"ஆ..." என்ற சிறு அலறளுடன் காலில் குத்தியதை எடுத்து மூலையில் கடாசிவிட்டு சோபாவில் அமர்ந்த முகிலனுக்கு அங்கும் ஏதோ நெருட, " ச்சே...இந்த வீட்ல எதையாவது மிதிக்காம நடக்க முடியுதா?! உக்காரமுடியுதா?" என்று கோபத்திலும் வலியிலும் கத்தினான். அன்புக் கணவனை சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்து விட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் நிகிலா.
"ஏய்...விளையாடி முடிச்சா எடுத்து வைக்க தெரியாது?", " Clean Up" பண்ணு என்று தனது எட்டு வயது மகளைக் கடிந்து கொண்டான்.
லேப்டாப்-ல் விளையாடியபடி ஓரக் கண்ணால் தனது அப்பாவை உளவு பார்த்துக் கொண்டிருந்த அவர்களது நான்கு வயது மகனிடம், " டேய் உனக்கு என்ன தனியா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடனுமா? வாடா..." என்று அதட்டினான். இனிமே ஒழுங்கா " Play Room"-ல உக்காந்து விளையாடனும் இப்பிடி வீடெல்லாம் இறச்சு போட்டீங்க..." என்று கண்களை உருட்டினான்.
"But Daddy..." என்று ஆரம்பித்த மகள் தம்பியின் மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தாள் ஆனால் இன்று எதுவும் அப்பாவிடம் எடுபடாது போல என்று தெரிந்ததும் Mommy...என்று நிகிலாவை நோக்கிக் கூவினாள். இங்கு இருக்கும் பள்ளிகளில் முதலில் ஆரம்பிக்கும் பாடமே "We Always Clean Up " பாடல் தான். அது ஏன் என்று இப்பொழுது தானே புரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டவளாய், " ஏன்டா... ரெண்டு பெருமா சேர்ந்து எடுத்து வைங்களேன்" என்று தீர்ப்பு கூறினாள்.
"எப்ப பாத்தாலும் இப்பிடியே கெடக்குறது...சுத்தம் பண்ற வேலையே இல்ல" என்று கணவன் முணுமுணுப்பதைக் கேட்டதும் ஆவேசமடைந்தாள் நிகிலா. பொறியில் சிக்கிய மிருகத்தைப் பார்த்த வேட்டைக்காரனின் வில்லிலிருந்து பறக்கும் அம்பைப் போல," என்னது...நல்லா சொல்லுவீங்களே?! என்ற வார்த்தைகள் முகிலனை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. " நேத்து கூட எல்லாம் எடுத்து வச்சேன். அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே" என்று கோபத்தில் கொக்கரித்தாள்.
மனைவியைப் பார்த்த முகிலன் தனது உரையாடலை குழந்தைகளிடமே தொடர்ந்தான் . " லேப் டாப், I-Pad-ன்னு அதுலயே உக்காந்துருங்க... என்று புதுத் தலைப்பில் தனது கோபத்தைத் திருப்பினான் . ஆனான் நிகிலாவோ விடாப்பிடியாக, "Neat-ஆ இருந்தா ஒரு வார்த்த சொல்லாம போறது...இல்லைன்னா கத்துறது...என்ன ஒரு வில்லத்தனம்" என்று வடிவேலு ஸ்டைலில் கூற, கோபம் களைந்து புன்முறுவல் பூத்தான் முகிலன். "Let's Clean Up Together" என்று சமாதனமடைந்தான்.
