Monday, November 19, 2018

ஒரு கதை சொல்லட்டா ?!

கதை சொல்வது ஒரு சிலருக்கே கை வந்த கலையாக இருப்பினும் கதை கேட்பது யாருக்குத்தான் பிடிக்காது?! நாம் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதும் இதனால் தானே?! கதை உண்மையாகவும் இருக்கலாம் கற்பனையாகவும் இருக்கலாம். நமக்குத் தெரிந்தவர்கள் பற்றியும் இருக்கலாம் தெரியாதவர்கள் பற்றியும் இருக்கலாம். அனைத்து விதமான உணர்ச்சிகளை  உள்ளடக்கியதாகவும்  இருக்கலாம் அல்லது ஒரு சில உணர்ச்சிகள்மட்டும்  மேலோங்கியதாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில் கதை  சுவாரசியமாக இருக்க வேண்டும்.

நான் கதை கேட்டதை விட சொன்னதுதான் அதிகம் என்றே நினைக்கிறேன். சிறுவயதில் பெரியம்மாவிடம் சில கதைகள் கேட்டதுண்டு. என்னை கதை சொல்லியாக ஆக்கியத்தில் முக்கியப்பங்கு "கேபிள் டிவி"-க்கு உண்டு. 
90-களின் தொடக்கத்தில் ஒரு சிலரே கேபிள் கனெக்ஷன் வைத்திருந்தார்கள். அவர்கள் கொடுக்கும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. சனி ஞாயிறுகளில் அவர்கள் பார்த்த நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை மதிய உணவு இடைவெளியில்  ஒன்று விடாமல் கூறுவார்கள். அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மெகா தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டதும் கதை சொல்லிகளுக்கு கிராக்கி அதிகமாகியது.

எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன் இல்லாதிருந்தாலும் மாடி வீட்டு அக்கா வீட்டில் பார்த்த நிகழ்ச்சிகளை நானும் சொல்லத் துவங்கினேன். நான் சொன்னது பள்ளிக்கூடத்தில் அல்ல வீட்டில். கவுண்டமணி காமெடிகளை என் அப்பாவிடம் மிக விரிவாக துணி துவைத்துக்கொண்டே கூறுவேன் அவரும் விழுந்து விழுந்து சிரிப்பார். புரிந்ததோ இல்லையே?! இப்போது நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது!!! என்னிடம்  யாரும் சிக்காத பட்சத்தில் என் கதைக்கு பலி கடா ஆவது என் தங்கைதான். பிடிக்குதோ இல்லையோ அவள் கேட்டே ஆகவேண்டும். 

எங்களின் கதை சொல்லும் பசிக்கு  தீனி போடும் விதமாக பள்ளிகளிலும்  வருடத்திற்கு ஒருமுறை  கட்டணம் வசூலித்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு  வந்தன. பழைய படமே என்றாலும் முண்டியடித்துக் கொண்டு பார்ப்பது வழக்கம்...அப்புறம் கதை சொல்லணுமில்ல!!! 

மேல்வகுப்பில் படிக்கும் பொழுதும் சீரியல் கதை சொல்லிகளுக்கு மவுசு இருந்தது ஆனால் எனக்கு அதில் அதிக ஆர்வம் இருந்ததில்லை. அக்காலகட்டத்தில் முழு நீள திரைப்படங்களை விரிவாக சொல்லுவதில் "Expert " ஆக உருமாறி இருந்தேன். புதுப்  படமோ பழைய படமோ...வித்தியாசம் இல்லை. ஒரு பீரியட் கிடைத்தாலும் போதும் நீங்கள் ஒரு படம் பார்த்துவிடலாம்...என்னிடம் கதை கேட்கத்  தயாராக இருந்தால்!!! டீச்சர் லீவு என்றால் இரண்டு மூன்று படங்கள் ஓடும் வகுப்பறையில்.

சொந்தம்... பந்தம் என்று அனைவருக்கும் கதை சொல்லிய அனுபவம் எனக்கு உண்டு. அவர்களும் பதிலுக்கு அவர்களை மிகவும் கவர்ந்த... முக்கியமாக புதிய திரைப்படங்களை எனக்குக் கூறுவார் அதையும் நான் பலருக்கு கொண்டு சேர்ப்பேன். இந்த கதை சொல்லும் பழக்கம் என்னிடம் இருந்து என் தங்கைக்கும் ஒட்டிக் கொண்டிருந்தது.  அவ்வப்போது அவளும் எனக்கு ஒரு சில திரைப்படங்களை கதையாக சொல்வாள். இப்பொழுது கூட அப்படங்களை பார்க்க நேர்ந்தால் என் தங்கையை நினைத்துக் கொள்வேன்...பேசும் பொழுது "நீ கதை சொன்ன படம் இன்னைக்கு டீவியில போட்ருந்தாங்க" என்று கூறுவேன்.   

கல்லூரியில் ஹாஸ்டல் வாசிகள் கதை கேட்க மிக ஆவலாக இருப்பர். நான் கேபிள் டீவி பார்ப்பது அறவே குறைந்திருந்த சமயம் அது ஆகையால் புதுப் படங்களை திரையரங்குகளில் பார்க்க நேர்ந்தால் மட்டுமே கதை சொல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. என்னிடம் கதை கேட் பிறகு  நீங்கள் அப்படத்தை பார்க்க நேர்ந்தால் என்னை நினைக்காமல் இருக்க முடியாது. சீன் பை சீன்...Frame by  frame அப்படியே இருக்கும். அதை என்னிடம் வந்து சொன்னவர்களும் ,"எப்பிடிடீ இப்பிடி சொல்ற?! " என்று சிலாகித்தவர்களும் உண்டு. 

இக்கதை சொல்லும் பழக்கத்தால் பள்ளி கல்லூரிகளில் நடந்த சம்பவங்களை வீட்டில் விரிவாக அனைவரிடமும் சொல்லும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அதுவும் சுவாரசியமாக ஏதாவது நடந்து விட்டால் போதும்...புத்தகத்தை  தங்கள் மடிகளில் விரித்து வைத்துக்கொண்டு என்னிடம் கதை கேட்டுக் கொண்டிருப்பர். ஆ... வென்று கதை கேட்டு விட்டு...  நான் நேரத்தை விரையமாக்கி விட்டதாக என் கடைசித் தம்பி திட்டித் தீர்ப்பான். அவர்களும் பள்ளிக்கதைகளை கூறுவதுண்டு.

இன்றளவும் கதை சொல்லும் பழக்கம் என்னை விட்டு விலகவில்லை. சினிமா மட்டுமன்றி நான் பார்த்த...கேட்ட...படித்த...அனுபவித்த  பலதரப்பட்ட விஷயங்களை விரிவாக என் கணவர், பெற்றோர், குழந்தைகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். என் படிக்கும் (எழுதும்) ஆர்வத்தையும்... பிறர் சொல்வதை  செவி கொடுத்து கேட்கும் பொறுமையையும்   இக்கதை சொல்லும் பழக்கம் தான்   அளிக்கிறது   என்று   நினைக்கிறேன். நான் சொல்வதைக்  கேட்கும்    செவிகள்  கிடைத்ததை எனது  பாக்கியமாகக் கருதுகிறேன். கதை சொல்லிகளாக உருவெடுத்து வரும் என் குழந்தைகளை பெருமையுடன் பார்க்கிறேன். 

இன்றைய இயந்திர உலகில் மனம் விட்டுப்  பேசுவதும் பிறர் பேசுவதைக் (அவர்களை மதிப்பிடாமல் ...Without Judging) கேட்பதுமே  பல பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்து விடும் என்பதை  தீர்க்கமாக நம்புகிறேன்.

பின் குறிப்பு : என்னிடம் கதை கேட்கும் கொடுமையிலிருந்து   என் தங்கைக்கு  நிரந்தர விடுதலை இன்றும்   கிட்டவில்லை.

Wednesday, September 5, 2018

குரு பிரம்மா...

"மாதா பிதா குரு தெய்வம் " - வரிசையில் மூன்றாவதாக வந்தாலும் வாழ்க்கையில் முதலாவதாக நம்மை நிறுத்த அயராது உழைப்பவர்கள் ஆசிரியர்களே!!! "எங்க சொல் பேச்சு கேக்கலைன்னாலும் பரவாயில்ல ...உங்க டீச்சர் பேச்ச கேளு...அப்பத்தான் உருப்படுவ" என்று பெற்றோர்களாலேயே  பெரு மதிப்புடன் பார்க்கப்படுபவர்கள் ஆசான்கள். கணக்கு டீச்சர், தமிழ் டீச்சர் என்று அவர்கள் கற்பிக்கும் பாடத்தை வைத்து அவர்கள் அறியப்பட்டாலும் மாணவர்களின் Psychology-யை ஓர் கண்ணசைவை வைத்தும் Physiology-யை அவர்கள் உடலசைவைக் கொண்டும்   மிகத் துல்லியமாக எடை போடுவதில் மருத்துவர்களையே மிஞ்சி விடுவார்கள். நடமாடும் "Lie Detector "-கள் என்று அவர்களுக்கு பட்டமே வழங்கலாம்.

