Tuesday, November 8, 2016

நிறம் மாறாத மனிதர்கள்

மித்ரனும், நிதிலாவும் அன்று சனிக்கிழமை என்பதையே மறந்தவர்களாக, தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்  பரபரப்பாக காணப்பட்டனர்.

" அவளை குளிக்க அனுப்பிட்டேன்,  இவன குளிப்பாட்டிட்டு...அப்பிடியே நீங்களும் குளிச்சிட்டு வந்துருங்க", என்று மகனை கணவரிடம் அனுப்பிவிட்டு சமயலறையில் தன்னை அழைக்கும் குக்கருக்கு பதில் சொல்லப் போனாள் நிதிலா. 

முன்தினம் அலுவலகம் முடித்து திரும்பிய மித்ரன், " Down Town -ல ரேஸ் கார்ஸ் exhibit  வச்சுருக்காங்க, இந்த வாரத்தோட முடியுது. நாளைக்கு போயிட்டு வந்துரலாம் என்றதும் "யேய்" என்று மகன் ஆர்பரித்தான். "வேற என்ன இருக்கும்?"! என்று வினவிய  நிதிலாவிடம், " நிறைய ஸ்டால்ஸ் போட்ருப்பாங்க...என்றான். அப்ப "free stuff "  கொடுப்பாங்கன்னு சொல்லுங்க என்று சமாதானமடைந்தாள். " It will be boring " என்ற மகளிடம், " ஏய் உன் பிரெண்ட்டும் வர்றா " என்றதும் அவளும் குதூகலமடைந்தாள்.

கூட்டம் வர்றதுக்கு முன்னாடி போயிரணும் அதனால காலையில சீக்கிரமா கெளம்பனும். சொல்லிக்கிற மாதிரி சாப்பிட ஒன்னும் கெடைக்காது,  Breakfast heavy -யா சாப்பிட்டு போனாதான் ஒரு ரெண்டு மணி வரைக்கும் தாங்கும் என்று கூரிய கணவனை நோக்கி உச்சு கொட்டிவிட்டு நகர்ந்தாள் நிதிலா. அதி காலையில் எழவேண்டுமே... அதுவும் விடுமுறை நாளில்   என்ற எண்ணம்... எவ்வாறு மனதிலிருக்கும் ஆர்வத்தையெல்லாம் ஒரு நொடியில் நீர்த்துவிடுகிறது என்பதை நினைத்து வியந்தாள்.

அனைவரும் குளித்து, காலை உணவாக பொங்கல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகளிடம், " இது சாப்டா தாண்டா பசிக்காது, tired- ஆகாம நடக்க முடியும்  என்று சமாதானம் பேசியும், கேட்காத போது முதுகில் ரெண்டு அப்பு அப்பியும்  உண்ண வைத்து புறப்படுவதற்குள் பத்து மணி ஆகிவிட்டது. சீக்கிரம் கெளம்பணும்னா எங்க?! என்று தனது வழக்கமான புலம்பலுடன் காரைக் கிளப்பினான் மித்ரன். 

காலை வெயிலில் " Down Town " பளிச்சென்று இருந்தது. சாலையின் இரு மருங்கிலும் வித விதமான கடைகள் போடப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டமும் கணிசமாக அலை மோதியபடி இருந்தது. அங்கங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரேஸ் கார்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர். "அதனால தான் சீக்கிரம் வரணும்னு சொல்றது" என்று முணுமுணுத்த கணவனை காதில் வாங்காதவளாய் மகனுடன் வரிசையில் சேர்ந்து கொண்டாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் வெயில் மண்டையைப்  பிளந்தது. நா வறண்டது. கூட்ட நெரிசலில் ஊர்ந்தபடியே சென்றனர். எதற்காவது உபயோகித்து கொள்ளலாம் என்று  சில பல ஸ்டால்களில் இருந்து பெற்றுக் கொண்ட  இலவசங்களும் கையை நிறைத்து கனத்தது. எங்காவது உட்கார்ந்தால் போதும் என்று தோன்றியது.  

அருகிலிருந்த ஸ்டாலில் அவனுக்கு பிடித்த "Cookie"  சாம்பிள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் மகன் அடம் பிடிக்கத் தொடங்கினான். கூட்டமும் அதிகமில்லாததால், " நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று நிதிலா சாலையைக் கடந்து சென்றாள். அங்கு நின்றிருந்தவரின் பின்னால் இருக்கும் காலி இடத்தில் நின்று சாம்பிளைப் பெற்றுக்கொண்டு திரும்பும் போதுதான் தனக்குப் பின்னாலிருக்கும் பெண்மணியைக் கவனித்தாள். அப்போதுதான் தான் வரிசையின் இடையில் நுழைந்து விட்டதை உணர்ந்தவளாக," Sorry I didn't See you " என்றாள். அதற்கு அந்தப் பெண்மணி " of course you did not " என்று கூற, யாரோ தன்னை கன்னத்தில் அறைந்ததைப் போல் அவமானத்தில் குறுக்கிப் போனாள். அந்த பிஸ்கெட்-ஐ அப்படியே குப்பையில் எறிந்து விடவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை மகனின் முகத்தைப் பார்த்துக் கைவிட்டாள்.

" என்ன ஆச்சு?! என்று கேட்ட கணவனிடம், " ஒன்றுமில்லை " என்று தன்னை சகஜ நிலைக்கு மாற்றிக் கொள்ள முயன்று தோற்றாள். இந்த அயல் நாட்டிற்கு வந்ததில் இருந்து மிகவும் கனிவாகப் பேசும் மக்களை மட்டுமே கண்டிருந்த நிதிலாவிற்கு இது ஒரு பேரதிர்ச்சி ஆக இருந்தது. ஒரு வழியாக அன்றைய பொழுது முடிவிற்கு வர,  களைத்த உடல்களை சுமந்து கொண்டு வீடு திரும்பினர். நிதிலாவின் மனமோ ஆயிரம் மடங்கு அதிகமாகக் கனத்து அவளை அவமானத்தில் இருந்து வெளிவர விடாமல் ஆழத்தில் அழுத்தியது.

இரவு படுக்கைக்கு முன் தன் உள்ளக்கிடக்கையை கணவனிடம் கொட்டிவிட்டாள். மித்ரனோ மிகச் சாதாரணமாக," நம்ம ஆளுங்க இப்பிடித்தான பன்றாங்க " என்று கூற ," என்ன சொல்றீங்க ?!" என்று தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தை அவன் மேல் பாய்ச்சினாள். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து சத்தமா பேசாத, வெளியிடத்துல கண்ண கசக்காத , குழந்தையை அடிக்க கூடாது- ன்னு எல்லா ரூல்ஸ்சையம் follow பண்ணிக்கிட்டு தானே இருக்கோம். நான் கூட " இது தான் தனி மனித சுதந்திரமா -ன்னு ?! எத்தனை தடவை கேட்ருக்கேன் என்று வினவிய மனைவியிடம் " அதெல்லாம் பண்ணலேன்னா போலீஸ் காரன் புடிப்பான்ற பயத்துல தான பண்றோம் " என்று கூறிவிட்டு மேற்கொண்டு விவாதத்திற்கு தான் வரவில்லை என்பது போல திருப்பிப் படுத்து குறட்டை விட ஆரம்பித்தான்.

நிதிலாவின் மனம் அவன் வாதத்தை ஏற்க மறுத்தது...சற்று நேர சிந்தனைக்குப் பின் தன்னை அறியாமலேயே உறங்கிப் போனாள். அடுத்து வந்த நாட்களில் தன் அகத்தையும், புறத்தையும் கூர்மையாக்கிக் கொண்டாள். மகன், மகளின் பள்ளிகளில், அவர்கள் செல்லும் பலதரப்பட்ட வகுப்புகள் மற்றும் கடை கண்ணிகளிலும் நம் நாட்டவரின் நடத்தையை கவனித்து மித்ரனின் கணிப்பு தவறு என்று நிரூபித்து, அவன் எவ்வாறு அயல் நாட்டவருக்கு ஆதரவாகப் பேசலாம் என்றும் சண்டையிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

கண்காணிப்பின் முடிவில் இரண்டு வகையான மனிதர்களை இனம் கண்டு வியந்தாள். ஒரு சாரார் விதிகளை கடுமையாகப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். சாலையைக் கடக்கும் போது, தங்களுக்காக நிற்கும் கார்களை மனதில் கொண்டு ஓட்டமும் நடையுமாக குழந்தைகளை இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டாள் ஆனால் மறு சாராரின் நடவடிக்கைகள்   அவளின்  எதிர்பார்ப்பில் மிகப் பலமான இடியை இறங்கியது. தராசு அவர்கள் பக்கம் சரிவதைக் கண்டு கலங்கினாள். கணவன் கூறியது சரியே என்று தோன்றும் அளவிற்கு அவள் கண்ட காட்சிகள் இருந்தன.

அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற இடத்திலும் தன் நாட்டினர் பேசிக்கொண்டு இருப்பதையும், அதை கவனிக்கும் பலரையும் அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்பதையும் கவனித்தாள். உள்ளிருந்து வெளியே செல்வதற்காக திறக்கப்பட்ட கதவை மாறி மாறி ஒருவர் பிடித்து நிற்க, எதுவுமே அறியாதது போல வெளியிலிருந்து உள்ளே நுழைவதையும், அதற்காக சிறு வருத்தமோ, நன்றியோ தெரிவிக்காமல் செல்லும் மக்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். " Free Sample " கொடுக்கும் இடங்களில் ஒருவர் நுழைந்து தன் ஒட்டு மொத்த குடும்பத்திற்காக அள்ளிக்கொண்டு கொண்டு செல்வதும் அன்றாடக் காட்சியாக இருந்தது.

நம் நாட்டில் நாம் வளர்ந்த விதம் அப்படி என்று நிதிலா தன்னை சமாதானம் செய்து கொள்ள முயன்றாள். " நின்னு கிட்டே இருந்தா...இப்பிடியே இருக்க வேண்யதுதான் " என்று கூறிக் கூறியே நம்மை பழக்கப் படுத்திவிட்டார்கள் ஆனால் இங்கு நிலைமை வேறல்லவா?! என்று நினைத்தவள் இங்கு பள்ளிகளில் அதனால் தான் " Wait For your turn " என்று சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கிறார்களோ?! என்று வியந்தாள். நம்மில் ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரும் அல்லவா பலி கடா ஆக்கப்படுகிறார்கள். தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை தேச துரோகிகளாகப் பார்க்கும் இவர்கள் நம் நாட்டிற்கு செல்லும் போது மட்டும், " சே...சே..என்ன இது சந்தைக்கடை மாதிரி...ஒரு Discipline இருக்கா?! என்று சட்டம் பேசுகிறார்களே?!   என்று நகைத்துக் கொண்டாள்.

வெளி நாட்டிற்கு வரும் நாம்  சில மாதங்களிலேயே  வாழ்க்கை முறை மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகளை அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிறோமே ஆனால் விதிகள் (இங்கீதங்கள்) மட்டும் நமக்கு ஏன் வேப்பங்காயாய் கசக்கிறது?!  இத்தனை நாள் இதையெல்லாம் தான் ஏன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, கவனிக்கவில்லை என்று தன்னையே வினவிக்கொண்டவள்...குட்டையில் ஊறி மட்டைகளில் தானும் ஒரு மட்டையாக இருந்ததை எண்ணி வெட்கினாள்.

தன்னைத் திட்டிய அந்த பெண்மணியை இப்போது  நினைத்துப் பார்த்தாள் நிதிலா. அவள் மேல் கோபமோ, வெறுப்போ எழவில்லை அவள் செய்தது சரியே என்ற எண்ணம் எழுவதை அவளால் தடுக்க இயலவில்லை. "நீங்க சொன்னது சரிதாங்க" என்று மித்ரனிடம் கூற வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். சுழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களை பச்சோந்தி என்று இழித்தும் பழித்தும் பேசுகிறோம் ஆனால் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவதில், பின்பற்றுவதில் பச்சோந்தி ஆவதில் தவறொன்றும் இல்லையே!!!             

     

Tuesday, October 11, 2016

நவராத்திரியும் நானும்

நவராத்திரி என்றதும் நம் அனைவருக்கும் ஒரு சேர நினைவுக்கு வருவது கொலு மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆயுதப் பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்களே...புத்தகங்களை பூஜையறையிலேயே மறந்து வைத்து விட்டு, மறு நாள் பள்ளியில்  அடிவாங்கியதெல்லாம் உங்கள் நியாபகங்களில் நிழலாடலாம். காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் மீண்டும் இரண்டு மூன்று நாட்கள் தொடர் விடுப்பு கிடைப்பதென்பது இன்றைய சூழ்நிலையில் "மகிழ்ச்சி" தானே?!...பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் வாயாடிக் கொண்டிருக்கும் ஒரு சில வாண்டுகளுக்கோ விஜய தசமி அழுவாச்சி தினமாக அல்லவா மாறிவிடுகிறது. 

இந்நாட்களில் கொண்டாட்டங்கள் கண்களை நிறைத்தாலும் நவராத்ரி நாயகிகளான முப்பெருந்தேவியரே மனதில் நிலைப்பார்கள். சிறு வயது முதலே எனக்கு அம்மன் மீது அதீத  பற்று(பயம் ).  இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். வழக்கம் போல் தலைவலி என்று பள்ளிக்கு மட்டம் அடித்து விட்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஆடி வெள்ளி என்பதால் அம்மன் கோவிலுக்கு பாட்டி, சித்தியோடு செல்ல நேர்ந்தது. கூட்ட நெரிசலில், மஞ்சள் புடவையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்களையும், கையில் வேப்பிலையோடு சாமி ஆடுபவர்களையும் கண்டு மிரண்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் காய்ச்சலில் படுத்துவிட்டேன். நான்காம் வகுப்பில் இருந்த நேரம்- ஆடி வெள்ளி அன்று  மாவிளக்கு ஏற்ற குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றோம். அலை மோதும் பக்தர்கள் வரிசையில் நிற்க பிடிக்காமலும், ஒளியும் ஒலியும் பார்க்கும் ஆர்வத்திலும் பாதியிலேயே வீட்டிற்கு சென்றுவிட்டேன். அடுத்த வந்த நாட்களில் எனக்கு அம்மை போட்டு விட்டது. "அம்மா கோயிலுக்கு போயி அவளை பார்க்காம வந்தியில்ல?! அதான் அவளே உன்னை பார்க்க வந்துட்டா" என்று பாட்டி சொல்ல பீதியில் உறைந்து போனேன். திரைப்படங்களில் வரும் காளியும், நீலியும் கனவில் துரத்த  தூக்கத்தில் பிதற்றினேன்.  

