Thursday, June 22, 2017

நானும் ஹீரோ தான்

"பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் " இது மனிதர்களுக்கும் பொருந்தும் கூற்று தானே ?! பெரும்பாலான நேரங்களில் நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (Emotions  or Reactions  ) வைத்து, " அவருக்கு மூக்குக்கு  மேல கோவம் வருமே?! ", "அவரு ரொம்ப அன்பானவரு...அதிகம் பேசாதவரு", "அவரு ஒரு லொட...லொட பேர்வழி", " வெத்துவேட்டு " என்றெல்லாம் நமக்கு முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. நாமும் நமக்கு வசதியாக ( Comfort Zone ) இருக்கும் பட்சத்தில் அந்த முகமூடியுடனே வலம் வர விரும்புகிறோம்...வருகிறோம்  ஆனால்  "மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி" என்பதால் சிலசமயம் நமது முகத்திரையை விலக்கி  புது மனிதனாக உருமாற வேண்டி உள்ளது. அவ்வாறான நேரங்களில் நாம் ஹீரோவா?!, வில்லனா?! காலம் தான் முடிவு செய்யும்.

சான்று - 1

அது ஒரு கோடைக்காலம்...ஞாயிற்றுக் கிழமை...நேரம் - மதியம் மூன்று மணி. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு... நடு இரவில் இருக்கும் ஆள் நடமாட்டம் கூட மதிய வேளையில் இருக்காது. தெருவே வெறிச்சோடிக் கிடக்கும். மதிய உணவிற்குப் பிறகு கண்ணயரும் தருணம். என் அண்ணனும், மாமா மகனும் சைக்கிள் ஓட்டிப் பழகுவதற்குக் கிளம்பினர். வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு. இங்கு அவர்களின் முகமூடியைப் (Character) பற்றிப் தெரிந்து கொள்வது அவசியம்.  என் அண்ணன் மிகவும் அமைதி (Reserved Type). எத்தனைக்  கேள்வி கேட்டாலும் இரண்டே வரிகளில் விடை கொடுக்கும் கஞ்சன். சில சமயம் புன்னகையோடு நிறுத்திக் கொள்வதும் உண்டு. என் மாமன் மகனோ அதற்கு நேர் எதிர்...மிகவும் சுட்டி...தலைகீழ் சேட்டை செய்பவன்.

முதல் பத்து பதினைந்து நிமிடம் ஒரு சந்தில் ஓட்டினர் பின்பு சற்று அகலமான முட்டுச் சந்தை தேந்தெடுக்க முனைந்து, லோக்கல் ஹீரோக்களிடம் 
(Bullies) மாட்டிக் கொண்டனர். சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டு இருவரையும் விரட்டினர். அது வாடகை சைக்கிள் என்று மாமன் மகன் கெஞ்ச, என் அண்ணனை பிடித்து வைத்துக் கொண்டு, " உன் அப்பா சைக்கிள கொண்டு வா...அது வரைக்கும் இந்த பையன் இங்க இருக்கட்டும்" என்று பயம் காட்டினர். "யார்ட்டயாச்சும்  சொன்னே அவ்வளவுதான்" என்றனர். அவன் மிரட்ட வேண்டுமா என்ன?!...எத்தனை படங்களில் பார்த்திருப்போம்...அவர்களை சர்வதேச கடத்தல்கார்கள் பட்டியலில் சேர்த்தே விட்டனர் என் அண்ணனும் மாமன் மகனும். 

வேறு வழியில்லாமல் என் மாமன் மகன் வீட்டிற்குச் சென்று,  அவன் அப்பா சைக்கிளை யாருக்கும் தெரியாமல்  ஒட்டிக் கொண்டு வந்தான். வரும் வழியில் என் அண்ணன் நடந்து வருவதைக் கண்டு சந்தோஷத்திலும் ஆச்சரியத்திலும், " எப்பிடிடா விட்டாங்க?!" என்று கேட்டான் வியர்வையைத்  துடைத்தபடி. " எங்க அப்பா போலீஸ்...இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் என்ன தேடி வந்துருவாங்கன்னு சொன்னேன்...முதல்ல நம்பலை...நீ வர்றதுக்கு லேட் ஆனதால...விட்டுட்டாங்க " என்று கூறி முடித்தான் என் அண்ணன். அடுத்து வந்த நாட்களில் என் அண்ணன் பெரிய ஹீரோவாகப் பேசப்பட்டான்...அவனை முட்டுச்  சந்திற்கு அழைத்துச் சென்ற மாமன் மகனோ வில்லனானான்!!! 

சான்று - 2

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தருணம். என் தங்கை புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். நான் அவளை பலவாறு தொல்லைப் படுத்துவதைப் பொழுது போக்காக கொண்டிருந்தாலும், உடன் படிக்கும் மாணவி அடித்து விட்டாள் என்று கேள்விப்பட்டதும் , என்னுள் தூங்கிக் கொண்டிருந்த சகோதரி பாசம் துள்ளி எழுந்தது. மதிய  உணவு இடைவேளையில் (என் தோழியின் துணையோடு) விளையாடிக் கொண்டிருந்த அவளை Round-up செய்தோம். "இனிமே என் தங்கச்சி மேல கையை வச்ச அவ்வளவுதான்" என்று மிரட்ட, அந்தப் பெண்ணோ முறைத்துக் கொண்டு நின்றாள். " என்ன முறைக்குற?! என்றதோடு நில்லாமல் என் தங்கையை அழைத்து ," அவ உன்ன எப்பிடி கொட்டுனாளோ...அதே மாதிரி கொட்டு" என்று கொட்டச் செய்து  பழிக்குப் பழி தீர்த்த பெருமிதத்தோடு... சிங்க நடை போட்டு வகுப்பறையை அடைந்ததோம்.  

அடுத்த சில மணி நேரத்திற்குப் பின், என் தோழி ," இப்ப தான் நினவுக்கு வருது. நாம திட்டிட்டு வந்தோமே...அந்த பொண்ணோட அக்கா அஞ்சாவது படிக்குறா", என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது...இருவருக்கும் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. மாலை பள்ளி முடிந்ததும் யார் கண்ணிலும் படாமல்... ஓட்டமும் நடையுமாக...குனிந்த தலை நிமிராமல்  வீட்டிற்கு வந்தடைந்தோம். தீவிர ஆலோசனைக்குப் பின் எங்கள் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியின், ஏழாவது படிக்கும்  அக்காவின் துணையை நாடுவது என்று முடிவானது. 

அடுத்து வந்த நாட்களில் வகுப்பறையை விட்டு வெளியே வரவில்லை நானும் என் தோழியும். ஒருவாரத்திற்குப்  பிறகு என் தங்கையும் நான் மிரட்டிய பெண்ணும் ஒன்றாக விளையாடுவதைக்  காண நேர்ந்து. " என்னடி அந்த பிள்ளையோட விளையாடிட்டு இருந்த இன்னைக்கு ?!" என்று வினவ ," நீ அந்த பிள்ளையை திட்டுன அடுத்த நாளே அவ எங்கூட பிரெண்டு ஆயிட்டா " என்று கூறக்கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடி, " அது " என்று திமிருடன் கூறி விட்டு ," சு ந பா நா" இத அப்பிடியே மெயின்டைன் பண்ணு"  என்று மனதிற்குள் கூறி சிரித்துக் கொண்டேன்.

"என்னடா இது ...முகமூடி, முத்திரை...முகத்திரை  என்றெல்லாம்   Build - Up உடன் முன்னுரையை எழுதிவிட்டு...  சிறு குழந்தைகளைச்  சான்றாக கூறுகிறாளே?!" என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. தங்களின்  சுய  அடையாளத்தைப் பற்றிச்  சிறிதும் கவலைப் படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்களுக்குச்  சரி என்று படுவதை  சட்டென்று கூறுவதிலும்...   எதிர் வினை  புரிவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. நாமும் அவ்வாறு செயல் படும் நேரங்களில், " என்ன அவரு இப்பிடி மாறிட்டாரே?!" என்று குறை கூறுவதும், " இப்பதான் நியாயமா பேசுறாரு ", " இப்பவாவது வாயத் தொறந்தாரே" என்று பலர் விமர்சிப்பதும், பாராட்டுவதும்  நடைமுறை உண்மை...தடுக்க முடியாத நிதர்சனம் ஆனால்...

"நாலு பேருக்கு நல்லதுன்னா...எதுவுமே தப்பில்ல " என்ன நான் சொல்றது?!        

Wednesday, March 8, 2017

ஜோதி அக்காவும் மகேஸ்வரி அம்மாவும்

சுட்டெரித்து கொண்டிருந்த சூரியன் ஏதோ நினைத்ததைப் போல...நொடிப்பொழுதில் தனது வாலைச் சுருட்டிக் கொண்டு மேகங்களின் மத்தியில் தன்னை ஒளித்துக் கொண்டது. மேகக் கூட்டங்களும் தங்களுக்குள் கலந்து பேசி, சூரியனைக் கண்டுபிடித்து விடுவது என்று முடிவெடுத்து தென்றலின் உதவியை நாடியது. இன்னும் வேகமா...இன்னும் வேகமா என்று மேகங்கள் ஆர்ப்பரிக்க கண் இமைக்கும் கணத்தில்  தென்றல் பலத்த காற்றாக மாறியது.