என் பள்ளிப்பருவம் முழுவதும் கிறித்தவ பள்ளிகளில் என்பதால் மதிப்பெண்களை விட அதிக மதிப்பு நன்னடத்தைக்குதான் கிடைக்கும் . நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்த தலைமை ஆசிரியை தினமும் அசெம்பிளி வைப்பார். குறைந்தது அரைமணி நேரமாவது நல்லொழுக்கங்களைப்  பற்றி பேசுவார். நல்ல மாணவர்களை  உருவாக்குவது மட்டும் எங்கள் வேலை அல்ல நல்ல குடிமகன்களாக உங்களை வடிவமைப்பதும் (Molding)   எங்கள் பொறுப்பே என்று கூறுவார்.

முதல் நாள் பள்ளியில் இருந்து வந்ததும் அம்மா எங்களிடம் கேட்கும் முதல்  கேள்வி "வயசான டீச்சரா?!" என்பதாகத்தான் இருக்கும் ஏனென்றால் அவர்களுக்கு அனுபவம் அதிகம் ஆதலால் நம்மை வழிக்கு கொண்டுவருவதில் கில்லாடிகளாக இருப்பர். என் அதிர்ஷ்டம் எனக்கு பெரும்பாலும் புது ஆசிரியர்களே கிடைப்பார்கள். ஒரு வருடம் கண்டிப்பான ஆசிரியர் வந்து விட்டார். என் அம்மாவிற்கோ மகிழ்ச்சி ஆனால் நான் தான் லக்கி ஆயிற்றே...ஒரு மாத விடுப்பில் சென்றவர் வரவே இல்லை. நல்லா "டேக்கா" கொடுத்தே பள்ளிப் படிப்பை முடித்து விட்டேன். என் தங்கைக்கோ என்னளவிற்கு அதிர்ஷ்டம் கிடையாது. வருஷா வருஷம் அடிச்சு தொவைக்குற டீச்சர் தான். இப்பொழுது கேட்டாலும் திருக்குறளையும், நாடுகளையும்  தலைநகரங்களையும் மிகத் தெளிவாகக் கூறுவாள். எப்பிடி நியாபகம் இருக்கு?! என்று கேட்டால் "எனக்கு வந்த டீச்சர் அப்பிடி" என்று கூறுவாள். அக்காலத்தில் பெற்றோர்களின் தலையீடு பள்ளிகளில் இருந்ததே இல்லை. வருடத்தில் ஒரு முறை ஆசிரியர்களை சந்திப்பதே அதிசயம் தான்.

பெண் ஆசிரியைகளை விட ஆண் ஆசிரியர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசுபவர்கள் என்றும் உலக விஷயங்களையும் நாட்டு நடப்புகளையும் மாணவர்களிடம் விவாதிப்பார்கள் என்றும் என் சகோதரர்கள் சொல்லக் கேட்டதுண்டு. நர்சரிப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது சேர்ந்த என் அண்ணன் பள்ளியை விட்டு வந்ததும்  அவர் சார் சொன்னார் என்று பல காமெடிகளைக் கூறுவான். சே...நமக்கும் சார் வந்தா சூப்பரா இருக்கும் என்று நானும் என் தங்கையும் புலம்புவோம். என்ன செய்வது நாங்கள் படித்ததோ பெண்கள் பள்ளி!!!

எனது மேல்நிலை வகுப்பில் வந்த உயிரியியல் ஆசிரியையை மறக்கவே முடியாது. " துளசி வாசம் மாறுனாலும் மாறும் ஆனா இந்த தவசி வாக்கு மாற மாட்டான்" என்று விஜயகாந்த் கூறுவது போல புயலோ, மழையோ, வெள்ளமோ,பள்ளி ஆண்டு விழாவோ எதுவாக இருந்தாலும் வகுப்பிற்குள் நுழைந்தவுடன் முன்தினம் நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்டே தீருவார். தெரியவில்லை என்றால் சிறிது நேரம் நிற்க வைத்து விட்டு "Daily Lesson படிக்காம என்ன பண்ற " என்கிற டயலாக்கை மட்டும்  தவறாமல் சொல்லி விட்டு உட்கார வைத்து விடுவார். 

எனது பத்தாவது வகுப்பு ஆசிரியை என்னைப் பற்றிய மிகச் சரியான உளவியல் அறிக்கையை (நினைச்சா படிக்கலாம்  முதல் அஞ்சு ரேங்க்குல வரலாம்...ஆனா நெனைக்குறதே இல்ல...சோம்பேறி) என்  அம்மாவிடம் கூறி அவரை ஆச்சரியப்படுத்தினார். இன்றளவும் " அந்த டீச்சர் உன்ன பத்தி ரொம்ப கரெக்டா சொன்னாங்க" என்று நினைவு  கூறுவார் என் அம்மா. 

எனது கல்லூரியில் எனக்கு அமைந்த அனைத்து பேராசிரியைகளும் எனக்கு கிடைத்த நண்பர்களே. முக நூலின் உதவியால் எங்களைக் கண்டு இன்றளவும் பெருமிதம் கொள்பவர்களும் அவர்கள் தான். ஆசிரியர் என்னும் ஒற்றைச் சொல்லில் அடங்கியிருக்கும் பொறுப்புக்களோ ஏராளம். பெற்றோர், மருத்துவர், காவலர், நீதிபதி முக்கியமாக நம்மை செம்மைப்படுத்தி உருவம் கொடுக்கும் குயவர் என Multi- tasking செய்ய ஆசிரியர்களைத் தவிர  வேறு யாராலும் இயலுமா?!  

கல்வி வியாபாரம் ஆகி விட்ட நிகழ் காலத்தில் எங்கு அதிக சம்பளமோ அங்கு வேலை என மாறுவதால் மாணவர்களைப் பற்றிய புரிதல் ஆசிரியர்களுக்கு இல்லை என்றும்  ஆசிரியர்களுடன் நெருங்கிப்  பழகும் அரிய  வாய்ப்பு  மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை  என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால்  பலரும் மதிக்கும் ஆசிரியப் பணியை அதன் மகத்துவம் உணர்ந்து செய்பவர்கள்  இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை!!!


Wednesday, April 18, 2018

அம்மா எங்க ?!

தெருவில் இறங்கி ஓடிய குணா, மூச்சிரைக்க தெரு முக்கிலேயே நின்று விட்டான். சாலையின் இரு புறத்தையும் மாறி மாறி பார்த்தவன் ...தூரத்தில் வருபவர்களை காண்பதற்கு வசதியாக  குதிகாலில் நின்று சிறிது நேரம் நோக்கினான். தெரு முனையில் இருக்கும் டீக்கடையில் ஓரிருவர் தேநீர் அருந்தியபடியும் , ஒரு சிலர்  மாலை நாளிதழை மும்முரமாக படித்துக் கொண்டும், விவாதிக்கொண்டும் இருந்தனர். குணாவை சில நிமிடம் பார்த்த டீக்கடைக்காரர் எதுவும் கேட்காமல் தன் வேலையில் கவனமானார் . கடந்த ஒரு மணிநேரத்தில் ஐந்தாவது முறையாக குணா சாலையை சோதிப்பதற்கு தெரு முனைக்கு வந்திருந்தான். 

தளர்ந்த நடையும் வாடிய முகமுமாக திரும்பிய குணா சோர்வுடன் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டான் . அதிகம் போக்குவரத்து இல்லாத அந்த தெருவில் மாலை நேரமென்பதால் மக்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது . இஸ்திரி வண்டிக்காரர் இஸ்திரிப் பெட்டியிலிருந்த கரியை தண்ணீர் ஊற்றி அனைத்துக்கொண்டிருந்தார். "போளியல், கொழுக்கட்டை வாங்குறீங்களா ?!" என்ற இரண்டு தூக்கு வாளியை வைத்துக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தவளுக்கு   "வேணாங்கா " என்ற குரல் மட்டும்  குணா வீட்டிலிருந்து வர  அவள் அடுத்த வீட்டிற்கு நகர்ந்தாள். நான்கைந்து குடித்தனங்கள் வாழும் காம்பௌண்ட் வீட்டிலிருந்து வெளிவந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி  " என்னடா குணா வாசல்லயே ரொம்ப நேரமா உக்காந்துருக்க ?!" என்று கேட்டுக்கொண்டே அவனின் பதிலைக் கேட்க நேரமில்லாதவளாய் தெருவில் இறங்கி மறைந்தாள்.