      
நடுநிலைப் பள்ளியில் படித்த காலங்களில்  கசின்களின் கூட்டணியில் "கொலு" வைப்பதுண்டு. இன்று வீட்டிற்கு வீடு கொலுப்படி அமைத்து கொண்டாடுவது சகஜமாகிவிட்டது. ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன், வாசற்படியில் ஈர மண் கொண்டு கோபுரம், வீதி என்று "செட்" போடுவதுதான் எங்கள் கொலு. அதில் பல வகையான  பிளாஸ்டிக் பொம்மைகளும் இடம் பெறும். அப்படியே போட்டு விட்டுப் போக முடியாது. இரவானதும் அனைத்தையும் வாளிகளில் அள்ளி விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே எங்களுக்கு அனுமதி கிடைக்கும். தினமும் இரண்டு மணி நேரம் செலவிட்டு கொலு வைத்தால் ஏரியாவில் இருக்கும் "குட்டி" தாதாக்கள் நிமிடத்தில் கலைத்து விட்டு ஓடி விடுவார்கள். சில சமயம் எங்கள் கொலு உண்டியலை கையிலிருந்து பறித்துக் கொண்டு சென்று எங்கள் கொலுவிற்கும் முடிவு கட்டி விடுவார்கள்.

எங்கள் பெரியப்பா "பிரின்டிங் பிரஸ்" வைத்திருந்ததால் "ஆயுத பூஜை"-யை மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அதற்கு முந்தைய இரவு அச்சகத்தில் பணிபுரிபவர்களோடு சேர்ந்து சுத்தம் செய்கிறோம், கோலம் போடுகிறோம்  என்ற பேரில் இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டம் போட்டு, பூஜையின் போது தூங்கிய அனுபவம் மறக்க முடியாதது. அன்று அனைத்து உறவினர்களும் பெரியம்மா வீட்டில் ஒன்று கூடுவதால், திருமண வீட்டைப் போன்று குதூகலம் ததும்பி வழியும். பழங்களும் ,பொறியும் சாப்பிட்டு வயிறு நிறைந்து விடும். 

சரஸ்வதி பூஜை அன்று சுண்டல் சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் ஆனால்  "சரஸ்வதி சபதம்" படத்தைப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். பல்வேறு தெய்வங்களைப் பற்றி பெற்றோர்கள், பெரியோர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டிருந்தாலும், அதைத் திரையில் காணும் போது ஏற்படும் பிரமிப்பு - அதற்கு ஒரு அசைக்க முடியாத நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. கேபிள் டிவி இல்லாததால் தெருக்கம்பங்களில் திரைகளைக் கட்டி போடப்படும் "சிறப்புக்காட்சி"-க்கு கூட்டம் அலை மோதும். பள்ளிக்கூட நாட்களில் தாத்தாவோடு அமர்ந்து பார்த்த அனுபவம் உண்டு. படம் முடிந்தாலும் கல்வியா, செல்வமா, வீரமா என்ற விவாதம் அடுத்த இரண்டு தினங்களுக்கு எங்களுக்குள் தொடரும்...  

பலவித பண்டிகைகளையும், நன் நாட்களையும் ஏன் கொண்டாடுகிறோம்?! எதற்குக் கொண்டாடுகிறோம்?! என்பதற்கு பல்வேறு ஆன்மீக, வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். "இல்லேன்னா சாமி கண்ணைக் குத்தும்" என்று நம்மை நம் முன்னோர்கள் பயமுறுத்தி இருந்தாலும், மாறி வரும் பருவ நிலைக்கு ஏற்ப நம் உடலை தயார்படுத்தவே இந்த குறிப்பிட்ட நாட்களைத் தேர்வு செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. கடும் கோடையில் தோன்றிய வெம்மை நோய்  பரவாமல் இருக்கவும், நோயால் பாதித்தவர்கள் விரைவில் குணமடையவும், வரவிருக்கும் மழைக்கால தொற்றுக்களைத் தடுக்கவும் - ஆடி மாதத்தில் வேப்பிலைக்காரியான அம்மனை வழிபட்டிருப்பார்கள். அம்மாதத்தில் காப்பு கட்டிவிட்டதாகக் கூறி சில கிராமங்களில் அன்னியர்களை அனுமதிப்பதில்லை. அம்மன் கோயில் கூழுக்கு நிகரான ஊட்டச்சத்து நிறைந்த பானமும், வேப்பிலைக்கு மேலான கிருமி நாசினியும் ஏதேனுமுண்டா?!   

நவராத்திரியைத் தொடர்ந்து வரும் குளிர்காலத்திற்கு நம்மை பலப்படுத்தவும், நோய்களிருந்து காத்துக் கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தான் தினம் ஒரு பயறு வகையை சுண்டல் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு சில வேளைகளில்  நாம் மேற்கொள்ளும் விரதங்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகவே இருக்கின்றது.

இன்று நாம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம்  பாரம்பரிய விழாக்களையும், பண்டிகைகளையும் நமக்கேற்ற கலாச்சார முறைப்படி  தவறாமல் கொண்டாடுகிறோம். "நமக்கில்லேன்னாலும் குழந்தைகளுக்காக செய்யணும்" என்று சொல்லிக் கொள்கிறோம். பல சமயங்களில் நண்பர்கள், அன்பர்கள்  என்று ஒன்றாக இணைந்து மகிழ்கிறோம். ஆனால் நாம் மட்டுமல்லாமல் நம் சுற்றமும், சூழலும் நம்மோடு சேர்ந்து   விழாக்கோலம் பூணும் பொழுது ஏற்படும் மன உணர்வை, நிறைவை  நம்மால் அடைய முடிவதில்லை. " இந்நேரம் ஊர்ல சூப்பரா இருக்குமில்ல?! என்று ஏங்குகிறோம். நம் குழந்தைகளுக்கு நம்மால் விழாக்களை அறிமுகம் செய்ய இயலும்...அனுபவங்களை அளிக்க இயலுமா?!  

Friday, September 2, 2016

"பனியாரம்" பாட்டி

ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தவளின் காதுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லும் வாகனங்களின் சத்தம் விழ, அரக்க பறக்க எழுந்து அமர்ந்தாள். பறவைகளின் ரீங்காரங்களுக்குப்  பதிலாக கேட்கும் பஸ்ஸின் ஓசை,  பொழுது நன்கு புலர்ந்து விட்டதை உணர்த்தியது. கூந்தலை வாரி சுருட்டி கொண்டையாக்கியவள் வேகமாக எழுந்து நிற்க முயன்று தோற்றாள். மனதின் வேகத்திற்கு அவளின் அறுபது வயது உடலால் ஈடு கொடுக்க முடியவில்லை.

" ஆத்தா மகமாயி" என்று மெதுவாக எழுந்தவள் பாயை சுருட்டி மூலையில் கடாசினாள்.

வாயிலை நோக்கி நடந்தவள், கயிற்றுக் கட்டில் சுவரோரம் சாய்த்து வைக்கப் பட்டிருந்ததைக் கண்டு, "எந்திருச்சும்  உசுப்பி விடாம போயிருக்கு இந்த மனுசன்" என்று தன் கணவரைப் பற்றி தனக்குள்ளே புலம்பியவளாய்  அருகில் இருந்த  குடத்து நீரை வாளியில் கவிழ்த்தாள். நன்கு சாணியால் மொழுகி, காய்ந்திருந்த  வாசலில் ஊற்றினாள். மீதமிருந்த தண்ணீரில் முகம் கழுவி, வெற்றிலைக் கறை படிந்த பற்களை கையால் தேய்த்து வாய்க் கொப்பளித்தாள். வீட்டிற்குப்  பின் புறம் இரண்டு நிமிடம் சென்று வந்தவள் சாலையைக் கடந்து எதிர்புறம் இருந்த குடிசையை நோக்கி நடந்தாள்.

கதவிற்கு பதில் நின்று கொண்டிருந்த தென்னை ஓலையை எடுத்து வெளியில் போட்டவாறு உள்ளே நுழைந்தாள். இரண்டு அடுப்புகளையும் ஒருசேர பற்ற வைத்தாள்." என்ன முழுச்சுகிட்டியா?" என்றவாறு  கையில் தூக்கு வாளியுடன் உள்ளே நுழைந்த கிழவனிடம், " ஆமா நேரமாச்சுல்ல" என்றவள் " நீ குடிசிட்டியா?" என்று கேட்டவாறு தூக்கில் இருந்த டீயை மடக் மடக் என்று விழுங்கி ஏப்பம் விட்டாள்.

" நீ நல்லா தூங்கிட்டு இருந்தே அதான் டீ வாங்கியாந்து எழுப்பலாம்னு போனேன்" என்றவன் புகை மூட்டத்தினூடே பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவளின்  பதிலை எதிர் பாராமல் தோட்டத்தை நோக்கி நடந்தான். மூட்டு வலியினால் வளைந்த கால்களுடன் சாய்ந்து சாய்ந்து நடந்து செல்லும் தனது கணவரை அவள் கவனிக்கத் தவறவில்லை.

அந்தக்  கிராமத்தை அப்பளக் கம்பெனிகளும் ரைஸ் மில்களும்  ஆக்கிரமித்திருந்தன. சிலர் விவசாயம் செய்தனர். அங்கு வேலை பார்ப்பவர்களை நம்பியே பாட்டியின் வியாபாரம்  ஓடியது  . பல ஓட்டல் கடைகள் இருந்தாலும் தனக்கென்று சில வாடிக்கையாளர்களை வைத்திருந்தாள் பாட்டி. அவர்களின் காலை சிற்றுண்டி பாட்டியின் கடையில் தான். சில பள்ளிக் குழந்தைகளும் சாப்பிடுவதுண்டு. சட்னி அரைத்த கையோடு அடுப்பிலிருக்கும் விறகை சரிசெய்து விட்டாள். முகமெங்கும் வியர்வை வழிந்தோடியது.

" என்ன பாட்டி இட்லி கெடைக்குமா?" என்று கேட்டபடி நடுத்தர வயது மதிக்கத் தக்க ஆண்கள் உள்ளே நுழைந்து பக்க வாட்டில் இருந்த திண்டில் அமர்நது கொண்டனர். " இதோ" என்றவாறு ஆவி பறக்கும் இட்லிகளை சட்டியில் கவிழ்த்தாள். ஒரு கையில் வாழை இலைகளும்  மறு கையில் தண்ணீர் குடமுமாக உள்ளே நுழைந்த அவளுடைய கணவனும் அவர்களுடன் பேச்சு கொடுத்து கொண்டே அமர்ந்தான். தட்டில் இலைகளைப் போட்டு நான்கு ஐந்து இட்லிகளை சட்னிகளுடன் அவர்களுக்குப்  பறிமாறினாள். " நீயும் சாப்பிடு" என்று கிழவனுக்கும் கொடுத்தாள்.

 கையில் இரண்டு பாத்திரங்களுடன் உள்ளே நுழைந்த பாலாவும் பாபுவும்,   "பணியாரம் ரெண்டு ரூவாய்க்கு பாட்டி" என்றனர். " இனிப்பு பணியாரம் இன்னும் ஊத்தல சாமி ஒக்காருங்க " என்றவள் " பள்ளிகோடம் இல்லியா?" என்று சிரித்தாள் வெற்றிலையைக்  குதப்பிக் கொண்டே. இல்லை... என்பது போல் தலையாட்டி விட்டு அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களின் இலைகளை நோட்டமிட்டனர் இருவரும். அவர்களின் வாயில் எச்சில் ஊறிய அதே சமயம் " அதெல்லாம் உங்களாலே சாப்பிட முடியாதுடா  காரமா இருக்கும்" என்று தங்களின் பாட்டி கூறியது நினைவுக்கு வர எச்சிலை முழுங்கிக் கொண்டனர் ஏமாற்றமாக.

அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர்களின் பணியாரம் கிடைத்தது. சில பள்ளிக் குழந்தைகளும் இனிப்பு பணியாரம் என்று பார்சல் வாங்கிச் சென்றனர். " எல்லாருக்கும் சட்னி வேணுமில்ல" என்று சிலரை மிரட்டியும்,
" இன்னும் ரெண்டு இட்லி சாப்டு " என்று சிலரிடம் கனிவாகவும் வியாபாரத்தை நடத்தினாள். கொடுக்கும்  சில்லறைகளை வாங்கிச் சரி  பார்த்து சுருக்குப் பையில் போட்டுக்  கொண்டாள். " நாளைக்கு தர்றேன் பாட்டி" என்றும் " சாய்ங்காலம் கூலி கொடுத்துருவாங்க" என்று சிலரும் நகர்ந்தனர். "பொழுது சாய வீட்டுக்கு வர்றேன்னு உங்க  பாட்டிகிட்ட சொல்லுங்க" என்று  பாலா, பாபுவை நோக்கி சிரித்த முகத்துடன் கூறினாள். இரண்டு பாட்டிகளும் தோழிகள். மூன்று பணியாரம் ஓசியாக கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்தனர் சகோதரர்கள்.