"அடி ஆத்தி இது என்ன படக்குன்னு இம்புட்டு காத்து வீசுது " என்று தனக்குள் அங்கலாய்த்த ஜோதி அக்கா தனது அறையின் கதவை சாத்தி விட்டு...சாலையைக் கடந்து எதிர் வீட்டு மொட்டை மாடியை நோக்கி விரைந்தாள். காற்றில் கலைந்து பறந்து கொண்டிருந்த அப்பளங்களை சாக்கோடு மடித்து சிறிய மூட்டையாக மாற்றினாள். ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி சென்றவள் தனது பக்கத்து வீட்டு வாசலில் நின்று, " ஏய் புள்ள மகேஸ்வரி...மகேஸ்வரி" என்று குரல் கொடுத்தாள்.

கெட்டிக்கார சூரியன் பிடி படாமல் தப்பி  மேகக் குவியலின் ஆழத்தில் தன்னை புதைத்துக் கொண்டது. கரு மேகங்கள் வானை சூழ்ந்து...தூறல்களை மண்ணிற்கு அனுப்பியது. உள்ளிருந்து வெளிப்பட்ட மகேஸ்வரிக்கு மிஞ்சிப் போனால் பனிரெண்டு வயதிருக்கும். " அய்யய்யயோ மழை வந்துருச்சா?!" 'அப்பளம்' என்றவாறு ஓட எத்தனித்தவளை,"இந்தாடீ எடுத்துட்டு வந்துட்டேன் " என ஒரு சிறிய மூட்டையை அவள் கையில் கொடுத்தாள். " பொத்துனாப்ல எடுத்துட்டு வா...முக்காவாசி காஞ்சுருச்சு...ஒடஞ்சுரும் என்று எச்சரித்தாள். " ஏம் புள்ள...மழை வர்றது கூட தெரியாம அப்பிடி என்னடி சின்ன புள்ளைங்க கொட விளையாட்டு...நாலு காசு பாக்கணும்னா...கண்ண நாலா பக்கமும் வச்சுக்கிடனும்...ம்ம்ம் நீ எங்க" என்று பெரு மூச்செறிந்தாள். 

ஜோதி அக்காவும் மகேஸ்வரியும் 8 க்கு 10 காம்பவுண்ட் குடியிருப்பின் பக்கத்துக்கு வீட்டுவாசிகள். ஜோதி அக்காவின் கணவர் மணி மாமா  காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் இருட்டியதற்கு பிறகு தான் வீட்டிற்கு வருவார். என்ன வேலை என்றெல்லாம் கேட்டால் உறுதியாக கூற முடியாது ஆனால் தினமும் "டைட் "-ஆகத்தான் வருவார் என்று யாரைக் கேட்டாலும் அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் கிடையாது. ஜோதி அக்காவின் அப்பளம் தேய்க்கும்  வருமானத்தில் தான் பொழுது ஓடிக்கொண்டிருந்தது 

தொப்பென்ற சத்தத்துடன் தென்னை மட்டை ஓட்டின் மேல் விழுந்தது. மங்கலாக எரிந்து கொண்டிருந்த மஞ்சள் பல்பும் அணைந்து இருட்டாக... அவ்வப்போது வெட்டிய மின்னலின் ஒளி சிறிது வெளிச்சத்தைக்  காட்டி மறைந்தது. "இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான் " என்று மனதில் நினைத்தவாறு அனைத்தையும் ஒருங்கச் செய்து வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள் ஜோதி அக்கா. குளிச்சிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும் என்று துணிமணிகளை வாளியில் வைத்துக் கொண்டு கிணற்றடியில்  இருக்கும் மறைவை நோக்கிச் சென்றாள்.

அப்பள மூட்டையை ஓரத்தில் வைத்து விட்டு மறுபடியும் வீட்டுக்காரம்மாவின் பேத்திகளான நிதிலா, மிதிலாவுடன் விளையாடப் போகலாமா என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகேஸ்வரியின் நினைப்பை ஜோதி அக்காவின்  இந்த சொற்கள் கலைத்தன. "திரும்ப வெளையாட ஓடிறாத புள்ள...தென்ன மட்டை விழுந்துச்சுல்ல  எந்த பக்கம் ஒழுகும்னு தெரியாது. அப்பறம் அப்பளம் நனஞ்சுரும்" என்ற எச்சரிக்கையோடு "மழையோட மழையா தலைக்கு தண்ணி ஊத்திட்டு வந்துர்றேன்" என்று அறிவித்து விட்டு சென்றாள்.

மகேஸ்வரியின் அம்மா இரண்டு மூன்று இடங்களில்  வீட்டு வேலை பார்க்கிறாள். வீடு திரும்பும் நேரம்தான் ஆனால் மழைக்கு எங்காவது ஒதுங்கியிருப்பாள். மகேஸ்வரியின் அப்பா இஸ்திரி தொழிலாளி. 'அயன் மாஸ்டர்" என்று எல்லோராலும் பாசமாக அழைக்கப்படுபவர்.  காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து முழுகி பட்டையோடு வண்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவார். மாலையிலும்  அதே பக்தி சிரத்தையோடு (வடிவேலு மாதிரி இல்லாமல்) திரும்புவார். அயன்  வண்டியை காம்பவுண்டில் பார்க் செய்துவிட்டு கிளம்பும் அவர்   திருப்பி வரும் பொழுது "Steady " ஆகத்  தோன்றினாலும் வாயைத் திறந்ததும் குட்டு வெளிப்பட்டுவிடும். போவோர் வருவோரை  எல்லாம் அழைத்து வம்பு பேசி உளறிக் கொட்டுவார். மகேஸ்வரியும் அவள் அம்மாவும் அவரை வீட்டிற்கு கூட்டிச்செல்வதற்குள் படாத பாடு படுவார்கள். அவர் வருமானம் அவர் குடிக்கே வீணாவதால் மகேஸ்வரியும் பள்ளிக்குச்  செல்லாமல் (படிப்பும் மண்டையில் ஏறுவேனா என்று அடம் பிடித்தது) ஜோதி அக்காவோடு அப்பளம் தேய்த்து சம்பாதிக்க ஆரம்பித்தாள்.

மழை நின்றும் தூறல் விடாமல் தூறிக் கொண்டிருந்தது. நிதிலாவும் மிதிலாவும் " என்னக்கா பண்றீங்க?! " என்றவாறு  காம்பவுண்ட் பக்கம்  வந்தனர். " என்னத்த பண்றது...கரண்டு இல்ல அதான் சீக்கிரமே சுடு சோறு பொங்கியாச்சு...சாப்புறீங்களா?!" என்றவளிடம் வேண்டாம் என்று தலை அசைத்துவிட்டு கையில் வைத்திருந்த சுடுகாயுடன் மகேஸ்வரியிடம் ஓடினார்கள் சகோதரிகள். குழந்தை இல்லாததாலோ என்னவோ அக்காவும் அவளது புருசனும் எப்போதும் இவர்களிடம் மிகவும் வாஞ்சையாகப் பேசுவார்கள் அதிலும் அவர்களின் தம்பி மீது அலாதி பிரியம். சில சமயம் ஜோதி அக்காவின் புளிக்குழம்பை ஆசையாகச் சாப்பிட்டு விட்டு நாக்கும் மூக்கும் சிவக்க வீட்டிற்கு ஓடுவர் இருவரும். " அடி ஆத்தி இம்புட்டு காரமாவா இருக்கு " என உச்சு கொட்டுவாள் அக்கா.

கையில் இரண்டு தூக்குவாளியுடன் அப்போது உள்ளே நுழைந்த மகேஸ்வரியின் அம்மா மழையைப் பற்றியோ, அப்பளத்தைப் பற்றியோ ஏன் மகேஸ்வரியைப் பற்றியோ கூட  எதுவும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. "ராத்திரிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டேன்" என்று பொதுவாகக் கூறிவிட்டு வாசலில் அமர்ந்தாள். மகேஸ்வரியும் அம்மாவைக் கண்டும் காணாததைப் போல விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஜோதி அக்காவின் கணவர் வழக்கம் போல் உள்ளே நுழைந்தான். " ஏய் நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு ஓடுங்க...கொசு ஆயுது " என்று நிதிலாவையும் மிதிலாவையும் விரட்டினாள் ஜோதி அக்கா. எதுவும் புரியாமல் மகேஸ்வரியையும் இழுத்துக் கொண்டு ஓடினர்.

மறுநாள் ஜோதி அக்கா மிகவும் சோகமாக காணப்பட்டாள். நிதிலாவின் அத்தையிடம் எதோ சொல்லி புலம்பி அழுதாள். இது அடிக்கடி நடக்கும் கதை தான். ஒரு நாள் நிதிலாவின் அத்தை, பாட்டியோடு காம்பவுண்ட் வாசிகள் அனைவரும் டூரிங் டாக்கீஸில் சினிமா பார்க்கக் சென்றிருந்தனர். பாதி படத்திலேயே ஜோதி அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் அத்தையிடம் பேசும் போது ஒட்டு கேட்டதில் மணி மாமா குடித்துவிட்டு வீதியில் எங்கோ விழுந்து கிடந்ததாக தகவல் வரவே தான்  ஜோதி அக்கா கிளம்பினார் என்று தெரிந்தது நிதிலாவிற்கு. அப்பளம்இட்டு சேர்க்கும் பணத்தையும் விட்டு வைப்பதில்லை என்றும் ," நாந்தான் முதல்ல போயி சேரப்போறேன்...நீ வேணா பாரு " என்று  மூக்கை சிந்துவாள் அக்கா. 