குணாவின் வயதை ஒத்த  சிறுவர்களும், சிறுமியர்களும் குதூகலமாக தங்களுக்குள் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் குணாவை ஓரக் கண்ணால் நோக்கிக் கொண்டிருந்த பத்து வயது சிறுவனிடம் " அம்மா ஏண்ணே இன்னும் வரலே?!" என்று குரல் கர கரக்க கேட்டான்  குணா. "அம்மாதான் கார்பொரேஷன் ஆபீஸ் போற வேலை இருக்குன்னு காலையிலேயே சொன்னாங்கள்ல... வந்துருவாங்க டா " என்று பல முறை சொல்லிச்சலித்த அதே பதிலைக் கூறினான் அவனின் அண்ணனான  குரு. அம்மா இல்லாததால் (வீட்டுப்பாடம் எழுதாமல்) தெருவில் விளையாட அதிக நேரம் கிடைத்ததை எண்ணி சற்று அகமகிழ்வோடு காணப்பட்டான்.

மிகச் சமீபத்தில்  இவ்வூருக்கு  குடி பெயர்ந்திருந்த குணாவின் குடும்பம்  உடல் நலக் குறைவினால்  எதிர்பாரா விதமாக தந்தையை இழந்திருந்தது.  பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர் பின்  குணாவின் அம்மா தனக்கு  விதவைகள் இட ஒதுக்கீட்டில் மதிய உணவு மேற்பார்வையாளராக அரசாங்க  வேலை கிடைக்க தன் இரு மகன்களுடன் இந்த ஒண்டு குடித்தன வீட்டிற்கு  குடி பெயர்ந்தாள். அப்பாவை இழந்த சோகத்திலிருந்து வெளிவரவே குணாவிற்கு ஆறு மாதங்கள் பிடித்தது. "அப்பா எப்பம்மா திரும்பி வருவாங்க?! நம்ம ஊருக்கே திரும்பி போயிரலாம்மா" என்று அடிக்கடி அழுது காய்ச்சல் தலைவலி என்று வரவழைத்துக் கொள்வான். அவன் அண்ணன் குருவோ   நண்பர்கள் , உறவினர்களின் குழந்தைகள் என நல்ல "Company " கிடைக்க சில நாட்களில்  தந்தையின்  இழப்பை மறந்து சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டான் ஆனால் குணா அழுகும் போது அவனுக்கும் அழுகை வரும். அம்மாவோடு சேர்ந்து இருவரும் அழுது கொண்டே தூங்கிப்போவது வழக்கம்.

மின்மினி பூச்சியாய் கண் சிமிட்டிய தெரு விளக்குகள் சில நொடிகளில் பிரகாசம் கொண்டது. "டேய் குணா ...குரு... தண்ணி வந்து ரொம்ப நேரமாச்சு...நீங்க பிடிக்கலையா ?!" என்ற குரல்  உள்ளிருந்து ஒலிக்க  கடைசி முறையாக தெருமுனை வரை சென்று திரும்பியிருந்த குணா அழத்தொடங்கினான். " ஏண்டா அழற ...இப்ப வந்திருவாங்கடா...உள்ள போ" என்று அதட்டும் விதமாக பேசிய  குரு அடுத்த நிமிடமே  "பக்கத்து தெருவுல கட்சி மீட்டிங் ...இன்னும் கொஞ்ச நேரத்துல ரஜினி பாட்டு போடுவாங்க ...வர்றியா போய்ப்  பாக்கலாம்" என்று சமாதானப் படுத்தும் விதமாக பேசினான். சகோதரர்கள் இருவரும் சிறிது நேரம் அங்கு சென்று வந்தனர்.
 " இன்னும்  அம்மா வரலேண்ணே...வந்துருவாங்கள்ல ?!" என்ற தம்பியை பார்த்த குருவிற்கும் அடி வயிற்றில் பயம் பரவத்தொடங்கியது." மணி ஏழாச்சு...இன்னும் அம்மா வரலையா ?! மூணு மணிக்கே வந்துருவாளே ?! ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா ?! என்று அக்கறையோடு விசாரித்த  பக்கத்து வீட்டு பாட்டியை பார்த்த குருவிற்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

வீட்டின் கதவைச்  சாத்திவிட்டு இருவரும் இரண்டு  தெரு தள்ளி இருக்கும் பாட்டி வீட்டிற்கு ஓடினர். அங்கிருந்த அவர்களின் பெரியம்மா பையன் " என்னடா இந்நேரத்துக்கு வந்துருக்கீங்க ?! அம்மா வரல ?!" என்றதும் இருவரும் அழத்தொடங்கினர். " டேய்... டேய் உங்கம்மா கார்புரேசன் ஆபிசுக்கு போயிருப்பா டா ...மாசா மாசம்  போறதுதானே " என்று சமாதானம் செய்தான் . சற்று நேரத்தில் இருவரும் மீண்டும்  தெருமுனைக்கே  வந்து காத்து நின்றனர். தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வரும் அம்மாவை குணாதான் முதலில் பார்த்தான். " அண்ணே ...அம்மா " என்றதும் இருவரும் அம்மாவை நோக்கி ஓட்டம் பிடித்தனர். " ராஜா " என்று இருவரையும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்ட அம்மா " பஸ்ஸே கெடைக்கலப்பா ... கார்பொரேஷன் ஆபிஸ்ல இருந்து நடந்து வந்தேனா ..நேரமாயிருச்சு " என்று கூறிக்கொண்டே கூடையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்டினாள். அம்மாவைக் கண்ட மகிழ்ச்சியோடு தின்பண்டம் கிடைத்த இன்பமும் சேர்ந்து கொள்ள இரட்டிப்புத் துள்ளலுடன் ... அம்மாவிற்கு இரு புறமும் இரு சேனைக்காவலர்கள் போல வீட்டை நோக்கி வீர நடையிட்டு    சென்று கொண்டிருந்தனர்   குணாவும் குருவும்!!!
             

Friday, January 26, 2018

நாய்கள் ஜாக்கிரதை

கதவைத் திறந்தவளின் கண்களில் ஒரு சிறு அதிர்ச்சி . அடுத்த சில நொடிக்  கணங்களில்   பயம் அந்த  அதிர்ச்சியை வெல்ல ... தன்னை அறியாமலேயே   வாய் வரை வந்த "வீல்" என்று அலறலை... உதடுகளால் பூட்டி உள்நிறுத்தினாள் நிகிலா. எதுவும் நடவாதது போல் சத்தமில்லாமல் கதவை சாத்தி விட்டு உள்ளறையை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

" நேரம் காலை 6:40...மாநிலச் செய்திகள் வாசிப்பது ..." என்று செய்தியாளர் தன்னை அறிமுகம் செய்து  கொண்டிருந்தார்  வானொலியில். அம்மா சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள். தங்கை, தம்பி என மூவர் தங்கள் பாட புத்தகங்களை புரட்டிக் கொண்டும், முன்னும் பின்னும் அசைந்து எதையோ மனப்பாடம் செய்து கொண்டும் இருந்தனர். முகவாயைத் தடவிக்கொண்டு செய்தியைக் கேட்பதற்கு தன்னை தயார் நிலையில் வைத்திருந்தார் அப்பா.

படபடப்புடன்  வந்து நின்ற நிகிலாவை, "என்னாச்சு?! " என்ற வினாவோடு அனைவரும்  ஒரு  சேர  நோக்கினர். " வாசல்ல ரெண்டு நாய்க்குட்டி நிக்குது " என்றவளை, " தொரத்தி விட்டுட்டு வாசல் தெளிக்க வேண்டியதுதான " எனும்  தோரணையில் பார்த்த அப்பா, " இவங்களுக்கு வேற வேலையே இல்ல...என்னமோ கோவில்ல நேந்துக்கிட்டு ஆடு, சேவலை விட்ற மாதிரி மாசமான நாயி, பூனைன்னு இந்த ரோட்டோர பிள்ளையார்கிட்ட விட்டுட்டு போயிற்றானுங்க ..அது நேரா நம்ம வீட்டு வாசல்ல வந்து  நிக்குது " என்று பெருமூச்சோடு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.

நிகிலாவிற்கு... ஏன் அவர்கள் வீட்டில் எல்லாருக்குமே செல்லப் பிராணிகளைக் கண்டால் ஒரு வித பயம். அதனாலேயே வீட்டிற்கு வரும் நாய்களில்  ஒன்றைக்  கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்  வந்ததில்லை. பூனையை வளர்க்கலாம் என்று ஒரு சில முறை முயன்றனர் ஆனால் அது  பீரோ, அலமாரிக்கு அடியில் என்று அசிங்கம் செய்ய...முயற்சியைக்  கைவிட்டு விட்டனர்.  ஒரு வழியாக நாயை விரட்டிவிட்டு வந்த அப்பா "பாவம் சின்ன குட்டி...இங்க தான் கோவில்ல  நிக்குது " என்றார். " ஏய் நீ போயி கோலம் போட்ருடி" என்று தங்கையை அனுப்பி வைத்தாள் நிகிலா.

