Monday, February 29, 2016

சிறு துளி பெரு வெள்ளம்

"ஆ..." என்ற சிறு  அலறளுடன்  காலில் குத்தியதை எடுத்து மூலையில் கடாசிவிட்டு சோபாவில் அமர்ந்த முகிலனுக்கு அங்கும் ஏதோ நெருட, " ச்சே...இந்த வீட்ல எதையாவது மிதிக்காம நடக்க முடியுதா?! உக்காரமுடியுதா?" என்று கோபத்திலும் வலியிலும் கத்தினான். அன்புக் கணவனை  சமையலறையில் இருந்து எட்டிப்  பார்த்து விட்டு தனது  வேலையைத் தொடர்ந்தாள் நிகிலா.

"ஏய்...விளையாடி முடிச்சா எடுத்து வைக்க தெரியாது?", " Clean Up" பண்ணு என்று தனது எட்டு வயது மகளைக் கடிந்து கொண்டான்.

லேப்டாப்-ல் விளையாடியபடி ஓரக் கண்ணால் தனது  அப்பாவை உளவு பார்த்துக் கொண்டிருந்த அவர்களது நான்கு வயது மகனிடம்,  " டேய் உனக்கு என்ன தனியா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடனுமா? வாடா..." என்று அதட்டினான். இனிமே ஒழுங்கா " Play Room"-ல உக்காந்து விளையாடனும் இப்பிடி வீடெல்லாம் இறச்சு போட்டீங்க..." என்று கண்களை உருட்டினான்.

"But Daddy..." என்று ஆரம்பித்த மகள் தம்பியின் மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தாள் ஆனால் இன்று எதுவும் அப்பாவிடம்  எடுபடாது போல  என்று தெரிந்ததும்  Mommy...என்று நிகிலாவை  நோக்கிக்  கூவினாள். இங்கு இருக்கும் பள்ளிகளில் முதலில் ஆரம்பிக்கும் பாடமே "We Always  Clean Up " பாடல் தான். அது ஏன் என்று இப்பொழுது தானே புரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டவளாய், " ஏன்டா... ரெண்டு பெருமா  சேர்ந்து எடுத்து வைங்களேன்" என்று தீர்ப்பு கூறினாள்.

"எப்ப பாத்தாலும் இப்பிடியே கெடக்குறது...சுத்தம் பண்ற வேலையே  இல்ல" என்று கணவன் முணுமுணுப்பதைக்  கேட்டதும் ஆவேசமடைந்தாள் நிகிலா. பொறியில் சிக்கிய மிருகத்தைப் பார்த்த வேட்டைக்காரனின் வில்லிலிருந்து பறக்கும் அம்பைப்  போல," என்னது...நல்லா சொல்லுவீங்களே?! என்ற வார்த்தைகள் முகிலனை நோக்கிச்  சீறிப் பாய்ந்தன. " நேத்து கூட எல்லாம் எடுத்து வச்சேன். அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே" என்று கோபத்தில் கொக்கரித்தாள். 

மனைவியைப் பார்த்த முகிலன் தனது  உரையாடலை குழந்தைகளிடமே தொடர்ந்தான் . " லேப் டாப், I-Pad-ன்னு அதுலயே உக்காந்துருங்க... என்று புதுத் தலைப்பில் தனது கோபத்தைத் திருப்பினான் . ஆனான் நிகிலாவோ  விடாப்பிடியாக, "Neat-ஆ இருந்தா ஒரு வார்த்த சொல்லாம போறது...இல்லைன்னா கத்துறது...என்ன ஒரு வில்லத்தனம்" என்று வடிவேலு ஸ்டைலில் கூற,  கோபம் களைந்து  புன்முறுவல் பூத்தான் முகிலன். "Let's Clean Up Together" என்று சமாதனமடைந்தான்.

அடுத்து வந்த சனிக் கிழமையில் தேவையில்லாதவற்றை தொண்டு நிறுவனங்களுக்கு  கொடுக்க முடிவு செய்தனர். புதையல் எடுப்பது போல மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்யப் பட்டது.   ஆனால் மகனும் மகளும் பல நாட்கள் விளையாடாத பொருட்களைப் பார்த்ததும் குதூகலமடைந்தனர். அடுத்தவர்களின் பிறந்தநாள் விழாக்களில் கொடுக்கப்படும், சிறிய சிறிய  டாலர் ஷாப் பொருட்கள் மட்டும் ஒரு பாக்ஸ் நிறைய நிரம்பி வழிந்தது. கால்களில் மிதி பட்டு உடைந்தது. ஆனால் மிகச் சிலவற்றை மட்டுமே கொடுக்க குழந்தைகள் அனுமதித்தனர்.  முடிவாக,  "இனி Toys-சே வாங்கக் கூடாது, வரவேற்பறையில் விளையாடக்கூடாது" போன்ற   தீர்மானங்கள்  நிறைவேறின. அவர்களின் முடிவுகள் எல்லாம் அடுத்த சில நாட்களே பின்பற்றப்பட்டது. உலகத்தில் எந்த மூலையில் இருந்தால் என்ன?! விதிகளைப் கடைபிடிப்பது நமக்கு வேப்பங்காய் சாப்பிடுவது போலத்தானே?! வழக்கம் போல் வீடும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

திருமணமான புதிதில் தினமும் வீட்டைப் பெருக்குவதைப் போல் நிகிலாவும் தபாலில் வரும் விளம்பரப் பத்திரிகைகள், கவர்கள் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டு இருந்தவள்தான். ஒரு நாள் ஏதோ முக்கியமானதை நிகிலா குப்பையில் போட்டுவிட்டதாக முகிலன் குற்றம் சாட்ட அன்றிலிருந்து,"இனிமே இதையெல்லாம் நான் தொடவே மாட்டேன்...நீங்களே வச்சுகோங்க...எடுத்துகோங்க" என்று கூறிவிட்டாள். சுத்தம் (Vacuum) செய்வது வாரத்திற்கு ஒருமுறை என மாறியது.

 தெருவிற்கு ஒன்றாக எத்தனை  துணிக்கடைகள் முளைத்தாலும் அனைத்திலும் கூட்டம் அலை மோதுவது போல, எத்தனை டேபிள்கள் இருந்தாலும் அனைத்திலும் பேப்பர்கள், கவர்கள், Coupon-கள் என்று   நிரம்பி வழிந்தன. பத்திரமாக இருக்கட்டும் என்று எதையாவது எடுத்து வைத்தீர்கள் நீங்கள் தொலைந்தீர்கள். தங்க மலை இரகசியத்தைக் கூடக்  கண்டு பிடித்து விடலாம் ஆனால் அவர்கள் வீட்டில் பத்திரப் படுத்தியத்தை   கண்டு பிடிக்கவே  முடியாது. இன்டர்நெட் வயர், போன் வயர், HDMI கேபிள் இன்னும் பல  பெயர் தெரியாத  வயர்க் குவியல்கள் TV-க்கு பின்புறம் பின்னிப் பிணைந்து மாய வலையாக வளர்ந்து கொண்டே சென்றது.

குழந்தைகளின் வருகைக்குப்  பிறகு பேப்பர்களோடு விளையாட்டுப் பொருட்களும் கை கோர்த்துக் கொண்டன. நிகிலாவும் அவள் பங்கிற்கு பிளாஸ்டிக் டப்பாக்கள், அட்டை டப்பாக்கள், Goody Bags என்று சேகரிக்க, சமையலறை Closet-களும் நிரம்பி, சிறு துளி பெரு வெள்ளமாக மாறியது. "Use and Throw-ன்னா என்னன்னு தெரியுமா?" என்று முகிலனும் அடிக்கடி நிகிலாவைக்  கேலி செய்வதுண்டு. " எங்கயாச்சும் வெளியில போகும்போது ஸ்நாக்ஸ், லஞ்ச்-ன்னு  எடுத்துட்டு போயி அப்பிடியே தூக்கி போட்டுறலாம்னு  எடுத்து வச்சுருக்கேன் " என்று நீண்ட நெடிய விளக்கத்தை வழங்கி முகிலனின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவாள். விடுமுறையில் விஜயம் செய்த முகிலனின் அம்மாவும், " இவ்வளவு நல்ல டப்பாவ (Baby Food Jars)  எல்லாம் தூக்கியா போட்ற?!" என்று அவள் பங்கிற்கு இரண்டு மூன்றை ஊருக்கு எடுத்துச் சென்றாள். "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது நம் ரத்தத்தில் ஊறிய பழமொழி அல்லவா?! நயா பைசாவுக்கு உதவாத "நயாகரா செருப்பு" கூட  அவர்கள் வீட்டு அலமாரியில் நலமாக  உறங்கிக் கொண்டிருந்தது.                  