பல சமயம் ஜோதி அக்காவிற்கும் அவள் கணவருக்கும் நடக்கும் சண்டையில் ஜோதி அக்கா அழுது கொண்டே மண்ணை வாரி இறைப்பாள்.  சில சமயம் நிதிலாவின் பாட்டியும் சித்தப்பாவும் சண்டையை விலக்கி விடுவர். மகேஸ்வரியின் அப்பாவோ வேறு ரகம். எவ்வளவு "Full " ஆக இருந்தாலும் நிதிலாவின் வீட்டிற்கு வந்து " வீட்டுக்காரம்மா " என்று ஆரம்பித்து பேசியே கொலை செய்துவிடுவார். "இப்ப போயி தூங்குறியா?! இல்லையா என்று வசை வாங்கிவிட்டு இடத்தை காலி செய்வார். " எங்க அப்பா இப்பிடி குடிச்சிட்டே இருந்தா செத்துருவாரா?!" என்று சினிமா பார்த்து தெரிந்த உண்மையை நிதிலாவிடம் சொல்லி அழுவாள் மகேஸ்வரி. "அப்ப நீ எங்க வீட்டுக்கு வந்திடு" என்று சமாதானம் செய்வாள் சுட்டிப் பெண் மிதிலா.

அடுத்து வந்த சில வருடங்களிலேயே மணி மாமாவும், அயன் மாஸ்டரும் குடியின் கோரப் பசிக்கு, சில மாத இடைவெளியில் இரை ஆயினர். ஜோதி அக்கா அவள் சொந்த கிராமத்துக்கே திரும்பி சென்றுவிட்டார். அவரை பற்றி தகவல் எதுவும் அதற்குப் பின் தெரியவில்லை ஆனால் அவள் மறுமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்று விட்டதாகவும், குழந்தைகள் பிறந்து மகிச்சியுடன் இருப்பதாகவும்  ஊருக்குள் பேச்சு அடிபட்டது. நிதிலாவின் குடுபத்தினரும் தனிக்குடித்தனம் சென்று விட்டதால் மகேஸ்வரியுடன் விளையாடுவதும்  நின்று போனது. மகேஸ்வரியும் அவள் அத்தைப் பையனை திருமணம் செய்து கொண்டு அம்மாவோடு வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தாள்.

இப்பொழுதும் ( 25 வருடங்கள் கடந்த பிறகும்) நிதிலாவும் மிதிலாவும் ஜோதி அக்காவைப் பற்றியும் மகேஸ்வரியைப் பற்றியும் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்வர். கல்லூரியில்  படிக்கும் பொழுது ஓரிரு முறை மகேஸ்வரியை கையில் குழந்தையோடு பார்த்ததோடு சரி பிறகு பார்க்கவில்லை. அம்மாவிடம் விசாரிக்கும் பொழுது மகேஸ்வரியின் கணவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதாகவும்...மகேஸ்வரியும் அவள் அம்மாவும் நலமாக இருப்பதாகக் கேட்டு அக மகிழ்ந்தனர் இருவரும்.

விண்வெளிக்கே   பெண்கள் பயணிக்கும் இந்த யுகத்திலும் நம்மிடையே பல ஜோதி அக்காக்களும் மகேஸ்வரி அம்மாக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறைக்க, மறுக்க  முடியாத உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாராயக்கடைகள் "டாஸ்மாக்" என்ற பெயரில் கிளை பரப்பி விருட்சமாக வேரூன்றி விட்டது. அதை எதிர்த்தும்  போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த மகளிர் தினத்தில் பல சாதனைப் பெண்களைப் பட்டியலிடும் நாம் இவர்களுக்கும் அதில்  ஓர் இடம் ஒதுக்கலாமே!!!

(எங்கோ இருக்கும் ஜோதி அக்காவுக்கும்...மகிழ்ச்சியுடன் வாழும் மகேஸ்வரிக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.)


Wednesday, February 15, 2017

காத(ல்)லுடன் பரிசு

புதுமணத் தம்பதியரான நிவேதாவும் நிதினும் ஷாப்பிங், ஹனிமூன், உறவினர்கள் வீட்டில் விருந்து என்று நேரம் போவதே தெரியாமல் சுழன்று  கொண்டிருந்தார்கள். அவர்கள் மனமோ  காதல் வானில் சிறகடித்துப்  பறந்து கொண்டிருந்தது. அவர்களின் குதூகலத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் விதமாக நிவேதாவின் பிறந்தநாள் எட்டிப் பார்த்தது.

"ரெண்டு நாள்ல உன் பர்த்டே வருது...என்ன பண்ணலாம்?!", என்று காதல் ததும்பும் குரலில் நிவேதாவை நோக்கிக் கேட்டான் நிதின்.

" கல்யாணத்துக்கு வாங்கின ட்ரெஸ்ஸே  நெறைய இருக்கு...கோவிலுக்கு போகலாம்", வேறென்ன?! என்றாள். " இந்த பர்த்டே கொண்டாடுற பழக்கம் எல்லாம் எங்களுக்கு கிடையாது...அதுவுமில்லாம Surprise Gift குடுக்கிறது, நடு ராத்திரி எழுப்பி விஷ் பண்றதுன்னு இந்த சினிமாட்டிக் விஷயங்களெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது. இப்ப இருந்தே ஒரே மாதிரி இருந்துட்டா நமக்கும் பின்னாடி பிரச்னை இல்ல பாருங்க?!", என்ற நீண்ட நெடிய விளக்கத்துடன் தன் உரையை முடித்துக்கொண்டாள்.

"அப்பிடியா?! ",என்று கூறி குறும்புன்னகையோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் நிதின்.

பேசிய பேச்செல்லாம் ஒரு புறம் இருக்க...அடுத்து வந்த நாட்களில்  நிதினிடம் இருந்து  தனக்கு எந்த மாதிரி பரிசு வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே நேரத்தைக் கடத்தினாள். ஆனால் நிதினோ அதை பற்றி எதுவும் சிந்தித்தது போல தெரியவில்லை. "மனைவி சொல்லே மந்திரம்", என்று இருந்து விடுவானோ?! என்று திகைத்தாள் நிவேதா.

"என்னங்க...இந்த ட்ரெஸ்-ஸ பாருங்க...எனக்கு ரொம்ப பிடிச்ச கலர்", என்று விளம்பரங்களில் சுட்டிக்  காட்டினாள். பத்திரிக்கைகளில் இருக்கும் பல வண்ண ஆடைகளை அவன் முன் வியந்து பார்த்து தன் ஆசையை அவனுக்கு மறைமுகமாக விளக்கினாள். நிதினோ எதையும் கண்டு கொள்ளவில்லை.

எதிர் பார்த்த அந்நாளும்  வந்தது. வழக்கம் போல் படுத்து, உறங்குவது போல நடித்த நிவேதா " கண்டிப்பா 12 மணிக்கு எழுப்புவான்", என்று மனதிற்குள் மத்தளம் வாசித்துக் கொண்டாள். நிதினோ படுத்து குறட்டை விடத் தொடங்கி இருந்தான். அவளை அறியாமலேயே  உறங்கிப் போன நிவேதா சில நிமிடங்களிலேயே நிதினின் குரல் கேட்டு அரக்க பரக்க விழித்துக் கொண்டாள்.

கையில் ஜிலு ஜிலுவென்று கண்ணைப் பறிக்கும் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒரு பரிசோடு நிவேதாவை புன்னகையுடன் நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் நிதின். "நான் தான் வேணான்னு சொன்னேன் இல்ல" என்று பொங்கி வந்த புன்னகையை மறைத்து போலிக் கோபம் காட்டினாள் நிவேதா. " என்னனு பாரு", என்று நிதின் கூற...பரிசுப் பொருளில் அளவை வைத்தே டிரஸ் இல்லை என்று யூகித்த நிவேதா," நகையாக இருக்குமோ?! என்று நினைத்தபடி பரிசைப் பிரித்தாள். ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஜொலித்துக் கொண்டிருந்த அவள் முகம் பியூஸ் போன ட்யூப் லைட்டானது. அப்போதும் தனது மில்லியன் டாலர் புன்னகையை மாற்றாமல் "என்ன நல்லாருக்கா..செம்ம surprise இல்ல?!", என்றான்  நிதின். 

தேன் நிலவின் போது கிளிக்கிய  நிவேதாவின் புகைப் படத்தை மிக அழகாக பிரேம் செய்து பரிசாகக் கொடுத்திருந்தான் நிதின். விலை மதிப்பில்லாத பரிசை கொடுத்து விட்ட பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தான். " நீங்க கொஞ்ச நாளா  போட்டோகிராஃபி கிறுக்கு பிடிச்சு அலையிறீங்கன்னு தெரியும் ...அதுக்கு இப்பிடியா?!", என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாள்.

" ஏன் இதுக்கென்ன...நீ எவ்வளவு அழகா இருக்க இந்த போட்டோல தெரியுமா?! என்று கூற, அவன் பைத்தியம் போட்டோகிராஃபி மேல் மட்டும் அல்ல என்பதை உணர்ந்தவளாக வெட்கத்தில் சிவந்தாள். ஹாப்பி பர்த்டே என்று கூறிய நிதினின் மேல் தன்னை அறியாமலேயே இரண்டாம் முறையாக காதலில் விழுந்தாள் நிவேதா!!!