புறநகர் பகுதியில் வசிக்கும்  நிகிலாவின்  வீட்டிற்கு  இரு மருங்கிலும் வேறு  வீடுகள் கிடையாது. அரிசி, பருப்பு ஆலைகளே இருந்தன. வீட்டை விட்டு இறங்கியதும் ரோடு ...அடுத்து  பஸ் ஸ்டாப். வீட்டை ஒட்டி பின்புறமும்...சாலையைக் கடந்து முன்புறமும் கால்வாய் ஓடிக் கொண்டு...இல்லை...இல்லை நின்று கொண்டிருக்கும். அதனால் அழையா விருந்தாளிகளாக பாம்பு, தவளை, பூரான் என்று அனைத்து ஜந்துக்களும் அவர்கள் வீட்டு பாத்ரூம், புழக்கடைக்கு வருகை தரும். " அலெர்ட்டா இரு ஆறுமுகம்" என்று வடிவேலு சொல்வது போல படு கவனமாக  இருக்க வேண்டும். நகர வாசிகள் வந்தால் " இது என்ன வீடா ?! Zoo -வா ?! ஜுராசிக் பார்க் படத்துல வர்ற மாதிரி இருக்கு  " என்று கேலி பேசுவதும் உண்டு. 

மாலை கல்லூரி முடிந்து... பேருந்தை விட்டு வீட்டு வாசலில் இறங்கிய நிகிலா அங்கும் இங்குமாக பார்வையை சுழல விட்டாள். "அப்பாடா" என்ற நிம்மதி பெரு மூச்சோடு  வீட்டிற்குள் நுழைந்தாள். " என்னம்மா...நாய்க்குட்டி போயிருச்சா?! என்று  புத்தகப் பையை ஓரத்தில் வைத்தவாறே வினவினாள். "ம்ம்ம் ...ஒரு ஒன்பது மணிக்கு பாத்தேன்...பிள்ளையார் கோவில்ல வச்சிருந்த பாலை குடிச்சிட்டு ..வெயில்ல படுத்துக்கிட்டுருந்துச்சு, பஸ் ஸ்டாப்ல நிக்குற பசங்கதூக்கி  வெளையாடிகிட்டு இருந்தானுவ  ...பதினோரு மணிக்கு போயி பாக்குறேன் காணோம்...யாராச்சும் ரைஸ்மில்லு ஆளுங்க   எடுத்துகிட்டு  போயிருப்பாங்க... " என்றவாறு தேநீரை நிகிலாவிடம் கொடுத்தாள் அம்மா.

சில சமயம் வரும் நாய்க்குட்டிகள் நிகிலா வீட்டை விட்டு போவேனா என்று அடம் பிடிக்கும். அன்று முழுவதும் வாசல் கேட்டை மூடி வைத்தாலும் அங்கேயே இருக்கும். ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும் போதும் உள் புக முயலும். அவ்வாறான சமயங்களில் உதவிக்கரம் நீட்டுவது நிகிலாவின் தம்பி...அவர்களின் "சூப்பர் ஹீரோ"(அவனுக்கும் உள்ளூர நடுக்கம் தான்). அவன் கையாளும் யுக்தி இதுதான். நாய்க்குட்டியை துணிப்பையில் வைத்து...பையை வயர் கூடையில் வைத்து...கூடையை சைக்கிளில் வைத்துக்  கொண்டு அவன் பயணம் தொடங்கும். பத்து பதினைந்து நிமிடத்திற்கு பின்...போக்குவரத்து இல்லாத தெருவில் பையை வைத்து விட்டு...கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிளில் திருப்பிவிட வேண்டும் இல்லையேல் நாய்க்குட்டி பின் தொடரும்...மற்ற வாகனங்களில் சிக்கிக் கொள்ளும். ஒரு சில முறை பையை நான்கைந்து முறை சுழற்றி வைத்துவிட்டு வருவான். " வெளிய வந்த உடனே நாய்க்கு தல சுத்தும்...அடையாளம் தெரியாது " என்பான். " ஒரு வீட்டுக்கு பின்னாடி ஒளிஞ்சு பாத்துட்டு வந்தேன் எங்க போகுதுன்னு...நல்ல வேளை ஒரு சந்துக்குள்ள போயிருச்சு" என்பான். அதைக் கேட்கும் போது பாவமாக இருக்கும். என்ன செய்வது...அங்கு வரும் நாயையெல்லாம் வளர்த்தால் வீட்டில் மனிதர்களை விட நாய் தான் அதிகம் இருக்கும்.

நிகிலா பள்ளியில் படிக்கும் பொழுது அவர்கள் பெரியம்மா வீட்டில் ஒரு நாய் இருந்தது. மிகவும் வயதானது. அதிகம் குலைக்காது. சிறிது நாட்களில் அது நோய்வாய் பட்டு இறக்க...ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்தனர். அது எப்பொழுது பார்த்தாலும் குதித்துக்கொண்டும், குலைத்துக் கொண்டும் இருக்கும். சில சமயம் கயிற்றை அறுத்துக்கொண்டு வீட்டை வலம் வரும். துணிகளை கடித்துக் குதறும். நிகிலாவும் அவளின் சித்தி குழந்தைகளும் மூலைக்கு ஒரு புறமாக சிதறி ஓடுவதும், கட்டிலில் மேல் ஏறிக்கொள்வதுமாக வீடு அல்லோல கல்லோலப்படும். சில சமயம் அதிகாலையில் இவை நடக்கும். நிகிலா போர்வையை தலையோடு  இழுத்து போர்த்தி ஒடுங்கிக் கொள்வாள். அனைவரின் மீதும் நாய் தாவி ஓடும். சமாளிக்க முடியாமல் அதையும் எங்கோ விட்டு விட்டனர். அதன் பிறகு நிகிலாவிற்கு நாயுடன் எந்த வித நேரடித்தொடர்பும் கிடையாது. ஒரு முறை அவள் அப்பாவை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது அன்றிலிருந்து நாயின் மேலான அவளின் பயம் மேலும்  பண் மடங்கு பெருகியது. தெரு நாய்களின் அட்டகாசங்களை பத்திரிகையில் படிக்கும் பொழுது பயத்தில் தலை சுத்தும் அவளுக்கு.

 திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கும் நிகிலாவிற்கு நாயுடனான உறவு (பயம் ) இன்றளவும்  தொடர்கிறது. கழுத்தில் "லீஷ்" உடன் மிக பாதுகாப்பாக செல்லும் நாய் கூட நிகிலாவைப் பார்த்தல் குறைக்கும், துள்ளும். சில சமயம் காலை சுற்றி வற முயலும்..இவள் ஒதுங்கிக் கொள்வதைப் பார்ப்பவர்கள் "எதுவும் செய்யாது...குழந்தை போல...PET செய்யலாம் " என்று கூறுவர் ஆனால் நிகிலாவோ " No Thanks ...எனக்கு பயம் " என்று கூறி விடுவாள். ஒரு வேளை நம் கண்ணில் தெரியும் பயம் அதற்கு தெரியுமோ...என்னவோ?! என்று நினைத்துக் கொள்வாள். 

ஒரு முறை அவளின் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு Play Ground-ற்குச்  சென்று கொண்டிருந்தாள். எதிர்பாரா விதமாக  பிடியிலிருந்து விடுபட்ட நாய் நிகிலாவை நோக்கிப்  பாய்ந்தது. ஆஆஆ ... என்ற அலறலோடு விலக, நாய் அவளின்  மூன்று வயது மகன் மேல் ஏறி அவன் தலையை நனைத்து விட்டது. பதறி ஓடி வந்த  நாயின் காப்பாளரைப் பார்த்து " Please take Him...How Could You Let it go ?! '- என்று கோபத்தில்  கிட்டத்தட்ட அழுதே விட்டாள். அதிலிருந்து  அவளின் குழந்தைகளும்  நாயைக் கண்டால் நாலு காத தூரம் ஓடுகிறார்கள். " நாய்கிட்ட இருக்கிற பயத்துல இருந்து வெளியில வரணுங்க...நாய் வளர்க்கலாமா ?! " என்று கணவரிடம் கேட்டால்  அவர்  " எனக்கு Interest இல்ல " என்று தப்பி  ஓடுகிறார். எப்போதுதான் நிகிலாவிற்கு பயம் தெளியுமோ ?! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பின் குறிப்பு : சமீபத்தில் திருமணம் நடந்த நிகிலாவின் சூப்பர் ஹீரோ தம்பியை அவனின்   மாமனார் வீட்டில் (மைத்துனனுக்கு  பதிலாக)  வரவேற்றது யார் தெரியுமா ?!  அவர்களின் செல்ல நாய் ஜாக்கி!!! ( தம்பியின் Mind Voice ...அவனா நீ!!! )

     

Friday, October 13, 2017

ஏய்... சண்டக்காரா!!!

