Saturday, May 11, 2019

பெரியம்மா

அலறிய அலாரத்தை அமைதிப்படுத்திய கதிர் அலைபேசியினுள் நுழைந்தான். வழக்கம்போல் வந்திருந்த மானாவாரியான மின்னஞ்சல்களை படுத்தவாறே ஆர்வமின்றி அலசி  முடித்தவன் குறுந்தகவல்களுக்குத் தாவினான். தம்பியிடமிருந்து வந்திருந்த தகவலைப் பார்த்த மறு  நொடி மயிர்கூச்செரிய எழுந்தமர்ந்தவனின் மனதை    இனம் புரியாத எடை அழுத்த...    ஆயிரம் மடங்கு கனத்த இதயத்துடன் கட்டிலை விட்டிறங்கினான்.

காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்தவன் புரண்டுகொண்டிருந்த மனைவி மித்ராவை "ஹே...Mommy" என்று குரல்கொடுத்தெழுப்பினான். அவள் குளியலறைப் பக்கம் செல்ல கதிர் சமயலறைக்கு வந்தான். கொதித்துக் கொண்டிருந்த தேநீரை வடிகட்டியவாறு Landline-ல் இருந்து அம்மாவை அழைத்தான். மறுமுனையில்  ராஜா என்றழைத்த அம்மா " திலோம்மா போயிட்டாப்பா" என்றாள் குரல் தழுதழுக்க. "ம்ம்ம்...தம்பி மெசேஜ் பண்ணியிருந்தான்" என்று பதிலளித்த கதிர் லேப்டாப் டேபிளிலில் அமர்ந்தவாறு  "எப்போ?! எப்பிடி?! யாரு காரியத்துக்கு போறாங்க?!" போன்ற சம்பிரதாய கேள்விகளை கேட்டவன்  தன் சோகத்தை வெளியிட விரும்பாதவனாய் இணைப்பைத் துண்டித்து விட்டு... தம்பியை அழைத்து சில நொடிகள் பேசினான்.

தொலைபேசி உரையாடல்களை கேட்டவாறு  சமையலறையில்  குழந்தைகளுக்கு லஞ்ச் பேக் செய்து கொண்டிருந்த மித்ராவிடம் " பெரியம்மா காலமாயிட்டாங்க" என்றான். "ம்ம்..தெரிஞ்சிருச்சு" என்றவளிடம் "அவங்க தங்கியிருந்த முதியோர் இல்லத்துலயே கடைசி காரியத்தை பண்ணப்போறாங்களாம்...அரக்க பரக்க போனாலும் முகத்த பாக்கமுடியாதுன்றனால தம்பி போகல...சித்தி போனா அவங்ககூட அம்மா போகலாம்னு நினைச்சுருக்காங்க ஆனா அவங்களுக்கும் உடம்புக்கு முடியாததால போகல" என்றவன் வேறெதுவும் பேசாமல் குளிக்கக் கிளம்பினான்.

சென்ற வருடம் விடுமுறைக்கு சென்ற போது குடும்பத்துடன் தனது பெரியம்மாவை பார்த்துவிட்டு வந்திருந்தான் கதிர். குடும்ப சூழல் காரணமாக திருமணம் செய்து கொள்ளாத பெரியம்மா ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவள். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவள் முதுமை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக ஒரே இடத்தில் அமர்ந்துவிட்டாள். பல்வேறு உடல் உபாதைகளால் அலைக்கழிக்கப்படவளை அவள் தங்கியிருந்த இல்லத்தில் சென்று பார்த்த மறுகணம் அவனை அறியாமலேயே கதிரின் கண்கள் குளமாகின. 

தனது ஏழாவது வயதிலேயே தந்தையை பறி கொடுத்த கதிர் சில வருடங்கள் பாட்டி வீட்டில் தங்க நேர்ந்தது. அப்போதெல்லாம் பெரியம்மாவின் வருமானத்தில் தான் குடும்பமே ஓடியது எனலாம். பின் கதிரின் அம்மாவிற்கு வேலை கிடைத்து தனியாக வந்திருந்தாலும் பெரியம்மாவின் உதவி அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருந்தது. விடுமுறை சமயங்களில் கதிர் பக்கத்துக்கு ஊரில் வேலை பார்த்துக்  கொண்டிருந்த பெரியம்மா வீட்டில் சென்று தங்கியதுண்டு. அவளை அம்மா என்றுதான் அழைப்பான்.  அமெரிக்காவில் வேலை பார்த்த கதிர்  திருமணத்திற்குப் பிறகு பெரியம்மாவை  சில மாதங்கள் தன்னோடு அழைத்து வந்திருக்கிறான். அனைத்து இடங்களையும் சுற்றிக்காட்டி அகமகிழ்ந்திருக்கிறான். 