 "ஒரு திருடனும் வீட்டுக்குள்ள வரமாட்டான்...அப்படியே வந்தான்னாலும் கால் வச்சு நடக்க இடம் இருக்காது...அவனுக்கு முன்னாடி யாரோ சூரையாடிட்டாங்கன்னு  நினைச்சு திரும்பிப் போயிடுவான் என்று சிரித்துக் கொண்டனர். அந்தப்  புதைக் குழிக்குள் "Remote -யை " தொலைத்து விட்டு தேடுவதும் தொடர் கதையாகிப் போனது. பிரசவத்தின் போது ஊருக்கு வந்த நிகிலாவின் அப்பாவும் இவர்களின் Remote  வேட்டையைப் பார்த்து," இந்த  வீட்டுக்குள்ளே நுழையுறதுக்கு முன்னாடியே " Bar Code " ஒட்டிறனும் அப்புறம் Scanner வச்சு   ஈசியா கண்டு பிடுச்சிறலாம்" என்று  கலாய்த்தார்.

முகிலனும் நிகிலாவும் அவ்வப்போது ஞானோதயம் வந்தவர்களாய் வீட்டை சுத்தம் செய்வதும், ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக் கொள்வதுமாய்  நாட்களை நகர்த்தினர். "பெரிய வீடு வாங்க நேரம் வந்திருச்சு போல" என்று நண்பர்கள் மறைமுகமாக சுட்டிக் காட்டினாலும், "பசங்க வளந்துட்டாங்கன்னா Clean ஆயிரும்" என்று பதில் கூறி, போலிச்  சமாதானம் செய்து கொண்டனர்.

அன்று அலுவலகத்தில் கடைசி நாளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய  முகிலனின் முதுகில் தொங்கும் லேப்டாப் பேக்-​ஐப் பார்த்ததும்," என்னங்க?! லேப்டாப்-ப  மறந்து எடுத்துட்டு வந்திட்டீங்களா?!" என்று வினவினாள். "இல்ல... Empty  Bag தான்.  இதை எப்படியும் reuse பண்ண மாட்டாங்க...அதான் நானே வச்சுக்கிறேன்-ன்னு எடுத்துட்டு வந்துட்டேன் எப்புடி?!" என்று சிரித்த முகிலனிடம்,  " நம்மள திருத்தவே முடியாது" என்று கூறி கணவனின் வெற்றிக்களிப்பில்  ஐக்கியமானாள் நிகிலா.       

Thursday, February 11, 2016

சமாரித்தன் ஆன சாமானியன்

   காலம் மாறிப்போச்சுங்க....நல்லவங்களையும், நம்பிக்கையானவர்களையும்  பார்ப்பதே அதிசயமா இருக்கு...பின்ன எப்பிடி மழை பெய்யும்?! அதான் வெயில் காச்சு எடுக்குது என்று நாலு பேர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். ஏன் நாமே கூட சில சமயங்களில் கூறியிருப்போம். நம் கூற்றுக்களை எல்லாம் பொய்யாக்கும் விதத்தில் மழை கொட்டித் தீர்த்து விட்டது. பல சமாரித்தர்களையும் நமக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. நான் சொல்வது அண்மையில் சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பைப் பற்றி என்று உங்களுக்கே புரிந்திருக்கும். 

இந்த நாலு பேர் கூறுவது போல நல்ல உள்ளங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமா? "ரோட்ல வழுக்கி விழுந்தா தூக்கி விடுகிறவனை  விட அத வீடியோ எடுத்து "Face Book ", " Whats App "- ன்னு Upload செஞ்சு " Like " வாங்க நினைக்கிறவன் தான் அதிகம்" இது  உண்மையா? என் அனுபவங்களைச்   சொல்றேன்... கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்!!!

அனுபவம் - 1

என்  பள்ளிக்  காலத்தில் சில வருடங்கள் தங்கை மற்றும் தம்பிகளுடன்  " ரிக்க்ஷா"-வில் பயணம் செய்ய நேர்ந்தது. ஒரு நாள் எங்கள் ரிக்க்ஷாவை பின்னால் வந்த கார் லேசாக உரச, சக்கரம் நெளிந்து நின்று விட்டது. வீட்டிலிருந்து சிறிது தூரமே கடந்திருந்த படியால்  , நடந்தும்  பள்ளிக்குச்  செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று எங்களுக்கோ கலவரம். இன்னைக்கு லீவு தான் என்று நினைத்திருந்த வேளையில்  எங்கள் ரிக்க்ஷாக்கார அண்ணன் வண்டியின்  பழுதிற்கு பணம் வாங்கியதோடு நில்லாமல்  எங்களை பள்ளியில் " Drop " செய்ய வேண்டும் என்றும்  வாதாடி வென்றார். எங்களுக்கோ காரில் செல்லப்போகிறோம் என்று ஒரே ஜாலி. கடைசி தம்பியைத் தவிர மற்ற மூவரின் பள்ளிகளும் அருகருகே இருந்ததால் பள்ளியின் வாசலிலே பந்தாவாக இறங்கிக் கொண்டோம். அன்று ஏதோ பெரிய அதிசயம் நடந்து விட்டதைப் போல் பீற்றிக் கொண்டோம்.

அன்று மாலை வீட்டிற்கு வந்தும் நாங்கள்  அதே புராணம் பாட, ஒன்றாம் வகுப்பில் இருந்த  என் கடைசித் தம்பி, " நீங்களெல்லாம் இறங்கிட்டீங்க ஆனா அந்த கார்காரன் வேற பக்கம் திரும்பனும்... என் ஸ்கூல் வரைக்கும் வர முடியாதுன்னு சொல்லிட்டு இறக்கி விட்டுட்டான்" என்றதும் எங்களுக்கு பகீரென்றது. பின்ன எப்பிடிடா அவ்வளவுதூரம் போன?! ரோடெல்லாம் எப்பிடி "Cross" செஞ்ச?! என்றோம். அதற்கு அவன், ரிக்க்ஷாக்கார அண்ணன் தான் கூட்டிட்டு போய் விட்டார். வேனான்னு சொல்ல சொல்ல  கேக்காம," சும்மா இரு தம்பி அவ்வளவு தொல நடக்க முடியாது அதனாலதான அப்பா வண்டியில அனுப்பரார்-ன்னு  என்ன இடுப்புல தூக்கிகிட்டார்" என்றதும் தம்பியை கிண்டலடிக்கத் தொடங்கினோம்.             

அவர் நினைத்திருந்தால் எங்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு சக்கர பழுது வேலைகளை கவனிக்கச் சென்றிருக்கலாம் ஆனால் ரிக்க்ஷாவை ரோட்டோர கடையில் நிறுத்திவிட்டு எங்களுடன் பயணித்தார். மாலையில் ரிக்க்ஷாவோடு பள்ளி வாசலில் நின்றிருந்தார். அன்று அவரின் இந்த தன்னலமற்ற செயலை புரிந்து கொள்ள வயதோ, அனுபவமோ  எங்களுக்கு போதவில்லை.
...

அனுபவம் - 2

நிறுத்துங்க...பஸ்ஸ நிப்பாட்டுங்க... என்று பஸ்சிற்கு பின்னால் கதாநாயகி ஓடி வருவதை சில பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். நானும் ஒருமுறை அவ்வாறு கூற நேர்ந்தது?! ஆனால்  பஸ்ஸின்  உள்ளே நின்றுகொண்டே...என் அலுவலகம் சற்று "Remote" ஏரியாவில் இருந்ததால் பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டுமானால் அலுவலக வேனிற்கு காத்திருக்க வேண்டும் இல்லையெனில் "Load " ஏற்றிக்கொண்டு வரும் டெம்போ வேனில் " லிப்ட் " கேட்கலாம். அவ்வாறு தான் அன்று பேருந்து நிலையத்தை அடைந்திருந்தேன்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்து ஐந்து நிமிடத்திருக்கு பிறகுதான் தெரிந்தது பர்சை எங்கோ தவற விட்டுவிட்டேன் என்று அப்போது கூறியதுதான் " பஸ்ஸை நிப்பாட்டுங்க" என்ற டயலாக். கண்டக்டர், " ஏம்மா?! என்றார். விவரத்தைக் கூற " காசே இல்லையா", என்றார். கைப்பையின் அனைத்து ஜிப்பிலும் துலாவி ஐந்து ரூபாயை கண்டெடுத்தேன். அருகில் அமர்திருந்த பெண்மணி ஐந்து ரூபாய் கொடுத்தார். நல்லா திட்டப் போறார் என்று நினைக்கையில் அவர் பதிமூன்று ரூபாய்க்கான டிக்கெட்டுடன் ஐந்து ரூபாயையும்  என் கையில் கொடுத்து, "டவுன் பஸ்ஸுக்கு வச்சுகோங்க" என்றார். தேங்க்ஸ் என்ற ஒற்றை வார்த்தையோடு அமர்ந்து கொண்டேன்.