சுவர்க் கடிகாரத்தை  ஒரு முறை பார்த்த நிகிலா "சரியா இருக்கும் " என்று தனக்குள்ளேயே நினைத்தவாறு, கைப்பேசியையும் சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வீட்டைப் பூட்டிவிட்டி வெளியில் இறங்கியவளின் முகத்தில் குளிர்க்காற்று சில்லென்று வீச, சால்வையால்  முகத்தை மறைத்துக் கொண்டாள். கைப்பேசியில் மறுபடியும் நேரத்தைப் பார்த்தவள் பள்ளி பேருந்து வழக்கமாக  வந்து நிற்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கு நான்கு ஐந்து பெண்மணிகள் நின்று, பேசி சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. முக்கால் தூரம் நடந்தவள்...போனில் குறுந்தகவல்களைப் படித்துக் கொண்டு அங்கேயே  நின்றுவிட்டாள். மனதில் இருந்த மெல்லிய சோகம் (வருத்தம்) முகத்தை ஆக்கிரமிக்க முயன்று கொண்டிருந்தது.

பேருந்து வரும் சத்தம் கேட்டு, ஓட்டமும்  நடையுமாக பஸ் ஸ்டாப்பை நெருங்கவும் , பையன் இறங்கவும் சரியாக இருந்தது. அவன் புத்தகப் பையை வாங்கிக் கொண்டு, சற்று இடைவெளி விட்டு இறங்கிய மகளையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள். வழக்கம் போல் பள்ளியில் நடந்த கதைகளை இருவரும் மாறி மாறி சொல்ல, "அப்பிடியா ", " சரி விடு " என்று அவர்களுக்கு பதில் கூறியவாறு வந்தாள் நிகிலா. இருவரும் சில பல ஜோக்குகளைச் சொல்ல...செயற்கையாகச்  சிரித்து அவர்களை மகிழ்வித்தாள்.

கதவு தட்டும் ஓசைக் கேட்டு, " Daddy ", என்று இருவரும் ஓடி கதவைத் திறந்து கதை அளக்க  ஆரம்பித்தனர். நடு ஹாலில் அமர்ந்திருந்த நிகிலா, " ரெண்டு பேரும் வந்து வீட்டுப்பாடத்த ஆரம்பிங்க...ஸ்கூல் விட்டு வந்து ஒரு மணி நேரமாச்சு" என்று சிடுசிடுத்தாள். அன்றய அஞ்சல்களுடன் உள்ளே நுழைந்த  கணவன்  தன்னை பார்ப்பதை, கவனிக்காதவள் போல பாசாங்கு செய்து கொண்டாள். முகம் கழுவி உடை மாற்றி வந்த கதிர்...எதுவும் பேசாமல் டிவி-யை ஆன் செய்து தலைப்புச் செய்திகளைப்  பார்க்க ஆரம்பித்தான். சற்று  நேரத்தில்  பள்ளி, ஆசிரியர் பற்றிய பேச்சு, குழந்தைகளின் விளையாட்டு என்றெல்லாம் நிகிலாவும் கதிரும் சகஜமாகப் பேசி சிரிக்கத் தொடங்கினர். மாலையில் தெரிந்த கவலை ரேகை நிகிலாவின் முகத்தை விட்டு மறைந்தது.

பத்து வருடங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தது இந்த பிரச்சனை (Disagreement)...முன்பெல்லாம் சமாதானப்  பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து முடிவு எட்ட குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது ஆகும் நிகிலாவிற்கு ஆனால் இப்போது இரண்டு மணி நேரத்தில் !!! அதுவும் No சமாதானப் பேச்சு!!!

அப்பிடி என்னதாங்க பிரச்சனை அவங்களுக்குள்ள என்று பொறுமையிழந்து நீங்கள் கேட்பதும் , ஏதாவது மொக்கை விஷயமா இருக்கும் என்று நீங்கள் நினைப்பதும் எனக்கு கேட்காமல் இல்லை. இதோ சொல்லிறேன்...

முந்தைய நாள் மாலை...இடம் : வீடு

வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து திரும்பிய கதிர்...தன்னுடைய Routine வேலைகளை (டீ குடிப்பது, டிவி பார்ப்பது, அவசர அலுவலக வேலைகள் இருந்தால் முடிப்பது இல்லையேல் ஜிம்-மிற்கு செல்வது)  முடித்து விட்டு, சமையலறையில் சட்னி அரைத்துக் கொண்டிருந்த நிகிலாவின் அருகே நின்று, " இன்னைக்கு என்ன பண்ணே?!" என்ற கேள்வியை உதிர்த்தான்.
"என்ன பண்றது...எப்பயும் போலத்தான்" என்று Short- ஆக முடித்தவளை விடாமல், "உங்க வீட்டுக்கு பேசினியா?!...என்ன சொன்னாங்க?! என்ற அடுத்த கணையைத் தொடுத்தான். "முக்கியமா எல்லாம் ஒன்னும் இல்ல " என்றவளிடம்  "அப்புறம்" என்றான் இரண்டு பொறிக்கடலையை எடுத்து வாயில் போட்டவாறு. " அப்பறம் என்ன...எங்க அம்மாவோட சித்தி அதான் எங்க பாட்டி, நாமதான் கல்யாணமான புதுசுல அவங்க வீட்டுக்கு ஒருதடவ போனோமே" என்றாள்.

"ம்ம்ம் சொல்லு" என்ற கதிரிடம், " அவங்க மருமகளோட அப்பா என்று ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தாள். அவனும் "ம்ம்" என்று சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தான் இரண்டு நிமிடத்திற்கு. பொண்ணும் பையனும் மாறி மாறி குறுக்கிட அவர்களையெல்லாம் அதட்டி அடக்கி விட்டு விஷயத்தை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தாள் கதிரிடம். ஐந்து நிமிடம் பத்து நிமிடமானது. சமையலறையிலிருந்து மெதுவாக வெளியே வந்த கதிர் சாப்பாட்டு மேஜையிலிருந்த கடிதங்களை பிரித்து பார்த்துக் கொண்டே..."பாஸ்" செய்து அவனை பார்த்த மனைவியிடம் "சொல்லு"...என்றான். அவளும் Continue செய்தாள். நடு நடுவே "இதெல்லாம் நல்ல விஷயம் தானே?!"...உங்களுக்கு கூட அந்த இடம் தெரியுமில்ல ?! என்று கேள்வி கேட்டு அவனையும் உரையாடலில் சேர்த்துக்கொண்டாள். கணவனும் மனைவியும் ஒரே "Page "ல் இருப்பது முக்கியமில்லையா?!

அடுத்த இரண்டு நிமிடத்தில் சார்ஜில் இருந்த போனை நோக்கிக் கொண்டே "ம்ம்ம் " கொட்டிக்கொண்டும்... அவ்வப்போது "சரி விடு" என்று மனைவிக்கு பதில்  சொல்லிக்கொண்டும் இருந்தான், குட்டீஸ் இரண்டும் இது தான் தக்க தருணம் என்பது போல  "I Pad "-ல் ஐக்கியம் ஆகி விட்டிருந்தன. அடுத்த ஐந்தாவது  நிமிடத்தில் கதிர் கணினி முன் அமர்ந்திருந்தான். தோசையை திருப்பிக் கொண்டே, " நீங்க என்னங்க சொல்றீங்க?!" என்று கேட்ட நிகிலா, பதில் வராதது கண்டு ஹால் பக்கம் திரும்பினாள். முகத்தில் புன் முறுவல் படர எதோ type செய்து கொண்டிருந்தான் கதிர். மறுபடியும் ஒருமுறை "நீங்க என்ன நெனைக்கிறீங்க?!" என்றாள். எந்த பதிலும் இல்லை. என்னங்க  என்று அழைத்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். "எத பத்தி?! என்று கேட்ட கணவனை எதோ கொலைக்  குற்றம் செய்தவனைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு, " ஏய் ரெண்டு பேரும்...எந்திரிங்க...எப்ப பாத்தாலும் I pad- ஐ  பாத்துகிட்டு" - குழந்தைகளை நோக்கி உறுமினாள் நிகிலா.