காலை பத்து மணி வரை வியாபாரம் பின் வீட்டுச்  சமையல். மதிய நேரம் அடுப்பிற்குத் தேவையான சுள்ளிகளையும், தென்னம் மட்டைகளையும் தோப்பிலிருந்து சேகரித்துக்  கொள்வது, மாலை வேளைகளில் அடுத்த நாளிற்கான மாவை உரலில் இட்டு அரைப்பது என " பிஸி " பாட்டியாக இருந்தாள் " பணியாரம் " பாட்டி. அவளுடைய கணவன் அருகிலிருந்த அதே  தோப்பில் " Watch Man "- ஆக இருந்தான். மோட்டார் போட்டு தண்ணீர்  பாய்ச்சுவது, அயலவர்களை அண்ட  விடாமல் பார்த்துக் கொள்வது என அவருக்கும்  பொழுது போனது. பாபுவும் பாலாவும் பல முறை தண்ணீரில் ஆட்டம் போட்டதுண்டு. புளியங்காய் கூட பறித்துக் கொடுப்பார் தாத்தா.  

நன்கு இருட்டி விட்டிருந்தது." நல்லா இருக்கியளா?" என்றவாறு  வீட்டிற்குள் நுழைந்த "பணியாரம்" பாட்டியிடம், " சாந்திரமா வர்றேன்னுட்டு இப்ப வர்ற ?" என்றாள் பாலாவின் பாட்டி. "ஆமா " என்றவளின் கண்கள் பாலாவின் தந்தையைத் தேடியது." பெரிய தம்பி இன்னும் வரலையோ?" என்றவளின் குரலைக் கேட்டு, " என்னம்மா எப்பிடி இருக்கீங்க?" என்றவாறு வெளிப்பட்டான் பாலாவின் தந்தை கையில் சிறிய பொட்டலத்துடன். அவர் மருத்துவமனையில் அலுவலகப்  பணியில் இருந்தார். மலர்ந்த முகத்துடன் அதைக்  கையில் வாங்கியவள் " அவர்  மூட்டு வலியால நடக்க முடியாம கஷ்டப்பர்றார். மாத்திரை கேக்கலாம்னு வந்தேன் நீயே கொடுத்திட்டே" என்று சேலையில் முடிந்து கொண்டாள்.

"சரி அப்ப வாறேன்" என்றவள் அவர்களின் வீட்டிற்குப்  பின் புறம் இருக்கும் காம்பௌண்டில் வசிக்கும் அவளின் இரண்டாவது மகனைப் பார்க்கப் போனாள். மருமகள் அப்பொழுதுதான் அப்பள வேலைகளை ஒதுக்கி விட்டு சாதம் வடித்துக் கொண்டிருந்தாள். " அவன் இன்னும் வரலையா?" என்றவாறு வாசலில் அமர்ந்து கொண்டாள். தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள். முதல் மகனும் அதே கிராமத்தில் தான்  குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருந்தான். மகளைப்  பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மணமுடித்து கொடுத்திருந்தனர். மூன்றாவது மகனுக்கு  லாரியில் கிளீனராக ஊரெல்லாம் சுற்றும்  வேலை. எப்போதாவது தான் வீட்டிற்கு  வருவான்." ஏன் பாட்டி... பசங்களோட சேர்ந்து இருக்க வேண்டியதுதான? எதுக்கு கஷ்டப்பற? " என்பவர்களிடம் " யாரு தயவும் நமக்கு வேணாம் சாமி...கையும் காலும் நல்லா  இருக்குற மட்டும் உழச்சு சாப்பிட வேண்டியதுதான்" என்று கேட்பவர்களின் வாயை அடைத்து விடுவாள்.

தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்த மகனைப் பார்த்து " ஏன்டா இப்பிடி குடிச்சு குடிச்சு குடியக் கெடுக்குற? " என்று மூக்கைச் சிந்தியபடி திட்டினாள்."ஏய் நீ தான் கெளவிய கூப்டியா?" என்று  அவன்  மனைவியிடம் கையை ஓங்க, " அவள ஏண்டா அடிக்கிற" என சண்டை பெருசானது. பாலாவின் சித்தப்பாவும், பாட்டியும் சண்டையை விலக்கி பாட்டியை  வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அன்று எப்பொழுதும் போல பொழுது விடிந்தது. ஆனால் முடியும் பொழுது அனைவரின் தலையிலும் இடியை இறக்கி விட்டு மறைந்தது எனலாம்." என்ன பெத்த ராசா...இப்பிடி எங்கள எல்லாம் விட்டுட்டு போயிட்டியே" என்ற பாட்டியின் ஓலம்  தெருவெங்கும் ஒலித்தது. சுற்றமும் உறவுகளும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தன. தாத்தா துண்டால்  வாயை  மறைத்துக் கொண்டிருந்தார். தோள்கள் மட்டும் இடைவிடாது  குலுங்கிக்   கொண்டிருந்தது. பாலாவின் பாட்டியும் கவலை தோய்ந்த முகத்துடன் " க்ளீனரா இருந்த கடைசி பையன் சரவணன் ஆக்சிடெண்ட்-ல இறந்துட்டான்" என்று அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் கூறுவதை பாலாவும் கேட்டான்.

சில நாட்கள் அழுது புரண்டு காய்ச்சலில் அரற்றினாள் "பணியாரம்" பாட்டி. பின் " நம்ம வயத்து பொழப்ப நாம தானே பாக்கணும்" என்று கடை போட ஆரம்பித்தாள். அடுத்து வந்த சில வருடங்களிலே இரண்டாவது மகனையும் குடிக்குத்  தாரை வார்த்துக் கொடுத்தாள். மருமகளை மறுமணம் செய்து கொள்ளுமாறு தாய் வீடு அனுப்பிய பாட்டி  மனதாலும்,உடலாலும்  மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். சில சமயம் பாலா வீட்டு கிரைண்டரில் மாவு அரைத்து கொடுக்கச் சொல்வாள்.

வருடங்கள் உருண்டோடின. பாலாவின் பெற்றோர் நகரத்திற்குக்  குடி பெயர்ந்தனர். " உங்க பாட்டிய பாக்க வர்றப்போ இந்த பாட்டியையும் மறக்காம  வந்து பாருங்கடா" என்ற  அவளின் வெற்றிலைக்  கறை படிந்த சிரிப்பை இந்நாட்களில் ஏனோ பார்க்க முடிவதில்லை.  காலப் போக்கில் கடை போடுவதையும்  நிறுத்திக் கொண்டாள். ரைஸ் மில்லில் வாசல் பெருக்குவது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

கிராமத்து வீட்டில் பாலாவின் சித்தப்பா குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. அவ்வப்போது அங்கு வரும் பாட்டி," எல்லாரும் எப்பிடி இருக்காங்க? பாலா என்ன பண்றான்? அடி ஆத்தி அம்புட்டு பெருசா  வளந்துட்டானா?" என்று ஆச்சர்யப்படுவாள்." இதெல்லாம் பாக்கக்  குடுத்து வைக்கல இந்த மகராசிக்கு" என்று பாலாவின் பாட்டி படத்தைப் பார்த்து குரல் தழு தழுக்க  கண் கலங்குவாள். " பாக்க கூடாததெல்லாம் பாத்துகிட்டு நாந்தேன் இன்னும் உசுரோட கெடக்கேன்...பாழா போன சாவு வரமாடேங்குது" என்று பெரு மூச்செறிவாள்.

அடுத்து வந்த வருடங்களில் கிழவனும் போய்ச் சேர்ந்தான். தனி மரமானாள் பாட்டி. கல்லூரி விடுமுறையில் இருந்த பாலாவும் பாபுவும் பாட்டியைப் பார்க்க வந்தனர். ஆனால் வீடு பூட்டி இருந்தது." அவங்க பொண்ணு ஊருக்கு போயிருக்காங்க" என்று கூறிய  அக்கம் பக்கத்தினர் ." ஆமா நீங்க யாருப்பா? " என்ற கேள்விக்கு "தெரிஞ்சவங்க " என்று ஒற்றை வார்த்தையில் பதில்  கூறி நகர்ந்தனர். ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும் போதும் , "பணியாரம்" பாட்டி எப்பிடி இருக்காங்க?! என்று கேட்பான் பாலா. " இப்ப எல்லாம் அவங்க பையன் வீட்டோட  போயி தங்கிட்டாங்க போல    " என்று அம்மா கூற புளித்த வாசம் வீசும்  பணியாரத்தின் மணமும், பாட்டியின் சிரித்த முகமும் பாலாவின் மனதில் தோன்றி மறையும். அடுத்த தடவை வரும் போது எப்படியாவது பாட்டியை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.    

நாட்கள் பறந்தோடியது. அன்று  ரோட்டை மறித்து அந்தக்  குடிசையின் முன் ஒரே கூட்டம். "கொஞ்சம் ஓரமா வண்டி  போக வழி விட்டு நில்லுங்கப்பா" என்று கண்டக்டர் கூற, பஸ்ஸில் இருந்த ஒரு சிலரும் எட்டிப் பார்த்து, அதிர்ச்சியோடு இறங்கி கூட்டத்தோடு கலந்து நின்றனர். உள்ளே, கயிற்றுக் கட்டிலில் பாட்டியின் உடல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கு கூடி கலங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பாலா, பாபுவைப் போல " பணியாரம்" பாட்டி என்று அன்பாக அழைத்தவர்கள் தான்.

 "ஒழைச்சு ஒழைச்சு ஓடா தேஞ்சு ஒரேடியா போயிட்டா...சொத்தா சுகமா?! " என்று பாட்டியைச் சுற்றி அமர்ந்து புலம்பிக்  கொண்டிருந்த பலருக்கு, இதோ இங்குத்  தோள் கொடுக்கத் தயாராக நிற்கும்   தொப்புள் கொடி பந்தம் இல்லாத இந்த உறவுகள் தான் அவள் உழைப்பினால் சம்பாதித்த விலை மதிப்பில்லாத ஒரே சொத்து என்பது  ஏனோ  விளங்கவில்லை. உழைப்பையும், இழப்பையுமே  மாறி மாறி அனுபவித்த பாட்டியின் முகத்தில் அன்று முதன் முறையாக   அமைதியும் பெருமிதமும் நிரந்தரமாகக்  குடி கொண்டிருந்தது.
  

Tuesday, June 7, 2016

வெள்ளைப் பொய்கள்

புது வருடம் தொடங்கிவிட்டது. அனைவரிடத்தும் பரபரப்பும், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் தொற்றிக் கொண்டுவிட்டது. "இது ஜனவரி மாதம் இல்லையே?! புது வருடம் எப்படி?!", என்று உங்கள் புருவங்கள் உயர்வது  தெரிகிறது...நான் கூறுவது புதிதாகத் ஆரம்பித்த  கல்வி ஆண்டைத்தாங்க!!! நாம் கடந்து வந்த பாதையை "Rewind" செய்து பார்க்கும் பொழுது இந்த பள்ளிக்காலம் நம் மனக் கவலைகளை களைத்து, புத்துணர்வையும் நிரப்பிவிட்டுச் செல்லத் தவறுவதில்லை. புதுச்  சீருடை, நோட்டு, புத்தகங்களிலிருந்து வருமே ஒரு வாசனை...ஆஹா!!! ஆரம்பப் பள்ளி, இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என்று எங்கும் மாணவர்கள் வெள்ளம் கரை புரண்டு, பல வண்ணக்  கனவுகளைத் தாங்கி ஓடுகிறது ஆனால் முதல் முதலாக  பள்ளியில் காலடி எடுத்து வைக்கும்  பிஞ்சுக் குழந்தைகளின் பவுடர் படிந்த முகங்களையும், கலங்கிய கண்களையும் (அம்மாவின் கண்களும்தான்) காணும் பொழுது ஏற்படும் பரவச நிலைக்கு ஈடு இணையே இல்லை என்று தான் தோன்றுகிறது.  

நம் வாழ்க்கைக்குத் தேவையான... முக்கியமாக சமூதாயத்தில் நம்மை இணைத்துக் கொள்ள அத்தியாவசியமான  அனைத்து வித  நுணுக்கங்களையும் நமக்கு அறிமுகம் செய்யும் இடம் "பள்ளிக்கூடம்". அங்கேயே  நமது சமூக வாழ்கை ( Social Life) ஆரம்பமாகி விடுகிறது  என்று தான்  சொல்ல வேண்டும். பல வித நல்லொழுக்கங்களையும்  நமக்கு கற்றுத் தர பள்ளிகள்  படாத பாடு பட்டாலும், மிகச் சுலபமாக, சொல்லிக் கொடுக்காமலேயே  நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் ஒரு விஷயம் " பொய் கூறுவது". கூட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்ள, தண்டனைகளில் இருந்து தப்பிக்க இதை விட  எளிய வழி இருக்கிறதா என்ன?!

ஆரம்பப் பள்ளியில் இருக்கும் பொழுது மதிய உணவை பாட்டி வீட்டில் சாப்பிடுவது வழக்கம். U .K .G -ல் இருந்த எனது தங்கைக்கு " Selective Amnesia " போல செலக்டிவ் வயிற்று வலி, தலை வலி சாப்பிட்டு முடிந்ததும் தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நீடிக்கும். மூன்று மணி ஆனதும் சரியாகி விளையாட ஆரம்பித்து விடுவாள். ஏன் அப்படி?! உங்களுக்கே தெரிந்திருக்கும்... ஸ்கூலுக்கு மட்டம் போடுவதற்குத்தான் என்று. டீச்சர் நேத்து எங்க வீட்ல கரண்டு இல்லை, ஹோம்வொர்க் நோட்ட கிளாஸ்ல வச்சிட்டு போயிட்டேன் என்று வீட்டுபாடம் எழுதாமல் போனதற்கு எத்தனை பொய்கள் கூறியிருப்போம். பள்ளியில் தொலைத்து விட்டு வந்த பென்சில் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ்ற்குத்  தான் எத்தனைப்  பித்தலாட்டம் வீட்டில்!!!

