்...ஸ்டேஜ்ல இல்ல என்றும், சில பல இலஞ்சங்களாலும்  அவளை சரிகட்டி விட்டேன். அடுத்து வந்த நாட்களில்  நான் கூறியது பொய் என்று பல முறை என் அம்மாவிடம் அவள்  போட்டுக் கொடுத்தாலும் பெரிதாக எனக்கு எந்த சேதாரமும் இல்லை என்பதுதான் உண்மை.

நாங்கள் வசித்த வீடு எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து நிமிட நடைப் பயணத் தொலைவில்  இருந்தது. அன்று அரையாண்டுத் தேர்வு. நானும் என் தங்கையும் பள்ளிக்கு ஒன்றாகச்  செல்வது வழக்கம். பள்ளியை அடைந்ததும் தான் தெரிந்தது தேர்வு தொடங்கி விட்டது என்று. என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரே ஓட்டமாக தேர்வறையை நோக்கி ஓடிவிட வேண்டியதுதான் என்று நினைக்கையில் எங்கள் கெட்ட நேரம் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ் வந்து விட்டார். 'என்ன இவ்வளவு லேட்டு?!, வீடு எங்க இருக்கு?", என்றதும் சிறிதும் தாமதிக்காமல் அடுத்த கணமே என்னிடமிருந்து வந்த பதிலைக் கண்டு நானே வியந்து போனேன். எங்கள் பள்ளியிலிருந்து 30 நிமிட தொலைவில் உள்ள ஏரியாவின் பெயரைக் கேட்டதும், "போங்க...இனிமே லேட்டா வரக்கூடாது", என்று முதுகில் ஒரு அப்பு அப்பி அனுப்பி வைத்தார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடினோம். தேர்வு நேரத்தை தவறாகப்  பார்த்ததால் வந்த வினை.


சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல் வெறுமனே பிறரின் கவனத்தை தங்கள் வசம் ஈர்க்க வேண்டுமென்று குழந்தைகள் கூறும் கப்ஸா மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். என் தம்பி இரண்டாவது படித்துக் கொண்டிருந்த பொழுது அவனுடைய நண்பன் வீட்டில் புலியை "Pet" ஆக வைத்திருப்பதாகக் கூறியதும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அது பொய் என்று அவனிடம் விளக்காமல், " சாப்பிட என்ன தருவாங்களாம்?!, எங்க தூங்குமாம்?! என்று அவனைத்  தூண்டிவிட, அவன் நண்பனும் சலிக்காமல் பதில் கூறினான். புலியை தினமும் வாக்கிங் கூட்டிச் செல்வதாகவும், பள்ளிக்கு வரும் நேரங்களில் கூண்டில் அடைத்துவிட்டு வருவதாகவும்  கூறி வெறுப்பேற்றினான். 

அவன் வீட்டிற்குச்  செல்ல அனைவரிடமும் போட்டா போட்டி. கடைசியாக என் தம்பியும் ஒரு நாள்  அவன் வீட்டிற்கு விஜயம் செய்து திரும்ப, அவனிடம்  "என்னடா?! புலி எப்பிடி?!", என்று நாங்கள் கேட்க," அவங்க வீட்டு நாய் பேரு டைகராம்", நீங்க நெஜ புலின்னா நெனைச்சீங்க?!-ன்னு கேக்குறான் என்று கூற " நல்ல வேலை புலின்னு பூனைய காமிக்கலையே என்று கிண்டலடித்தோம். சில நாட்கள் கழித்து அவன் வீட்டில் மயில் வளர்ப்பதாகவும், பார்க்க கோழிக் குஞ்சு போல இருந்தாலும் பெரிதானதும் தோகை வளர்ந்துவிடும் என்றும்  அவன் கூறுகிறான் என்று தம்பி கூறியதும், " உன் பிரண்ட் ரொம்ப நல்லா வருவாண்டா" என்று மனதில் நினைத்துக் கொண்டு  "ஒரு நடை போய் பாத்துட்டு வாயேன்" என்றோம்  சிரிக்காமல்.    

