Sunday, February 22, 2015

கனவுக்கோப்பை

இரண்டு நாட்களுக்கு முன்பு... பள்ளியிலிருந்து திரும்பிய எனது ஒன்பது வயது மகள் கேட்ட  கேள்வி -  "நீங்கல்லாம் சின்ன பிள்ளையா இருக்கும் போது ஹாக்கி தான் பாப்பீங்களா?!"

இல்லையே..ஏன்டா கேக்குற?!

 "இன்னைக்கு P.E பீரியட்- ல ஹாக்கி விளையாடினோம்..அது India's நேஷனல் கேம்ன்னு டீச்சர் சொன்னாங்க...அதான்" என்றாள். அவளுடைய கேள்விக்கான பதில் இதோ இங்கே...   

நம் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் நம்மில் பல பேருக்கு பிடித்த விளையாட்டு "கிரிக்கெட்" தானே?!. அதுவும்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து விட்டது என்றால் கேட்கவா வேண்டும்... இதுவரை கவனிக்காதவர்கள் கூட உற்று நோக்கத் துவங்கிவிடுவார்கள். ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட ஆர்வம் தொற்றிக்கொண்டுவிடும்  காய்ச்சல் போல. இன்று வருடம் முழுதும் I.P.L என்ற பெயரில் பல சேனல்களில் கிரிக்கெட் ஒளிபரப்பாகிறது. விரும்பினால் பார்க்கலாம் இல்லையென்றால் சேனலை மாற்றிவிடலாம்.

   பல வருடங்களுக்கு முன் பெரும்பாலான வீடுகளில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலம். ஒரு சில கிரிக்கெட் தொடர்கள்   மட்டுமே ஒளிபரப்பாகும். விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அதைத்தான் பார்க்கவேண்டும்.அவ்வாறு கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்களும் உண்டு.

பல தாய்மார்களுக்கு கிரிக்கெட் எதிரியாக இருந்தது . "முழுப்பரிட்சை வருது இப்போ போய் கிரிக்கெட் போட்றான் நல்லா மார்க்கு வாங்கின மாதிரிதான்" என்று புலம்புவார்கள். என் கணவர் கூட அடிக்கடி கூறுவார் எனக்கு பிளஸ் 2ல் மார்க் கொறஞ்சதுக்குக் காரணமே கிரிக்கெட் தான் என்று. வெள்ளி,ஞாயிறுகளில் கிரிக்கெட் என்றால் ஒளியும் ஒலியும் போச்சே, படம் போச்சே என்று புலம்பி கிரிக்கெட்டையும் தூர்தர்சனையும் கரித்துக் கொட்டிய தாய்க்குலங்களும் உண்டு !!!

     எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு  கிரிக்கெட் வீரரை பிடிக்கும் அதனால் தங்களுடைய "ஹீரோ" நன்றாக விளையாட வேண்டும், "Man Of The Match" ஜெயிக்க வேண்டும் என்று எங்களுக்குள் போட்டி. அவர் கேப்டன் ஆக இருக்கும் பட்சத்தில் "Presentation Area" கண்டிப்பாக பார்க்க வேண்டும்.அவர்கள் பேசும் ஆங்கிலம் அறை குறையாகப் புரிந்தாலும் அதிலும் ஆனந்தமே. சில சமயம் செய்திகளுக்கு நேரமாகிவிட்டால் "Presentation Ceremony"-யை போட மாட்டார்கள். தூர்தர்ஷனை திட்டித் தீர்த்துவிடுவோம். மறுநாள் பள்ளியில் நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்ய வேண்டுமே!!!! இன்றுபோல் replay எல்லாம் கிடையாது .கிரிக்கெட் நாளில்"total off " என்று கரண்ட் கட் என்றால் அழுகையே வந்துவிடும். Whats-app ல் ஸ்கோர் தெரிந்து கொள்ளும் வசதி கிடையாது.

     உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதற்கான அட்டவணை, கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள் அடங்கிய Sports Supplementary செய்தித் தாள்களில் வெளிவரத்  துவங்கிவிடும். கிரிக்கெட் வீரர்களின் ப்ளோ -அப்  புகைப்படங்களும் அதில் அடக்கம். இங்கு எங்கள் வீட்டில் செய்தித்தாள் விநியோகம் செய்தவரைப் பற்றிச்  சொல்லியே ஆக வேண்டும்.பள்ளி செல்லும் முன் பேப்பர் (சினிமா துணுக்கு) படித்துவிடலாம் என்றால் முடியவே முடியாது. பேப்பர் லேட்டாகவே வரும். கவனமாக இணைப்புகளை தவறவிட்டு விடுவார். நானும் என் தங்கையும் மாறி மாறி சண்டை பிடித்தாலும் "அப்படியா..... இல்லையா?" என்று ஒற்றை வார்த்தையை மட்டுமே உதிர்க்கும் "Cool" ஆன மனிதர்.