வீட்டிற்கு வந்து நடந்தவற்றை கூற, " எங்க பர்ஸ தொலைச்ச" என்றாள் அம்மா. "அந்த டெம்போ வேன்லதான் மடியில வச்சிருந்தேன் அப்பிடியே கீழ விழுந்திருக்கும் போல" என்றேன். எதிர்பாராத விதமாக ஒரு மாதம் கழித்து அந்த வேன் மறுபடியும் எங்கள் அலுவலகத்திற்கு வர அதன் டிரைவர் என் பர்சை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டுச்  சென்றிருந்தார். அனைத்தும் அப்படியே இருந்தது ஒரு பைசா குறையவில்லை. ஒரு கல்லில் ரெண்டு மாங்கா என்பது போல ஒரே சம்பவத்தில் இரண்டு " சமாரித்தர்களை" காண நேர்ந்ததைக் கண்டு வியப்படைந்தேன்!!!
...

அனுபவம் - 3

   அன்று காலை முதலே தூவானம் தூறிக்கொண்டே இருந்தது. நான் பள்ளியை அடைந்ததும் ஜோராக மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மாலையில் பள்ளியை விட்டு வெளியில் வந்ததும் தான் தெரிந்தது அந்த சாலை முழுவதும் தண்ணீர் முட்டி அளவு தேங்கி நின்று கொண்டிருந்தது. நானும் என் தங்கையும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு, " இதுல எப்பிடி நடந்து வருவான் கழுத்து வரைக்கும் தண்ணி வருமே" என்று கவலையோடு எங்கள் குட்டித் தம்பியின் வருகையை எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருந்தோம்.

அப்போது தொலைவில் ஒருவர் அவருடைய பையனை தோள் மேல் தூக்கிக் கொண்டு வருவதைப்  பார்த்தோம். அவனும் சிம்மாசனத்தில் அமர்ந்து வலம்  வரும் ராஜகுமாரனைப் போல ஒய்யாரமாக  வந்து கொண்டிருந்தான். அருகில் வர வரத்தான் தெரிந்தது அவன் எங்கள் வீட்டு இளவரசன் தான் என்று... எங்களுக்கோ சிரிப்பு முட்டிக் கொண்டு நின்றது ஆனால்  அவரோ  இறக்கிவிட்டு விட்டு  நன்றியைக்கூட எதிர்பாராமல் போய்க்கொண்டே இருந்தார். "என்னடா இப்பிடி?!" என்று ஆரம்பிக்க, "தண்ணியில  எப்பிடி வர்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு முக்குல நின்னப்போ, இவர் தான் வா தம்பி தூக்கிட்டு போறேன்னு கூட்டிட்டு வந்தார்" என்றான். "ராஜ மரியாத தான்" என்று கலாய்த்தோம் அவனை.
...

அனுபவம் - 4

வழக்கம் போல் அன்றும் எட்டு மணிக்கெல்லாம் கல்லூரிக்குச் சென்று விட்டேன். அமைதியான வளாகத்தில் அமர்ந்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன். எங்கள் ஆங்கில பேராசிரியை என்னை நோக்கி வர எழுந்து நின்று," Good Morning Mam " என்றேன். பதட்டமாக காணப்பட்ட அவர் " உன் Blood Group என்னன்னு  தெரியுமா?" என்று கேட்டார். நானும் தெரியும் என்று கூற, இன்று அரசு பொது மருத்துவமனையில் ஒரு இருதய அறுவை சிகிச்சை நடக்கப் போவதாகவும் அதற்கு இரத்தம் கொடுப்பதற்காக பலரை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதில் ஒரு மாணவி வர இயலாததால் என்னால் வர முடியுமா? என்று கேட்டார். எனக்கோ ஊசி என்றாலே பயம் ஆனால் வருகிறேன் என்றேன். நான் பேசுவதை என்னாலே நம்ப முடியவில்லை. மருத்துவமனை நடக்கும் தூரம் தான். அங்கு நோயாளியின் குடும்பமே எங்களை எதிர் நோக்கி  நின்றிருந்ததையும் அவர்களின் சோகம் நிறைந்த முகங்களையும் பார்க்கும் பொழுது என் பயம் மெல்லக் கரையத் தொடங்கியது.

மதியம் அவரே என்னை என் வகுப்பறைக்கு அழைத்து வந்து, என் பேராசிரியரிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுச் சென்றார். "உங்க அம்மா அப்பாவுக்கு சொல்லாம இந்த வேலையெல்லாம் தேவையா?" என்ற எங்கள் பேராசிரியை,"மயக்கம் வந்தா பின்னாடி பெஞ்ச்ல படுத்துக்கோ" என்றார். இல்லை என்று  சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்த எனக்கு  " டெஸ்டுக்கு எல்லாரும் ரெடியா? என்று அவர் கூறியது கேட்டவுடன்  தலை மிக வேகமாக  சுற்றத் தொடங்கியது.
...

அனுபவம் - 5

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. மார்கெட்டில் நல்ல கூட்டம். நானும் என் தம்பியும் அம்மாவோடு சென்றிருந்தோம். " ரொம்ப நெரிசலா இருக்கு அவன கெட்டியா பிடிச்சுக்கோ" என்று கையில் இரண்டு கூடையுடன் முன்னால்  சென்றவாறு என்  அம்மா கூற பிடியை இருக்கினேன் ஆனால் எப்பிடியோ தக்காளி வாங்கும் ஆர்வத்தில் தம்பியைத் தவறவிட்டு  விட்டேன். தம்பி எங்கடி? என்று அம்மா அலற மார்கெட் எங்கும் சுற்றினோம். பதற்றமாக அங்கும் இங்கும் போவதையும், ஒரு நாலு வயசுப் பையனப் பாத்தீங்களா? என்று நாங்கள் விசாரிப்பதையும் பார்த்த காய்கறி விற்கும் பெண்மணி," ரெண்டு கடை தள்ளி இருக்கிற கடையில ஒரு பையன் நிக்கிறான் பாருங்க' என்றதும் ஓட்டமும் நடையுமாக விரைந்தோம். அங்கு எங்களைப் பார்த்ததும் "அம்மா " என்று ஓடி வந்தான் தம்பி." உன் பையனா? நட்ட நடுவுல நின்னு அழுதுகிட்டிருந்தான். கூட்டத்துல யாருனா கூட்டிட்டு போனா என்ன ஆவுறது?! அதான் இங்க பிடுச்சு நிப்பாட்டினேன். எப்பிடியும் தேடிகிட்டு வருவீங்கன்னு தெரியும் என்று கூற நன்றி கலந்த பார்வையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். வீட்டில் எனக்கு சிறப்புப் பூஜை நடந்தது என்பது வேறு கதை.
...

அனுபவம் - 6

மூன்று மாதத்திற்கு முன் ஊருக்குப் போன  சமயத்தில் " பேன்சிஸ்" ஸ்டோருக்கு பொட்டு, கிளிப் இத்யாதிகளை வாங்கச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லாத மதிய வேளை. என்னோடு சேர்ந்து நடுத்தர வயதை ஒட்டிய பெண்மணி ஒருவரும் இருந்தார். தனது பெண் பூப்படைந்து விட்டதாகவும் அவளுக்காத்தான் " மேக்கப்" பொருட்கள் வாங்க வந்ததாகவும்  கூறினார். சில, பல முறை தன் பெண்ணுடன் போனில் கலந்தது பேசி ஒரு வழியாக  "Shopping"-யை முடித்தார். பலத்த பேரத்திற்குப் பிறகும் அவருக்கு பணம் போதவில்லை. ஒரு சில பொருட்களை திருப்பி வைத்து விடுமாறு கடைக்காரர் கூற, எதை எடுத்து வைத்தால் தன் பெண்ணின் ஏமாற்றம் குறைவாக இருக்கும் என்று தத்தளித்துக்  கொண்டிருந்தார். அவரைத் தடுத்த நான், பணத்தைக் கொடுத்தேன்.  வாங்க மறுத்த  அவரிடம், என்னை அவருடைய தங்கையாக பாவித்து வாங்கிக் கொள்ளும் படியும், என்னுடைய வாழ்த்துக்களை அவரின் பெண்ணிற்குக் தெரிவிக்கும் படி   கூறியும் விடை பெற்று வந்தேன்.


பேரிடர் காலங்களில் மட்டும் தான் மக்கள் உதவ முன் வருகிறார்கள் என்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்கள் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அதை பெரிதாக யாரும் விமர்சிப்பதில்லை. பல கைகள் சேர்ந்து  எழுப்பும் ஒலியே அனைவரின் காதுகளையும் சென்றடைகிறது ஆனால் ஒரு சிலர் செய்யும் உதவிகளோ   மனதில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் கடைசிவரை!!!  " காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது" எனும் வள்ளுவர் வாக்கு பொய்யாகுமா என்ன?!?!

என்ன உங்கள் வாழ்வில் சந்தித்த சமாரித்தர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டீர்களோ?! எண்ணுங்கள் எண்ணுங்கள்...விரல்கள் போதாது!!! அதோடு நின்று விடாமல் நீங்களும் சமாரித்தர்களாக மாற முயலுங்கள்.
...      