அடுத்து வந்த சனிக் கிழமையில் தேவையில்லாதவற்றை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவு செய்தனர். புதையல் எடுப்பது போல மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்யப் பட்டது. ஆனால் மகனும் மகளும் பல நாட்கள் விளையாடாத பொருட்களைப் பார்த்ததும் குதூகலமடைந்தனர். அடுத்தவர்களின் பிறந்தநாள் விழாக்களில் கொடுக்கப்படும், சிறிய சிறிய டாலர் ஷாப் பொருட்கள் மட்டும் ஒரு பாக்ஸ் நிறைய நிரம்பி வழிந்தது. கால்களில் மிதி பட்டு உடைந்தது. ஆனால் மிகச் சிலவற்றை மட்டுமே கொடுக்க குழந்தைகள் அனுமதித்தனர். முடிவாக, "இனி Toys-சே வாங்கக் கூடாது, வரவேற்பறையில் விளையாடக்கூடாது" போன்ற தீர்மானங்கள் நிறைவேறின. அவர்களின் முடிவுகள் எல்லாம் அடுத்த சில நாட்களே பின்பற்றப்பட்டது. உலகத்தில் எந்த மூலையில் இருந்தால் என்ன?! விதிகளைப் கடைபிடிப்பது நமக்கு வேப்பங்காய் சாப்பிடுவது போலத்தானே?! வழக்கம் போல் வீடும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
திருமணமான புதிதில் தினமும் வீட்டைப் பெருக்குவதைப் போல் நிகிலாவும் தபாலில் வரும் விளம்பரப் பத்திரிகைகள், கவர்கள் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டு இருந்தவள்தான். ஒரு நாள் ஏதோ முக்கியமானதை நிகிலா குப்பையில் போட்டுவிட்டதாக முகிலன் குற்றம் சாட்ட அன்றிலிருந்து,"இனிமே இதையெல்லாம் நான் தொடவே மாட்டேன்...நீங்களே வச்சுகோங்க...எடுத்துகோங்க" என்று கூறிவிட்டாள். சுத்தம் (Vacuum) செய்வது வாரத்திற்கு ஒருமுறை என மாறியது.
தெருவிற்கு ஒன்றாக எத்தனை துணிக்கடைகள் முளைத்தாலும் அனைத்திலும் கூட்டம் அலை மோதுவது போல, எத்தனை டேபிள்கள் இருந்தாலும் அனைத்திலும் பேப்பர்கள், கவர்கள், Coupon-கள் என்று நிரம்பி வழிந்தன. பத்திரமாக இருக்கட்டும் என்று எதையாவது எடுத்து வைத்தீர்கள் நீங்கள் தொலைந்தீர்கள். தங்க மலை இரகசியத்தைக் கூடக் கண்டு பிடித்து விடலாம் ஆனால் அவர்கள் வீட்டில் பத்திரப் படுத்தியத்தை கண்டு பிடிக்கவே முடியாது. இன்டர்நெட் வயர், போன் வயர், HDMI கேபிள் இன்னும் பல பெயர் தெரியாத வயர்க் குவியல்கள் TV-க்கு பின்புறம் பின்னிப் பிணைந்து மாய வலையாக வளர்ந்து கொண்டே சென்றது.
தெருவிற்கு ஒன்றாக எத்தனை துணிக்கடைகள் முளைத்தாலும் அனைத்திலும் கூட்டம் அலை மோதுவது போல, எத்தனை டேபிள்கள் இருந்தாலும் அனைத்திலும் பேப்பர்கள், கவர்கள், Coupon-கள் என்று நிரம்பி வழிந்தன. பத்திரமாக இருக்கட்டும் என்று எதையாவது எடுத்து வைத்தீர்கள் நீங்கள் தொலைந்தீர்கள். தங்க மலை இரகசியத்தைக் கூடக் கண்டு பிடித்து விடலாம் ஆனால் அவர்கள் வீட்டில் பத்திரப் படுத்தியத்தை கண்டு பிடிக்கவே முடியாது. இன்டர்நெட் வயர், போன் வயர், HDMI கேபிள் இன்னும் பல பெயர் தெரியாத வயர்க் குவியல்கள் TV-க்கு பின்புறம் பின்னிப் பிணைந்து மாய வலையாக வளர்ந்து கொண்டே சென்றது.