நான்காவது படித்துக் கொண்டிருந்த என் தம்பியின் வகுப்பாசிரியையை திடீரென மாற்றி விட்டார்கள். புதிதாக வந்தவருக்கு  என் தம்பியிடம் என்ன கோபமோ பாடங்களை மிகவும் சத்தமாகக் கூறவேண்டும் என்றும் மொத்த வகுப்புமே சேர்ந்து கடம் போட வேண்டும் என்றும் கடிந்து  கூறி இருக்கிறார். காது வலிக்கிறது என்று கூறியும் கேட்கவில்லை.  தனக்கு வந்த பிரச்சனையை தானாகவே களைய முடிவெடுத்தான். அப்பொழுது எங்கள் வீடு அவுட்டர்-ல் இருந்ததால் ரிக்க்ஷாவில் பள்ளி செல்வது வழக்கம். பள்ளி திறப்பதற்கு முன்பாகவே அவன் சென்று விடுவதால்  வாசலில் காத்திருப்பான். அன்று ரிக்க்ஷா கண்ணை விட்டு மறைந்ததும் அருகில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்று வயிற்றைக் கலக்குவதாகவும் பள்ளிக்கு செல்ல முடியாது என்றும்  கூறி விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறான். மாலையில் பள்ளி வாசலில் நின்று, ரிக்க்ஷா ஏறி எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு வந்து விட்டான்.

 டீச்சர் வராததால் வீட்டுப்பாடம் இல்லை என்று கூறிவிட்டான். தொலைபேசி வசதி இல்லாததால் சித்தி வீட்டிலிருந்து  தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மறுநாளும் இதே முறையை கடைபிடித்து மாட்டிக் கொண்டான் வீட்டில். அடி திட்டு எல்லாம் அவனுக்கு கிடைக்கவில்லை. உடனே டீச்சர்-ஐ தலைமை ஆசிரியையிடம் புகார் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. "நீ பாட்டுக்கு இப்பிடி போயிருக்கியே?! யாராவது கடத்திட்டு போனா எங்க போய் தேட்றது?!" என்றும், " ரெண்டு நாள் சத்தமா சொன்னா உனக்கே பழகிரும்...மண்டையிலே நல்லா ஏறும்...இதுக்கெல்லாமா பயந்து ஓட்றது" போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

அன்று குழந்தைகளாக இருந்த அனைவரும் இன்று பெரியவர்களாக மாறிவிட்டோம் ஆனால் பொய் சொல்வதை நிறுத்தினோமா?! இல்லை. மாறாக,  ஏன் பொய் சொல்கிறோம்?! அதனால் எத்தனை பேருக்கு நன்மை என்று நீட்டி முழக்கி... நாம் செய்வது சரி என்றும், இவை " வெள்ளைப் பொய்கள்" என்றும் வாதிடுகிறோம். நமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறோம். ஆனால்  யாரையும் பாதிக்காத, மாட்டிக் கொண்டால் தன் தவற்றை ஒப்புக்கொள்ளும் குழந்தைகளின் பொய்கள் அல்லவா உண்மையிலேயே " வெள்ளைப் பொய்கள்"!!!

கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழலும்  இன்றைய சூழலில், குழந்தைகளும் கம்பளிப் புழுக்களாக இருப்பதை விட  பட்டாம் பூச்சிகளாக மாறி பறந்து விடத் துடிக்கிறார்கள். இழந்த சுகத்தை எதிர்காலத்தில் தேடித் தொலைகிறார்கள்.  நாமும் "Grow Up " என்று அடிக்கடி கூறி அவர்களின் குழந்தைத்தனங்களை குழி தோண்டி புதைத்து விடுகிறோம். மாறாக, அவர்களின் சிறு சிறு குறும்புகளை ரசித்தும், கண்டிக்க வேண்டி இடத்தில் கண்டித்தும், மன்னிக்க வேண்டிய இடத்தில மன்னித்தும் மகிழலாமே!!!. வெள்ளைப் பூக்களோடு மழலைகளின் வெள்ளைப் பொய்களும் மலர்ந்தால் மானிடரிடத்தில் மன அமைதியும், மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும் என்பதில் சந்தேகமா என்ன?!    

     
        

Monday, May 2, 2016

நாடோடி

நத்தையைப் போல் நகர்ந்து கொண்டிருந்த விமானம், அடுத்த சில கணங்களிலேயே  அதன் அசுர வேகத்தை எட்டிப் பிடித்தது. தரையுடனான தனது  தொடர்பைத்  தற்காலிகமாகத் துண்டித்துக் கொண்டு- மேகத்துடன்   உறவைப்  புதுப்பித்துக் கொள்ளத் துவங்கியது . "ம்ம்ம்" என்ற பெருமூச்சோடு ஆசுவாசமடைந்த அருள் சீட் பெல்டின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். ஊர் போய் சேர்வதற்கு இன்னும் ஒரு விமானப் பயணமும், பல மணி நேர கார் பயணமும் கையிருப்பு இருப்பினும் - இந்த முதல் விமானம் பறக்க ஆரம்பித்ததும் பாதி கிணற்றைத் தாண்டிய திருப்தி அருளின் முகத்தில் பரவியது.