   
 
         


Monday, January 11, 2016

சுடாத தோசை!?!?

 மிச்சம் மீதியை பிரிட்ஜில் வைத்து விட்டு பாத்திரங்களைக்  கழுவும் தனது வழக்கமான மாலை வேலைகளில் மும்முரமாக இருந்தாள் நிவேதா. 

" what is for Dinner?", என்று வினவினாள் அவளது எட்டு வயது மகள்.

தெரியலடா?!?! அப்பாவைக் கேட்கணும் என்றாள் நிவேதா. "இந்த காலத்தில் அப்பாவைக் கேட்டுவிட்டு சமைக்கும் அம்மாவா?!?!" என்று அவசரப்பட்டு ஆச்சர்யப்பட்டு விடாதீர்கள் தொடருங்கள் உங்கள் வாசிப்பை...

நிலேஷ்  வந்ததும் வராததுமாக, " what is  for Dinner Daddy  ?" என்று துளைத்தெடுத்தனர் மகனும் மகளும். "தெரியலடா ...அம்மாவைத்தான் கேட்கணும்" என்றதும் முகம் மலர்ந்தனர் வாண்டுகள். "இதில் என்ன சந்தோசம்?!? என்று குழப்பமா? 
நீங்கள் அந்த வீட்டு உறுப்பினராக இருந்திருந்தால் வெள்ளிக் கிழமைகளில் நடக்கும்  இத்தகைய உரையாடல் எதில்,எங்கு  முடியும் என்று நன்கு உணர்ந்திருப்பீர்கள். மகிழ்ச்சிக்கான காரணமும் புரிந்திருக்கும்.

கிச்சனில் நுழைந்தவாறு நிவேதாவை நோக்கி " எங்கயாவது வெளிய போகனுமா"? என்றான் நிலேஷ்.  "இந்த வாரத்துல ரெண்டு birthday party இருக்கு, கிப்ட் வாங்கப்  போகணும்" என்றாள். " அப்ப Dinner?" என்றவனிடம், "மாவு தீந்துருச்சு, சட்னி இருக்கு கோதுமை தோசை ஊத்தலாம்" என்ற பதிலை எதிர் பார்த்தவனாய் "சரி வா கிளம்பு" என்றான். குழந்தைகளிடம் மாலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து தான் "Dinner" என்று கிளம்பினர்.

அன்று "ரெஸ்டாரண்ட்-ல் " இரவு உணவை முடித்துவிட்டு வீடு திரும்பினர். மால்-ல லேட்டாயிருச்சு, இவங்க ரெண்டு பேரும் படுத்தினதாலதான்  என்று வெளியில் சாப்பிட்டதற்கு  பல  காரணங்களைக்  கூறிக்கொண்டாலும்" கோதுமை தோசை " என்றதுமே வெளியில் தான் "டின்னெர் " என்று நிலேஷ் முடிவு செய்திருந்ததையும்  அதை எதிர்பார்த்து தான் நிவேதாவும் அந்த "Choice"-யை கூறினாள் என்பதையும்  நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால்   இவர்களின் எண்ண ஓட்டங்களை மிகத்  தெளிவாக புரிந்து கொண்டனர்  குழந்தைகள்  இதுவே அவர்களின்  குதுாகலத்திற்கு காரணம்!!!

பின்பு வந்த வாரங்களில் வாங்கிய பொருட்களை ரிட்டன் செய்வது, வீக்லி ஷாப்பிங்  செல்வது என்று வெளியில் சாப்பிடுவது என்பது  வாடிக்கையாகி விட்டது. இடையிடையே பிறந்த நாள் விழா, "Pot Luck Lunch  " போன்றவையும்  அழையா விருந்தாளியாக வர " Out Side Food " தவிர்க்க முடியாததானது.

 சில நேரங்களில் "Chinese, Japanese, Mediterranean " ட்ரை பண்ணலாமா?!?! என்றும் புது "Indian Restaurant" ஓபன் பண்ணியிருக்காங்களாம் ஆபீஸ்ல பேசிகிட்டாங்க என்றும் தொட்டுத் தொடரும் தொடர் கதையாக மாறியது. சில சமயங்களில் எங்கு சாப்பிடுவது என்று தெரியாமல் கண்டதை தின்று இதுக்கு உன்  உப்புமாவே தேவல என்று   புலம்புவதும், "நீ சொன்னதாலதான்" என்று அவனும் " இனிமே இந்த மாதிரி ஹோட்டலுக்கெல்லாம் உங்க பிரண்ட்ஸ் கூட போய்க்கோங்க" என்று நிவேதாவும் கூற சண்டை வருவதெல்லாம் சகஜமானது.

கல்யாணமான புதிதில் கூட இப்படித்தான். ஒரு ஐடம் ஆர்டர் செய்ய இவ்வளவு நேரமா? என்று நிலேஷ் முறைக்க, ஹோட்டல்காரனே சும்மா இருக்கான் உங்களுக்கு என்ன? என்று நிவேதா மல்லுக்கட்ட சாப்பிடாமல் எழுந்து வந்த கதையெல்லாம் உண்டு!!! அதற்கு பிறகு இனிமே " Buffet " தான் என்று முடிவு செய்தாகிவிட்டது. என்ன சாப்பிடுகிறோம்?!?! எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு வழக்கின்றி கட்டுவது பழக்கமானது.

 ஓர் நாள் திடீர் ஞானோதயம் வந்தவனாய், " நிவே நம்ம வெளிய சாப்பிற்றத குறைச்சுக்கனும்" என்றான் நிலேஷ். ஒரு மாதத்திற்கு வீட்டு சாப்பாடுதான் என்று முடிவானது. குழந்தைகள் அடம் பிடித்தனர் " Boring " என்று அழுதனர். " நாங்களெல்லாம் உங்க வயசிலே Hotel- ல சாப்பிடதே இல்ல தெரியுமா? வெளியிலே போயிட்டு எவ்வளவு லேட்டானாலும் வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவோம். சினிமாவுக்கு கூட வீட்ல இருந்து " Snacks " எடுத்துட்டு போய்டுவோம்"  என்று அவர்கள் கற்பனை கூட  செய்து பார்க்க முடியாத விஷயங்களை அறிவுரைகளாக  முன்வைத்தாள் நிவேதா. " நான் வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் வெளிய சாப்ட ஆரம்பிச்சேன் அதுக்கு முன்னாடியெல்லாம் எப்போதாவது எங்கம்மா ஓட்டல் தோசை வாங்கிக் கொடுப்பாங்க அதுவும் பார்சல் தான் என்றான் நிலேஷ் அவன் பங்கிற்கு.

ஒரு வாரம் சென்றது. " வீட்லயே Pizza செய்யலாமே? " என்ற நிலேஷ்  அவனே சமைத்தான். பின்பு ஒருநாள் பிரண்ட்ஸ் வீட்டில் டின்னெர் என்றும், அவர்களை " Invite " செய்யனுமில்ல?!  என்றும்   வீட்டில் பஜ்ஜி, பூரி சமைத்து ஒரு கை பார்த்தனர். இரண்டு வாரங்கள் உருண்டோடியது. நிலேஷ் "கலிக்ஸ்ஸோடு" வெளியே சாப்பிட்டு கொண்டுதான் இருந்தான். நிவேதாவிற்குத் தான்    அலுப்பும் அசதியும் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது. நான் சான்விட்ச் செய்யறேனே?! என்ற நிலேஷ்  சீஸ், மையோநெஸ் என்று மிகவும் "ஹெல்தியான?! " உணவுகளை உள்ளே தள்ளினர். இதுக்கு ரெஸ்ட்டாரெண்ட்- யே பரவாயில்லே என்ற நிவேதாவிடம் பிள்ளைங்களுக்கு பிடிச்சிருக்கில்லே ? என்று சமாதானம் கூறினான்.

இப்படியே ஓர் மாதம் உருண்டோடியது. "என்ன.. இன்னக்கி சாயங்காலம் வெளிய சாப்பிடலாமா? ஒரு "Coupon " இருக்கு  என்ற நிலேஷை நோக்கி நிவேதா  ஒர்  புன்னகை வீச, "வேதாளம்" மீண்டும் முருங்கை மரம் ஏறியது......

ஹோட்டல்​ல சாப்பிடுவது பெரிய கொலைக்குத்தம் மாதிரி பேசுறீங்களே?!?! என்று நினைக்கிறீர்களோ?!?! பொருளாதார சிக்கல்கள் இல்லாத பல சில  குடும்பங்களில் வெளியில் சாப்பிடுவது என்பது  ஒரு கலாசாரமாகவே மாறி வருகிறது.  உடல் உழைப்பே இல்லாத இந்த வாழ்கை முறையில் இது குற்றம் மட்டும் இல்லை நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் குழி.