"ஏய் நிகிலா...சொல்லு கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்" என்ற கதிரிடம்,
"என்ன பாத்தா லூசு மாதிரி இருக்கா?! நானா சொல்றேன்னு  சொன்னேன்...நீங்க தான கேட்டீங்க?! என்று கோபத்தில் கொதித்தாள். " நான் கேட்டுகிட்டு தான்" என்றவனைத் தடுத்து " இனிமே ஏதாச்சும் சொல்லுவேனான்னு பாருங்க...போயி Facebook-க்க பாருங்க " என்று திரும்பிக் கொண்டாள். "ஏய்...மெயில் தான் செக் செய்து கொண்டிருந்தேன்" என்றவனை காதில் வாங்கவில்லை. "டேய் அம்மாவுக்கு கோவம் வந்துருச்சு டா" என்று   குழந்தைகளுடன் சேர்ந்து அவன் செய்த சமாதானங்கள் எதுவும் அவளை சாந்தப்படுத்தவில்லை. கதிரும் பொறுமை இழந்து "போ.." என்று விட்டுவிட்டான். அந்த சண்டைதான் இன்று மாலை சமரசமானது.

கல்யாணமான புதிதில் இருந்தே நிகிலாவிற்கும் கதிருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் சண்டைதான் இது . அப்போதெல்லாம் கதிர் அலுவலகத்தில் இருந்து வந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஜிம்மிற்கு போனால் கூட சண்டைதான் (அழுகையுடன்). " பொழுதன்னைக்கும் தனியாத்தான் இருக்கேன்...சாயங்காலமும் இப்பிடியே இருக்கவா...குழந்தை பொறந்துருச்சுன்னா நான் ஒன்னும் உங்களை இருக்க சொல்ல மாட்டேன்" என்று கூறுவாள். குழந்தை வந்தவுடன், " Full-Day" நான்தானே பாத்துக்குறேன்...இந்தாங்க" என்று  கொடுத்து விடுவாள்.  அவள் கதை கதையாகச் சொல்லும் விஷயங்களை கேட்டே ஆக வேண்டும்...தடங்கலின்றி.

"நிகிலா...உனக்கு நியாபகம் இருக்கா ?! நாம நிச்சயதார்தத்துக்கு அப்புறம் போன்ல பேச ஆரபிச்ச புதுசுல...நீ ஒண்ணுமே பேச மாட்ட...ஒண்ணுமில்லன்னு வச்சுடுவ" என்று ஏக்கத்தோடு கூறும் கணவனிடம்..." நீங்களும் தான் பேசு...பேசுன்னு கெஞ்சினீங்க...இப்ப?! என்று கூறிச்  சிரிப்பாள். இவர்களின் இந்த செல்லச் சண்டைகளெல்லாம் நான்கு நாளைக்குத்தான். நடந்தவற்றை  சொல்லாமல் இருக்க நிகிலாவாலும்  முடியாது...கதிருக்கும் கதை கேட்காமல் பொழுது நகராது. "அப்புறம்..." என்று ஆரம்பிக்கும் கதிரிடம் ," ஏன்... உங்களுக்கு வேற வேலை இல்லையா?! என்று ஆரம்பித்து..." நம்ம அபார்ட்மெண்ட்ல என்று அடுத்த அரைமணி நேரத்திற்கு விரியும்". அவனுக்கும் பழகிவிட்டது...பிடித்தும் இருக்கிறது!!!

அதாகப்பட்டது மகா ஜனங்களே, இதனால் உங்கள் அனைவருக்கும் சொல்லவிழைவது என்னவென்றால்..."அறுசுவைக்கு உப்பு எவ்வளவு அவசியமோ, அதே போல்  அருமையான வாழ்க்கைக்கு ஊடலும்  அவசியம் அளவோடு". பொறுப்பான அம்மாவாக, வளர்ந்த மகளாக, அறிவுரை கூறும் அக்காவாக மாறிவிட்ட பிறகும்  குழந்தையாக... அதுவும் பிடிவாதம் செய்யும் குழந்தையாக மாறி  செல்லச் சண்டைகளை  கணவரிடம் போடாமல் வேறு யாரிடம் போடுவது?!

என்ன நான் சொல்றது சரிதான?!!

        

Thursday, June 22, 2017

நானும் ஹீரோ தான்

"பறவைகள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் " இது மனிதர்களுக்கும் பொருந்தும் கூற்று தானே ?! பெரும்பாலான நேரங்களில் நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (Emotions  or Reactions  ) வைத்து, " அவருக்கு மூக்குக்கு  மேல கோவம் வருமே?! ", "அவரு ரொம்ப அன்பானவரு...அதிகம் பேசாதவரு", "அவரு ஒரு லொட...லொட பேர்வழி", " வெத்துவேட்டு " என்றெல்லாம் நமக்கு முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. நாமும் நமக்கு வசதியாக ( Comfort Zone ) இருக்கும் பட்சத்தில் அந்த முகமூடியுடனே வலம் வர விரும்புகிறோம்...வருகிறோம்  ஆனால்  "மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி" என்பதால் சிலசமயம் நமது முகத்திரையை விலக்கி  புது மனிதனாக உருமாற வேண்டி உள்ளது. அவ்வாறான நேரங்களில் நாம் ஹீரோவா?!, வில்லனா?! காலம் தான் முடிவு செய்யும்.

சான்று - 1

அது ஒரு கோடைக்காலம்...ஞாயிற்றுக் கிழமை...நேரம் - மதியம் மூன்று மணி. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு... நடு இரவில் இருக்கும் ஆள் நடமாட்டம் கூட மதிய வேளையில் இருக்காது. தெருவே வெறிச்சோடிக் கிடக்கும். மதிய உணவிற்குப் பிறகு கண்ணயரும் தருணம். என் அண்ணனும், மாமா மகனும் சைக்கிள் ஓட்டிப் பழகுவதற்குக் கிளம்பினர். வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு. இங்கு அவர்களின் முகமூடியைப் (Character) பற்றிப் தெரிந்து கொள்வது அவசியம்.  என் அண்ணன் மிகவும் அமைதி (Reserved Type). எத்தனைக்  கேள்வி கேட்டாலும் இரண்டே வரிகளில் விடை கொடுக்கும் கஞ்சன். சில சமயம் புன்னகையோடு நிறுத்திக் கொள்வதும் உண்டு. என் மாமன் மகனோ அதற்கு நேர் எதிர்...மிகவும் சுட்டி...தலைகீழ் சேட்டை செய்பவன்.

முதல் பத்து பதினைந்து நிமிடம் ஒரு சந்தில் ஓட்டினர் பின்பு சற்று அகலமான முட்டுச் சந்தை தேந்தெடுக்க முனைந்து, லோக்கல் ஹீரோக்களிடம் 
(Bullies) மாட்டிக் கொண்டனர். சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டு இருவரையும் விரட்டினர். அது வாடகை சைக்கிள் என்று மாமன் மகன் கெஞ்ச, என் அண்ணனை பிடித்து வைத்துக் கொண்டு, " உன் அப்பா சைக்கிள கொண்டு வா...அது வரைக்கும் இந்த பையன் இங்க இருக்கட்டும்" என்று பயம் காட்டினர். "யார்ட்டயாச்சும்  சொன்னே அவ்வளவுதான்" என்றனர். அவன் மிரட்ட வேண்டுமா என்ன?!...எத்தனை படங்களில் பார்த்திருப்போம்...அவர்களை சர்வதேச கடத்தல்கார்கள் பட்டியலில் சேர்த்தே விட்டனர் என் அண்ணனும் மாமன் மகனும். 

வேறு வழியில்லாமல் என் மாமன் மகன் வீட்டிற்குச் சென்று,  அவன் அப்பா சைக்கிளை யாருக்கும் தெரியாமல்  ஒட்டிக் கொண்டு வந்தான். வரும் வழியில் என் அண்ணன் நடந்து வருவதைக் கண்டு சந்தோஷத்திலும் ஆச்சரியத்திலும், " எப்பிடிடா விட்டாங்க?!" என்று கேட்டான் வியர்வையைத்  துடைத்தபடி. " எங்க அப்பா போலீஸ்...இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் என்ன தேடி வந்துருவாங்கன்னு சொன்னேன்...முதல்ல நம்பலை...நீ வர்றதுக்கு லேட் ஆனதால...விட்டுட்டாங்க " என்று கூறி முடித்தான் என் அண்ணன். அடுத்து வந்த நாட்களில் என் அண்ணன் பெரிய ஹீரோவாகப் பேசப்பட்டான்...அவனை முட்டுச்  சந்திற்கு அழைத்துச் சென்ற மாமன் மகனோ வில்லனானான்!!! 

சான்று - 2

நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தருணம். என் தங்கை புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். நான் அவளை பலவாறு தொல்லைப் படுத்துவதைப் பொழுது போக்காக கொண்டிருந்தாலும், உடன் படிக்கும் மாணவி அடித்து விட்டாள் என்று கேள்விப்பட்டதும் , என்னுள் தூங்கிக் கொண்டிருந்த சகோதரி பாசம் துள்ளி எழுந்தது. மதிய  உணவு இடைவேளையில் (என் தோழியின் துணையோடு) விளையாடிக் கொண்டிருந்த அவளை Round-up செய்தோம். "இனிமே என் தங்கச்சி மேல கையை வச்ச அவ்வளவுதான்" என்று மிரட்ட, அந்தப் பெண்ணோ முறைத்துக் கொண்டு நின்றாள். " என்ன முறைக்குற?! என்றதோடு நில்லாமல் என் தங்கையை அழைத்து ," அவ உன்ன எப்பிடி கொட்டுனாளோ...அதே மாதிரி கொட்டு" என்று கொட்டச் செய்து  பழிக்குப் பழி தீர்த்த பெருமிதத்தோடு... சிங்க நடை போட்டு வகுப்பறையை அடைந்ததோம்.  