 பள்ளி இறுதி நாள். எதுவும் நடக்காது ஆனால் லீவு போட்டீர்கள்...அவ்வளவுதான் நீங்கள் Fail என்று எச்சரிக்கப்படுவீர்கள் இருந்தும்   அந்த கடைசி நாள் லீவு போட்டு விட்டு என்ன பொய் சொல்லி சமாளிப்பது என்று விடுமுறை முழுதும் யோசித்து தூக்கம் தொலைத்த நாட்கள் உண்டு. நான் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது  அந்தக்  கடைசி நாளில்  என் தங்கையின் புது டிரஸ், நகப்பூச்சு, லிப் ஸ்டிக் என்று அலட்ட ஆசை. என்ன செய்வது?! எனக்கு பிறந்தநாள் என்று பள்ளியிலும், டான்ஸ் ஆடப்போகிறேன் என்று வீட்டிலும் பொய் கூறி என் மாஸ்டர் பிளான்-ஐ நிறைவேற்றி விட்டேன் ஆனால்   அந்த கால கட்டங்களில் என் நிழலை விட என்னை நெருக்கமாக பின்தொடர்வது என் அருமைத் தங்கை. என் மனசாட்சியின் மறு வடிவமான அவளுக்கு சந்தேகம் வலுத்து விட்டது. ஸ்கூல்ல டான்ஸ் ப்ரோக்ராம் இல்லையே?!, என்ன பாட்டுக்கு ஆட்றீங்க?!, ஸ்டெப்ஸ் போடு  என்றெல்லாம் கூறி  குட்டையைக் குழப்பினாள். எங்க கிளாஸ்லயே ஆடுறோம்...ஸ்டேஜ்ல இல்ல என்றும், சில பல இலஞ்சங்களாலும்  அவளை சரிகட்டி விட்டேன். அடுத்து வந்த நாட்களில்  நான் கூறியது பொய் என்று பல முறை என் அம்மாவிடம் அவள்  போட்டுக் கொடுத்தாலும் பெரிதாக எனக்கு எந்த சேதாரமும் இல்லை என்பதுதான் உண்மை.

நாங்கள் வசித்த வீடு எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து நிமிட நடைப் பயணத் தொலைவில்  இருந்தது. அன்று அரையாண்டுத் தேர்வு. நானும் என் தங்கையும் பள்ளிக்கு ஒன்றாகச்  செல்வது வழக்கம். பள்ளியை அடைந்ததும் தான் தெரிந்தது தேர்வு தொடங்கி விட்டது என்று. என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரே ஓட்டமாக தேர்வறையை நோக்கி ஓடிவிட வேண்டியதுதான் என்று நினைக்கையில் எங்கள் கெட்ட நேரம் தலைமை ஆசிரியை ரவுண்ட்ஸ் வந்து விட்டார். 'என்ன இவ்வளவு லேட்டு?!, வீடு எங்க இருக்கு?", என்றதும் சிறிதும் தாமதிக்காமல் அடுத்த கணமே என்னிடமிருந்து வந்த பதிலைக் கண்டு நானே வியந்து போனேன். எங்கள் பள்ளியிலிருந்து 30 நிமிட தொலைவில் உள்ள ஏரியாவின் பெயரைக் கேட்டதும், "போங்க...இனிமே லேட்டா வரக்கூடாது", என்று முதுகில் ஒரு அப்பு அப்பி அனுப்பி வைத்தார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடினோம். தேர்வு நேரத்தை தவறாகப்  பார்த்ததால் வந்த வினை.


சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல் வெறுமனே பிறரின் கவனத்தை தங்கள் வசம் ஈர்க்க வேண்டுமென்று குழந்தைகள் கூறும் கப்ஸா மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். என் தம்பி இரண்டாவது படித்துக் கொண்டிருந்த பொழுது அவனுடைய நண்பன் வீட்டில் புலியை "Pet" ஆக வைத்திருப்பதாகக் கூறியதும் எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அது பொய் என்று அவனிடம் விளக்காமல், " சாப்பிட என்ன தருவாங்களாம்?!, எங்க தூங்குமாம்?! என்று அவனைத்  தூண்டிவிட, அவன் நண்பனும் சலிக்காமல் பதில் கூறினான். புலியை தினமும் வாக்கிங் கூட்டிச் செல்வதாகவும், பள்ளிக்கு வரும் நேரங்களில் கூண்டில் அடைத்துவிட்டு வருவதாகவும்  கூறி வெறுப்பேற்றினான். 

அவன் வீட்டிற்குச்  செல்ல அனைவரிடமும் போட்டா போட்டி. கடைசியாக என் தம்பியும் ஒரு நாள்  அவன் வீட்டிற்கு விஜயம் செய்து திரும்ப, அவனிடம்  "என்னடா?! புலி எப்பிடி?!", என்று நாங்கள் கேட்க," அவங்க வீட்டு நாய் பேரு டைகராம்", நீங்க நெஜ புலின்னா நெனைச்சீங்க?!-ன்னு கேக்குறான் என்று கூற " நல்ல வேலை புலின்னு பூனைய காமிக்கலையே என்று கிண்டலடித்தோம். சில நாட்கள் கழித்து அவன் வீட்டில் மயில் வளர்ப்பதாகவும், பார்க்க கோழிக் குஞ்சு போல இருந்தாலும் பெரிதானதும் தோகை வளர்ந்துவிடும் என்றும்  அவன் கூறுகிறான் என்று தம்பி கூறியதும், " உன் பிரண்ட் ரொம்ப நல்லா வருவாண்டா" என்று மனதில் நினைத்துக் கொண்டு  "ஒரு நடை போய் பாத்துட்டு வாயேன்" என்றோம்  சிரிக்காமல்.    

நான்காவது படித்துக் கொண்டிருந்த என் தம்பியின் வகுப்பாசிரியையை திடீரென மாற்றி விட்டார்கள். புதிதாக வந்தவருக்கு  என் தம்பியிடம் என்ன கோபமோ பாடங்களை மிகவும் சத்தமாகக் கூறவேண்டும் என்றும் மொத்த வகுப்புமே சேர்ந்து கடம் போட வேண்டும் என்றும் கடிந்து  கூறி இருக்கிறார். காது வலிக்கிறது என்று கூறியும் கேட்கவில்லை.  தனக்கு வந்த பிரச்சனையை தானாகவே களைய முடிவெடுத்தான். அப்பொழுது எங்கள் வீடு அவுட்டர்-ல் இருந்ததால் ரிக்க்ஷாவில் பள்ளி செல்வது வழக்கம். பள்ளி திறப்பதற்கு முன்பாகவே அவன் சென்று விடுவதால்  வாசலில் காத்திருப்பான். அன்று ரிக்க்ஷா கண்ணை விட்டு மறைந்ததும் அருகில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்று வயிற்றைக் கலக்குவதாகவும் பள்ளிக்கு செல்ல முடியாது என்றும்  கூறி விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறான். மாலையில் பள்ளி வாசலில் நின்று, ரிக்க்ஷா ஏறி எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு வந்து விட்டான்.

 டீச்சர் வராததால் வீட்டுப்பாடம் இல்லை என்று கூறிவிட்டான். தொலைபேசி வசதி இல்லாததால் சித்தி வீட்டிலிருந்து  தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மறுநாளும் இதே முறையை கடைபிடித்து மாட்டிக் கொண்டான் வீட்டில். அடி திட்டு எல்லாம் அவனுக்கு கிடைக்கவில்லை. உடனே டீச்சர்-ஐ தலைமை ஆசிரியையிடம் புகார் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. "நீ பாட்டுக்கு இப்பிடி போயிருக்கியே?! யாராவது கடத்திட்டு போனா எங்க போய் தேட்றது?!" என்றும், " ரெண்டு நாள் சத்தமா சொன்னா உனக்கே பழகிரும்...மண்டையிலே நல்லா ஏறும்...இதுக்கெல்லாமா பயந்து ஓட்றது" போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

அன்று குழந்தைகளாக இருந்த அனைவரும் இன்று பெரியவர்களாக மாறிவிட்டோம் ஆனால் பொய் சொல்வதை நிறுத்தினோமா?! இல்லை. மாறாக,  ஏன் பொய் சொல்கிறோம்?! அதனால் எத்தனை பேருக்கு நன்மை என்று நீட்டி முழக்கி... நாம் செய்வது சரி என்றும், இவை " வெள்ளைப் பொய்கள்" என்றும் வாதிடுகிறோம். நமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறோம். ஆனால்  யாரையும் பாதிக்காத, மாட்டிக் கொண்டால் தன் தவற்றை ஒப்புக்கொள்ளும் குழந்தைகளின் பொய்கள் அல்லவா உண்மையிலேயே " வெள்ளைப் பொய்கள்"!!!

கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழலும்  இன்றைய சூழலில், குழந்தைகளும் கம்பளிப் புழுக்களாக இருப்பதை விட  பட்டாம் பூச்சிகளாக மாறி பறந்து விடத் துடிக்கிறார்கள். இழந்த சுகத்தை எதிர்காலத்தில் தேடித் தொலைகிறார்கள்.  நாமும் "Grow Up " என்று அடிக்கடி கூறி அவர்களின் குழந்தைத்தனங்களை குழி தோண்டி புதைத்து விடுகிறோம். மாறாக, அவர்களின் சிறு சிறு குறும்புகளை ரசித்தும், கண்டிக்க வேண்டி இடத்தில் கண்டித்தும், மன்னிக்க வேண்டிய இடத்தில மன்னித்தும் மகிழலாமே!!!. வெள்ளைப் பூக்களோடு மழலைகளின் வெள்ளைப் பொய்களும் மலர்ந்தால் மானிடரிடத்தில் மன அமைதியும், மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும் என்பதில் சந்தேகமா என்ன?!    

     
        

Monday, May 2, 2016

நாடோடி

நத்தையைப் போல் நகர்ந்து கொண்டிருந்த விமானம், அடுத்த சில கணங்களிலேயே  அதன் அசுர வேகத்தை எட்டிப் பிடித்தது. தரையுடனான தனது  தொடர்பைத்  தற்காலிகமாகத் துண்டித்துக் கொண்டு- மேகத்துடன்   உறவைப்  புதுப்பித்துக் கொள்ளத் துவங்கியது . "ம்ம்ம்" என்ற பெருமூச்சோடு ஆசுவாசமடைந்த அருள் சீட் பெல்டின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். ஊர் போய் சேர்வதற்கு இன்னும் ஒரு விமானப் பயணமும், பல மணி நேர கார் பயணமும் கையிருப்பு இருப்பினும் - இந்த முதல் விமானம் பறக்க ஆரம்பித்ததும் பாதி கிணற்றைத் தாண்டிய திருப்தி அருளின் முகத்தில் பரவியது.

இருக்கையைப்  பின்புறமாக நகர்த்தி, கால்களை முடிந்தவரை முன்புறமாக நீட்டிக் கொண்டான். அசதியில் வாயைப் பிளந்தவாறு  தூங்கும் தன்  இரண்டு குழந்தைகளின் கேசத்தை மெதுவாக வருடியவன், கண்களை இருக்க மூடி, உறங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் மனைவி நந்தினியின் மீது  தனது நேசப்  பார்வையைப் படர விட்டான். சக பயணிகள்  அங்கும் இங்குமாக எழுந்து நடமாடத்  தொடங்கினர். பாத்ரூம் போகலாமா?! என்று யோசித்தவன் அங்கு  இரண்டு மூன்று பேர் காத்து நின்றதைக் கண்டு, அந்த எண்ணத்தைக் கை விட்டான் . "வீட்டைப் பூட்டினோமா?!" என்ற வழக்கமான சந்தேகம் அவனுள்  தோன்றி மறைந்தது. தூக்கம் வர மறுத்தது எனவே முன்னிருக்கும் திரையை ஒளிரவிட்டு அதிலிருக்கும் திரைப்படங்களைத்  துலாவத் தொடங்கினான். கண்கள்தான் காட்சிகளைக் கண்டதே அன்றி, அவன் மனம் வேறு சிந்தனையில் லயித்திருந்தது.

நான்கு மாதங்களுக்கு  முன்பு  ஒரு நாள், " தம்பிங்களோட கல்யாண தேதிய குறிச்சுட்டாங்களாம்...ஆவணியில தான் நாள் நல்லா இருக்காம்" என்று நந்தினி கூறிய நாளிலிருந்து பயணத்துக்குரிய ஏற்பாடுகளைச்  செய்யத் துவங்கி விட்டான் அருள். ஒரு மாசத்துக்கு முன்னாடி வெச்சிருந்தா விசா-வுக்கு போகாம இருந்திருக்கலாம், குழந்தைக்களுக்கு லீவு இருந்திருக்கும் என்று தனது புலம்பல்களை நடு நடுவே கூறினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான். " நீ வேணா முன்னாடி போய் கல்யாண வேலைகளை கவனிக்கிறியா?" என்ற கேள்விக்கு " ஆமா...இந்த பிள்ளைங்களை வச்சிக்கிட்டு....எங்கள  கவனிக்கவே ரெண்டு பேர் வேணும்", என்று நந்தினியிடம் இருந்து விடை வரவே...அனைவரும் ஒன்றாக, திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுதே செல்ல முடிவானது (முடிந்ததது ) .

சில பல சலசலப்புக்களால் திடுக்கிட்டு விழித்தவன்...தன்னை அறியாமலே உறங்கிப் போனதை உணர்ந்தான். இரவு உணவை சிரித்த முகத்துடன் விமான சிப்பந்தி வழங்கிக் கொண்டிருந்தார். " Air Hostess"- ன்னா ஆயா வேலை பாக்குறவங்களா?!", என்று வடிவேலு ஒரு படத்தில் கூறுவது நேரம் காலம் தெரியாமல் நினைவுக்கு வர, மனதிலேயே  சிரித்துக் கொண்டான். " ஏய்...நந்தினி எந்திரி...டின்னர் வந்திருச்சு", என்று மனைவியை தட்டி எழுப்பினான். விழிக்க முடியாமல் முழித்தவள்," நல்லா கனவு...ஏர்போர்ட்​ல எல்லாரும் நம்மளயே   ஆச்சர்யமா பாத்திட்டு இருந்தாங்க" என்று கூறி முடிந்தவரை சாப்பிட்டு, குழந்தைகளுக்காக சிலவற்றை பத்திரப் படுத்திக்கொண்டாள்.