என்ன... நிலேஷ், நிவேதா தம்பதியினர் தங்கள் கொள்கையில்?! தீவிரமாக இறங்கினார்களா? அந்த "கோதுமை தோசை"-யை ஒரு தடைவையாவது சாப்பிட்டர்களா?!? இல்லையா ? தெரிந்து கொள்ள ஆசையா? எனக்கும்தான்!!!               


Monday, December 21, 2015

சொல்ல மறந்த வரலாறு

"பள்ளி, கல்லூரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த, உங்கள் மனதைக் கவர்ந்த பாடம் (Subject ) எது?" என்று கேட்டால் பல பேர் கூறும் பதில் கணிதம் அல்லது அறிவியல் என்பதாகத் தான் இருக்கும். சில பேர் மொழிப்பாடங்களைக் கூடக் கூறுவதுண்டு ஆனால் தப்பித் தவறிக் கூட வாயில் வராத சொல் " சமூக அறிவியல் " என்று அனைவராலும் அன்பாக(?!?!) அழைக்கப் படும் வரலாறு. 

என் பள்ளிக்காலங்களில் மூன்றாம் வகுப்பு முதலே  சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப் பட்டது. பத்தாம் வகுப்பு வரை  " கட்டாய பாடமாக" கற்பிக்கப் பட்டதே தவிர "கற்றுக் கொள்ளும் " பாடமாக இல்லை என்பதே நிதர்சனம். பல பேருக்கு ஒரு சில " Subject " மேல் ஏற்படும் தணியாத ஆர்வத்திற்கு அதைக் கற்பித்த ஆசிரியர்களே காரணம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியானால் வரலாற்று ஆசிரியர்கள் சரியாகக் கற்பிப்பதில்லையா?!?!

"நர்சரிப் பள்ளியில்" படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் ஆறாம் வகுப்பு முதல்  ஆண்கள் பயிலும் உயர் நிலைப் பள்ளிக்கு மாறினான். தனது  ஆசிரியர்களின்  கற்பிக்கும் வழிமுறைகளால் மிகவும் ஈர்கப்பட்டவனானான். தனது வரலாற்று ஆசிரியர் பாடத் தோடு நகைச்சுவை கலந்து   கூறும் பல இணைக் கதைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்வான். வெறுமனே புத்தகத்தை மட்டும் வரலாறு என்று  வாசித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, நாம்  படித்துக் கொண்டிருப்பது கற்பனைப் கதாபாத்திரங்களைப் பற்றி  அல்ல....நாம் வாழும் இதே நாட்டில் இரத்தமும், சதையுமாக வாழ்ந்து, சாதித்து இறந்து போன உண்மையான மனிதர்களைப் பற்றியது என்ற உணர்வு முதல் முறையாக ஏற்பட்டது.  

எங்களுக்கு   திருமணமாகி நான்  புதிதாக அமெரிக்கா(?!?!)விற்கு வந்த நேரத்தில் "மிஸ் வேர்ல்ட் " போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் போகிற போக்கில் என் கணவரிடம் அமெரிக்கா என்று எதற்கு இத்தனை "Contestants " யை காமிக்கிறாங்க? ஒவ்வொரு "டைம் ஜோன்" க்கு ஒவ்வொருத்தரா?  என்று கிண்டல் கலந்த தொனியில்  கூற என் கணவர் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் என்னை நோக்கினார். அமெரிக்கா என்பது U.S.A  மட்டும் இல்லை என்றும் வட அமெரிக்கா கண்டம் முழுவதும் என்று விளக்க "இது ஏன் எனக்கு தோன்றவில்லை?!? என்று அவமானமடைந்தேன். அன்று முதல் "கூகுள்" வரைபடத்தை எனது தோழியாக ஆக்கிக் கொண்டேன்.

என் தங்கையிடம் இதே கேள்வியைக் கேட்க அவளின் தெளிவான பதிலைக் கண்டு வியந்தேன். தனது ஒன்பதாவது வகுப்பு ஆசிரியை வாரம் ஒருமுறை தவறாமல் " Map Test " வைப்பார் என்றும் அப்பொழுது கற்றுக் கொண்டதே இன்று வரை கை கொடுப்பதாகக் கூறினாள். எனக்கு ஏற்படும் பல வகையான வரலாற்று, புவியியல்  சந்தேகங்களுக்கு இன்று வரை என் கணவரின் பதிலையே உடனடி நிவாரணமாகக் எடுத்துக் கொள்கிறேன். கல்லூரிக் காலங்களில் அரசுப் பொதுத் தேர்வில் கலந்து கொள்வதற்காகப்  பல வகையான புத்தகங்களைப் படித்ததாலேயே தன்னால் ஓரளவிற்கு பதில் கூற முடிகிறது என்று என் கணவர் கூறுகிறார்.

நம் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் வரலாற்று பாடங்களுக்கு
முக்கியத்துவம் ..... ஏன் சொல்லிக் கொடுப்பதே  இல்லை. " Total Mark " அதிகமா வாங்கணும்னா "மொழிப் பாடங்களைப் படி" என்று கூறுகிறார்களே தவிர யாராவது " சமூக வரலாறு" படி என்கிறார்களா? ஏன் நாம் படிப்பதெல்லாம் மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும் தானா?!?!...

உயர் நிலைப் படியில் இரண்டு வருடமும் கடிவாளம் கட்டிய குதிரைகளாக நம் குழந்தைகளை மாற்றி விடத் துடிக்கிறோம். குறைந்த பட்சம் நம் மாவட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமான  " ப்ராஜெக்ட் " களை கொடுத்து "Present " செய்யச் சொல்லலாமே?!?! நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அனைவருக்கும் "சத்திய சோதனை " புத்தகம் கொடுக்கப்பட்டு, தேர்வும் வைக்கப் பட்டது. ஆனால் நாங்கள்  யாரும் இருபது பக்கத்தைக் கூட தாண்டவில்லை. எந்த ஆசிரியராலும் படிக்குமாறு நாங்கள் வற்புறுத்தப்படவும் இல்லை!!!

எப்ப பார்த்தாலும் அசோகர் மரத்தை நட்டார், அக்பர் ,பாபர் காலத்து ஆட்சி இதுதானே வரலாறு என்று சலித்துக்கொள்ளும் நம்மில் பலருக்கு அதைப் பற்றியாவது தெளிவாகத் தெரியுமா?!?...."பாரிஸ்" என்றால் நம்ம "பாரிஸ் கார்னர்" தானே? என்றும் "ஓடி விளையாடு பாப்பா" என்று பாடியவர் பாரதிராஜா என்று பேசும்    நகைச்சுவைகளை ரசித்து சிரித்து விட்டு  உண்மையை அறிய மறுக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பள்ளி, கல்லூரி  பாடத்திட்டத்தில் எதாவது வரலாற்று நிகழ்வு  அல்லது சரித்திரத்தில் மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட  மாமனிதர்களைப்  பற்றிய  புத்தகத்தை இணைக்கலாமே?!? இதன் மூலம் படிக்கும் ஆர்வத்தையும், நூலக பயன் பாட்டையும் வளர்க்கலாமே?!?! ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான
"செமினார்" களுக்கும்  ஏற்பாடு செய்யலாம். வரலாற்று மாணவர்களும், ஆய்வாளர்களும் மட்டும் தான்  படிக்க வேண்டும் என்றில்லாமல் அனைத்து துறை மாணவர்களின் பாடத் திட்டத்திலும் வரலாறு இடம் பெற வழிவகை செய்ய  வேண்டும்.     

அமெரிக்கா, ஐரோப்பாவைப் பற்றிய  வரலாற்று  ஆவணப் படங்கள் இணையத்தில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. மிக தத்ரூபமாக அந்தந்த நூற்றாண்டுகளுக்கே நம்மை அழைத்துத் செல்பவையாக இருக்கின்றன. திரைப்படத் துறையில் நம் இந்தியர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் ஏன் அத்தகைய முயற்சிகளை  செய்யக்கூடாது? அரசு நிதி உதவியோடு "பிரம்மாண்டமாக" எடுக்கப்பட்டு பள்ளிகளில் தொடர்ச்சியாகத்  திரையிடலாமே?!?! நம் வரலாற்றை காட்சிகளாக காண்பதால் நம் மனதில் மிகவும் ஆழமாக பதிய வைக்க முடியும். நம் வரலாற்றுத்  தலைவர்களைப் பற்றி பல திரைப் படங்கள் வெளிவந்திருப்பதை மறுக்க முடியாது ஆனால் பிரபல நடிகர்கள் நடிப்பதால் அவர்களைத் தாண்டி அவர்களின் பாத்திரங்கள் நம் மனதில் பதிய மறுக்கிறதோ?!?!