     அன்று என் விருப்ப வீரரின் "ப்ளோ-அப்" வரும் நன்னாள். வழக்கம் போல் இணைப்பு இல்லை. நானும் என் தங்கையும் இன்று அவரை ஒருகை பார்த்து விடவேண்டும் என்று வாசலிலே உட்கார்ந்து விட்டோம். பேப்பர் விநியோகம் முடிந்து வீடு திரும்பும் அவரை வழிமறித்து சண்டை பிடித்தோம். அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்ன போட்டோ? யாரு போட்டோ? என்று இன்னொரு நாளிதழை எங்களிடம் கொடுத்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டார். அதற்குப் பின் அவரிடம் சண்டைப் போடக் கூடாதென்று கூட்டுத்தீர்மானம் நிறை வேற்றிவிடோம். எங்கள் வீட்டு அலமாரியை  பல கிரிக்கெட் வீரர்களின் ஸ்டிக்கர்கள்  அலங்கரித்த காலம் அது!!!

        கிரிக்கெட் போட்டி நடை பெறும் நாளில் முதல் பாதி ஆட்டம் முடிந்த தருவாயில் தெருக்களில் நடந்த அனுபவம் உங்களுக்கு உண்டென்றால் நான் சொல்லப்போவதை நீங்களும் நன்கு அறிந்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக நின்று பேசும் பள்ளிச் சிறுவர்களையும் அவர்களின் உரையாடல்களையும் நீங்கள் கவனிக்காமல் செல்லவே  முடியாது .

"Full Toss  ball ஆ  போட்டுட்டான்டா, சூப்பரா அடிச்சிருக்கலாம்டா, விட்டுட்டான் Bold ஆயிருச்சு"

"மோசமான பீல்டிங்டா, ஈசி கேட்ச் எல்லாம் விட்டுட்டான், Four, Six  ன்னு வெளுத்துட்டான்".

     தாங்கள் ஏதோ பயிற்சி பெற்ற வீரர்கள் போலவும், பல போட்டிகளில் பங்கேற்றது போலவும் அவர்கள் பேசுவது சுவையாகவே இருக்கும். பேசும் போது அவர்கள் கண்களில் தெரியும் ஆர்வம், கனவிற்கு எல்லையே கிடையாது. போட்டியில் இந்தியா ஜெயித்து விட்டால் நாம் தெருக்களில் நடக்கவே முடியாது ஏனென்றால் அவர்களின் ஆட்டம் தொடங்கிவிடும்.பந்து பல திசைகளில் பறக்கும். பல தாத்தா, பாட்டிகளின் வசவுகளுக்கு உள்ளாவார்கள். தோற்றுவிட்டால் கலை  இழந்த முகங்களுடன், என்ன தவறு செய்தார்கள் என்ற விவாதங்கள் தொடரும். சரியாக விளையாடாத வீரர்களுக்கு ஒரு சில "பட்டங்களும் "  கிடைக்கும். அம்பயர்களும் தப்ப முடியாது.

     சில பல முறை கிரிக்கெட், சூதாட்ட சர்ச்சையில் சிக்கினாலும் அதன் மேல் இருக்கும் மோகம் மட்டும் இன்றும் குறையவில்லை. கிரிக்கெட் சேனல் வாங்க போறேன் என்ற என் கணவரிடம் "நான் எல்லாம் பார்க்க மாட்டேன்", "Interest போயிருச்சு", "வயசாயிருச்சு" என்று வெட்டி ஜம்பம் பேசினாலும்  இந்திய வீரர்கள் நமது வரவேற்பறையில் (டிவி) விளையாடுவதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் உணர்வுகள் என்றும்  மாறுவதில்லை என்பது இதுதானோ?  ஒருவேளை என்னுள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  அந்தப் பள்ளிப் பெண்தான் என்னைப்   பார்க்கத் தூண்டுகிறாளோ?(!)


       

1 comment:

  1. I collected biscuit and chocolate covers from relatives and compelled dad to get more biscuits to collect run points during World cup!!!!

    ReplyDelete