Thursday, July 9, 2015

கனவே ....கலையாதே !!!

     கனவு காணும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? நான் கேட்பது அப்துல் கலாம் கூறும் "இலட்சியக் கனவோ", கண்களைத் திறந்து கொண்டு காணும் பகல் கனவோ இல்லை. இரவில் நன்கு உறங்கியபின் நம் மனத்திரையில் ஓடுமே ஓர் காட்சி!!! அதைப்  பற்றிதான் தான் கூறுகிறேன். நம்மைக் கண்டு நாமே வியப்பதும், இரசிப்பதும், நாம் செய்யும் சில முட்டாள் தனமான செயல்களை தடுப்பதற்கு நாமே போராடுவதும், "TIME MACHINE"-ல் பயணிப்பதைப் போன்ற பிரம்மிப்பைத் தரும். "கனவு"- கண்களை மூடிக்கொண்டே மிகத் தெளிவாக பார்க்கக் கூடிய மாயை!!!

     சிறு குழந்தைகள் தூக்கத்தில் சிரித்தாலோ, திடீரென்று பீறிட்டு அழுதாலோ கனவு கண்டிருக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் ஆக அப்பொழுதே நமது கனவுப் பயணம் தொடங்குகிறதா?!?!. நான் நடுநிலைப் பள்ளியில் இருந்த பொழுது தூக்கத்தில் புலம்புவதாக அம்மா கூறக் கேட்டதுண்டு. என் உளறலைக் கேட்டு என் தம்பி திடுக்கிட்டதாகவும் கூறுவான். பரீட்சை நேரங்களிலும், விடுமுறைக்  காலங்களிலும் (சித்திப் பெண்ணுடன் பேசுவதே முழுநேர வேலை) மட்டுமே நான் தூக்கத்தில் பேசுவதாக அம்மாவின் ஆய்வு கூறியது !!! என் புலம்பலை ஒரு முறை கேட்ட தாத்தா மந்திரிக்க அழைத்து சென்றுவிட்டார்.

     ஒரு நாள் தூக்கத்தில் எழுந்து நடக்க முயன்றதாகவும், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் புத்தகம் வாங்கச் செல்வதாக கூறினேன் என்றும் அம்மா கூறினாள். அதன் பிறகு அவ்வாறு எதுவும் நிகழவில்லை ஆனால் என் புலம்பல் மட்டும் கல்லூரிக் காலம் வரை தொடர்ந்தது. என்னிடம் எந்த இரகசியத்தையும் கூறக் கூடாது... தூக்கத்தில் உளறி விடுவேன் என்று என் தோழிகள் கேலி செய்வார்கள். ஆனால் என் புலம்பல் யாருக்கும் புரியாது. ஏதோ பேசுகிறேன் என்று மட்டும் தெரியும். இவை எதுவும் எனக்கு காலையில் ஞாபகத்தில் இருக்காது. நான் காணும் கனவுகளைத் தவிர...

     கல்லூரியில் எங்கள் விடுதியைச் சுற்றி இருக்கும் மரங்களை அறையின் ஜன்னல் வழியே பார்க்கலாம். அப்போது ஆரம்பித்ததுதான் இந்த வினோத அனுபவம்!!! நடு இரவில் சட்டென்று தூக்கம் கலையும். கண்விழித்து பார்த்தால் நேர் எதிரே தெரியும் மரக்கிளையில் ஏதோ உருவம் அமர்ந்து இருப்பது போல் இருக்கும். பதறி அடித்து என் தோழியையும் எழுப்பி விடுவேன். விளக்கை போட்டு பார்த்தால் எதுவும் இருக்காது. சில சமயம் உருவத்திற்கு பதிலாக சிலந்தி, பாம்பு போன்ற ஜந்துக்களும் தெரிவதுண்டு!!! சில நாட்களுக்கு ஜன்னலை திறக்கவே மாட்டோம்.