முடிந்து போனதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறோம்?!? என்று  நீங்கள் கேட்பது புரிகிறது. நம்மோடு இல்லாத நம் பாட்டன், முப்பாட்டன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நாம்  நம் முன்னோடிகளைப் பற்றியும் சாதனையாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் பெருமிதம் கொள்ள வேண்டாமா?!? அவர்கள் வாழ்விலும், சரித்திரத்திலும் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் நமக்கு "இன்ஸ்பிரேசன்" ஆகக் கூட மாறலாம். நம்மில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்வேகத்தை தட்டித் திறக்கும் திறவு கோல்கள் பல சரித்திரத்தில் புதைந்து கிடக்கின்றன அவற்றை அறிய வேண்டாமா?!? உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா?!?  குறைந்தபட்சம் வரலாற்று வதந்திகள் பரவுவதையாவது  தடுக்கலாமே!!! "இந்தியா ஒளிர்கிறது",
"டிஜிட்டல் இந்தியா" என்றெல்லாம் முன்னேறும் வேளையில் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்களை பற்றி  அறிந்து கொள்ளவது அவசியம் என்றே தோன்றுகிறது.

 பெற்றோர்களாகிய  நாம் பல ஆய்வுப்  புத்தகங்களை வாங்கிக் குவிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் வரைபடங்களையாவது வீட்டில் ஒட்டி வையுங்கள். சரித்திரம் கொட்டிக் கிடக்கிறது ஆனால் அதை அறிந்து கொள்ளும் ஆர்வமோ வற்றிக் கிடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.   விமானத்தில் தான் உலகைச்  சுற்றி வர வேண்டும் என்பதில்லை....வரை படத்தில் கூட சுற்றி வரலாம் .... வாருங்கள்!!! 

Thursday, November 5, 2015

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?!?!

   சுவர் கடிகாரம் மாலை ஐந்தரையை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.

        கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ராகேஷை " Daddy" என்று அவனது ஒன்றரை வயது மகனும், ஆறு வயது மகளும் குதூகலத்துடன் வரவேற்றனர். ஷூவைக் கழட்ட விடாமல் காலைக் கட்டிக் கொண்டு நின்ற மகனைத் தூக்கிக் கொண்டு, " Guess What " என்று தனது பள்ளியில் நடந்தவற்றை கூறத் தொடங்கிய  மகளை நோக்கி," அம்மா எங்கடா ? " என்றான் ராகேஷ்.

   என்ன இன்னைக்கி " Traffic " இல்லியா? என்றவாறு உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள் நிரூபமா. அவள் கூறியதை காதில் வாங்காதவனாய், "உனக்கு விஷயம் தெரியுமா?" எனக்கு அடுத்த வாரத்திலிருந்து இரண்டு நாள் " Work From Home " கொடுத்திட்டாங்க!!! என்றான் மலர்ந்த முகத்துடன். 

       கடந்த ஆறு மாதங்களாக, " எல்லாரும் வாரத்தில ரெண்டு நாள் தான் ஆபீஸ் போறாங்க. மத்த நாளெல்லாம் வீட்ல இருந்து தான் வேலை பாக்குறாங்க. நீங்க என்னன்னா ஸ்கூல் பயன் மாதிரி டெய்லி ஆபீஸ் போறீங்களே? என்ன பொல்லாத கம்பெனியோ? என்று ராகேஷை நச்சரித்துக் கொண்டிருந்தாள். இன்று அவள் ஆசை நிறை வேறிவிட்டது.

     இனிமேல் அறக்க பறக்க சமைக்கத் தேவையில்லை. மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர (குளிரிலும், மழையிலும்) மகனையும் தூக்கிக் கொண்டு ஓடத் தேவையில்லை. மகனை கணவரிடம் பார்க்கச் சொல்லிவிட்டு குளித்து விட்டு வந்து விடலாம். முக்கியமாக டிராபிக்-ல் தினமும் இரண்டு மணி நேரம் விரயம் ஆவதைத் தடுக்கலாம்.  'ஏய்ய்!!! "நினைச்ச படி...நினைச்சபடி" என்று அவள் மனம் ஆனந்தக் கூத்தாடியது.

        அடுத்து வந்த இரண்டு வாரங்களில் வேலைப் பளு குறைவாக இருந்ததால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் லேப்டாப்- பை  மூடி வைத்து விட்டான் ராகேஷ். சில நாட்கள் "மால்," சில நாட்களில் கோவில் என்று மாலை வேலைகளில் கிளம்பி விட்டனர். "வீட்ல இருந்து வேலை செஞ்சா அலுப்பு தெரிவதே இல்லை அதனால Gym-க்கு போக ஈசியா இருக்கு" என்றான் ராகேஷ். சொர்கமே என்றாலும் அது work from home போல வருமா!!! என்று அக மகிழ்ந்தனர்  கணவனும் மனைவியும்.

        அன்று எப்பொழுதும் போல் வேலை செய்து கொண்டிருந்த ராகேஷ் திடீரென ," இந்த மேனேஜர் இன்னைக்கு போய் மீட்டிங் செட் செஞ்சுருக்கான் என்றவாறு போனை எடுத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று கதவை மூடிக் கொண்டான்". கதவை தட்டிக் கொண்டு நின்ற மகனை சமாளிப்பதற்குள் நிரூபமாவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. வழக்கமாக தன் பெற்றோருக்கு போன் செய்யும் நேரம் வேறு  நெருங்கிக் கொண்டிருந்தது ஆனால் ராகேஷிடமிருந்து போன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. முகத்தில் ஏமாற்றம் நிழலாட அமர்திருந்த நிரூபமாவை நோக்கி," ஒரு 30 Min-ல லஞ்ச் ரெடி ஆயிருமா? அப்பறம் full- ஆ மீட்டிங் இருக்கு" என்று கதவை சாத்திக் கொண்டான் ராகேஷ். இன்னும் சமையல் வேலை ஆரம்பிக்கவே இல்லை என்று அப்போதுதான் உரைக்க பரபரப்பானாள்.

       பின்பு வந்த நாட்களில் இதுவே தொடர்கதையானது. "Call- ல இருக்கும் போது  டிவி (Roku) போடாத" இன்டர்நெட் ஸ்லோ ஆயிருது என்று போனோடு சேர்ந்து டிவி-யும் பறிபோனது. சில நாட்களில் இன்டர்நெட் வரவில்லை என்று அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புவான் ராகேஷ்." அய்யயோ அப்ப Lunch? " என்ற நிரூபமாவை முறைத்தவாறே "ஆபீஸ்- ல சாப்டுக்கறேன் " என்பான். சில சமயம் மாலை ஏழு மணியானாலும் வேலை செய்து கொண்டிருப்பான். மகனோடு சேர்த்து மகளையும்" மெதுவா பேசு அப்பா call-ல இருக்காரு என்று சமாளிக்க வேண்டும்.   

           அன்று அதிசயமாக  " இன்னைக்கு அவ்வளவா வேலை இல்லை" என்று முன் அறையில் சோபா-வில் லேப்டாப்புடன் அமர்ந்து கொண்டான். டிவி- யும் அவன் வசம் சென்றது. சரியாக பார்க்கவில்லை என்று Rewind செய்து செய்து பார்த்தான். பார்த்ததையே திரும்ப திரும்ப  பார்த்து நிரூபமாவிற்கு மண்டை காய்ந்தது. வேலை இருக்குன்னா அதை "Pause" பண்றீங்களா? என்று கோபமடைந்தாள். மகனுடன் உட்கார்ந்து கொண்டிருந்த நிரூபமாவைப் பார்த்து."என்ன சமையல்?" என்றான். எல்லாம் மிச்சம் இருக்கு சாதம் மட்டும் வைக்கணும் என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்தான். " ஆமா நீங்க எப்ப கெளம்பிவீங்கன்னு தெரியாது அதான் நேத்தே சேத்து  சமைச்சிட்டேன்" என்றாள். ராகேஷ் வீட்டில் இருக்கும் நேரம் சமைக்காமலே சமாளித்தாள்.

        அவன் அமர்ந்திருந்த சோபா அமுத சுரபி போல மாறியது. போன், டிவி ரிமோட், DVD- ரிமோட், snack bowl எதைத் தேடினாலும் அதிலிருந்து கிடைக்கும். டீ- கப், தண்ணீர் குடித்த டம்ளர் அனைத்தும் கீழே அவன் காலடியில் சேவர்கர்களைப்போல் காவலுக்கு நிற்கும். அவன் வீட்டில் இருக்கும் பொழுது இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொண்டது போல் இருந்தது நிரூபமாவிற்கு. 

    "Work from Home" என்றால் work நமக்கு Home அவர்களுக்கு என்றுதான் பொருளோ? என்று நினைத்துக் கொண்டாள்." இதற்குத்தான் ஆசைப் பட்டாயா நிரூபமா?" என்று அசிரிரீ ஒலித்தது. நினைத்தது நடக்கா விட்டால் கவலை, நடந்தாலும் கவலை தானோ?!?! என்று பெரு மூச்செறிந்தாள்  நிரூபமா.   