சொந்த ஊருக்கு சென்று அம்மாவைப் பார்ப்பது, உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் அளவலாவது போன்ற நினைவுகள் களிப்பைக் கொடுப்பினும்,  சமீப காலமாக குழந்தைகளை வைத்துக் கொண்டு செல்லும் நீண்ட நேர விமானப் பயணம் மற்றும் ஊரில் இருக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை நினைத்து மனம் அமைதி கொள்ள மறுத்தது. பிளைட் கரைக்டா போயிரனும், விசா- வுல எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது, கல்யாண நேரத்தில குழந்தைகளுக்கு உடம்புக்கு ஏதும் வந்திரக்கூடாது என்ற எண்ணங்களே அருளின் மனதில் மேலோங்கி  இருந்தன.

ஒரு வழியாகப்  பல மணி நேர விமான பயணம் முடிவுக்கு வர ..பெட்டிகளை இழுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்து நின்றார்கள். நந்தினியின் தம்பிதான் பிக் - அப்பிற்கு காரோடு வருவதாக ஏற்பாடு. ஐந்து நிமிடம் கடந்திருக்கும்...டாக்ஸி வேணுமா?! என்ற கேள்விக்கு பதிலளித்து சலித்துப் போனார்கள். "எங்க அவனக்  காணோம்?!" என்று ஆரம்பித்த  அருளிடம், " போன் செஞ்சு பாக்கலாம்" என்றாள்  நந்தினி. அருகிலிருக்கும் கடைக்குச் சென்று..."ஒரு போன் பண்ணனும்" என்று கேட்டனர். "காயின் போன் எல்லாம் இல்ல சார்...செல் போன் இல்லையா?! என்று கடைக்காரன் கேட்ட அடுத்த நொடியே அங்கிருந்தவர்கள், வேற்று கிரக வாசிகளைப் பார்ப்பது  போல அவர்களை உற்று  நோக்கினர். உன் கனவு பலிச்சிருச்சு போல என்று காதருகே கிசுகிசுத்த அருளை கோபத்தில் முறைத்தாள் நந்தினி. " இந்தாங்க சார்...கால் பண்ணிக்கோங்க என்று அருகிலிருந்த ஒருவர் கைப்பேசியை கொடுக்க...தேங்க்ஸ் என்று கூறி விட்டு  தம்பியிடம் பேசி நிலவரத்தை விளக்கினார்கள்.

மறு நாள் விசா நேர்காணலில்  போட்டோ சரியில்லை என்று அலைய விட்டார்கள். ஷாப்பிங் சென்ற இடத்தில் பாத்ரூம் போகணும், பசிக்குது, தூக்கம் வருது என்று குழந்தைகள் படுத்த பல வித வாக்கு வாதங்களுக்கும், சண்டைகளுக்கும், சமாதானகளுக்கும் இடையே  சில மணி நேர கார் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரை அடைந்தார்கள். அவர்களின் ராட்சஸ பெட்டிகள் ஒரு அறை முழுவதையும் விழுங்கி விட...அடுத்த அறையில் அனைவரும் சுருண்டு படுத்துக் கொண்டனர்.

அடுத்து வந்த நாட்களில் நந்தினி திருமண வேலைகளில் மும்முரமாயிருந்தாள். அருள் குழந்தைகளை அவன் அம்மாவின் துணையோடு கவனித்துக் கொண்டான். தேவையானவற்றை ஒவ்வொன்றாக  பெட்டிகளில்(Luggage ) தேடி எடுப்பது பெரும் தலை வலியாக இருந்தது அருளுக்கு. இதைத்தான், "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்றார்களோ?! என்று நினைத்துக் கொண்டான். முதல் இரு முறை நந்தினிக்கு போன் செய்து," எந்த பெட்டியில என் பேன்ட் இருக்கு?!, கோட் எங்க இருக்கு?! என்று துளைத்தெடுத்தான். பின்பு அவளே பொறுமை இழந்தவளாய்," எல்லா பெட்டியையும் திறந்து வச்சு தேடுங்க" என்று கூறி விட்டாள்.

திருமணத்திற்கு முதல் நாள், " தல சுத்துது...பட படன்னு வருது என்று ஆரம்பித்த அருளை, " ஏன்?! நல்லா தானே போயிட்டு இருந்துச்சு" என்ற முக பாவனையோடு  பார்த்தாள் நந்தினி. பின் சகலையின் துணையோடு டாக்டரிடம் ஓடினான். கவலைப் படுவதற்கு ஏதுமில்லை என்று அறிந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர் இவ்வாறாக முதல் தம்பியின் திருமணம் நடந்து முடிந்தது. அடுத்த தம்பியின் திருமணத்திற்கு பதினைந்து நாட்கள்  இடைவெளி இருந்தததால் - இடைப்பட்ட தினங்களில் அருளின் அம்மாவோடு கோயில்களுக்கு செல்வது, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம்  செய்வது, அவர்களின் வழக்கமான கேள்விகளுக்கு, சிரித்துக் கொண்டே பதில் கூறுவது  (மழுப்புவது)   என்று பொழுது மகிழ்ச்சிகரமாகத்  துள்ளி ஓடிக் கரைந்தது.

ஓரிரு தினங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாம் என்று நினைக்கும் பொழுது கரண்ட் கட் (Total Off ) ஆனது. நினைத்ததைப் போலவே  குழந்தைகளுக்கும் மாறி மாறி உடம்பிற்கு வந்து போனது. "இன்னைக்கு தண்ணி வராதாம், குப்பை அள்றவங்க Strike",  என்று அக்கம் பக்கத்தார் பீதி கிளப்ப - அருளை நினைத்து அவனின் அம்மாவிற்கு டென்ஷன் பெருகியது. வாலு போய் கத்தி வந்த கதையாக பிரச்சனைகள் முளைத்த வண்ணம் இருந்தன. அம்மா இல்லாத போது சில பல வால்வுகளைத்  திருப்பி தண்ணீரை தொட்டியில் ஏற்றுவது ராக்கெட் சயின்ஸ்- யை விட கடினமாகப் பட்டது அருளுக்கு. ஒரு சில ஆவணங்களை வாங்க அருளும் அம்மாவும் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்து தேய்ந்தனர். அவர்களும் அருளின் வசவிற்குத்  தப்பவில்லை. " உங்க அவசரத்துக்கு எல்லாம் நடக்கணும்னா...முடியுமா?! உங்கள மாதிரி ஆளுங்களால  தான் இலஞ்சம் வாங்கனும்னு நெனைக்கிறாங்க " என்று நந்தினி வேறு அவள் இஷ்டத்திற்கு lecture கொடுத்து எரியும் கொள்ளியில் நெய்யை  வார்த்தாள்.

வசதிக் குறைவுகள், அசதி, நினைத்த காரியங்களை நேரத்திற்கு முடிக்க இயலாமை, "வெளிநாட்டுல இருக்கீங்க இப்பிடி காசுக்கு கணக்கு பாக்குறீங்களே?!", போன்ற கேலிப்பேச்சுக்கள், முக்கியமாக தனித்து செயல்பட முடியாமல் -  அனைத்திற்கும் மற்றவரின் உதவியை எதிர்பார்த்து நிற்பது போன்றவையே தன் கோபத்திற்கு காரணம் என்பதை  அறியாமல் இல்லை அருள். தனது ஆற்றாமையே  மற்றவர்களின் மேல் -   முக்கியமாக தனது தாயிடம் கோபமாக வெளிப்படுவதை உணர்ந்த அவன்  அதை தடுக்க முயன்று, தோற்றான். அடுத்த மைத்துனனின் திருமணம் முடிந்த கையோடு ஊருக்கு திரும்பும் காலமும் வந்து சேர்ந்தது. மூட்டை முடிச்சுகளோடு கிளம்ப ஆயத்தமானார்கள்.

இத்தனை களேபரங்களுக்கு இடையேயும் மகிழ்ச்சியாக இருந்த அந்த தாயின் மனம், வரப் போகும் பேரமைதியை நினைத்து நிம்மதியின்றி தவித்தது. " இங்க வந்தா நான் உன்ன திட்டிகிட்டே தான் இருப்பேன்...பேசாம இந்த சம்மர்ல ஊருக்கு வந்திடு" என்று மடியில் தலை சாய்த்து கூறும் மகனின் தலைமுடியை பாசத்தோடு வருடிக் கொண்டிருந்தாள். மறுநாள்  காரின் பின்னால் கையை அசைத்தபடி, கலங்கிய கண்களுடன் தனி மரமாக  விடை கொடுத்துக் கொண்டிருக்கும் தாயைப் பார்க்கப் பார்க்க அருளின் கண்களும் குளமானது . திரும்பிப் போகத்தான் வேண்டுமா?!, என்று அவனின் நாடோடி மனம் இரு தலைக் கொள்ளி எறும்பாக,  நிலை கொள்ளாமல் தவித்தது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக...சே என்ன இந்த வாழ்கை?!, என்று தன்னையே நொந்து கொண்டான்.

அந்நிய தேசத்தில்  முழுமையாக வேரூன்ற முடியாமலும், அன்னையின் தேசத்தில் இருக்கும்  மூல வேர்களிருந்து தன்னை முழுவதுமாக  விடுவித்து கொள்ள விருப்பம் இல்லாதவனுமாக, தடுமாறிக் கொண்டிருக்கும்   கணவனின் உள்ளக் கிடக்கையை நன்கு அறிந்தவளான நந்தினி அவனைத்  தேற்றும் விதமாக அவனின் தோளில் தனது கையை  அழுந்தப் பதித்தாள். காரின் வேகம் பன் மடங்கு அதிகரித்து விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது. 


Thursday, April 7, 2016

என்ன சமையலோ?!?!

கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுட்டெரிக்கும் சூரியனை நினைத்தாலே உடலெங்கும் உஷ்ணம் தகிப்பது போல் இருந்தாலும், கோடை விடுமுறையை எண்ணி மனம் குளிரத்தான் செய்கிறது. விடுமுறை என்பது பெரும்பாலான பள்ளிகளையும் ஒரு சில கல்லூரிகளை மட்டுமே மையப்படுத்தி இருந்தாலும் அனைவருமே அதன் சுழற்சியில் உள்ளிழுக்கப் படுகிறார்கள். இந்த சம்மருக்கு என்ன பிளான்?! என்று கேட்பதெல்லாம் இப்பொழுது  சகஜமாகிவிட்டது. "இந்த லீவுல  நல்லா தூங்கனும்" என்பது கூட  சிலரின் இலட்சியக் கனவாக இருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன் இவை எதுவுமே சாத்தியமாகவில்லை. உயர் நிலைப் பள்ளியில் இருந்ததால் உறவினர்கள் வீட்டில் தங்குவது, Cousin-களோடு அரட்டை இதிலிருந்தெல்லாம் " Out Grow" ஆகி விட்டிருந்தோம். எங்களைச் சுற்றிய உலகம் எப்பொழுதும் போல, சொல்லப்போனால் " Slow Motion"-ல் சுழல்வது போலவே தோன்றியது. அப்பா அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால் அம்மா அவள் வேலைகளை எப்பொழுதும் போல் முடித்து விடுவாள். ஒரு பெரிய விசாலமான அறையே எங்களின் வீடு. அதுவே சமையலறை, வரவேற்பறை, படுக்கை அறை எனவே இழுத்துப் போர்த்திக் கொண்டு பத்து மணிவரை தூங்குவதோ, நள்ளிரவுவரை முழித்து டிவி பார்ப்பதோ (கேபிள் இணைப்பு இல்லை என்பது வேறு விஷயம்) எல்லாம் நடக்காத காரியம். அதற்காக விடுமுறையை வெறுத்தோம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை.

இன்றைய காலகட்டத்தில் எட்டாக் கனியாகி விட்ட கூட்டுக் குடும்ப வாழ்கையை எங்களுக்குச்  சாத்தியம் ஆனது. எங்களது இரண்டு சித்தாப்பாக்களுக்கும் ஒன்று இரண்டு வயதில் குழந்தைகள் இருந்ததால் அவர்களைத் தூக்கிக்கொண்டு வலம் வருவது எங்களின் பிரதான பொழுதுபோக்காக இருந்தது. ஒரு சில சமயம் அதுவும் சுவாரசியம் அற்றதாகக்  தோன்றினால்  நானும் என்  தங்கையும் தம்பிகளோடு சேர்ந்து சமையல் சாம்ராஜ்ஜியத்தில் இறங்கி விடுவோம். 

ஒரு நாள் பால்  கொழுக்கட்டை செய்யலாம் என்று தம்பி யோசனை சொல்ல உரலில் இட்டு ஆட்டும் வேலையைத் தொடங்கினோம். ஒவ்வொருவரும் நூறுமுறை, இருநூறு முறை என்று செக்கிழுப்பது போல ஆட்டிக் கொண்டிருப்போம். என் முதல் தம்பி கணக்கில் கெட்டி. இருநூறுக்கு மேல் ஒருமுறை கூட ஆட்ட மாட்டான். அதற்கு பின் பல வடிவங்களில் உருட்டுவது என வேலை தொடர்ந்து கொண்டே போகும். சமைப்பது அம்மாவின் வேலை. பாத்திரங்களைக் கழுவுவது நானும் என் தங்கையும். அன்று நேரம் போவதே தெரியாது. களைப்பும், களிப்பும் ஒரு  சேர அது ஒரு ஆனந்த அனுபவமாகவே இருந்தது.  

எங்கள் வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்வதில் அனைவருக்கும் பங்கு உண்டு. " காஸ் கிட்ட போகாத...சுட்டுக்காதே" என்றெல்லாம் பதறும் ரகம் இல்லை எங்கள் அம்மா. முதல் முதலில் நான்காம் வகுப்பில் இருக்கும் பொழுது என் சித்தப்பாவிற்காக தோசை சுட ஆரம்பித்தேன். ஓட்டல் தோசை என்று மிக மெலிதாக முறு முறுவென்று இருக்கும். கருகி விட்டாலோ, பிய்ந்து விட்டாலோ என் அண்ணனுக்கும் தங்கைக்கும் கொடுத்துவிடுவேன். சித்தப்பாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமல்லவா?! பின்பு சில சமயம் டீ போடுவதுண்டு.