     ஒருநாள் அம்மாவும் அப்பாவும் ஊருக்கு சென்றிருந்தார்கள். நானும் என் தம்பியும் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தோம். தூங்கி ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. எழுப்பிவிட்டேன் தம்பியை... பூட்டில் எலி அமர்ந்திருப்பதாக ஒரே ரகளை. மறு நாள் திட்டித் தீர்த்து விட்டான். எங்கள் வீட்டில் அனைவருக்கும் கனவு வருவதுண்டு அது ஞாபத்திலும் இருக்கும். காலையில் கதை கதையாகக் கூறுவோம். இவ்வளவு நீண்ட கனவா? ராத்திரி பூரா சினிமா மாதிரி உனக்கு தெரியுமா? என்று என் கணவர் என்னை கேலி செய்வதுண்டு.


     இப்போது வரை இந்த அனுபவம் தொடர்கிறது. ஜன்னல் வழியே மரங்கள் தெரியும் வண்ணமே படுக்கை அறைகள் அமைகின்றன. முதலில் எல்லாம் என் கணவரை எழுப்பி விடுவேன் ஆனால் இப்பொழுதெல்லாம் நன்றாக கண்களைத் திறந்து பார்க்க முயற்சிப்பதால் தூக்கம் கலைந்து நான் காண்பது உண்மை இல்லை என்று உணர முடிகிறது அதனால் புலம்புவதும் இல்லை. என் கணவரின் தூக்கத்தை கெடுப்பதும் இல்லை. எனக்கு பதிலாக அந்த வேலையை என் மகள் செய்கிறாள். போர்வைக்குள் சிலந்தி, சில சமயம் தேனீ, எறும்பு ஊர்வதாக அலறுவாள். பரம்பரை நோய் போல் மாறிவிட்டது இந்தக் கனவு.

     புத்தகத்தை பரபரப்பாக திருப்பிக் கொண்டிருப்பேன். அய்யோ... முக்கியமான கேள்வியைக் கூட படிக்கவில்லையே என்று மனம் பதைபதைக்கும்... அதற்குள் மணி அடிக்கும் ஓசை கேட்கும். பரீட்சை அறைக்குள் நுழைய ஆயத்தமாவேன். எழுதப்போகும் பரீட்சை சில சமயம் தமிழாகவும் சில சமயம் அறிவியலாகவும் மாறும். பூகோளமாக இருந்தால் உலக வரை படத்தை குறிக்க மறந்து விடுவேன். மாறாமல், தவறாமல் அடிக்கடி வரும் கனவுகளில் இதுவும் ஒன்று!!!

     சில சமயம் வரும் கனவுகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். நமக்கு வயதாகி தாத்தா பாட்டிகளாக மாறியிருப்போம் ஆனால் நம் பெற்றோர்கள் இளமையாக தோற்றமளிப்பார்கள். பல நாட்கள் பார்க்காத நண்பர்கள், ஆசிரியர்கள், இடங்கள்... ஏன் இந்த உலகத்தில் இல்லாதவர்களைக் கூட கனவில் பார்க்கலாம், பேசலாம்!!! அவ்வாறு பார்க்கும் பட்சத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. கனவு ஒரு ஊடகமாக மாறிப் போனதை உணர முடிகிறது . கனவில் பார்த்த நண்பர்களை தொடர்பு கொண்டு நட்பை புதுப்பித்துக் கொண்டதும் உண்டு (FACEBOOK வாயிலாக ). எனக்கு கனவே வராது.... வந்தாலும் ஞாபகம் இருக்காது என்று கூறிக்கொண்டிருந்த என் கணவரும் இப்போது அடிக்கடி அவரது கனவுக் கதைகளை கூறத் தொடங்கி விட்டார்!!!

     கனவுகள் ஏன் தோன்றுகின்றன? எதனால் தொடர்கின்றன? கனவுகளுக்கு என்ன அர்த்தம்? என்று அறிவியலாளர்கள் பல்வேறு விளக்கங்களைத் தருகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் ஆராயாமல் மகிழ்ச்சியான கனவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டும், விபரீதமான கனவுகளை மறந்தும் விடுவோமேயானால் கனவே....கலையாதே என்று சொல்லத்தான் தோன்றும் இல்லையா?!?!?!
  

5 comments:

  1. Good One!! I also got exam Hall dreams many times!!

    ReplyDelete
  2. Good One!! I also got exam Hall dreams many times!!

    ReplyDelete
    Replies
    1. Exam hall Dreams come when your self confidence hits rock bottom it seems.

      Delete