ஆறுவருடங்களில் உருத்தெரியாமல் மாறிவிட்டிருந்த பெரியம்மாவை முதியோர் இல்லத்தில் பார்த்தவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. "ஒண்ணுமில்லப்பா...நான் நல்லா இருக்கேன்..வயசாயிருச்சுல்ல சாப்பாடு கம்மியாயிருச்சு அதான் இளச்சிட்டேன்" என்றவளின் சுருங்கிய  கைகளை தன் கைகளில் வைத்துக்கொண்டவன் " நடக்க முடியிறதில்லயா?!" என்று அருகிலிருந்த சக்கர நாற்காலியை பார்த்தவாறு கேட்டான் கதிர். அவர்கள் பேசட்டும் என்று  குழந்தைகளை வெளியில் வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த மித்ரா  உள்ளே வர குடும்பமாக பெரியம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டனர்.   இல்லத்து பணியாளர்களின் கைகைகளில் பணத்தைத் திணித்தவன் " நீங்க செய்யுற உதவிக்கு எவ்வளவு குடுத்தாலும் தகும்...எங்க அம்மாவை நல்லா பாத்துக்குங்க" என்று உளம் உருக விடைபெற்றுக்கொண்டான். 

குளித்து முடித்து அலுவலக உடையில் வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தனது  பதினோரு வயது மகளிடம் விஷயத்தைக் கூற...அவள்  "Ohh ...that is sad " என்ற சுருக்கமான  பதிலை அளித்தாள். "சே...என்ன வாழ்கை...இருக்குற வரைக்கும் கூட  வச்சு பாத்துக்க  முடியல...இறந்ததுக்கப்புறமும் போயி பாக்கமுடியல" எங்களுக்காக எங்க பெரிம்மா எவ்வளவோ பண்ணியிருக்காங்க" என்று அங்கலாய்த்தவனிடம் "அதனால தானே ஊருக்கு போகும் போது பாத்துட்டு வந்தோம்...வெளிநாட்ல  இருக்குறனால இப்பிடி Feel பண்றீங்க " என்று சொல்ல நினைத்த மித்ரா எதுவும் கூறாமல் கதிரை பார்த்துக்கொண்டு நின்றாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு புலம்பியவன் Breakfast சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டான்.

குழந்தைகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு வந்த மித்ராவிற்கு அவளின் பெரியம்மா ஞாபகம் வந்தது. கதிரின் பெரியம்மாவிற்கு நேரெதிரான வாழ்க்கை வாழ்ந்தவள்...வாழ்ந்துகொண்டிருப்பவள். மித்ரா மட்டுமல்ல அவளின் கசின்களில் (Cousins) பாதிபேர் பெரியம்மா வீட்டில் வளர்த்தவர்களே. இருபது வருடங்களுக்கு முன் பெரியம்மா வீடு  ஜே ..ஜே என்று இருக்கும். கோபமோ சலிப்போ அன்றி  எப்போது சென்றாலும்  சாப்பிடு என்று அன்போடு உபசரிப்பாள் பெரியம்மா. மொட்டைமாடியில் விளையாடுவதற்கு இடம், செப்புப் பாத்திரம் என்று பெரியம்மா வீட்டில் சுதந்திரத்திற்கு அளவே கிடையாது. தனது குழந்தைகள் வளர்ந்து வாலிபத்தை எட்டிவிட்ட போதிலும் தனது உடன்பிறந்தோரின் குழந்தைகளால் அன்றாடம் சூழப்பட்டவளாக இருந்தவள் பெரியம்மா. மித்ரா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலும் அடிக்கடி பெரியம்மா வீட்டிற்கு செல்வதுண்டு. வயதிற்கும் காலத்திற்கும் ஏற்ற தக்க ஆலோசனைகளை  வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே. திருமணத்திற்கு பிறகும் ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு சமயமும் பெரியம்மாவை பார்க்காமல் வருவதில்லை.

கதிரின் பெரியம்மா பெயர் திலோத்தமா. மித்ராவின் பெரியம்மா பெயர் மேனகா. என்ன ஒரு  ஒற்றுமை?! என்று நினைத்தவளின் முகத்தில் அவளை அறியாமலேயே புன்னகை குடிகொள்ள பெரியம்மாவிடம் பேச தொலைபேசியின்  எண்களை வேகமாக அழுத்தினாள் மித்ரா.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கதிரின் முகத்தில் சோகம் வெகுவாகக் குறைந்திருந்தது. "மித்ரா...எங்க பக்கத்து வீட்டு பொண்ணு...என் தங்கச்சின்னு சொல்லுவேனே...அவளுக்கு பெண் குழந்தை பொறந்திருக்காம்" என்று கூறியவனிடம் "Ohh ...good " என்று பதிலளித்த மித்ரா "வாழ்கை ஒரு வட்டம் என்பது சரிதானோ?! " என்று நினைத்துக்கொண்டாள்.

பின்குறிப்பு : தாயாகும் வாய்ப்பை இழந்து, உலகத்தின் பார்வையில் அன்னையாக அறியப்படாது இருந்தாலும்,     தாயுள்ளத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து  அன்பு நெஞ்சங்களுக்குச்     சமர்ப்பணம்.


1 comment:

  1. excellent mai... especially that pin kurippu was touching... well done

    ReplyDelete