ஒரு முறை ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது நானும், நான்கைந்து கசின்களும் சேர்ந்து எங்கள் பெரியம்மா வீட்டு மொட்டை மாடியில் சர்க்கரைப் பொங்கல் செய்ய முயற்சித்தோம். சேர்த்து வைத்த காசில் சர்க்கரை, தீப்பெட்டி வாங்கினோம். அரிசியை சமையலறையிலிருந்து திருடி விட்டோம். பெரியப்பா பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார் அங்கிருந்து பேப்பர், அடுப்பிற்கு மூன்று கல்  என்று எல்லாம் ரெடியாகிவிட்டது ஆனால் கடைசியில் பெரியம்மா," ஏன் எல்லாரும் மேலையும் கீழையுமா சுத்துரீங்க?!" என்று கண்டுபிடித்து காய்ச்சிவிட்டார். மூலைக்கொருவராக தெறித்து ஓடினோம். 

பின்பு வந்த காலங்களில் சட்னி செய்வது, உப்புமா கிண்டுவது என்று ஒரு சில பொறுப்புக்களை அம்மா வெளியே செல்லும் நேரங்களில் எங்களிடம் ஒப்படைப்பதுண்டு. உப்பே இல்லாமல் உப்புமா செய்த பெருமை என்னையே சாரும். கல்லூரி நாட்களில் கொழுக்கட்டை செய்வது, வடை சுடுவது எல்லாம் நின்று போனது. தொலைக்காட்சியில் வரும் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து புதுப் புது "டிஷ்"-களை சமைத்துப் பார்ப்பது பழக்கமானது. 

ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாத சமயம் "வேர்கடலை பர்பி" செய்யத் திட்டம். " நல்லா இருக்குமா?!" என்று கேட்ட தம்பியிடம் " சூப்பரா இருக்கும்டா" என்று வேண்டிய பொருட்களை வாங்க கடைக்குத் துரத்தினோம். நானும் தங்கையும் சேர்ந்து ஒரு வழியாக சமைத்து முடித்து விட்டோம். நெய் தடவிய தட்டில் பரப்பி விட்டு, அரை மணி நேரத்தில் பர்பி ரெடி என்று விளம்பர பாணியில் கூறி ஆவலோடு காத்திருந்தோம். பக்கத்து போர்ஷனில் இருந்த அத்தை எட்டிப்பார்த்து," பாக்க நல்லா இருக்கே?! எவ்வளவு நெய் விட்டீங்க?" என்றதும் தான் தெரிந்தது அதை மறந்து விட்டோம் என்று. அவரிடம்," இது ரொம்ப ஹெல்தி ஆன "டிஷ் " நெய்யே தேவையில்லை. வேர்கடலையில் இருக்கும் எண்ணையே போதும், Non - Stick -ல் சமைத்துவிடலாம் என்றும்  சமாளித்தோம். 

அரைமணி ஒருமணி நேரமானது, இரண்டு மணி நேரமானது ஆனால் பர்பி மட்டும் வரவே இல்லை. தம்பியும் பொறுமை இழந்து இதுக்கு " வேர்கடலை அல்வா"-ன்னு பேரை மாத்திக்காலம் என்று கூறிவிட்டு சாப்பிடத் தொடங்கிவிட்டான். இன்று வரை பர்பி என்று சொன்னாலே, " உனக்கு அல்வா தானே வரும்" என்று கேலி செய்வான்.   

ஒரு நாள் அம்மாவும், அப்பாவும் வெளியூருக்கு சென்றிருந்தனர். என்ன சமைக்கவேண்டும், எவ்வளவு சமைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அம்மா. அன்று என் தம்பியின் பிறந்த நாள் ஆதலால் பிளான் மாறியது. அவனுக்கு பிடித்த வெஜிடபிள் பிரியாணியும், ரவா கேசரியும் சமைக்குமாறு அவனே கேட்டதால் ஒத்துக்கொண்டோம். அவனின் உதவியோடு மார்கெட்டுக்கும் கடைக்குமாக அலைந்து, ஒரு சில மணி நேரங்கள் செலவிட்டு சமைத்தால்,"நல்லா இருக்கு ஆனா அம்மா பண்ற மாதிரி இல்லை " என்று கூற, எங்களுக்கோ   கோபம் தலைக்கு ஏறி விட்டது.   எங்கள் சமையல் சாகசத்தின் உந்து சக்தியும், கடும் விமர்சகரும் அவன்தான். சமீபத்தில் திருமணமான அவனிடம், " உன்னோட Famous Dialogue -யைச்  சொல்லி wife கிட்ட அடிவாங்காதடா?! என்று கலாய்த்தோம்.  

இன்றைய சூழலில் கூட்டுக் குடும்பம் சாத்தியமில்லாமல் போய்விட்டது. தனிக் குடும்பங்களில் வாழும் குழந்தைகளும்  தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்றவர்களாக, கடிவாளம் பூட்டிய குதிரையைப் போல் ஒரே வீட்டில் தனித் தனி  தீவுகளாக  வாழ்கின்றனர். வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருப்பதால் பெற்றோர்கள் குழந்தைகளை வேலை வாங்குவதே இல்லை மாறாக அவர்கள் வேலைகளையும் உதவி என்ற பெயரில் இவர்களே செய்து கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் அவசர காலங்களில் கூட உதவ முடியாத, உதவ விரும்பாத அவர்களைக் கண்டு மனம் வருந்துகின்றனர்.  

பொறுமை, திட்டமிடல், பொறுப்புணர்வு, சவால்களை சமாளித்தல்,கூட்டு முயற்சி  என்று பல வித வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்கும் அரிய, எளிய கலை " சமையல் கலை ". வீட்டில் அறிவியலைக் கற்றுக் கொடுக்கும் இடம் சமையல் கூடம். குழந்தைகளை சிறு வயதிலிருந்தே சிறு சிறு வீட்டு வேலைகளில் (சப்பாத்தி உருட்டுதல், கீரை சுத்தப்படுத்துதல்,பட்டாணி உரித்தல் ) ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் குறு, சிறு தசைகளின் வளர்ச்சி( Fine and Gross Motor skills), Eye Hand Co- ordination
போன்றவை   பலப்படுத்தப் படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன(பெரியவர்கள் கூறினால் நாம் எங்கே கேட்கிறோம்). இன்றைய சந்ததியினரிடம் பரவலாக காணப்படும் " Speech Delay "-யையும் அவர்களுடம் கூடி உரையாடி, சமைத்து, நேரத்தை செலவிடும்  பொழுது களையலாம் என்றே தோன்றுகிறது.

என்ன...உங்களில் எத்தனைப் பேர் இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சேர்ந்து சமைத்து அசத்தப் போகிறீர்கள்?!


Monday, February 29, 2016

சிறு துளி பெரு வெள்ளம்

"ஆ..." என்ற சிறு  அலறளுடன்  காலில் குத்தியதை எடுத்து மூலையில் கடாசிவிட்டு சோபாவில் அமர்ந்த முகிலனுக்கு அங்கும் ஏதோ நெருட, " ச்சே...இந்த வீட்ல எதையாவது மிதிக்காம நடக்க முடியுதா?! உக்காரமுடியுதா?" என்று கோபத்திலும் வலியிலும் கத்தினான். அன்புக் கணவனை  சமையலறையில் இருந்து எட்டிப்  பார்த்து விட்டு தனது  வேலையைத் தொடர்ந்தாள் நிகிலா.

"ஏய்...விளையாடி முடிச்சா எடுத்து வைக்க தெரியாது?", " Clean Up" பண்ணு என்று தனது எட்டு வயது மகளைக் கடிந்து கொண்டான்.

லேப்டாப்-ல் விளையாடியபடி ஓரக் கண்ணால் தனது  அப்பாவை உளவு பார்த்துக் கொண்டிருந்த அவர்களது நான்கு வயது மகனிடம்,  " டேய் உனக்கு என்ன தனியா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடனுமா? வாடா..." என்று அதட்டினான். இனிமே ஒழுங்கா " Play Room"-ல உக்காந்து விளையாடனும் இப்பிடி வீடெல்லாம் இறச்சு போட்டீங்க..." என்று கண்களை உருட்டினான்.

"But Daddy..." என்று ஆரம்பித்த மகள் தம்பியின் மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தாள் ஆனால் இன்று எதுவும் அப்பாவிடம்  எடுபடாது போல  என்று தெரிந்ததும்  Mommy...என்று நிகிலாவை  நோக்கிக்  கூவினாள். இங்கு இருக்கும் பள்ளிகளில் முதலில் ஆரம்பிக்கும் பாடமே "We Always  Clean Up " பாடல் தான். அது ஏன் என்று இப்பொழுது தானே புரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டவளாய், " ஏன்டா... ரெண்டு பெருமா  சேர்ந்து எடுத்து வைங்களேன்" என்று தீர்ப்பு கூறினாள்.

"எப்ப பாத்தாலும் இப்பிடியே கெடக்குறது...சுத்தம் பண்ற வேலையே  இல்ல" என்று கணவன் முணுமுணுப்பதைக்  கேட்டதும் ஆவேசமடைந்தாள் நிகிலா. பொறியில் சிக்கிய மிருகத்தைப் பார்த்த வேட்டைக்காரனின் வில்லிலிருந்து பறக்கும் அம்பைப்  போல," என்னது...நல்லா சொல்லுவீங்களே?! என்ற வார்த்தைகள் முகிலனை நோக்கிச்  சீறிப் பாய்ந்தன. " நேத்து கூட எல்லாம் எடுத்து வச்சேன். அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே" என்று கோபத்தில் கொக்கரித்தாள். 

மனைவியைப் பார்த்த முகிலன் தனது  உரையாடலை குழந்தைகளிடமே தொடர்ந்தான் . " லேப் டாப், I-Pad-ன்னு அதுலயே உக்காந்துருங்க... என்று புதுத் தலைப்பில் தனது கோபத்தைத் திருப்பினான் . ஆனான் நிகிலாவோ  விடாப்பிடியாக, "Neat-ஆ இருந்தா ஒரு வார்த்த சொல்லாம போறது...இல்லைன்னா கத்துறது...என்ன ஒரு வில்லத்தனம்" என்று வடிவேலு ஸ்டைலில் கூற,  கோபம் களைந்து  புன்முறுவல் பூத்தான் முகிலன். "Let's Clean Up Together" என்று சமாதனமடைந்தான்.

அடுத்து வந்த சனிக் கிழமையில் தேவையில்லாதவற்றை தொண்டு நிறுவனங்களுக்கு  கொடுக்க முடிவு செய்தனர். புதையல் எடுப்பது போல மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்யப் பட்டது.   ஆனால் மகனும் மகளும் பல நாட்கள் விளையாடாத பொருட்களைப் பார்த்ததும் குதூகலமடைந்தனர். அடுத்தவர்களின் பிறந்தநாள் விழாக்களில் கொடுக்கப்படும், சிறிய சிறிய  டாலர் ஷாப் பொருட்கள் மட்டும் ஒரு பாக்ஸ் நிறைய நிரம்பி வழிந்தது. கால்களில் மிதி பட்டு உடைந்தது. ஆனால் மிகச் சிலவற்றை மட்டுமே கொடுக்க குழந்தைகள் அனுமதித்தனர்.  முடிவாக,  "இனி Toys-சே வாங்கக் கூடாது, வரவேற்பறையில் விளையாடக்கூடாது" போன்ற   தீர்மானங்கள்  நிறைவேறின. அவர்களின் முடிவுகள் எல்லாம் அடுத்த சில நாட்களே பின்பற்றப்பட்டது. உலகத்தில் எந்த மூலையில் இருந்தால் என்ன?! விதிகளைப் கடைபிடிப்பது நமக்கு வேப்பங்காய் சாப்பிடுவது போலத்தானே?! வழக்கம் போல் வீடும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

திருமணமான புதிதில் தினமும் வீட்டைப் பெருக்குவதைப் போல் நிகிலாவும் தபாலில் வரும் விளம்பரப் பத்திரிகைகள், கவர்கள் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டு இருந்தவள்தான். ஒரு நாள் ஏதோ முக்கியமானதை நிகிலா குப்பையில் போட்டுவிட்டதாக முகிலன் குற்றம் சாட்ட அன்றிலிருந்து,"இனிமே இதையெல்லாம் நான் தொடவே மாட்டேன்...நீங்களே வச்சுகோங்க...எடுத்துகோங்க" என்று கூறிவிட்டாள். சுத்தம் (Vacuum) செய்வது வாரத்திற்கு ஒருமுறை என மாறியது.

 தெருவிற்கு ஒன்றாக எத்தனை  துணிக்கடைகள் முளைத்தாலும் அனைத்திலும் கூட்டம் அலை மோதுவது போல, எத்தனை டேபிள்கள் இருந்தாலும் அனைத்திலும் பேப்பர்கள், கவர்கள், Coupon-கள் என்று   நிரம்பி வழிந்தன. பத்திரமாக இருக்கட்டும் என்று எதையாவது எடுத்து வைத்தீர்கள் நீங்கள் தொலைந்தீர்கள். தங்க மலை இரகசியத்தைக் கூடக்  கண்டு பிடித்து விடலாம் ஆனால் அவர்கள் வீட்டில் பத்திரப் படுத்தியத்தை   கண்டு பிடிக்கவே  முடியாது. இன்டர்நெட் வயர், போன் வயர், HDMI கேபிள் இன்னும் பல  பெயர் தெரியாத  வயர்க் குவியல்கள் TV-க்கு பின்புறம் பின்னிப் பிணைந்து மாய வலையாக வளர்ந்து கொண்டே சென்றது.