           ஒரு நாள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பேச்சு வார்த்தையின் முடிவில் போனும், டிவியும் நிரூபமாவின் வசம் வந்தது. ராகேஷ் வீட்டில் இருந்தாலும் அவன் அலுவலகத்தில் இருப்பதைப் போல் நினைத்துக் கொள்ள வேண்டும். மகனைப் பார்த்துக் கொள்ளும் வேலை எல்லாம் அவனிடம் கொடுக்கக் கூடாது. முக்கியமாக தொன தொனவென்று ஊர்க்கதை பேசக் கூடாது  என்று முடிவானது.   

          இப்பொழுதெல்லாம் ராகேஷ் "Call"- என்று ஹெட் போன்-னை காதில் மாட்டிக் கொள்வான். சில நேரம் அதில் பாடல் கேட்டுக் கொண்டிருப்பான். சில நேரம் Face book பார்த்துக் கொண்டிருப்பான். இதை எல்லாம் நிரூபமா கண்டு கொள்வதே இல்லை. High speed இன்டர்நெட் இருப்பதால் வழக்கம் போல் அவள் பெற்றோரிடம் போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பாள் சமைத்துக் கொண்டே.

          ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய ராகேஷ், "Work From Home" option- ஐ தூக்க போறாங்களாம் என்றான். அப்பிடியா?!?! என்றாள் நிரூபமா  எந்த அலட்டலும் இன்றி!!!  

            

     

      

       

Tuesday, October 6, 2015

பாடவா?!?! பாட...வா

ஒரு பாட்டு பாடுங்களேன்...என்றதும்,

ஐய்யய்யோ...எனக்கு பாட்டு எல்லாம் வராதுங்க.

தொண்டை சரியில்ல...

 lyrics தெரியாது... என்று பல காரணங்கள் கூறினாலும் சும்மா பாடுங்க என்றதும் பலர் வெட்கம் கலந்த புன்னகையுடன் பாட ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும் சிலரும் தனிமையில் பாடி தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கின்றனர். மகுடிக்கு மயங்கும் பாம்பைப் போல் இசைக்கு நம் மனம் அடிமை ஆகி விடுகிறது. சில பாடல் வரிகளை நாட்கணக்கில் ஏன் வாரக் கணக்கில் கூட முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி என்ன காந்தசக்தி பாடல்களில்(இசை) உள்ளது?

      பாடல்களை நாம் பாடல்களாக மட்டும் கேட்டு, ரசித்து மறந்து விடுவதில்லை. நம் வாழ்க்கைப் பாதையில் நம்மோடு சேர்ந்து பயணிக்கும் மற்றொரு பயணியாக, சிநேகிதியாகப் பார்க்கிறோம். நமக்கு ஏற்படும் பல சுவாரஸ்யமான அனுபவங்களோடு பாடல்களையும் இணைத்து நினைவில் நிறுத்த முயல்கிறோம். நம் இளமைக் காலங்களில் கேட்ட பாடல்களைக் கேட்கும் பொழுது, கடந்த கால நினைவுகளோடு சிறிது நேரம் நாம்  வாழ்ந்து விட்டு வருவதை யாராலும் மறுக்க இயலாது .

 இந்த பாட்டு என்ன ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி வந்திருக்குமா? என்று யாராவது கேட்டு விட்டால் போதும் உடனே,"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, நான் பத்தாவது பரீட்சை எழுதிவிட்டு  வந்தப்போ புதுப் பாடல்ல போட்டாங்க" என்றும், "அந்த பாட்ல வர்ற டிரஸ் கூட எங்கிட்ட இருந்திச்சு" என்றும் அந்த படம் எப்போது வந்தது என்பதை நிரூபிக்க நம் வாழ்க்கைச் சம்பவங்களை சாட்சிக்கு அழைக்கிறோம்.

  அப்போது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். 24 மணி நேரமும் முழங்கும் FM-கள் இல்லை. என் அப்பாவிற்கு பாட்டு கேட்டுக் கொண்டே தூங்க ஆசையோ என்னவோ?!? ரேடியோவை ஆன் செய்யலாம் என்றபடி என் விரலையோ என் தங்கையின் விரலையோ பட்டன் போல் தட்டுவார். நாங்கள் பாட ஆரம்பித்து விடுவோம். சிறிது நேரத்தில் volume ஏற்ற இறக்க மற்ற விரல்களை அழுத்துவார், அதற்கேற்றவாறு  பாடுவோம். பின்பு off செய்து விடுவார்.

  சில வருடங்களுக்கு பிறகு ஒரு டேப் ரெகார்டர் வாங்கினோம். அதனோடு இரு ஒலிப் பெருக்கிகளை இணைத்து " Home Theater"- ஐ எங்களுக்கு அறிமுகப் படுத்தினார் என் அப்பா. எ.ஆர். ரஹ்மான் அறிமுகமான காலமது. அவரது அதிரடி இசையால் என் முதல் தம்பி மிகவும் கவரப் பட்டிருந்தான். ஒலிப்பெருக்கியின் அருகில் காதை வைத்துக் கேட்டுக்கொண்டிருப்பான். பின் தட்டு, டம்ளர், ரப்பர் பேண்ட் கொண்டு என் அண்ணனின் உதவியோடு அதே போன்று இசையமைக்கிறேன் என்று ஆரம்பித்து விடுவான். பாடல்களுக்கு இடையிடையே புரியாத மொழியில் வரும்" chores" வார்த்தைகளையும் சேர்த்துப்  பாடுவான். 

  அடுத்த ஐந்து, ஆறு வருடங்களில்  எண்ணிலடங்கா" Cassette" களை வாங்கி குவித்துவிட்டோம். அனைத்திலும் தவறாமால் என் அப்பாவின்  இனிஷியலை எழுதி விடுவாள் என் தங்கை. தொலைந்து விடுமாம்!!! பேருந்தில் கேட்கும்(பிடித்த) பாடல்களை வீட்டிற்கு வந்ததும் ஒரு டைரில் எங்களை குறிக்கச் சொல்வார். பின் கடைக்காரரிடம் பதிவதற்குக் கொடுப்பார். படத்தின் பெயர் தெரியாவிட்டால் பாடிக் காண்பித்ததாக கூறுவார் என் அப்பா. FM- கள், மொபைல் போனில் பாட்டு கேட்கும் வசதியால் எங்கள் காசெட்கள் பல வருடங்களாக பெட்டியில் உறங்குகின்றன. இதையெல்லாம் மீயுசியத்திலும், road show- களிலும் தான் வைக்க வேண்டும் என்று நாங்களே கேலி செய்வதுண்டு!!!

   எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் எங்கள் அத்தை இருந்தார். அவர்களிடம் நாமே பாடி பதிந்து கொள்ளும் வண்ணம் டேப் ரிகார்டர் இருந்தது. ஒருநாள் அத்தை இல்லாத போது நானும் என் தங்கையும் சேர்ந்து பாட்டு புத்தகத்தின் உதவியோடு பாடித் தள்ளிவிட்டோம். வாயாலே அனைத்து பாடல்களுக்கும் என் தம்பி இசை அமைத்தான். புரியாத கோரஸ் பாடவும் அவன் தான். ஆண் குரல்களுக்கு தன் இனிய குரலைத் தந்து உதவினான் என் இரண்டவாது தம்பி. மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட என் சித்தியும் அதில் ஒரு பாடலைப் பாடினார். நடு நடுவே என் சித்திப் பையனின் மழலையும் கேட்கலாம். இருபது வருடங்களுக்குப் பிறகும் இதைக் கேட்டு அவ்வப்போது  ரசிப்பதுண்டு.

  என் இரண்டு சித்தப்பாக்களுக்கும் பாடல்களின் மேல் தணியாத ஆர்வம் இருப்பதை நாங்கள் கவனிக்கத் தவறியதில்லை. "டி. எம். எஸ்" அவர்களின் பாடல்களை கேட்பதில் மட்டுமல்ல, பாடுவதிலும் வல்லவர் என் முதல் சித்தப்பா!!! சமீபத்தில் "எம்.எஸ்.வி" மறைந்த செய்தி கேட்டதும் என் சித்தப்பாவின் கணீர் குரல் தான் என் காதுகளில் ஒலித்தது. என் கணவரிடம் கூட இதைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். 

  "You Tube" ல் இளையராஜா "Play List" கேட்கும் போதெல்லாம், பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரும்  எனது இரண்டாவது சித்தப்பா, வந்ததும் வராததுமாக கடைசி பாடலையாவது கேட்டு விட மாட்டோமா என்ற ஆர்வத்தில் அவசர அவசரமாக வானொலியை  ஓட விட்டு பாடல்களை ரசிக்கும்  காட்சிகளே என் மனத்திரையில் ஓடும்.    

