Friday, August 8, 2014

கடைக்குட்டி

         ஒரு பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தால்  எப்படி இருக்கும்? நான் என் தம்பியின் அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்.மற்றவர்களின் தவறில் இருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளல்லாம்.கடினமான வீட்டுப்பாடங்களையும் சகோதர,சகோதரியின் உதவியால் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுக்கலாம்.ஆனால் தனக்கென்று ஓர் தனி அடையாளத்தை உருவாக்க கடினமாக உழைக்க வேண்டும்.தன்னிச்சையாக செயல்படுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் இழக்கிறார்கள்.

       ஒரு நாள் என் தம்பி தான் கூடைபந்து  விளையாட்டில் சேரப்போவதாகக் கூறினான் ஆனால் நாங்கள் பள்ளிமுடிந்தவுடன் அதற்கான  பயிற்சியில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும் வீட்டிற்கு திரும்பும் பேருந்தை தவறவிட வேண்டியிருக்கும் என்றும் கூறினோம்.கலைந்தது அவனது கனவு.நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஆனால் அதை அவனுடைய சுய அனுபவத்திலிருந்து கற்கத் தவறினான். மற்றொரு நாள் ஓவியம் வரைவதில் ஆர்வம் இருப்பதாக கூறினான்.நாங்கள் அனைவரும் அவனை ஊக்கப்படுத்தி ஓர் நாளிதழ்  நடத்திய ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள வைத்தோம். .அவனுடைய ஓவியத்தை மற்றொரு போட்டிக்கும்  அனுப்பி ஆச்சர்யப்படுதினோம்.

      கடைக்குட்டிகளுக்கு எந்த ரகசியத்தையும் வைத்துக்கொள்ள இயலாது.அரிதாக  அவர்களுக்குக் கிடைப்பது தனிமை .  என்னுடைய  தம்பிக்கு அப்போது 7 வயது . தான் டைரி எழுதப் போவதாக அறிவித்தான். அதை எங்களிடம் இருந்து காப்பாற்ற கடினமாக போராடினான்  ஆனால் அவனுக்குத் தெரியாமல் அதைப் படித்துவிட்டோம்.அவனிடம் அதை வெளிக்காட்டவில்லை .மறுநாள் கைதவறி கொட்டிய எண்ணையை துடைக்க அவனுடைய நாட்காட்டி சேகரிப்பை என் தங்கை தவறுதலாக பயன்படுதிவிட்டாள் .

        கோபமடைந்த என் தம்பி அவளைப் பற்றி கையேட்டில் எழுதி மறைத்து வைத்துவிட்டான்.வழக்கம் போல்  அதைப் படித்த எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.  (என்ன இருந்தது என்று அறிய ஆர்வமா ?நாட்காட்டி சேகரிப்பை பாழாக்கிய அக்காவை இன்றுமுதல் வெறுக்கிறேன் !!!) அவனுடைய டைரி இரகசியம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதை உணர்ந்து கோபமடைந்தான்.ஆனால் எங்களால் தான் சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை.பல முறை பல இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவனை காப்பாற்றி உள்ளோம்,சில முறை அவனுடைய நண்பர்கள் முன்னிலையில் சங்கடத்தில் ஆழ்த்தியும் உள்ளோம் .

         எங்களிடமிருந்து  குறுக்கெழுத்து எழுதும் ஆர்வம் அவனைப் பற்றிக் கொண்டது.ஆங்கில வழிக்கல்வி பயின்றதால் தமிழில் விடை அறிய எங்களின் உதவியை நாடினான் நாளடைவில் அவனே எழுதக் கற்றுக்கொண்டான்.எங்களுக்குள்  யார் முதழில் வார நாளிதழை படித்து முடிப்பதென்று கடும் போட்டி இருந்தது இதனால் என் முதல் தம்பி  நாளிதழை இவனுடைய  புத்தகப்பையில் மறைத்து வைத்துவிட்டு மறந்து விட்டான் .

      மறுதினம்  வகுப்பறையில் பையைத் திறந்த அவனுக்கு அதிர்ச்சி. எங்கே பக்கத்திலிருக்கும் மாணவன் பார்த்துவிடுவானோ என்று அஞ்சியிருக்கிறான்.
மாலையில் எங்களைத் திட்டித்தீர்த்துவிட்டான் .வழக்கம்போல் நாங்கள் சிரிப்பலையில்  மூழ்கினோம். இன்று வரை என்னுடைய மூத்த தம்பி அவனை கிண்டல் செய்து முடிக்கவில்லை ......

       என் தம்பியின் கண்ணாடி பிம்பமாக காட்சியளிக்கும் என் மகனைக் காணும் பொழுதெல்லாம் என் நினைவுகள் என்னை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.அதன் விளைவே இந்தக் கட்டுரை !!!!!

3 comments:

  1. Haha!! You could have mentioned recording of songs in tape recorder.

    ReplyDelete
  2. I was the male voice for all the songs u sung...:)

    ReplyDelete