தங்களது மண வாழ்க்கையின் பதினோராவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிவேதாவும் நிதினும் இன்றும் மனதில் அதே அளவு காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புது மணத்  தம்பதிகளைப் போல!!!

பின் குறிப்பு : அந்த போட்டோ தான் முதலும் கடைசியுமாக நிவேதாவிற்கு நிதின் கொடுத்த "கிஃப்ட் ".

         

     


Thursday, February 9, 2017

டிக்...டாங்...டிக்

அனைவரும் காரில் அமர்ந்து பெல்ட்டுகளை கிளிக்கிக் கொண்டோம்.

மகனின் பெல்டை சரிசெய்து விட்டு வந்து, " போலாமா?!" என்ற கேள்வியுடன் காரை ஸ்டார்ட் செய்த என் கணவரின் முகம் கடிகாரத்தைப் பார்த்ததும்  மாறியது(கோபமாக?! ).

அலறிய ரேடியோவை அமைதிப்படுத்திவிட்டு தனது அமைதியைக்  கலைத்தார். "அஞ்சு மணிக்கு கூப்பிட்டா...வீட்ல இருந்து அஞ்சரைக்கு கெளம்புறது...நேரத்துக்கு போகனும்ன்ற நெனப்பு இருந்தா தான?!", என்று ஆரம்பித்தார். " ஏன்... வீட்ல இருந்து கெளம்புறப்ப லேட்டாயிருச்சுன்னு தெரியலையா?! கார்ல வந்து உக்காந்ததுமே ஞானோதயம் வந்துருமே?! வீட்ல ஒண்ணுக்கு நாலு கடிகாரம் இருக்கு. இதென்ன பரீட்சையா?! கரெக்ட் டயத்துக்கு போறதுக்கு...இப்பயே யாரும் வந்துருக்க மாட்டாங்க?! என்ற என்னிடம்...மேலும் வாதாட விருப்பமில்லை என்பதை "ஆமா" என்ற சொல்லில் வெளிப்படுத்தி விட்டு ரேடியோயாவை ஆன் செய்தார்.

இந்த விவாதம் எங்களுக்குள் அடிக்கடி...ஏன் எப்போதுமே நடப்பது தான். அதனால் நாங்கள் முடிக்கட்டும் என்று பொறுமை காத்த குழந்தைகள், " சேஞ் த சாங் டாடி...நாட் திஸ்" என்று கட்டளை பிறப்பிக்கத் தொடங்கினர்.

முற்காலத்தில் சூரியன் இருக்கும் இடத்தையும், திசையையும் கொண்டு நேரத்தைக் கணித்தனர். பின்பு தொழிற்சாலைகளின் சங்கு சத்தத்தைக்  கொண்டும், புகை வண்டி வரும் நேரத்தைக் கொண்டும் தங்களைத் தயார் செய்து கொண்டனர். அதற்குப்  பிந்தைய காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கொண்டு தங்களை விரைவு படுத்திக் கொண்டனர் ஆனால் இப்போதோ நொடிக்கு ஒருமுறை மொபைலை நோக்கும் நம்மிடம், " மணி என்னாச்சு?" என்றால் தெரிவதில்லை. 

பொதுவாகவே எனக்கு இல்லையில்லை எங்கள் குடும்பத்திற்கே  அடிக்கடி கடிகாரம் பார்க்கும் பழக்கம் உண்டு. என் தம்பி ஐந்து வயதிலேயே கடிகாரம் பார்க்கக் கற்றுக் கொண்டான். நர்சரி பள்ளியில் கடிகாரத்தையே  பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று டீச்சர் சுவர்கடிகாரத்தை கழற்றி வைத்து விட்டார்...மேசைக் கடிகாரத்தை தன் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டார். மதிய வேளை நெருங்க நெருங்க மணி பார்ப்பது அதிகரித்து கொண்டிருப்பதால்...மதிய உணவிற்கு வீட்டிற்கு செல்லும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!  

"காலம் கண் போன்றது...நேரம் பொன் போன்றது", என்றெல்லாம் கூறிக் கொள்ளும் நாம் அந்த நேரத்தைக் காட்டும் கடிகாரத்தை மறந்து கொண்டல்லவா இருக்கிறோம். " நான் ரொம்ப பிஸி...கடிகாரம்  பார்க்க நேரம் இல்லை', என்று சிலரும், 'சும்மா உக்காந்திருக்குற நான் மணி பாத்து என்ன செய்யப் போறேன்?!", என்று சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில பல சமயங்களில் நமக்கு சாதகமாக நேரத்தை மாற்றிச்  சொல்லி பழகிக் கொள்கிறோம். நாம் டைம் சொல்வதை வைத்தே நம் மன நிலையை யூகித்து விடலாம்  உதாரணமாக 10:30 என்று காட்டிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்த்து இப்போதான் மணி பத்தாச்சு என்று கூறுவதும், மணி பதினொன்னாகப் போகுது என்று அவசரத்தில்  பதறுவதும் நாம் பல முறை அனுபவத்தில் பார்த்திருப்போம்.

அமெரிக்கவிற்கு வந்த புதிதில் எங்கள் வீட்டில் சுவர்க்கடிகாரமே இல்லை. முதல் ஒரு வாரத்தில் கைப்பேசியில்  மணி பார்ப்பது எனக்கு மிகவும் கடினமாகப் பட்டது. அடுத்த வாரத்தில் கேபிள் கனெக்க்ஷன்  என்ற பெயரில் ஒரு பாக்ஸை வைத்து விட்டு சென்றான் அன்றிலிருந்து என் வாழ்வில் வசந்த காலம் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். நடு இரவில் கண்விழித்தாலும் பார்ப்பதற்கு    மிகவும் வசதியாக  பச்சை கலரில் நேரம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அன்றிலிருந்து கடிகாரம் பார்க்கும் பழக்கம் பன் மடங்கு பெருகியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வோர் நொடியையும், நிமிடத்தையும் அச்சு பிசகாமல் காட்டி என்னை தனக்கு அடிமை ஆக்கியது. இப்போது எங்கள் வீட்டில் அறைக்கு ஒன்றாக தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. என் கணவர் கூட கடிகாரம் 11:11 என்று காட்டும் பொழுது, " ஏய்...ஒனக்கு பிடிச்ச டைம் வந்துருச்சு", என்று கேலி செய்வதுண்டு. இப்போது என் பெண். 20 நிமிடம் படி என்றால் அதில் பத்து நிமிடம் கடிகாரத்தை பார்த்தே வீணடித்து விடுவாள்...எப்போது 20 நிமிடம் ஆகிறது என்று கணக்கு பார்க்கிறாளாம்.  

நமக்கு பிடித்த சினிமாக்களில் எப்போது கடிகாரத்தைக் காட்டுவார்கள் என்று கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரிந்துவிடும் ஆமாம் இக்கட்டான நேரங்களில் மட்டும் தான். முன்பெல்லாம் டைம் பாம் வெடிக்கும் சமயத்தில் ஆனால் இப்போதெல்லாம் "Time Machine"-ல் ட்ராவல் செய்யும் சமயங்களில் தான்  கடிகாரம், காலெண்டர் என்று மிகவும் விரிவாகவே  காண்பிக்கிறார்கள். சில சமயம் பேய் வரும் நேரங்களிலும் கடிகாரம் பன்னிரெண்டு தடவை அடிப்பதுண்டு!!! நாமும் "Time Sensitive " ஆன விஷயங்களில் கடிகாரத்தைப் பார்க்கத் தவறுவதில்லை என்றே தோன்றுகிறது.

"காலத்தே பயிர் செய்...நேரத்தே அறுவடை செய்", என்று பழமொழியுடன் அறிவுரை கூறுவதற்காகவோ, கடிகாரத்தை நோக்கினால் காரியம் கைகூடும் என்பதற்காகவோ இதையெல்லாம் எழுதவில்லை. டிஜிட்டல் மயமான உலகில் குழந்தைகளுக்கு சுவர்க்கடிகாரத்தில் நேரம் பார்ப்பது குதிரைக்கு கொம்பாக தோன்றுகிறது. புராதான கட்டிடங்களில் இருந்த பெரிய பெரிய கடிகாரங்கள் எவ்வாறு ஓடாமல் நிற்கின்றதோ அதே போல் இன்னும் சில வருடங்களில் முட் கடிகாரங்கள் அருங்காட்சியகங்களை நோக்கி ஓடப் போகின்றன.

எப்போதும் நிற்காமல் துறு துறுவென ஓடும் குழந்தைப் போல நொடி முள், சீரான வேகத்தில் குடும்பத்திற்காக உழைக்கும் அப்பாவைப் போல நிமிட முள், அடிக்கடி நகராமல்  ஒரே இடத்தில் அதிக நேரம் நின்றாலும், தன்னைச் சுற்றி சுழலும் அனைத்திற்கும் அர்த்தம் சேர்க்கும் அம்மாவைப் போன்ற   மணி (பெரிய) முள் என்று நம் குடுபத்தை நினைவில் நிறுத்தும் முட்  கடிகாரத்தை நம் குடும்பத்தில் ஒருவராக இணைத்துக்கொள்ள மறந்துராதீங்க...இன்னும் நேரம் இருக்கு!!!      

"



Tuesday, November 8, 2016

நிறம் மாறாத மனிதர்கள்

மித்ரனும், நிதிலாவும் அன்று சனிக்கிழமை என்பதையே மறந்தவர்களாக, தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்  பரபரப்பாக காணப்பட்டனர்.