குழந்தைகளின் வருகைக்குப் பிறகு பேப்பர்களோடு விளையாட்டுப் பொருட்களும் கை கோர்த்துக் கொண்டன. நிகிலாவும் அவள் பங்கிற்கு பிளாஸ்டிக் டப்பாக்கள், அட்டை டப்பாக்கள், Goody Bags என்று சேகரிக்க, சமையலறை Closet-களும் நிரம்பி, சிறு துளி பெரு வெள்ளமாக மாறியது. "Use and Throw-ன்னா என்னன்னு தெரியுமா?" என்று முகிலனும் அடிக்கடி நிகிலாவைக் கேலி செய்வதுண்டு. " எங்கயாச்சும் வெளியில போகும்போது ஸ்நாக்ஸ், லஞ்ச்-ன்னு எடுத்துட்டு போயி அப்பிடியே தூக்கி போட்டுறலாம்னு எடுத்து வச்சுருக்கேன் " என்று நீண்ட நெடிய விளக்கத்தை வழங்கி முகிலனின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவாள். விடுமுறையில் விஜயம் செய்த முகிலனின் அம்மாவும், " இவ்வளவு நல்ல டப்பாவ (Baby Food Jars) எல்லாம் தூக்கியா போட்ற?!" என்று அவள் பங்கிற்கு இரண்டு மூன்றை ஊருக்கு எடுத்துச் சென்றாள். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது நம் ரத்தத்தில் ஊறிய பழமொழி அல்லவா?! நயா பைசாவுக்கு உதவாத "நயாகரா செருப்பு" கூட அவர்கள் வீட்டு அலமாரியில் நலமாக உறங்கிக் கொண்டிருந்தது.
"ஒரு திருடனும் வீட்டுக்குள்ள வரமாட்டான்...அப்படியே வந்தான்னாலும் கால் வச்சு நடக்க இடம் இருக்காது...அவனுக்கு முன்னாடி யாரோ சூரையாடிட்டாங்கன்னு நினைச்சு திரும்பிப் போயிடுவான் என்று சிரித்துக் கொண்டனர். அந்தப் புதைக் குழிக்குள் "Remote -யை " தொலைத்து விட்டு தேடுவதும் தொடர் கதையாகிப் போனது. பிரசவத்தின் போது ஊருக்கு வந்த நிகிலாவின் அப்பாவும் இவர்களின் Remote வேட்டையைப் பார்த்து," இந்த வீட்டுக்குள்ளே நுழையுறதுக்கு முன்னாடியே " Bar Code " ஒட்டிறனும் அப்புறம் Scanner வச்சு ஈசியா கண்டு பிடுச்சிறலாம்" என்று கலாய்த்தார்.
முகிலனும் நிகிலாவும் அவ்வப்போது ஞானோதயம் வந்தவர்களாய் வீட்டை சுத்தம் செய்வதும், ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக் கொள்வதுமாய் நாட்களை நகர்த்தினர். "பெரிய வீடு வாங்க நேரம் வந்திருச்சு போல" என்று நண்பர்கள் மறைமுகமாக சுட்டிக் காட்டினாலும், "பசங்க வளந்துட்டாங்கன்னா Clean ஆயிரும்" என்று பதில் கூறி, போலிச் சமாதானம் செய்து கொண்டனர்.
அன்று அலுவலகத்தில் கடைசி நாளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய முகிலனின் முதுகில் தொங்கும் லேப்டாப் பேக்-ஐப் பார்த்ததும்," என்னங்க?! லேப்டாப்-ப மறந்து எடுத்துட்டு வந்திட்டீங்களா?!" என்று வினவினாள். "இல்ல... Empty Bag தான். இதை எப்படியும் reuse பண்ண மாட்டாங்க...அதான் நானே வச்சுக்கிறேன்-ன்னு எடுத்துட்டு வந்துட்டேன் எப்புடி?!" என்று சிரித்த முகிலனிடம், " நம்மள திருத்தவே முடியாது" என்று கூறி கணவனின் வெற்றிக்களிப்பில் ஐக்கியமானாள் நிகிலா.