இருக்கையைப்  பின்புறமாக நகர்த்தி, கால்களை முடிந்தவரை முன்புறமாக நீட்டிக் கொண்டான். அசதியில் வாயைப் பிளந்தவாறு  தூங்கும் தன்  இரண்டு குழந்தைகளின் கேசத்தை மெதுவாக வருடியவன், கண்களை இருக்க மூடி, உறங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் மனைவி நந்தினியின் மீது  தனது நேசப்  பார்வையைப் படர விட்டான். சக பயணிகள்  அங்கும் இங்குமாக எழுந்து நடமாடத்  தொடங்கினர். பாத்ரூம் போகலாமா?! என்று யோசித்தவன் அங்கு  இரண்டு மூன்று பேர் காத்து நின்றதைக் கண்டு, அந்த எண்ணத்தைக் கை விட்டான் . "வீட்டைப் பூட்டினோமா?!" என்ற வழக்கமான சந்தேகம் அவனுள்  தோன்றி மறைந்தது. தூக்கம் வர மறுத்தது எனவே முன்னிருக்கும் திரையை ஒளிரவிட்டு அதிலிருக்கும் திரைப்படங்களைத்  துலாவத் தொடங்கினான். கண்கள்தான் காட்சிகளைக் கண்டதே அன்றி, அவன் மனம் வேறு சிந்தனையில் லயித்திருந்தது.

நான்கு மாதங்களுக்கு  முன்பு  ஒரு நாள், " தம்பிங்களோட கல்யாண தேதிய குறிச்சுட்டாங்களாம்...ஆவணியில தான் நாள் நல்லா இருக்காம்" என்று நந்தினி கூறிய நாளிலிருந்து பயணத்துக்குரிய ஏற்பாடுகளைச்  செய்யத் துவங்கி விட்டான் அருள். ஒரு மாசத்துக்கு முன்னாடி வெச்சிருந்தா விசா-வுக்கு போகாம இருந்திருக்கலாம், குழந்தைக்களுக்கு லீவு இருந்திருக்கும் என்று தனது புலம்பல்களை நடு நடுவே கூறினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான். " நீ வேணா முன்னாடி போய் கல்யாண வேலைகளை கவனிக்கிறியா?" என்ற கேள்விக்கு " ஆமா...இந்த பிள்ளைங்களை வச்சிக்கிட்டு....எங்கள  கவனிக்கவே ரெண்டு பேர் வேணும்", என்று நந்தினியிடம் இருந்து விடை வரவே...அனைவரும் ஒன்றாக, திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுதே செல்ல முடிவானது (முடிந்ததது ) .

சில பல சலசலப்புக்களால் திடுக்கிட்டு விழித்தவன்...தன்னை அறியாமலே உறங்கிப் போனதை உணர்ந்தான். இரவு உணவை சிரித்த முகத்துடன் விமான சிப்பந்தி வழங்கிக் கொண்டிருந்தார். " Air Hostess"- ன்னா ஆயா வேலை பாக்குறவங்களா?!", என்று வடிவேலு ஒரு படத்தில் கூறுவது நேரம் காலம் தெரியாமல் நினைவுக்கு வர, மனதிலேயே  சிரித்துக் கொண்டான். " ஏய்...நந்தினி எந்திரி...டின்னர் வந்திருச்சு", என்று மனைவியை தட்டி எழுப்பினான். விழிக்க முடியாமல் முழித்தவள்," நல்லா கனவு...ஏர்போர்ட்​ல எல்லாரும் நம்மளயே   ஆச்சர்யமா பாத்திட்டு இருந்தாங்க" என்று கூறி முடிந்தவரை சாப்பிட்டு, குழந்தைகளுக்காக சிலவற்றை பத்திரப் படுத்திக்கொண்டாள்.

சொந்த ஊருக்கு சென்று அம்மாவைப் பார்ப்பது, உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் அளவலாவது போன்ற நினைவுகள் களிப்பைக் கொடுப்பினும்,  சமீப காலமாக குழந்தைகளை வைத்துக் கொண்டு செல்லும் நீண்ட நேர விமானப் பயணம் மற்றும் ஊரில் இருக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை நினைத்து மனம் அமைதி கொள்ள மறுத்தது. பிளைட் கரைக்டா போயிரனும், விசா- வுல எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது, கல்யாண நேரத்தில குழந்தைகளுக்கு உடம்புக்கு ஏதும் வந்திரக்கூடாது என்ற எண்ணங்களே அருளின் மனதில் மேலோங்கி  இருந்தன.