" அவளை குளிக்க அனுப்பிட்டேன்,  இவன குளிப்பாட்டிட்டு...அப்பிடியே நீங்களும் குளிச்சிட்டு வந்துருங்க", என்று மகனை கணவரிடம் அனுப்பிவிட்டு சமயலறையில் தன்னை அழைக்கும் குக்கருக்கு பதில் சொல்லப் போனாள் நிதிலா. 

முன்தினம் அலுவலகம் முடித்து திரும்பிய மித்ரன், " Down Town -ல ரேஸ் கார்ஸ் exhibit  வச்சுருக்காங்க, இந்த வாரத்தோட முடியுது. நாளைக்கு போயிட்டு வந்துரலாம் என்றதும் "யேய்" என்று மகன் ஆர்பரித்தான். "வேற என்ன இருக்கும்?"! என்று வினவிய  நிதிலாவிடம், " நிறைய ஸ்டால்ஸ் போட்ருப்பாங்க...என்றான். அப்ப "free stuff "  கொடுப்பாங்கன்னு சொல்லுங்க என்று சமாதானமடைந்தாள். " It will be boring " என்ற மகளிடம், " ஏய் உன் பிரெண்ட்டும் வர்றா " என்றதும் அவளும் குதூகலமடைந்தாள்.

கூட்டம் வர்றதுக்கு முன்னாடி போயிரணும் அதனால காலையில சீக்கிரமா கெளம்பனும். சொல்லிக்கிற மாதிரி சாப்பிட ஒன்னும் கெடைக்காது,  Breakfast heavy -யா சாப்பிட்டு போனாதான் ஒரு ரெண்டு மணி வரைக்கும் தாங்கும் என்று கூரிய கணவனை நோக்கி உச்சு கொட்டிவிட்டு நகர்ந்தாள் நிதிலா. அதி காலையில் எழவேண்டுமே... அதுவும் விடுமுறை நாளில்   என்ற எண்ணம்... எவ்வாறு மனதிலிருக்கும் ஆர்வத்தையெல்லாம் ஒரு நொடியில் நீர்த்துவிடுகிறது என்பதை நினைத்து வியந்தாள்.

அனைவரும் குளித்து, காலை உணவாக பொங்கல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகளிடம், " இது சாப்டா தாண்டா பசிக்காது, tired- ஆகாம நடக்க முடியும்  என்று சமாதானம் பேசியும், கேட்காத போது முதுகில் ரெண்டு அப்பு அப்பியும்  உண்ண வைத்து புறப்படுவதற்குள் பத்து மணி ஆகிவிட்டது. சீக்கிரம் கெளம்பணும்னா எங்க?! என்று தனது வழக்கமான புலம்பலுடன் காரைக் கிளப்பினான் மித்ரன். 

காலை வெயிலில் " Down Town " பளிச்சென்று இருந்தது. சாலையின் இரு மருங்கிலும் வித விதமான கடைகள் போடப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டமும் கணிசமாக அலை மோதியபடி இருந்தது. அங்கங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரேஸ் கார்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர். "அதனால தான் சீக்கிரம் வரணும்னு சொல்றது" என்று முணுமுணுத்த கணவனை காதில் வாங்காதவளாய் மகனுடன் வரிசையில் சேர்ந்து கொண்டாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் வெயில் மண்டையைப்  பிளந்தது. நா வறண்டது. கூட்ட நெரிசலில் ஊர்ந்தபடியே சென்றனர். எதற்காவது உபயோகித்து கொள்ளலாம் என்று  சில பல ஸ்டால்களில் இருந்து பெற்றுக் கொண்ட  இலவசங்களும் கையை நிறைத்து கனத்தது. எங்காவது உட்கார்ந்தால் போதும் என்று தோன்றியது.  

அருகிலிருந்த ஸ்டாலில் அவனுக்கு பிடித்த "Cookie"  சாம்பிள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் மகன் அடம் பிடிக்கத் தொடங்கினான். கூட்டமும் அதிகமில்லாததால், " நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று நிதிலா சாலையைக் கடந்து சென்றாள். அங்கு நின்றிருந்தவரின் பின்னால் இருக்கும் காலி இடத்தில் நின்று சாம்பிளைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போதுதான் தனக்குப் பின்னாலிருக்கும் பெண்மணியைக் கவனித்தாள். அப்போதுதான் தான் வரிசையின் இடையில் நுழைந்து விட்டதை உணர்ந்தவளாக," Sorry I didn't See you " என்றாள். அதற்கு அந்தப் பெண்மணி " of course you did not " என்று கூற, யாரோ தன்னை கன்னத்தில் அறைந்ததைப் போல் அவமானத்தில் குறுக்கிப் போனாள். அந்த பிஸ்கெட்-ஐ அப்படியே குப்பையில் எறிந்து விடவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை மகனின் முகத்தைப் பார்த்துக் கைவிட்டாள்.

" என்ன ஆச்சு?! என்று கேட்ட கணவனிடம், " ஒன்றுமில்லை " என்று தன்னை சகஜ நிலைக்கு மாற்றிக் கொள்ள முயன்று தோற்றாள். இந்த அயல் நாட்டிற்கு வந்ததில் இருந்து மிகவும் கனிவாகப் பேசும் மக்களை மட்டுமே கண்டிருந்த நிதிலாவிற்கு இது ஒரு பேரதிர்ச்சி ஆக இருந்தது. ஒரு வழியாக அன்றைய பொழுது முடிவிற்கு வர,  களைத்த உடல்களை சுமந்து கொண்டு வீடு திரும்பினர். நிதிலாவின் மனமோ ஆயிரம் மடங்கு அதிகமாகக் கனத்து அவளை அவமானத்தில் இருந்து வெளிவர விடாமல் ஆழத்தில் அழுத்தியது.

இரவு படுக்கைக்கு முன் தன் உள்ளக்கிடக்கையை கணவனிடம் கொட்டிவிட்டாள். மித்ரனோ மிகச் சாதாரணமாக," நம்ம ஆளுங்க இப்பிடித்தான பன்றாங்க " என்று கூற ," என்ன சொல்றீங்க ?!" என்று தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தை அவன் மேல் பாய்ச்சினாள். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து சத்தமா பேசாத, வெளியிடத்துல கண்ண கசக்காத , குழந்தையை அடிக்க கூடாது- ன்னு எல்லா ரூல்ஸ்சையம் follow பண்ணிக்கிட்டு தானே இருக்கோம். நான் கூட " இது தான் தனி மனித சுதந்திரமா -ன்னு ?! எத்தனை தடவை கேட்ருக்கேன் என்று வினவிய மனைவியிடம் " அதெல்லாம் பண்ணலேன்னா போலீஸ் காரன் புடிப்பான்ற பயத்துல தான பண்றோம் " என்று கூறிவிட்டு மேற்கொண்டு விவாதத்திற்கு தான் வரவில்லை என்பது போல திருப்பிப் படுத்து குறட்டை விட ஆரம்பித்தான்.

நிதிலாவின் மனம் அவன் வாதத்தை ஏற்க மறுத்தது...சற்று நேர சிந்தனைக்குப் பின் தன்னை அறியாமலேயே உறங்கிப் போனாள். அடுத்து வந்த நாட்களில் தன் அகத்தையும், புறத்தையும் கூர்மையாக்கிக் கொண்டாள். மகன், மகளின் பள்ளிகளில், அவர்கள் செல்லும் பலதரப்பட்ட வகுப்புகள் மற்றும் கடை கண்ணிகளிலும் நம் நாட்டவரின் நடத்தையை கவனித்து மித்ரனின் கணிப்பு தவறு என்று நிரூபித்து, அவன் எவ்வாறு அயல் நாட்டவருக்கு ஆதரவாகப் பேசலாம் என்றும் சண்டையிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

கண்காணிப்பின் முடிவில் இரண்டு வகையான மனிதர்களை இனம் கண்டு வியந்தாள். ஒரு சாரார் விதிகளை கடுமையாகப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். சாலையைக் கடக்கும் போது, தங்களுக்காக நிற்கும் கார்களை மனதில் கொண்டு ஓட்டமும் நடையுமாக குழந்தைகளை இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டாள் ஆனால் மறு சாராரின் நடவடிக்கைகள்   அவளின்  எதிர்பார்ப்பில் மிகப் பலமான இடியை இறங்கியது. தராசு அவர்கள் பக்கம் சரிவதைக் கண்டு கலங்கினாள். கணவன் கூறியது சரியே என்று தோன்றும் அளவிற்கு அவள் கண்ட காட்சிகள் இருந்தன.

அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற இடத்திலும் தன் நாட்டினர் பேசிக்கொண்டு இருப்பதையும், அதை கவனிக்கும் பலரையும் அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்பதையும் கவனித்தாள். உள்ளிருந்து வெளியே செல்வதற்காக திறக்கப்பட்ட கதவை மாறி மாறி ஒருவர் பிடித்து நிற்க, எதுவுமே அறியாதது போல வெளியிலிருந்து உள்ளே நுழைவதையும், அதற்காக சிறு வருத்தமோ, நன்றியோ தெரிவிக்காமல் செல்லும் மக்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். " Free Sample " கொடுக்கும் இடங்களில் ஒருவர் நுழைந்து தன் ஒட்டு மொத்த குடும்பத்திற்காக அள்ளிக்கொண்டு கொண்டு செல்வதும் அன்றாடக் காட்சியாக இருந்தது.