அடுத்த சில மணி நேரத்திற்குப் பின், என் தோழி ," இப்ப தான் நினவுக்கு வருது. நாம திட்டிட்டு வந்தோமே...அந்த பொண்ணோட அக்கா அஞ்சாவது படிக்குறா", என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது...இருவருக்கும் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. மாலை பள்ளி முடிந்ததும் யார் கண்ணிலும் படாமல்... ஓட்டமும் நடையுமாக...குனிந்த தலை நிமிராமல்  வீட்டிற்கு வந்தடைந்தோம். தீவிர ஆலோசனைக்குப் பின் எங்கள் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியின், ஏழாவது படிக்கும்  அக்காவின் துணையை நாடுவது என்று முடிவானது. 

அடுத்து வந்த நாட்களில் வகுப்பறையை விட்டு வெளியே வரவில்லை நானும் என் தோழியும். ஒருவாரத்திற்குப்  பிறகு என் தங்கையும் நான் மிரட்டிய பெண்ணும் ஒன்றாக விளையாடுவதைக்  காண நேர்ந்து. " என்னடி அந்த பிள்ளையோட விளையாடிட்டு இருந்த இன்னைக்கு ?!" என்று வினவ ," நீ அந்த பிள்ளையை திட்டுன அடுத்த நாளே அவ எங்கூட பிரெண்டு ஆயிட்டா " என்று கூறக்கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடி, " அது " என்று திமிருடன் கூறி விட்டு ," சு ந பா நா" இத அப்பிடியே மெயின்டைன் பண்ணு"  என்று மனதிற்குள் கூறி சிரித்துக் கொண்டேன்.

"என்னடா இது ...முகமூடி, முத்திரை...முகத்திரை  என்றெல்லாம்   Build - Up உடன் முன்னுரையை எழுதிவிட்டு...  சிறு குழந்தைகளைச்  சான்றாக கூறுகிறாளே?!" என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. தங்களின்  சுய  அடையாளத்தைப் பற்றிச்  சிறிதும் கவலைப் படாமல் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்களுக்குச்  சரி என்று படுவதை  சட்டென்று கூறுவதிலும்...   எதிர் வினை  புரிவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. நாமும் அவ்வாறு செயல் படும் நேரங்களில், " என்ன அவரு இப்பிடி மாறிட்டாரே?!" என்று குறை கூறுவதும், " இப்பதான் நியாயமா பேசுறாரு ", " இப்பவாவது வாயத் தொறந்தாரே" என்று பலர் விமர்சிப்பதும், பாராட்டுவதும்  நடைமுறை உண்மை...தடுக்க முடியாத நிதர்சனம் ஆனால்...

"நாலு பேருக்கு நல்லதுன்னா...எதுவுமே தப்பில்ல " என்ன நான் சொல்றது?!        

Wednesday, March 8, 2017

ஜோதி அக்காவும் மகேஸ்வரி அம்மாவும்

சுட்டெரித்து கொண்டிருந்த சூரியன் ஏதோ நினைத்ததைப் போல...நொடிப்பொழுதில் தனது வாலைச் சுருட்டிக் கொண்டு மேகங்களின் மத்தியில் தன்னை ஒளித்துக் கொண்டது. மேகக் கூட்டங்களும் தங்களுக்குள் கலந்து பேசி, சூரியனைக் கண்டுபிடித்து விடுவது என்று முடிவெடுத்து தென்றலின் உதவியை நாடியது. இன்னும் வேகமா...இன்னும் வேகமா என்று மேகங்கள் ஆர்ப்பரிக்க கண் இமைக்கும் கணத்தில்  தென்றல் பலத்த காற்றாக மாறியது.

"அடி ஆத்தி இது என்ன படக்குன்னு இம்புட்டு காத்து வீசுது " என்று தனக்குள் அங்கலாய்த்த ஜோதி அக்கா தனது அறையின் கதவை சாத்தி விட்டு...சாலையைக் கடந்து எதிர் வீட்டு மொட்டை மாடியை நோக்கி விரைந்தாள். காற்றில் கலைந்து பறந்து கொண்டிருந்த அப்பளங்களை சாக்கோடு மடித்து சிறிய மூட்டையாக மாற்றினாள். ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி சென்றவள் தனது பக்கத்து வீட்டு வாசலில் நின்று, " ஏய் புள்ள மகேஸ்வரி...மகேஸ்வரி" என்று குரல் கொடுத்தாள்.

கெட்டிக்கார சூரியன் பிடி படாமல் தப்பி  மேகக் குவியலின் ஆழத்தில் தன்னை புதைத்துக் கொண்டது. கரு மேகங்கள் வானை சூழ்ந்து...தூறல்களை மண்ணிற்கு அனுப்பியது. உள்ளிருந்து வெளிப்பட்ட மகேஸ்வரிக்கு மிஞ்சிப் போனால் பனிரெண்டு வயதிருக்கும். " அய்யய்யயோ மழை வந்துருச்சா?!" 'அப்பளம்' என்றவாறு ஓட எத்தனித்தவளை,"இந்தாடீ எடுத்துட்டு வந்துட்டேன் " என ஒரு சிறிய மூட்டையை அவள் கையில் கொடுத்தாள். " பொத்துனாப்ல எடுத்துட்டு வா...முக்காவாசி காஞ்சுருச்சு...ஒடஞ்சுரும் என்று எச்சரித்தாள். " ஏம் புள்ள...மழை வர்றது கூட தெரியாம அப்பிடி என்னடி சின்ன புள்ளைங்க கொட விளையாட்டு...நாலு காசு பாக்கணும்னா...கண்ண நாலா பக்கமும் வச்சுக்கிடனும்...ம்ம்ம் நீ எங்க" என்று பெரு மூச்செறிந்தாள். 

ஜோதி அக்காவும் மகேஸ்வரியும் 8 க்கு 10 காம்பவுண்ட் குடியிருப்பின் பக்கத்துக்கு வீட்டுவாசிகள். ஜோதி அக்காவின் கணவர் மணி மாமா  காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் இருட்டியதற்கு பிறகு தான் வீட்டிற்கு வருவார். என்ன வேலை என்றெல்லாம் கேட்டால் உறுதியாக கூற முடியாது ஆனால் தினமும் "டைட் "-ஆகத்தான் வருவார் என்று யாரைக் கேட்டாலும் அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் கிடையாது. ஜோதி அக்காவின் அப்பளம் தேய்க்கும்  வருமானத்தில் தான் பொழுது ஓடிக்கொண்டிருந்தது 

தொப்பென்ற சத்தத்துடன் தென்னை மட்டை ஓட்டின் மேல் விழுந்தது. மங்கலாக எரிந்து கொண்டிருந்த மஞ்சள் பல்பும் அணைந்து இருட்டாக... அவ்வப்போது வெட்டிய மின்னலின் ஒளி சிறிது வெளிச்சத்தைக்  காட்டி மறைந்தது. "இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான் " என்று மனதில் நினைத்தவாறு அனைத்தையும் ஒருங்கச் செய்து வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள் ஜோதி அக்கா. குளிச்சிட்டு வந்து சமைக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும் என்று துணிமணிகளை வாளியில் வைத்துக் கொண்டு கிணற்றடியில்  இருக்கும் மறைவை நோக்கிச் சென்றாள்.

அப்பள மூட்டையை ஓரத்தில் வைத்து விட்டு மறுபடியும் வீட்டுக்காரம்மாவின் பேத்திகளான நிதிலா, மிதிலாவுடன் விளையாடப் போகலாமா என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகேஸ்வரியின் நினைப்பை ஜோதி அக்காவின்  இந்த சொற்கள் கலைத்தன. "திரும்ப வெளையாட ஓடிறாத புள்ள...தென்ன மட்டை விழுந்துச்சுல்ல  எந்த பக்கம் ஒழுகும்னு தெரியாது. அப்பறம் அப்பளம் நனஞ்சுரும்" என்ற எச்சரிக்கையோடு "மழையோட மழையா தலைக்கு தண்ணி ஊத்திட்டு வந்துர்றேன்" என்று அறிவித்து விட்டு சென்றாள்.