ஒரு வழியாகப்  பல மணி நேர விமான பயணம் முடிவுக்கு வர ..பெட்டிகளை இழுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்து நின்றார்கள். நந்தினியின் தம்பிதான் பிக் - அப்பிற்கு காரோடு வருவதாக ஏற்பாடு. ஐந்து நிமிடம் கடந்திருக்கும்...டாக்ஸி வேணுமா?! என்ற கேள்விக்கு பதிலளித்து சலித்துப் போனார்கள். "எங்க அவனக்  காணோம்?!" என்று ஆரம்பித்த  அருளிடம், " போன் செஞ்சு பாக்கலாம்" என்றாள்  நந்தினி. அருகிலிருக்கும் கடைக்குச் சென்று..."ஒரு போன் பண்ணனும்" என்று கேட்டனர். "காயின் போன் எல்லாம் இல்ல சார்...செல் போன் இல்லையா?! என்று கடைக்காரன் கேட்ட அடுத்த நொடியே அங்கிருந்தவர்கள், வேற்று கிரக வாசிகளைப் பார்ப்பது  போல அவர்களை உற்று  நோக்கினர். உன் கனவு பலிச்சிருச்சு போல என்று காதருகே கிசுகிசுத்த அருளை கோபத்தில் முறைத்தாள் நந்தினி. " இந்தாங்க சார்...கால் பண்ணிக்கோங்க என்று அருகிலிருந்த ஒருவர் கைப்பேசியை கொடுக்க...தேங்க்ஸ் என்று கூறி விட்டு  தம்பியிடம் பேசி நிலவரத்தை விளக்கினார்கள்.

மறு நாள் விசா நேர்காணலில்  போட்டோ சரியில்லை என்று அலைய விட்டார்கள். ஷாப்பிங் சென்ற இடத்தில் பாத்ரூம் போகணும், பசிக்குது, தூக்கம் வருது என்று குழந்தைகள் படுத்த பல வித வாக்கு வாதங்களுக்கும், சண்டைகளுக்கும், சமாதானகளுக்கும் இடையே  சில மணி நேர கார் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரை அடைந்தார்கள். அவர்களின் ராட்சஸ பெட்டிகள் ஒரு அறை முழுவதையும் விழுங்கி விட...அடுத்த அறையில் அனைவரும் சுருண்டு படுத்துக் கொண்டனர்.

அடுத்து வந்த நாட்களில் நந்தினி திருமண வேலைகளில் மும்முரமாயிருந்தாள். அருள் குழந்தைகளை அவன் அம்மாவின் துணையோடு கவனித்துக் கொண்டான். தேவையானவற்றை ஒவ்வொன்றாக  பெட்டிகளில்(Luggage ) தேடி எடுப்பது பெரும் தலை வலியாக இருந்தது அருளுக்கு. இதைத்தான், "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்றார்களோ?! என்று நினைத்துக் கொண்டான். முதல் இரு முறை நந்தினிக்கு போன் செய்து," எந்த பெட்டியில என் பேன்ட் இருக்கு?!, கோட் எங்க இருக்கு?! என்று துளைத்தெடுத்தான். பின்பு அவளே பொறுமை இழந்தவளாய்," எல்லா பெட்டியையும் திறந்து வச்சு தேடுங்க" என்று கூறி விட்டாள்.

திருமணத்திற்கு முதல் நாள், " தல சுத்துது...பட படன்னு வருது என்று ஆரம்பித்த அருளை, " ஏன்?! நல்லா தானே போயிட்டு இருந்துச்சு" என்ற முக பாவனையோடு  பார்த்தாள் நந்தினி. பின் சகலையின் துணையோடு டாக்டரிடம் ஓடினான். கவலைப் படுவதற்கு ஏதுமில்லை என்று அறிந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர் இவ்வாறாக முதல் தம்பியின் திருமணம் நடந்து முடிந்தது. அடுத்த தம்பியின் திருமணத்திற்கு பதினைந்து நாட்கள்  இடைவெளி இருந்தததால் - இடைப்பட்ட தினங்களில் அருளின் அம்மாவோடு கோயில்களுக்கு செல்வது, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம்  செய்வது, அவர்களின் வழக்கமான கேள்விகளுக்கு, சிரித்துக் கொண்டே பதில் கூறுவது  (மழுப்புவது)   என்று பொழுது மகிழ்ச்சிகரமாகத்  துள்ளி ஓடிக் கரைந்தது.