நம் நாட்டில் நாம் வளர்ந்த விதம் அப்படி என்று நிதிலா தன்னை சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். " நின்னு கிட்டே இருந்தா...இப்பிடியே இருக்க வேண்யதுதான் " என்று கூறிக் கூறியே நம்மை பழக்கப் படுத்திவிட்டார்கள் ஆனால் இங்கு நிலைமை வேறல்லவா?! என்று நினைத்தவள் இங்கு பள்ளிகளில் அதனால் தான் " Wait For your turn " என்று சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கிறார்களோ?! என்று வியந்தாள். நம்மில் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் அல்லவா பலி கடா ஆக்கப்படுகிறார்கள். தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை தேச துரோகிகளாகப் பார்க்கும் இவர்கள் நம் நாட்டிற்கு செல்லும் போது மட்டும், " சே...சே..என்ன இது சந்தைக்கடை மாதிரி...ஒரு Discipline இருக்கா?! என்று சட்டம் பேசுகிறார்களே?!   என்று நகைத்துக் கொண்டாள்.

வெளி நாட்டிற்கு வரும் நாம்  சில மாதங்களிலேயே  வாழ்க்கை முறை மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகளை அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிறோமே ஆனால் விதிகள் (இங்கீதங்கள்) மட்டும் நமக்கு ஏன் வேப்பங்காயாய் கசக்கிறது?!  இத்தனை நாள் இதையெல்லாம் தான் ஏன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, கவனிக்கவில்லை என்று தன்னையே வினவிக்கொண்டவள்...குட்டையில் ஊறி மட்டைகளில் தானும் ஒரு மட்டையாக இருந்ததை எண்ணி வெட்கினாள்.

தன்னைத் திட்டிய அந்த பெண்மணியை இப்போது  நினைத்துப் பார்த்தாள் நிதிலா. அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை அவள் செய்தது சரியே என்ற எண்ணம் எழுவதை அவளால் தடுக்க இயலவில்லை. "நீங்க சொன்னது சரிதாங்க" என்று மித்ரனிடம் கூற வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். சுழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களை பச்சோந்தி என்று இழித்தும் பழித்தும் பேசுகிறோம் ஆனால் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவதில், பின்பற்றுவதில் பச்சோந்தி ஆவதில் தவறொன்றும் இல்லையே!!!             

     

Tuesday, October 11, 2016

நவராத்திரியும் நானும்

நவராத்திரி என்றதும் நம் அனைவருக்கும் ஒரு சேர நினைவுக்கு வருவது கொலு மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆயுதப் பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்களே...புத்தகங்களை பூஜையறையிலேயே மறந்து வைத்து விட்டு, மறு நாள் பள்ளியில்  அடிவாங்கியதெல்லாம் உங்கள் நியாபகங்களில் நிழலாடலாம். காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் மீண்டும் இரண்டு மூன்று நாட்கள் தொடர் விடுப்பு கிடைப்பதென்பது இன்றைய சூழ்நிலையில் "மகிழ்ச்சி" தானே?!...பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் வாயாடிக் கொண்டிருக்கும் ஒரு சில வாண்டுகளுக்கோ விஜய தசமி அழுவாச்சி தினமாக அல்லவா மாறிவிடுகிறது. 

இந்நாட்களில் கொண்டாட்டங்கள் கண்களை நிறைத்தாலும் நவராத்ரி நாயகிகளான முப்பெருந்தேவியரே மனதில் நிலைப்பார்கள். சிறு வயது முதலே எனக்கு அம்மன் மீது அதீத  பற்று(பயம் ).  இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். வழக்கம் போல் தலைவலி என்று பள்ளிக்கு மட்டம் அடித்து விட்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆடி வெள்ளி என்பதால் அம்மன் கோவிலுக்கு பாட்டி, சித்தியோடு செல்ல நேர்ந்தது. கூட்ட நெரிசலில், மஞ்சள் புடவையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்களையும், கையில் வேப்பிலையோடு சாமி ஆடுபவர்களையும் கண்டு மிரண்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் காய்ச்சலில் படுத்துவிட்டேன். நான்காம் வகுப்பில் இருந்த நேரம்- ஆடி வெள்ளி அன்று  மாவிளக்கு ஏற்ற குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றோம். அலை மோதும் பக்தர்கள் வரிசையில் நிற்க பிடிக்காமலும், ஒளியும் ஒலியும் பார்க்கும் ஆர்வத்திலும் பாதியிலேயே வீட்டிற்கு சென்றுவிட்டேன். அடுத்த வந்த நாட்களில் எனக்கு அம்மை போட்டு விட்டது. "அம்மா கோயிலுக்கு போயி அவளை பார்க்காம வந்தியில்ல?! அதான் அவளே உன்னை பார்க்க வந்துட்டா" என்று பாட்டி சொல்ல பீதியில் உறைந்து போனேன். திரைப்படங்களில் வரும் காளியும், நீலியும் கனவில் துரத்த  தூக்கத்தில் பிதற்றினேன்.  

      
நடுநிலைப் பள்ளியில் படித்த காலங்களில்  கசின்களின் கூட்டணியில் "கொலு" வைப்பதுண்டு. இன்று வீட்டிற்கு வீடு கொலுப்படி அமைத்து கொண்டாடுவது சகஜமாகிவிட்டது. ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன், வாசற்படியில் ஈர மண் கொண்டு கோபுரம், வீதி என்று "செட்" போடுவதுதான் எங்கள் கொலு. அதில் பல வகையான  பிளாஸ்டிக் பொம்மைகளும் இடம் பெறும். அப்படியே போட்டு விட்டுப் போக முடியாது. இரவானதும் அனைத்தையும் வாளிகளில் அள்ளி விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே எங்களுக்கு அனுமதி கிடைக்கும். தினமும் இரண்டு மணி நேரம் செலவிட்டு கொலு வைத்தால் ஏரியாவில் இருக்கும் "குட்டி" தாதாக்கள் நிமிடத்தில் கலைத்து விட்டு ஓடி விடுவார்கள். சில சமயம் எங்கள் கொலு உண்டியலை கையிலிருந்து பறித்துக் கொண்டு சென்று எங்கள் கொலுவிற்கும் முடிவு கட்டி விடுவார்கள்.

எங்கள் பெரியப்பா "பிரின்டிங் பிரஸ்" வைத்திருந்ததால் "ஆயுத பூஜை"-யை மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அதற்கு முந்தைய இரவு அச்சகத்தில் பணிபுரிபவர்களோடு சேர்ந்து சுத்தம் செய்கிறோம், கோலம் போடுகிறோம்  என்ற பேரில் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டம் போட்டு, பூஜையின் போது தூங்கிய அனுபவம் மறக்க முடியாதது. அன்று அனைத்து உறவினர்களும் பெரியம்மா வீட்டில் ஒன்று கூடுவதால், திருமண வீட்டைப் போன்று குதூகலம் ததும்பி வழியும். பழங்களும் ,பொறியும் சாப்பிட்டு வயிறு நிறைந்து விடும். 

சரஸ்வதி பூஜை அன்று சுண்டல் சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் ஆனால்  "சரஸ்வதி சபதம்" படத்தைப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். பல்வேறு தெய்வங்களைப் பற்றி பெற்றோர்கள், பெரியோர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டிருந்தாலும், அதைத் திரையில் காணும் போது ஏற்படும் பிரமிப்பு - அதற்கு ஒரு அசைக்க முடியாத நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கேபிள் டிவி இல்லாததால் தெருக்கம்பங்களில் திரைகளைக் கட்டி போடப்படும் "சிறப்புக்காட்சி"-க்கு கூட்டம் அலை மோதும். பள்ளிக்கூட நாட்களில் தாத்தாவோடு அமர்ந்து பார்த்த அனுபவம் உண்டு. படம் முடிந்தாலும் கல்வியா, செல்வமா, வீரமா என்ற விவாதம் அடுத்த இரண்டு தினங்களுக்கு எங்களுக்குள் தொடரும்...  

பலவித பண்டிகைகளையும், நன் நாட்களையும் ஏன் கொண்டாடுகிறோம்?! எதற்குக் கொண்டாடுகிறோம்?! என்பதற்கு பல்வேறு ஆன்மீக, வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். "இல்லேன்னா சாமி கண்ணைக் குத்தும்" என்று நம்மை நம் முன்னோர்கள் பயமுறுத்தி இருந்தாலும், மாறி வரும் பருவ நிலைக்கு ஏற்ப நம் உடலை தயார்படுத்தவே இந்த குறிப்பிட்ட நாட்களைத் தேர்வு செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. கடும் கோடையில் தோன்றிய வெம்மை நோய்  பரவாமல் இருக்கவும், நோயால் பாதித்தவர்கள் விரைவில் குணமடையவும், வரவிருக்கும் மழைக்கால தொற்றுக்களைத் தடுக்கவும் - ஆடி மாதத்தில் வேப்பிலைக்காரியான அம்மனை வழிபட்டிருப்பார்கள். அம்மாதத்தில் காப்பு கட்டிவிட்டதாகக் கூறி சில கிராமங்களில் அன்னியர்களை அனுமதிப்பதில்லை. அம்மன் கோயில் கூழுக்கு நிகரான ஊட்டச்சத்து நிறைந்த பானமும், வேப்பிலைக்கு மேலான கிருமி நாசினியும் ஏதேனுமுண்டா?!   