குழந்தைகளின் வருகைக்குப்  பிறகு பேப்பர்களோடு விளையாட்டுப் பொருட்களும் கை கோர்த்துக் கொண்டன. நிகிலாவும் அவள் பங்கிற்கு பிளாஸ்டிக் டப்பாக்கள், அட்டை டப்பாக்கள், Goody Bags என்று சேகரிக்க, சமையலறை Closet-களும் நிரம்பி, சிறு துளி பெரு வெள்ளமாக மாறியது. "Use and Throw-ன்னா என்னன்னு தெரியுமா?" என்று முகிலனும் அடிக்கடி நிகிலாவைக்  கேலி செய்வதுண்டு. " எங்கயாச்சும் வெளியில போகும்போது ஸ்நாக்ஸ், லஞ்ச்-ன்னு  எடுத்துட்டு போயி அப்பிடியே தூக்கி போட்டுறலாம்னு  எடுத்து வச்சுருக்கேன் " என்று நீண்ட நெடிய விளக்கத்தை வழங்கி முகிலனின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவாள். விடுமுறையில் விஜயம் செய்த முகிலனின் அம்மாவும், " இவ்வளவு நல்ல டப்பாவ (Baby Food Jars)  எல்லாம் தூக்கியா போட்ற?!" என்று அவள் பங்கிற்கு இரண்டு மூன்றை ஊருக்கு எடுத்துச் சென்றாள். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது நம் ரத்தத்தில் ஊறிய பழமொழி அல்லவா?! நயா பைசாவுக்கு உதவாத "நயாகரா செருப்பு" கூட  அவர்கள் வீட்டு அலமாரியில் நலமாக  உறங்கிக் கொண்டிருந்தது.                  

 "ஒரு திருடனும் வீட்டுக்குள்ள வரமாட்டான்...அப்படியே வந்தான்னாலும் கால் வச்சு நடக்க இடம் இருக்காது...அவனுக்கு முன்னாடி யாரோ சூரையாடிட்டாங்கன்னு  நினைச்சு திரும்பிப் போயிடுவான் என்று சிரித்துக் கொண்டனர். அந்தப்  புதைக் குழிக்குள் "Remote -யை " தொலைத்து விட்டு தேடுவதும் தொடர் கதையாகிப் போனது. பிரசவத்தின் போது ஊருக்கு வந்த நிகிலாவின் அப்பாவும் இவர்களின் Remote  வேட்டையைப் பார்த்து," இந்த  வீட்டுக்குள்ளே நுழையுறதுக்கு முன்னாடியே " Bar Code " ஒட்டிறனும் அப்புறம் Scanner வச்சு   ஈசியா கண்டு பிடுச்சிறலாம்" என்று  கலாய்த்தார்.

முகிலனும் நிகிலாவும் அவ்வப்போது ஞானோதயம் வந்தவர்களாய் வீட்டை சுத்தம் செய்வதும், ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக் கொள்வதுமாய்  நாட்களை நகர்த்தினர். "பெரிய வீடு வாங்க நேரம் வந்திருச்சு போல" என்று நண்பர்கள் மறைமுகமாக சுட்டிக் காட்டினாலும், "பசங்க வளந்துட்டாங்கன்னா Clean ஆயிரும்" என்று பதில் கூறி, போலிச்  சமாதானம் செய்து கொண்டனர்.

அன்று அலுவலகத்தில் கடைசி நாளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய  முகிலனின் முதுகில் தொங்கும் லேப்டாப் பேக்-​ஐப் பார்த்ததும்," என்னங்க?! லேப்டாப்-ப  மறந்து எடுத்துட்டு வந்திட்டீங்களா?!" என்று வினவினாள். "இல்ல... Empty  Bag தான்.  இதை எப்படியும் reuse பண்ண மாட்டாங்க...அதான் நானே வச்சுக்கிறேன்-ன்னு எடுத்துட்டு வந்துட்டேன் எப்புடி?!" என்று சிரித்த முகிலனிடம்,  " நம்மள திருத்தவே முடியாது" என்று கூறி கணவனின் வெற்றிக்களிப்பில்  ஐக்கியமானாள் நிகிலா.       

Thursday, February 11, 2016

சமாரித்தன் ஆன சாமானியன்

   காலம் மாறிப்போச்சுங்க....நல்லவங்களையும், நம்பிக்கையானவர்களையும்  பார்ப்பதே அதிசயமா இருக்கு...பின்ன எப்பிடி மழை பெய்யும்?! அதான் வெயில் காச்சு எடுக்குது என்று நாலு பேர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். ஏன் நாமே கூட சில சமயங்களில் கூறியிருப்போம். நம் கூற்றுக்களை எல்லாம் பொய்யாக்கும் விதத்தில் மழை கொட்டித் தீர்த்து விட்டது. பல சமாரித்தர்களையும் நமக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. நான் சொல்வது அண்மையில் சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பைப் பற்றி என்று உங்களுக்கே புரிந்திருக்கும். 

இந்த நாலு பேர் கூறுவது போல நல்ல உள்ளங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமா? "ரோட்ல வழுக்கி விழுந்தா தூக்கி விடுகிறவனை  விட அத வீடியோ எடுத்து "Face Book ", " Whats App "- ன்னு Upload செஞ்சு " Like " வாங்க நினைக்கிறவன் தான் அதிகம்" இது  உண்மையா? என் அனுபவங்களைச்   சொல்றேன்... கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்!!!

அனுபவம் - 1

என்  பள்ளிக்  காலத்தில் சில வருடங்கள் தங்கை மற்றும் தம்பிகளுடன்  " ரிக்க்ஷா"-வில் பயணம் செய்ய நேர்ந்தது. ஒரு நாள் எங்கள் ரிக்க்ஷாவை பின்னால் வந்த கார் லேசாக உரச, சக்கரம் நெளிந்து நின்று விட்டது. வீட்டிலிருந்து சிறிது தூரமே கடந்திருந்த படியால்  , நடந்தும்  பள்ளிக்குச்  செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று எங்களுக்கோ கலவரம். இன்னைக்கு லீவு தான் என்று நினைத்திருந்த வேளையில்  எங்கள் ரிக்க்ஷாக்கார அண்ணன் வண்டியின்  பழுதிற்கு பணம் வாங்கியதோடு நில்லாமல்  எங்களை பள்ளியில் " Drop " செய்ய வேண்டும் என்றும்  வாதாடி வென்றார். எங்களுக்கோ காரில் செல்லப்போகிறோம் என்று ஒரே ஜாலி. கடைசி தம்பியைத் தவிர மற்ற மூவரின் பள்ளிகளும் அருகருகே இருந்ததால் பள்ளியின் வாசலிலே பந்தாவாக இறங்கிக் கொண்டோம். அன்று ஏதோ பெரிய அதிசயம் நடந்து விட்டதைப் போல் பீற்றிக் கொண்டோம்.

அன்று மாலை வீட்டிற்கு வந்தும் நாங்கள்  அதே புராணம் பாட, ஒன்றாம் வகுப்பில் இருந்த  என் கடைசித் தம்பி, " நீங்களெல்லாம் இறங்கிட்டீங்க ஆனா அந்த கார்காரன் வேற பக்கம் திரும்பனும்... என் ஸ்கூல் வரைக்கும் வர முடியாதுன்னு சொல்லிட்டு இறக்கி விட்டுட்டான்" என்றதும் எங்களுக்கு பகீரென்றது. பின்ன எப்பிடிடா அவ்வளவுதூரம் போன?! ரோடெல்லாம் எப்பிடி "Cross" செஞ்ச?! என்றோம். அதற்கு அவன், ரிக்க்ஷாக்கார அண்ணன் தான் கூட்டிட்டு போய் விட்டார். வேனான்னு சொல்ல சொல்ல  கேக்காம," சும்மா இரு தம்பி அவ்வளவு தொல நடக்க முடியாது அதனாலதான அப்பா வண்டியில அனுப்பரார்-ன்னு  என்ன இடுப்புல தூக்கிகிட்டார்" என்றதும் தம்பியை கிண்டலடிக்கத் தொடங்கினோம்.             

அவர் நினைத்திருந்தால் எங்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு சக்கர பழுது வேலைகளை கவனிக்கச் சென்றிருக்கலாம் ஆனால் ரிக்க்ஷாவை ரோட்டோர கடையில் நிறுத்திவிட்டு எங்களுடன் பயணித்தார். மாலையில் ரிக்க்ஷாவோடு பள்ளி வாசலில் நின்றிருந்தார். அன்று அவரின் இந்த தன்னலமற்ற செயலை புரிந்து கொள்ள வயதோ, அனுபவமோ  எங்களுக்கு போதவில்லை.
...

அனுபவம் - 2

நிறுத்துங்க...பஸ்ஸ நிப்பாட்டுங்க... என்று பஸ்சிற்கு பின்னால் கதாநாயகி ஓடி வருவதை சில பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். நானும் ஒருமுறை அவ்வாறு கூற நேர்ந்தது?! ஆனால்  பஸ்ஸின்  உள்ளே நின்றுகொண்டே...என் அலுவலகம் சற்று "Remote" ஏரியாவில் இருந்ததால் பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டுமானால் அலுவலக வேனிற்கு காத்திருக்க வேண்டும் இல்லையெனில் "Load " ஏற்றிக்கொண்டு வரும் டெம்போ வேனில் " லிப்ட் " கேட்கலாம். அவ்வாறு தான் அன்று பேருந்து நிலையத்தை அடைந்திருந்தேன்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்து ஐந்து நிமிடத்திருக்கு பிறகுதான் தெரிந்தது பர்சை எங்கோ தவற விட்டுவிட்டேன் என்று அப்போது கூறியதுதான் " பஸ்ஸை நிப்பாட்டுங்க" என்ற டயலாக். கண்டக்டர், " ஏம்மா?! என்றார். விவரத்தைக் கூற " காசே இல்லையா", என்றார். கைப்பையின் அனைத்து ஜிப்பிலும் துலாவி ஐந்து ரூபாயை கண்டெடுத்தேன். அருகில் அமர்திருந்த பெண்மணி ஐந்து ரூபாய் கொடுத்தார். நல்லா திட்டப் போறார் என்று நினைக்கையில் அவர் பதிமூன்று ரூபாய்க்கான டிக்கெட்டுடன் ஐந்து ரூபாயையும்  என் கையில் கொடுத்து, "டவுன் பஸ்ஸுக்கு வச்சுகோங்க" என்றார். தேங்க்ஸ் என்ற ஒற்றை வார்த்தையோடு அமர்ந்து கொண்டேன்.

வீட்டிற்கு வந்து நடந்தவற்றை கூற, " எங்க பர்ஸ தொலைச்ச" என்றாள் அம்மா. "அந்த டெம்போ வேன்லதான் மடியில வச்சிருந்தேன் அப்பிடியே கீழ விழுந்திருக்கும் போல" என்றேன். எதிர்பாராத விதமாக ஒரு மாதம் கழித்து அந்த வேன் மறுபடியும் எங்கள் அலுவலகத்திற்கு வர அதன் டிரைவர் என் பர்சை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டுச்  சென்றிருந்தார். அனைத்தும் அப்படியே இருந்தது ஒரு பைசா குறையவில்லை. ஒரு கல்லில் ரெண்டு மாங்கா என்பது போல ஒரே சம்பவத்தில் இரண்டு " சமாரித்தர்களை" காண நேர்ந்ததைக் கண்டு வியப்படைந்தேன்!!!
...

அனுபவம் - 3

   அன்று காலை முதலே தூவானம் தூறிக்கொண்டே இருந்தது. நான் பள்ளியை அடைந்ததும் ஜோராக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மாலையில் பள்ளியை விட்டு வெளியில் வந்ததும் தான் தெரிந்தது அந்த சாலை முழுவதும் தண்ணீர் முட்டி அளவு தேங்கி நின்று கொண்டிருந்தது. நானும் என் தங்கையும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு, " இதுல எப்பிடி நடந்து வருவான் கழுத்து வரைக்கும் தண்ணி வருமே" என்று கவலையோடு எங்கள் குட்டித் தம்பியின் வருகையை எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருந்தோம்.

அப்போது தொலைவில் ஒருவர் அவருடைய பையனை தோள் மேல் தூக்கிக் கொண்டு வருவதைப்  பார்த்தோம். அவனும் சிம்மாசனத்தில் அமர்ந்து வலம்  வரும் ராஜகுமாரனைப் போல ஒய்யாரமாக  வந்து கொண்டிருந்தான். அருகில் வர வரத்தான் தெரிந்தது அவன் எங்கள் வீட்டு இளவரசன் தான் என்று... எங்களுக்கோ சிரிப்பு முட்டிக் கொண்டு நின்றது ஆனால்  அவரோ  இறக்கிவிட்டு விட்டு  நன்றியைக்கூட எதிர்பாராமல் போய்க்கொண்டே இருந்தார். "என்னடா இப்பிடி?!" என்று ஆரம்பிக்க, "தண்ணியில  எப்பிடி வர்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு முக்குல நின்னப்போ, இவர் தான் வா தம்பி தூக்கிட்டு போறேன்னு கூட்டிட்டு வந்தார்" என்றான். "ராஜ மரியாத தான்" என்று கலாய்த்தோம் அவனை.
...

அனுபவம் - 4

வழக்கம் போல் அன்றும் எட்டு மணிக்கெல்லாம் கல்லூரிக்குச் சென்று விட்டேன். அமைதியான வளாகத்தில் அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன். எங்கள் ஆங்கில பேராசிரியை என்னை நோக்கி வர எழுந்து நின்று," Good Morning Mam " என்றேன். பதட்டமாக காணப்பட்ட அவர் " உன் Blood Group என்னன்னு  தெரியுமா?" என்று கேட்டார். நானும் தெரியும் என்று கூற, இன்று அரசு பொது மருத்துவமனையில் ஒரு இருதய அறுவை சிகிச்சை நடக்கப் போவதாகவும் அதற்கு இரத்தம் கொடுப்பதற்காக பலரை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதில் ஒரு மாணவி வர இயலாததால் என்னால் வர முடியுமா? என்று கேட்டார். எனக்கோ ஊசி என்றாலே பயம் ஆனால் வருகிறேன் என்றேன். நான் பேசுவதை என்னாலே நம்ப முடியவில்லை. மருத்துவமனை நடக்கும் தூரம் தான். அங்கு நோயாளியின் குடும்பமே எங்களை எதிர் நோக்கி  நின்றிருந்ததையும் அவர்களின் சோகம் நிறைந்த முகங்களையும் பார்க்கும் பொழுது என் பயம் மெல்லக் கரையத் தொடங்கியது.