மகேஸ்வரியின் அம்மா இரண்டு மூன்று இடங்களில்  வீட்டு வேலை பார்க்கிறாள். வீடு திரும்பும் நேரம்தான் ஆனால் மழைக்கு எங்காவது ஒதுங்கியிருப்பாள். மகேஸ்வரியின் அப்பா இஸ்திரி தொழிலாளி. 'அயன் மாஸ்டர்" என்று எல்லோராலும் பாசமாக அழைக்கப்படுபவர்.  காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்து முழுகி பட்டையோடு வண்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவார். மாலையிலும்  அதே பக்தி சிரத்தையோடு (வடிவேலு மாதிரி இல்லாமல்) திரும்புவார். அயன்  வண்டியை காம்பவுண்டில் பார்க் செய்துவிட்டு கிளம்பும் அவர்   திருப்பி வரும் பொழுது "Steady " ஆகத்  தோன்றினாலும் வாயைத் திறந்ததும் குட்டு வெளிப்பட்டுவிடும். போவோர் வருவோரை  எல்லாம் அழைத்து வம்பு பேசி உளறிக் கொட்டுவார். மகேஸ்வரியும் அவள் அம்மாவும் அவரை வீட்டிற்கு கூட்டிச்செல்வதற்குள் படாத பாடு படுவார்கள். அவர் வருமானம் அவர் குடிக்கே வீணாவதால் மகேஸ்வரியும் பள்ளிக்குச்  செல்லாமல் (படிப்பும் மண்டையில் ஏறுவேனா என்று அடம் பிடித்தது) ஜோதி அக்காவோடு அப்பளம் தேய்த்து சம்பாதிக்க ஆரம்பித்தாள்.

மழை நின்றும் தூறல் விடாமல் தூறிக் கொண்டிருந்தது. நிதிலாவும் மிதிலாவும் " என்னக்கா பண்றீங்க?! " என்றவாறு  காம்பவுண்ட் பக்கம்  வந்தனர். " என்னத்த பண்றது...கரண்டு இல்ல அதான் சீக்கிரமே சுடு சோறு பொங்கியாச்சு...சாப்புறீங்களா?!" என்றவளிடம் வேண்டாம் என்று தலை அசைத்துவிட்டு கையில் வைத்திருந்த சுடுகாயுடன் மகேஸ்வரியிடம் ஓடினார்கள் சகோதரிகள். குழந்தை இல்லாததாலோ என்னவோ அக்காவும் அவளது புருசனும் எப்போதும் இவர்களிடம் மிகவும் வாஞ்சையாகப் பேசுவார்கள் அதிலும் அவர்களின் தம்பி மீது அலாதி பிரியம். சில சமயம் ஜோதி அக்காவின் புளிக்குழம்பை ஆசையாகச் சாப்பிட்டு விட்டு நாக்கும் மூக்கும் சிவக்க வீட்டிற்கு ஓடுவர் இருவரும். " அடி ஆத்தி இம்புட்டு காரமாவா இருக்கு " என உச்சு கொட்டுவாள் அக்கா.

கையில் இரண்டு தூக்குவாளியுடன் அப்போது உள்ளே நுழைந்த மகேஸ்வரியின் அம்மா மழையைப் பற்றியோ, அப்பளத்தைப் பற்றியோ ஏன் மகேஸ்வரியைப் பற்றியோ கூட  எதுவும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. "ராத்திரிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டேன்" என்று பொதுவாகக் கூறிவிட்டு வாசலில் அமர்ந்தாள். மகேஸ்வரியும் அம்மாவைக் கண்டும் காணாததைப் போல விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஜோதி அக்காவின் கணவர் வழக்கம் போல் உள்ளே நுழைந்தான். " ஏய் நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு ஓடுங்க...கொசு ஆயுது " என்று நிதிலாவையும் மிதிலாவையும் விரட்டினாள் ஜோதி அக்கா. எதுவும் புரியாமல் மகேஸ்வரியையும் இழுத்துக் கொண்டு ஓடினர்.

மறுநாள் ஜோதி அக்கா மிகவும் சோகமாக காணப்பட்டாள். நிதிலாவின் அத்தையிடம் எதோ சொல்லி புலம்பி அழுதாள். இது அடிக்கடி நடக்கும் கதை தான். ஒரு நாள் நிதிலாவின் அத்தை, பாட்டியோடு காம்பவுண்ட் வாசிகள் அனைவரும் டூரிங் டாக்கீஸில் சினிமா பார்க்கக் சென்றிருந்தனர். பாதி படத்திலேயே ஜோதி அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் அத்தையிடம் பேசும் போது ஒட்டு கேட்டதில் மணி மாமா குடித்துவிட்டு வீதியில் எங்கோ விழுந்து கிடந்ததாக தகவல் வரவே தான்  ஜோதி அக்கா கிளம்பினார் என்று தெரிந்தது நிதிலாவிற்கு. அப்பளம்இட்டு சேர்க்கும் பணத்தையும் விட்டு வைப்பதில்லை என்றும் ," நாந்தான் முதல்ல போயி சேரப்போறேன்...நீ வேணா பாரு " என்று  மூக்கை சிந்துவாள் அக்கா. 


பல சமயம் ஜோதி அக்காவிற்கும் அவள் கணவருக்கும் நடக்கும் சண்டையில் ஜோதி அக்கா அழுது கொண்டே மண்ணை வாரி இறைப்பாள்.  சில சமயம் நிதிலாவின் பாட்டியும் சித்தப்பாவும் சண்டையை விலக்கி விடுவர். மகேஸ்வரியின் அப்பாவோ வேறு ரகம். எவ்வளவு "Full " ஆக இருந்தாலும் நிதிலாவின் வீட்டிற்கு வந்து " வீட்டுக்காரம்மா " என்று ஆரம்பித்து பேசியே கொலை செய்துவிடுவார். "இப்ப போயி தூங்குறியா?! இல்லையா என்று வசை வாங்கிவிட்டு இடத்தை காலி செய்வார். " எங்க அப்பா இப்பிடி குடிச்சிட்டே இருந்தா செத்துருவாரா?!" என்று சினிமா பார்த்து தெரிந்த உண்மையை நிதிலாவிடம் சொல்லி அழுவாள் மகேஸ்வரி. "அப்ப நீ எங்க வீட்டுக்கு வந்திடு" என்று சமாதானம் செய்வாள் சுட்டிப் பெண் மிதிலா.

அடுத்து வந்த சில வருடங்களிலேயே மணி மாமாவும், அயன் மாஸ்டரும் குடியின் கோரப் பசிக்கு, சில மாத இடைவெளியில் இரை ஆயினர். ஜோதி அக்கா அவள் சொந்த கிராமத்துக்கே திரும்பி சென்றுவிட்டார். அவரை பற்றி தகவல் எதுவும் அதற்குப் பின் தெரியவில்லை ஆனால் அவள் மறுமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்று விட்டதாகவும், குழந்தைகள் பிறந்து மகிச்சியுடன் இருப்பதாகவும்  ஊருக்குள் பேச்சு அடிபட்டது. நிதிலாவின் குடுபத்தினரும் தனிக்குடித்தனம் சென்று விட்டதால் மகேஸ்வரியுடன் விளையாடுவதும்  நின்று போனது. மகேஸ்வரியும் அவள் அத்தைப் பையனை திருமணம் செய்து கொண்டு அம்மாவோடு வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்தாள்.

இப்பொழுதும் ( 25 வருடங்கள் கடந்த பிறகும்) நிதிலாவும் மிதிலாவும் ஜோதி அக்காவைப் பற்றியும் மகேஸ்வரியைப் பற்றியும் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்வர். கல்லூரியில்  படிக்கும் பொழுது ஓரிரு முறை மகேஸ்வரியை கையில் குழந்தையோடு பார்த்ததோடு சரி பிறகு பார்க்கவில்லை. அம்மாவிடம் விசாரிக்கும் பொழுது மகேஸ்வரியின் கணவர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதாகவும்...மகேஸ்வரியும் அவள் அம்மாவும் நலமாக இருப்பதாகக் கேட்டு அக மகிழ்ந்தனர் இருவரும்.

விண்வெளிக்கே   பெண்கள் பயணிக்கும் இந்த யுகத்திலும் நம்மிடையே பல ஜோதி அக்காக்களும் மகேஸ்வரி அம்மாக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது மறைக்க, மறுக்க  முடியாத உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாராயக்கடைகள் "டாஸ்மாக்" என்ற பெயரில் கிளை பரப்பி விருட்சமாக வேரூன்றி விட்டது. அதை எதிர்த்தும்  போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த மகளிர் தினத்தில் பல சாதனைப் பெண்களைப் பட்டியலிடும் நாம் இவர்களுக்கும் அதில்  ஓர் இடம் ஒதுக்கலாமே!!!

(எங்கோ இருக்கும் ஜோதி அக்காவுக்கும்...மகிழ்ச்சியுடன் வாழும் மகேஸ்வரிக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.)