நவராத்திரியைத் தொடர்ந்து வரும் குளிர்காலத்திற்கு நம்மை பலப்படுத்தவும், நோய்களிருந்து காத்துக் கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தான் தினம் ஒரு பயறு வகையை சுண்டல் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு சில வேளைகளில்  நாம் மேற்கொள்ளும் விரதங்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகவே இருக்கின்றது.

இன்று நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம்  பாரம்பரிய விழாக்களையும், பண்டிகைகளையும் நமக்கேற்ற கலாச்சார முறைப்படி  தவறாமல் கொண்டாடுகிறோம். "நமக்கில்லேன்னாலும் குழந்தைகளுக்காக செய்யணும்" என்று சொல்லிக் கொள்கிறோம். பல சமயங்களில் நண்பர்கள், அன்பர்கள்  என்று ஒன்றாக இணைந்து மகிழ்கிறோம். ஆனால் நாம் மட்டுமல்லாமல் நம் சுற்றமும், சூழலும் நம்மோடு சேர்ந்து   விழாக்கோலம் பூணும் பொழுது ஏற்படும் மன உணர்வை, நிறைவை  நம்மால் அடைய முடிவதில்லை. " இந்நேரம் ஊர்ல சூப்பரா இருக்குமில்ல?! என்று ஏங்குகிறோம். நம் குழந்தைகளுக்கு நம்மால் விழாக்களை அறிமுகம் செய்ய இயலும்...அனுபவங்களை அளிக்க இயலுமா?!  

Friday, September 2, 2016

"பனியாரம்" பாட்டி

ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தவளின் காதுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லும் வாகனங்களின் சத்தம் விழ, அரக்க பறக்க எழுந்து அமர்ந்தாள். பறவைகளின் ரீங்காரங்களுக்குப்  பதிலாக கேட்கும் பஸ்ஸின் ஓசை,  பொழுது நன்கு புலர்ந்து விட்டதை உணர்த்தியது. கூந்தலை வாரி சுருட்டி கொண்டையாக்கியவள் வேகமாக எழுந்து நிற்க முயன்று தோற்றாள். மனதின் வேகத்திற்கு அவளின் அறுபது வயது உடலால் ஈடு கொடுக்க முடியவில்லை.

" ஆத்தா மகமாயி" என்று மெதுவாக எழுந்தவள் பாயை சுருட்டி மூலையில் கடாசினாள்.

வாயிலை நோக்கி நடந்தவள், கயிற்றுக் கட்டில் சுவரோரம் சாய்த்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டு, "எந்திருச்சும்  உசுப்பி விடாம போயிருக்கு இந்த மனுசன்" என்று தன் கணவரைப் பற்றி தனக்குள்ளே புலம்பியவளாய்  அருகில் இருந்த  குடத்து நீரை வாளியில் கவிழ்த்தாள். நன்கு சாணியால் மொழுகி, காய்ந்திருந்த  வாசலில் ஊற்றினாள். மீதமிருந்த தண்ணீரில் முகம் கழுவி, வெற்றிலைக் கறை படிந்த பற்களை கையால் தேய்த்து வாய்க் கொப்பளித்தாள். வீட்டிற்குப்  பின் புறம் இரண்டு நிமிடம் சென்று வந்தவள் சாலையைக் கடந்து எதிர்புறம் இருந்த குடிசையை நோக்கி நடந்தாள்.

கதவிற்கு பதில் நின்று கொண்டிருந்த தென்னை ஓலையை எடுத்து வெளியில் போட்டவாறு உள்ளே நுழைந்தாள். இரண்டு அடுப்புகளையும் ஒருசேர பற்ற வைத்தாள்." என்ன முழுச்சுகிட்டியா?" என்றவாறு  கையில் தூக்கு வாளியுடன் உள்ளே நுழைந்த கிழவனிடம், " ஆமா நேரமாச்சுல்ல" என்றவள் " நீ குடிசிட்டியா?" என்று கேட்டவாறு தூக்கில் இருந்த டீயை மடக் மடக் என்று விழுங்கி ஏப்பம் விட்டாள்.

" நீ நல்லா தூங்கிட்டு இருந்தே அதான் டீ வாங்கியாந்து எழுப்பலாம்னு போனேன்" என்றவன் புகை மூட்டத்தினூடே பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவளின்  பதிலை எதிர் பாராமல் தோட்டத்தை நோக்கி நடந்தான். மூட்டு வலியினால் வளைந்த கால்களுடன் சாய்ந்து சாய்ந்து நடந்து செல்லும் தனது கணவரை அவள் கவனிக்கத் தவறவில்லை.

அந்தக்  கிராமத்தை அப்பளக் கம்பெனிகளும் ரைஸ் மில்களும்  ஆக்கிரமித்திருந்தன. சிலர் விவசாயம் செய்தனர். அங்கு வேலை பார்ப்பவர்களை நம்பியே பாட்டியின் வியாபாரம்  ஓடியது  . பல ஓட்டல் கடைகள் இருந்தாலும் தனக்கென்று சில வாடிக்கையாளர்களை வைத்திருந்தாள் பாட்டி. அவர்களின் காலை சிற்றுண்டி பாட்டியின் கடையில் தான். சில பள்ளிக் குழந்தைகளும் சாப்பிடுவதுண்டு. சட்னி அரைத்த கையோடு அடுப்பிலிருக்கும் விறகை சரிசெய்து விட்டாள். முகமெங்கும் வியர்வை வழிந்தோடியது.

" என்ன பாட்டி இட்லி கெடைக்குமா?" என்று கேட்டபடி நடுத்தர வயது மதிக்கத் தக்க ஆண்கள் உள்ளே நுழைந்து பக்க வாட்டில் இருந்த திண்டில் அமர்நது கொண்டனர். " இதோ" என்றவாறு ஆவி பறக்கும் இட்லிகளை சட்டியில் கவிழ்த்தாள். ஒரு கையில் வாழை இலைகளும்  மறு கையில் தண்ணீர் குடமுமாக உள்ளே நுழைந்த அவளுடைய கணவனும் அவர்களுடன் பேச்சு கொடுத்து கொண்டே அமர்ந்தான். தட்டில் இலைகளைப் போட்டு நான்கு ஐந்து இட்லிகளை சட்னிகளுடன் அவர்களுக்குப்  பறிமாறினாள். " நீயும் சாப்பிடு" என்று கிழவனுக்கும் கொடுத்தாள்.

 கையில் இரண்டு பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்த பாலாவும் பாபுவும்,   "பணியாரம் ரெண்டு ரூவாய்க்கு பாட்டி" என்றனர். " இனிப்பு பணியாரம் இன்னும் ஊத்தல சாமி ஒக்காருங்க " என்றவள் " பள்ளிகோடம் இல்லியா?" என்று சிரித்தாள் வெற்றிலையைக்  குதப்பிக் கொண்டே. இல்லை... என்பது போல் தலையாட்டி விட்டு அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களின் இலைகளை நோட்டமிட்டனர் இருவரும். அவர்களின் வாயில் எச்சில் ஊறிய அதே சமயம் " அதெல்லாம் உங்களாலே சாப்பிட முடியாதுடா  காரமா இருக்கும்" என்று தங்களின் பாட்டி கூறியது நினைவுக்கு வர எச்சிலை முழுங்கிக் கொண்டனர் ஏமாற்றமாக.

அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர்களின் பணியாரம் கிடைத்தது. சில பள்ளிக் குழந்தைகளும் இனிப்பு பணியாரம் என்று பார்சல் வாங்கிச் சென்றனர். " எல்லாருக்கும் சட்னி வேணுமில்ல" என்று சிலரை மிரட்டியும்,
" இன்னும் ரெண்டு இட்லி சாப்டு " என்று சிலரிடம் கனிவாகவும் வியாபாரத்தை நடத்தினாள். கொடுக்கும்  சில்லறைகளை வாங்கிச் சரி  பார்த்து சுருக்குப் பையில் போட்டுக்  கொண்டாள். " நாளைக்கு தர்றேன் பாட்டி" என்றும் " சாய்ங்காலம் கூலி கொடுத்துருவாங்க" என்று சிலரும் நகர்ந்தனர். "பொழுது சாய வீட்டுக்கு வர்றேன்னு உங்க  பாட்டிகிட்ட சொல்லுங்க" என்று  பாலா, பாபுவை நோக்கி சிரித்த முகத்துடன் கூறினாள். இரண்டு பாட்டிகளும் தோழிகள். மூன்று பணியாரம் ஓசியாக கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்தனர் சகோதரர்கள்.

காலை பத்து மணி வரை வியாபாரம் பின் வீட்டுச்  சமையல். மதிய நேரம் அடுப்பிற்குத் தேவையான சுள்ளிகளையும், தென்னம் மட்டைகளையும் தோப்பிலிருந்து சேகரித்துக்  கொள்வது, மாலை வேளைகளில் அடுத்த நாளிற்கான மாவை உரலில் இட்டு அரைப்பது என " பிஸி " பாட்டியாக இருந்தாள் " பணியாரம் " பாட்டி. அவளுடைய கணவன் அருகிலிருந்த அதே  தோப்பில் " Watch Man "- ஆக இருந்தான். மோட்டார் போட்டு தண்ணீர்  பாய்ச்சுவது, அயலவர்களை அண்ட  விடாமல் பார்த்துக் கொள்வது என அவருக்கும்  பொழுது போனது. பாபுவும் பாலாவும் பல முறை தண்ணீரில் ஆட்டம் போட்டதுண்டு. புளியங்காய் கூட பறித்துக் கொடுப்பார் தாத்தா.  