ஓரிரு தினங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாம் என்று நினைக்கும் பொழுது கரண்ட் கட் (Total Off ) ஆனது. நினைத்ததைப் போலவே  குழந்தைகளுக்கும் மாறி மாறி உடம்பிற்கு வந்து போனது. "இன்னைக்கு தண்ணி வராதாம், குப்பை அள்றவங்க Strike",  என்று அக்கம் பக்கத்தார் பீதி கிளப்ப - அருளை நினைத்து அவனின் அம்மாவிற்கு டென்ஷன் பெருகியது. வாலு போய் கத்தி வந்த கதையாக பிரச்சனைகள் முளைத்த வண்ணம் இருந்தன. அம்மா இல்லாத போது சில பல வால்வுகளைத்  திருப்பி தண்ணீரை தொட்டியில் ஏற்றுவது ராக்கெட் சயின்ஸ்- யை விட கடினமாகப் பட்டது அருளுக்கு. ஒரு சில ஆவணங்களை வாங்க அருளும் அம்மாவும் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்து தேய்ந்தனர். அவர்களும் அருளின் வசவிற்குத்  தப்பவில்லை. " உங்க அவசரத்துக்கு எல்லாம் நடக்கணும்னா...முடியுமா?! உங்கள மாதிரி ஆளுங்களால  தான் இலஞ்சம் வாங்கனும்னு நெனைக்கிறாங்க " என்று நந்தினி வேறு அவள் இஷ்டத்திற்கு lecture கொடுத்து எரியும் கொள்ளியில் நெய்யை  வார்த்தாள்.

வசதிக் குறைவுகள், அசதி, நினைத்த காரியங்களை நேரத்திற்கு முடிக்க இயலாமை, "வெளிநாட்டுல இருக்கீங்க இப்பிடி காசுக்கு கணக்கு பாக்குறீங்களே?!", போன்ற கேலிப்பேச்சுக்கள், முக்கியமாக தனித்து செயல்பட முடியாமல் -  அனைத்திற்கும் மற்றவரின் உதவியை எதிர்பார்த்து நிற்பது போன்றவையே தன் கோபத்திற்கு காரணம் என்பதை  அறியாமல் இல்லை அருள். தனது ஆற்றாமையே  மற்றவர்களின் மேல் -   முக்கியமாக தனது தாயிடம் கோபமாக வெளிப்படுவதை உணர்ந்த அவன்  அதை தடுக்க முயன்று, தோற்றான். அடுத்த மைத்துனனின் திருமணம் முடிந்த கையோடு ஊருக்கு திரும்பும் காலமும் வந்து சேர்ந்தது. மூட்டை முடிச்சுகளோடு கிளம்ப ஆயத்தமானார்கள்.

இத்தனை களேபரங்களுக்கு இடையேயும் மகிழ்ச்சியாக இருந்த அந்த தாயின் மனம், வரப் போகும் பேரமைதியை நினைத்து நிம்மதியின்றி தவித்தது. " இங்க வந்தா நான் உன்ன திட்டிகிட்டே தான் இருப்பேன்...பேசாம இந்த சம்மர்ல ஊருக்கு வந்திடு" என்று மடியில் தலை சாய்த்து கூறும் மகனின் தலைமுடியை பாசத்தோடு வருடிக் கொண்டிருந்தாள். மறுநாள்  காரின் பின்னால் கையை அசைத்தபடி, கலங்கிய கண்களுடன் தனி மரமாக  விடை கொடுத்துக் கொண்டிருக்கும் தாயைப் பார்க்கப் பார்க்க அருளின் கண்களும் குளமானது . திரும்பிப் போகத்தான் வேண்டுமா?!, என்று அவனின் நாடோடி மனம் இரு தலைக் கொள்ளி எறும்பாக,  நிலை கொள்ளாமல் தவித்தது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக...சே என்ன இந்த வாழ்கை?!, என்று தன்னையே நொந்து கொண்டான்.

அந்நிய தேசத்தில்  முழுமையாக வேரூன்ற முடியாமலும், அன்னையின் தேசத்தில் இருக்கும்  மூல வேர்களிருந்து தன்னை முழுவதுமாக  விடுவித்து கொள்ள விருப்பம் இல்லாதவனுமாக, தடுமாறிக் கொண்டிருக்கும்   கணவனின் உள்ளக் கிடக்கையை நன்கு அறிந்தவளான நந்தினி அவனைத்  தேற்றும் விதமாக அவனின் தோளில் தனது கையை  அழுந்தப் பதித்தாள். காரின் வேகம் பன் மடங்கு அதிகரித்து விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.