    நமக்கு பிடித்த பாடல்களைக் கேட்கும் பொழுது மனதில் இருக்கும் களைப்பு, கவலை,அழுத்தம் அனைத்தும்  பறந்து விடுகிறது. தோல்வியைத் தழுவும் பொழுது உற்சாக பானமாக இருந்து, நம் தோள்களைத் தட்டி கொடுப்பதும் பாடல்களே. பல சாதனையாளர்கள் தங்களின் வெற்றிக்கு பாடல்களும் தூண்டு கோலாக இருந்ததாகக் கூறுகின்றனர். தனிமையில் வாழும் பலருக்கும் வாழ்கைத் துணையாக இருப்பதும் பாடல்கள்தான்!!!

    ரேடியோ" Out Dated" ஆகாமல் இருப்பதும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக FM- கள் பல்கிப் பெருகுவதும் பாடல்கள் மேல் நமக்கிருக்கும் தீராத காதலால் தானோ? கவிஞர்கள் மறையலாம், கலைஞர்கள் மறையலாம் ஆனால் பாடல்கள் என்றும் இந்த மண்ணை விட்டும், நாம் வாழும் வரை நம் மனதை விட்டும் மறைவதில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான் வாழ முடியவில்லை, இசையோடு இயைந்த வாழ்கையாவது வாழலாமே!!!  
          
    
     

       

Sunday, August 9, 2015

60 வயதினிலே

    பல சமாதானம் கூறியும் கேளாமல் அழுது கொண்டிருக்கும் தன் ஏழு வயது மகளைப் பார்க்கப், பார்க்க கோபம் தலைக்கு ஏறியது நிலாவிற்கு.

இப்ப நிறுத்துறியா? அடி வேணுமா? என்று குரலை உயர்த்தினாள் மகளிடம்.

டூ யூ வான்ட் " டைம் அவுட்" என்று உதவிக்கு வந்தான் கணவன்.

கெஞ்சலும், மிரட்டலும், அதட்டலுமாக தொடர்ந்த போராட்டம் சில நிமிடங்களுக்குப்  பிறகு சமாதானத்தில் முடிவடைந்தது.  

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்தவாறு கணவரிடம், ஏன் தான் இப்படி படுத்துறாளோ?!?! என்றாள் நிலா.

    நமக்குத்தான் பொறுமை இல்லையா?  நம் பொறுமையை இவதான் சோதிக்கிறாளா? என்று தொடர்ந்தாள். நான் காலேஜ்ல படிக்கும் போது கூட இந்த மாதிரி அழுதிருக்கிறேன் தெரியுமா? ஆனா எங்க அம்மா ஒரு தடவை கூட என்ன திட்டுனது கிடையாது என்றாள்.

     ம்ம்ம்... அவ மூடு சரியில்ல அதனாலதான் என்று  சமாதானம் கூறி விட்டு தூக்கத்தில் ஆழ்ந்தான் கணவன். ஆனால் நிலாவின் எண்ண அலைகளோ  அவளை தூங்க விடாமல் புரட்டிப் போட்டன. அம்மாவின் நினைவுகள் அவளை பின்னோக்கி இழுத்தன!!!

      நிலா ஒன்றும் அம்மா செல்லம் இல்லை. ஐந்து குழந்தைகள் உள்ள வீட்டில் அதற்கான வாய்ப்பும் குறைவு. அம்மா ஐந்து பேருக்கும் தனது அன்பை சரி சமமாகவே பங்கிட்டுக் கொடுத்தாள். தம்பிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்ததால் தொடக்கப் பள்ளி நாட்களை   பெரும்பாலும் பாட்டி வீட்டிலே கழித்தாள் நிலா. 

     பின்பு வந்த நாட்களில் தான் அம்மாவுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு சேட்டை செய்தாலும் அம்மா திட்ட மாட்டாள். கடும் சொற்களைப்  பிரயோகித்தது இல்லை. ஒழுக்க நடவடிக்கைகள் அப்பாவின் மூலமே எடுக்கப்படும். இதைப் பற்றி அம்மாவிடமே நிலா கேட்டதுண்டு.
அதற்கு, அடிப்பதால் எதையும் சாதிக்க முடியாது என்று கூறி விட்டாள். அப்போது அது பெரிய  விஷயமாகப் படவில்லை ஆனால் அது எவ்வளவு கடினமானது என்று  இப்பொழுதுதானே தெரிகிறது.

    அனைவரையும் சரியான நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கும், அப்பாவை அலுவலகத்திற்கும்  அனுப்புவதில் அம்மாவை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அப்பாவும் அதற்கு உறுதுணையாக இருந்தார். இதற்காக அம்மா பம்பரமாக சுழல்வாள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை ஆனால்  சரியான நேரத்தில் ஆயத்த வேலைகளை துவக்கி விடுவாள். கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக, அரை குறையாக செய்யும் பழக்கம் அறவே கிடையாது அம்மாவிடம். வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் வேளைகளில் நிலாவும் அம்மாவின் பாணியையே கடைபிடிக்கத் தொடங்கியிருந்தாள்.   

     நிலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. உறவுக்கார பெண் ஒருவர் அம்மாவிடம் கடுமையாக எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தார். எதையோ விளக்க ஓரிரு முறை முயற்சித்த அம்மா பின்பு மெளனமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சென்ற பின்,

எதுக்கும்மா பதிலுக்கு பதில் பேசாம அமைதியாவே இருந்த? கோபத்துடன் வினவினாள் நிலா.

நாம பேசுறத கேக்கற பொறுமை அவங்களுக்கு இல்லை....அவங்க கிட்ட வாக்குவாதம் பண்றதால நமக்கு என்ன கிடைக்கப் போகுது? என்று கூறிவிட்டாள். முக்கியமான பாடம் ஒன்றை அன்று அம்மாவிடம் இருந்து நிலா கற்றுக்கொண்டாள் " வாக்கு வாதத்தில் ஜெயிப்பது முக்கியம் இல்லை, வாழ்க்கையில் ஜெயிப்பதுதான் முக்கியம்" என்பது தான் அது.

   அப்பாவிடமும் இதையே அம்மா பின்பற்றினாள். சண்டை போட்டது கிடையாது. அமைதியான தருணங்களிலே தவறுகளைச் சுட்டிக் காட்டுவாள். தன் மீது பிழை இருக்கும் பட்சத்தில் அதையும்  ஒப்புக் கொள்வாள். குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பழக்கம் கிடையாது  ...ஆலோசனைகளாகவே தெரிவிப்பாள்.

   பள்ளிக்கு செல்லும் வேளையில் ஒவ்வொருவரும் ஓரிரு வேலைகளை அம்மாவிடம் தந்து விட்டுச் செல்வார்கள். நிலாவின் தாவரவியல் இலைகளை வெய்யிலில் சரியான பதத்திற்கு  உலர்த்தி வைக்க வேண்டும். தம்பியின் தங்க மீன்களுக்கு லஞ்ச் கொடுக்க வேண்டும். மறந்து விட்டால், இதுகூட செய்யாம  என்னம்மா? என்று முறைப்பார்கள். அப்போதும் கோபப் படாமல் அமைதியையே ஆயுதமாக்குவாள். எடுத்துரைக்காமலே அம்மாவின் நிலைமை அனைவருக்கும் புரிந்தது ஆச்சர்யம் தான்!!!

   நிலாவின் பிரசவத்திற்கு வெளிநாடு வந்தபோது அனைவரும், அம்மாவை டெலிவரி ரூமிற்கு கூட்டிட்டு போகாதீங்க... emotional ஆயிடுவாங்க என்றனர். ஆனால் அம்மா தைரியமாக நிலாவிற்கு பக்க பலமாக நின்றாள். லேப்டாப்-ல்  பேப்பர், புத்தகம் படிக்க எளிதில் கற்று நிலாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் அம்மாவின் ஆர்வத்தைக் கண்டு வியந்தாள் நிலா.

   அம்மாவைப் பற்றிய நினைவுகள் நிலாவிற்கு பல  உண்மைகளை  உணர்த்தியது. நிலா தாயாகியிருக்கலாம் ஆனால் அம்மாவாகவில்லை. அதற்கு இன்னும் பக்குவப்பட வேண்டும். என்னிடமிருந்து என் மகள்(ன்) எதையும் கற்றுக் கொள்வதில்லையே என்று  எந்தத் தாயும் கவலைப்படத்  தேவையில்லை. அவர்களுக்கே தெரியாமல் உங்களை கவனித்துக் கொண்டு தான்  இருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்வதற்கும், அம்மாவின் பெருமை புரிவதற்கும் அவர்களுக்கு காலமும், அனுபவமும் தேவை.

           நிலாவின் பார்வையில் அன்று  அம்மா,"36 வயதினிலே" ஜோதிகாவை விட பல மடங்கு சாதனைகள் புரிந்த சாதனைப் பெண்மணியாக மிளிர்ந்தாள். அவை தந்த  மகிழ்ச்சியில்(பெருமிதத்தில்), மனக் கவலைகள் அலைகளில் அடிபட்ட கோபுரமாய் சரிய , எப்போது உறங்கினாள் என்று நிலாவிற்கே தெரியவில்லை!!!