நன்கு இருட்டி விட்டிருந்தது." நல்லா இருக்கியளா?" என்றவாறு  வீட்டிற்குள் நுழைந்த "பணியாரம்" பாட்டியிடம், " சாந்திரமா வர்றேன்னுட்டு இப்ப வர்ற ?" என்றாள் பாலாவின் பாட்டி. "ஆமா " என்றவளின் கண்கள் பாலாவின் தந்தையைத் தேடியது." பெரிய தம்பி இன்னும் வரலையோ?" என்றவளின் குரலைக் கேட்டு, " என்னம்மா எப்பிடி இருக்கீங்க?" என்றவாறு வெளிப்பட்டான் பாலாவின் தந்தை கையில் சிறிய பொட்டலத்துடன். அவர் மருத்துவமனையில் அலுவலகப்  பணியில் இருந்தார். மலர்ந்த முகத்துடன் அதைக்  கையில் வாங்கியவள் " அவர்  மூட்டு வலியால நடக்க முடியாம கஷ்டப்பர்றார். மாத்திரை கேக்கலாம்னு வந்தேன் நீயே கொடுத்திட்டே" என்று சேலையில் முடிந்து கொண்டாள்.

"சரி அப்ப வாறேன்" என்றவள் அவர்களின் வீட்டிற்குப்  பின் புறம் இருக்கும் காம்பௌண்டில் வசிக்கும் அவளின் இரண்டாவது மகனைப் பார்க்கப் போனாள். மருமகள் அப்பொழுதுதான் அப்பள வேலைகளை ஒதுக்கி விட்டு சாதம் வடித்துக் கொண்டிருந்தாள். " அவன் இன்னும் வரலையா?" என்றவாறு வாசலில் அமர்ந்து கொண்டாள். தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள். முதல் மகனும் அதே கிராமத்தில் தான்  குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருந்தான். மகளைப்  பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மணமுடித்து கொடுத்திருந்தனர். மூன்றாவது மகனுக்கு  லாரியில் கிளீனராக ஊரெல்லாம் சுற்றும்  வேலை. எப்போதாவது தான் வீட்டிற்கு  வருவான்." ஏன் பாட்டி... பசங்களோட சேர்ந்து இருக்க வேண்டியதுதான? எதுக்கு கஷ்டப்பற? " என்பவர்களிடம் " யாரு தயவும் நமக்கு வேணாம் சாமி...கையும் காலும் நல்லா  இருக்குற மட்டும் உழச்சு சாப்பிட வேண்டியதுதான்" என்று கேட்பவர்களின் வாயை அடைத்து விடுவாள்.

தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்த மகனைப் பார்த்து " ஏன்டா இப்பிடி குடிச்சு குடிச்சு குடியக் கெடுக்குற? " என்று மூக்கைச் சிந்தியபடி திட்டினாள்."ஏய் நீ தான் கெளவிய கூப்டியா?" என்று  அவன்  மனைவியிடம் கையை ஓங்க, " அவள ஏண்டா அடிக்கிற" என சண்டை பெருசானது. பாலாவின் சித்தப்பாவும், பாட்டியும் சண்டையை விலக்கி பாட்டியை  வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அன்று எப்பொழுதும் போல பொழுது விடிந்தது. ஆனால் முடியும் பொழுது அனைவரின் தலையிலும் இடியை இறக்கி விட்டு மறைந்தது எனலாம்." என்ன பெத்த ராசா...இப்பிடி எங்கள எல்லாம் விட்டுட்டு போயிட்டியே" என்ற பாட்டியின் ஓலம்  தெருவெங்கும் ஒலித்தது. சுற்றமும் உறவுகளும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தன. தாத்தா துண்டால்  வாயை  மறைத்துக் கொண்டிருந்தார். தோள்கள் மட்டும் இடைவிடாது  குலுங்கிக்   கொண்டிருந்தது. பாலாவின் பாட்டியும் கவலை தோய்ந்த முகத்துடன் " க்ளீனரா இருந்த கடைசி பையன் சரவணன் ஆக்சிடெண்ட்-ல இறந்துட்டான்" என்று அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கூறுவதை பாலாவும் கேட்டான்.

சில நாட்கள் அழுது புரண்டு காய்ச்சலில் அரற்றினாள் "பணியாரம்" பாட்டி. பின் " நம்ம வயத்து பொழப்ப நாம தானே பாக்கணும்" என்று கடை போட ஆரம்பித்தாள். அடுத்து வந்த சில வருடங்களிலே இரண்டாவது மகனையும் குடிக்குத்  தாரை வார்த்துக் கொடுத்தாள். மருமகளை மறுமணம் செய்து கொள்ளுமாறு தாய் வீடு அனுப்பிய பாட்டி  மனதாலும்,உடலாலும்  மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். சில சமயம் பாலா வீட்டு கிரைண்டரில் மாவு அரைத்து கொடுக்கச் சொல்வாள்.

வருடங்கள் உருண்டோடின. பாலாவின் பெற்றோர் நகரத்திற்குக்  குடி பெயர்ந்தனர். " உங்க பாட்டிய பாக்க வர்றப்போ இந்த பாட்டியையும் மறக்காம  வந்து பாருங்கடா" என்ற  அவளின் வெற்றிலைக்  கறை படிந்த சிரிப்பை இந்நாட்களில் ஏனோ பார்க்க முடிவதில்லை.  காலப் போக்கில் கடை போடுவதையும்  நிறுத்திக் கொண்டாள். ரைஸ் மில்லில் வாசல் பெருக்குவது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

கிராமத்து வீட்டில் பாலாவின் சித்தப்பா குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. அவ்வப்போது அங்கு வரும் பாட்டி," எல்லாரும் எப்பிடி இருக்காங்க? பாலா என்ன பண்றான்? அடி ஆத்தி அம்புட்டு பெருசா  வளந்துட்டானா?" என்று ஆச்சர்யப்படுவாள்." இதெல்லாம் பாக்கக்  குடுத்து வைக்கல இந்த மகராசிக்கு" என்று பாலாவின் பாட்டி படத்தைப் பார்த்து குரல் தழு தழுக்க  கண் கலங்குவாள். " பாக்க கூடாததெல்லாம் பாத்துகிட்டு நாந்தேன் இன்னும் உசுரோட கெடக்கேன்...பாழா போன சாவு வரமாடேங்குது" என்று பெரு மூச்செறிவாள்.

அடுத்து வந்த வருடங்களில் கிழவனும் போய்ச் சேர்ந்தான். தனி மரமானாள் பாட்டி. கல்லூரி விடுமுறையில் இருந்த பாலாவும் பாபுவும் பாட்டியைப் பார்க்க வந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது." அவங்க பொண்ணு ஊருக்கு போயிருக்காங்க" என்று கூறிய  அக்கம் பக்கத்தினர் ." ஆமா நீங்க யாருப்பா? " என்ற கேள்விக்கு "தெரிஞ்சவங்க " என்று ஒற்றை வார்த்தையில் பதில்  கூறி நகர்ந்தனர். ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும் போதும் , "பணியாரம்" பாட்டி எப்பிடி இருக்காங்க?! என்று கேட்பான் பாலா. " இப்ப எல்லாம் அவங்க பையன் வீட்டோட  போயி தங்கிட்டாங்க போல    " என்று அம்மா கூற புளித்த வாசம் வீசும்  பணியாரத்தின் மணமும், பாட்டியின் சிரித்த முகமும் பாலாவின் மனதில் தோன்றி மறையும். அடுத்த தடவை வரும் போது எப்படியாவது பாட்டியை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.    

நாட்கள் பறந்தோடியது. அன்று  ரோட்டை மறித்து அந்தக்  குடிசையின் முன் ஒரே கூட்டம். "கொஞ்சம் ஓரமா வண்டி  போக வழி விட்டு நில்லுங்கப்பா" என்று கண்டக்டர் கூற, பஸ்ஸில் இருந்த ஒரு சிலரும் எட்டிப் பார்த்து, அதிர்ச்சியோடு இறங்கி கூட்டத்தோடு கலந்து நின்றனர். உள்ளே, கயிற்றுக் கட்டிலில் பாட்டியின் உடல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கு கூடி கலங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பாலா, பாபுவைப் போல " பணியாரம்" பாட்டி என்று அன்பாக அழைத்தவர்கள் தான்.

 "ஒழைச்சு ஒழைச்சு ஓடா தேஞ்சு ஒரேடியா போயிட்டா...சொத்தா சுகமா?! " என்று பாட்டியைச் சுற்றி அமர்ந்து புலம்பிக்  கொண்டிருந்த பலருக்கு, இதோ இங்குத்  தோள் கொடுக்கத் தயாராக நிற்கும்   தொப்புள் கொடி பந்தம் இல்லாத இந்த உறவுகள் தான் அவள் உழைப்பினால் சம்பாதித்த விலை மதிப்பில்லாத ஒரே சொத்து என்பது  ஏனோ  விளங்கவில்லை. உழைப்பையும், இழப்பையுமே  மாறி மாறி அனுபவித்த பாட்டியின் முகத்தில் அன்று முதன் முறையாக   அமைதியும் பெருமிதமும் நிரந்தரமாகக்  குடி கொண்டிருந்தது.