மதியம் அவரே என்னை என் வகுப்பறைக்கு அழைத்து வந்து, என் பேராசிரியரிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுச் சென்றார். "உங்க அம்மா அப்பாவுக்கு சொல்லாம இந்த வேலையெல்லாம் தேவையா?" என்ற எங்கள் பேராசிரியை,"மயக்கம் வந்தா பின்னாடி பெஞ்ச்ல படுத்துக்கோ" என்றார். இல்லை என்று  சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்த எனக்கு  " டெஸ்டுக்கு எல்லாரும் ரெடியா? என்று அவர் கூறியது கேட்டவுடன்  தலை மிக வேகமாக  சுற்றத் தொடங்கியது.
...

அனுபவம் - 5

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மார்கெட்டில் நல்ல கூட்டம். நானும் என் தம்பியும் அம்மாவோடு சென்றிருந்தோம். " ரொம்ப நெரிசலா இருக்கு அவன கெட்டியா பிடிச்சுக்கோ" என்று கையில் இரண்டு கூடையுடன் முன்னால்  சென்றவாறு என்  அம்மா கூற பிடியை இருக்கினேன் ஆனால் எப்பிடியோ தக்காளி வாங்கும் ஆர்வத்தில் தம்பியைத் தவறவிட்டு  விட்டேன். தம்பி எங்கடி? என்று அம்மா அலற மார்கெட் எங்கும் சுற்றினோம். பதற்றமாக அங்கும் இங்கும் போவதையும், ஒரு நாலு வயசுப் பையனப் பாத்தீங்களா? என்று நாங்கள் விசாரிப்பதையும் பார்த்த காய்கறி விற்கும் பெண்மணி," ரெண்டு கடை தள்ளி இருக்கிற கடையில ஒரு பையன் நிக்கிறான் பாருங்க' என்றதும் ஓட்டமும் நடையுமாக விரைந்தோம். அங்கு எங்களைப் பார்த்ததும் "அம்மா " என்று ஓடி வந்தான் தம்பி." உன் பையனா? நட்ட நடுவுல நின்னு அழுதுகிட்டிருந்தான். கூட்டத்துல யாருனா கூட்டிட்டு போனா என்ன ஆவுறது?! அதான் இங்க பிடுச்சு நிப்பாட்டினேன். எப்பிடியும் தேடிகிட்டு வருவீங்கன்னு தெரியும் என்று கூற நன்றி கலந்த பார்வையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். வீட்டில் எனக்கு சிறப்புப் பூஜை நடந்தது என்பது வேறு கதை.
...

அனுபவம் - 6

மூன்று மாதத்திற்கு முன் ஊருக்குப் போன  சமயத்தில் " பேன்சிஸ்" ஸ்டோருக்கு பொட்டு, கிளிப் இத்யாதிகளை வாங்கச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லாத மதிய வேளை. என்னோடு சேர்ந்து நடுத்தர வயதை ஒட்டிய பெண்மணி ஒருவரும் இருந்தார். தனது பெண் பூப்படைந்து விட்டதாகவும் அவளுக்காத்தான் " மேக்கப்" பொருட்கள் வாங்க வந்ததாகவும்  கூறினார். சில, பல முறை தன் பெண்ணுடன் போனில் கலந்தது பேசி ஒரு வழியாக  "Shopping"-யை முடித்தார். பலத்த பேரத்திற்குப் பிறகும் அவருக்கு பணம் போதவில்லை. ஒரு சில பொருட்களை திருப்பி வைத்து விடுமாறு கடைக்காரர் கூற, எதை எடுத்து வைத்தால் தன் பெண்ணின் ஏமாற்றம் குறைவாக இருக்கும் என்று தத்தளித்துக்  கொண்டிருந்தார். அவரைத் தடுத்த நான், பணத்தைக் கொடுத்தேன்.  வாங்க மறுத்த  அவரிடம், என்னை அவருடைய தங்கையாக பாவித்து வாங்கிக் கொள்ளும் படியும், என்னுடைய வாழ்த்துக்களை அவரின் பெண்ணிற்குக் தெரிவிக்கும் படி   கூறியும் விடை பெற்று வந்தேன்.


பேரிடர் காலங்களில் மட்டும் தான் மக்கள் உதவ முன் வருகிறார்கள் என்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்கள் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அதை பெரிதாக யாரும் விமர்சிப்பதில்லை. பல கைகள் சேர்ந்து  எழுப்பும் ஒலியே அனைவரின் காதுகளையும் சென்றடைகிறது ஆனால் ஒரு சிலர் செய்யும் உதவிகளோ   மனதில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் கடைசிவரை!!!  " காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது" எனும் வள்ளுவர் வாக்கு பொய்யாகுமா என்ன?!?!

என்ன உங்கள் வாழ்வில் சந்தித்த சமாரித்தர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டீர்களோ?! எண்ணுங்கள் எண்ணுங்கள்...விரல்கள் போதாது!!! அதோடு நின்று விடாமல் நீங்களும் சமாரித்தர்களாக மாற முயலுங்கள்.
...      

   
 
         


Monday, January 11, 2016

சுடாத தோசை!?!?

 மிச்சம் மீதியை பிரிட்ஜில் வைத்து விட்டு பாத்திரங்களைக்  கழுவும் தனது வழக்கமான மாலை வேலைகளில் மும்முரமாக இருந்தாள் நிவேதா. 

" what is for Dinner?", என்று வினவினாள் அவளது எட்டு வயது மகள்.

தெரியலடா?!?! அப்பாவைக் கேட்கணும் என்றாள் நிவேதா. "இந்த காலத்தில் அப்பாவைக் கேட்டுவிட்டு சமைக்கும் அம்மாவா?!?!" என்று அவசரப்பட்டு ஆச்சர்யப்பட்டு விடாதீர்கள் தொடருங்கள் உங்கள் வாசிப்பை...

நிலேஷ்  வந்ததும் வராததுமாக, " what is  for Dinner Daddy  ?" என்று துளைத்தெடுத்தனர் மகனும் மகளும். "தெரியலடா ...அம்மாவைத்தான் கேட்கணும்" என்றதும் முகம் மலர்ந்தனர் வாண்டுகள். "இதில் என்ன சந்தோசம்?!? என்று குழப்பமா? 
நீங்கள் அந்த வீட்டு உறுப்பினராக இருந்திருந்தால் வெள்ளிக் கிழமைகளில் நடக்கும்  இத்தகைய உரையாடல் எதில்,எங்கு  முடியும் என்று நன்கு உணர்ந்திருப்பீர்கள். மகிழ்ச்சிக்கான காரணமும் புரிந்திருக்கும்.

கிச்சனில் நுழைந்தவாறு நிவேதாவை நோக்கி " எங்கயாவது வெளிய போகனுமா"? என்றான் நிலேஷ்.  "இந்த வாரத்துல ரெண்டு birthday party இருக்கு, கிப்ட் வாங்கப்  போகணும்" என்றாள். " அப்ப Dinner?" என்றவனிடம், "மாவு தீந்துருச்சு, சட்னி இருக்கு கோதுமை தோசை ஊத்தலாம்" என்ற பதிலை எதிர் பார்த்தவனாய் "சரி வா கிளம்பு" என்றான். குழந்தைகளிடம் மாலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து தான் "Dinner" என்று கிளம்பினர்.

அன்று "ரெஸ்டாரண்ட்-ல் " இரவு உணவை முடித்துவிட்டு வீடு திரும்பினர். மால்-ல லேட்டாயிருச்சு, இவங்க ரெண்டு பேரும் படுத்தினதாலதான்  என்று வெளியில் சாப்பிட்டதற்கு  பல  காரணங்களைக்  கூறிக்கொண்டாலும்" கோதுமை தோசை " என்றதுமே வெளியில் தான் "டின்னெர் " என்று நிலேஷ் முடிவு செய்திருந்ததையும்  அதை எதிர்பார்த்து தான் நிவேதாவும் அந்த "Choice"-யை கூறினாள் என்பதையும்  நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால்   இவர்களின் எண்ண ஓட்டங்களை மிகத்  தெளிவாக புரிந்து கொண்டனர்  குழந்தைகள்  இதுவே அவர்களின்  குதுாகலத்திற்கு காரணம்!!!

பின்பு வந்த வாரங்களில் வாங்கிய பொருட்களை ரிட்டன் செய்வது, வீக்லி ஷாப்பிங்  செல்வது என்று வெளியில் சாப்பிடுவது என்பது  வாடிக்கையாகி விட்டது. இடையிடையே பிறந்த நாள் விழா, "Pot Luck Lunch  " போன்றவையும்  அழையா விருந்தாளியாக வர " Out Side Food " தவிர்க்க முடியாததானது.

 சில நேரங்களில் "Chinese, Japanese, Mediterranean " ட்ரை பண்ணலாமா?!?! என்றும் புது "Indian Restaurant" ஓபன் பண்ணியிருக்காங்களாம் ஆபீஸ்ல பேசிகிட்டாங்க என்றும் தொட்டுத் தொடரும் தொடர் கதையாக மாறியது. சில சமயங்களில் எங்கு சாப்பிடுவது என்று தெரியாமல் கண்டதை தின்று இதுக்கு உன்  உப்புமாவே தேவல என்று   புலம்புவதும், "நீ சொன்னதாலதான்" என்று அவனும் " இனிமே இந்த மாதிரி ஹோட்டலுக்கெல்லாம் உங்க பிரண்ட்ஸ் கூட போய்க்கோங்க" என்று நிவேதாவும் கூற சண்டை வருவதெல்லாம் சகஜமானது.

கல்யாணமான புதிதில் கூட இப்படித்தான். ஒரு ஐடம் ஆர்டர் செய்ய இவ்வளவு நேரமா? என்று நிலேஷ் முறைக்க, ஹோட்டல்காரனே சும்மா இருக்கான் உங்களுக்கு என்ன? என்று நிவேதா மல்லுக்கட்ட சாப்பிடாமல் எழுந்து வந்த கதையெல்லாம் உண்டு!!! அதற்கு பிறகு இனிமே " Buffet " தான் என்று முடிவு செய்தாகிவிட்டது. என்ன சாப்பிடுகிறோம்?!?! எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு வழக்கின்றி கட்டுவது பழக்கமானது.

 ஓர் நாள் திடீர் ஞானோதயம் வந்தவனாய், " நிவே நம்ம வெளிய சாப்பிற்றத குறைச்சுக்கனும்" என்றான் நிலேஷ். ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடுதான் என்று முடிவானது. குழந்தைகள் அடம் பிடித்தனர் " Boring " என்று அழுதனர். " நாங்களெல்லாம் உங்க வயசிலே Hotel- ல சாப்பிடதே இல்ல தெரியுமா? வெளியிலே போயிட்டு எவ்வளவு லேட்டானாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவோம். சினிமாவுக்கு கூட வீட்ல இருந்து " Snacks " எடுத்துட்டு போய்டுவோம்"  என்று அவர்கள் கற்பனை கூட  செய்து பார்க்க முடியாத விஷயங்களை அறிவுரைகளாக  முன்வைத்தாள் நிவேதா. " நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் வெளிய சாப்ட ஆரம்பிச்சேன் அதுக்கு முன்னாடியெல்லாம் எப்போதாவது எங்கம்மா ஓட்டல் தோசை வாங்கிக் கொடுப்பாங்க அதுவும் பார்சல் தான் என்றான் நிலேஷ் அவன் பங்கிற்கு.

ஒரு வாரம் சென்றது. " வீட்லயே Pizza செய்யலாமே? " என்ற நிலேஷ்  அவனே சமைத்தான். பின்பு ஒருநாள் பிரண்ட்ஸ் வீட்டில் டின்னெர் என்றும், அவர்களை " Invite " செய்யனுமில்ல?!  என்றும்   வீட்டில் பஜ்ஜி, பூரி சமைத்து ஒரு கை பார்த்தனர். இரண்டு வாரங்கள் உருண்டோடியது. நிலேஷ் "கலிக்ஸ்ஸோடு" வெளியே சாப்பிட்டு கொண்டுதான் இருந்தான். நிவேதாவிற்குத் தான்    அலுப்பும் அசதியும் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது. நான் சான்விட்ச் செய்யறேனே?! என்ற நிலேஷ்  சீஸ், மையோநெஸ் என்று மிகவும் "ஹெல்தியான?! " உணவுகளை உள்ளே தள்ளினர். இதுக்கு ரெஸ்ட்டாரெண்ட்- யே பரவாயில்லே என்ற நிவேதாவிடம் பிள்ளைங்களுக்கு பிடிச்சிருக்கில்லே ? என்று சமாதானம் கூறினான்.

இப்படியே ஓர் மாதம் உருண்டோடியது. "என்ன.. இன்னக்கி சாயங்காலம் வெளிய சாப்பிடலாமா? ஒரு "Coupon " இருக்கு  என்ற நிலேஷை நோக்கி நிவேதா  ஒர்  புன்னகை வீச, "வேதாளம்" மீண்டும் முருங்கை மரம் ஏறியது......

ஹோட்டல்​ல சாப்பிடுவது பெரிய கொலைக்குத்தம் மாதிரி பேசுறீங்களே?!?! என்று நினைக்கிறீர்களோ?!?! பொருளாதார சிக்கல்கள் இல்லாத பல சில  குடும்பங்களில் வெளியில் சாப்பிடுவது என்பது  ஒரு கலாசாரமாகவே மாறி வருகிறது.  உடல் உழைப்பே இல்லாத இந்த வாழ்கை முறையில் இது குற்றம் மட்டும் இல்லை நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் குழி.

என்ன... நிலேஷ், நிவேதா தம்பதியினர் தங்கள் கொள்கையில்?! தீவிரமாக இறங்கினார்களா? அந்த "கோதுமை தோசை"-யை ஒரு தடைவையாவது சாப்பிட்டர்களா?!? இல்லையா ? தெரிந்து கொள்ள ஆசையா? எனக்கும்தான்!!!